டந்த சில ஆண்டுகளாகவே நாஸிருத்தீனுக்கு உடல் நலமில்லை. வயிற்றுக்கும் மார்புக்கும் இடையில் கடுமையான வலி வரும். நெஞ்சு எரிச்சல், வாய்வுக் கோளாறு என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தார். மருத்துவரும் அதற்குண்டான எளிய மருத்துவத்தில் ஆரம்பித்து, மருந்து மாத்திரைகளை மாற்றி மாற்றிக் கொடுத்துப் பார்த்தார். அதற்கெல்லாம் அவரது நோய் மசியவில்லை. சிறிது குணமாகும்; அல்லது குணமாவதைப் போல் தெரியும்; மீண்டும் வீர்யமுடன் தாக்கும்.

பலமுறை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அவர் விரைய வேண்டியிருந்தது. படுக்கையில் கிடக்க நேர்ந்தது. ‘இது வேறு என்னமோ போலிருக்கே’ என்று சுதாகரித்த மருத்துவர்கள் அனைத்துவித பரிசோதனைகளையும் பட்டியல் போட்டு, ஒவ்வொன்றாக நடத்த ஆரம்பித்தனர். பரிசோதனைகளின் முடிவுகள், இன்னதுதான் கோளாறு என்று எதையும் திட்டவட்டமாகச் சொல்லவில்லை. தொடர்ந்து அவ்வப்போது வலி; அதனுடன் போராட்டம் என்றாகி, அவரது தினசரி குடும்ப வாழ்க்கையே மாறிவிட்டது.

பல நாள் விடுப்பு எடுத்து ஓய்விருந்து பார்த்துவிட்டார். அல்ஜீரியாவில் உள்ள தமது சொந்த ஊருக்குச் சென்று நாட்டு வைத்தியம், கை வைத்தியம் என்று செய்து பார்த்தார். ஆனால் இன்னமும் நாஸிருத்தீனுக்குப் பூரண நலம் அமையவில்லை. போதாக்குறைக்கு அவருக்குச் சர்க்கரை வியாதியும் உள்ளதால் இரண்டும் சேர்ந்து படுத்தும் தருணங்களில் அவரைப் பள்ளிவாசலில் பார்க்க நேர்ந்தால் அவ்வளவு கஷ்டமாக இருக்கும். அந்நிலையிலும், “எப்படி இருக்கிறீர்கள்?” என்று நலம் விசாரித்தால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்றுதான் கண்மூடி பதில் வரும். ஆனால் வயிற்றைப் பிடித்திருக்கும் அவரது கையும் முகத்தின் தசை அசைவுகளும் நமக்குச் செய்தியை மறைப்பதில்லை.

நோயற்ற நாடும் ஊரும் ஏது? எந்தக் குடும்பத்திற்கு அதிலிருந்து விலக்கிருக்கு? எனும்போது நாஸிருத்தீனின் நோய்க்கு மட்டும் சிறப்பான விவரிப்பு எதற்கு என்பதைச் சொல்லிவிடுகிறேன். நோயின் தீரா உபாதையால் கடந்த சில ஆண்டுகளாகவே இவருக்கு நோன்பு வைக்க இயலவில்லை. சில நாள் சிரமப்பட்டுப் பள்ளிக்கு வந்து முடிந்தவரை தராவீஹ் தொழுகை தொழுதுவிட்டுச் செல்வார். அப்பொழுது அவரிடம் நலம் விசாரித்தால் உடல் சுகவீனத்தைவிட நோன்பு விடுபட்டுப் போவதுதான் பெரும் அங்கலாய்ப்பாக இருக்கும்.

இந்த ஆண்டு, நோன்பிற்கு சில வாரங்கள் முன் சந்திக்க நேர்ந்தபோது ‘இம்முறை முயன்றுப் பார்க்கப் போகிறேன், என்ன நினைக்கிறாய்?’ என்பதுபோல் என்னிடம் ஆலோசனைக் கேள்வியை வீசினார். ‘இணையவெளிப் போராளி இவன்; வஞ்சனையில்லாமல் நாலைந்து ஃபத்வா தருவான்’ என்று என்னை நினைத்துவிட்டாரோ என்று எனக்குத் திகைப்பு! ஒரு காலத்தில் குர்ஆன் ஓத எனக்குப் பாடம் நடத்திய ஆசான்களுள் இவர் ஒருவர். இஸ்லாத்தின் எளிய சட்ட திட்டங்கள் அறியாத பாமரர் அல்லர். எனவே சற்று யோசித்துச் சொன்னேன், “உங்களது உடல் நிலையையும் தெம்பையும் நீங்கள்தான் அறிவீர்கள். அதைவிடச் சிறப்பாக அல்லாஹ் அறிவான். மருத்துவரின் ஆலோசனையையும் உங்கள் நிலையையும் யோசித்து எது முடியுமோ அதைச் செய்யுங்கள்.”

“பாரக்கல்லாஹ்” என்றார். விடைபெற்றோம்.

அவரைக் கடந்த ஞாயிறன்று பள்ளிவாசல் கார் பார்க்கில் சந்தித்தேன். பேசிக் கொண்டிருந்தோம். “இப்பொழுது உடல்நலம் எப்படியுள்ளது? நோன்பு நோற்கின்றீர்களா?” என்று வழக்கமான விசாரிப்பாகத்தான் என் கேள்வியைக் கேட்டேன். காரில் சாய்ந்து நின்றுகொண்டவர், ஆசுவாசப்படுத்தி, மூச்சை இழுத்து வாங்கினார். என்ன பேசுவது என்று ஒத்திகை பார்க்கிறார் என்று புரிந்தது.

“எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. ஒவ்வொருவரும் ரமளானை வரவேற்கப் பலவிதங்களில் தயாராகி உற்சாகமாக இருப்பார்கள். சிலருக்கு ரமளான் தொழுகையில் பரவசம். சிலருக்கு இஃப்தார் தயாரிப்பு, அதைப் பரிமாறுதல் என்று பரபரப்பு, ஆனந்தம். ஆனால் எனக்கு, இந்த ரமளானின் ஒவ்வொரு வினாடியையும் அப்படி ஆத்மார்த்தமாக மாய்ந்து மாய்ந்து அனுபவிக்கிறேன். என் உடம்பின் ஒவ்வொரு செல்லிலும் அப்படியொரு பரவசம். மற்றவர்களின் உற்சாகத்தையோ, நோன்பின் குதூகலத்தையோ நான் குறைத்துச் சொல்லவில்லை. ஆனால் என்னுடைய இந்த ஆண்டு நோன்பும் அதன் உணர்ச்சிகளும் எனக்குள் ஏற்படுத்தியுள்ள உணர்வைத் தெளிவாகச் சொல்ல என்னால் முடியவில்லை” என்றார்.
அதற்குத் தேவையே இருக்கவில்லை. அவரது முகத்தில் அப்படியொரு திருப்தி, நிதானம், நிறைவு. வெயிலாக இருக்கிறதே ஓரமாக நிற்கலாமா என்று கேட்க நினைத்தவன், வெட்கப்பட்டு அப்படியே உறைந்துபோய் அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். சேயைப் பிரிந்திருந்த தாய் மீண்டும் தன் குழந்தையுடன் இணைந்தால் ஏற்படும் பரவசத்திற்கு ஒப்பான ஒரு நிலையில் அவர் இருப்பதாகத் தெரிந்தது.

எவ்விதத் தடங்கலும் இல்லாமல் ஆண்டுதோறும் நோன்பு நோற்க வாய்ப்புள்ளவர்களுக்குத் தொழுகை, அழுகை, ஈமான் பேட்டரி ரீசார்ஜ் என்று நோன்புகள் மற்றுமொரு அனுபவமாக அமையலாம். ஆனால் அந்த அனுபவம் எந்த அளவு நம்மின் ஒவ்வொரு உடல் அணுவிலும் பற்றிப் படர்ந்து வியாபிக்கும்? குறிப்பிடத்தக்க அளவினருக்கு நோன்புக் காலம் என்பது சம்பிரதாயமாகி விடுவதால்தானே, பேரின்பமாக அமைய வேண்டிய காலம் ஃபேஸ்புக்கில் இஃப்தார் உணவு புகைப்படங்களின் அணிவகுப்பு என்ற சிற்றின்பத்துடன் திருப்தி அடைந்துவிடுகிறது?

சஹாபாக்கள், தாபியீன்கள், தபவுத் தாபியீன்கள் ஆகியோரைப் பற்றிக் குறிப்பிடும்போது மாஅலி பின் ஃபுதைல் (Ma’ali bin Fudail) கூறியதாக ஓர் அறிவிப்பு உண்டு. கேள்விப்பட்டிருப்பீர்கள். ரமளானுக்கு ஆறு மாதம் முன்பிருந்தே ரமளானை அடையுமளவு தங்களது ஆயுளை நீட்டி வைக்கும்படியும் அதற்கு அடுத்த ஆறு மாதம் தங்களது நோன்புகளை ஏற்றுக்கொள்ளும்படியும் அல்லாஹ்விடம் அவர்கள் இறைஞ்சுவார்கள் எனும் அறிவிப்பு அது. அவர்களின் அந்த உணர்வைப் பற்றி ஏதோ கொஞ்சமாக அர்த்தம் புரிவதைப் போலிருந்தது.

முடிக்குமுன் மற்றொன்றைக் குறிப்பிட்டு விட வேண்டும். இந்த ஸியாட்டில் நகரில் சஹ்ரு காலை 2:54, நோன்பு திறப்பது மாலை 9:10 என்று பதினெட்டேகால் மணி நேர நீண்ட நோன்பு. அப்படியிருந்தும் இங்கிருப்பவர்களுக்கு நோன்பைச் சுருக்குவதற்கான குறுக்குவழி, அதற்கான ஃபத்வாவெல்லாம் தேவைப்படுவதில்லை. ஒவ்வொரு நாள் நோன்பும் முழுதாகத்தான் கழிகிறது. நாஸிருத்தீனுக்கோ அவ்வளவு பெரிய நோன்பு நாளும் பேரின்பமாக அமைகிறது.

-நூருத்தீன்

Related Articles

Leave a Comment