“(ஏ நபீ!) அவர்கள் (உம்மீது) உறுதி கொள்ளவில்லை யென்னுங் காரணத்தால் நீர் தற்கொலை புரிந்துகொள்வீர் போலும்!”
“ஆகையால் திண்ணமாக, அன்னவர்கள் (இத்திருமறையைப்) பொய்ப்படுத்தி விட்டார்கள்; ஆயின், அவர்கள் எதனை ஏளனம் செய்து கொண்டிருக் கிறார்களோ, அதன் (மெய்ச்) செய்தி அதிசீக்கிரம் அவர்கள் பால் வந்து சேரும்”—(குர். 26 : 3, 6).
1-1-1919 (புதன் கிழமை) முற் பகலில் துவக்கப்பட்ட எனது இஸ்லாமிய சமய ஊழியம் இன்று 31-12-1952 (புதன்கிழமைப்) பிற்பகலோடு தனது 33-ஆவது ஆண்டை முடித்துக் கொண்டுவிட்டது. இதுபொழுது இம் மிஸ்கீனது வயது 68 முடிவுறப் போகிறது. எனவே, என தாயுளில் உத்தேசம் ஒரு பாதியை இச் சத்திய சன்மார்க்கத்தின் உத்தாரணப் புத்துணர்ச்சிக்காகச் செலவிட் டிருக்கிறேன் என்பது நிதரிசனம். இஸ்லாம் என்பது இயற்கையோ டியைந்த, ஓரெளிய சன்மார்க்க மென்பது இவ்வுலகப் பெரியார்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வெளிய, இயற்கையோ டியைந்த சத்திய சன்மார்க்கம் இறைவனாலே இத் தரணி மாந்தரின் உஜ்ஜீவிப்பிற் கென்று எம்பெருமான் முஹம்மத் (சல்) நபியவர்கள் வாயிலாய் அருளிச் செய்யப்பட்டது; இவ்வாறு இறைவனால் அருளப்பட்ட செய்கைக்கு வ‘ஹீ என்று பெயர் கூறப்பெறுகிறது. எனவே, எமது திருமறையாம் குர்ஆன் மஜீத் இறைவனது “கலாம் (திருவசனம்) ஷரீப்” என்று அழைக்கப்பட்டு வருகிறது; ஆயின் அவனுடைய கைவேலை—அஃதாவது, இப்பிரபஞ்ச சிருஷ்டியும், இதில் காணப்படும் எல்லாப் பொருள்களின் படைப்பும்—‘பித்ரத் என்று அழைக்கப்பட்டு வருகின்றன.
இறைவனது இயற்கைச் சிருஷ்டி அவனது செயலாகவும், அவனருளிய திருமறை அவனது சொல்லாகவும் இருந்து வருங்கால், அவ்வொரே இறைவனுடைய சொல்லும் செயலும் ஒன்றுட னொன்று மாறுபடாது ஒன்றி நிற்க வேண்டுவது நியாயமே யன்றோ? ஒரே இறைவனுடைய கலாம் அவ்வொரே ஆண்டவனுடைய ‘பித்ரத்’துக்கு எவ்வாறு முரணாயிருப்பது முடியும்? அல்லா(ஹ்)வினால் அருளப்பட்ட அழகிய திருமறை குர்ஆன் என்று அரபில் அழைக்கப்படுவதே போல், அவனது செயன் முறை (‘பித்ரத்) ஆங்கிலத்தில் ஸயன்ஸ் என்று அழைக்கப் படுகிறது. எனவே, குர்ஆன் வேதமும், ஸயன்ஸ் ஞானமும் ஒன்றுடனொன்று ஒன்றியே நிற்க வேண்டு மென்பது வெள்ளி விலங்கலா யிருக்கிறதென்பதே இஸ்லாமிய ஞான வான்களின் தீர்ந்த முடிபாயிருக்கிறது. இம் முடிபே இம் மிஸ்கீனுக்கும் முற்றும் ஏற்றதா யமைந்திருக்கிறது.
ஸயன்ஸென்பது கடைந் தெடுத்த பகுத்துணர்விற்குரிய ஞானத்தின் சிகரமா யிருந்து வருதலினால், குர்ஆன் ஷரீபின் கூற்றும் அத்தகைய கடைந் தெடுக்கப்பட்ட பகுத்துணர்வுக்குரிய ஞானத்தின் சிகரமா யிருக்கிறதென இவ் வுலகினர்க்கெல்லாம்—சிறப்பாக இத்தமிழுலகத்தவர்களுக் கெல்லாம்—எண்பித்துக் காண்பிப்பதே இம்மிஸ்கீனது இடையறா ஊழியமாயிருந்திருக்கிறது. உயரிய இஸ்லாமிய உண்மை மத பக்தியேனும், சிறந்த தமிழ் ஞானமேனும், ஆழிய ஆங்கிலக் கல்விப்பயிற்சி யேனும் அதிகமில்லா நந்தமிழ் நாட்டினர்பால் மீக்கூறிய நல்ல முறையிலே இஷா அத்துல் இஸ்லாம் சேவை செய்வதென்பது எத்துணைக் கடின காரிய மென்பது—அதுவும் 20, 30 ஆண்டுகளுக்கு முன்னே செய்வதென்பது—இம் மிஸ்கீனைப்போல் இத் துறையிலிறங்கிப் பாடுபடும் “சீதேவி”கட்கே செவ்வனம் புலப்படக் கிடத்தல் கூடும். இம் மிஸ்கீனுக்கு விரோதமாக எத்தனை பத்திரிகைகள்! எத்தனை ‘பத்வாக்கள்! எத்தனை ஏசல் மாலைகள்! எத்தனை வசைமொழி நோட்டீஸ்கள்! எத்தனை கிரிமினல் கேஸ்கள்! எத்தனை சிவில் தாவாக்கள்! அம்மம்ம! என்ன கடுமை! என்ன கொடுமை! இற்றை நாளில், “தடியெடுத்தவ னெல்லாம் சிலம்பக்காரன்,” என்றாங்கு, தமிழெழுத்தால் எழுதுவதனைத்தும் “செந்தமிழ்ப் பதிப்பு” என்றும், “காலணாக் கார்டு” ஒன்றை எழுத்துப் பிழையின்றி எழுதத் தெரியாதவர்க ளெல்லாம், பத்திரிகாசிரியர்க ளெனவும் புத்தகாசிரியர்க ளெனவும் பறைசாற்றித் திரிகின்றனர்.
“குட்டுதற்கோ பிள்ளைப் பாண்டியன் இங் கில்லை குறும்பியளவாக் காதைக் குடைந்து தோண்டி, எட்டியமட் டறுப்பதற்கோ வில்லி யில்லை இரண்டொன்றா முடிந்து தலை இறங்கப் போட்டு, வெட்டுதற்கோ கவியொட்டக் கூத்த னில்லை விளையாட்டாக் கவிதைதனை வரைந்து பாடித், தெட்டுதற்கோ அறிவில்லாத் துரைக ளுண்டு தேசமெங்கும் புலவரெனத் திரிய லாமே!’ என்னும் பழம்பாடலே இங்கு என் நினைவிற்கு வருகிறது.
சு. ம. (சுய மரியாதை) நாத்திகர்களென ஒரு சில வாலிபர் பகிரங்கமா யுலவிப் பிரகடனப்படுத்திக் கொள்ளுகின்றனர்; இன்னம் வெகு சிலர் நாத்திக சு. ம. க்களை ஆதரித்துப் புத்தகங்களும் பத்திரிகைகளும் வரைந்து, நல்ல முஸ்லிம்களை யெல்லாம் பொல்லா நாத்திகப் படுகுழியுள்ளே ஆழ்த்தித் தாழ்த்தி வருகின்றனர். இவர்கள் அனைவரும் இதுகாலைக் கேள்வி முறை யில்லாது எதேச்சையாய்த் திரிகிறார்கள்.
ஆனால், அக்காலத்தில் இம்மிஸ்கீனை நல்ல வேலை செய்யவொட்டாது முல்லாக்களும், முழு மக்களும் இனியில்லாத் தொல்லைகளை யெல்லாம் இழைத்து வந்தார்கள். அவர்களுடைய தொல்லைகளுக்கும் தொந்தரைகளுக்கும் இடையிடையே இஸ்லாமிய— உயரிய உண்மை இஸ்லாமிய நூல்கள் சிலவற்றை எழுதி வெளியிட்டுள்ளேன். தா. இ. பத்திரிகையையும் துண்டு பிரசுரங்களிலிருந்து தொடங்கி, தினமிரு முறைப்பதிப்பு வரை உயர்த்தி, இதுகாலை ஒரு மாசிகையாகவே வெளியிட்டு, சமய சமுதாய சத்தொழுக்கப் பிரசாரம் புரிந்து வருகிறேன். இவற்றா லெல்லாம் நந்தமிழ்நாட்டு முஸ்லிம்கள் எத்துணை மட்டும் கண்விழித்து முன்னேறியுள்ளார்கள் என்பதற்கு எம் வாசக நேசர்களே தகவுரை கூறட்டும்; ஆண்டவனே அவர்களது கூற்றுக்குச் சாக்ஷியா யிருக்கட்டும். ஆயின், நந்தமிழ்நாட்டு முஸ்லிம்கள் இம் மிஸ்கீனை இன்னம் செவ்வனம் முழுப் பயன் படுத்திக் கொள்ளவில்லை யென்பதே இவ்வடியேனது இடையறாக் குறையா யிருக்கிறது. இவர்கள் என்சக்தி, சாமார்த்திய மனைத்தையும் ஏன் முழுக்க முழுக்கக் கறந்து கொள்ளா திருக்கிறார்கள்? இம்மிஸ்கீனுக்கு இறைவன் எத்தனை வயதை இன்னம் சேமத்தில் வைத்திருக்கிறான் என்பதை யானறியேன். இந் நிலையில், என்னால் வெளியிடப்பட வேண்டிய “நபிகள் நாயக மான்மியம்” இரண்டாம் பாகமும், மௌ. முஹம்மதலீ மர்ஹூமின் “இஸ்லாம் மார்க்கம்” (THE RELIGION OF ISLAM)* என்னும் ஆங்கில மகா கிரந்தமும்—ஏற்கெனவே என்னால் மொழிபெயர்க்கப்பட்டிருப்பது— தமிழில் பல நூல்களும், இம் மௌலானாவின் “புத்துலகமைப்பும்” (THE NEW WORLD ORDER) அச்சாகி வெளிவர வேண்டியனவா யிருக்கின்றன. இவற்றை யெல்லாம் அநேக நண்பர்களிடத்துக் காண்பித்தும், விண்ணப்பித்தும் வருகிறேன். எனினும், இத் தமிழ் நாட்டு முஸ்லிம் பிரமுகர்களும் பணக்காரர்களும் மீக் கூறிய நல்ல நூல்களை யெல்லாம் பிரசுரிக்க முன் வரக்காணோம். அந்தோ!
இம் மிஸ்கீனால் மொழிபெயர்க்கப்பட்ட குர்ஆன் கையெழுத்துப் பிரதி லாகூர் அஞ்சுமனால் அச்சிட்டு வெளியாக்கப்பட வேண்டுவது பாக்கியா யிருக்கிறது. “ந. நா. மான்மியம்”, “இஸ்லாம் மார்க்கம்”, “புத்துலகமைப்பு” முதலிய கிரந்தங்கள் நந்தமிழ் நாட்டு முஸ்லிம்களால் வெளியிடப்பட வேண்டுவது பாக்கியா யிருக்கிறது. தா. இ. சஞ்சிகைக்கும், 33 வருடச் சேவைகளுக்கு இப்பாலும், இருக்க வேண்டிய அளவுக்கு இன்னம் பெரும் பகுதியான சந்தாநேயர்கள் சேர்ந்தபாடில்லை. தா. இ. சினிமா அல்லது மானிட மர்ம சஞ்சிகையன்றே!
எனவே, யான் எற்கெனவே எழுதியுள்ளவாறு, இத் தமிழ்நாட்டு முஸ்லிம்கள் இவ்வடியேனுடைய கல்வி ஞானத்தையும், புத்தியையும், தத்துவத்தையும் போதிய அளவுக்குப் பயன் படுத்திக்கொள்ள வில்லை யென்பதே இம் மிஸ்கீனின் மாபெருங் குறையா யிருக்கிறது. எனது எஞ்சியுள்ள ஆயுளின் உற்சாகத்தையும் உள்ளத்துணர்ச்சியையும் செவ்வனம் இம் முஸ்லிம் உலகுக்கு உபயோகமாகுமாறு நன்கு பயன்படுத்திக் கொள்ள முன் வாரார்களா? என்றே யான் இம் முதிர் வயதில் முறையிட்டுக் கொள்ளுகிறேன். பிரார்த்தனையை இறைவனும் ஏற்க வேண்டும்; எம் முஸ்லிம் அன்பர்களும் அல்லா(ஹ்) ரஸூலுக்காக அவ்வழகிய உயரிய நூல்களனைத்தையும் தமிழில் அச்சாக்கி வெளிவர உதவி புரிதல் வேண்டும்.
குப்பைத்தொட்டிப் புத்தகங்களும், கூளக் களஞ்சிய நூல்களும் கட்டுக் கட்டாய் வெளிவரும் இக்காலத்தில், மீக்கூறிய நல்ல, உயரிய, பகுத்துணர்வுக் கொத்த, மணிபோன்ற கிரந்தங்களை வெளியிட உதவுவோரின் நாமங்கள் நியாயத் தீர்ப்புநாள் மட்டும் இந் நானிலத்தே நின்று நிலவு மென்பது ஒருதலை. எங்கே பார்ப்போம், எத்தனை செல்வர்கள் முன் வந்து அவ்வரும் பெரும் கிரந்தங்களை அச்சிட்டு வெளிப்படுத்த நல்லுதவி புரியப் போகிறார்களென்று!
“ஏ ஈமான் கொண்டவர்காள்! உங்களுடைய பொருள்களேனும், உங்களுடைய பிள்ளைகளேனும் அல்லா(ஹ்)வின் ஞாபகத்தைவிட்டு உங்களை மறக்கச் செய்யா திருக்கட்டும். இன்னம், எவர் அவ்வாறு (மறக்கச்) செய்கிறாரோ, அ(ப் படிப்பட்ட)வர்களே தாம் நஷ்டவாளிகள்”—(குர். 63:9).
-பா. தாவூத்ஷா
தாருல் இஸ்லாம், ஜனவரி 1953 (பக்கம் 17-19)
*இவ்வொரே கிரந்தமே, இஸ்லாம் மார்க்கத்துக் குரிய சகல விஷயங்களையும் சாகோப சாகையா யறிந்துணரப் போதிய பெரு நூலாயிருக்கிறது. இஃது என்று வெளிவருமோ, இறைவனே யறிவான். ப—ர்.