சக மனிதர்களுடன் பழகுவதில் இரு வகையினர் உண்டு. கலகலப்பாக, சகஜமாக, நிறைய பேசி, சிரித்து உறவாடுபவர் ஒரு வகை என்றால் அமைதியாக, கமுக்கமாக, தனிமை விரும்பியாக உள்ளவர்கள் மற்றொரு தரப்பு. இவர்களை முறையே extrovert, introvert என்கிறார்கள். இரண்டிற்கும் இடையிலான ambivert வகையினரும் உண்டு. இடம், பொருள், மக்களுக்கு ஏற்ப அவர்களது இயல்பு extrovert அல்லது introvert.
சமூகத்தின் பார்வையில் பொதுவிதி — extrovert வகையினரே வெற்றியாளர்கள், சாதனையாளர்கள், முன்னோடிகள்.
Introvert மக்களெல்லாம் கல்லுளிமங்கன், அழுத்தக்காரி, ராங்கிக்காரன் போன்ற பட்டத்திற்குள் சிக்கிக்கொள்ளும் ஜாதியினர். மட்டுமின்றி, தங்களது introvert இயல்பினால் தாழ்வு மனப்பான்மை, சபைக் கூச்சம், எண்ணிய எண்ணியாங்கு விவரிக்கத் தெரியாமல் கூட்டுக்குள் அடைந்து கொள்ளுதல், இத்யாதி… அவர்களுக்கு அதன் விளைவுகள்.
உலகில் மூன்றில் ஒரு பகுதியினர் introvert வகையினராம். இது ஒரு குறையே அல்ல என்பதில் ஆரம்பித்து, நிறை-குறைகளைச் சொல்லி, நிறைந்திருப்பது extrovertகளுக்குச் சளைக்காத நிறையே என்று அடித்துச்சொல்லி, சாதனைக்கும் உயர்வுக்கும் இந்த இயல்பு அளிக்கும் அனுகூலத்தை விவரித்து, introvert உலகச் சாதனையாளர்களைப் பட்டியலிட்டு பக்கத்துக்குப் பக்கம் புத்துணர்ச்சி அளிக்கிறது ‘Quiet Power’. நம் இயல்பை உணர்ந்து, ஏற்றுக்கொண்டு, சில பயிற்சியும் முயற்சியும் மேற்கொண்டால் போதும் தாழ்வு மனப்பான்மையெல்லாம் போயே போச் என்று தலையில் அடித்து உத்தரவாதம் அளிக்கிறது இந்நூல்.
நம்மில் பலரும் introvertதாம். அதன் இயல்புகளுள் பல அமையப்பெற்றவர்கள்தாம். இதை வாசிக்கும்போது நான் எனது மாணவப் பருவத்திலும் பின்னரும் எந்தளவு introvertஆக இருந்திருக்கிறேன், தாழ்வு மனப்பான்மையினால் வருந்தியிருக்கிறேன் என்பன புரிந்து, மண்டைக்குள் பல்பு ஒளி.
இந்நூலின் ஆசிரியர் Susan Cain, introvertஆக இருந்திருக்கிறார். Introvert சாதனையாளர்களில் இவர் ஒரு சான்று. இன்று இவரது TED talk showக்கள் மிகவும் பிரபலம். 15 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை அது ஈர்த்திருக்கிறது. 36 மொழிகளில் இவரது ஆங்கில நூல்கள் மொழியாக்கம் பெற்றுள்ளன.
ஆங்கில நூல்கள் வாசிப்பவர்களுக்கு இந்நூல் எனது பரிந்துரை.
Quiet Power by Susan Cain
Penguin Books
ISBN: 978-0-241-97791-0
-நூருத்தீன்