ஆறிலிருந்து அறுபதுவரை

ஹிஜ்ரீ ஆறாம் நூற்றாண்டு (ஹி. 508 – 597) பாக்தாதில் வாழ்ந்தவர் இமாம் இப்னுல் ஜவ்ஸி (ரஹ்). ஏகப்பட்ட நூல்கள் எழுதியுள்ள இஸ்லாமிய அறிஞர்.

ஏறக்குறைய 376 நூல்களை அவர் எழுதியள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வளவு குறைவெல்லாம் இல்லை; 700 நூல்கள் வரை எழுதியுள்ளார் என்கின்றனர் வேறு சிலர். எது எப்படியோ நவீன வசதிகள் எதுவும் இல்லாத அக்காலத்தில் மைக்கூட்டில் கட்டைப் பேனாவை நனைத்து நனைத்து எழுதுவது அப்படியொனறும் எளிய செயலெல்லாம் இல்லை. அதற்கு ஆழ்ந்த ஞானமும் பொறுமையும் தேவை.

அவர் எழுதிய நூல்களில் ஒன்று Sayd Al-Khatir. தமிழில் ‘மனச்சுரங்கம்’ என்று சொல்லலாம். அதில் ஓர் அத்தியாயத்தில் நிலையற்ற நம் வாழ்க்கையின் பல நிலைகளை விவரிக்கிறார் இமாம் இப்னுல் ஜவ்ஸி. உலக வாழ்க்கையின் பரபரப்பில் மூச்சு விடக்கூட அவகாசம் இன்றி ஓடிக்கொண்டிருக்கும் நாம் சற்று நின்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு நம் வாழ்க்கையின் முன்னுரிமைகளை பரிசீலனை செய்து கொள்ள இக்கட்டுரை உதவலாம். எனவே, அந்த அத்தியாயத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து சில கருத்துகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

மரணம் எப்பொழுது வந்தடையும் என்று தெரியாது. ஒருவன் அதற்கான ஏற்பாடுகள் செய்து கொள்ளாதிருப்பது எத்தகைய முட்டாள்தனம்! 60 வயதைக் கடந்து 70-ஐ நெருங்கிக் கொண்டிருப்பவர்கள் முட்டாள்தனத்தில் மிகைத்தவர்கள். நிச்சயமாய் 60-க்கும் 70-க்கும் இடையில்தான் விதியின் போர்க்களம் அமைந்துள்ளது. போருக்குக் களமிறங்குபவன் அதற்கான ஆயத்தங்கள் செய்துகொண்டுதானே இறங்குகிறான். இதுவே மனிதர்களின் இயல்பு. இருந்தும் முட்டாள் மட்டும் எத்தகைய ஆயத்தமும் செய்துகொள்வதில்லை.

இளையப் வயதில் இருக்கும்போது, “நான் முதுமையை எட்டியதும் பாவம் புரிவதை நிறுத்திக் கொள்கிறேன்” என்று சொல்கிறான் மனிதன்; சரி. முடி நரைத்தும் தோல் சுருங்கியும் உள்ள நிலையில் பாவம் புரிகிறானே அப்பொழுது என்ன சொல்வான்?

அல்லாஹ்வின் மீது ஆணையாக! கிழவனொருவன் சிரிக்கும் சிரிப்பில் அர்த்தமே இல்லை. அவனது கும்மாளம் அவனது மனம் மரத்துப்போனதை பறைசாற்றும் அவமானம். உலகமோ தன்னை விட்டு அவனைத் தள்ளிக் கொண்டே இருக்கிறது; அவன் இனி உலகத்தில் தங்கியிருக்கப் போகும் காலமெல்லாம் அவனது வலிமை குறைந்துகொண்டே வரப்போகிறது; மனமும் பலவீனமடைந்துகொண்டே வருகிறது. இந்நிலையில் 60 வயதைத் தாண்டியவனுக்கு என்ன நம்பிக்கை பாக்கியிருக்கிறது?

சரி, அதைத் தாண்டி 70-ஐ அடைந்து விடுவோம் என்று அவன் நம்பிக்கை கொண்டால் அதை அவன் கடும் சோதனைகளுக்குப் பிறகே அடைய வேண்டியுள்ளது. தரையிலிருந்து எழுந்து நிற்பதற்கே பெருமுயற்சி தேவைப்படுகிறது. நடந்தாலோ அமர்ந்தாலோ மூச்சிரைக்கிறது.

இதெல்லாம்போக உலகத்தின் களியாட்டங்களில் எல்லாம் முன்போல் பங்கேற்கமுடியாமல் வெறுமனே பார்த்துக்கிடக்க வேண்டியிருக்கிறது. உணவு உண்டால் வயிற்றில் சிரமமும் செரிமானக் கோளாறும் ஏற்படுகின்றன. அவன் தம் மனைவியினுள் புகுந்தால் அது அவளுக்குத் துன்பம் அளிக்கிறது. கலவி முடிந்த பின் முறிந்து விழுகிறான்; சோர்வு, அவலம் எல்லாம் சூழ்ந்து மீண்டும் அவன் தன் சக்தியைப்பெற நெடுநேரமாகிறது. ஒரு கைதியைப் போல் ஆகிவிடுகிறது அவனது வாழ்க்கை.

சரி, அதையும் தாண்டி 80-ஐ அடைந்து விடுவோம் என்று அவன் நம்பிக்கை கொண்டால், அதை நோக்கி அவன் ஒரு குழந்தையைப்போல் தவழ வேண்டியிருக்கிறது.

மனிதனின் எண்பதாம் ஆண்டு வாழ்க்கை இருக்கிறதே, அது, அவனைத் தாக்கும் பேரிடர். வாழ்க்கையை அவன் நொந்துகொள்கிறான்.

விவேகமுள்ள மனிதன் மட்டுமே தன் வாழ்க்கையின் பல காலகட்டங்களின் மதிப்பையும் முக்கியத்துவத்தையும் உணர்ந்து கொள்கிறான். பருவ வயதை அடைவதற்கு முன்பான அவனது வாழ்க்கையோ குழந்தைத் தனமானது. பெரும் முக்கியத்துவம் வாய்ந்த செயல்கள் எதுவும் அதில் அமைவதில்லை. விலக்காய், சில குழந்தைகளுக்கு அபரிமிதமான ஆற்றல் அமைந்திருந்து அதைக் கொண்டு அவர்கள் வயதிற்கு மீறிய செயல்கள் புரிந்திருக்கலாம்; கல்வி கற்றிருக்கலாம். அவை வெகு சில.

பருவ வயதை அடைந்ததும், கல்வி கற்க வேண்டிய களமாகவும் இச்சைகளுக்கு எதிரான போராட்டமாகவும் அமைந்து விடுகிறது அவனது வாழ்க்கை.

பின்னர் அவனுக்குக் குடும்பமும் குழந்தைச் செல்வமும் வாய்த்தபின் வாழ்வாதாரத்திற்கும் குடும்பத்திற்கான கடமைகளுக்குமாய் அவன் காலத்தைச் செலவழிக்க வேண்டியிருக்கிறது. 40 வயதை அடைந்ததும், அவன் வயதிற்கு வந்த பருவம் முழுமையடைகிறது. அவன் தனது காலவரைக்கான கடமைகளை முடித்தவனாகிறான். அதன்பிறகு அவன் தன் வீடு திரும்பும்வரை மெமெதுவே தளர்வுறுவதும் கீழ்நோக்கிச் செல்வதுமாக அவன் வாழ்க்கை அமைகிறதே தவிர வேறில்லை.

ஆண்டுதோறும் மனிதன் மேலே உயர்ந்து செல்கிறான்

பறந்த வண்ணம்

நாற்பதை அடைந்ததும் கீழ் நோக்கி இறங்குகிறான்

இறக்கும் வண்ணம்

எனவே ஒருவன் தன் நாற்பதாம் வயதைக் கடந்துவிட்டால் மறுமை வாழ்விற்கான நற்செயல்களைத் தேடித்தேடிச் சேர்த்துக்கொள்வதையே முக்கியக் கவலையாய் ஆக்கிக்கொள்ள வேண்டும். இவ்வுலகைச் சார்ந்த அனைத்துக் காரியங்களையும் தாண்டி தம் முன் காத்து நிற்கும் மரணத்தின் மீதே அவனது முழு கவனமும் பதிய வேண்டும். இறுதிப் பயணத்திற்கான ஆயத்தத்தில் அவன் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.

இந்த அறிவுரைகளெல்லாம் அவனின் இருபது வயது மகனுக்கும் பொருந்தும்தான். என்றாலும் நாற்பது வயதை நெருங்கியவனுக்கு மரணம் நெருக்கமானதாயிற்றே.

இவ்வாறிருக்க ஒருவன் அறுபது வயதை எட்டிவிட்டால், அல்லாஹ் அந்த மனிதனுக்கு ஒரு முழு வாழ்க்கை வாழ அவகாசம் அளித்ததாய்க் கருத வேண்டும். சிறுவயதிலேயே மரணத்தைச் சந்திக்கும் ஆபத்திலிருந்து தப்பித்து வந்தவனாகிறான் அவன். இம்மனிதன் முழுக்க முற்றிலும் மரணத்திற்கான பயண ஏற்பாட்டிலேயே தன் கவனத்தைத் திருப்ப வேண்டும். இந்த மனிதன் தான் வாழும் ஒவ்வொரு நாளும் தனக்கு உபரியாய் அளிக்கப்பெற்ற செல்வம் என்று கருத வேண்டும். அவனது உடலின் பலவீனம் அதிகரிக்க அதிகரிக்க, ஒவ்வொரு நாளும் கடந்து சென்று கொண்டேயிருக்க, இது மேலும் மேலும் உண்மையாகிறது.

அதன்பின் கடக்கும் ஒவ்வொரு ஆண்டிலும் அவன் நல் அறத்திற்கான தனது போராட்டத்தை அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படியே ஒருவன் தப்பித்தவறி தனது நூறாவது ஆண்டு என்றெல்லாம் எட்டிவிட்டால் இறப்புக்குக் கீழ்படிவதைத் தவிர வேறேதும் அவனுக்கு வழியில்லை. அப்பொழுது அவனிடம் வாழ்க்கையின் மீதம் என்று இருப்பதெல்லாம் வாழ்க்கையில் கவனக்குறைவாய் இருந்துவிட்டதை நினைத்துக் கவலையும் இறைவனை வழிபடுவதற்கான போரட்டமும்தான். அவ்வயதில் அந்நிலையில் சரியான முறையில் இறை வழிபாடு புரிவதே இயலாததாகிவிடும். (அதாவது எண்பது வயதை எட்டிய மனிதனின் வாழ்க்கை முடிவடைந்துவிடுகிறது. அவன் மரணத்திற்காகக் காத்திருக்கிறான். அவனால் எந்தச் செயலையும் தீவிரமாய்ச் செய்ய முடிவதில்லை.)

கவனமற்ற தூக்க நிலையிலிருந்து நம்மை நீக்கி விழிப்புற வைக்க எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் நாம் வேண்டுகிறோம். மறுமை நாளில் நாம் வருத்தமுறுவதைவிட்டுக் காக்கும் நற்செயல்களைப் புரிய நாம் அவனிடம் உதவி கோருகிறோம். நம் எண்ணங்களை நாம் அடைய அல்லாஹ்வை அன்றி வழிநடத்துபவர் யாருமில்லை.

-நூருத்தீன்

வெளியீடு: சமரசம் 16-30, ஜூன் 2011

Related Articles

Leave a Comment