நூற்றாண்டில் தாருல் இஸ்லாம் – விமர்சனம்

by நூருத்தீன்

1919-ஆம் ஆண்டு நாச்சியார்கோயிலில் பிறந்தது ‘முதல் கமலம்’. பிரசவித்தவர் பா. தாவூத்ஷா. 12 இதழ்கள் வந்தன. ஓராண்டு ஆனதும் – 1920இல் – இவ்விதழ் ‘மறுகமலம்’ என்று பெயர் மாற்றப்பட்டது. மேலும் ஓராண்டு ஆனதும் ‘தத்துவ இஸ்லாம்’ என்றானது அதன் பெயர். பின்னர் 1923 சனவரி முதல் ‘தாருல் இஸ்லாம்’ என்று பெயர் மாற்றமடைந்து நிலைத்துவிட்டது. இதன் மலர் – இதழ் எண் மட்டும் முதல் கமலம் தொடங்கியதன் அடிப்படையில் கணக்கிடப்பட்டன.

மாத இதழாகப் பிறந்த தாருல் இஸ்லாம் மாதமிருமுறை இதழாகி, வார இதழாகி, வாரமிருமுறை இதழாகி, நாளிதழாகி ஏறக்குறைய 40 ஆண்டுகள் இஸ்லாமிய இதழ்களுள் மிகச் சிறப்பான ஒன்றாக கொடிகட்டிப் பறந்தது.

தாருல் இஸ்லாம் பத்திரிக்கைக்கு நூறு வயது ஆகிவிட்ட நிலையில் மிகப் பொருத்தமாக வெளிவந்துள்ளது ‘நூற்றாண்டில் தாருல் இஸ்லாம்’. இது சகோதரி எச். இ. அனீஸ் பாத்திமா எழுதியுள்ள ஆய்வு நூல். உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வாளர்களுள் ஒருவரான இவருக்கு, யதேச்சையாக பா. தாவூத்ஷாவும் தாருல் இஸ்லாமும் அறிமுகமாகி, ஆர்வத்தைத் தூண்டி, அதன் உந்துதலில் ஆய்வில் இறங்கி… விளைவு இந்நூல்.

தன் கருத்துகளாலும் தமிழ் நடையாலும், முஸ்லிம்களிடமும் மதம் கடந்து அனைவரிடமும், இந்த இதழ் எந்தளவு ஆதரவையும் பாராட்டையும் பெற்றதோ அந்தளவு இஸ்லாத்திற்குப் புறம்பான மூடப் பழக்கத்தில் மூழ்கியிருந்த மக்களிடம் எதிர்ப்பைப் பெற்றது. அவற்றைக் கடந்து எதிர்நீச்சல் போட்டு வென்றது. பெரியார் ஈ.வே. ரா., கலைஞர் மு. கருணாநிதி மற்றும் பலர் தாருல் இஸ்லாம் இதழின் அத்தியந்த வாசகர்களாகவும் பா. தாவூத்ஷாவின் தோழர்களாகவும் இருந்திருக்கின்றனர். அவற்றையெல்லாம் இந்நூல் ஆராய்ந்துள்ளது; விவரிக்கிறது.

தாருல் இஸ்லாமின் உருவாக்கமும் முக்கியத்துவமும், அதன் பணிகளும் நெறிகளும், அதன் சமய, சமூக விடுதலைச் சிந்தனைகள் என்று தமது ஆய்வை மூன்று பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு இந்நூலை எழுதியுள்ளார் அனீஸ் பாத்திமா. அவரது உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் இந்த ஆய்வு நூல் நிச்சயமான சான்று.

மற்றுஞ் சில பத்திரிக்கைகளைப் போல் யாம் கேவலம் பொருளீட்டலையே பிரதானமாகக் கொண்டு இந்த ‘தாருல் இஸ்லாத்தை’ நடத்தி வரவில்லை. பண்டைக்காலத்தில் பிழைப்பதற்கு வேறுவகை தெரியாதவரெல்லாம் பரிஹாரி (வைத்தியர்) என்று தம்மைப் பகர்ந்து கொண்டு கட்கத்தில் ஓர் அடைப்பத்துடன் வெளிவருவது வழக்கமாயிருந்து வந்தது; ஆனால் இக்காலத்திலோ அப்படிப்பட்ட ஒரு சிலர் பற்பல வகைப் பத்திரிகைகளை நடத்த முன் வந்து விடுகின்றனர்.

ஐயோ மானக்கேடு! பூகோள சாஸ்திரமேனும், தேச சரித்திரமேனும், ராஜீய ஞானமேனும், உலகளாவிய விவகாரமேனும் ஒரு சிறிதும் தெரிந்து கொள்ளாத கிணற்றுத் தவளைகளும் சில குமாஷ்தாக்களை வைத்துக் கொண்டு வேறு பத்திரிக்கைகளிலிருந்து விஷயங்களைக் கத்தரித்துத் தமிழ் ‘ட்டைப்’ புகளால் ஏதோவொரு பாடையில் அச்சிட்டுல் விட்டால் அதுதான் பத்திரிகையென்று மனப்பால் குடித்த வண்ணமாய் இக்காலத்தில் ஒரு சிலர் ஊரை மிரட்டிக் கொண்டு திரிகின்றனர். (பா. தாவூத்ஷா, தாருல் இஸ்லாம், ஜனவரி 1924)

ஓருயர்தர இஸ்லாமிய பத்திரிகையைப் பற்றி நினைக்க நேருங்கால் ஒவ்வொருவர் மனதிலும் உதிப்பது ‘தாருல் இஸ்லாம்’ என்னும் மாசிகைதான். முஸ்லிம்கட்கு வேண்டிய சகல நாகரிக விஷயங்களும் நிரம்பவுள்ள ஒரு குடும்ப மாதப் பத்திரிகை தா.இ. தான். எனவே, எல்லோரும் வாங்கி வாசித்து நற்பயன் பெறுவீர்களாக. தா.இ. விளையாட்டு, பொழுதுபோக்கு பத்திரிகையன்று. (தாருல் இஸ்லாம், செப்டெம்பர் 1937)

இதொரு சீரிய செந்தமிழ் முஸ்லிம் மாசிகை. விகட சஞ்சிகை யன்று; வேடிக்கைக் கதைப் பத்திரிகை அன்று; இப்படிப்பட்ட பொழுதுபோக்குக்குரிய வீண்விளையாட்டுச் சஞ்சிகைகளை விரும்பும் வாலிபர்கட்கு இதோபதேசம் புரியும் இஸ்லாமிய உயர் தரச் செந்தமிழ்ச் சஞ்சிகை வேம்பேபோல் கசப்பது மெய்தான். (தாருல் இஸ்லாம், 1957)

இவை தாருல் இஸ்லாம் பற்றி அதன் ஆசிரியர் பா. தாவூத்ஷா எழுதியவற்றிலிருந்து சில பகுதிகள். அவற்றை ஓரளவு ஆய்வு செய்திருக்கிறது இந்நூல். தாருல் இஸ்லாம் பத்திரிகையின் கருத்துகளும் அதன் சேவையும் வீச்சும் அக்காலத்தில் முஸ்லிம்களிடமும் பிறரிடமும் எத்தகு தாக்கத்தைச் செலுத்தின என்பதை அடிக்கோடு இடுகிறது இந்த ஆய்வு. பா. தாவூத்ஷாவையும் தாருல் இஸ்லாமையும் அறிமுகமில்லாத இத்தலைமுறையினருக்கு இந்த நூல் ஓர் அருமையான முன்னறிமுகம்.

பத்திரிகை ஆசிரியர் என்பதோடு எழுத்தாளராக, சமூக சீர்திருத்தவாதியாக, களப் போராளியாக, இஸ்லாமிய ஊழியராக அனைத்திற்கும் முத்தாய்ப்பாய் குர்ஆன் மஜீத் மொழிபெயர்ப்பாளராக – பன்முகத் திறனுடன் திகழ்ந்து சாதித்த பா. தாவூத்ஷாவின் பணிகளும் வாழ்க்கையும் வெகு வெகு சுவாரசியமானவை. அவற்றையும் தாருல் இஸ்லாம் பத்திரிகை ஆசிரியரின் அறிமுகமாக, சுருக்கமாக, இந்நூல் குறிப்பிட்டிருக்கலாம்.

தாருல் இஸ்லாம் பத்திரிகையும் பா. தாவூத்ஷாவும் விரிவான ஆராய்ச்சிக்கு உரிய கருப்பொருள்கள். அதைத் தொடங்கி வைத்திருக்கிறது இந்நூல். ஆய்வாளர் சகோ. எச். இ. அனீஸ் பாத்திமா, நெறியாளர் மணிகோ. பன்னீர்செல்வம், துருவம் வெளியீடு நீரை மகேந்திரன் ஆகியோருக்கு அன்பும் வாழ்த்தும் பாராட்டுகளும்.

நூல்: நூற்றாண்டில் தாருல் இஸ்லாம்: இஸ்லாமிய சுயமரியாதை இதழும், சமய, சமூகச் சீர்திருத்தமும்
ஆசிரியர்: எச். இ. அனீஸ் பாத்திமா
விலை: ₹ 100
வெளியீடு: துருவம்
தொடர்புக்கு:
25-G, தரைத்தளம், ஏழுகிணறு வீதி, சென்னை-16.
தொலைபேசி: 8610862771, மின்னஞ்சல்: editor@dhuruvam.in

-நூருத்தீன்

Related Articles

Leave a Comment