வண்ணமயமான சித்திரக் கண்காட்சியில் ஒரு படம் தங்களைக் கவர்கிறது. “பார்க்கச் சிறப்பா இருக்கு. சித்திரம்னா அது இதான். இதுதான் எனக்குத் தேவை. என்ன விலை?” என்று விசாரிக்கிறீர்கள்.
விற்பனையாளர், “விலை உங்களது கண்” என்கிறார். அதைக் கேட்டு உங்களுக்கு எப்பேற்பட்ட அதிர்ச்சி ஏற்படும்? யாராவது கண்ணை விற்றுச் சித்திரம் வாங்குவார்களா என்று எவ்வளவு ஆத்திரம் பெருகும்?
இந்த எளிய உதாரணத்தை நமது வாழ்க்கையின் முக்கிய விஷயங்களில் நாம் பயன்படுத்தத் தவறி விடுகின்றோம். தவறு செய்கின்றோம். அப்படியான தவறுகளை நாம் செய்யும்போது, இழப்பது நம்முடைய கண்கள் மட்டுமெனில் ‘உனக்கென்ன போச்சு? என் கண்; என் பார்வை’ என்று வீம்பு பேசிவிட்டு நஷ்டப்படலாம். ஆனால் அந்தத் தவறு நம்மைத் தாண்டி நம் சமூகத்தைப் பாதித்து, கெடுத்துக் குட்டிச்சுவராக்குகிறது எனும்போது எஞ்சியுள்ள கண்கள் விழித்தெழ வேண்டியது அவசியமில்லையா?
சரி எதற்கு இந்தப் பழைய உவமை என்று கேட்கிறீர்களா? பார்ப்போம்.
முஆத் பின் ஜபல் ரலியல்லாஹு அன்ஹு முக்கியமான நபித் தோழர்களுள் ஒருவர். அவர் ஒருமுறை மக்களிடம் பேசும்போது “குர்ஆனுக்கு எதிராய் எதைக் கேள்விப்பட்டாலும் அதை ஆராயுங்கள். ஆனால் நீங்கள் கேள்விப்படுவதற்கு எதிராகக் குர்ஆனில் ஆராயாதீர்கள்” என்று தெரிவித்துள்ளார். மேம்போக்காகப் பார்க்கும்போது குர்ஆனின் மேன்மையை உரைப்பது போல்தானே இது தோற்றமளிக்கிறது? ஆனால் இந்த அறிவுரையின் பின்னால் மிகப்பெரும் சங்கதி, நமது சமூகத்திற்கான நீதி அடங்கியுள்ளது.
மக்காவில் இஸ்லாம் மீளெழுச்சியுற்றபோது, ‘ஓதுவீராக’ (குர்ஆன் 96:1) என்ற கட்டளையுடன்தான் துவங்கியது என்பது நம் அனைவருக்கும் தெரியும். நபித்துவம் அருளப்பட்ட முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்திற்கு மக்களை அழைக்க ஆரம்பித்ததும் சிறுகச் சிறுக மக்கள் இஸ்லாத்தில் நுழைய ஆரம்பித்தார்கள். அப்படி அவர்கள் இணைந்ததும் அவர்களுக்கு முதலில் இயல்பாக அமைந்த விஷயம் ‘ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்’ என்பதுதான். எப்படி என்றால் குர்ஆனும், நபி மொழியும் என்ற தூய்மையான கல்வி அவர்களுக்கு முழு நேர சங்கதி ஆகிவிட்டது. அது ஏகத்துவத்தையும் இறை ஞானத்தையும் அவர்களது மனத்திலும் சிந்தையிலும் பார்த்துப் பார்த்துச் செதுக்கிக் கொண்டே போனது. இதன் முடிவு என்ன ஆனது என்றால், பெருதாய்க் கல்வி அறிவு எதுவும் இன்றி வாழ்ந்து வந்த அந்த அரபு குலமக்கள், இஸ்லாத்திற்குப் பிறகு, தங்கள் இடுப்பிலுள்ள பாலை மணலைத் தூசு தட்டிவிட்டு எழுந்து நின்றபோது பேராச்சரியம் நிகழ்ந்தது!
அந்தக் காலத்தில் நாகரிகத்திலும் சரி, வலிமையிலும் சரி, வல்லரசுகளாகத் திகழ்ந்தவை அன்றைய பாரசீக, ரோமப் பேரரசுகள். உலகின் பெரும் பகுதியை அவர்கள் ஆண்டு கொண்டிருந்தார்கள். அத்தகைய பிரம்மாண்டமான அவர்களது பேரரசுகள் அரேபிய மணலில் கல்வி பயின்று வந்த தோழர்களது காலடியில் தொலைந்து போயின. இஸ்லாமிய அடிப்படையும் குர்ஆனும் நபியவர்களின் வழிகாட்டுதலும் அடித்தளமாகக் கட்டமைக்கப்பட்ட தோழர்களது கல்வி ஞானம், வல்லரசுகளை அடித்துத் தகர்த்தன. மிகையற்ற வரலாற்று உண்மை இது.
இஸ்லாமியக் கல்வி இருக்கிறதே அது இம்மைக்கும் மறுமைக்கும் வித்திடும் தூய்மையான கல்வி. அகக் கண்ணைத் திறக்கும் கல்வி. உலகக் கல்வி என்பதோ வண்ணச் சித்திரம். தோழர்கள் தங்களது அகக் கண் திறக்கப்பட்டு ஞானம் சொட்டச் சொட்ட நின்றதால், பின்னர் அவர்கள் கற்க நேர்ந்த எந்தக் கல்வியும் அவர்களை வழிகெடுக்க முடியவில்லை. அவர்களது கண்களை விலைக்கு வாங்க முடியவில்லை. எதைக் கற்றபோதும் பயின்றபோதும் அவற்றைக் குர்ஆனின் அடிப்படையில் நபியவர்களின் போதனைகளின் அடிப்படையில் ஆராய்ந்து பார்த்து கற்கும் பக்குவம் அவர்களுக்கு ஏற்பட்டுப் போனது.
முக்கியமாகச் சொல்வதென்றால் உலகக் கல்விகளின் அடிப்படையில் குர்ஆனையும் இஸ்லாத்தையும் அணுகும் கேடு தவிர்க்கப்பட்டது. இதன் விளைவாக இஸ்லாம் பரந்து விரிந்தது. மெய்யான ஞானமுடைய இஸ்லாமிய அறிவு ஜீவிகள் உருவானார்கள்.
இன்றைய முஸ்லிம் சமூகத்தின் நிலைக்குக் காரணங்கள் எதுவென்று நாம் பலப்பலவற்றை விவாதிக்கிறோம். பல காரணங்கள் உண்மையும் கூட. ஆனால் அவற்றுள் மிக முக்கியமான ஒன்று கல்வி. கல்வி என்று நாம் நம்பி நினைத்துக் கொண்டிருப்பதெல்லாம் உலக வாழ்க்கைக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இன்றைய கல்வி முறையை மட்டுமே. மேற்கு உலகும் அவர்களது பாடத் திட்டமும் வகுத்துத் தரும் கல்விதான் ஆகச் சிறந்த கல்வி என்ற மாயத் தோற்றம் உலக முழுக்கப் பரவி அது நமது சமூகத்தின் கண்களைக் குருடாக்கிவிட்டது. கல்விக்கான மெனக்கெடலும் போட்டியும் கவலையும் உலகம் சார்ந்த கல்வியைச் சார்ந்தே உள்ளன.
கல்வி என்பது நமது அகக் கண்ணைத் திறக்கும் கல்வியாக அமைய வேண்டும் என்பதை நாம் முதலில் உணர்வது அவசியம். அதுதான் நமது அடித்தளம் சரியான முறையில் அமைய உதவும். பிறகு அந்த அடித்தளத்தின் மேல்தான் உலக வாழ்க்கைக்கான இதரக் கல்வி, அமைய வேண்டும். வலுவான அடித்தளத்தம் அமைந்தால்தானே சிறப்பான அடுக்கு மாடிகள் உருவாக முடியும்? இல்லையென்றால் ஓர் அடுக்கு வீட்டைக்கூடக் கட்ட முடியாதே!
எனவே அகக் கண்ணைத் திறக்கும் இஸ்லாமியக் கல்வி முன்னுரிமை பெற வேண்டும். அது வலுவாக ஊன்றப்பட்டு அதன் பிறகே அதன்மீது இதரக் கல்வி அறிவு ஏற்றப்பட வேண்டும்.
இன்று உருவாகியுள்ள இந்த அன்னை ஆயிஷா (ரலி) பெண்கள் அரபிக் கல்லூரி நம் இஸ்லாமியப் பெண்களுக்கான கல்விச் சேவையைத் துவக்கியுள்ளது. இஸ்லாமியக் கல்வியைப் போதிக்கும் இத்தகு கல்விச் சாலைகள் நமது அகக் கண்ணைச் சரிவர திறந்துவிட்டால் போதும். நமது சமூகம் கண்களை விற்று வண்ணச் சித்திரங்களை வாங்கும் அவலம் நீங்க ஆரம்பித்து விடும்.
-நூருத்தீன்
திருபுவனத்தில் 17.10.2014 அன்று அன்னை ஆயிஷா (ரலி) பெண்கள் அரபிக் கல்லூரி திறக்கப்பட்டது. அதையொட்டிப் பிரசுரமான சிறப்பு மலரில் வெளியான கட்டுரை.