இஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா – 2

by admin

2. விடுதலைப் போர்

தாவூத்ஷா படித்துப் பட்டம் பெறக் கை கொடுத்த, அவரது கை பிடித்த மனைவி சபூரா பீவி, தம் கணவர் பட்டம் பெற்ற சில நாளில், தமது கடமை முடிந்தது என்பது போல, கண் மூடினார்.

இந்த இனியத் தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. முகம்மதா என்று பெயர். தாய் வீட்டில் வளர்ந்தாலும், தாவூத்ஷா வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தார். முகம்மதாவுக்கு மணமாகி 2 ஆண் குழந்தைகள், 2 பெண் குழந்தைகள் பிறந்தார்கள். இதற்கு மேல் அந்தக் குடும்பத்தைப் பற்றி இப்போது விவரம் எதுவும் அறிய இயலவில்லை.

1915 இல் தாவூத்ஷா மறுமணம் செய்து கொண்டார். மணமகளின் பெயர், மைமூன்பீ. திருமணத்தின்போது இந்த அம்மையாருக்கு 14 வயது. தாவூத்ஷாவின் சொந்த சித்தப்பா மகள்.

33 ஆண்டு காலம் இருவரும் இணைந்து, இல்லறத்தை நல்லறமாக நடத்தினார்கள். இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள், 4 பெண் குழந்தைகள் பிறந்தார்கள்.

இத்திருமணத்துக்கு முன்பே, பி.ஏ. பட்டம் பெற்றதுமே, ஜீலை மாதம் கடலூரில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு குமாஸ்தாவாகத் தாவூத்ஷா சேர்ந்தார். அந்நாளைய பி.ஏ.களுக்குக் கிடைக்கக்கூடிய முதல் பதவி இது தான். மாதச் சம்பளம் ரூ. 25.

வேலையில் சேரும்போதே கலெக்டர் ஆக வேண்டும் என்ற ஆசை தாவூத்ஷாவுக்கு இருந்தது. அந்நாளில் நன்கு படிக்கக்கூடிய ஒவ்வொரு மாணவனின் ஆசையும் இதுதான். ‘உன் மகன் என்ன, படித்து கலெக்டராகப் போகிறானோ?’ என்று சொல்லுவார்கள். அந்நாளில் அவ்வளவு செல்வாக்கும், அதிகாரமும் உள்ளப் பெரிய பதவியாக கலெக்டர் பதவி விளங்கியது.

தாவூத்ஷா கலெக்டர் அலுவலகத்தில் வேலை பார்த்துக்கொண்டே படித்து, துறைத் தேர்வுகள் எழுதித் தேறினார். சட்டமும் படித்தார். இதனால் படிப்படியாகப் பதவி உயர்வு பெற்று, 1917-இல் சப் மாஜிஸ்திரேட்டு ஆனார். பண்ருட்டியில் சப் மாஜிஸ்திரேட்டாகப் பதவி ஏற்றார்.

துணை கலெக்டர் (டெபுடி கலெக்டர்) பதவிக்கான பட்டியலிலும் தாவூத்ஷாவின் பெயர் இடம் பெற்றது. பிறகு கலெக்டர் தான்!

பதவியைத் தூக்கி எறிந்தார்

இந்த நிலையில் 1921-இல் திடீர் என்று ஒரு நாள் தாவூத்ஷா சப் மாஜிஸ்திரேட்டுப் பதவியை ராஜினாமா செய்து விட்டார்! அப்போது அவர் விழுப்புரத்தில் சப் மாஜிஸ்திரேட்டாக இருந்தார்.

அப்போது இந்தியாவின் விடுதலைப் போர் நடந்து கொண்டிருந்தது. போராட்டக் கனல் தாவூத்ஷாவின் உள்ளத்திலும் பற்றிக் கொண்டது. கலெக்டர் கனவை எரித்து சாம்பல் ஆக்கியது.

விடுதலைப் போரின் ஒரு பகுதியாக மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கம் தொடங்கினார். ‘அரசாங்க வேலைகளை விட்டு வெளியேறுங்கள்’ என்று அண்ணல் காந்தி அடிகள் அறைகூவல் விடுத்தார். தாவூத்ஷாவின் உள்ளத்தில் எரிந்து கொண்டிருந்த விடுதலை நெருப்புக்கு இது எண்ணெய் வார்த்தது போல ஆயிற்று. சப் மாஜிஸ்திரேட்டுப் பதிவியை உதறித் தள்ளினார்.

விழுப்புரத்தில் இருந்தபோது அவருடைய தலைமகன் இறந்து போனான். இந்த காரணமும், சப் மாஜிஸ்திரேட்டுப் பதவியை விட்டுவிடும்படி தாவூத்ஷாவைத் தூண்டின. காந்தி ஒத்துழையாமைப் போராட்டம் தொடங்கியதும், பதவியைத் தூக்கி எறிந்து விட்டு, சொந்த ஊரான நாச்சியார் கோயிலுக்குத் திரும்பினார்.

கதர் விற்றார்

தாவூத்ஷா இந்திய விடுதலைப் போரில் குதித்தார். அரசியலில் ஈடுபட்டார். ஊர் ஊராகச் சென்று பிரசாரம் செய்தார். தமது “தாருல் இஸ்லாம்” பத்திரிகையையும் பிரசாரத்துக்குப் பயன்படுத்திக் கொண்டார்.

நாவன்மை மிக்கத் தாவூத்ஷா, காங்கிரஸ் பிரசாரகர் ஆனார். சென்னை நகரத் தெருக்களிலும் வெளியூர்களிலும் கூட்டங்கள் நடத்தி, மகாத்மா காந்தியின் கொள்கைகளை விளக்கிக் கூறினார். விடுதலையின் தேவையை வற்புறுத்தினார். அரசியலுக்கு ஏற்ற இடம் தலைநகரான சென்னைதான் என்று உணர்ந்தார். எனவே, சென்னைக்குக் குடியேறினார்.

கதர்த் துணிகளை கை வண்டியில் ஏற்றிக் கொண்டு, தாமே வண்டியை இழுத்துச் சென்று, தெருத் தெருவாக விற்பனை செய்தார்.

கடுமையான உழைப்பின் காரணமாக சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆனார். சென்னை நகர சபையில் நகரத் தந்தையாகவும் (ஆல்டர்மேன்) தாவூத்ஷா நியமிக்கப்பட்டார்.

காங்கிரஸ் பிரசாரத்துக்காக “தேச சேவகன்” (1934) என்ற வார இதழையும் சென்னையில் தாவூத்ஷா நடத்தினார்.

அரசியல் சீர்த்திருத்தங்கள் பற்றி, “புதிய சீர்த்திருத்தங்கள். வெள்ளை அறிக்கையின் வரலாறும் கூட்டுக் கமிட்டி ரிப்போர்ட்டும், பிரபலஸ்தர்களின் அபிப்பிராயத்துடன் கூடியது” என்ற தொகுப்பு நூலை 1934 இல் வெளியிட்டார்.

“எல்லைப் புறக் காந்தி அல்லது கான் அப்துல் கஃபார் கான்” என்ற மொழி பெயர்ப்பு நூலை 1937 இல் வெளியிட்டார். இந்நூலுக்கு அந்நாளைய காங்கிரஸ் தலைவரும் காமராசரின் குருவுமான எஸ். சத்தியமூர்த்தி முன்னுரை எழுதியுள்ளார். “சென்னை கார்ப்பரேசன் ஆல்டர் மேனும், ஜில்லா காங்கிரஸ் கமிட்டித் தலைவரும், தாருல் இஸ்லாம் ஆசிரியருமான பா. தாவூத்ஷா மொழி பெயர்த்தது” என்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியலில் பெரியார், ராஜாஜி, சேலம் மருத்துவர் ப. வரதராசலு ஆகியோருடனும் தொடர்பு ஏற்பட்டது. தமிழ்ப் பற்றின் காரணமாக மறைமலை அடிகள், தமிழ்த் தென்றல் திரு.வி.க ஆகியோருடன் நெருங்கிப் பழக தாவூத்ஷாவுக்கு வாய்ப்புக் கிட்டியது. திரு.வி.க.வுடன் பல கூட்டங்களில் பேசியிருக்கிறார்.

தந்தை பெரியாருடன் ஒத்த கருத்துடையவராக இருந்தார். அவருடன், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழாக்களில் கலந்து கொண்டு பேசியிருக்கிறார், தாவூத்ஷா.

தமிழ்நாட்டு ஜின்னா

1940-இல் தாவூத்ஷா காங்கிரசை விட்டு விலகினார். ஜின்னாவின் பாகிஸ்தான் கோரிக்கையை ஆதரித்தார். முஸ்லிம் லீக் கட்சியில் சேர்ந்தார். தமிழ்நாட்டில் முஸ்லிம் லீக்கின் முதன்மையான பிரசாரகர் ஆனார். இடி முழக்கம் போன்ற இவரது சொல்லாற்றலும் வெடி முழக்கம் போன்ற எழுத்து ஆற்றலும் நொடிப் பொழுதும் ஓய்வு அறியாத உழைப்பும் இவருக்கு “தமிழ்நாட்டு ஜின்னா” என்ற பட்டத்தைப் பெற்றுத் தந்தன.

1941-இல் சென்னையில் முஸ்லிம் லீக் மாநாடு நடந்தது. ஜின்னா வந்தார். இலட்சக்கணக்கில் திரண்ட மக்கள் கூட்டத்தில் பேசினார். அவரது பேச்சை தாவூத்ஷா மொழி பெயர்த்தார்.

பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னும் தமிழ் முஸ்லிம்களின் பலத்துக்கும் வளத்துக்கும் தாவூத்ஷா பாடுபட்டார். அவரது “தாருல் இஸ்லாம்” இதழை இதற்கு ஒரு கருவியாகப் பயன்படுத்தினார்.

(தொடரும்)

நூல்: இஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா
ஆசிரியர்: முனைவர் அ. அய்யூப்

Related Articles

Leave a Comment