தி சியாட்டில் ஸ்டோரி

முன் வரிசையில் அமர்ந்திருந்தார் கருப்பு நிறத்தவர். தோள் உரசி அமர்ந்திருந்தார் வெள்ளையர். அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் முன்னும் பின்னும் மாநிறத்தவராக, பல நிறத்தவராகப் பலர்.

அது சியாட்டில் புறகரின் ஒரு மஸ்ஜித். ரமளானின் இரவுத் தொழுகை நேரம். அங்குதான் இந்த பலநிறக் கூட்டம்.

சென்ற ஆண்டு சென்னை வந்திருந்தபோது அண்ணன் பொறியாளர் நாஸிருத்தீன், “பிறமத நண்பர்களை அழைத்து ஈத் பெருநாள் நிகழ்வு நடத்துகிறோம். அவர்களுக்கு விருந்து அளிக்கிறோம். கலந்துகொள்ளுங்கள்” என்று அன்புடன் அழைத்தார். IFT சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு என்பதாக நினைவு. அண்ணன் நாஸிருத்தீனைச் சந்தித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இது நல்ல வாய்ப்பு என்று சென்றிருந்தேன்.

இந்து மதச் சகோதரர்கள் பலர் வந்திருந்தனர். பேச்சாளர்களாக அழைக்கப்பட்டிருந்தவர்கள், சுருக்கமாக இஸ்லாத்தைப் பற்றியும் நோன்பு, பெருநாள் சிறப்புகளைப் பற்றியும் பேசினார்கள். உறுத்தலின்றி தெளிவாகவே அமைந்திருந்தன உரைகள். இறுதியில் கேள்வி-பதில். சிலரின் வினாக்கள் உண்மையிலேயே சுவாரஸ்யமாக இருந்தன. அவர்களின் ஆர்வத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது. அவர்களுக்கு அளிக்கப்பட்ட பதில்களும் திருப்திகரம்.

அதன் பின் பார்வையாளர்கள் தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளவும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதில் முக்கியமான தகவல் ஒன்றை நானும் தெரிவிக்க முடிந்தது. அதன் சுருக்கம்–

தமிழ் நாட்டில், இந்தியாவில் இருக்கும் மஸ்ஜிதுகளில், நிகழ்வுகளில் கூடுபவர்கள் ஒரே நாட்டு மக்கள். அவர்களுள் பெரும்பாலானோர் அந்தந்தப் பகுதி மொழியைப் பேசுபவர்கள். தோற்றம், உடை, உணவு, கலாச்சாரம் போன்றவற்றிலும் பெரிதாக வித்தியாசமிருக்காது. ஆனால், அமெரிக்காவில் வசிக்கும் என்னைப் போன்றவர்களுக்கு ஒரே கூரையின் கீழ் பல நாட்டு மக்களையும் வெவ்வேறு நிறத்தவரையும் கண்டு, பேசி, உறவாடி, அவர்களுடன் தோளுரசி ஒன்றாக நின்று ஏகன் ஒருவனை வழிபடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அவரவரின் தாய்மொழி வேறு, கலாச்சாரம் வேறு. ஆயினும் என்ன? அணிவகுத்து தொழுகையில் நிற்கும்போது எனக்கோ அல்லது வேறெவருக்கோ தன்னை அடுத்து நிற்பவரின், நிறம், நாடு குறித்து கடுகளவாவது சிந்தனை இருக்குமா என்ன? தொழுகையில் சிரம் தரை புதையும்போது –முன் வரிசையாளர் யார் எவராக இருந்தால் என்ன– அவரது பாதத்தில் நம் உச்சந்தலை படும்போது அருவருப்பு தோன்றுமா, குறுகுறுப்புதான் இருக்குமா? அதற்கெல்லாம் புத்தியில் இடமே இல்லை. சக மனிதன். சக முஸ்லிம். சகோதரன். தீர்ந்தது விஷயம்.

பட்டம், பதவி, செல்வந்தன், வறியவன் அடிப்படையில் முன்னுரிமை சீட்டு வாங்கி இடம் பிடிக்கும் அவலமின்றி, யார் முதலில் வருகிறாரோ அவருக்கே வாகன நிறுத்துமிடத்திலும் மஸ்ஜிதின் வரிசையிலும் முதலிடம். நோன்பு திறக்கவோ, ஏதேனும் நிகழ்வுக்காகவோ விருந்து பரிமாறப்பட்டால் எல்லோருக்கும் ஒரே வரிசை, ஒரேவித காகிதத் தட்டு. ஏந்தி வரிசையில் நின்று வாங்க வேண்டியதுதான். உணவின் அளவு குறைபட்டால் பகிர்ந்துகொள்ள வேண்டியதுதான்.

என்பனவற்றைத் தெரிவித்துவிட்டு, “முஸ்லிம்களுக்கு உலகிலேயே ஆகப் புனிதமான ஆலயம் எது?” என்று பார்வையாளர்களிடம் கேட்டபோது, யோசித்துவிட்டு, சிலர் கஅபா என்றார்கள்.

மக்கா வெற்றியின்போது முஹம்மது நபி (ஸல்) கருப்பு இனத்தவரான தோழர் பிலால் (ரலி) அவர்களை அழைத்து, அந்தப் புனித ஆலயமான கஅபாவின் மீது ஏறி நின்று தொழுகைக்கான அழைப்பு விடுக்கச் சொன்னார்கள். அதில் மிதிபட்டுவிட்டது எல்லாம். ஓரினம். ஒரே மக்கள் – என்று முடித்தேன்.

கூட்டங்களில் பேசி எனக்குப் பழக்கமில்லை. தட்டுத் தடுமாறித்தான் பேசினேன். ஆனால் அனைவருக்கும் புரிந்தது. வயதில் மிகவும் மூத்த இந்துச் சகோதரர், ‘எனக்கு வயிறு சரியில்லை’ என்ற போதும் கேட்காமல் அவருடன் சேர்ந்து உண்ணச் சொன்னார். தட்டிக்கழிக்காமல் இலையில் கை நனைத்தேன்.

இந்த ஆண்டு ரமளானின்போது மஸ்ஜிதில் எடுத்த புகைப்படங்கள் சில இணைத்துள்ளேன். செல்வம், செல்வாக்கு செருக்கின்றி இறை உவப்பே குறிக்கோளாய் கழிவறைகளையும் பந்தி விரிப்பையும் காலணிகள் விடப்படும் இடத்தையும் போட்டி போட்டு தூய்மைப்படுத்தும் உன்னதர்கள் சிலரும் அந்தக் கூட்டத்தோடு கூட்டமாக அடக்கமாக அமர்ந்துள்ளனர். அசூயை என்ற பேச்சுக்கே இடமின்றி சுற்றிலும் பலர்.

இது புனைவோ, மிகையோ அற்ற – தி சியாட்டில் ஸ்டோரி.

-நூருத்தீன்

மக்கள் உரிமை – மே 12-18, 2023 இதழில் வெளியான கட்டுரை

அச்சுப் பிரதியை வாசிக்க க்ளிக்கவும்

Related Articles

Leave a Comment