எல்லை தாண்டி… என்னமோ

ஜுலை 31, 2009. அது ஒரு வெள்ளிக்கிழமை. ஷேன் பாவுர் (Shane Bauer) வயது 27, சாரா ஷோர்ட் (Sarah Shourd) வயது 31, ஜோஷ் ஃபாட்டல் (Josh Fattal) வயது 27 ஆகிய மூன்று அமெரிக்கர்கள் காலாற நடக்கும் போது, ஈரான் எல்லைக்குள் நுழைந்து விட, கர்ம சிரத்தையாய் அவர்களை உடனே கைது செய்த ஈரான், “எல்லை மீறி நுழைந்தார்கள், கைது செய்துவிட்டோம்” என்று செய்தி அளித்து விட்டது.

  • இராக்கின் வட பகுதியிலுள்ள எல்லையிலிருந்து இவர்கள் ஈரானுக்குள் எப்படி தட்டுக்கெட்டு நுழைந்தார்கள்?
  • ஈரானிய எல்லையோரப் பாதுகாவலர்கள் அவர்களை நோக்கி, “எல்லையின் அண்மையை நெருங்க வேண்டாம்” என்று எச்சரித்தும் மீறியுள்ளார்களே ஏன்?
  • பாஷை புரியவில்லையா?
  • அல்லது, லெபானுக்குள் ஊடுறுவி உளவு பார்க்க நடந்த முயற்சியைப்போல் இதுவும் ஒன்றா?

என்பதெல்லாம் தெரியவில்லை.

இந்நிலையில், “அவர்களெல்லாம் அமெரிக்க மாணவர்கள். நடைப் பயண பிரியர்கள். நான்கு பேர் குழு. அதில் இருவர் சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் அரபி பயிலுகின்றனர். அவர்கள் துருக்கியிலிருந்து குர்திஸ்தானுக்குள் நிலமார்க்கமாக புதன்கிழமை வந்தனர். சுலைமானியாவிலுள்ள ஒரு ஹோட்டலில் இரவு தங்கியிருந்தனர். ஈரான் எல்லையோரம் அமைந்துள்ள ‘அஹ்மத் அவா’ எனும் மலைப்பகுதிக்கு நீரருவிகளையும் குகைகளையும் காண்பதற்குச் சென்றனர். ஒருவர் உடல் நலம் சரியில்லாததால் அஹ்மத் அவா பார்த்துவிட்டு திரும்பி விட்டார். மற்ற மூவரும் பாதைகளும் பகுதிகளும் பரிச்சயமில்லாததால் தெரிந்தோ, தெரியாமலோ ஈரானிய எல்லைக்குள் நுழைந்துவிட்டனர்” என்று குர்தீஷ் பிரந்திய செல்லப் பிள்ளை அரசாங்கம் விவர அறிக்கையொன்று வெளியிட்டது.

ஈரான் அதை வாங்கிச் சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டது; பெரிதாய் சட்டை செய்யவில்லை.

ஈரான்-அமெரிக்கா மாமியார்-மருமகள் உறவுதான் உலகறிந்த ரகசியமாயிற்றே. எல்லை தாண்டிய நிகழ்வு நெருப்பில் மேலும் அக்மார்க் நெய் ஊற்றியது. செய்தி வெளியானதும் அமெரிக்கா – ஈரானுடன் நேரடி தூதரக உறவு இல்லாததால் – சுவிட்சர்லாந்து நாட்டின் மூலம் விபரம் அறிய முயன்றது. சுவிஸ் நாடுதான் அமெரிக்கா சார்பில் ஈரானுடன் பேசும் நடுவர்.

சுவிட்சர்லாந்தும் ஈரானிடம் ஸ்பெஷல் பர்மிஷனெல்லாம் வாங்கி கைதிகளைச் சந்தித்துப் பேசியது. “அவர்களெல்லாம் அப்பாவிகள், தெரியாமல் நுழைந்து விட்டனர். விடுவித்து விடுங்கள்” என்றது அமெரிக்கா. ஈரான் அசையவில்லை. வாரங்கள் மாதங்களாகிக் கொண்டிருந்தன. அந்த மாணவர்களின் பெற்றோர்களைச் சந்தித்துப் பேசி ஆறுதல் கூறினார் ஹிலாரி கிளின்ட்டன். “ஒரு தாயாராக அந்தப் பெற்றோர்களின் ஆற்றாமையைப் புரிந்து கொள்ள முடிகிறது. இரக்கம் காண்பித்து அவர்களை விடுவித்து விடுங்கள்” என்றார் ஈரானிடம்.

நவம்பர் 9, திங்களன்று, “அதெல்லாம் இல்லை. எங்கள் விசாரணையில் அவர்கள் மூவரும் உளவாளிகள்தாம் என்று தெரிய வந்துள்ளது. வேவு பார்க்கத்தான் ஈரானுக்குள் நுழைந்தார்கள்” என்று ஈரான் அரசாங்கம் அறிவித்து விட்டது.

நவம்பர் 12, 2009, வியாழக்கிழமை. நியூயார்க் குயின்ஸ் (Queens) பகுதியில் அமைந்துள்ள இஸ்லாமிக் இன்ஸ்டிட்யூட் ஆஃப் நியூயார்க் (Islamic Institute of New York) வாயில்மணியை இரண்டு அமெரிக்க அரசின் அதிகாரிகள் தொடர்ந்து ஒலித்தனர். கதவு திறக்கப்படவில்லை. பிறகு அங்கிருந்த சன்னலில் தாங்கள் கொண்டு வந்திருந்த பறிமுதல் அறிக்கையை ஒட்டி விட்டு, தரையில் கனமான ஆவணங்களை வைத்துவிட்டுச் சென்று விட்டனர். அவர்கள் சென்று சிறிது நேரம் கழிந்ததும் கதவு திறந்தது. சிலர் வெளியில் வந்து ஆவணங்களை எடுத்துக் கொண்டு மௌனமாய் உள் சென்று கதவை அடைத்துக் கொண்டனர். இந்த இஸ்லாமிக் இன்ஸ்டிட்யூட் ஆஃப் நியூயார்க் என்பது ஷியா முஸ்லிம்களின் அமைப்பு; ஈரானியர்களால் நடத்தப்பட்டு வருகிறது.

முஹம்மத் ரிளா ஷா பஹ்லவி (Mohammad Reza Shah Pahlavi) ஈரானின் முன்னாள் அரசர். சுருக்கமாய் மன்னர் ஷா. இவர் லாப நோக்கற்ற பஹ்லவி ஃபவுண்டேஷன் (Pahlavi Foundation) என்ற அமைப்பு ஒன்றைத் துவங்கி அதை அமெரிக்காவில் நிறுவினார். நிறைய காசு இருந்தது. 1970களில் நாமெல்லாம் சென்னையில் LIC பில்டிங்கை அண்ணாந்து வாய்பிளந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே, பியாஜெட் பில்டிங் (Piaget building) எனப்படும் 36 அடுக்கு ஸ்கை ஸ்கேரப்பர் (sky scraper) கட்டடம் ஒன்றை நியூயார்க் மன்ஹாட்டனில் கட்டிவிட்டார். நகரின் வர்த்தக மையம். அதில் சட்ட அலுவலகங்கள், முதலீடு நிறுவனங்கள் மற்றும் பல வர்த்தகர்கள் வாடகையாளர்களாக இடம் பிடித்துக் கொண்டனர்.

பிறகு ஷா இறந்து போய் ஈரான் அரசியல் நிலைமைகளெல்லாம் மாறிய பின், இதனுடைய வாரிசு நிறுவனமாக அலாவி ஃபவுன்டேஷன் (Alavi Foundation) உருவெடுத்தது. இன்று இந்நிறுவனத்திற்கு பியாஜெட் பில்டிங் மற்றும் பல சொத்துகள் சொந்தம். 650 மில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்துகள். அதிலிருந்து பல மில்லியன் டாலர் ஆண்டு வருமானம். கட்டடத்திலிருந்து வரும் வருவாய் அலாவி நிறுவனத்திற்கு மிகப் பெரும் இலாபம்.

2007ஆம் வருடம் இக்கட்டடத்தின் மதிப்பு 650 மில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. 2007ஆம் வருடம் மட்டும் 4.5 மில்லியன் டாலர் வாடகை வருமானம் ஈட்டியுள்ளதாக வரி விவரக் குறிப்புகளிலிருந்து அறியப்பட்டுள்ளது.

அலாவி ஃபவுன்டேஷன் நியூயார்க், மேரிலேன்ட், கலிபோர்னியா மற்றும் ஹுஸ்டனில் இஸ்லாமிய மையங்களையும் பள்ளிவாசல்களையும் பள்ளிக்கூடங்களையும் நிறுவியது. இஸ்லாமிக் இன்ஸ்டிட்யூட் ஆஃப் நியூயார்க் அமைப்பில் மட்டுமே ஒரு பள்ளிவாசலும் பள்ளிக்கூடமும் உள்ளன. பல மில்லியன் வாடகை வருமானத்தைக் கொண்டு இஸ்லாமிய அமைப்புகளுக்கும் நாடெங்கும் அவர்கள் நிர்மாணித்துள்ள பல பள்ளிவாசல்களுக்கும் செலவிட்டு வருகின்றது. தவிர ஈரானியக் கல்வியாளர்கள், பல சிறந்த அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் பயிலவும் உதவி புரிந்து வருகின்றது.

அந்த அடிமடியில்தான் இப்பொழுது அமெரிக்கா கை வைக்கிறது. இந்நிறுவனத்திற்குச் சொந்தமான நான்கு பள்ளிவாசல்களையும், நியூயார்க் நகரில் பியாஜெட் பில்டிங் கட்டடத்தையும், அமெரிக்க அரசாங்கம் கையகப்படுத்த மும்முரமாய் இயங்கி வருகிறது. “அலாவி ஃபவுன்டேஷன் வெறும் சேவை, உப்புமா மட்டும் செய்யவில்லை; அதனுடைய நிழல் செயல்பாடுகளைக் கண்டுபிடித்து விட்டோம்” என்று அறிவித்திருக்கிறது அமெரிக்கா.

அலாவி ஃபவுன்டேஷன், ஈரான் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்நிறுவனம், தான் வாடகையாக சம்பாதிக்கும் பல மில்லியன் டாலரைச் சட்டத்திற்குப் புறம்பாய் ஈரான் நாட்டின் பேங்க் மெல்லி (Bank Melli)க்குத் திருப்பி விடுகிறது. பேங்க் மெல்லியோ ஈரானின் அணுசக்தி திட்டத்திற்குப் பண உதவி செய்கிறது. “2007லேயே பேங்க் மெல்லி, ஈரானின் அணு-ஏவுகணைத் திட்டங்களுக்கு உதவி புரிவதாகக் குற்றம் சாட்டி அதனை முடக்கப்பட வேண்டிய நிறுவனங்களின் பட்டியலில் இணைத்து அதன் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்று சொல்லியிருந்தோம்” என அமெரிக்கா அடுக்கடுக்காகக் குற்றச்சாட்டுகள் சுமத்தியுள்ளது.

எனவே, “இந்த வங்கியுடன் வர்த்தக உறவு கொள்வது அமெரிக்காவில் சட்ட விரோதமாகும்” என்றும் அமெரிக்க நிதி இலாகாவின் அதிகாரி தெரிவித்துள்ளார். தவிரவும் ஈரானின் மற்றும்பல வர்த்தக அமைப்புகளின் மீதும் அமெரிக்கா தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

“கடந்த இருபது வருடங்களாக அலாவி ஃபவுன்டேஷனின் செயல்பாடுகள் ஈரானின் அதிகாரிகள், ஐக்கிய நாட்டு சபைக்கான பிரதிநிதிகள், ஆகியோரால் அமெரிக்கச் சட்டங்களுக்குப் புறம்பாய் நடைபெற்று வந்திருக்கின்றன” என்று ப்ரீத் பராரா (Preet Bharara) எனும் அமெரிக்க வழக்கறிஞர் ஒருவரும் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இதன் சொத்துகளை முடக்க அரசு வழக்கறிஞர்கள், கடந்த 12.11.2009 வியாழனன்று அரசின் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சமர்ப்பித்துள்ளனர். அதன் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தையும் பறிமுதல் செய்ய ஏற்பாடு நடக்கிறது. இது அமெரிக்கச் சரித்திரத்திலேயே ‘தீவிரவாதத்திற்கு எதிரான’ மிகப்பெரும் கையகப்படுத்தும் செயலாக அமைய உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நடவடிக்கையை நீதிமன்றத்தில் எதிர்கொள்ள அலாவி ஃபவுன்டேஷன் கை முறுக்கிக் கொண்டுள்ளது. அதன் வழக்கறிஞர் ஜான் டி. வின்டர் (John D. Winter) “இந்த வழக்கில் நாங்கள் வெற்றி பெறுவோம். அரசாங்கத்தின் புலன் விசாரணைக்கு ஒரு வருடத்திற்கும் மேலாக நல்ல ஒத்துழைப்பை அளித்தே வந்திருக்கிறோம். இந்நிலையில் அரசாங்கத்தின் இந்த முடிவு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று பேட்டியளித்துள்ளார்.

ஈரானுக்கு எதிரான இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும் நேரம்தான் உலக அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் பெருத்த கேள்வியை எழுப்பி, புருவங்களைக் கேள்விக் குறியாக வளைத்துள்ளது.

மைக்கேல் ரூபின், அமெரிக்கன் என்டர்பிரைஸ் இன்ஸ்டிட்யூட் (American Enterprise Institute) நிறுவனத்தைச் சேர்ந்த ஈரான் விவகார வல்லுநர். அவர், “அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகளுக்கும் எல்லை மீறிய மாணவர்களின் கைது சம்பவத்திற்கும் சம்பந்தமில்லை.அலாவி நிறுவனத்தின் மீதான சந்தேகம் மூன்று அதிபர்களின் பதவிக் காலத்தை விஞ்சியது. பல உள்ளார்ந்த விவரங்களைப் புலன் விசாரணையில் தேட வேண்டியிருந்தது. அதற்குப் பலகாலம் ஆனது. அதெல்லாம் கனிந்து வந்தது இப்பொழுதுதான். மற்றபடி வேறெந்தத் தந்திரத்தின் அடிப்படையிலும் திட்டமிட்டு இந்த விசாரணை நிகழ்த்தப் படவில்லை. இந்நேரத்தில் இது நிகழ்வுறுவது யதேச்சையானது” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் மிக முதல் திருத்தமே மதச் சுதந்திர உரிமை அளித்ததுதான். அமெரிக்கச் சட்ட அமலாக்கும் அதிகாரிகள் ஒரு மத வழிபாட்டு இல்லத்தைக் கையகப்படுத்துவததென்பது மிக மிக அபூர்வமான ஒன்றாகையால் இந்த நடவடிக்கை அரசியலமைப்புச் சட்டத்துடன் மிகப் பெரும் வம்பை உண்டாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஈரானுக்குள் எல்லை மீறி நுழைந்த மூவரும் அப்பாவிகளா? உளவாளிகளா? என்பது நிதர்சனமாகவில்லை. அமெரிக்காவோடு ஏற்கெனவே பல பிரச்சினைகள் இருப்பதால் இந்த ‘எல்லை தாண்டிய’ நிகழ்வை அமெரிக்காவை வெறுப்பேற்ற ஈரான் உபயோகப்படுத்துகிறதா என்பதும் தெரியவில்லை. “நீ தலையில் குட்டினால் நான் காலையே உடைப்பேன்” என்று அமெரிக்கா அலாவியின் கழுத்தை நெறிக்கிறதா என்பதும் புரியவில்லை.

எது உண்மையோ – ஆனால் இது நிகழ்த்தியுள்ள அதிர்வுகள் மட்டும் உண்மை.

நவம்பர் முதல் வாரம் ஃபோர்ட் ஹுட் (Fort Hood) ராணுவ மையத்தில் ராணுவ வீரர்கள் மீது நிகழ்வுற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒரு முஸ்லிம் அதிகாரி குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் நிலையில் ஷியா முஸ்லிம் பள்ளிவாசல்களின் மீதான இத்தகைய நடவடிக்கை அமெரிக்க அரசாங்கத்திற்கும் முஸ்லிம்களுக்குமான உறவில் வெப்பத்தை அதிகப்படுத்தி, கடுமையான எதிர்விளைவுகளை உண்டாக்கும் என அஞ்சப்படுகிறது.

கேர் (CAIR – Council on American-Islamic Relations) எனப்படும் அமைப்பின் சார்பாய் பேசிய இப்ராஹீம் ஹுப்பர், “பள்ளிவாசல்களின் உரிமையாளர்களின் மீதான அரசாங்கத்தின் குற்றச்சாட்டு எதுவாக இருப்பினும், மக்கள் உரிமைக் கழகம் என்ற வகையில், அமெரிக்காவிலுள்ள வழிபாட்டு மையங்களை கையகப்படுத்துவதென்பது அனைத்து மத மக்கள் மத்தியிலும் மதச்சுதந்திரம் பற்றிய ஒரு நடுக்கத்ததை ஏற்படுத்துவதோடு உலகம் முழுதும் உள்ள முஸ்லிம்கள் மத்தியில் ஓர் எதிர்மாறான செய்தியை கொண்டுச் சேர்க்கும் என அஞ்சுகிறோம்” என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் பரவியிருக்கும் மற்ற அனைத்து முஸ்லிம் நல அமைப்புகளும் கைபிசைந்து, நகம் கடித்து மேற்கொண்டு நடக்கவிருக்கும் நிகழ்வுகளைக் கூர்மையாகக் கவனித்து வருகின்றன.

-நூருத்தீன்

சத்தியமார்க்கம்.காம்-ல் 18 நவம்பர் 2009 அன்று “எல்லை தாண்டிய என்னமோ ஒன்னு!“ என்ற தலைப்பில் வெளியான கட்டுரை

Related Articles

Leave a Comment