அரண்மனை அந்தப்புரத்திலே எங்கும் நிச்சப்தம் குடி கொண்டிருந்தது. ஆங்கொரு மூலையிலே தனியாய்க் குந்தியிருந்து ஷஜருத்துர்ரின் மனமோ சஞ்சலத்தில் சிக்கிச் சுழன்று கொண்டிருந்தது. அன்று சற்றே அஜாக்கிரதையாய் இருந்திருப்பின், தம்முடைய உயிர் எப்படிப் பரிதாபகரமாய் நஞ்சுக்குப் பலியாகியிருக்கும் என்பதை
நினைக்க நினைக்க நெஞ்சம் பொருமினார் மிஸ்ரின் சுல்தானா.
அத்துணைப் பெரிய கொடிய சதித்திட்டத்தில் உடந்தைக் குற்றவாளியாகவும் பக்காக் குற்றவாளியாகவும் விளங்குகிற முஈஜுத்தீன் மீண்டும் இவ்விரண்மனையுள்ளே காலடியெடுத்து வைப்பதாயிருப்பின், சர்வ வல்லமை பொருந்திய ராணியார் என்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்?- ஷஜருத்துர்ரின் சிந்தனை மிகவும் வேகமாகவும் துரிதமாகவும் வேலைசெய்தது:-
முஈஜுத்தீன் இங்கு மீண்டும் வந்த பிறகு சுல்தானாவிற்கு எதிராக இனிமேல் எவ்விதச் சூழ்ச்சியையும் எண்ணுவதற்கு முன்னமேயே அந்த ஐபக்கை ஒழித்துக் கட்டிவிட வேண்டுமென்பது மட்டுமே ஷஜரின் கருத்தைக் கவ்விக்கொண்டிருந்தது. எனவே, முஈஜுத்தீனைக் கொஞ்சமும் நெஞ்சிரக்கமின்றிக் கொன்றெறிய வேண்டுமென்னும் எண்ணம் அவருடைய உள்ளத்தை ஓயாமல் அலைக்கழிக்க ஆரம்பித்தது. ஏற்கெனவே செய்த சதிக் குற்றத்துக்காக முஈஜுத்தீனுக்குத் தண்டனை வழங்குவதைவிட இனி எதிர்காலத்தில் இவர் ஒருகால் செய்துவிடக்கூடிய சூழ்ச்சிகட்குத் தற்காப்பாய் இருப்பதற்காகவாவது இவரைக் கொன்றுபோட வேண்டுமென்று ஷஜருத்துர் பயங்கரமாய்த் தீர்மானித்து விட்டார்!
தடங்கலாயிருக்கிற முஈஜுத்தீனை இவ்வாறு விலக்கி விட்டுக்கொண்டால், தம்முயிர் என்றுமே பந்தோபஸ்தாய் இருக்குமென்றும் மிஸ்ரின் ஸல்தனத்தைத் தாமே இன்னம் பல ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியாய் ஏகபோக ஆட்சி செலுத்தி வரலாமென்றும் ஷஜருத்துர் மனப்பால் குடிக்க ஆரம்பித்தார்.
யோசித்து யோசித்து அலுப்படைந்த ராணியார் எழுந்து, மேலுங்கீழும் மெதுவாக நடமாடினார். போன அப்துல்லாவும் திரும்பவில்லை; முஈஜுத்தீனும் வரவில்லை! கோபாவேசத்துடன் உலவினார். சட்டென்று நின்று மீண்டும் யோசிக்கலாயினார்.
முஈஜுத்தீன் அரண்மனை அந்தப்புரத்துள் காலடியெடுத்து வைக்கும்பொழுதே அவரைக் கொல்வதா? அல்லது வந்த பின்னர்ச் சற்றுநேரஞ் சென்று அவரது உயிரைக் கவர்வதா என்ற யோசனை ஷஜருக்கு உதிக்கலாயிற்று. முன்னம் ஒருமுறை தூரான்ஷாவின் வருகைக்காகத் தக்க பாதுகாவலுடன் காத்துக் கிடந்த அதே ஷஜருத்துர், இப்பொழுது முஈஜுத்தீனின் வருகைக்காகப் பொறுமையற்றுக் காத்துக் கிடந்தார். ஆனால், காப்பாற்றுவதற்காக வன்று; கொன்று தீர்ப்பதற்காக!
சிறிது நேரம் சிந்தித்ததன் முடிபாக அந்த ராணி திலகம் ஒரு திட்டத்தை வகுத்துக் கொண்டார் : அஃதாவது, இது போன்ற சந்தர்ப்பங்களில் காலந்தாழ்த்துவது அறவே கூடாது என்பதுதான் அத் திட்டத்தின் அடிப்படைக் கொள்கையாய் இருந்தது. எவ்வளவோ ஞானவிகாசம் மிக்க ஷஜருத்துர், கல்வி கேள்விகளில் கரைகடந்த ஷஜருத்துர், தமக்கென வாழாப் பிறர்க்குரியாளரான ஷஜருத்துர், மிஸ்ருக்குரியவரிடமே மிஸ்ரின் ஸல்தனத்தைச் சேர்ப்பிக்க வேண்டுமென்று ஸாலிஹின் பிரேதத்தருகில் தவங்கிடந்த ஷஜருத்துர், மக்களையெல்லாம் மிகமிகத் திருப்தியுடனும் பேரன்புடனும் அரவணைத்துச் செங்கோலோச்சிய ஷஜருத்துர், தம்மையே கொன்றொழிக்கப் பெரும்படையைத் திரட்டிவந்து காஹிராமீது பாய்ந்த வன் பகைவனான லூயீயைக்கூட மன்னித்து விட்ட ஷஜருத்துர், நல்லதின்னது கெட்டதின்னது என்று மற்றெவரையும்விடப் பகுத்துணர்வதில் ஈடிணையற்ற ஷஜருத்துர், அகிலத்தின் சகல நற்குணங்களும் ஒரேயுருவாய்ப் படைக்கப் பெற்றிருந்த ஷஜருத்துர் இப்பொழுது இப்படித் தம்முடைய சுயநய அக்கிரமப் பேராசைக்குப் பலியாகி, அநியாயமாய் ஓருயிரை – அதிலும், தாமே மணந்துகொண்ட தங்கணவரின் ஆருயிரை உறுஞ்சிக் குடிக்க உதிரக் காட்டேறியேபோல் உட்காந்திருந்தார். நெஞ்சிரக்கம் என்பதோ, சாதாரண மனிதத்தன்மை என்பதோ, அவ் வம்மையரின் அந்தக்கரணத்துக்குள்ளே மருந்துக்குக்கூட இல்லாமல் மாயமாய் மறைந்துபோய் விட்டது, விதியின் விசித்திரமா? அல்லது மதியின் மாறுபாடா? என்பதை நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள்.
உத்தேசம் அரைமணி நேரத்துக்குள் ஷஜருத்துர் எல்லா விதமான நடவடிக்கைகளுக்கான திட்டத்தையும் மானசமாகவே செய்து முடித்துக்கொண்டார். அஃதாவது, முஈஜுத்தீன் இங்கு வந்து சேர்ந்ததும், ஹம்மாமுக்குள் கொண்டு செல்லப்படல் வேண்டும். அந்த ஹம்மாமுக்குள்ளே அவர் நுழைந்தவுடனே அங்கேயே இரகசியமாக வெட்டியெறியப்படல் வேண்டும் என்பதுதான் அச் சுருக்கமான திட்டம். சுல்தானாவின் கட்டளையின்மீது, முரட்டுத்தனமான பக்காப் பேர்வழிகளான ஐந்து பொல்லாத கொலைஞர்கள் அவரெதிரில் வந்து நின்றார்கள். அவர்களிடம் அந்த சுல்தானா குசுகுசுவென்று ஏதோ மந்தணமாகப் பேசினார். அந்தச் கொலைஞர்கள் தங்களுடைய கறுப்பான உருக்குக் கம்பி போன்ற மீசையை முறுக்கிக் கொண்டே, கீழுதட்டை மடித்து மேற் பல்வரிசையால் கடித்த வண்ணம் கூரிய வாட்களையும் கட்டாரிகளையும் தயாராய் ஏந்திப் பிடித்த கரங்களுடனே ஹம்மாமுக்குள் நூழைந்து பதுங்கி, ஒளிந்துகொண்டார்கள்.
எனவே, முஈஜுத்தீன் அரண்மனைக்குள் வந்து நுழைய வேண்டிய ஓரே ஒரு காட்சிதான் எஞ்சியிருந்தது. அவர் எப்பொழது வருவார் என்னும் ஏக்கத்தோடே துடித்துக்கொண்டிருந்தார் ஷஜருத்துர். தூரான்ஷா அரண்மனைக்குள் நுழைந்த பின்னர் எவராலும் கொல்லப்பட்டுவிடக் கூடிமோவென்னும் பேரச்சத்துடனே முன்னம். நிட்டாக்ரிஸை நினைத்துக்கொண்டிருந்த பழைய ஷஜருத்துர்ரா இவர்?
அரண்மனை அந்தப்புரத்திலே அரசியார் பொறுமையிழந்து நடமாட, ஹம்மாமுக்குள்ளே கொலைஞர்களும் அவர்களுடைய கூரிய வாட்களும் கட்டாரிகளும் குரூரமாய்க் காத்துக் கிடக்க, நிமிஷங்கள் வெகு மெதுவாக ஊர்ந்துகொண்டிருந்தன. மிஸ்ர் தேசத்தின் மிகப் பொல்லாத அவல நாளிலே முஈஜுத்தீன் ஐபக், அப்துல்லாவென்னும் நயவஞ்சகனின் கபட நாடக நயவசனங்களுக்கு இலக்காகியும் ஷஜருத்துர்ரின் மெய்யன்பு ஒழுகுவது போன்ற பொய்த் திருமுகச்சீட்டின் சாஹச மொழிகளுக்குப் பலியாகியும் ஆட்டுக்கிடா கசாப்புக்காரனை நம்புவதுபோல், மொட்டைத்தலையில் முக்காடிட்டு முகத்தை மூடி மறைத்துக்கொண்டு, கெஜேயை விட்டு எவருக்கும் தெரியாமல் இருளில் புறப்பட்டு, ‘இழைக்கின்ற விதிமுன் செல்ல, தருமம்பின் இரங்கி யேங்க’க் காஹிரா நகரை நோக்கி வழிநடந்து ஆற்றைக் கடந்து, அதிகாலையில் அரண்மனையையண்மி, தோட்டப்புறத்துத் திட்டி வாயில் வழியே அந்தப்புரத்துள் நுழைந்து விட்டார்.
நெற்றியை இடக்கரத்தால் தாங்கிப் பிடித்துக்கொண்டு, சிரங்குனிந்த நிலையிலேயே ஏதேதோ ஆழமாய்ச் சிந்தித்துக் கொண்டிருந்த மலிக்காத்துல் முஸ்லிமீன் தம்மெதிரில் சந்தடி செய்யாமல் வந்து நின்ற மொட்டை மனித உருவத்தைக் கண்டதும், மெய்பதறி விட்டார். முஈஜுத்தீனை – முன்னொரு சமயம் சிம்மாசனத்திலே சிங்கம்போல் வீற்றிருந்த அழகிய தாடி முளைத்த உயரமான முஈஜுத்தீனையே ஓயாமல் மனனஞ்செய்து கொண்டிருந்த ஷஜருத்துர்ருக்கு அந்தத் தாடி களைந்த, உயரங் குன்றிய, மேனியிளைத்த, முற்றும் மாறுபட்ட புதிய மெல்லிய உருவத்தைக் கண்டதும், தூக்கிவாரிப் போட்டது! கிரேக்கர்களின் புராணத்தில் கூறப்பட்டிருக்கிற ‘மெடூஸா’ என்னும் பூதத்தின் தலையைப் பார்க்கிறவன் கல்லாய்ச் சமைந்துவிடுவானென்று நம்பப்படுகிறதல்லவா! அந்த மெடூஸாவைப் பார்த்து விட்டதேபோல், ஷஜருத்துர் விழித்த விழி பிதுங்க, பிளந்த வாய் முடாமல், அம் முண்டன முகத்துடன் தலைகவிழ்ந்து நின்ற முஈஜுத்தீனை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார்.
அரண்மனையை விட்டுத் திருட்டுத்தனமாய் வெளியேறிச்சென்ற முஈஜுத்தீன் இதுபொழுது பகிரங்கமாகத் தம் கட்டிய மனையாட்டியின் முன்னே மனக் கலக்கத்துடனே சிரங் குனிந்து நின்றார். ஆனந்தக் களிப்பாலோ, அல்லது துயரின் பெருக்காலோ முஈஜுத்தீன் கண்களில் நீர்சுரந்து, கன்னங்களூடே வேகமாய் இழிந்துகொண்டிருந்தது.
ஆம்! அக் காட்சி காண்பவருள்ளத்தைக் கரையச் செய்ய வல்லதாகவே விளங்கியது. முஈஜுத்தீன் அதுபொழுது நின்றிருந்த மாதிரியையும் அவரைச் சூழ்ந்திருந்த சந்தர்ப்பங்களையும் நீங்கள் சற்றே உங்கள் மனக்கண் முன்னே கொண்டு வந்து நிறுத்திக்கொண்டு பாருங்கள். எப்படிப்பட்ட எஃகினுங் கொடிய வன்னெஞ்சரின் உள்ளத்தையும் உருகச்செய்ய வல்லதாகவே அக்காட்சி விளங்கியது. எனவே, எவ்வளவோ திண்மையான உள்ளம் படைத்த ஷஜருத்துர்ரேயுங் கூட அவரைக் கண்ட மாத்திரத்தில் எப்படியோ ஒருவிதக் கருணையுணர்ச்சியைப் பெற்றுக்கொண்டு விட்டார். ‘தான் ஆடா விட்டாலம் தன் சதை யாடும்’ என்னும் பழமொழி மெய்யே யன்றோ?
வாழ்க்கையின் சில விசித்திரமான வேளைகளில் திடீரென்று ஒர் அற்புதமான அபூர்வப் பிரச்சினை எழுந்துவிடுவது உண்டென்பதை ஒவ்வொருவரும் அறிவர். அப்பொழுது,“இருப்பதா, இறப்பதா?” என்ற எண்ணம் உதிப்பது வழக்கம். அஃதே போன்று, ஷஜருத்துர்ருக்கும் இப்பொழுதுதான் முதன்முறையாகச் சற்றுப் பின்வாங்க வேண்டிய சூழ்நிலை வந்து தோன்றியது. “இவரை நான் கொன்றெறிவது நேர்மைதானா?” என்னும் பெரிய சந்தேகம் இந்த இறுதி வேளையில் திடீரென்று உதித்தது அந்தக் கொடிய சித்தம் படைத்த பெண்மணியின் உள்ளத்துள்ளே!
“இவரை நான் மன்னித்து விட்டால், என் உயிரை இவர் இனியொரு முறையும் கவரச் சூழ்ச்சி செய்ய மாட்டார் என்பதற்கு எவரே உத்தரவாதி?” என்னும் மாற்று எண்ணமும் சேர்ந்தே உதயமாயிற்று. ஒரு கணம் தர்ம சங்கடமென்னும் உபத்திரவம் அந்த சுல்தானாவின் உள்ளத்துள்ளே ஊசலாடிற்று.
முஈஜுத்தீன் ஷஜருத்துர்ரின் எதிரில் சில நிமிஷங்கள் வரை நின்றுகொண்டிருந்தாலும், அவ்விருவருள் எவருமே பேசவில்லை; பேசமுடிய வில்லை. மாஜி சுல்தானுக்குத் துயரம் நெஞ்சை அடைத்துக்கொண்டிருந்தது; ராணி திலகத்துக்கோ மூளை மிக வேகமாய் வேலை செய்துகொண்டிருந்தது. இறுதியாக-
“நாதா ! தாங்கள் இவ் வேழைமீது கிருபை கூர்ந்து விட்டீர்களா?… அடியாளை மன்னியுங்கள்!” என்று நீலிக் கண்ணீர் சிந்த ஷஜருத்துர் வாய் திறந்தார்.
முஈஜுத்தீனோ, பதிலொன்றும் பேசமுடியாமல், பக்கத்திலிருந்து சிறு முக்காலிமீது பொத்தென்று குந்தினார். தலை நிமிர்ந்து ஷஜருத்துர்ரைப் பார்க்கவே அவருக்கு வெட்கமாயிருந்தது! மேலங்கியின் முன் நுனியால் தம் ஈரக் கண்களைத் துடைத்துக்கொண்டே, பெருமூச் செறிந்தார் அவர்.
“அடே அப்துல்லா! என் கணவரை நீயல்லவோ இப்பொழுது மீட்டுத் தந்து ரக்ஷித்தாய்! உனக்கேற்ற பரிசைப் பெற்றுக்கொள்ள நம் நிதி மந்திரியை நீ பார்! உனக்கு இறைவன் ஒரு குறைவும் வராமல் காப்பாற்றுவான்!” என்று அந்தக் கபட நாடக நடிகனை நோக்கி ஷஜருத்துர் கனிவாய்ப் பேசினார். அவனும் குறிப்பறிந்து ஜாடையாக அங்கிருந்து விலகி, வெளியேறிச் சென்றுவிட்டான்.
“நாதா! என்னை மன்னியுங்கள். தங்களை யான் என் திரிகரண சுத்தியுடன் கோரிக் கொள்கிறேன்: தெரிந்தோ தெரியாமலோ அடியேன் ஏதும் தங்கள்மாட்டுப் பிழை புரிந்திருப்பின், என்னை ஆண்டவனுக்காக மன்னித்து விடுங்கள். இந்த மிகவும் பொறுப்பு வாய்ந்த ஸல்தனத்தின் சகல சங்கடங்களையும் ஒருங்கே நிர்வகிக்க நேர்ந்தமையால், அடியேன் என் நிலை தவறி விட்டேன் என்பதை இப்பொழுது நன்றாயுணர்ந்து கொண்டேன். பிழையுணர்ந்த என்னைத் தாங்கள் மன்னித்து விட்டதாக ஒரு வார்த்தை சொல்லுங்கள். அப்பொழுதுதான் என் நெஞ்சம் நிம்மதியடையும்!”என்று மிகுந்த நளினத்துடன் சாஹஸம் புரிந்தார் ஷஜர்.
“ஷஜருத்துர்! நீ உன்னுடைய அழகின் கூரிய சக்தியைக் கொண்டே முன்பு என்னை உனக்கு அடிமையாக்கிக் கொண்டாய். இப்பொழுதும் அதே அழகைப் பக்குவமாய்ப் பிரயோகிக்கின்றாய். நான் உன்னை எதற்கு மன்னிக்கவேண்டும் என்று நீ கோருகிறாய்? எனக்கு எல்லாம் ஒரே குழப்பமாயிருக்கின்றன” என்று குனிந்த தலை நிமிராமல் மெதுவாக வார்த்தையாடினார் முஈஜுத்தீன்.
“நாதா அடியேன் தங்களைத் தெரியாத்தனமாய் உதாசினஞ் செய்தேன்; திரஸ்கரித்தேன்; அதனால் விளைந்த பலனையும் அனுபவித்து விட்டேன். இனியேனும் எதிர்காலத்தில் நாமிருவரும் கருத்தொருமித்த கணவன்-மனைவியாக ஆதரவு பூண்டு காலங் கழிக்கலாமென்றுதான் யான் கருதுகிறேன். ஆனால், தாங்கள் இருப்பதைப் பார்த்தால், என்மீது தாங்கள் இன்னமும் அதிருப்தி கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. நாதா!… நான் பட்டபாடெல்லாம் போதாவோ? என் மேனியைப் பாருங்கள்; என் கண்களை நோக்குங்கள்; என் வதனத்தைக் கவனியுங்கள்…” என்று விம்மிவிம்மி அழுதார் ஷஜருத்துர்.
முஈஜுத்தீனுக்குக் குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுத்துக் கொண்டிருந்தது. ஃபக்ருத்தீனுடன் தாம் சதியாலோசனை புரிந்து, சற்றேறக்குறைய ஷஜருத்துர்ரின் உயிரையேகூடக் கவர்ந்துவிட முனைந்துவிட்ட தம்மிடம் ஷஜருத்துர் இவ்வளவு வாஞ்சையுடன் யதார்த்தமாய்ப் பல்ம்பியழுவது அவரது நெஞ்சைச் சுறுக்கென்று தைத்தது.
“ஏ, ஷஜருத்துர்! மலையே கலங்கினாலும் மனங் கலங்காதவள் என்று பெயர் படைத்த நீயா இப்படிக் கண்ணீர் வடிக்கின்றாய்? இப்பொழுது என்ன விபரீதம் நடந்து விட்டது? சிறிது காலம் நான் உன்னைப் பிரிந்திருக்க நாடினேன். நான் எதிர்பார்த்தபடி அப்பிரிவே நமக்கிடையே ஒற்றுமையை நிலைநிறுத்தப் பயன்பட்டிருக்கிறது. ஆண்டவன் இனி நமக்கிடையே ஒரு குறைவும் வராமல் காப்பாற்றுவான்,” என்று ஷஜருத்துர்ரின் தோள்மீது மிருதுவாய்க் கைவைத்துப் பேசினார் முஈஜுத்தீன்.
“நாதா! பிரிந்து கூடுவதால் விளைகிற மகிழ்ச்சியைப் பார்த்தீர்களா? இறைவனே நம்மிடையே நீடித்த ஒற்றுமையைத் தந்தருளி, மீண்டும் இதைப் போன்ற சில்லறை மனஸ்தாபம் ஏதும் வாராமல் காத்து ரக்ஷிப்பானாக!” என்று கடைக்கண் ஓட்டியவாறு மிக இனிமையாய்ப் பேசினார் நம் ஷஜர்.
முன்னேயே ஏற்பாடு செய்து வைக்கப்பட்டிருந்ததற்கு ஒப்ப, ஒரு பெண்ணடிமை அத் தருணத்தில் அங்கு வந்து ஸலாம் போட்டு நின்றாள்.
“யா ஸாஹிபத்தல் ஜலாலத்தில் மலிக்கா! தங்களுக்கும் மலிக்குக்கும் சித்தஞ் செய்துவைக்கப்பட்டிருக்கும் உணவு ஆறிப்போகிறதே!” என்று அவ்வடிமை பையச் செப்பினாள்.
“நாதா! தாங்கள் மிகவும் களைத்திருப்பதாகத் தெரிகிறது. வாருங்கள் சாப்பிடப் போவோம். நாமிருவரும் சேர்ந்து சாப்பிட்டு எத்தனை மாதங்களாகின்றன!” என்று ஷஜருத்துர் வஞ்சகமாகக் கூறினார்.
“சை! குளிக்காமலா? நான் இந்த வேனிற் காலத்தில் என்ன பாடுபட்டு வழிநடந்து வந்திருக்கிறேன்! நான் ஹம்மாமுக்குப் போய்ச் சற்று நேரத்தில் குளித்துவிட்டு வந்துவிடுகிறேன்! நீ வேண்டுமானால், சாப்பிட்டுக்கொள்!”
“நாதா! நன்றாய்ச் சொன்னீர்கள்! தாங்கள் குளித்து விட்டு வருகிற மட்டும் யான் காத்திருக்க முடியாதா? அடே, யாரங்கே? ஹம்மாமில் எல்லாம் சித்தமாயிருக்கின்றனவா?” என்று அதிகார தோரணையில் அதட்டிக் கடாவினார்.
அக்கணமே இரண்டு மூன்று அடிமைகள் அங்கு வந்து தோன்றினார்கள்.
“யா ஸாஹிபத்தல் ஜலாலத்தில் மலிக்கா! நம்முடைய மலிக் இங்கு வருமுன்னரே ஹம்மாமில் குளிப்பதற்கு வேண்டிய சகல ஏற்பாடுகளும் தயாராய் இருக்கின்றனவே! – யா மலிக்! வெந்நீர், தண்ணீர், பன்னீர், நறுநீர் ஆகியவனைத்தும் நிரம்ப இருக்கின்றன. தாங்கள் ஹம்மாமுக்கு இப்பொழுதே எழுந்தருளலாம்!”
முஈஜுத்தீன் ஜபக் உடனே சட்டென்றெழுந்து ஷஜருத்துர்ரைப் பார்த்து ஒரு புன்முறுவல் பூத்துக்கொண்டு, தம் பொல்லாத தலைவிதியின் திசையை நோக்கி ஹம்மாமுக்கு வழி நடந்தார்.
ஷஜருத்துர்ருக்கு நெஞ்சம் திகீரென்றது! கண்டதுண்டமாய் முஈஜுத்தீன் மறுநிமிஷத்தில் துண்டிக்கப்பட்டு விடுவாரே என்னும் கழிவிரக்கம், அந்த இறுகிப் போய்ப் பனிக்கட்டியாய்க் கிடந்த பெண்ணரசியின் ஹிருதயத்தைக் கூரிய அம்பேபோல் துளைக்க ஆரம்பித்துவிட்டது. அவர் ஃபக்ருத்தீனுடன் சேர்ந்து படுசூழ்ச்சி செய்தவரென்னும் ஆத்திரம் போய், தம்முடைய ஆருயிர்க் கணவராயிற்றே என்னும் இரக்கம் எங்கிருந்தோ சட்டென வந்து தோன்றிவிட்டது. போனாற் போகிறதென்று இவ்வளவுடனே முஈஜுத்தீனைக் காப்பாற்றி விடலாமா? என்னும் பரிதாபம் எப்படியோ வந்து உதயமாக ஆரம்பித்தது.
நரகலோக வாயிலுள் வலிய நுழைகிறவனேபோல், முஈஜுத்தீன் ஹம்மாமென்னும் குளிக்கும் அறைக்குள்ளே துரிதமாய் நுழைவதற்கும், இந்தத் தடவை போனாற் போகிறதென்று தங்கணவரை மன்னித்து விட்டுவிடுவதென்று ஷஜருத்துர் நிதானமாய் முடிவு செய்வதற்கும் சரியாயிருந்தது.
என்னெனின், மின்வெட்டுகிற வேகத்தில் வேலைசெய்வதில் பெயர்போன ஷஜருத்துர்ரின் மூளை, முஈஜுத்தீன் அங்கிருந்து அகன்றதும் சற்றே யோசிக்கத் தொடங்கிற்று. அவருடைய ஹிருதயத்துக்குள் கருணையும் பச்சாத்தாபமும் ஈவும் இரக்கமும் சிறிது தோன்ற ஆரம்பித்ததும், அவருடைய மூளையும் அதற்கேற்கவே சிந்தித்தது. முஈஜுத்தீனை இதுபொழுது காப்பாற்றி விட்டு விட்டால், புர்ஜீகள் இவரை வைத்துக்கொண்டு, இனி எதிர்காலத்தில் என்னென்ன பயங்கரப் படு சூழ்ச்சிகளைச் செய்வதாயிருப்பினும், இப்பொழுது திட்டமிடப்பட்டிருப்பதேபோல் கண்ணராவியான கடுமுறையிலே கண்டதுண்டமாகத் துணித் தெறியப்படுவது சற்றும் தகாதே என்னும் விசித்திரமான உணர்ச்சி ஷஜருத்துர்ருக்குப் பொங்கிவிட்டது. பெரிய படவிலே மிகச் சிறிய துளை விழுந்தாலும், அஃதெப்படி நொடிப் பொழுதில் அமிழ்ந்து விடுமோ, அதே விதமாகத் திடசித்தமும் கொடிய வைராக்கியமும் மிக்க ஷஜரின் உள்ளத்திலே இம் மாதிரியான உணர்ச்சி பிறந்ததும், சட்டெனத் துள்ளிக் குதித்துப் பாய்ந்தோடினார், ஹம்மாமை நோக்கி!
“ஆஹா! இந்நேரம் ஹம்மாமிலே என்ன நடந்து முடிந்து விட்டதோ!” என்னும் பயங்கர ஏக்கம் அந்த சுல்தானாவின் நடையைத் துரிதப்படுத்திற்று. சுற்றிலும் தீப்பற்றியெரிகிற வீட்டிலிருந்து அலறித் துடித்துக் கண்மூடித்தனமாய் விரைந்தோடி வருகிற பேதையேபோல், தலைவிரிகோலமாய் இடுப்பாடையை இறுக்கிப் பிடித்துக்கொண்டு ஓட்டோட்டமாய் ஓடினார். ஷஜருத்துர். ஆம்! இறுதி நிமிஷத்திலாவது தம் கணவரைக் காப்பாற்றி விட்டுவிடவேண்டு மென்னும் மானிட உணர்ச்சியைப் பெற்றுக்கொண்ட ஷஜருத்துர் ஓட்டோட்டமாய் ஓடினார். ஆண்பிள்ளையொருவன் கொலை செய்வதற்கிடும் திட்டத்துக்கும் பெண்ணெருத்தி அதேமாதிரி திட்டமிடும் வைராக்கியத்துக்கும் இதுதான் வித்தியாசம்.
முன்னே சென்ற முஈஜுத்தீன் அந்த ஹம்மாமுக்குள்ளே நுழையக் காலடி எடுத்து வைத்ததுதான் தாதம்! அங்கே மூலை முடுக்கில் பசித்த புலியேபோல் பதுங்கியொளிந்து கிடந்த ஐந்து கொலைகாரப் பாவிகளும் குபீரென்று பாய்ந்து, அவரைப் பற்றிக்கொண்டு விட்டார்கள்.
“என்னைக் காப்பாற்றுங்களே! என்னைக் காப்பாற்றுங்களே!” என்று துடிதுடித்துக் கதறிய வண்ணம் அந்தத் திகிலடைந்த ஐபக் வீறிட்டலறினார். கூரிய ஆயுதங்களைப் பளபளப்பாகப் பிடித்துக்கொண்டிருந்த அக் கொலைஞர்களைக் கண்டதும், அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. மீண்டும் கழறிக் குழறுகிற வாயுடனே கூக்குரலிட வாரம்பித்தார். ஆற்றிலே அடித்துக்கொண்டு போகிறவன் கூப்பிட்டழும் ஹீனசுரத்திலே அவர் கதறினார்.
ஒரு கொலைஞன் அவருடைய இடுப்பைக் கோத்துப் பிடித்துக்கொண்டு திமிறாமல் அழுத்திப் பிடித்துக்கொண்டிருக்கவும், மற்றொரு கொலைஞன் அவரை ஒருபுறமாய்ச் சுவர்மீது சாய்த்துப் பற்றிக்கொண்டிருக்கவும், இரண்டு கொலைகாரர்கள் அவருடைய கைகளைப் பின்புறம் இழுத்துக் கெட்டியாய் இறுக்கிக் கொண்டிருக்கவும், ஐந்தாவது பேர்வழி தன்னுடைய கூரிய கட்டாரியை அவருடைய மார்புக்கெதிரே குறிபார்த்துக் கொண்டு பாய்ந்தவண்ணம் இருக்கவும், முஈஜுத்தீனோ இந்தப் பிடியினின்று வழுவித் தப்பிக்கொள்வதற்காக அறுத்தகிடா துள்ளுவதைப்போல் துடித்துக்கொண்டு உதறியோட முயன்று கைகால்களை உதைத்துக்கொள்ளவும் அவ்வகோரக் காட்சி காண்பவருள்ளத்தைக் கலக்குகிற வேளையிலே, சுல்தானா ஷஜருத்துர் மூச்சு முட்டுகிற வேகத்திலே ஓடிவந்து அங்கு நின்றார்.
“நிறுத்துங்கள்! நிறுத்துங்கள்! விட்டுவிடுங்கள்! இவரை விட்டு விடுங்கள்! இவரைக் கொன்று விடாதீர்கள்! கொன்று விடாதீர்கள்!” என்று அலறித் துடித்துப் பதறி வீழ்ந்தார்.
உரித்துவைத்த வாழைப் பழத்தை வெகு நாஜூக்காக உள்ளுக்குத் தள்ளும் குழந்தைகளைப் போல் கட்டாரியை ஓங்கிய வண்ணம் முஈஜுத்தீனின் மார்பின்மீது குறியாய்ப் பாய்ந்து கொண்டிருந்த கொலைகாரன் அந்தச் சப்தம் கேட்டுச் சட்டெனத் திரும்பிப் பார்த்தான். எவர் தடுத்தபோதினும், என்ன பூகம்பம் அதிர்ந்தபோதினும், சற்றுமே முன்பின் யோசியாது முஈஜுத்தீனைக் கொன்றேதான் தீர்க்கவேண்டுமென்று கடுமையான கட்டளையிடப் பெற்றிருந்த அக்கொலைஞர்கள் இந்த நேர்முரணான இறுதி நிமிஷக் கதறுதலைக் கேட்டு, அதிசயித்துவிட்டார்கள். கொலை செய்வதற்காக நீட்டிப் பிடித்த ஆயுதத்துடன் நின்ற ஐந்தாவது கொலைஞன் கடுஞ்சினத்துடனே ஷஜருத்துர்ரை ஏறஇறங்க வெறித்துப் பார்த்துப் பார்த்தான்.
“ஐயோ, வேண்டாம், வேண்டாம்! விட்டு விடுங்கள், இவரை! என் பழைய கட்டளையை நிறைவேற்ற வேண்டாம்! என் இந்தப் புதிய ஆக்ஞைக்குக் கீழ்ப்படியுங்கள்!” என்று மூச்சு முட்டமுட்டக் கத்தினார் ஷஜர்.
ஒரு கால் நிமிஷ நேரம் அங்கிருந்தோர் அனைவரும் செயலற்றுப்போய், மாந்திரீகத்தால் கட்டுண்டாற் போன்று அப்படியே நின்றுவிட்டார்கள். என்னெனின், மிகவும் இறுதியான கடைசி வினாடியிலே இப்படிப்பட்ட அரசகட்டளை பிறந்தால், ஏன் எல்லாம் ஸ்தம்பித்து விடமாட்டா? அந்தச் சந்தர்ப்பத்திலே அனைவரும் அயர்ந்து நின்றுவிட்டால், எப்படியாவது தப்பியோடிவிடலாம் என்று முஈஜுத்தீன் முயன்றார். ஆனால், முதலைப் பிடியினும் முரட்டுத்தனமான பிடிப்புள்ள அவர்களிடமிருந்தா தப்ப முடியும்? பிரதம கொலைகாரயோ, ஆவேசம் பூண்ட மருளாடும் பூசாரியே போல், கண்களை உருட்டிக் கொண்டும், கட்டாரியுடன் ஓங்கிய கரத்தைச் சற்றும் தாழ்த்தாமலும் மகா பயங்கரமான தோற்றத்துடனே சுல்தானா நின்ற திக்கைத் திரும்பி நோக்கினான்.
“யா சுல்தானா! தாங்கள் என்ன உளறுகிறீர்கள்? இவனை இப்படிப்பட்ட சந்தர்ப்பத்திலா விட்டுவிடச் சொல்லுகிறீர்கள்?” என்று உதடுகள் துடிக்கக் கர்ஜித்தான்.
“ஏ, ஷஜருத்துர், என்னருங் காதலி! அல்லாஹ் ரசூலுக்காக என்னை விட்டுவிடச் சொல்லே! நான் இங்கிருந்து எங்காவது ஓடிப்போய் விடுகிறேன்! ஷஜருத்துர், ஷஜருத்துர்! என்னைக் காப்பாற்று, காப்பாற்று! இந்தப் பாவிகள் என்னைக் கொன்றே தீர்த்துவிடுவார்கள் போலிருக்கிறதே! ஆ, ஆ, ஐயோ!” என்று உயிரிழக்கும் பேடியின் இறுதி நிமிஷக் கோழைத்தனத்துடன் கெஞ்சிக் கூத்தாடினார் முஈஜுத்தீன்.
“ஐயோ, இவரை விட்டுவிடுங்கள்! நான் யோசிக்காமல் இந்தத் தண்டனையை விதித்துவிட்டேன். இவரைக் காப்பாற்றுங்களே!” என்று ஷஜர் மீண்டும் அலறினார்.
“யா மலிக்கா! தங்களுக்கென்ன பித்தா பிடித்துவிட்டது? இப்பொழுது இவனை விட்டுவிட்டால், இவன் எங்களைத் தாம் கொல்லாமல் விடப்போகிறனா? அல்லது தங்களைத்தாம் தப்பவிடப் போகிறானா? – யா ஸாஹிபா! முடியாது, முடியாது, முக்காலும் முடியாது! தாங்கள் தங்களுடைய முந்தைய கட்டளையை வாபஸ் பெறும் நேரம் இதுவன்று. இந்த ஞானம் தங்களுக்கு முன்னமே இருந்திருக்கவேண்டும். தங்களுக்கேன் இந்த இறுதி நிமிடத்தில் இப்படி மூளை குழம்பிவிட்டது? தாங்களேன் இங்கே வந்தீர்கள்? இங்கிருந்து ஓடிப்போய்விடுங்கள்! சீக்கிரம் போய்விடுங்கள்! உரலுக்குள் புகுந்தது உலக்கைக்குத் தப்பாமற் போய்விடுமா?” என்று கர்ஜித்துக் கொண்டே, அப்பக்கம் திரும்பி, ஓங்கிய அதே வேகத்தில் அரை வினாடியில் அக்கட்டாரியை ஒரே குத்தாய்க் குத்தி, முஈஜுத்தீனின் ஹிருதயத்துள்ளே அடியுடன் அழுத்திவிட்டான் அப் பாதகன்.
இக் குலை நடுங்கும் கொடுங்காட்சியைக் காணச்சகியாமல், தம்முடைய இரு கண்களையும் கைகளால் இறுகப் பொத்திக் கொண்டு, பலங்கொண்டமட்டும் கீச்சிட்டுக் கதறித் துடித்தார் நம் ஷஜருத்துர். மீண்டும் கண்களைத் திறந்து பார்த்தபொழுது, அந்தக் கொலையுண்ட உடல் தாறுமாறாய்த் தொப்பென்று கீழே சாய்ந்து வீழ்ந்ததையும் அப் பிரேதம் தன்னுடைய வாயை ‘ஆவ், ஆவ்’ என்று திறந்து திறந்து மூடி ஆவியை விட்டுக் கொண்டிருந்ததையும், குத்துண்ட துளைவழியே குருதி வெள்ளம் ‘குபு குபு’ வென்று பாய்ந்துவந்து வழிந்தோடி, உறைந்து கொண்டே சென்றதையும் கண்டு, மெய்சோர்ந்து மூர்ச்சித்துச் செயலற்றுச் சாய்ந்துவிட்டார் ஷஜருத்துர். கொலையுண்ட அப்பிரேதம் துடித்த துடிப்பைவிட, ஷஜருத்துர்ரின் ஹிருதயம் அதிகமாகவே துடித்தது.
அவ் வைந்து கொலைகாரர்களும் செயலற்றுக் கீழே வீழ்ந்த சுல்தானா ஷஜருத்துர்ரை மெல்லத் தூக்கி எடுத்துக்கொண்டு அந்த ஹம்மாமின் உள் அறையிலிருந்து வெளியே கொணர்ந்து, அந்தப்புரத்துக்குச் சென்று, மலரணை மஞ்சத்தின்மீது நீட்டிப் படுக்கவைத்து, ஆலவட்டம் வீசினார்கள். அந்தப்புரத்துத் தோழியர் ஓடிவந்து சுல்தானா பிரக்ஞை தவறிக் கிடப்பதன் காரணம் தெரியாமல் சயித்தியோபசாரம் புரிய முற்பட்டார்கள். அக் குழப்பத்திலே கொலைஞர்கள் மெல்ல நழுவிச் சென்றுவிட்டார்கள்.
முஈஜுத்தீனைக் கொன்றதுடன் பாதி வேலைமட்டுமே முடிந்திருந்தது. அம் மையித்தைப் புதைக்கவேண்டிய மறுபாதி வேலையைச் செய்துமுடிக்க அக் கொலைஞர்கள் வெளியேறிச் சென்றார்கள்.
ஷஜருத்துர் மணந்த இரண்டாவது கணவரான முஈஜுத்தீன் ஐபக்கின் கதி, இவ்விதமாக, இருக்கிற இடம் தெரியாமல் மாயமாய் மறைந்துபோக வேண்டுமென்று அவருடைய விதியிலே ஆண்டவன் அன்றே எழுதியிருந்தான்!
ஷஜருத்துர்ரையும் ருக்னுத்தீனையும், அப்துல்லாவையும் அந்த ஐந்து கொலைகாரர்களையும், அந்தப்புர ரகசிய தாதிகள் சிலரையும் தவிர்த்து அவ் வரண்மனையில் வேறு எவருக்குமே முஈஜுத்தீன் அங்குத் திரும்பியதோ ஹம்மாமில் கொலை புரியப்பட்டதோ, பின்னர் எவருக்கும் தெரியாமல் புதைக்கப்பட்டதோ கிஞ்சித்தும் தெரியவே தெரியாது!
தொடரும்…
-N. B. அப்துல் ஜப்பார்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License