சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 70

70. வஸீர் ஸலாஹுத்தீன்

ஜ்முத்தீன் அய்யூபியின் மகன் யூஸுஃப், சுல்தான் ஸலாஹுத்தீனாகப் பரிணாமம் அடைய அமைந்த திருப்புமுனை எகிப்து. “எகிப்து ராஜாங்கம் முழுவதும் எனக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்தாலும்கூட நான் அங்குப் போகமாட்டேன்” என்று ஒரு காலத்தில் போரிலும் படையெடுப்பிலும் சற்றும் ஆர்வமின்றி இருந்தவர், சிற்றப்பா அஸாதுத்தீன் ஷிர்குஹ் இழுத்த இழுப்புக்கும் நூருத்தீன் காட்டிய கண்டிப்புக்கும் வேண்டா வெறுப்பாக இணங்கி, படையெடுப்பில் ஒப்புக்குக் கலந்துகொண்டவர், பின்னர் போர் வீரராகி, அலெக்ஸாந்திரியாவின் பாதுகாவலராகி, இப்பொழுது அந்த எகிப்து நாட்டின் வஸீராகவே உயர்ந்தது இறை விதியின் விசித்திரமன்றி வேறென்ன? ஆனால் –

அதுநாள் வரை திறமை குறைவானவராக, பலவீனராகத் தோற்றமளித்த யூஸுஃப் அய்யூபி, அவைதாம் ‘பொம்மைப் பதவிக்கான தகுதிகள்’ என்று தவறாகத் திட்டமிட்டு, வஸீராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட யூஸுஃப் அய்யூபி, பதவிக்கு வந்ததும் வெளிப்படுத்திய ஆளுமை யாரும் சற்றும் எதிர்பாராதது. அவரது கம்பீரமும் வீரமும் திடவுறுதியும் ஃபாத்திமீக்களுக்கு மட்டும் திகைப்பை ஏற்படுத்தவில்லை, ஒரு கட்டத்தில் நூருத்தீனுக்கே கவலையைத் தோற்றுவித்து விட்டது. அது, பின்னர் வரும்.

ஃபாத்திமீக்களின் வஸீராகப் பதவியேற்ற ஸன்னி முஸ்லிம் ஸலாஹுத்தீனுக்கு அவரது அரியணை, பட்டு மெத்தையாகவும் அமையவில்லை; கூரையிலிருந்து பூ மாரியும் பொழியவில்லை. மாறாக மூன்று மாறுபட்ட கருத்தியல் கொண்ட தலைவர்களுக்குக் கட்டுப்பட்டவராக, ஸன்னி-ஷிஆ முஸ்லிம்களை நிர்வகிப்பவராக அவரை ஆக்கி, அதன் சவால்கள்தாம் அவரை வரவேற்றன. பதவியில் அமர்த்தியிருப்பதோ ஃபாத்திமீக்களின் கலீஃபா. அந்த ராஜாங்கம் ஷிஆக்களின் சொத்து. ஸலாஹுத்தீன் பிரதிநியாக இருப்பதோ டமாஸ்கஸில் உள்ள ஸன்னி முஸ்லிம் மன்னர் நூருத்தீனுக்கு. அவருக்குக் கட்டுப்பட்டே இருக்க வேண்டும் ஸலாஹுத்தீனின் அதிகாரமும் நடவடிக்கையும். அதே நேரத்தில் நூருத்தீன் கட்டுப்பட்டிருந்ததோ பக்தாதில் வீற்றிருக்கும் அப்பாஸிய கலீஃபாவுக்கு. அதனால் அப்பாஸிய கலீஃபாவுக்கு மாற்றமாகவும் ஸலாஹுத்தீனின் நடவடிக்கைகள் அமைந்துவிடக் கூடாது என்ற இக்கட்டு.

அட்டூழியத்தையும் அக்கிரமத்தையும் அராஜகத்தையும் பதவியின் அடிப்படைச் செயல்திட்டமாகவே ஆக்கிவிட்டிருந்த ஃபாத்திமீ வஸீர்களின் வரிசை ஷவாரின் மரணத்துடன் முடிவுக்கு வந்திருந்தாலும் அவரின் விசுவாசிகள், ஸன்னி முஸ்லிம்களின் மீது விரோதம் கொண்டிருந்தவர்கள், அரசவையிலும் அதிகார மட்டத்திலும் நிறைய ஆக்கிரமித்திருந்தனர். தலைக்கு மேல் தொங்கும் கத்தியைப் போல் அவர்களது ஆபத்தும் வாய்ப்புக்குக் காத்திருந்தது.

இத்தகு சிக்கல்கள் நிறைந்துள்ள போது, அரசாங்க அதிகாரத்திற்குப் புதியவரான, முன் அனுபவம் இல்லாத ஒருவர் எப்படிச் சிக்கித் திணறி இருக்க வேண்டும்? ஆனால், அவையனைத்தும் யூஸுஃப் என்பவரை ஜொலிக்கும் வைரமாகப் பட்டை தீட்டின. அவரை சுல்தான் ஸலாஹுத்தீனாக உருமாற்றி விட்டன.

எக்கணமும் கிளர்ச்சி நிகழலாம்; தாம் கொல்லப்படலாம் என்பதை நன்கு உணர்ந்திருந்த ஸலாஹுத்தீன், தமது காரியங்களை நன்கு திட்டமிட்டார். தமக்குத் தேவையான அனைத்து அதிகாரங்களும் – அது கலீஃபாவுக்கு உரியதாகவே இருந்த போதினும் – தம் வசப்படத் தேவையான அனைத்து காரியங்களையும் மேற்கொண்டார்.

‘என் அண்ணன் தூரான்ஷாவை இங்கு அனுப்பி வைக்கவும்’ என்ற அவரது கோரிக்கையை ஏற்று நூருத்தீன் அவரை அனுப்பி வைத்ததும் ஸலாஹுத்தீனின் பக்கபலம் பெருகியது. அதையடுத்து தூரான்ஷாவின் மகன் தகீயுத்தீனும் எகிப்து வந்து சேர்ந்தார். அதற்கு அடுத்த ஆண்டு, ஸலாஹுத்தீன் கேட்டதற்கு இணங்கி அவருடைய தந்தை அய்யூப், இளைய சகோதரர் ஆதில் ஆகியோரையும் சிரியாவிலிருந்து எகிப்துக்கு அனுப்பி வைத்தார் நூருத்தீன். ஸலாஹுத்தீனைச் சுற்றி சிறப்புப் பாதுகாப்புப் படை உருவானது. அவரது நம்பிக்கைக்கு உரியவர்களும் நெருங்கிய உறவினர்களும் மட்டுமே அதில் இடம் பெற்றனர். சந்தேகத்திற்குரிய ஃபாத்திமீ அதிகாரிகளின், ஊழியர்களின் பதவிகள் பறிக்கப்பட்டு, அவையும் அவருக்கு விசுவாசமானவர்களுக்கே அளிக்கப்பட்டன. காப்தியர்கள் எனப்படும் பூர்வீக எகிப்தியர்கள் கிறிஸ்தவர்களாக இருந்து வந்தனர். அவர்கள் நெடுங்காலமாக அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டு வரி செலுத்தி வந்த குடிமக்கள். அவர்களுள் தகுதி வாய்ந்தவர்கள் ஃபாத்திமீ ராஜாங்கத்தின் அதிகார மட்டத்தில் முக்கியமானவர்களாகவும் இடம்பெற்றிருந்தனர். அவர்களுக்கு ஸலாஹுத்தீன் தொந்தரவு அளிக்கவில்லை. மாறாக அவர்களது நிலை அப்படியே தொடர அனுமதித்தார்.

மரணமடைந்த சிற்றப்பா அஸாதுத்தீன் ஷிர்குஹ்வுக்கு ‘அஸ்கர்’ எனப்படும் தனிப்படை இருந்தது. (இத்தொடர் நெடுக படை, துருப்புகள், இராணுவம் என்று பொதுப்படையாகச் சொல்லப்பட்டாலும் அந்தப் படைப் பிரிவுகளையும் அமைப்பையும் சற்று விரிவாக, தனியொரு அத்தியாயமாக, பின்னர் பார்ப்போம். சுவையான தகவல்கள் அவை). ஷிர்குஹ்வின் அந்த அஸ்கர் படைக்கு ‘அஸதிய்யா’ எனப் பெயர். அவர்களைத் தம் பக்கம் ஈர்த்து, தமக்கான சொந்த அஸ்கராக (படை) உருவாக்கினார் ஸலாஹுத்தீன். ‘ஸலாஹிய்யா’ எனப் பெயர் மாற்றம் பெற்றது அந்த அஸ்கர்.

காழீ அல்-ஃபாழில் என்பவர் பிரமாதமான தகவல் தொடர்பாளர், நிர்வாகி, கவிஞர். அவரது பூர்வீகம் அஸ்கலான். ஃபாத்திமீக்களின் அவையில் பல வஸீர்களிடம் பணியாற்றியவர். அவருடைய மடல்கள் வரலாற்று ஆதாரங்களின் முக்கிய ஆவணங்களாக இன்றும் திகழ்ந்து வருகின்றன. அவர் ஸலாஹுத்தீனுடன் இணைந்தார். பின்னர் சுல்தான் ஸலாஹுத்தீனின் வரலாற்றில் முக்கிய பாத்திரமாகவும் ஆகிவிட்டார். சிரியாவிலிருந்து வந்திருந்த நூருத்தீனின் படையிலிருந்து, குர்தியர் அல்-மஷ்துப் (ஸலாஹுத்தீனின் பெயருடன் இவரது பெயரும் வஸீர் பரிசீலனையில் இருந்தது), வலிமை வாய்ந்த அபுல் ஹைஜா, மதி நுட்பமும் உக்கிரமும் நிறைந்த காக்கேஸிய அலி கரகுஷ் (Qaragush) ஆகிய மூவரும் ஸலாஹுத்தீனுக்கு மிகவும் விசுவாசமானவர்களாக மாறி, பின் தொடர்ந்த காலத்தில் அவருடைய இராணுவ அதிகாரிகளாகத் தடம் பதித்தனர்.

தமக்குத் தேவையான விசுவாசிகளைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருந்த ஸலாஹுத்தீனின் திறமை அரசியல் செயல்பாடுகளிலும் நுணுக்கமாக அமைந்தது அவரது ஆளுமைக்கான சான்று.

மைமோநிடீஸ் (Maimonides) என்றொரு யூதர். அவர் தத்துவவாதி, பல்கலை வித்தகர் (polymath). ஸ்பெயினின் தலைநகர் குர்துபா அவரது பூர்வீகம். அங்கு ஆட்சியிலிருந்த அல்-மொஹாத் அரசாங்கம் (Almohad regime) ஏதோ காரணத்திற்காக அவரைக் குற்றவாளியாகப் பிரகடனப்படுத்தியிருந்தது. அங்கிருந்து தப்பியோடி வந்தவர் 1160களில் எகிப்தில் தஞ்சம் புகுந்து குடியமர்ந்துவிட்டார். இவர் ஸலாஹுத்தீனுக்கு நெருக்கமானது மட்டுமின்றி அவருக்கும் அவருக்குப் பின் அவருடைய மகனுக்கும் அரசு மருத்துவராகவே ஆகிவிட்டார்.

ஃபாத்திமீ கலீபாக்களாக இருந்தவர்கள் ஆட்சியில் இருக்கும் போது வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர். வணிகம் குற்றமா என்ன? அல்லது இன்னினார் செய்யக் கூடாது என்று தடையா? ஆனால் அவர்களே எகிப்தின் பிரதான வர்த்தகர்களாகத் தங்களை ஆக்கிக் கொண்டனர். பிற வணிகர்களிடமிருந்தும் ஏராளமான வரியைக் கறந்தனர். இலாபம், வரி எல்லாமாகச் சேர்த்து கொழுத்த செல்வம். அவலம் என்னவெனில் அவை அனைத்தும் அவர்களது பெட்டகத்துக்கும் அரண்மனைக்கும்தாம் செழுமை சேர்த்தன.

ஸலாஹுத்தீன் வஸீராக அமர்ந்ததும் தமக்கும் முகவர்களை அமர்த்திக்கொண்டு வணிகத்தில் நுழைந்தார். ஆனால் வந்து கொட்டிய இலாபம் அனைத்தையும் பொது மக்களுக்கும் தம்முடைய இராணுவத் திட்டங்களுக்கும் திருப்பிவிட்டார். மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றத் தேவையான பணம் தாராளமாக அள்ளி வழங்கப்பட்டது. ‘சிரியாவின் பிரதிநிதி அவர். எகிப்தின் செல்வங்களை சிரியாவில் உள்ள தம் தலைவர் நூருத்தீனுக்குத்தான் அனுப்பப் போகிறார்’ என்று எகிப்தியர்கள் சந்தேகப்பட்டு அதிருப்தியுடன் முணுமுணுத்துக் கிடந்தனர். அதற்கு நேர்மாற்றமாக இவ்விதம் நிகழ்ந்தால் என்னவாகும்? மக்களிடம் அவருக்கு ஏகோபித்த ஆதரவு பெருகியது.

இவ்விதம் அவரது திறமையும் செல்வாக்கும் ஒருபுறம் ஓங்க ஓங்க, மறுபுறம் விரோதத்துடன் பதுங்கிக் கிடந்தவர்களின் மனப் புழுக்கம் பெரியதொரு சதித்திட்டமாக உருவானது.

oOo

அல்-ஆதிலின் அரண்மனையில் முதமின் என்றொரு அலி இருந்தான். வஸீரின் செயலக அதிகாரிகளுள் அவன் ஒருவன். ‘சிரியா நாட்டிலிருந்து வந்து சேர்ந்துள்ள இந்த ஸன்னி முஸ்லிம்களுக்கு அன்பளிப்பாகவும் மானியமாகவும் ஏராள நிலம்; இப்படியொரு செல்வாக்கு. அடுக்குமா இதெல்லாம்? இனி நாமெல்லாம் செல்லாக் காசா?’ என்று அவனுக்கு எக்கச்சக்க எரிச்சல்; கோபம்; பொறாமை. அவனைச் சுற்றியிருந்த எகிப்திய அதிகாரிகளுக்கும் அதே உணர்வு, அடக்க முடியாத வெறுப்பு. ஒன்றிணைந்து பேசினார்கள். ‘இந்தப் புதியவர்களை விரட்டிவிட்டு எகிப்தியர்களான நம் வசம் பழையபடி அதிகாரத்தை மீட்டே ஆகவேண்டும்’ என்று திட்டமிட்டனர். அதற்கு அவர்களுக்குத் தோன்றிய வழி – ஜெருசலத்தின் அமால்ரிக்கும் பரங்கியர் படையும். வஸீர் ஷவார் தம் பதவிக்காலம் நெடுகச் செய்து வந்த அதே பிழை. என்ன செய்ய? கெடுவான் கேடு நினைப்பான்.

யூத எழுத்தன் ஒருவனை அழைத்து ஜெருசல ராஜாவுக்குக் கடிதம் எழுதினார்கள். அதைக் காலணிக்குள் வைத்துத் தைத்தார்கள். அவனுடைய காலில் அதை அணிவித்து, பத்திரமாக இதை அமால்ரிக்கிடம் ஒப்படை என்று வழியனுப்பி வைத்தார்கள். அவனும் வறுமையான பயணியைப் போல் பஞ்சப் பராரியாய் வேஷமிட்டு, ஜெருசலத்திற்குக் கிளம்பினான். பில்பைஸ் நகரையும் அடைந்துவிட்டான். ஆனால் அங்கு ஸலாஹுத்தீனின் உளவாளியின் கண்களில் அவன் பட்டுவிட்டான். அந்த உளவாளியின் கண்ணை உறுத்திய விஷயம் நைந்த உடை. பயணியின் கால்களில், தோற்றத்திற்குச் சற்றும் ஒட்டாத புத்தம் புதிய காலணி.

சந்தேகப்பட்டு, இழுத்து வந்து, காலணியைக் கிழித்துப் பார்த்தால் கடிதம் பல்லிளித்தது. பிறகென்ன? உரிய முறைப்படி விசாரித்ததும் அரண்மனையிலுள்ள அலியின் பெயரைக் கக்கிவிட்டான். தகவல் கெய்ரோவுக்கு அனுப்பப்பட்டது. ஸலாஹுத்தீன் உடனே அந்த அலியின் மீது பாயவில்லை. அரண்மனையில் கைதும் கொலையும் நிகழ்ந்து, அது விரும்பத்தகாத பின் விளைவுகளை ஏற்படுத்தினால்? பிறர் கவனத்தைக் கவராத வகையில் கமுக்கமாகத் திட்டம் தீட்டப்பட்டது.

முதமினுக்குப் புறநகரில் நிலம் இருந்தது. தோட்டங்கள் இருந்தன. அதை மேற்பார்வையிட, பராமரிக்கச் செல்வது அவன் வழக்கம். சுபயோக நாளொன்றில் அவன் அவ்விதம் அரண்மனையை விட்டு வெளியேறிச் சென்ற போது, வழிப்பறிக் கொள்ளையர்களின் கொலையைப் போல் அவனது கதை முடித்து வைக்கப்பட்டது.

இது இவ்விதம் முடிந்தாலும் இரு வேறு குழுக்கள் கிளர்ச்சிக்கு தயாராக இருந்தனர். அவர்கள் அர்மீனிய கிறிஸ்தவர்கள்; நுபியர்கள் (Nubians). நுபியர்கள் எகிப்தின் தெற்குப் பகுதியில் உள்ள நைல்-சஹாரா இனக் குழுவினர்; கருப்பர்கள். குடைச்சலுக்கும் வன்முறைக்கும் பேர் போனவர்கள். இவர்கள் அல்-ஆதிதுக்குத்தான் விசுவாசமாக இருந்தார்களே தவிர, அந்நிய நாட்டிலிருந்து வந்திருந்த ஸலாஹுத்தீனின் மீது அவர்களுக்கு அடங்கமாட்டா வெறுப்பு. நிற வெறி அவர்களிடம் உச்சம். அவர்களைப் பொருத்த வரை, ‘வெள்ளைத் தோல் கொண்டவர்களெல்லாம் கொழுப்புக் கட்டிகள்; கருப்பர்களெல்லாம் அவர்களை நெருப்பில் வறுக்கும் கரித்துண்டுகள்’. வலிமை மிக்க அவர்களது படையினர் எண்ணிக்கை 50,000.

முதமின் மரணமடைந்த பின் பல் பிடுங்கப்பட்ட நிலையிலிருந்த அரண்மனை அதிகாரிகள் நுபியர்களின் மூலம் பிரச்சினையத் தூண்டினார்கள். ஏற்கெனவே புகைந்துகொண்டிருந்தவர்களிடம், அவர்கள் வந்து ஊதினால்? பற்றிக்கொண்டது கிளர்ச்சி. கெய்ரோ வீதிகளில் நெருக்கியடித்துத் திரண்டது அவர்களது படை. துணை சேர்ந்தனர் அர்மீனியர். அரண்மனை வளாகத்தில் தொடங்கியது ஸலாஹுத்தீனின் துருப்புகளின் மீதான மூர்க்கத் தாக்குதல். பரவியது ஓலம்; அரண்மனை எங்கும் அலங்கோலம். பலர் கொல்லப்பட்டார்கள். இங்கு உதவுமா மென்மையும் கருணையும்? ஸலாஹுத்தீன் தயக்கமே இன்றித் தம் அண்ணன் தூரான்ஷாவுக்குக் கட்டளை இட்டார்.

‘நுபியன் அர்மீனியன் பிரிவு குடியிருப்புகளுக்குத் தீயிடுங்கள்’

அவர்களின் குடியிருப்பு இருந்த பகுதி கெய்ரோவின் அல்-மன்ஸூரா. அங்குதான் அவர்களின் குடும்பங்கள் வசித்தன. கிளர்ச்சியில் குதித்தவர்கள் அந்தப் பின்வினைத் தீயைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தத்தம் குடும்பத்தையும் பிள்ளைகளையும் காப்பாற்ற, தெறித்துச் சிதறி ஓடினார்கள். அப்படி ஓடியவர்களை விரட்டி விரட்டிக் கொன்றார்கள் தூரான்ஷாவும் படையினரும். வாளுக்குத் தப்பியவர்களுள் பலர் தீயில் மாண்டனர். வெந்து சுருண்டது மன்ஸுரா. அடுத்த இரண்டு நாள்கள் ஓய்ந்த கடுமழைக்குப் பிறகான சிறு தூறல் போல் சில பகுதிகளில் இலேசான எதிர்ப்பு இருந்தது. அவர்களும் கொல்லப்பட்டனர். இக்கலகத்தில் பங்கெடுத்த அர்மீனியர்களும் வாளுக்கு இரையாகினர். ஸலாஹுத்தீனின் நிலையைப் புரட்டிப்போடும் விதமாக கிளர்ந்தெழுந்த அந்தக் கலகம் அத்துடன் முற்றிலுமாக அடக்கி ஒடுக்கப்பட்டது.

அரண்மனையில் கலவரம் நிகழும்போது அல்-அதீத் உப்பரிகையில் நின்று அதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார். அதனால், இந்தக் கலகத்தில் அந்த ஃபாத்திமீ கலீஃபாவுக்கும் தொடர்பு இருந்திருக்கலாம் என்று ஒரு கருத்து நிலவுகிறது. அவர் ஆதரவு அளித்தாரா இல்லையா என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், அதன் பிறகு அவர் அவசர அவசரமாக ஸலஹுத்தீனுக்குத் தமது விசுவாசத்தை உறுதிப்படுத்தினார் என்பது மட்டும் பதிவாகியுள்ளது.

அனுபவம் குறைவான ஸலாஹுத்தீனை வஸீராக ஆக்கினால் தமக்குக் கட்டுப்பட்ட கீழ்நிலை ஊழியராக இருப்பார் என்று ஃபாத்திமீ கலீஃபா அல்-ஆதித் எதிர்பார்த்ததற்கு முற்றிலும் மாறாக, கதி கலங்க வைக்கும் தனித்துவ ஆளுமையாக உருவாக ஆரம்பித்தார் ஸலாஹுத்தீன்.

(தொடரும்)

-நூருத்தீன்

சத்தியமார்க்கம்.காம் – தளத்தில் 17 January 2024 வெளியானது


Creative Commons License

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment