கணிதத்தில் Fractals என்றொரு பாடம் உண்டு. பகுவியல் என்கிறது ஆன்லைனில் உள்ள தமிழ் அகராதி. எளியதொரு சமன்பாட்டில் தொடங்கி ஆயிரக்கணக்கான முறை கணக்கிட்டுக் கொண்டேபோய், கிடைக்கும் விடையைத் தொடங்கிய இடத்தில் மீண்டும் பொருத்தி, மீண்டும் ஆயிரக்கணக்கான முறை என்று கணக்கிட்டால் முடிவே இல்லாமல் போய்க்கொண்டிருக்கும் இல்லையா? அதை fractals என்கிறார்கள்.
இந்த முக்கோணப் படத்தைப் பாருங்கள். இது முடிவில்லாமல் முக்கோணமாகிக் கொண்டே செல்லும் என்பது புரிந்தால் இருப்பதிலேயே இது எளிய உதாரணம். மரக் கிளைகள், கிளை பிரியும் ஆறுகள், மின்னல் கீற்றுகள், சுருள் வட்டப் படிவம் என்று இயற்கையில் இதற்கான மாதிரிகள் ஏராளம்.
Fractals என்பது கண்ணாபின்னாவென்று சிக்கல். அப்படியென்றால், கணித ஞானத்தை காய்கறி கணக்கிற்கும் வரவேண்டிய கடன் பாக்கிக்கும் உண்டான அளவிற்கு மட்டுமே தெரிந்து வைத்திருப்பவர்களை நினைத்துப் பாருங்கள். Fractals என்றதுமே கண் சுற்றாது?
ஆனால் ஜேஸன் பேட்ஜட் (Jason Padgett) என்பவருக்கு அப்படியொரு விநோதம் நிகழ்ந்தது. பள்ளிப் பருவத்தில், ‘இந்தக் கணக்கெல்லாம் நிஜ வாழ்க்கையில் என்ன பயன்?’ என்ற சராசரி மாணவர் ஜேஸன். அவரது 32ஆவது வயதில் விதி விளையாடியது. அது 2002ஆம் ஆண்டு. அமெரிக்காவின் சியாட்டில் நகருக்குத் தெற்கே அமைந்துள்ள டக்கோமா என்ற ஊர். பார் ஒன்றில் தண்ணியடித்துவிட்டு ஜாலியாக வெளியேறிய ஜேஸனை இரண்டு பிக்பாக்கெட் திருடர்கள் துரத்தத் தொடங்கினர்.
போதை தடுமாற்றத்திலும் சுதாரித்துக் கொண்டு ஓடினார் ஜேஸன். விடாமல் துரத்திய திருடர்கள், அவரது பின் மண்டையிலேயே ஒரு போடு. கீழே விழுந்தவருக்கு சரமாரியான அடி, உதை. பர்ஸ் பறிபோனது. கூடவே அவரது நினைவும். மண்டையில் போட்ட போடில் அவரது கண்களில் பெரிய வெளிச்சம். பிறகு நிசப்தம்.
‘மோசமான உள்காயம், கொஞ்சம்போல் கிட்னியில் பழுது’ என்று அறிவித்த மருத்துவர்கள், ஒருவாறு சிகிச்சை அளித்து ஆளைத் தேற்றிவிட்டார்கள். பிழைத்து கண் விழித்து எழுந்த ஜேஸனுக்குத்தான் என்னவோ சரியில்லை என்று உடனே தெரிந்துவிட்டது.
காணும் காட்சிகளெல்லாம் தொலைக்காட்சித் திரையின் பிக்ஸல், சதுரங்களாகத் தெரிந்தன. எப்பொழுதாவது தொலைக்காட்சி பார்க்கலாம்; பார்க்கும் யாவும் தொலைக்காட்சிப் போலவே தெரிந்தால்? அடிபட்ட மண்டையில் அவருக்குப் பேரிடி. பல ஆண்டுகளுக்கு தெரபி சிகிச்சை எடுத்து அந்த வாழ்க்கைக்கு அவர் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டியிருந்தது. காயங்களும் இந்தப் புதிய மன உளைச்சலும் அவரை Posttraumatic stress disorder எனப்படும் PTSD-க்குத் தள்ளி அது அவரை Obsessive–compulsive disorder (OCD) என்ற பதற்றம், மன உளைச்சல் என்ற நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்திவிட்டது. அது ஒரு கொடிய நிலை. தம்முடைய வீட்டினுள் முடங்கி அடைத்துக் கொண்டு, ஜன்னல்களையெல்லாம் கார்பெட்டால் மூடிக்கொள்வார். இப்படியே மூன்று ஆண்டுகள் ஓடின.
பிறகுதான் –
தம் கண்கள் காணும் பிம்பங்களான கட்டங்கள், கோடுகளை வரைய ஆரம்பித்தார். பாமரக் கண்களுக்கு அர்த்தம் அளிக்காத அவை, இயற்பியல் வல்லுநர்களுக்கும் கணக்கியலாளர்களுக்கும் வியப்பை அளிக்க ஆரம்பித்தன. அந்தப் படங்களெல்லாம் Fractalsகளாக விரிந்து கிடந்தன.
சட்டையை மடித்துக் கொண்டு அவரது மூளையை ஆராய்ந்த வல்லுநர்கள், ‘அட இந்தாளுக்கு நட்டு கழறவில்லை. ஆனால் கடினமான கணிதக் கோட்பாடுகளையும் எளிதாகப் பிரித்துப் போட்டு மேய்கிறது’ என்று சொல்லிவிட்டார்கள்.
பிறகு?
மேஜை நாற்காலி சேல்ஸ்மேனாக இருந்த ஜேஸன், மேஜை போட்டு அமர்ந்து, மற்றொரு ஆசிரியருடன் இணைந்து, தன்னுடைய நிலைமாற்றத்தை “Struck by Genius” என்று ஒரு புத்தகமாகவே எழுதி வெளியிட்டு விட்டார். பிள்ளைகளுக்குக் கணிதத்தை எளிதாகக் கற்றுத் தருவதைப் பற்றி அடுத்து யோசித்து வருகிறார். மாணவர்களின் தலையில் குட்ட மாட்டார் என்று நம்புவோம்.
ஒவ்வொருவரிடமும் உள்ளே ஜீனியஸ் ஒளிந்திருக்கிறார். வெளியில்வர ஒரு காரணம்தான் தேவைப்படுகிறது. ‘காம்பைக் கிள்ளிப் பார்த்து முற்றலில்லாத வெண்டைக்காய் வாங்கிட்டு வரக்கூடத் துப்பில்லை’ என்ற சொல்லடிபட்டுக் கிடக்கும் கணவர்கள் நல்ல வலுவான பூரிக்கட்டையை மனைவிக்கு வாங்கி அளித்து தலை கொடுத்துப் பார்க்கலாம்.
பிழைத்தால் ஜீனியஸ்; தொலைந்தால் விடுதலை. மனைவிக்கு!
-நூருத்தீன்
சமரசம் 1-15, ஜுன் 2014 இதழில் வெளியானது
அச்சு வடிவில் வாசிக்க இங்கே க்ளிக்கவும்