சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 74

by நூருத்தீன்
74. ஃபாத்திமீ ராஜாங்கத்தின் முடிவுரை

லாஹுத்தீனின் தந்தை நஜ்முத்தீன் அய்யூபியைத் தம்மிடம் வரவழைத்து, அவர் மூலம் ஸலாஹுத்தீனுக்குத் தகவல் அனுப்பினார் நூருத்தீன்.

இது உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய கட்டளை. நாம் உயிர் வாழும்போதே இந்த உன்னதப் பணியை நிறைவேற்றி வெகுமதிகளை ஈட்டுவோம். நம்முடைய கலீஃபா அல்-முஸ்தன்ஜித் இக்காரியத்தின் மீது பெரும் நம்பிக்கை வைத்திருக்கின்றார். இது அவருடைய தலையாய ஆசைகளுள் ஒன்றாகும்.

என்ன கட்டளை? என்ன பணி?

‘இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக எகிப்தில் கோலோச்சி வந்த ஃபாத்திமீ ராஜாங்கம் துடைத்து அழிக்கப்பட வேண்டும். இஸ்லாத்தின் பெயரில் அவர்கள் நிகழ்த்தி வரும் வழிகேட்டிற்கு முடிவுரை எழுதப்பட வேண்டும். அதன் அத்தாட்சியாக வெள்ளிக்கிழமை நடைபெறும் ஜும்ஆ குத்பாவில் ஃபாத்திமீ கலீஃபாவின் பெயர் நீக்கப்பட்டு அப்பாஸிய கலீஃபாவின் பெயர் இடம்பெற வேண்டும்.’

எகிப்துக்குத் திரும்பிய நஜ்முத்தீன் தம் மகன் ஸலாஹுத்தீனிடம் தெளிவாகச் சொல்லிவிட்டார். “நூருத்தீன் நினைத்தால் உன்னை இந்தப் பதவியிலிருந்து நீக்கிவிட முடியும். ஒட்டகத்தை வழிநடத்தும் ஒருவனிடம் கடிதத்தை அனுப்பி உன்னை அவரிடம் அழைத்துக்கொண்டு, இந்நிலத்தில் வேறு எவரை வேண்டுமானாலும் அமர்த்திவிட முடியும்”

நூருத்தீனின் ஆளுமையும் அதிகாரமும் சக்தி வாய்ந்தவை. எகிப்தின் வஸீராக உயர்ந்தோங்கியிருந்தாலும் ஸலாஹுத்தீன் நூருத்தீனுக்குக் கட்டுப்பட்டவர், அவரது ஆணைகளை நிறைவேற்ற வேண்டியவர் என்பதை அழுத்தந்திருத்தமாகக் கூறியது அந்த அறிவுரை.

ஸலாஹுத்தீனும் அதை அறியாமலில்லை. மாறாக, அந்த இலக்கை நோக்கித்தான் தமது காய்களை நகர்த்திக்கொண்டிருந்தார். குத்பாவில் நிகழவேண்டிய மாற்றம் மட்டுமே தாமதமாகியபடி இருந்தது. அதை துரிதப்படுத்தவே பக்தாதிலிருந்து டமாஸ்கஸ் மார்க்கமாக கெய்ரோவுக்கு வந்து சேர்ந்தது அழுத்தம்.

oOo

உபைதி ஃபாத்திமீக்களிடம் இருநூறு ஆண்டுகளாகச் சிக்கியிருந்த எகிப்து ஸன்னி முஸ்லிம்களிடம் வந்து சேர்ந்தது அல்லாஹ்வின் அருளாசி என்றே நூருத்தீன் கருதினார். அந்த துரோக வம்சத்தினரின் ஆன்மிகப் பிடியிலிருந்து எகிப்தை விடுவிக்க வேண்டும் என்பது அவரது திடமான முடிவு. அங்கு வேரூன்றி நின்ற வழிகேட்டை நீக்கி, நேர்வழியில் அதைத் திருப்பி, சிரியா, இராக் நாடுகளுடன் ஒன்றிணைந்த இஸ்லாமிய நிலமாக உருவாக்க அவர் திட்டமிட்டார். பரங்கியர்களிடமிருந்து ஜெருசலத்தை மீட்டெடுக்க அந்த ஒன்றிணைப்பு அவசியமானது என்றாலும் அரசியலையும் தாண்டி அது புனிதமானது என்பதே ஸன்னி முஸ்லிம் ஆட்சியாளரான அவரது நிலைப்பாடு.

ஃபாத்திமீக்களின் வஸீராக ஸலாஹுத்தீன் அமர்ந்ததும் பக்தாத்தில் இருந்த அப்பாஸிய கலீஃபாவும் நூருத்தீனும் ஃபாத்திமீ ஷீஆவான அல்-ஆதிதை நீக்கக்கோரி, தொடர்ந்து அவருக்கு அழுத்தம் அளித்து வந்தனர். ஸலாஹுத்தீனுக்கும் அந்த நோக்கம் இருந்தது. ஆனால் தமது நகர்வில் கவனக் குறைவு ஏற்பட்டு விடாமல் நிதானத்தைக் கடைபிடித்தார். அதன் அடிப்படையில்தான், வஸீராக அவர் பதவி ஏற்ற நாளிலிருந்து, அவரது அரசியல் நகர்வுகளும் ஆட்சி நிர்வாகமும் நடைபெறத் தொடங்கின.

முதலில் அந்த இளைய கலீஃபாவுடன் ஸலாஹுத்தீனின் நட்பு உறுதியடைந்தது. அதன் விளைவாக தமீதாவின் தற்காப்புப் போருக்கு ஏராள நிதியுதவியும் ஃபாத்திமீ கருவூலத்திலிருந்து அவருக்குத் திறந்து விடப்பட்டது. அதன் பின், எகிப்தின் முக்கிய நகரமான அலெக்ஸாந்திரியாவில் அதன் அரண்களை பலப்படுத்தக் கட்டளையிட்டார் ஸலாஹுத்தீன். அதே நேரத்தில், அந்நகரின் பெரும்பான்மையினரான ஸன்னி முஸ்லிம்களின் மீது ஆதிக்கம் செலுத்த முந்தைய ஃபாத்திமீ தலைவர்கள் உருவாக்கி வைத்திருந்த சட்டங்களையெல்லாம் தூக்கி எறிந்தார். எகிப்தில் இருந்த ஷீஆ நீதிபதிகளெல்லாம் நீக்கப்பட்டு ஸன்னி முஸ்லிம் நீதிபதிகள் அமர்த்தப்பட்டனர். அதிகாரம் செலுத்தும் பதவிகளெல்லாம் ஸன்னி முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்டன. ஈஸா அல்-ஹக்கரி (Isa al-Hakkari) கெய்ரோவில் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். காழீ அல்-ஃபாதிலிடம் நாட்டின் நீதித்துறைத் தலைமை ஒப்படைக்கப்பட்டது. ஃபாத்திமீ இராணுவ அதிகாரிகள் நீக்கப்பட்டு, அவர்களுக்குப் பகரமாக ஸலாஹுத்தீனின் உறவினர்கள், நம்பிக்கைக்கு உரியவர்கள் அப்பணியில் நிரம்பினர்.

ஷீஆக்களின் பரப்புரைகள் தடை செய்யப்பட்டன. தொழுகையின் அழைப்பான பாங்கில் அவர்கள் இடைச்செருகியிருந்த,

ஹய்யா அலா ஃகைரில்-அமல் – சிறப்பான செயலின்பால் விரைந்து வாருங்கள்,
முஹம்மது வ அலீ ஃகைருல் பஷர் – முஹம்மதுவும் அலீயும் மனிதர்களுள் சிறந்தவர்கள்

என்ற வாசகங்கள் நீக்கப்பட்டன. ஜும்ஆ குத்பாக்களில் குலஃபாஉர் ராஷிதீன்களான அபூபக்ரு, உமர், உதுமான், அலீ (ரலியல்லாஹு அன்ஹும்) ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட வேண்டும் என்று ஆணையிடப்பட்டு அதுவும் நடைமுறைக்கு வந்திருந்தது. இமாம் ஷாஃபியீ (ரஹ்) அவர்களின் வழித்துறையைச் சார்ந்த ஸன்னி சட்டத்துறை கல்வி நிலையங்கள் இரண்டு உருவாயின.

இவை யாவும் ஒருபுறம் நடைபெற, ஃபாத்திமீ கலீஃபா அல்-ஆதிதின் ஆடம்பரச் செலவுகள், அனாவசிய விழாக்கள் அனைத்தும் மெதுமெதுவே தடுத்து நிறுத்தப்பட்டன. இவற்றையெல்லாம் அல்-ஆதித் கனத்த இதயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார். அவரால் ஸலாஹுத்தீனை மீறி எதுவும் செய்ய இயலவில்லை. அந்தக் கவலைகளாலே அவர் நோயாளியாகிப் போனார்.

ஜும்ஆ குத்பாவில் ஃபாத்திமீ கலீஃபாவின் பெயர் நீக்கப்பட்டு, அப்பாஸிய கலீஃபாவின் பெயர் இடம்பெறுவது மட்டுமே பாக்கியிருந்தது. எகிப்திய அரசியலில் அதுநாள் வரை வஸீர்கள் நிகழ்த்திவந்த முறைகேடான கொலைகள் நிறைந்த ஆட்சி மாற்றத்தை அவர் விரும்பவில்லை. நாடளாவிய முறையில் பெரும் கிளர்ச்சி நிகழ்ந்து விடுமோ என்ற தயக்கத்துடன் அவர் இருந்த போதுதான், பொறுத்தது போதும் என்று பொங்கியெழுந்து நஜ்முத்தீன் அய்யூபியின் வாயிலாக வந்து சேர்ந்தது அத்தகவல்.

வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகைக்கு முன் நிகழ்த்தப்படும் குத்பா எனப்படும் உரை வெகு முக்கியம். அது அத்தொழுகையின் ஓர் அங்கம். அதற்கான ஒழுங்குகளும் கட்டுப்பாடுகளும் கண்டிப்பானவை. அந்த உரை வெறுமே ஆன்மிகப் பரப்புரை போலன்றி அந்தந்தக் காலகட்டத்துக்கும் மக்களுக்குத் தேவையான கருத்துகளையும் உபதேசங்களையும் கூடவே உடன் சேர்த்திருக்கும். அரசியலும் அதில் கலந்திருக்கும். அக்கால மரபில் அந்தந்த ஆட்சியாளருக்கான புகழாரங்களும் அவருக்கான இறைஞ்சுதல்களும் அவரது பெயரைக் குறிப்பிட்டு உரையின் இறுதியில் இடம்பெறும். நபியவர்களின் காலத்திற்குப் பிறகு உருவாகிவிட்ட அந்த சம்பிரதாயம் வெகு அழுத்தமான ஓர் இடத்தைப் பிடித்துக்கொண்டது. குத்பாவில் யார் பெயர் இடம்பெறுகிறதோ அவர்தாம் அங்கீகரிக்கப்பட்ட ஆட்சியாளர் என்றானது.

ஆகவே, ஃபாத்திமீ கலீஃபாவின் பெயர் நீங்கி அப்பாஸிய கலீஃபாவின் பெயர் இடம் பெறுவது மிக உயர்ந்த முன்னுரிமையாக ஆகிவிட்டது. அதுவே ஃபாத்திமீ கிலாஃபத் முடிந்தது என்பதை அறிவிக்கும் அதிகாரபூர்வமான பிரகடனம். அந்த உச்சக்கட்டக் காட்சியை அரங்கேற்ற ஸலாஹுத்தீனுக்கு முன்னேற்பாடுகள் தேவைப்பட்டன. மக்களின் எதிர்வினையை அவர் ஆழம் பார்க்க வேண்டியிருந்தது. அல்-ஆதிதுக்கு விசுவாசமான அஸாஸியர்களுக்கு அவர் எளிய இலக்காக மாறிவிடும் அபாயம் இருந்தது. ஸலாஹுத்தீன் நிதானமாகச் செயல்படத் திட்டமிட்டார். நூருத்தீனிடமிருந்து கடுமையான தகவல் வந்து சேர்ந்த சில வாரங்களில், கலகத்தைக் கிளறும் ஆற்றலுள்ளவர்கள் என்று கருதப்பட்ட அமீர்களை அவரது உளவுப் படை காணாமல் போகச் செய்தது. அல்-ஆதிதைத் தனிப்பட்ட முறையில் நட்பாகச் சந்தித்தார் ஸலாஹுத்தீன். ஆனால் அதே நேரத்தில் அவரது உடைமைகளைப் பறிமுதல் செய்யத் தொடங்கினார். அல்-ஆதித் பெருமையாக ஆரோகணித்து பவனி வரும் குதிரையும்கூட அவரிடமிருந்து பிடுங்கப்பட்டது. தம்முடைய நாள்கள் எண்ணப் படுகின்றன என்பது அல்-ஆதிதுக்கு உறுதியாகிவிட்டது.

செப்டெம்பர் 1171, ஹி. 567ஆம் ஆண்டு தொடங்கியது. முஹர்ரம் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை, கெய்ரோவின் ஒரு மஸ்ஜிதில் முன்னோட்டமாக அது நிகழ்ந்தது. அன்றைய குத்பாவில் ஃபாத்திமீ கலீஃபாவின் பெயர் மறைந்தது. அது எவ்விதம் நிகழ்த்தப் பட்டது என்பது குறித்து அன்றைய வரலாற்று ஆசிரியர்களின் விவரிப்புகள் வெவ்வேறாக உள்ளன.

‘அல்-ஆமிர் அல்-ஆலிம் எனும் பாரசீகர் ஒருவர் அச்சமயம் எகிப்துக்கு வந்திருந்தார். அப்பாஸிய கலீஃபாவின் பெயரை குத்பாவில் இணைக்க ஏற்படும் தயக்கங்களை அறிந்த அவர், ‘நான் அதைச் செய்யப்போகிறேன்’ என்று கூறி மஸ்ஜிதின் இமாம் வருவதற்கு முன் மிம்பர் மீது ஏறி, அப்பாஸிய கலீஃபா அல்-முஸ்ததி பிஅம்ரில்லாஹ்வை வாழ்த்தி இறைஞ்சினார். மக்களிடம் சலசலப்போ எதிர்ப்போ எழவில்லை. அதற்கு அடுத்த வெள்ளிக்கிழமை ஸலாஹுத்தீன் கெய்ரோவின் இமாம்களுக்கு அல்-ஆதிதின் பெயரை நீக்கிவிட்டு அப்பாஸிய கலீஃபாவின் பெயரைப் புகுத்தக் கட்டளையிட்டார். எவ்விதத் தயக்கமும் இன்றி இமாம்கள் அதை ஏற்றுக்கொண்டனர். அதையடுத்து எகிப்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் அக்கட்டளை பரப்பப் பட்டது’ என்கிறது ஒரு தரப்பு குறிப்பு.

மற்றொரு குறிப்பில், ‘ஸலாஹுத்தீன் தம் தந்தையின் வாயிலாக இமாமுக்குக் கொலை மிரட்டல் அளித்ததில், இமாம் இசைந்து, அல்-ஆதிதின் பெயரைத் தம் உரையிலிருந்து நீக்கி விட்டார்; ஆனால், அப்பாஸிய கலீஃபாவுக்கு உரிய அனைத்துப் பட்டங்களும் தெரியாததால் அவரது பெயரை வாசிக்க இயலாமல் போய், அடுத்த வாரம் சேர்க்கிறேன் என்று கூறி அடுத்த வெள்ளிக்கிழமையில் இருந்து அப்பாஸிய கலீஃபாவின் பெயரைச் சேர்த்துக்கொண்டார்’ என்று உள்ளது.

எது எப்படியோ, அது நிகழ்ந்தது. வெகு நிச்சயமாக நிகழ்ந்தது. முஹர்ரம் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாகக் கோலோச்சிய ஃபாத்திமீ அரசாங்கம் தூக்கி எறியப்பட்டு, அதற்கு முடிவுரை எழுதப்பட்டது. பொதுமக்கள் மத்தியில் சலசலப்பு இல்லை; முணுமுணுப்பு இல்லை; அதிருப்தியின் அறிகுறிகூட இல்லை. என்ற போதிலும், அல்-ஆதிதின் ஆதரவாளர்கள் இரகசியமாகக் கூடி கிளர்ச்சிக்கான திட்டம் எதுவும் வகுத்து விட்டால்? அதை முளையில் கிள்ளியெறிய மற்றொரு காரியம் செய்தார் ஸலாஹுத்தீன். அது மகத்தான இராணுவ அணிவகுப்பு.

அடுத்த நாளே கெய்ரோ நகரின் வீதிகள் ஸலாஹுத்தீனின் படையினரின் அணிவகுப்பில் அதிர்ந்தன. 147 பிரிவுகளாக வகுக்கப்பட்ட படையணி. ஒவ்வொன்றிலும் 70லிருந்து 200 என்று ஏறத்தாழ 16,000 வீரர்கள். இலேசான கவசங்களுடன் மிக வேகமாக நகரக் கூடிய குதிரைப் படையினர் ஆயிரக்கணக்கில். மிகப் பெரிய கவண் இயந்திரங்களின் ஊர்வலம். அரண் சுவர்களுக்குக் குழி பறிப்பவர்கள், காவல் கோபுரங்களைக் கட்டுபவர்கள் என்று அவர்களின் தனி வரிசை. ஒட்டகங்களில் பதுஉக்களின் அணிவரிசை.

பிரமித்து மூச்சுத் திணறினர் மக்கள். அதைப் பற்றி ஸலாஹுத்தீனின் வலது கரமாகத் திகழ்ந்த காழீ அல்-ஃபாதில் எழுதி வைத்துள்ளார். ‘இந்த அணிவகுப்பைப் பார்த்தவர்கள் இஸ்லாமிய அரசர்கள் எவரும் இதற்கு இணையான இராணுவத்தை வைத்திருந்ததில்லை என்று நினைத்தனர்’.

எகிப்தியர்கள் மட்டுமின்றி, அச்சமயம் கெய்ரோவுக்கு வந்திருந்த இலத்தீன், கிரேக்க தூதுவர்கள் அனைவருக்கும் விஷயம் சந்தேகத்திற்கு இடமின்றி உறுதியாகி விட்டது. இனி எகிப்தின் அதிபதி ஸலாஹுத்தீன்! அதற்கு அப்பொழுது இருந்த ஒரே தடைக்கல் அல்-ஆதித். ஷீஆ அதிகாரத்தின் மிச்சமாக ஒட்டியிருந்தது அவர் மட்டுமே. அந்தத் தடையும் தானாகவே நீங்கியது.

நோயுற்று முடங்கியிருந்த அல்-ஆதிதின் உடல்நிலை மோசமடைந்தது. அரண்மனைக்கு வெளியே நாட்டில் நிகழ்ந்தபடியிருந்த அரசியல் மாற்றங்கள் எதுவும் தெரியாமல் அரைகுறை நினைவுடன் மரணப்படுக்கையில் கிடந்தார் அவர். கவலையுடன் குழுமியிருந்த அவருடைய குடும்பத்தினரும் நண்பர்களும்கூட நிகழ்ந்து முடிந்த மாற்றங்களை அவருக்குத் தெரிவிக்கவில்லை. ‘தேறி எழுந்தால் தாமே அறிந்துகொள்வார். இறந்துவிட்டால், நிம்மதியாகப் போய்ச் சேரட்டும். அவரது இறுதி நாட்களைக் கசப்பானதாக ஆக்கியவர்களாக நாம் இருக்க வேண்டாம்’ என்று தங்களுக்குள் சொல்லிக்கொண்டார்கள்.

அதைப் போலவே நிகழ்ந்த மாற்றத்தை அறியாமலேயே, சில மணி நேரத்திற்குப் பிறகு ஃபாத்திமீ கிலாஃபத் முடிவுற்றதை அறியாமலேயே அல்-ஆதித் மரணமடைந்தார்.

ஸலாஹுத்தீன் காழீ அல்-ஃபாதிலிடம், ‘அவர் மரணமடைந்து விடுவார் என்று தெரிந்திருந்தால் அவரது பெயரை குத்பாவில் நீக்கி நீக்கியிருக்க மாட்டேன்’ என்றார். தானாகவே அது இப்பொழுது நிகழ்ந்திருக்குமல்லவா?

அதற்கு காழீ அல்-ஃபாதி அளித்த பதில், ‘நீங்கள் அவரது பெயரை நீக்க மாட்டீர்கள் என்று தெரிந்திருந்தால் அவர் இறந்திருக்க மாட்டார்’

ஸலாஹுத்தீன், அல்-ஆதிதின் இறுதி ஊர்வலத்திலும் அடக்கத்திலும் கலந்து கொண்டார். அவருடைய குழந்தைகளின் நலனுக்கும் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருடைய குடும்பத்தினருக்குத் தேவையான வாழ்விடங்கள் வழங்கப்பட்டன. ஆட்சிப் பொறுப்பை ஏற்பவர்கள் வழக்கமாகச் செய்வதைப் போல் எவரையும் கொல்லவில்லை. ஆனால் புதிய தலைமுறை தோன்றிவிடாமல் அவர்கள் தனித்தனி இருப்பிடங்களில் பிரித்துவைக்கப்பட்டனர்.

ஹி. 567, முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் அல்-ஆதித் மரணத்துடன் ஃபாத்திமீ கிலாஃபத் முடிவுக்கு வந்தது. அன்றிலிருந்து ஸன்னி முஸ்லிம்களின் ஆட்சிக்குள் வந்து சேர்ந்தது எகிப்து. இத்திருப்புமுனை சாதனைக்கு ஆணையிட்ட நூருத்தீன், சாதித்த ஸலாஹுத்தீன் இருவரையும் எக்கச்சக்கமாகப் பாராட்டி, வாழ்த்தி, அவர்களைக் கௌரவிக்க மேலங்கிகளை அனுப்பி வைத்தார் அப்பாஸிய கலீஃபா.

எகிப்தில் புதிய நாணயங்கள் புழக்கத்திற்கு வந்தன. ஒரு புறம் அப்பாஸிய கலீஃபாவின் தலை, மறுபுறம் ஸலாஹுத்தீன்.

எகிப்தின் ஏகபோகத் தலைவரானார் சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி.

(தொடரும்)

-நூருத்தீன்

சத்தியமார்க்கம்.காம் – தளத்தில் 1 ஜூலை 2024 வெளியானது

Image: AI Generated


Creative Commons License

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment