அன்றைய நாள் முழுவதும் கிடங்கில் சரக்குக் கையிருப்புக் கணக்கெடுப்புப் பணிக்காக ஓய்வின்றி உழைத்த களைப்புடன், ஜூலை மாத அனல் இரவாகியும் தகித்து ஏற்படுத்திய எரிச்சலுடன், தன் அறையின் ஏஸி இதத்திற்கு ஏங்கியபடி அறைக் கதவைத் திறந்தவனுக்கு வாய் பிளந்து கிடந்த அவனது பெட்டி நெருப்பு ஈட்டியாய் அடிவயிற்றில் இறங்கியது. “அல்லாஹ்வே!” என்று அலறிவிட்டான்.
துணிகள் இலேசாக மட்டும் கலைந்திருந்தன. அதன் அடியில் அவன் பத்திரப்படுத்தியிருந்த கைப்பை மட்டும் மாயமாய் மறைந்து போயிருந்தது. அதனுடன் சேர்த்து அதனுள் இருந்த அறுபதினாயிரம் ரியால்களும். கண்கள் இருட்டி மங்கின. கால்கள் தள்ளாடின. கட்டிலில் அப்படியே சரிந்தான்.
அத்தனை அதிர்ச்சியிலும் எங்கோ ஒரு மூலையில் அவனது புத்தி சுதாரித்தது. ‘அடெபாயோ! அவனாகத்தான் இருக்கும்’.
அடெபாயோ நைஜீரியன், அவனது அறைத் தோழன். சவூதி வேலைக்கு முழுக்குப் போட்டுவிட்டு, அன்று மதியம்தான் தன் ஊருக்குப் பயணமாகியிருந்தான்.
மணியைப் பார்த்தான். இரவு பத்து. இந்நேரம் அவனது விமானம் பிடிக்க இயலாத தூரத்துக்குப் பறந்திருக்கும்.
மீண்டும் “யா அல்லாஹ்!” என்று கையில் முகத்தைப் புதைத்து, சப்தமாக அழுதான்.
oOo
தஞ்சாவூர்-கும்பகோணம் நெடுஞ்சாலையில் அய்யம்பேட்டையிலிருந்து கிளை பிரிந்து கிழக்கே 9 கி.மீ. உள்ளது வடக்கு மாங்குடி. குட்டி கிராமம். அய்யம்பேட்டையில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் கணக்கு வாத்தியாராக இருந்த அப்துல் பாரியின் ஊர் அது. ஊராருக்கு அவர்மீது அளவு கடந்த மதிப்பு, பிரியம். பலருக்கு அவரது பெயரே தெரியாது. எல்லோருக்கும் அவர் வாத்தியார். அவ்வளவுதான்.
அதிர்ந்து பேச மாட்டார். பாடம் நடத்தும்போது மட்டும் குரலின் அலைவரிசை மாறும். தெளிவும் உச்சரிப்பும் சுருதி பிசகாது. கடின கணக்கையும் எளிதாய் விளக்குவதில் அப்படி ஒரு நேர்த்தி. அதட்ட மாட்டார். ஆனால் பேச்சின் தோரணையில் நிச்சயமான கண்டிப்பு இழையோடும். மாணவர்களுக்கு அவர் மீது அன்பும் அச்சமும் சரிவிகிதக் கலவை.
ஊருக்கு உகந்த வாத்தியாராக இருக்கலாம். ஆனால், என்ன செய்ய? அவருடைய ஒரே மகன் சர்தாருக்கு மட்டும் கல்வி ஒட்டாமல் போனது. ஆண்டிறுதித் தேர்வில் தோல்வி என்று இல்லாவிட்டாலும் மதிப்பெண்கள் எல்லைக் கோட்டுடன் நின்றுவிடும். மற்றபடி சாது. வம்புதும்பு கிடையாது. தொழுகை, இபாதத், மார்க்க ஈடுபாடு அதிகம். குறையற்ற குணம், நடத்தை, பண்பு. தட்டுத் தடுமாறி ப்ளஸ் டூ முடித்தவுடன், ‘இதற்கு மேல் முடியாது’ என்று சொல்லி விட்டான்.
அந்தப் படிப்புக்குப் பெரிதாக என்ன உத்தியோகம் கிடைத்துவிடும்? தஞ்சாவூர் கடைகள் சிலவற்றில் வேலை, சில மாதங்கள் பயணிகள் டாக்ஸியின் ஓட்டுனர் என்று ஓடியது. பாசமுள்ள தூரத்து உறவினர் ஒருவர் அவனுக்கு விஸா ஏற்பாடு செய்து செலவையும் வாத்தியாருக்காகத் தாமே ஏற்றுக்கொண்டு சர்தாரை ரியாதுக்கு அழைத்துக்கொண்டார். அவருடைய முதலாளியின் அடுக்குமாடிக் கட்டடம் ஒன்றில் ஹாரிஸ் எனும் காப்பாளர் பணி. ஊதியம் சொற்பம். ஆனால் தங்க இடம் தந்தார்கள். அங்கு சமையலுக்கு அடுக்களை வசதியும் இருந்தது.
இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை விடுப்பு. மூன்றாம் விடுப்பில் ஊருக்குச் சென்றபோது அவனுடைய தாய் தன் அண்ணனின் மகளை மணமுடித்து வைத்தாள். அதற்கு அடுத்த ஆண்டில் தம்பதியர் பெற்றோர் ஆனார்கள். வாத்தியார் தமது உழைப்பில் சிறுகச் சேமித்து வாங்கியிருந்த சிறு மனையை, “இதில் இனி வீடு கட்டிக்கொள்வது உன் பொறுப்பு” என்று மகனுக்கு எழுதித் தந்தார். அவர்களது ஜாகை ‘ஒத்தி’க்கு எடுத்திருந்த வீட்டில் தொடர்ந்தது.
தமது ஜவுளிக் கிடங்கில் சரக்குக் கையிருப்புக் கணக்கெடுப்புப் பணிக்கு கூடுதல் ஒத்தாசைக்கு ஆள் தேவைப்படும் போது சர்தாரை அழைத்துக்கொள்வார் முதலாளி. அதற்கெனத் தனியாகப் பணம் தந்துவிடுவார். அந்த உபரி வருமானம், கட்டடத்தில் வசிப்பவர்களுக்குச் சிறு சேவகம் செய்வதில் கிடைக்கும் சில்லறைப் பணம், எனச் சேர்ந்த சர்தாரின் குருவிச் சேமிப்பில் ஊரில் இருந்த மனையில் அஸ்திவாரம் எழுந்தது.
சர்தாரின் முதலாளியிடம் மின் ஊழியனாகப் பணிபுரிந்தவனுக்கும் அதே அறை ஒதுக்கப்பட்டு ஒருநாள் வந்து சேர்ந்தான் அடெபாயோ. சுதந்திரம் பறிபோனதைப் போல் இருந்தது சர்தாருக்கு. ஆனால், துறுதுறுப்பான இளைஞனாக இருந்த அடெபாயோ வெகு விரைவில் சர்தாருக்கு நல்ல நட்பாகி, அடுக்களையில் ஒத்தாசை புரிந்து, விரைவில் தமிழ்நாட்டுச் சமையலிலும் தேர்ந்தவனாகி விட்டான். அறையில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் லக்கி வீடியோவிலிருந்து எடுத்து வந்த தமிழ்ப் படம், பாடல்கள் ஓடிக்கொண்டே இருக்கும். நடிக, நடிகையர் பெயர் சொல்லும் அளவிற்கு தமிழ்நாட்டுப் பரிச்சயம் அடெபாயோவுக்கு ஏற்பட்டுவிட்டது. சில ஆண்டுகள்தான் வேலையில் இருந்தான்.
திடீரென்று ஒருநாள், “நான் ஊருக்குத் திரும்பிவிடப் போகிறேன். பெற்றோர் வயது முதிர்ச்சியில் சிரமப்படுகிறார்கள். நான்தான் கவனிக்க வேண்டும்” என்று வெளியேறும் விசாவும் அடித்துவிட்டான். அவனது பயண நாள் நெருங்கியது. “நாளை மதியம் கிளம்புகிறேன் சர்தார்” என்றான்.
“ஹபீபி! உன்னைப் பிரிந்து இங்கு எனக்குக் கஷ்டமாக இருக்கப் போகிறது. நல்ல எண்ணத்துடன், பெற்றோரின் சேவைக்காகப் போகிறாய். அல்லாஹ் உனக்கு நிறைய பரக்கத் செய்வான்” சொல்லும்போது கண்கள் கலங்கியதாகத்தான் தோன்றியது சர்தாருக்கு.
உணர்ச்சி வசப்படுகிறோமோ என்று தோன்றிய நேரத்தில் அறைக் கதவு தட்டப்பட்டது. அவசரமாக நுழைந்தான் ஷேக்கோ. சர்தாரின் தாய் வழி உறவினன். ஒத்த வயது என்பதால் இருவருக்கும் நெருக்கம் அதிகம். அவனிடம் ஏகப்பட்ட பதட்டம்.
“உன்னிடம் தனியாகப் பேசணும் சர்தாரு”
அதைப் புரிந்துகொண்டு, “சில பொருள்கள் வாங்க வேண்டும். பத்தாஹ் வரை போயிட்டு வந்து விடுகிறேன்” என்று கிளம்பி விட்டான் அடெபாயோ.
“சர்தாரு, எனக்குப் பக்கத்து ரூமில் நேத்து பெரிய சம்பவம் ஆயிடுச்சு. ரெண்டு ஃபிலிப்பினிங்க. நல்லா நோட்டம் பார்த்திருக்கானுங்க. பணம் கொடுக்கத்தான் ஆள் வந்திருக்குன்னு நம்மாளு கதவைத் திறந்திருக்காப்புல. ஒருத்தன் கத்தியாலே அவனுடைய வயித்தை இலேசா கிழிச்சு இரத்தத்தைக் காண்பிச்சிருக்கான். அடுத்தவன், கழுத்துல கத்தியை வெச்சு லாக்கரைத் திறக்க வெச்சிருக்கான். அத்தனை பணத்தையும் துடைச்சு எடுத்துட்டுப் போயிட்டானுங்க. நம்மாளு இப்ப ஆஸ்பத்திரிலே”
“அல்லாஹ்வே! உசுருக்கு ஏதாச்சும்…”
“வயிற்றில் தையல் போட்டு அட்மிட் பண்ணியிருக்காங்க. ஆனால் பணம்தான் ரொம்பப் பெரிய தொகை. இலட்சங்களில் என்று பேச்சு. உண்டியல் விவகாரம். போலீஸிடமும் போக முடியாதுல்ல”
ஷேக்கோவின் பக்கத்து ரூமில் உள்ளவருக்கு உண்டியல் பரிவர்த்தனை. மாதா மாதம் ஊருக்குப் பணம் அனுப்புபவர்கள் வங்கியைவிட இதில் சிறிது தொகை அதிகம் என்பதால் அவரை அணுகி அளித்து விடுவார்கள், ரசீது எதுவும் கிடையாது. ஆனால் ஊருக்கு உரிய நேரத்தில் பணம் சென்று சேர்வதில் எந்தப் பிசகும் இருந்ததில்லை. பணப் போக்குவரத்து வெகு அதிகம். அதை நன்கு கவனித்து, திட்டமிட்டு, அடித்துச் சென்றிருக்கிறார்கள்.
“உசுரு தப்பிடுச்சே! நல்லவேளையாப் போச்சு”
“சர்தாரு! ரெண்டு நாளைக்கு உன் உதவி தேவை. இந்த மாசத்து ஏலப் பணமும் குலுக்கல் சீட்டுப் பணமும் அறுபதினாயிரம் ரியால் இருக்கு. நாளை மறுநாள் வெள்ளிக்கிழமைதான் ஆளுங்க வந்து வாங்கிட்டுப் போகும். பணத்தை என் ரூமில் வெச்சுக்க பயமா இருக்கு. ரெண்டே நாளு. இந்தப் பையை வெச்சுக்க. வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை முடிஞ்சதும் வந்து வாங்கிட்டுப் போயிடுறேன்”
டிராவல் ஏஜென்ஸி கம்பெனி ஒன்றில் ஆபீஸ் பாயாக பணியில் இருந்தான் ஷேக்கோ. அவனது வருமானமும் சொற்பம்தான். ஆனால் ஏலச்சீட்டு, குலுக்கல் சீட்டு என்று இரண்டு நடத்தி வந்தான். அதில் அவனுக்குக் கிடைத்த வருமானம் சம்பளத்தைவிட அதிகம். தனக்குத் தெரிந்தவர்களையும் அதில் சேர்த்து விட்டதில் சர்தாருக்கும் மாதா மாதம் சிறு கமிஷன் கிடைத்து.
அடுத்த அறையில் நடந்த களவு ஷேக்கோவைக் கதிகலங்க வைத்திருந்தது. சிறிய பயணப் பையை சர்தாரிடம் தந்து, “பணத்தை எண்ணிப் பார்த்துக்கோ” என்றான்.
“இவ்ளோ பெரிய தொகையை என்னால அடைகாக்க முடியாது ஷேக்கோ. நீயாச்சேன்னு ஒத்துக்கிறேன். வெள்ளிக்கிழமை மறக்காம வந்துடு”
பையைத் தனது பழைய துணிமணிகள் அடங்கிய பெட்டியின் அடியில் வைத்து மூடிப் பூட்டிவிட்டு, கட்டிலில் அமர்ந்து ஷேக்கோவுடன் தேநீரைப் பருகும் நேரத்தில் உள்ளே நுழைந்தான் அடெபாயோ.
“பர்ஸையும் இகாமைவயும் மறந்துவிட்டேன் ஹபீபி” என்று அவற்றைத் தனது கட்டில் தலையணை அடியிலிருந்து எடுத்துக்கொண்டு, “மாஸலாமா” என்று ஓடினான்.
“கேட்டிருப்பானோ?” என்ற ஷேக்கோவிடம், “அப்படித் தெரியல. நாளைக்கு ஊருக்குக் கிளம்புகிறான். பயண அவசரத்தில் இருக்கிறான்”
மறுநாள் சர்தார் எதிர்பாராத அழைப்பு முதலாளியிடம் இருந்து வந்து, அவருடன் சரக்கு கிடங்கிற்குச் செல்லும்படி ஆகி, இரவு அறைக்குத் திரும்பினால், வாய் பிளந்து கிடந்த பெட்டியிலிருந்து ஷேக்கோ கொடுத்த பணம் களவு போயிருந்தது.
பக்கத்தில் இருந்த பெட்டிக்கடைக்கு ஓடி அங்கிருந்து தொலைபேசியில் ஷேக்கோவை அழைத்து, “மோசம் போயிட்டோம். உடனே கிளம்பி வா” என்றான்.
டாக்ஸி பிடித்து வந்து சேர்ந்தவனிடம், “இந்த ரூம் சாவி என்னயத் தவிர இன்னொன்று அவனிடம் மட்டும்தான். மதியம் அவனுக்கு ஃப்ளைட்டு. அவனைத் தவிர வேற யாரும் இதை எடுத்திருக்க முடியாது ஷேக்கோ”.
திகைத்து, அழுது, அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் இருவரும் திகிலுடன் அமர்ந்திருந்தார்கள்.
“பெரிய தொகைடா சர்தாரு. ஏலச் சீட்டு இங்க இல்லீகலு. போலீஸுக்கும் போக முடியாது. எல்லாருக்கும் எப்படி பதில் சொல்வேன். தூக்குல தொங்கிடுவேன்” என்று கதறினான் ஷேக்கோ. சர்தாருக்கும் அதிர்ச்சி நெஞ்சை அடைத்தது. அவன் ஏலச்சீட்டில் சேர்த்து விட்டவர்கள் இப்பொழுது பணத்தைக் கேட்டு சர்தாரின் கழுத்தைத்தானே பிடிப்பார்கள்?
அடுத்த இரண்டாம் நாள் மாரடைப்பில் மரணமடைந்தான் ஷேக்கோ. உலகத்தின் அத்தனை இடியும் தன் தலைமீது விழுந்ததைப் போல் இருந்தது சர்தாருக்கு. பணம் களவுபோன விஷயமும் நட்பு வட்டத்தில் கசிய ஆரம்பிக்க, பணத்தைக் கட்டியவர்களின் கூட்டம் அவனது அறையை மொய்த்துவிட்டது.
ஏதேனும் கலவரமோ எனத் திகைத்துப் பார்த்த குடியிருப்புவாசிகளிடம், உறவினன் ஷேக்கோவின் மரணத்தை விசாரிக்க வந்த நட்புக் கூட்டம் என்று சொல்லி சமாளித்தான் சமயோசிதக் கூட்டாளி ஒருவன். சர்தார் பரிந்துரைத்து சேர்ந்தவர்கள், நேரடியாக ஷேக்கோவிடம் பணம் கட்டியவர்கள் அனைவரும் சர்தாரை ஏசவும் பேசவும் தொடங்கி, அறையில் உக்கிர அனல்.
தலையைப் பிடித்துக்கொண்டு கவிழ்ந்து அமர்ந்திருந்தவன் ஒரு கட்டத்தில் நிமிர்ந்தான். தெளிவான குரலில், “உங்க அத்தனை பேர் பணத்திற்கும் நான் பொறுப்பு. ஒரு ஹலாலா பாக்கியில்லாமல் நான் திருப்பித் தந்துடுவேன். இந்தக் கடனை அடைச்சு முடிக்கிற வரைக்கும் நான் ஊருக்கும் போக மாட்டேன். இது அல்லாஹ்வின் மீது சத்தியம்”
நிசப்தமானது அறை. அவன் கூறியதை உள்வாங்க அவர்களுக்குச் சில நிமிடங்கள் தேவைப்பட்டன. முதலில் அதில் அவர்களுக்குத் திருப்தி ஏற்பட்டாலும் யதார்த்தம் அடுத்தக் கேள்வியாக வந்து விழுந்தது.
“உன்னுடைய சொற்ப சம்பளத்துல எந்தக் காலத்துல நீ அறுபதாயிரம் ரியாலைச் சம்பாதிச்சு அடைக்கப் போறே?”
“வாஸ்தவம்தான். ஒரு மாசம், ஒரு வருஷம்னு இதை அடைக்க முடியாதுதான். ஒரே நேரத்துல உங்க எல்லாருக்கும் திருப்பித் தரவும் முடியாதுதான். நான் கெஞ்சிக் கேட்டுக்கிறது அவகாசம். அதை மட்டும் கொடுங்க. எத்தனை வருஷமானாலும் சரி, உங்கக் கடனை அடைச்சிடுவேன். ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா கடன் பத்திரம் எழுதி கையெழுத்து போட்டுத் தர்ரேன்”
“நடக்கிற கதையைப் பேசு சர்தாரு”
“அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுச் சொல்லியிருக்கேன். அவன் குர்ஆனில் சொல்லியிருப்பதைப் போல கடன் பத்திரம் எழுதித் தர்ரேன். பொதுவான ஒருத்தர் வாசகத்தை எழுதட்டும். ஒவ்வொருத்தருக்கும் அவருடைய பெயர் தொகையுடன் தனிப்பட்ட பத்திரம். இரண்டு பேர் சாட்சி கையெழுத்துப் போடுங்கள்”
“எத்தனை வருஷத்துல தருவே?”
“ஒரு சில மாசத்துல முதலாவதா ஒருத்தருக்கு. பல வருஷமாகலாம் கடைசி ஆளுக்கு. அதனாலதான் கெஞ்சிக் கேட்டுக்கிறேன் அவகாசம் மட்டும் தாங்க”
சிலர் ஏற்றுக்கொண்டார்கள். பலர் முரண்டு பிடித்தார்கள். அதில் ஒருத்தன் உரத்துக் குரல் கொடுத்தான்.
“நமக்கு வேற ஏதும் வழியிருக்கா சொல்லுங்க? அவனவன் வாங்கின கடனுக்கே பட்டையப் போட்டுட்டு நழுவிடறான். இவன் தொலைச்சப் பணத்துக்கு பத்திரத்தை தந்துட்டு இங்குக் கிடக்கப் போகிறேன் என்கிறான். அத நம்பாமல் நாம பிரஷர் கொடுத்து இவனுடைய இதயமும் நின்னுடுச்சுன்னா, உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணான்னு ஆயிடும். நடந்தது நடந்து போச்சு. அவன் செய்யாத குற்றத்துக்கு முழு நஷ்டத்தையும் ஏத்துக்குறான். அவன்தான் அல்லாஹ் மேல சத்தியம் செய்றான்லே. பொறுத்திருந்து வாங்கிக்குவோம்”
ஊருக்கு செய்தி பரவி, ஃபோனில் தந்தை அழுதார். மனைவி கதறினாள். ஒப்புக்கு அவர்களுக்குத் தைரியம் சொன்னவன், ஒன்றை மட்டும் தெளிவாகச் சொன்னான். “கடன் அடைபடும் வரை சொர்க்கம் புக முடியாதுன்னு ஹதீஸ் இருக்கே. ஊருக்கு வர தாமதமானால் பரவால்லே. சொர்க்கம் கிடைக்காமப் போலாமா?”
அவனது கணக்கில் வாயடைத்துவிட்டார் கணக்கு வாத்தியார். தலையை உயர்த்திக்கொண்டு சொன்னார். “நீ கவலைப்படாதே சர்தாரு. உன்னிடமிருந்து பணம் வராமப் போனா என்ன? நீ வர்ற வரைக்கும் உன் மவனுக்கு நான் தாத்தாவும் அப்பாவுமா இருப்பேன்”
oOo
இரண்டு பத்தாண்டுகள் ஓடி முடிய வேண்டியிருந்தது, சர்தார் அனைத்துக் கடனையும் கட்டி முடிப்பதற்கு. அவனது நேர்மைக்கு இளமை தொலைந்து போய், காதோரம் நரை துவங்கியிருந்தது. ஊரில் தாயும் தந்தையும் படைத்தவனிடம் மீண்டிருந்தனர். கல்லூரிப் பருவத்தை எட்டிவிட்ட மகன் படிப்புக்கு வாய்ப்பின்றி கும்பகோணத்தில் உள்ள நண்பனின் அலுவலகத்தில் உதவியாளனாகச் சேர்ந்திருந்தான்.
“கம்ப்யூட்டரில் ஃபோட்டோ ஷாப், டிசைனிங் எல்லாம் செய்து தர்றோம். நானும் கொஞ்சம் கொஞ்சம் கத்துகிட்டேன்” என்று கடிதம் எழுதியிருந்தான் மகன்.
“நல்லா வரையுறான் அவன்” என்று புகழ்ந்திருந்தாள் மனைவி.
வந்திறங்கிய சர்தாருக்கு புது உலகமாகத் தெரிந்தது சென்னை. இருபது ஆண்டுகளில் எல்லாம் மாறியிருந்தன. நண்பர்களுடன் ஷேர் டாக்ஸியில் ஊர் வந்து சேர்ந்தவனைக் கட்டி அணைத்து அழுதது குடும்பமும் உறவும். அவனது சோகமும் களைப்பும் மட்டுப்பட இரண்டு, மூன்று நாள் ஆயின.
அஸ்ரு தொழுதுவிட்டு வீடு திரும்பும் போது மகன் கேட்டான். “வாப்பு! தாத்தாப்பா கொடுத்த மனையில வீடு கட்ட ஆரம்பிச்சு நின்னுப் போச்சில்லியா. அதைப் பார்ப்போமா?”
அஸ்திவாரம் மட்டுமே எழும்பியிருந்த இடத்தில் நான்கு மூலைகளிலும் மூங்கில் நட்டு, ஓலைத் தட்டிகளைச் சுவராக்கி, ஓலைக் கூரை போட்டு, குடில் எழுப்பியிருந்தார்கள். பழைய மரப் பலகையில் ஒரு கதவு. அதில் ஆடியது பெயர்ப் பலகை.
“என்னத்தா இது?” என்றான் சர்தார்.
“மத்தவங்க உங்கள வாழ்க்கையைத் தொலைச்சவரா, ஜெயிச்சவங்களா பார்ப்பாங்களான்னு எங்களுக்குத் தெரியாது. ஆனால், எங்களுக்கெல்லாம் நீங்க மகாராஜா. இது நீங்கள் வென்ற கோட்டை”
ஓவிய வரிகளில் பெயர்ப் பலகையை வரைந்திருந்தான் மகன். அது,
‘சர்தார் கோட்டை’
-நூருத்தீன்
Image: AI Generated
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License
1 comment
வாழ்க்கையை முற்றிலும் தொலைத்து விட்ட நிலையிலும் சர்தாரின் அப்பழுக்கில்லா நேர்மை, தியாகம், வாக்கு தவறாமை. இவற்றைப் புரிந்துகொண்டு அவரை ஆதரிக்கும், அங்கீகரிக்கும் குடும்பம். உயிர் சொந்தங்களும் இரத்த பந்தங்களும் அவர் மீது கொண்டிருக்கும் அளப்பரிய நம்பிக்கை. இறுதியில் சர்தாரின் தியாக வாழ்வை பறைசாற்ற மிச்சமாய் ஒரு ஓலைக்குடிசை. இதற்கு முன் அவர் ஒரு வேளை வாழ்வில் வெற்றி பெற்று நிதி குவித்துக் கட்டியிருக்கக்கூடும் செங்கல் மாளிகை எம்மாத்திரம்?
உருக்கம்.. நெகிழ்ச்சி! ஒரு நாவலாக உருவாகத் தகுதியுள்ள சிறுகதை.