பள்ளி கொள்ளார்

by நூருத்தீன்

னூ முன்ஃகித் (Banu Munqidh) ஒரு மேட்டுக்குடி. சிரியாவின் வடக்குப் பகுதியில் அல்-ஃபராத் ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் ஷைஸர் (Shayzar) பகுதியில் கி.பி. 11, 12

ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்து வந்தார்கள்.

உள்ளூரிலும் சுற்று வட்டாரத்திலும் மெச்சத்தக்க அளவில் இவர்களுக்கு அரசியல் செல்வாக்கு இருந்து வந்தது.

அவர்களுடைய படையில் ஹமாதத் என்றொரு குர்து படைவீரர். இளமையில் பல சாகசங்கள் புரிந்தவர். அனைவரையும்போல் அவருக்கும் ஆண்டுதோறும் வயது கூடி முதுமையடைந்தார். கூடவே அவரது பார்வை நலிவுற்று, வலிமையும் குன்றியிருந்த காலம்.

பனூ முன்ஃகித் பரம்பரையின் முக்கியப்புள்ளி இஸ்ஸத்தீன் அபூஅல்-அஸாகிர். அவரது இயற்பெயர் ஸுல்தான்.  அவர் ஒருநாள் முதியவரிடம் இரக்கத்துடன், “ஹமாதத். தாங்கள் முதுமையடைந்து விட்டீர்கள். உடலும் தளர்ச்சியடைந்து விட்டது. தாங்கள் எங்களுக்குப் புரிந்த ஊழியத்திற்கெல்லாம் நாங்கள் மிகவும் கடன்பட்டிருக்கிறோம். தாங்கள் பணியிலிருந்து ஓய்வுபெறுங்கள். தங்களது இல்லத்திற்கு அருகே இருக்கும் பள்ளிவாசலில் தங்களது ஓய்வு காலத்தை நிம்மதியாகக் கழியுங்கள். நாங்கள் தங்களது வாரிசுகளை உதவிச் சம்பளப் பட்டியலில் சேர்த்துக் கொள்கிறோம். தங்களுக்கு  மாதந்தோறும் இரண்டு தீனாரும் மூட்டையளவு மாவும் வந்தவிடும்.”

வாழ்நாளெல்லாம் போரிலும் சேவகத்திலும் கழித்தவருக்கு இன்னும் என்ன வேண்டும்? அது அருமையான ஓய்வூதியம். தொழுதோம்; ஓதினோம்; இளைப்பாறினோம்; ‘அல்லாஹ், ரப்பே’ என்று அப்படியே நிம்மதியாகக் கடைசிக் காலத்தைக் கழித்து விடலாம்.

“ஏற்றுக்கொள்கிறேன்” என்றார் ஹமாதத்.

சில நாள் கழிந்தது. வெகு சில நாள்கள்தான். இஸ்ஸத்தீனிடம் வந்து நின்றார் ஹமாதத். “ஐயா! அல்லாஹ்வின்மீது ஆணையாகச் சொல்கிறேன். தேமேயென்று என்னால் வீட்டில் அமர்ந்திருக்க முடியவில்லை. அப்படியே காலத்தைக் கழித்து, கட்டிலில் மரணமடைவதைவிட நான் என் குதிரையின்மீது அமர்ந்த நிலையில் மரணத்தைத் தழுவுவதே எனக்கு உவப்பு.”

ஆடிய காலும் பாடிய வாயுமே சும்மா இருக்க முடியாது எனும்போது, களத்தில் எதிரிகளை எதிர்த்து நின்ற கால்கள் மெத்தையில் எப்படி இளைப்பாறும்? “சரி. உம் இஷ்டம்” என்று அனுமதித்தார் இஸ்ஸத்தீன். ஓய்வூதியப் பட்டியலில் இருந்து படை வீரர்களின் சம்பளப் பட்டியலுக்கு இடம்பெயர்ந்தார் ஹமாதத்.

மத்திய தரைக்கடலில் சிரியாவின் மேற்குக் கரையில் உள்ளது த்ரிபோலி (Tripoli) நகரம். முதலாம் சிலுவை யுத்தங்களுக்குப் பிறகு தங்களது கைவசமான பகுதிகளைக் கிறித்தவர்கள் பாகம் பிரித்து ஆண்டுக் கொண்டிருந்தனர். ஸெர்டேன் (Cerdagne) – அரபு மொழியில் அல்-ஸர்தானி – என்ற உயர்குடியைச் சேர்ந்த வில்லியம் ஜௌர்டைன் II (Guillem-Jorda II) இந்த த்ரிபோலி நகரின் அரசன். அவனது தலைமையில் ஒரு படை சிலுவையை உயர்த்திப் பிடித்தபடி கிளம்பி வந்து ஷைஸர் பகுதியைத் தாக்கியது.

அதை எதிர்த்து முஸ்லிம்களின் படை ஆரவாரமாய்க் கிளம்ப, முதியவர் ஹமாதத்தும் ஆயுதங்களை ஏந்திக் கொண்டு, அவர்களுடன் இணைந்து தமது குதிரையில் விரைந்தார். போர் களத்தில் எதிரும் புதிருமாய் முஸ்லிம்களின் படையும் சிலுவை யுத்தக் கிறித்தவர்களின் படையும் அணிவகுத்தன. மேடான பகுதி ஒன்றில், தெற்கு நோக்கி தமது குதிரையில் அமர்ந்திருந்தார் ஹமாதத். அப்பொழுது மேற்குப் பகுதியிலிருந்து கிறித்தவர்களின் குதிரை வீரன் ஒருவன் அவரைத் தாக்கப் பாய்ந்து வந்தான்.

அதைக் கவனித்துவிட்ட முஸ்லிம் படைவீரர் ஒருவர், ‘ஹமாதத்!’ என்று கத்த, திரும்பிய ஹமாதத் தம்மை நோக்கி குதிரையில் வரும் ஆபத்தைப் பார்த்துவிட்டார். உடனே தம்முடைய குதிரையை அப்படியே எதிர் திசையில் வடக்கு நோக்கித் திருப்பி, ஈட்டியைத் தமது கையில் தூக்கி, அதன் எடையை மதிப்பிட்டு, அதற்கு ஏற்ற வலிமையுடன் அதை அப்படியே அந்தக் குதிரை வீரனின் மார்பில் பாய்ச்ச, குறி தவறாது சென்று செருகி நிலை குத்தியது ஈட்டி. நிலை தடுமாறி பின்வாங்கியவன் தனது குதிரையின் கழுத்தைத் தழுவி சாய்ந்து, இறந்து விழுந்தான்.

போரெல்லாம் முடிந்த பிறகு ஸுல்தான் இஸ்ஸத்தீனிடம் வந்த முதியவர் ஹமாதத், “ஐயா! இந்த ஹமாதத் பள்ளிவாசலுக்குள் தம்மை முடக்கிக்கொண்டிருந்தால் யார் அவனைத் தாக்குவது? எனக்குச் சொல்லுங்கள்” என்றார்.

ஹமாதத் இல்லாவிட்டால் என்ன? போரில் வேறு யாரேனும் அவனைக் கொன்றிருக்கலாம். சாத்தியம். அல்லது அவனால் முஸ்லிம் படைகளுக்கு அதிகமான பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். அதுவும் சாத்தியம்தான். ஆனால், வீரர், முதியவர் ஹமாதத் இங்கு அடிக்கோடிட்டது, ‘தம் பணி போர் செய்து கிடப்பதே’ என்பதைத்தான்.

ஹமாதத்தின் முதுமைக்கு முந்தைய காலத்தில் சுவையான பகுதி ஒன்று. குறிப்பாகச் சொல்வதென்றால் வித்தியாசமான சுவை. ஸுல்தானின் சகோதரர் மஜ்துத்தீன் அபூஸலமாவும் ஹமாதத்தும் இஸ்ஃபஹான் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். காலை நேரம். “ஹமாதத். ஏதேனும் உணவு உண்டீர்களா?” என்று அக்கறையுடன் விசாரித்தார் மஜ்துத்தீன்.

“ஆம்! சிறிதளவு ரொட்டித் துண்டை குழம்பில் ஊறவைத்து உண்டேன்,” என்றார் ஹமாதத்.

மஜ்துத்தீனுக்கு ஆச்சரியம். “இரவிலிருந்து நாம் தொடர்ந்து பயணம் புரிந்து கொண்டிருக்கிறோம். நாம் எங்கும் தங்கி இளைப்பாறவுமில்லை; நெருப்பு மூட்டவுமில்லை. உமது ரொட்டியை நனைத்துக்கொள்ள உமக்கு எங்கிருந்து குழம்பு கிடைத்தது?”

“அது ஒன்றுமில்லை. எனது வாயில் அதைத் தயாரித்தேன். சிறிதளவு ரொட்டித் துண்டுகளை மென்றேனா, அவற்றை முழுங்கிவிடாமல் அப்படியே தண்ணீரைக் குடித்து வாயில் வைத்திருந்தேன். அது ரொட்டித் துண்டுகளைக் குழம்பில் ஊற வைத்ததைப் போல் ஆக்கிவிட்டது. அவ்வளவுதான்.”

அறுசுவையில் ஒரு சுவையைக்கூட முழுதாக எதிர்பார்க்காத இந்த உள்ளங்களில்தாம் வீரம் அப்படிப் பொதிந்துக் கிடந்திருக்கின்றது.

– நூருத்தீன்

வெளியீடு: சத்தியமார்க்கம்.காம்

<<முந்தையது>>  <<அடுத்தது>>

<<சான்றோர் முகப்பு>>

 

Related Articles

Leave a Comment