அரண்மனையிலே எல்லாம் அல்லோலகல்லோலமாகக் காட்சியளித்தன. சுல்தானாவின் கணவர் திடீரென்று காலமான செய்தியைக் கேள்வியுற நேர்ந்தமையால், காஹிராவாசிகள் பலர் அரண்மனைக்குத் துக்கம்

விசாரிக்கச் சென்றார்கள். ருக்னுத்தீனும் ஷஜருத்துர்ரும் ஏற்கெனவே எச்சரிக்கையாய் இருந்தபடியால், சுல்தானா ஷஜருத்துர் முக்காடிட்டு மூலையில் குந்திக்கொண்டு, இனிமேல் நிலைமையை எப்படிச் சமாளிப்ப தென்று ஏங்கிக் கண்ணீர் உகுத்துக்கொண்டிருந்தார். மற்றெல்லாரும் மூலைக்கொருவராய் அமர்ந்துகொண்டு, மூக்கைச் சிந்திப்போட்டுக் கொண்டும், கண்ணிர் வடித்துக்கொண்டும் இருந்தார்கள். ஷஜருத்துர்ரும் ருக்னுத்தீனும் சேர்ந்து திட்டமிட்ட இந்த நாடகம் அப்படியாக வெற்றியுடனே நடந்துகொண்டிருந்தது. அடிக்கடி வந்து போவாரும் முஈஜுத்தீன் நிஜமாகவே வேற்றூரில் மரணமடைந்து விட்டதாக எண்ணிக் கொண்டு தத்தம் அனுதாபத்தைத் தெரிவித்துப் போனார்கள்.

இந்த நாடகம் எவ்வளவோ ஜயகரமாய் நடத்தப்பட்டதென்றாலும், அதிலும் திறமைசாலிகளான ருக்னுத்தீனாலும் ஷஜருத்துர்ராலும் வெகு சாமர்த்தியமாய் நிகழ்த்தப்பட்டதென்றாலும், முன்பு அவ்விருவரும் சேர்ந்து ஸாலிஹின் பிரேதத்துக்காக நடித்த நாடகத்தைவிட இந்த முஈஜுத்தீனுக்காக நடித்த பொய்ந் நாடகம் சோபையற்றும் உணர்ச்சியற்றும் சக்தியற்றும் காணப்பட்டது. மேலும், முந்தைய நாடகத்துக்கும் தற்போதைய நாடகத்துக்கும் இருந்து வந்த மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால், சென்றமுறை சத்தியத்துக்குக் கட்டுப்பட்டும், நியாயத்துக்குப் பாடுபட்டும், நீதிக்கும் நேர்மைக்கும் தியாகம் புரிந்தும் சுல்தானா ஷஜருத்துர்ரும் சேனைத்தலைவர் ருக்னுத்தீனும் உடலாலும் உணர்ச்சியாலும் உழைத்துச் சலித்தார்கள். ஆனால், இம்முறை நடத்தப்படும் நாடகம் சுயநலத்துக்கும் அநியாயத்துக்கும் அநீதிக்கும் அக்கிரமத்துக்கும், நேர்மையற்ற தன்மைக்கு மாகையால், சாதாரணமாய்ப் பார்ப்பவர்களுக்கே கூடச் சந்தேகம் தோன்ற ஆரம்பித்துவிட்டது. மேலும், பொதுவாகவே எல்லாருக்கும் ஷஜருத்துர்ரின் குண விசேஷங்களின்மீதும் நடவடிக்கைகளின்மீதும் ஏற்கெனவே ஐயம் ஏற்பட்டிருந்தமையால், இப்பொழுது நடக்கிற நாடகத்தைக் கண்டு சிறிது சந்தேகங்கொள்ள ஆரம்பித்தனர். தேர்க்கால் எப்பொழுதுமே ஒரே மாதிரியாகவா உருண்டு கொண்டிருக்கும்?

ஏற்கெனவே சந்தேகங் கொண்ட புர்ஜீகள் இந்த நாடகக்தைக் கண்டதும் பெரிதும் வயிறெரிந்தார்கள். அந்த புர்ஜீ மம்லூக்குகள் திரள்திரளாகக் குழுமி அரண்மனைக்குள் வந்து இழவு விசாரித்துப் போனார்கள். ஆனால், அவர்கள் இழவு விசாரித்ததைவிட, வேவுபார்த்து வந்தார்களென்றுதான் சொல்ல வேண்டும். சுல்தானாவின் பக்கத்தில் அமர்ந்திருந்த தோழிகளின் நயனங்களிலே ஒரு சொட்டுக் கண்ணீரும் இழியவில்லை.

அன்று மாலைக்குள்ளே அந்த நாடகம் ஒருவிதமாக ஓய்வடைந்தது. ஒரு சில புர்ஜீ மம்லூக்குகள் எப்படியாவது சுல்தானாவின் அந்தரங்கத் தோழிகளை மயக்கங் கொடுத்துக் கொண்டு போய்விட வேண்டுமென்று கங்கணங் கட்டியவர்களாய் அந்தப்புரத்திலேயே அங்குமிங்கும் நடமாடிக்கொண்டிருந்தார்கள். சூரியன் மறைந்ததும், இருள்வந்து சூழ்ந்தது. அரண்மனையிலே துக்கத்துக் கறிகுறியாக எல்லாம் விளக்கற்றுத் துயரக்கடலில் மூழ்கியிருந்தது. புர்ஜீகள் தங்கள் வேலையைச் சுலபமாகச் செய்துகொள்ள இது பேருதவியாயிருந்தது.

ஆறு தோழிமாரும் அப்துல்லாவென்னும் கபடநாடகக்காரனும் புர்ஜீகளின் மயக்க மருந்துக்கு இலக்காகி, மூர்ச்சித்து வீழ்ந்து விட்டார்கள். மயக்கமுற்ற அவ்வேழு பேரும் இருட்டோடு இருட்டாக புர்ஜீகளின் கோட்டைக்குள்ளே இரகசியமாய்க் கொண்டுபோய்ச் சேர்க்கப் பட்டார்கள். அரண்மனையிலே காவல் எத்துணைக் கடுமையாயிருந்ததெனினும், புர்ஜீகள் எப்படியோ மிகவும் சாமர்த்தியமாக அம்மயக்கமுற்ற பேர்வழிகளைத் தோள்மீது சார்த்திக்கொண்டு, சுல்தானாவுடன் சோந்து அழுதபடியால் களைத்துப்போய் விட்டதாகப் பாசாங்கு செய்து, மெல்ல வண்டியிலும், ஒட்டகத் தொட்டில்களிலும் ஏற்றிவந்துவிட்டார்கள்.

எல்லா புர்ஜீ மம்லூக்குகளும் தங்கள் தங்கள் ஸ்தானத்திலே அமர்ந்துகொண்டார்கள்; அவர்களுடைய கோட்டை வாயிலும் அழுத்தமாகச் சார்த்தப்பட்டு உட்புறம் பூட்டுப் போடப்பட்டது. எல்லா மம்லூக்குகளும் அபுல் ஹஸனும் ஒன்றாய்க்கூடி நின்று கொண்டு ஒரு பிரதிக்ஞையை எடுத்துக் கொண்டார்கள்:-

“ஆண்டவன்மீது ஆணையாக! இன்று இங்கே நடைபெறப் போகும் எந்த ஒரு சிறு விஷயத்தையும் நாங்கள் வேறெவரிடத்தும் எக்காலத்தும் வெளியிடுவதில்லை என்று உறுதி கூறுகிறோம். எங்கள் பிரியத்துக்கு இலக்கான சுல்தான் முஈஜுத்தீன் ஐபக்மீது நாங்கள் கொண்டிருக்கிற பக்தி விசுவாசத்தின் அறிகுறியாகவே இன்று உண்மையை ஆராயப் போகிறோம். அவ்வுண்மையிலிருந்து எவர் குற்றவாளி என்பது அறியப்படுகிறதோ, அக்குற்றவாளிமீது கொஞ்சமும் நெஞ்சிரக்கமின்றிப் பழிதீர்த்துக் கொள்வதென்றும் அறுதியிட்டு உறுதி கூறுகிறோம்!”

இம்மாதிரியான பயங்கரச் சபதம் எடுத்துக் கொள்ளப்பட்டதும் முற்குறிப்பிட்ட மயக்கமூட்டப்பெற்ற ஏழு மனிதர்களும் ஒருபுறமாகச் சேர்த்துப் பிணிக்கப் பட்டார்கள். அவர்கள் அத்தனை பேரும் மயக்கம் தெளிந்து உணர்ச்சிபெறுகிற வரையில் எல்லா புர்ஜீகளும் கண்மூடாமல் பொறுமையுடனே காத்துக் கிடந்தார்கள்.

இரவின் நடுச்சாமம் கழிவதற்கும், அந்த மயக்கமுற்றவர் ஒவ்வொருவராக மயக்கந் தெளிவதற்கும் சரியாயிருந்தது. அவர்களுக்கு நன்றாய் மூர்ச்சை தெளிந்ததும், கண்விழித்துப் பார்த்தார்கள். ஒழுக்கத்துக்கு விரோதமான இடத்தில் தாங்கள் படுத்திருப்பதையும், தாங்கள் உடல்கள் ஒரு பெரிய கயிறு கொண்டு மற்றவருடன் பிணிக்கப்பட்டிருப்பதையும் கவனித்தார்கள். ஆறு பெண்களுடனே ஓர் ஆணும் சேர்த்துப் பிணைக்கப்பட்டிருந்தது இன்னம் பரபரப்பை உண்டுபண்ணிற்று. எல்லாருமாக வாரிச் சுருட்டி எழுந்தார்கள். கட்டுப் பலமாக இருந்தபடியால், அவிழ்த்து விட்டுக்கொள்ள முடியவில்லை. அப்பொழுது புர்ஜீ தலைவன் கையிலே நீண்ட கொறடா சவுக் கேந்தி, கோபப் பார்வையுடனே அக் கட்டுண்டவர்கள் முன்னிலையில் வந்து நின்று, காற்றிலே அக் கொறடாவைச் சுறீரென்று ஒரு சொடக்குச் சொடக்கினான். அவர்கள் எழுவரின் மேனியும் ஒரு குலுக்குக் குலுக்கியது. அச் சொடக்கின் அதிர்வெடியால் நெருப்புப்பொறி பறந்தது.

“ஏ, மிருகங்களே! நீங்கள் என்னிடம் உண்மையை ஒளிக்காமல். நடந்ததென்ன என்னும் நிஜ விருத்தாந்தத்தைச் சொல்லி உயிர் பிழைத்துக் கொள்ளப் போகிறீர்களா? அல்லது இந்தக் கொறடாவுக்கும். அதோ அந்தக் கொப்பரையில் காய்கிற எண்ணெய்க்கும், பழுக்கக் காய்ந்த இருப்புச் சலாகைகளுக்கும், முள்ளுப் பீப்பாய்களுக்கும் இலக்காகிப் பரிதாபகரமாய் உயிர்விடப் போகிறீர்களா?” என்ற பீடிகையுடனே வாய்திறந்தான் அத்தலைவன்.

“ஐயோ, எங்களுக்கு ஒன்றுமே தெரியாதே! என்ன விபரீதம்!” என்று ஆளுக்கொருவராகக் கீச்சீட்டுக் கதறினார்கள்.

அந்த புர்ஜீயோ, இலேசாகக் கொறடா முனையைச் சொடக்கி, அம் மெல்லிநல்லாரின் தோல்மீது சுறீர் என்று சூடு கொடுத்துக்கொண்டே,“மூடுங்கள் வாயை! இந்தப் ‘பாச்சா’ வெல்லாம் இங்கே பலிக்காது! உண்மையைச் சொல்லுகிறீர்களா? அல்லது உயிரை எடுத்துவிடவா?” என்று சுளீர் சுளீரென்று சொடக்கினான் அடுத்தடுத்து.

பிறந்தது முதல் சுகவாழ்க்கையே வாழ்ந்துவந்த அப் பெண் தோழிகள் இம்மாதிரியான தண்டனை அனுபவித்ததேயில்லை. அதிலும் நிமிஷத்துக்கு ஒருமறை சுளீர் சுளீரென்று சவுக்கடி விழுந்துகொண்டேயிருந்தால், சொல்லவா வேண்டும்? எனினும், அவர்கள் கொஞ்சமும் விட்டுக் கொடுக்காமல், “ஒன்றும் தெரியாது, ஒன்றுமே தெரியாது!” என்றுதான் திரும்பத் திரும்பக் கதறினார்கள்.

எல்லாரையும் சேர்த்துக் கட்டிவைத்து அடிப்பதில் கோரிய பலன் கிட்டவில்லை என்பதைக் கண்ட அத் தலைவன் அவர்களைக் கட்டவிழ்த்து விட்டு, ஒவ்வொருவரையும் ஒவ்வொரு தூணிலே வெவ்வேறாகக் கட்டி நிறுத்தினான். அதற்கிடையிலே மற்றெல்லா புர்ஜீகளும் அங்குவந்து ஒன்றாய்க் கூடிக்கொண்டு ஏககாலத்தில் பலமாய்ச் சப்தமிட்டு நகைத்தார்கள். அபுல் ஹஸனோ, அப்துல்லாவைத் தனியே கவனிக்க ஆரம்பித்தார்.

புர்ஜீகள் எவ்வெப்படியெல்லாம் நயமாகவும் பயமாகவும் கேட்க முடியுமோ, அவ்வப்படி யெல்லாம் கேட்டுப் பார்த்தார்கள்.

“சுல்தான் முஈஜுத்தீன் அரண்மனைக்குள் வந்ததும் என்ன நடந்தது?” என்று கேட்பான் ஒரு புர்ஜீ.

“சத்தியமாக! முஈஜுத்தீன் அரண்மனைக்குள் வரவேயில்லையே!” என்று ஒவ்வொருத்தியும் கைவிரிப்பாள்.

இறுதி வரையிலே அப் பெண்தோழிகள் சுல்தானா ஷஜருத்துமீது கொண்டிருந்த அத்தியந்த அபிமானத்துக்கு அறிகுறியாக, அவரைக் காட்டிக்கொடுக்காமல், படுகிற தண்டனைகளை எல்லாம் பொறுமையுடன் சகித்துக்கொண்டு, சாட்டையடியையும் முகஞ் சுளிக்காமல் வாங்கிக்கொண்டு, கடைசி வரை இல்லையென்றே சாதித்தார்கள்.
கிழவர் அபுல் ஹஸன் அப்துல்லாவைக் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் மிகவும் துணிவுடன் அவன் “இல்லை, தெரியாது, கிடையாது, முடியாது, சுத்தத் தவறு, பெரிய பொய், அல்லவே அல்ல!” என்றுதான் தொடர்ச்சியாகவும் ஒழுங்காகவும் பொய் பேசினானேயன்றிக் கொஞ்சமும் விட்டுக் கொடுக்கவில்லை. தான் கெஜேக்குச் சென்றதே இல்லையென்றும், முஈஜுத்தீனைச் சந்திக்கவே கிடையாதென்றும், அவரைத்தான் கூப்பிட்டு வந்ததாக் சொல்வது முற்றிலும் பொய்யென்றும் ஒரே சாதனையாய்ச் சாதித்து விட்டான்.

“ஆண்டவன்மீது ஆணையாக! அந்த சுல்தான் முஈஜுத்தீன் அன்று அரண்டனையை விட்டு வெளியேறியதற்குப் பிறகு இன்றுவரை நான் காணவே கிடையாதே!” என்று சப்தமிட்டுக் கத்திக் கொண்டே ஓவென்று அலறினான்.

“ஏ, நாய்க்குப் பிறந்தவனே! யாரை நீ ஏமாற்றப் பார்க்கிறாய்? நீ உண்மையை ஒத்துக்கொள்ளாவிட்டால், உன்னை இந்தக் கொதிக்கிற ஜைத்தூன் எண்ணெயில் மிதக்கவிட்டுப் பொரித்துத் தின்றுவிடுவோம்! என்ன சொல்கிறாய்?” என்று கிழவர் சீறினார்.

பனங்காட்டு நரியா சலசலப்புக் கஞ்சும்? அப்துல்லாவா இதற்கெல்லாம் மசிபவன்? அவன் சற்றும் விட்டுக்கொடுக்கவில்லை. தன்னுடைய கதையையே அவன் திரும்பத் திரும்பக் கண் காது மூக்கெல்லாம் வைத்துக் கூறிக்கொண்டிருந்தான்.

அவனைத் துன்புறுத்தி உயிரையே வாங்கினாலும், உண்மை வெளியாகாதென்று எல்லாருக்கும் தெரியும். எனவே, அவனை அதிகமாய் இம்சிக்காமல் அவ்வளவுடன் விட்டுவிட்டு. பெண்களைக் கவனிக்கலாயினர்.

இந்தச் சரித்திரக் கதையை வாசிக்கும் எம் அன்பர்களுக்குப் பண்டைக் காலத்துச் சித்திரவதை என்பது ஐரோப்பாவிலும், மிஸ்ரிலும், இன்னம் பலப்பல பகுதிகளிலும் எப்படிப்பட்ட கொடுமையானதாய் இருந்ததென்பதைச் சற்றே விளக்க நாம் விழைகிறோம். என்னெனின், பழைய காலத்துச் சித்திரவதை முழுதையுமே எம்மால் வருணிக்க முடியாது. இப் பூலோகத்தில் எத்தனைவித மிருகத்தனமான, அநாகரிகமுள்ள, வருணிக்க இயலாத, பொல்லாத, கொடிய, மூர்க்க இம்சைகளை நீங்கள் கற்பனைசெய்து பார்த்தபோதினும், அப் பண்டைக் காலச் சித்திரவதைக்குக் கிட்டேயும் எட்ட முடியாது.

கொதிக்கக் காய்ந்த இரும்புக் கம்பிகளும் பொங்கக் காய்ச்சிய எண்ணெய்களும் கொஞ்சமும் நெஞ்சிரக்கமின்றி, மிகவும் மென்மையான மர்ம ஸ்தானங்களினூடே எல்லாம் செலுத்தப்படுவது போன்றவையே அந்தக் காலத்தில் சாதாரணச் சித்திரவதையாகக் கருதப்பட்டு வந்தனவென்றால் மீதியை நீங்களே ஒருவாறாக யூகித்துக் கொளள்ளலாம். உயிரைப் போக்கடிப்பதில் ஒருவனுக்கு அல்லது ஒருத்திக்கு எவ்வளவு உயர்ந்த அளவுக்கு இம்சையும், வேதனையும், வலியும், கொடுக்க முடியுமோ, அவ்வளவுக்கும் சிஷை வழங்க அக்காலத்து மக்கள் கொஞ்சமும் மனமிரங்கியதில்லை. அப்படிப்பட்ட பொல்லாத மிருக இனங்களைச் சேர்ந்த மனித ஜாதியினரின் உயர்ந்த ரகத்தைச் சார்ந்த காக்கேசிய அடிமைகளான புர்ஜீ மம்லூக்குகள் தாங்கள் கோரிய பலனை அடைவதற்கும் முஈஜுத்தீனின் உண்மையைத் தெரிந்துகொள்வதற்கும் எப்படிப்பட்ட சித்திரவதைகளை எல்லாம் அந் நாரிமணிகள் மீது பிரயோகித்திருப்பார்கள் என்பதை நீங்களே நிதானித்துத் தெரிந்துகொள்ளலாம்.1

புர்ஜீகள் அன்றிரவு அந்த ஆறு பெண்மணிகளின் நகக்கண்ணில் ஊசியேற்றியும் கைகளைக் கொதிக்கிற எண்ணெயில் அமுக்கியும் இன்னம் பலப்பலவிதமாக வெல்லாம் இம்சித்தும் உண்மையை ஒளிக்காது வாங்கிவிட்டார்கள். அந்த அப்துல்லா மட்டும் கடைசி வரையில் உண்மையை ஒத்துக்கொள்ளாமையால், கொதிக்கிற எண்ணெய்க் கொப்பரைக்குள்ளேயே ஆழ்த்தப்பட்டு விட்டான்! அந்த ஆறு தோழியரும் இறுதியில் உண்மையை ஒத்துக் கொண்டமையால், கட்டவிழ்த்து, புர்ஜீகளின் கோட்டைக்குள்ளேயே கடுங்காவலில் இடப்பட்டு விட்டார்கள்.

மறுநாள் பொழுது விடிவதற்குள் எல்லா புர்ஜீகளும் அபுல்ஹஸனின் தலைமையில் கூட்டங்கூடி, இனி அடுத்து நடக்க வேண்டியது என்ன என்பது குறித்து, தீர்க்கமாய் ஆராய்ந்தார்கள்.

“ஏ, மம்லூக்குகளே! இந்த ஒரு துருக்கிப் பெண்சிறுக்கி இம் மிஸ்ரின் சிம்மாசனத்தின் மீது இனியும் வீற்றிருப்பதை நீங்கள் விரும்புகிறீர்களா? தன்னுடைய கணவனைக் கயமையாய்க் கொன்ற இவள் பெரிய பெண் பிசாசாக இருக்கும் பொழுது, நாம் இனியும் எப்படி இவளைச் சும்மா விட்டு வைப்பது? உங்களுடைய உதிரத்துக்குள் உரோஷமென்பது சேர்ந்து ஓடவில்லையா? புர்ஜீகளாகிய உங்கள் இனத்தவர் மீது சிறிதே வாஞ்சையை முஈஜுத்தீன் காட்டிய தோஷத்துக்காக இவள் இவ்வளவு பெரிய அக்கிரமப் படுகொலையைப் புரிந்திருக்கிறாளென்றால், நீங்களெல்லாரும் கையைக் கட்டிக்கொண்டா அந்தப் படுநீலியின் கொடுங்கோலாட்சிக்கு முடிவணங்கப் போகிறீர்கள்? வெட்கம், வெட்கம்!” என்று உணர்ச்சி ததும்பப் பேசினார் கிழவர்.

ஒவ்வொரு புர்ஜீ அமீரும், மம்லூக் தலைவனும் தனக்குத் தனக்குத் தோன்றிய யோசனையைக் கூறி, ஷஜருத்துர்ரை எப்படி வீழ்த்தாட்டலாமென்பதை ரோஷங் கலந்த ஆத்திரத்துடனே பொங்கிப் பேசினார்கள்.

அபுல் ஹஸனுக்குக் கலகம் விளைப்பதிலோ, புரட்சி புரிவதிலோ கொஞ்சமும் நம்பிக்கையில்லை. என்னெனின், பஹ்ரீகள் எந்நேரமும் சுல்தானாவுக்கு அங்கக் காவலராக விளங்குவதால், எப்படிப்பட்ட புரட்சிக் கலகத்தையும் அவர்கள் வீழ்த்தி விட முடியுமென்பதை அவர் நன்கறிவார்; மேலும் அவர் சாத்விகமான அஹிம்ஸா முறையையே கடைப்பிடுப்பவர்.

“ஏ, வாலிபர்காள்! உங்கள் உணர்ச்சி ததும்புகிற பேச்சுக்களின் வன்மையைக் கண்டு நான் பெரிதும் மகிழ்கிறேன். எனினும், நாம் எடுக்கப்போகிற நடவடிக்கை நமக்கு நிரந்தரமான வெற்றியைத் தரவல்லதாய் இருக்கவேண்டும் என்பதுடன், நம் எதிரிகளான பஹ்ரீகளுக்குக் கொஞ்சமம் இடுக்குக் கொடுக்கக்கூடாததாகவும் இருக்கவேண்டும் என்பதை மறந்தா போய் விட்டீர்கள்? சுல்தானாவுக்கு அந்தத் தீவில் வாழ்கிற இல­க்ஷக்கணக்கான மம்லூக்குகளின் உதவி இருக்கிறவரை நீங்கள் எப்படிப்பட்ட ராஜப் புரட்சிக் கலகத்தையும் வெற்றியுடன் நிகழ்த்தி விட முடியாதென்பதை மறந்தா போய்விட்டீர்கள்? ஒரு பிரயோஜனமுமில்லாத மிஸ்ரிகள் இந்த நயவஞ்சகத் திருட்டு முண்டையைப் பிரமாதமான அசகாய சூரத்தனம் நிரம்பியவளெனக் கொண்டு, இவளுக்கு அடிபணிந்து கிடக்கிறார்கள்! பஹ்ரீகளோ, இவளுக்கு மெய்காப்பாளர்களாக இருக்கிறார்கள். நம்முடைய பலமோ, பஹ்ரீகளைவிடக் குறைவானது. பொதுமக்களோ, முஈஜுத்தீன் கொல்லப்பட்ட செய்தியைத் தெரிந்துகொள்ளவில்லை. இப்படிப்பட்ட சந்தர்ப்பத்திலே நாம் கொஞ்சமும் யோசியாமல் சட்டென்று கலகம் புரிய ஆரம்பிப்போமானால், நம்முடைய கட்சி தோல்வியடைவதுடனே, நாம் கோரிய காரியமும் நிறைவேறாது. எனவே, நாம் இப்பொழுது ஏற்பட்டுள்ள சோதனையில் முழு வெற்றியையும் பெறவேண்டுமென்றால், நிங்கள் கூறுகிற பலாத்காரக் கிளர்ச்சியைக் கைவிட்டு. நான் உபதேசிக்கிற சாத்விக மார்க்கத்தைக் கடைப் பிடித்தால்தான் முடியும். கிழவனாகிய என் யோசனையை நீங்கள் வரவேற்பதாயிருந்தால், நான் சொல்கிறேன், இன்றேல்….”

“இல்லை, இல்லை! தாங்கள் கூறுகிறபடி தான் நாங்கள் நடப்போம்; தங்கள் உபதேசந்தான் எங்களுக்கு வேண்டும்!” என்று எல்லா புர்ஜீகளும் கத்தினார்கள்.

“அப்படியானால், சற்றுப் பொறுமையுடன் கவனியுங்கள்! இப்பொழுது முஈஜுத்தீன் தேக வியோகமாய் விட்டபடியால், நியாயமாக மிஸ்ரின் பட்டத்துக்கு வரவேண்டிய உரிமை பெற்றிருப்பவன் நூருத்தீன் ஐபக்கேயன்றி, ஷஜருத்துர் அல்லள் என்பதை நீங்கள் நன்கறிவீர்கள். என்னெனின், முஈஜுத்தீன் உயிர் வாழ்ந்த மட்டில் இந்தச் சூனியக்காரி என்னென்ன அக்கிரமமோ அநியாயமோ புரிந்திருந்தாலும் அல்லது சிம்மாசனத்துக்கு உரிமை பாராட்டியிருந்தாலும் எல்லாம் அவளுடைய கணவனின் உத்தரவின்மீதே செய்தாகச் சொல்லித் தப்பிக் கொண்டுவிடலாம். ஆனால், கணவனை இழந்த கைம்பெண்ணாயிருக்கும் இவள், அதிலும் தலைமுறைப் பாத்தியதையாகப் பார்க்கப்போனால், மிஸ்ரின் சிம்மாசனத்தின் மிது எவ்விதமான உரிமையும் பாராட்டமுடியாத இந்நீலி, இனியும் எந்தச் சாக்குப் போக்கைச் சொல்லி நாட்டையாள முடியும்? தூரான்ஷாவின் மரணத்துக்குப்பின் நாடாள வந்த இவள் தான் கைம்பெண்ணாயிருந்து அரசாள முடியாது என்பதற்காகவேயன்றோ என் மருமகனை மணந்தாள். இப்பொழுது இவள் இனியோர் ஏமாந்த சோணகிரியைப் பார்த்துக் கட்டிக் கொள்வதற்குள்ளே நாம் எல்லாரும் சேர்ந்து நூருத்தீன் அலீயை – முஈஜுத்தீனின் ஒரே மைந்தனை – வாரிஸ் பாத்திய முறைப்படி நியாயமாகவும் கிரமமாகவும் இம் மிஸ்ரின் ஆட்சியை அடைய யோக்கியதை நிரம்பியவனைப் – பட்டத்துக்குறிய சட்டபூர்வமான இளவரசனை அரியாசனத்தின்மீது அமர்த்தி வைத்துவிட்டால், எல்லாம் சுமுகமாகப் போய் விடும். மக்களும் நம் கக்ஷியில் சேர்ந்து கொண்டு விடுவார்கள்; பஹ்ரீகளும் வாலாட்ட முடியாது; இறைவனும் நமக்குத் துணைபுரிவான்!” என்று அபுல் ஹஸன் நிதானமாகக் கூறினார்.

“ஏ, வயோதிகப் பெரியாரே! தாங்கள் கூறுவன முற்றும் உண்மையே என்றாலும், கலகத்தைக் கிளப்பாமல் நாம் எப்படி நூருத்தீனைப் பட்டமேறச் செய்யமுடியும்? மேலும், அவனோ, தக்க வயது வராத சிறுவன். அவனது ஸ்தானத்தில் ஒரு பிரதிநிதியை வைத்து ஆட்சி செலுத்த வேண்டி வருமே? அப்படிப்பட்ட தக்க பிரதிநிதியை நாம் எங்கிருந்து கொண்டு வருவது?” என்று புர்ஜீ மம்லூக் தலைவன் வினவினான்.

“நன்றாய்ச் சொன்னீர்! என் மகள் வயிற்றுப் பேரன் சிறுவன் என்பதும் மெய்தான்; அவன் சார்பாகப் பிரதிநிதியொருவர் அரியாசனத்தில் ஏற்றப்பட வேண்டுமென்பதும் வாஸ்தவந்தான். அப்படிப்பட்ட தகுதிவாயந்த பிரதிநிதியை நாம் வேறெங்கும் தேடவேண்டிய தில்லை. என்னுடைய புத்திரி மைமூனாவே அந்த ஸ்தானத்துக்கு மிகவும் பொருத்தமானவள். அவளே எல்லாவற்றையும் சமாளித்துக் கொள்வாள். இந்த ஷஜருத்துர்ரையும் தக்க விதத்தில் பழிதீர்த்துக் கொள்வாள்! அனைத்தையும் என்னிடம் ஒப்படையுங்கள். இன்னம் ஒரே வாரத்தில் நான் எல்லாவற்றையும் வெற்றிகரமாக, அந்த ஆண்டவனின் உதவிகொண்டு செய்து முடிக்கிறேன். நீங்கள் மட்டும் எனக்குச் சற்று உபகாரமாய் இருந்துகொண்டும் அவ்வப்போது அடிக்கடி பொதுமக்களுடன் கலந்து பேசிக்கொண்டும் அவர்களுடைய அபிமானத்தையும் அனுதாபத்தையும் நாம் பெற்றுக்கொள்ளும்படியும் செய்துவாருங்கள். ஒருதுளி உதிரம் சிந்தாமல், ஓருயிர் போகாமல், ஒரு கலகமும் விளைக்காமல், சதுரங்க ஆட்டத்தில் ஒரு ராஜாவை வீழ்த்தும் பியாதாபோலே வெகு சுலபமாக எல்லாவற்றையும் செய்து முடிக்கிறேனா, இல்லையா, பாருங்கள்!” என்று வீரம் சிதறும் தொனியிலே பேசினார்.

கோழியும் கூவிற்று; பொழுதும் புலர்ந்துவிட்டது; புர்ஜீகளின் கோட்டைக் கதவும் திறந்தது.

அரண்மனையிலே திடீரென்று சுல்தானாவின் அந்தரங்கத் தோழிகளும் அப்துல்லாவும் காணாமற் போய்விட்டதைக் கேட்ட ஷஜருத்துர் மெய்சோர்ந்து போயினார். அவர்கள் எப்படித் திடீரென்று மறைந்தார்களென்பது அவருக்குப் பெரிய அதிசயமாயிருந்தது. அரண்மனை முற்றும் தேடிப் பார்த்தாகி விட்டது. ஒரு தகவலும் கிடைக்கவில்லை. மனமிடிந்து, நெஞ்சமருகித் தத்தளித்து நிற்கிற வேளையிலே தமக்குப் பக்கத் துணைவிகளாயிருந்த தோழிகளும் மாயமாய் மறைந்து விட்டார்களென்றால், – அதிலும், மிஸ்ர் ராணியின் அந்தப்புரத்திலிருந்து கூண்டோடு காணாமற் போய்விட்டனரென்றால், அஃது இலேசான காரியமா, என்ன? ஷஜருத்துர்ருக்கு மூளை குழம்பிக் கிறுகிறுத்தது.
அரசாங்கத்தின் அத்தனை சேவகர்களும் உளவர்களும் எவ்வளவோ முயன்றும் ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. புர்ஜீகளின் கோட்டைக்குள்ளே அத்தோழியர் இரகசியமாய்ப் பாதுகாவலில் வைக்கப்பட்டிருப்பதை யார் அறிவார்? எல்லாம் கள்ளனுக்குள்ளே குள்ளன் பாயும் கதையாகத்தான் காணப்பட்டது.

அபுல் ஹஸனின் இல்லத்திலோ, மைமூனாவின் கதி பார்க்கப் பரிதாபகரமாயிருந்தது. தலாக்குக் கொடுத்த கணவரே என்றாலும், மைமூனாவுக்கு அவர்மீது மட்டற்ற காதல் இருந்து வந்ததென்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே, முஈஜுத்தீன் திரும்பாத உலகத்துக்குத் திரும்பிச் சென்றது மெய்தானென்று உணர்ந்ததும், அவள் புரண்டுருண்டு அழுதாள்; மண்டையைத் தரையில் மோதிக்கொண்டு பிரலாபித்தாள். உண்மையைத் தெரிந்துகொண்டு வருவதாகக் கூறிச் சென்ற அபுல்ஹஸன் வருமட்டும் அவள் அழுதழுது உள்ளம் நைந்தாள். கருத்தொருமித்த மெய்க் கணவனைப் பிரிந்த உண்மையான சோகத்தை மைமூனாவையன்றி வேறெவள் அனுபவிக்க முடியும்? உண்மையான நஷ்டம் மைமூனாவுக்கேயன்றி, வேறு யாருக்கென்று நினைக்கின்றீர்கள்? போன தந்தையார் திரும்பி வருகிறவரை புத்திரி அழுது அழுது சலித்தாள். அவள் அழுகிறதைப் பார்த்து நூருத்தீனும்கூட அழுதான்.

கிழவரோ, புர்ஜீகளின் கோட்டைக்கதவு திறந்ததும், வேகமாய் வெளியேறித் தம்புத்திரியினிடத்து வந்தடைந்தார். புர்ஜீகளின் கோட்டைக்குள்ளே நடந்த விவரங்கள் அனைத்தையும் தம் மகளிடம் கூறாமல், அவசியமான பாகத்தை மட்டும் எடுத்துச் சொல்லி, தாம் புர்ஜீகளிடம் இறுதியாகச் சபதம் செய்துவந்த பிரதிக்கினையை விளக்கிச் சொன்னார். முஈஜுத்தீனின் மரணத்துக்காக – அல்ல, கொலைக்காக – எவ்வளவு நேரந்தான் தொடர்ந்து அழ முடியும்? இறுதியாக, மைமூனா ஒருவாறு மனந் தேறித் தந்தையின் உபதேசங்களுக்குச் செவி சாய்த்தாள்.

“மைமூனா! போன முஈஜுத்தீன் திரும்பப்போவதில்லை. ஆனால், இனியேனும் நாம் எதிர்காலத்துக்கு வேண்டிய திட்டங்களை ஒழுங்காக வகுத்துக்கொள்ள வேண்டாமா? நீயோ, காலஞ்சென்ற சுல்தானின் சட்டபூர்வமான மனைவியாய் இருந்து வருகிறாய். உன்னை முஈஜுத்தீன் தலாக்குச் சொன்னதாக ஷஜருத்துர் என்னதான் சத்தியம் பண்ணிச் சாக்ஷியம் பகர்ந்தாலும், தக்க சாக்ஷிகளின் முன்னிலையிலோ அல்லது காஜீயின் எதிரிலோ உன் கணவன் தலாக்குச் சொல்லவில்லை என்பதை யாவரும் அறிவர். மேலும், அந்த முஈஜுத்தீனுக்குப் பிறந்த புத்திரபாக்கியம் நூருத்தீன் அலீ உயிருடன் இருக்கு மட்டும் எவருமே அவனுக்குள்ள ஸல்தனத் உரிமையைப் பறிக்க முடியாது. எனவே, நியாய பூர்வமாகப் பார்க்கப் போனால், முஈஜுத்தீனின் மரணத்தையடுத்து உன் மைந்தனேதான் மிஸ்ரின் பட்டத்துக்கு வரவேண்டும். ஆனால், அவன் இன்னம் யுக்த வயதை எய்தாதிருப்பதால், அவன் சார்பாக நீயே தான் அரசாள வேண்டும். எல்லா புர்ஜீகளும் இதற்கு முழுமனச் சம்மதத்தையும் தெரிவித்து விட்டார்கள். இனி யோசிப்பதில் பயனில்லை. நீ எந்நேரமும் தயாராயிருக்க வேண்டும். எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, அந்த புர்ஜீகள் இங்கு வந்து சேர்வார்கள். நீ ஒன்றுக்கும் அஞ்சாமல் அரண்மனைக்குள்ளே சென்று தைரியமாய்ச் சிம்மாசனத்தில் ஏறிக் குந்திக்கொள். உன் மைந்தனை உன் மடிமீது வைத்துக்கொள். கடைசிவரை ஒருகை பார்த்து விடுவோம்! ஒன்று ஷஜருத்துர் இதோடு செத்துத் தொலைய வேண்டும்! அல்லது உலகத்தில் நேர்மையும் நீதியும் அஸ்தமித்துப் போகவேண்டும்!” என்று ஏதேதோ பேசினார் அபுல் ஹஸன்.

“அபூ! அந்தச் சபிக்கப்பட்ட சிம்மாசனம் எனக்கெதற்கு? அல்லது என் புத்திரனுக்குத்தான் எதற்கு? மிகமிகப் பண்டைக் காலத்திலிருந்து இன்றுவரை இந்த மிஸ்ருக்கு அதிபதியாயிருந்த எவரே பூரணத் திருப்தியுடனும் நேர்மையுடனும் அரசாண்டார்? எனக்கு எதற்கு அந்தப் பொல்லாத ஸல்தனத்?” என்று வெறுப்புடனே பேசினாள் மைமுனா.

“மகளே! நாடாள வேண்டுமென்னும் பேராசையை உனக்கு ஊட்டுவதற்காக நான் இப்படிப் பேசுவதாக நீ நினைக்காதே! அந்தக் கள்ளியாகிய உன் சக்களத்தியைக் கீழே உருட்டித் தள்ளிவிடக் கூடிய சக்தி உன்னிடம் மட்டுமேதான் இருக்கிறது என்பதை ஞாபகப்படித்தவே நான் விழைகிறேன். மேலும், உன்னையும் உன் புத்திரனையும், என்னையும் ஒரு காரணமுமின்றி வீம்புக்காகவும் வீணாகவும் சகிக்கொணாச் சஞ்சலங்களுக்கும் இடுக்கண்களுக்கும் இடையூறுகளுக்குமெல்லாம் ஆளாக்கி வைத்து மனம் பூரித்த அப் பாதகியைத் தக்க முறையில் நாம் பழிதீர்த்துக் கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் நான் இத்துணைப் பாடுபடுகிறேன். ஒரு நிரபராதியை வீணே துன்புறுத்துவதற்காக நான் உனக்கு உபதேசம் புரியவில்லை. ஆனால், உன்னை அகாரணமாய்ச் சங்கடமிக்க சித்திரவதைக்கு ஆளாக்கியவள்மீது பழிவாங்குவதற்காகவே கூறுகிறேன்.”

மைமூனாவின் கண்ணெதிரே அன்று அரண்மனை அந்தப்புரத்திலே நடந்த தலாக்கு வைபவமும், அதனையடுத்து அவள் ஷஜருத்துர்ரைத் திட்டிச்சபித்த சாபமும் சலனப்படமேபோல் வந்து நின்றன. தான் அன்றைக்குக் கூறிய சபதத்தையும் சாபக் குவியலையும் நிறைவேற்றிக் கொள்வதற்கு இப்பொழுதுதான் சரியான சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது போலும் என்று மைமூனா சிந்திக்கத் தொடங்கினாள்.

“மகளே! நீ என்ன யோசிக்கிறாய்? சகல கெட்ட குணமும் மட்டற்ற பேராசையும் பொல்லாத மூர்க்கத்தன்மையும் இன்னம் பல்வேறு கெட்ட நடக்கைகளுமுடைய ஒரு பெயர் ஊர் தெரியாத ஷஜருத்துர் என்னும் அற்ப மனுஷி இந்த மிஸ்ரின் செங்கோலை எப்படியோ பற்றிக்கொண்டு உலகோர் நம்பமுடியாத அகடிதகடனா சக்திமிக்க வேலைகளையெல்லாம் செய்து முடித்திருக்கும் பொழுது, என் வயிற்றிலுதித்த உத்தமப் பெண்ணாகிய நீ ஏன் இச் செங்கோலைப் பெறக்கூடாது? நீ என்ன அவளைவிட மட்டமானவளா, அல்லது மோசமானவளா, அல்லது உரிமையற்றவளா? நீ ஒன்றுக்குமே சிந்திக்கத் தேவையில்லை. இந்தப் பெண் இப்லீஸாகிய ஷஜருத்துர்ரிடமிருந்து முழு மிஸ்ரையும் காப்பாற்ற வேண்டிய கடமையையும் பொறுப்பையும் உன்மீதும் என் மீதுமே ஆண்டவன் இதுகாலைச் சுமத்தியிருக்கிறான். நெருக்கடியான இச் சந்தர்ப்பத்திலே நீ உன் கடமையில் தவறிவிடுவையாயின், மிஸ்ரிகளுக்கு மட்டுமின்றி, இறைவனுக்கேகூடப் பெரும் பாவியாய்ப் போய் விடுவாய். நானும் சகல புர்ஜீகளும் உனக்குத் துணையாயிருக்க, நீ எதற்கு அஞ்ச வேண்டும்? அல்லது யோசிக்க வேண்டும்?” என்று கிழவர் தூபம் போட்டுக்கொண்டேயிருந்தார்.

“அபூ! ஷஜருத்துர்ருக்கோ, ஹல்காக்களின் உதவி அபரிமிதம். நானோ. அவசரச் சட்டத்தின் கீழ்ப் பிரஷ்டம் செய்யப்பட்டவள்; அரண்மனை வாயிலின் பக்கம் தலை நீட்டுவதே பெருங்குற்றமென்றும் சட்டம் இன்னம் அமலில் இருக்க, நான் எப்படி உள்ளே நுழைவது, நான் எப்படிச் சிம்மாசனம் ஏறுவது? எனக் கொன்றும் புரியவில்லையே!” என்று தயக்கத்துடன் மொழியலுற்றாள்.

“மைமூனா! நன்று சொன்னாய்! சட்டமியற்றியவளுக்கே நாம் குழிதோண்டப் போகிறோமென்றால், அம் முண்டை இயற்றிய சட்டத்துக்கு அஞ்சுவது அர்த்தமுள்ள செயலா? ஹல்காவின் பலம் விசேஷமான சக்தி மிக்கதுதான். ஆனால். அந்த ஹல்காவின் சுல்தானாவே பலமிழக்கும்போது? – மைமூனா! அஞ்சாதே! நீ பேசாமலிரு. நான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறேன். என் பேச்சைமட்டும் நீ தட்டி நடக்காதே!” என்று அபுல் ஹஸன் அறையலாயினார்.

மைமூனாவோ, கண்களை மூடிக்கொண்டு சிந்தித்தாள். தன் தந்தை சொல்வதில் உண்மை நிறைந்திருப்பதையும், தான் பழிவாங்கவாவது ஷஜருத்துர்ரை வீழ்த்திச் சிம்மாசனம் ஏறவேண்டுமென்பதில் நியாயம் நிரம்பியிருப்பதையும் ஓர்ந்தாள். ஷஜருத்துர்ரிடமிருந்து செங்கோலைப் பிடுங்கிக்கொண்டு, அந்த ராணியைச் சிறையிலடைத்து, சொல்லொணாச் சித்திரவதையைப் புரியவேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டாள். பக்கத்தில் தூங்கிக்கிடந்த மைந்தன் நூருத்தீன் அலீயின் நெற்றியில் மிருதுவாக முத்தமிட்டு இருசொட்டுக் கண்ணீருகுத்தாள்.

தொடரும்…

-N. B. அப்துல் ஜப்பார்

1. ஸ்பெயின் தேசத்திலே ஆட்சி அஸ்தமித்த பின்னர் ஏற்பட்ட கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் ஆட்சிக்காலத்திலே கத்தோலிக்கரல்லாத மக்கள் எப்படிப்பட்ட பொல்லாத “சமய விசாரணை“ (Inquisition) என்னும் சித்திரவதைக்கு ஆளாயினர், தெரியுமா?

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<ஷஜருத்துர் II முகப்பு>>


Creative Commons License

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment