இஸ்ரேல் vs ஃபலஸ்தீன் : இணைந்து வாழும் சாத்தியத்தை அழித்த வன்முறை

by Shayma Parveen

வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் ஷைமா பர்வீன் சமர்ப்பித்த ‘Israel VS. Palestine: How Violence Negated Possibilities of Coexistence என்ற ஆய்வறிக்கையின் சுருக்கம்.

‘மிகத் தூய்மையானவன்; தன் அடியாரை ஓர் இரவில் அழைத்துச் சென்றவன்! மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து வெகுதொலைவில் உள்ள மஸ்ஜித் வரையில்! அதன் சுற்றுப் புறங்களை அவன் அருள்வளம் மிக்கதாய் ஆக்கினான். எதற்காக அழைத்துச் சென்றானெனில், தன்னுடைய சான்றுகளை அவருக்குக் காண்பிப்பதற்காக! ’ (திருக்குர்ஆன் 17:01)

செப்டம்பர் 2022 தொடக்கத்தில், எதிர்பாராத கனவொன்றை நிறைவேற்றும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. ஜோர்டானுக்கும் ஜெருசலத்திற்கும் செல்வதற்கு ஒரு வார பயணத்திற்கான திட்டத்தை ஒரு சுற்றுப்பயணக் குழு திட்டமிட்டிருந்தது. அதில் பெரும்பகுதி ஜெருசலத்தில் கழிப்பதாக இருந்தது. இஸ்லாத்தின் புனித இடங்களில் ஒன்றான அல் அக்ஸா மஸ்ஜித் செல்வது என்னைப்போல் அனைவரையும் மகிழ்ச்சியில் திளைக்க வைத்தது. நான் இதுவரை அல் அக்ஸா மஸ்ஜிதின் அருகில் அமைந்துள்ள கற்குவி மாடம் (Dome of the Rock) என்ற அழகான தங்கக் குவிமாடத்தின் (Golden Dome) படங்களைப் பார்த்துள்ளேன். ஆனால் அல் அக்ஸா மஸ்ஜிதின் படங்களைப் பார்த்ததாக நினைவில்லை. இஸ்லாமிய வரலாற்றில் அல் அக்ஸா மஸ்ஜிதிற்கு முக்கியமானதொரு இடமுண்டு, அதைச் சென்று காண்பது ஓர் அரிய வாய்ப்பாகும்.

ஒரு காலத்தில் ஃபலஸ்தீனின் பகுதியாக இருந்த அல் அக்ஸா மஸ்ஜித் இஸ்ரேலிய கட்டுப்பாட்டிற்குள் சென்ற பிறகு அந்த வாய்ப்பு கடுமையானதாகிவிட்டது. வாழ்நாள் முழுவதும் சுவாசிக்கும் காற்றின் அசுத்தத்தைக் கூட அறியாமல் இருந்த எனக்கு, முக்கியமான மஸ்ஜிதுக்குச் சென்று அதைக் கண்டதும் அங்கு தொழுததும் பரிசுத்தமான காற்றைச் சுவாசித்ததைப் போல் இருந்தது.

ஜெருசலத்திற்குள் நுழைய இஸ்ரேலின் எல்லை சோதனைச் சாவடியில் பல மணிநேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. ஒருவழியாக எங்கள் குழு பிரச்னையில்லாமல் அதைக் கடந்த போதிலும் பைத்துல் முகத்தஸின் வாயிலைச் சுற்றி காவலிருக்கும் இஸ்ரேலியக் காவலர்களின் சோதனை கடுமையாகவும் தடங்கலாகவும் மோசமான அனுபவமாகவும் இருந்தது. அல் அக்ஸா மஸ்ஜிதினுள் நுழைவதற்குள் இஸ்ரேலிய காவலர்களுடன் ஏற்பட்ட அனுபவத்தினால் பின்னர் அவர்களை நேருக்கு நேர் பார்ப்பதைத் தவிர்க்க எங்களது உள்ளுணர்வே எங்களுக்குக் கற்றுக் கொடுத்துவிட்டது.

நாங்கள் அமெரிக்கப் பயணக்குழு என்பதால் அல் அக்ஸா மஸ்ஜிதிற்குள் அனுமதிக்கப்பட்டோம். எங்களுக்குப் பின்வந்த ஃபலஸ்தீனர்கள் பல்வேறு கடுமையான கேள்விகளால் துளைக்கப்பட்டனர். நாங்கள் அனைவரும் சுற்றுலாப் பயணிக்கான அடையாள அட்டையைக் கழுத்தில் அணிந்திருந்தோம். ஃபலஸ்தீனர்களுக்குத் தங்களை இஸ்ரேலிய காவலாளிகளிடமிருந்து காத்துக் கொள்வதற்கான அட்டை எதுவும் இல்லை. அப்பாவி ஃபலஸ்தீன் இளைஞன் ஒருவன் காரணமேயின்றி கைதானதை நாங்கள் பார்த்தோம்.

நாங்கள் அங்கிருந்தபோது, எந்த நேரத்திலும் ஃபலஸ்தீனர்களை இஸ்ரேலியர்கள் தாக்கலாம் என்பதை நாங்கள் அறிந்தே இருந்தோம். எனினும் அவ்விதம் எதுவும் நடக்கவில்லை. ஆனால் அங்கிருந்து நாங்கள் திரும்பி வந்த பிறகு, நாங்கள் என்ன நினைத்தோமோ அது நடந்தது. யூதப் புத்தாண்டில் ஒரு திங்கட்கிழமை, முஸ்லிம்களுக்காகவே அல் அக்ஸா மஸ்ஜித் திறந்திருந்த நேரத்தில் அதாவது யூதர்கள் நுழைவதற்கு அனுமதியற்ற நேரத்தில் ஃபலஸ்தீனர்களைத் தாக்கியபடி இஸ்ரேலிய அதிகாரிகள் இஸ்ரேலியக் குடியேறிகளுடன் மூர்க்கமாக அல் அக்ஸா மஸ்ஜிதிற்குள் நுழைந்தனர். இம்மாதிரியான நிகழ்வுகள் தொடர்கதையே. ஒவ்வொரு யூத விடுமுறைக் காலத்தின்போதும் மஸ்ஜித் வளாகத்தினுள் யூதர்கள் நுழையும் நேர அட்டவணையை முறித்துவிட்டு இஸ்ரேலிய அதிகாரிகள் ஃபலஸ்தீனர்களைத் தாக்கி அல் அக்ஸா மஸ்ஜிதைத் தங்கள் பொறுப்பில் எடுத்துக்கொள்கின்றனர்.

தொடரும் இம்மாதிரியான வன்முறை நிகழ்வுகள் ஃபலஸ்தீனர்களுக்குப் பழகிவிட்டது. நீண்ட காலமாக இஸ்ரேலியர்கள் செயல்படுத்தி வரும் இவ்வழிமுறை இஸ்ரேலியர்கள் ஃபலஸ்தீனர்களுடன் சகஜமாக ஒன்றிணைந்து வாழத் தகுதியற்றவர்களாக ஆக்கிவிட்டது. ஆகவே இரு நாடு தீர்வு (Two state solution) ஃபலஸ்தீனர்களுக்கான ஒரு தீர்வே அல்ல.

ஃபலஸ்தீனில் இஸ்ரேல் அமைக்கப்பட்ட வரலாறு

1700, 1800 ஆண்டுகளில், விவிலிய விளக்கங்களின் அடிப்படையில் ஃபலஸ்தீனில் யூதர்களைக் குடியமர்த்துவதற்கு பிரிட்டிஷார் ஆதரவு அளித்தனர். இஸ்ரேலை நிறுவுவதும் யூதர்களைக் கிறித்தவர்களாக மாற்றுவதும் கடவுளின் வாக்குறுதி, இஸ்ரேலை நிறுவுவது பைபிளின் தீர்க்க தரிசனம் நிறைவேறுவதற்கான ஒரு பகுதியாகும் என்று பிரிட்டிஷார் நம்பினர். யூதர்களின் மக்கள் தொகை 1800களின் பிற்பகுதி வரை 10%க்கும் குறைவாகவே இருந்தது. அச்சமயம் இஸ்ரேல் கற்பனை செய்த நிலமான ஃபலஸ்தீனோ முதலாம் உலகப் போர் முடியும் வரை உஸ்மானிய ஆட்சியின் கீழ் இருந்தது. அதன்பின் துருக்கியர்களை விரட்டியடித்து ஃபலஸ்தீனை பிரிட்டிஷ் அரசாங்கம் கைப்பற்றியது.

ஃபலஸ்தீன் கட்டுக்குள்ளானதும், நான்கு நிரந்தர உறுப்பினர்கள் கொண்ட (பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான்) லீக் ஆஃப் நேஷன்ஸ் (League of Nations) பால்ஃபோர் பிரகடனத்தை (Balfour Declaration) 1917இலும் 1922இல் ஃபலஸ்தீன ஆணையையும் (Mandate for Palestine) நடைமுறைப்படுத்தியது. பால்ஃபோர் பிரகடனம் என்பது அடிப்படையில் ‘யூத சியோனிச அபிலாஷைகள் மீதான அனுதாபம்’, ‘யூதர்களுக்கு ஃபலஸ்தீனில் தேசிய இல்லத்தை நிறுவுவதற்கான ஆதரவு’ என்பதற்கான கோரிக்கையாக இருந்தது. ஆரம்பத்தில், செயல்படுத்த கடினமாக இருந்ததால் இது ஒத்திவைக்கப்பட்டது. அதற்கான முதன்மைக் காரணம் அங்கு யூதர்களைக் குடியேற்றி அவர்களின் மக்கள் தொகையை அங்கு அதிகரிக்க பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு இருந்த நிதிப் பற்றாக்குறையாகும்.

ஃபலஸ்தீன ஆணை(Mandate for Palestine) யூதர்கள் ஃபலஸ்தீனில் நிலம் வாங்க அனுமதித்தது, அது 1900களில் அவர்களின் மக்கள் தொகையை அங்கு 10%க்கு மேல் அதிகரித்தது. யூத மக்கள் தொகை அதிகரிப்பு ஃபலஸ்தீன அரேபியர்களுக்கும் யூதர்களுக்கும் இடையே பதற்றமும் மோதல்களும் அதிகரிக்க வழிவகுத்தது. அவர்களுக்கு இடையிலான மோதலுக்கு முக்கிய காரணம் யூதர்களின் புனிதத்தலமான புலம்பல் சுவரும் (Wailing Wall), முஸ்லிம்களின் புனிதத்தலமான ஹரம் அல்ஷரீஃபும் (பைத்துல் முகத்தஸ் Haram Al Sharif) நெருக்கமாக அமைந்திருந்ததே.

பதற்றமும் மோதல்களும் அதிகரித்ததால், 1937இல், ஃபலஸ்தீன ஆணை முடக்கப்பட்டது. அதற்குப் பதிலாக யூதர்களும் முஸ்லிம்களும் இணைந்து வாழ அனுமதிக்கும் வகையிலான பிரிவினைத் திட்டம் (Partition Plan) ஏற்படுத்தப்பட்டது. அரேபியர்களின் எதிர்ப்பு காரணமாக பிரிவினைத் திட்டம் செயல்படுத்தப்படுவது தோல்வியடைந்தது. 1947ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் ஒருமுறை அதே போன்றவொரு பிரிவினைத் திட்டத்தை செயல்படுத்த முயற்சி செய்த போதும் அரேபியர்கள் அத்திட்டத்தை எதிர்த்தனர்.

இரண்டு பிரிவினைத் திட்டங்களின் அடிப்படை அரேபியர்களுக்கும் யூதர்களுக்கும் இடையில் நிலத்தைப் பிரித்து, மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவான யூதர்களுக்கு பெரும்பான்மையான நிலத்தை அளிப்பதாகும். அரேபியர்கள் மறுத்த போதிலும், ஐக்கிய நாடுகள் சபை இந்த அநியாய பிரிவினைத் திட்டத்தை ஏற்றுக்கொண்டதால் அரேபியர்களுக்கும் யூதர்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் உருவானது. 15 மே 1948இல் இஸ்ரேல் என்றொரு நாடு அதிகாரப்பூர்வமாக ஏற்படுத்தப்பட்டது. யூதர்கள் இறுதியில் நக்பாவின் (Nakba) மூலம் ஃபலஸ்தீனர்களை வெளியேற்றி ஒதுக்கப்பட்டதை விட அதிகமான நிலத்தைப் பறித்துக்கொண்டனர்.

(நக்பா என்பது ஃபலஸ்தீனர்களை வன்முறையின் மூலம் இடம்பெயர வைத்து, அவர்களின் சமூக, பண்பாட்டு, அடையாள, அரசியல் உரிமைகளை தேசிய உடைமையை அழிப்பதாகும். 1948ஆம் ஆண்டு ஃபலஸ்தீனர்களுக்கு ஏற்பட்ட பேரழிவு ஆகும். – மொழிபெயர்ப்பாளர்)

யூதர்களைப் பொறுத்தவரை நக்பா (Nakba) என்பது சியோனிசத்திற்குக் கிடைத்த வெற்றி. 1949ஆம் ஆண்டு நக்பாவில் குறைந்தபட்சம் 7,50,000 ஃபலஸ்தீனர்கள் அவர்களது வீடுகளை விட்டு விரட்டப்பட்டு அகதிகளாக மாற்றப்பட்டனர். ஃபலஸ்தீனர்களுக்குச் சொந்தமான வீடுகள் யூதர்களுக்கு மாற்றப்பட்டன. இடம்பெயர்ந்த ஃபலஸ்தீனர்களுக்கோ திரும்புவதற்கான வாய்ப்புகள் இல்லை, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர், சித்ரவதை செய்யப்பட்டனர், பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாயினர். ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

1920களில் 10%ஆக இருந்த யூத மக்கள் தொகை முப்பதாண்டுகளுக்குப் பிறகு 80% ஆக உயர்ந்தது. அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்து 70-80%ஆக உள்ளது. ஃபலஸ்தீன மக்களில் பெரும்பாலோர் ஃபலஸ்தீனின் மேற்குப் பகுதியான கஸ்ஸாவுக்கு இடம்பெயர கட்டாயப்படுத்தப்பட்டனர். ஜோர்டான் எல்லையில் உள்ள மேற்குக்கரையில் இரண்டாவதாக அதிக மக்கள் தொகை கொண்ட ஃபலஸ்தீன அகதிகள் உள்ளனர். மேற்குக் கரையில் சுமார் 8,71,000 ஃபலஸ்தீன அகதிகள் உள்ளனர். கஸ்ஸா பகுதியில் பத்து இலட்சத்திற்கும் அதிகமான அகதிகள் உள்ளனர்.

கஸ்ஸா பகுதியில் தஞ்சமடைந்தாலும் ஃபலஸ்தீனர்களுக்கு அமைதிக்கோ, பாதுகாப்பிற்கோ உத்தரவாதம் இல்லை. ஃபலஸ்தீனர்களுக்கு உணவு, சுத்தமான நீர், மின்சாரம் கிடைப்பதைத் தடை செய்து இஸ்ரேல் மிகக் கடுமையான கட்டுப்பாட்டை விதித்திருக்கிறது. கஸஸா பகுதியில் தஞ்சம் அடைந்திருக்கும் ஃபலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து குண்டுவீசி தாக்கி வருகிறது.

வாயெல் ஷாஹென் (Wael Shahen) என்ற ஃபலஸ்தீனியர் கூறுகையில், ‘கஸ்ஸாவில் மக்கள் வாழவில்லை, அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள். இவற்றுக்கு இடையே பெரிய வித்தியாசம் உள்ளது’ என்கிறார். இஸ்ரேலின் மிருகத்தனமான தாக்குதலுக்குச் சிறு குழந்தைகளும் தப்பவில்லை எனத் தெரிவிக்கிறார்.

இஸ்ரேலிய அதிகாரிகள் ஃபலஸ்தீனுக்குள் நுழைய முயலும் ஃபலஸ்தீனர்களை மட்டும் துன்புறுத்தவில்லை, இஸ்ரேலில் அவர்களுடன் இருக்கும் ஃபலஸ்தீன குடிமக்களையும் துன்புறுத்துகிறார்கள். கஸஸா பகுதியில் நிகழும் சம்பவங்களே அதற்குச் சாட்சியங்களாக இருக்கின்றன.

அரேபியர்கள் மீதான வெளிநாட்டவர்களின் அனுதாபத்தைக் குறைக்க அரேபியர்களைக் குற்றவாளிகள் என்று களங்கப்படுத்துகிறார்கள். தண்டனை பெற்ற குற்றவாளிகளுள் யூதர்களையும் அரேபியர்களையும் சமமாக நோக்காமல் அரேபியர்களை மட்டும் குற்றவாளிகள் என வகைப்படுத்தி, குற்றம் என்பதை அரேபிய இனத்தின் அடையாளமாகச் சித்திரிக்கிறார்கள். அப்பாவி பொதுமக்களான ஃபலஸ்தீனர்கள் கைது செய்யப்பட்டு அச்சுறுத்தப்படுகிறார்கள். ஃபலஸ்தீனில் இருக்கும் மனித உரிமை குழுக்கள் கூட இஸ்ரேலிய அரசாங்கத்தால் குற்றவாளிகளாக்கப்பட்டு மூடப்பட்டுள்ளன.

ஃபலஸ்தீனர்கள் இஸ்ரேலியர்களால் இயங்கும் நீதிமன்ற அமைப்பை நம்புவதில்லை. ஃபலஸ்தீனர்களுக்கு நீதிமன்ற அமைப்பு நீதிக்கான வழிமுறை அல்ல, நீதி வழங்கலைத் தாமதப்படுத்தி நிலத்தின் உரிமையை இழக்க வைக்கும் ஒரு வழிமுறையாகும். இவ்வகையில் ஃபலஸ்தீனர்கள் தங்களது நிலத்தை இஸ்ரேலியர்களிடம் ஒப்படைக்க வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்துகிறார்கள்.

ஃபலஸ்தீன வியாபாரிகளுக்குச் சுற்றுலாப் பயணிகள் மூலம் கிடைக்கும் வருமானமே அடிப்படை ஆதாரமாக உள்ளது. ஃபலஸ்தீனுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள், ஃபலஸ்தீனர்களுக்குச் சொந்தமான வணிக மையங்களில் பொருட்களை வாங்குகிறார்கள். இந்த வருவாய் ஃபலஸ்தீனர்கள் தங்கள் வீடுகளையும் நிலத்தையும் பராமரித்து உரிமையைப் பாதுகாக்க உதவுகிறது. இஸ்ரேலிய அரசாங்கம் சுற்றுலாப் பயணிகள் ஃபலஸ்தீனுக்கு வருவதைத் தடுத்தோ அல்லது நுழைவதற்கான வழிமுறையை கடுமையாக்கியோ முடக்குகிறது. இதனால் வருமானம் பாதிக்கப்பட்டு ஃபலஸ்தீனர்கள் வணிகத்தை இழந்து தங்கள் வீடு, வாசல்களை விற்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர். யூதர்கள் நிலத்தை அபகரிக்கிறார்கள். ஃபலஸ்தீனர்களோ தங்களது வீடுகளைக் காப்பாற்றப் போராடுகிறார்கள்.

இஸ்ரேல் ஒரு நாடாக அறிவிக்கப்பட்டதிலிருந்து அமெரிக்கா, பிற நாடுகளின் ஆதரவுடனேயே அது செழித்து வருகிறது. அமெரிக்கா இஸ்ரேலை ஆதரிப்பதனால், அமெரிக்காவுடனான தங்களது நட்பைத் தக்கவைக்க அரபு நாடுகளும் இஸ்ரேலை ஆதரிக்கத் தொடங்கியுள்ளன. முஸ்லிம்களின் புனிதத்தலங்களுள் ஒன்றான மஸ்ஜித் அல் அக்ஸாவின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது, குழந்தைகளைக் கொல்வது, மஸ்ஜிதிற்குள் கையெறி குண்டுகளையும் கண்ணீர் புகைக் குண்டுகளையும் வீசுவது போன்றவை இஸ்ரேலுடனான அரபு நாடுகளின் இணக்கத்தில் லேசான உரசலை ஏற்படுத்திய போதிலும் அரபு நாடுகள் இஸ்ரேலுடனான இணக்கத்தை முற்றிலும் துண்டித்துக்கொள்ளவில்லை.

இஸ்ரேலின் ஃபலஸ்தீன ஆக்கிரமிப்பு தொடர்கிறது. ஆயிரக்கணக்கான வீடு களையும் வாழ்வாதாரங்களையும் அழித்துவருகிறது. இந்நிலையில் மற்ற நாடுகளோ மனித உரிமைகளைப் பாதுகாப்பதைப் பற்றிக் கவலைப்படுவதும் பிரகடனங்களை வெளியிடுவதும் உண்மையானவைதாமா என்பது கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும்.

ஆசிரியர்: ஷைமா பர்வீன்

தமிழாக்கம்: நாட்டம்கார் அமீனுர் ரஹ்மான்

சமரசம் 1 – 15 டிசம்பர் 2023 இதழில் வெளியான கட்டுரை

ஆங்கில மூல ஆக்கம்: https://www.darulislamfamily.com/article-israel-vs-palestine-research-paper/

அச்சுப் பிரதியை வாசிக்க க்ளிக்கவும்

Related Articles

1 comment

Ebrahim Ansari December 15, 2023 - 6:18 am

அல்ஹம்துலில்லாஹ். புலிக்கு பிறந்தது பூனையாகாது என்பதன் நிரூபணம். அறிந்த தகவல்களானாலும் அறிமுக ஆய்வை வாழ்த்தி வரவேற்கிறோம்.

Reply

Leave a Comment