சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 55

by
55. இனாப் யுத்தம்

ரண்டாம் சிலுவைப்போரின் தோல்விக்கான காரணங்களாகச் சிலுவைப்படை சிலவற்றை அடுக்கியது. சிரியாவில் இருந்த பரங்கியர்களுக்கு இடையே நிலவிய ஒற்றுமையின்மை; எலினோர் தம் சிற்றப்பாவுடன் கொண்டிருந்த தகாத தொடர்பு; பைஸாந்திய சக்கரவர்த்தி இப்போரில் ஈடுபடாமல் மேம்போக்காக உதவி அளித்துவிட்டு, சிலுவைப்படையிடம் காட்டிய அலட்சியம்… இவ்வாறெல்லாம் அவர்கள் சிலவற்றைப் பேசி, புலம்பி, அங்கலாய்த்தாலும் தோல்வியில் துவண்ட மனத்தைத் தேற்றிக்கொள்ள அவர்களுக்கு வேறு காரணங்களும் இருந்தன. இறந்தவர்கள் இரட்சிக்கப்படுவார்கள் என்று போப் வாக்குறுதி அளிக்கவில்லையா? இறந்தவர்களின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு அவர்களின் ஆன்மா காப்பாற்றப்படுமில்லையா?

இவ்விதமான காரணங்களுடனும் ஆறுதல்களுடனும் அவர்கள் தங்களது அத்தோல்வியை மறக்க முற்பட்டார்களே ஒழிய, சிலுவைப்போர் என்பது மட்டும் அத்துடன் முற்றுப்பெறவில்லை. அது மேலும் காத்திருந்தது. பிற்காலத்தில் வரிசையாகத் தொடர்ந்தது.

இரண்டாம் சிலுவைப்போர் நிகழ்ந்தபோது ஸலாஹுத்தீன் அய்யூபியின் தந்தை நஜ்முத்தீன் தம் குடும்பத்தினருடன் டமாஸ்கஸில்தான் வசித்து வந்தார். அச்சமயம் ஸலாஹுத்தீனின் வயது சற்றொப்ப பதினொன்று. அவர் நேரடியாகப் போரில் பங்கேற்கவில்லை என்றபோதும் அனைத்தையும் அவரும் தம் வயதுக்குரிய திகிலோடு கவனித்துக்கொண்டிருந்தார். அப்போரில் அவருடைய சகோதரர் ஷாஹன்ஷா பங்குபெற்றுத் தமது உயிரைத் தியாகம் செய்துவிட, அந்த அண்ணனின் இழப்பு, தம்பியைத் தாக்கியது. சிலுவைப்படையின் நேரடி அறிமுகம் சிறுவர் ஸலாஹுத்தீனின் மனத்தில் பசுமரத்தாணியாகப் பதிந்தது.

அங்கு அலெப்போவில் நூருத்தீனின் படையில் முக்கியப் பிரிவொன்றின் தலைமைக்குப் பொறுப்பு ஏற்றிருந்தார் ஸலாஹுத்தீன் அய்யூபியின் சிற்றப்பா ஷிர்குஹ். அடிமைத் தளையிலிருந்து விடுதலை பெற்ற 500 துருக்கியர்களுக்குச் சிறப்பான பயிற்சி அளித்து, உயரடுக்குப் படைப் பிரிவை அவர் உருவாக்கியிருந்தார். குட்டையான உருவம்; பருத்த உடல்; ஒற்றைக் கண். இவைதாம் ஷிர்குஹ்வின் அங்க அடையாளம். அச்சம் என்பதே இல்லாத, முரட்டுத்தனமான சண்டையாளி. ஆனால், வேறுபாடோ பாரபட்சமோ இன்றி, தம் துருப்பினருடன் சேர்ந்து அமர்ந்து உணவு உண்ணும் அளவிற்கு எளிமையானவர். அப்படிப்பட்டவரை படையின் எந்த வீரனுக்குப் பிடிக்காமல் போகும்? அதனால் ஷிர்குஹ்வுக்குப் படையினர் மெச்சும் புகழ் ஓங்கியது.

இவ்விதமாக நூருத்தீனின் ஆட்சியின்போது காட்சிப்பரப்பின் முக்கியப் பகுதிக்கு நகர்ந்திருந்தது ஸலாஹுத்தீன் அய்யூபியின் குடும்பம்.

இரண்டாம் சிலுவைப்போரில் டமாஸ்கஸ் சாதித்த வெற்றிக்கு முயினுத்தீன் உனூர்தாம் நாயகர் என்றாலும் முஸ்லிம்களின் தலையாய தலைவராக உருவானவர் என்னவோ நூருத்தீன்தாம். அடுத்த ஓராண்டில் உனூர் மரணமடைந்து, அதனால் டமாஸ்கஸில் நிகழ்வுற்ற அரசியல் மாற்றம் மட்டும் அதற்குக் காரணமன்று. நூருத்தீனின் ஜிஹாது வேட்கை, பரங்கியர்களுடனான போர்களில் அவர் ஈட்டிய வெற்றி, அவரது ராஜதந்திர நடவடிக்கைகள் ஆகியன மற்றும் சில.

ஸன்னி முஸ்லிம்களின் ஆதாரத் தூண், சிலுவைப்படையினருக்கு எதிரான ஜிஹாதின் வீர வேங்கை, இஸ்லாத்தின் ஒளிவிளக்கு – இவ்வாறாகத்தான் முஸ்லிம்கள் அவரைப் பார்த்தனர். அவரது காலகட்டத்தில் வாழ்ந்த முஸ்லிம் வரலாற்று ஆசிரியர்கள் பக்கம் பக்கமாக அவரது சிறப்பையும் திறமையையும் வீரத்தையும் இறை பக்தியையும் வியந்து புகழ்ந்து எழுதி வைத்துள்ளார்கள். வரலாற்று ஆசிரியர் இப்னுல் அதீர், ‘அவரது நற்குணங்களும் சிறப்புகளும் ஏராளம், இந்நூலின் கொள்ளளவை மீறியவை’ என்று பல நூறு பக்கங்கள் கொண்ட தமது நூல் தொகுப்பில் எழுதி வைத்துள்ளார்.

oOo

டமாஸ்கஸில் நிகழ்ந்த இரண்டாம் சிலுவைப் போருக்கு முன்பே, சில காலமாக, நூருத்தீனின் படைகள் அந்தாக்கியாவின் படைகளுடன் முட்டலும் மோதலுமாக இருந்து வந்தன. அவை எவற்றிலும் தெளிவான வெற்றி தோல்வி இல்லாமல் இருந்தது. இரண்டாம் சிலுவைப்போருக்குப் பிறகு டமாஸ்கஸின் உனூருடன் நல்லிணக்கம் அதிகரித்ததும் அவரிடமிருந்து துணைப்படையாக ஒரு பிரிவைப் பெற்றுக்கொண்டு 6,000 வீரர்கள் அடங்கிய படையைத் திரட்டிக்கொண்டு, கிளம்பினார் நூருத்தீன். அந்தாக்கியாவின் ரேமாண்ட்டை எதிர்த்துப் போர் என்பதைத் தாண்டி வேறு சில முக்கியத் திட்டங்கள் நூருத்தீனின் அப்படையெடுப்பில் பொதிந்திருந்தன.

ஹாரிம் (Harim), அபமெயா (Apamea) எனும் இரு நகரங்கள் பரங்கியர்களின் புறக்காவல் நிலையங்களாகத் திகழ்ந்து வந்தன. இதில் ஹாரிம், அந்தாக்கியாவிலிருந்து பன்னிரண்டு மைல் தொலைவில் அமைந்திருந்த கோட்டை நகரம். பெலஸ் மலைகளின் மேற்கு விளிம்பில் அந்தாக்கியாவின் சமவெளியைப் பார்த்தபடி அதிகாரத் தோரணையில் அது நின்றிருந்தது. முதலாம் சிலுவைப்போரின் போது பரங்கியர்களால் அபகரிக்கப்பட்டு அது அவர்கள் கைவசம் சிக்கியிருந்தது.

பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அந்தாக்கியாவின் செல்வாக்கு ஏறுமுகத்தில் இருந்த போது, கரடுமுரடான பெலஸ் மலைத்தொடரின் கிழக்குப் பகுதியை பரங்கியர்கள் ஆக்கிரமித்ததும் அது அலெப்போவின் பாதுகாப்புக்கு நேரடி ஆபத்தாக உருவாகியிருந்தது. முதலில் இல்காஸியும் பின்னர் இமாதுத்தீன் ஸெங்கியும் பரங்கியர்களைப் பின்னுக்குத் தள்ளி ஓர் எல்லையை நிறுவியிருந்தாலும் அதில் நூருத்தீனுக்கு திருப்தி இல்லாமல் இருந்தது. ஹாரிம் நகரைக் கைப்பற்றி, பெலஸ் மலைத்தொடருக்கு மறுபுறம் தமது ஆதிக்கத்தை நிறுவினால்தான் சரிவரும்; அது அந்தாக்கியாவின் கிழக்குப் பகுதித் தற்காப்பையும் குலைக்கும் என்று நினைத்தார்.

அபமெயா நகர், சம்மாக் பீடபூமியின் தெற்கு விளிம்பில் அலெப்போவைத் தாண்டி அமைந்துள்ளது. சம்மாக்கின் மீது அந்தாக்கியாவுக்கு இருந்த ஆளுமையால் அலெப்போவுக்கும் டமாஸ்கஸுக்கும் இடையிலான போக்குவரத்துக்கும் தகவல் தொடர்புக்கும் அபமெயா அச்சுறுத்தலாகவே இருந்து வந்தது. முன்னர் இமாதுத்தீன் ஸெங்கி இதில் பல பகுதிகளை மீட்டெடுத்து இருந்தார். அதனால் 1149ஆம் ஆண்டின் போது அங்கு பரங்கியரின் பகுதி சிறுபாதை அளவே சுருங்கிப்போய் இருந்தது. ஆனாலும் சம்மாக் பகுதியில் நீடித்து வரும் இலத்தீன் இருப்பைத் துடைத்து அழிக்காதவரை தலைவலி முற்றிலும் தீரப்போவதில்லை; பரங்கியரின் குடைச்சல் ஓயப்போவதில்லை என்பதை நூருத்தீன் அறிந்திருந்தார். எனவே அதுவும் அவரது இலக்கானது.

முதலில் அந்தாக்கியாவுக்கும் அபமெயாவுக்கும் இடையிலான தகவல் தொடர்பைத் துண்டித்து அந்நகரைத் தனிமைப்படுத்துவது என்று முடிவாகி, 1149ஆம் ஆண்டின் ஜூன் மாதம் இனாப் கோட்டை முற்றுகை இடப்பட்டது. செய்தி அந்தாக்கியாவை எட்டியது. துள்ளிக் குதித்து உடனே கிளம்பினார் ரேமாண்ட். அதில் அலட்சிய அவசரம் கலந்திருந்தது. தமது குதிரைப்படைக்குத் துணைப்படையாக வர இருந்தவர்களுக்குக் கூடக் காத்திருக்காமல் துடுக்குத்தனமாக அவர் இனாபுக்கு விரைந்தார் என்று பின்னர் இலத்தீன் வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இருந்தபோதிலும் அவரது படை எண்ணிக்கையில் குறைவில்லை. 4000 சேனாதிபதிகள், 1000 காலாட்படையினர், குர்திய முஸ்லிம் கூட்டாளி அலீ இப்னு வஃபா தலைமையில் அஸாஸியர்களின் கொலைபாதகக் குழு ஆகியோருடன் போதிய வலுவுடன் ரேமாண்ட் விரைந்தார். அந்தப் படையை எச்சரிக்கையுடன் எதிர்கொண்டார் நூருத்தீன். இனாபிலிருந்து சற்றுப் பின் வாங்கி எதிரியின் வலிமையை எடைபோட்டார். எதிர் தாக்குதல் தொடுக்க ஏதேனும் வாய்ப்புத் தென்படுகிறதா என்று அவரது கண்கள் கூர்மையுடன் அலைபாய்ந்தன.

இனாப் சுற்றுப்புறத்துக்கு வந்து சேர்ந்த ரேமாண்ட், நூருத்தீன் பின் வாங்கியதைத் தமது வெற்றியாக நினைத்துவிட்டார். தங்களது வருகை அவரை அச்சுறுத்தி அப்பகுதியை வெற்றிகரமாகப் பாதுகாத்துவிட்டோம் என்று நம்பி மகிழ்ந்தார்கள் அவர்கள்! அவை யாவும் ஏற்படுத்திய கர்வத்தில், அன்றைய இரவில், பாதுகாப்பான பகுதிகளை விட்டுவிட்டுத் திறந்த வெளியில் கூடாரமிட்டார்கள். அது பெரும் பிழையாக, கேடாக ரேமாண்டுக்கும் அவருடைய படையினருக்கும் விடிந்தது. பின் வாங்கி நின்றுகொண்டு எதிரிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்தபடி இருந்த நூருத்தீனுக்கு இத்தகவல் வந்து சேர்ந்தது. ரேமாண்டின் படை எண்ணிக்கையையும் தெரிவித்தது உளவுப் பிரிவு.

துரிதமாகச் செயல்பட்டார் நூருத்தீன். அடர்ந்த இருளில் அவரது படை அப்பகுதியை அடைந்தது. சுற்றி வளைத்தது. பொழுது விடிந்தது. விழித்தெழுந்த பரங்கியர்களுக்குச் சூழ்ந்திருந்த நூருத்தீனின் படையினர்தாம் முதலில் கண்ணில் பட்டனர். கண்களைக் கசக்கிவிட்டு மீண்டும் பார்த்தபோது அது கனவல்ல நிஜம் என்று அறிந்ததும் பதறி எழுந்தார்கள். வெற்றி தொட்டுவிடும் தூரம்தான் என்பதை உணர்ந்த நூருத்தீன் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. அவர் கட்ளையிட, பரங்கியர்கள் மீது புயலாகப் பாய்ந்தது நூருத்தீனின் படை.

“ஏதோ ஒரு நகரத்தை முற்றுகையிடுவதுபோல் எங்களது முகாம்களத் தாக்கினார்கள் அவர்கள்” என்று பின்னர் பரங்கியர் படையில் தப்பித்தவர் தெரிவித்துள்ளார்.

தமது படையினரைத் திரட்டித் தற்காப்புக்கு முயன்றார் ரேமாண்ட். ஆனால், நூருத்தீனின் படை வேகத்தின் முன் அது பலவீனமான முயற்சியாக முடிந்தது. முஸ்லிம் படைகள் கட்டுக்கோப்பான பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, அனைத்துத் திசைகளிலிருந்தும் பரங்கியர்களைச் சுற்றிவளைத்துத் தாக்கின. இரு தரப்பினருக்கும் இடையே தனியாள் சண்டையும் நிகழ்ந்தது. அடி, குத்து, உதை என்று வெகு மூர்க்கமாக நடைபெற்ற தாக்குதலால் ‘தொம் தொம்’ ஒலியும் போர் இசைப் பின்னணியாகக் கலந்தது. களேபரமாகப் போர் நிகழ்ந்த அச்சமயம் இயற்கையும் தன் பங்குக்குக் குறுக்கிட்டுப் பெரும் காற்றாக வீச, புழுதிப் புயல் போர்க் களத்தைச் சூழ்ந்தது. அது நிலைமையை மேலும் மோசமாக்கியது; பரங்கியர்களிடையே குழப்பம் அதிகமானது; அவர்கள் திக்குமுக்காடினார்கள். அதற்குமேல் ரேமாண்டின் படையினரால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அவரது படையின் பெரும்பகுதி தப்பித்து ஓட, ரேமாண்டும் படையின் சிறு பகுதியினரும் மட்டும் எஞ்சி நின்று, போராடி மாண்டு விழுந்தனர்.

அந்தாக்கியாவின் தலைவர் ரேமாண்டைக் கொன்றார் ஷிர்குஹ். முடிவுற்றது போர். அடங்கியது போர் ஓலம். சில மணித்துளிகளுக்குப் பிறகு புழுதிக் காற்றும் ஓய்ந்தது.

“இஸ்லாத்தின் வாள்கள் இறுதி வார்த்தையை எழுதின. புழுதி அடங்கியதும் பார்த்தால் அவர்கள் மேனியெல்லாம் மண்ணாக, சாஷ்டாங்கமாகத் தரையில் கிடந்தனர்” என்று அக்காலத்திய முஸ்லிம் வரலாற்று ஆசிரியர் போரின் முடிவை விவரித்துள்ளார்,

நூருத்தீனின் படையினர் படைக்களத்தை அலசினர். ரேமாண்டின் தலை கொய்யப்பட்டு நூருத்தீனிடம் எடுத்துச் செல்லப்பட்டது. அக்காலப் போர் வழக்கப்படி வெள்ளிப் பேழையில் அத்தலையை வைத்து மூடி, பக்தாதில் உள்ள கலீஃபாவுக்குப் பரிசாக அனுப்பி வைத்தனர்.

இனாப் போரின் வெற்றி, முப்பது ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த குருதிக்களப் போரின் வெற்றியுடன் ஒப்பிடப்பட்டது. சிரியாவெங்கும் மகிழ்வலை. முஸ்லிம்கள் கொண்டாடிக் குதூகலித்தனர். கவிஞர்கள் தம் பங்கிற்குக் கவிதை இயற்றிக் குவித்தனர்.

அவற்றுள் ஒன்று இப்னுல் ஃகைஸரானியின் இந்தக் கவிதை:

உங்கள் வாட்கள் பரங்கியர்களிடம் ஏற்படுத்திய நடுக்கத்தால்
அவர்கள் இதயத்துடிப்பில் வேகம் கூடிப்போனார்கள்.

அவர்களின் தலைவரை அவர்களுடன் நசுக்கித் தாக்கிய பாங்கில்
அவரது முதுகெலும்பு முறிந்தது; தாழ்ந்தன சிலுவைகள்!

எதிரிகளின் குருதியாலேயே அவர்களின் நிலங்களைக் கழுவித் துடைத்தீர்கள்!
உங்கள் வாட்கள் அச்சுத்திகரிப்பில் குருதியால் கறை படிந்தன!

அதற்கு அடுத்த மாதம் ஹாரிம் நகரைத் தாக்கினார் நூருத்தீன். இனாப் போரில் சந்தித்த பெரும் தோல்விக்குப் பிறகு பரங்கியர் துருப்புகள் மனமுடைந்து பலவீனமடைந்திருந்ததால் அந்நகரம் அதிகம் மெனக்கெடாமல் எளிதில் வீழ்ந்தது. அமெயாவும் ஹாரிமும் நூருத்தீன் வசம் சென்றதும் அவர் எதிர்பார்த்தபடி அந்தாக்கியா தனிமைப்படுத்தப்பட்டது. வலிமையுடன் திகழ்ந்த அந்தாக்கியா கரையோரத் துண்டுப்பரப்பாகச் சுருங்கிப்போய், பலம் குன்றி ஒடுங்கியது. இனி அலெப்போவுக்கே சம்மாக் பீடபூமியின் மீதும் பெலஸ் மலைத்தொடரின் கிழக்கிலும் அதிகாரம் என்று பரங்கியர்கள் நூருத்தீனிடம் அடிபணிந்து ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டனர்.

இமாதுத்தீன் ஸெங்கியின் மரணத்திற்குப் பிறகு இரண்டாம் ஜோஸ்லின் எடிஸ்ஸாவைக் கைப்பற்ற முயற்சி செய்தார்; நூருத்தீனின் அதிவேக போர் நடவடிக்கையால் அது தடுக்கப்பட்டு, எடிஸ்ஸா காப்பாற்றப்பட்டது என்று வாசித்தோம் இல்லையா? அதில் தப்பிப் பிழைத்த இரண்டாம் ஜோஸ்லினை இப்பொழுது கைது செய்தார் நூருத்தீன். அவர் அலெப்போவிற்கு இழுத்து வரப்பட்டு, கண்கள் பிடுங்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். சொச்ச ஆயுளையும் சிறையிலேயே கழித்து ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு மரணமடைந்தார் இரண்டாம் ஜோஸ்லின். அவரது கைது இலத்தீன் கிறிஸ்தவர்களுக்குப் பெரும் இழப்பாக, வேதனையாக அமைந்துவிட்டது. அவருடைய மனைவி பியட்ரஸ் (Beatrice) கணவர் கைதானதும் இனி அவரது விடுதலைக்கு வாய்ப்பில்லை என்பது தெரிந்து, தம் வசம் இருந்த எடிஸ்ஸா மாநிலத்தின் எஞ்சிய பகுதிகளை பைஸாந்தியர்களுக்கே விற்றுவிட்டார் . அதைத் தொடர்ந்து பரங்கியர்களும் கிழக்கத்திய கிறிஸ்தவர்களும் அகதிகளாக அந்தாக்கியாவுக்கு ஓடினர். தம் இரு மகன்களுடன் ஃபலஸ்தீனுக்குக் குடிபெயர்ந்தார் பியட்ரஸ்.

முதலாம் சிலுவைப்போரில் முஸ்லிம்களிடமிருந்து கைப்பற்றிப் பரங்கியர்கள் நிர்மாணித்த முதல் நான்கு மாநிலங்களுள் ஒன்றாகத் திகழ்ந்த எடிஸ்ஸா, அவர்களிடமிருந்து முற்றிலுமாக மீட்கப்பட்டது. பரங்கியர்களுக்கு அதன் மீது இருந்த ஆளுமையை அத்துடன் முடிவுக்குக் கொண்டுவந்தார் நூருத்தீன்.

அவரது கவனம் அடுத்து டமாஸ்கஸின் மீது திரும்பியது. நமது நோக்கமோ ஜெருசல விடுதலை. அதற்கு முஸ்லிம்களின் ஒருங்கிணைப்பு அவசியம்; கட்டாயம். டமாஸ்கஸை ஒரே ஆட்சிக் குடையின் கீழ் கொண்டு வருவது வெகு முக்கியம். அது தந்தை இமாதுத்தீன் ஸெங்கி முன்னெடுத்த திட்டமும் கூட. போதிய ஆயுள் இன்றி அத்திட்டம் அவருக்குக் கைகூடாமல் போய்விட்டது. எனவே அதுவே தனது அடுத்த முன்னுரிமை என்று முடிவெடுத்தார் நூருத்தீன்.

அதற்கேற்ப டமாஸ்கஸில் ஏற்பட்ட ஆட்சி மாற்றமும் புது ஆட்சி பரங்கியர்களுடன் ஏற்படுத்திக்கொண்ட இணக்கமும் அவரது எண்ணத்திற்கு முழு நியாயத்தை உருவாக்கிவிட்டன.

oOo

ஹி. 544 / கி.பி. 1149, ஆகஸ்டு மாதம். ஒரு நாள், தம் வழக்கப்படி வயிறு முட்ட உணவு உட்கொண்டார் டமாஸ்கஸ் அதிபர் முயினுத்தீன் உனூர். ஆனால் வழக்கத்திற்கு மாறாய் ஏதோ ஒன்று அவரது குடலைப் பாதித்து, அவருக்குக் கடும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுவிட்டது. மருத்துவர்களின் எந்த சிகிச்சைக்கும் மருந்துக்கும் கட்டுப்படாத வயிற்றுப்போக்கு. விளைவாக அம்மாத இறுதியில் மரணமடைந்தார் முயினுத்தீன் உனூர். அடுத்து அபாக் ஆட்சியாளராக அமர்த்தப்பட்டார். எப்பக்குவமும் அற்ற இளவயது அபாக், டமாஸ்கஸை அபாயப் பாதையை நோக்கி இழுத்துச் செல்லும் அறிகுறி ஆரம்பத்திலேயே தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது. அதிர்ந்து விட்டார்கள் டமாஸ்கஸ் முஸ்லிம்கள்.

நூருத்தீன் உடனே காரியத்தில் இறங்கி டமாஸ்கஸைக் கைப்பற்ற இயலாதவாறு அவருக்கு வேறொரு சோதனை அச்சமயம் ஏற்பட்டது. உனூர் மறைந்த அடுத்த மாதம் மோஸூலில் நூருத்தீனின் சகோதரர் ஸைஃபுத்தீனும் திடீரென நோய்வாய்ப்பட்டு மரணமடைந்தார். அதனால் நூருத்தீன் அங்கு விரையும் சூழல் ஏற்பட்டுவிட்டது.

இமாதுத்தீன் ஸெங்கியின் மரணத்திற்குப் பிறகு இராக்கில் அவரது ஆளுமையின் கீழ் இருந்த சில பல பகுதிகள் சுயாதிகாரத்தை அறிவித்துப் பிரிந்தன என்று முன்னர் வாசித்தோம் இல்லையா? அவற்றுள் ஒன்று மர்தின். அதன் ஆட்சியாளராக இருந்தவர் ஹுஸாமுத்தீன் தமர்தாஷ். தம் தந்தையின் மரணத்திற்குப் பிறகு மோஸூலின் ஆட்சியை ஏற்றிருந்த ஸைஃபுத்தீன், ஹுஸாமுத்தீனை அடக்கி, மர்தினையும் தியார்பக்ரையும் கைப்பற்றித் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததும் அவரிடம் சமாதானம் ஏற்படுத்திக்கொண்டார் ஹுஸாமுத்தீன். அத்துடன், தம் மகள் அல்-ஃகாத்துனையும் (al-Khatun) அவருக்கு மணமுடித்து வைத்தார்.

திருமண ஒப்பந்தத்தை முடித்துவிட்டு மோஸூல் திரும்பிய ஸைஃபுத்தீன் உடல் சுகவீனமுற்றுப் படுக்கையில் வீழும்படி ஆகிவிட்டது. மணப்பெண் அல்-ஃகாத்துன் மோஸூலை அடைந்தபோது மரணப்படுக்கையில் இருந்தார் கணவர் ஸைஃபுத்தீன். இருவருக்கும் இடையில் தாம்பத்ய உறவுகூட ஏற்பட்டிராத நிலையில், உடல் நலம் தேறாமல் தமது நாற்பதாவது வயதில் மரணம் அடைந்துவிட்டார் ஸைஃபுத்தீன்.

அலெப்போவிலிருந்து கிளம்பிவந்த நூருத்தீன் மோஸூலின் முக்கிய மந்திரிப் பிரதானிகளுடன் ஆலோசனை நிகழ்த்தினார். இமாதுத்தீன் ஸெங்கியின் இளைய மகனான, குத்புத்தீனை மோஸூலின் ஆட்சியாளராக அமர்த்துவது என்று முடிவானது. புது மணப்பெண்ணாகப் புறப்பட்டுவந்து விதவையாகிவிட்ட ஸைஃபுத்தீனின் மனைவி அல்-ஃகாத்துனைத் தம் சகோதரர் குத்புத்தீனுக்கு மறுமணம் செய்து வைத்துவிட்டு அலெப்போ திரும்பினார் நூருத்தீன்.

oOo

(தொடரும்)

-நூருத்தீன்

சத்தியமார்க்கம்.காம் – தளத்தில் 20 ஆகஸ்ட் 2022 வெளியானது

Image: Jean Colombe and Sebastien Momerot, Public domain, via Wikimedia Commons


Creative Commons License

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment