புத்தி

“அவரை அழைத்துவரச் சொல்லுங்கள். கலந்தாலோசிக்க வேண்டும்” என்றார் மன்னர் அல்-அஷ்ரஃப். அப்பொழுது அவருக்கு உடல்நிலை மோசமாகி இருந்தது. ஆனால்

நோயைவிடக் கடுமையான வேதனை ஒன்று இருந்தது. நிம்மதியையும் தூக்கத்தையும் அறவே இழக்கச் செய்யும் பிரச்சினை. அது கிழக்கிலிருந்து புயலாய் வந்து கொண்டிருந்தது. இனத்தையே அழித்துவிடும் அபாயப் புயல்.

ஹிஜ்ரீ ஆறாம் ஏழாம் நூற்றாண்டு முஸ்லிம்களுக்கு பெரும் சோதனையாய் அமைந்திருந்த ஒரு காலகட்டம். ஒன்றன்பின் ஒன்றாய் நிகழ்ந்த சிலுவை யுத்தங்கள் இஸ்லாமிய அரசுகளைப் படு பலவீனமாக ஆக்கியிருந்தன. ஸிரியாவும் சுற்றியுள்ள பகுதிகளும் பல மாநிலங்களாகத் துண்டாடப்பட்டு, சிலுவைப் போராளிகளால் கைப்பற்றப்பட்டு, அங்கெல்லாம் அவர்களது ஆட்சி, அரசாங்கம். முஸ்லிம்கள் பறிகொடுத்த பகுதிகள் சிலுவைப் படையினர் வசம் என்ற அவலம் போதாதென்று, முஸ்லிம் மன்னர்கள் சிலர் தத்தமது ராஜாங்கத்தைப் பாதுகாக்கவும் மற்ற முஸ்லிம் மன்னர்களிடமிருந்து தங்களை மேம்படுத்தி வலுவாக்கிக் கொள்ளவும் முஸ்லிம்களின் எதிரிகளாகிய சிலுவைப் படையினரிடமே கூட்டுச் சேர்ந்திருந்த கொடூரமும் நிகழ்ந்தது. அந்தக் கூட்டணிக்காகத் தங்களது நிலப்பரப்புகள் சிலவற்றை எவ்வித வெட்கமோ, தயக்கமோ இன்றி சிலுவைப் படையினருக்கு அள்ளித்தந்திருந்தது அதைவிடக் கொடுமை.

மேற்கிலிருந்து கிளம்பி வந்திருந்த பெருஞ்சோதனை இப்படியென்றால், கிழக்கிலிருந்து வந்து கொண்டிருந்த புயல்தான் தார்தாரியர்களின் படையெடுப்பு. அவர்களது தாக்குதலும் அட்டூழியமும் விளைவித்த நாசமும் கொஞ்ச நஞ்சமல்ல. அவையெல்லாம் நிதானமாக, விரிவாகப் படிக்க வேண்டிய பாடம். இங்கு அதன் உச்சநிலையின் சுருக்கம் – கிலாஃபத்தின் தலைமையகம் தாக்கப்பட்டு, பாக்தாத் அழிக்கப்பட்டிருந்தது!

தார்தாரியர் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஸிரியாவின் ஹலப் நகரில் மன்னராக இருந்த அல்-அஷ்ரஃப்தான், “அவரை அழைத்துவரச் சொல்லுங்கள். கலந்தாலோசிக்க வேண்டும்” என்று மார்க்க அறிஞர் இஸ்ஸத்தீன் இப்னு அப்துல் ஸலாமுக்கு ஆளனுப்பினார். சிலுவைப் படையினர்கள், தார்தாரியர் ஆகிய இருகொள்ளி பிரச்சினைகளுக்கு இடையில் மன்னர் அல்-அஷ்ரஃபுக்கு தம் சகோதரரான மன்னர் அல்-காமிலுடன் பிரச்சினை. அதுவும் நிலப் பிரச்சினைதான். அதற்காக அவரது படையொன்று போருக்குத் தயாராகியிருந்தது.

இனத்தை அழிக்க இருபுறமும் எதிரிகள். அவர்களது செயல்களிலும் ஒளிவு மறைவில்லை. கொடூரங்களுக்கும் குறைவில்லை. இந்நிலையில் இறையை மறந்து, அவனது மறையை மறந்து சுயநலம், மண்ணாசை, பதவி மோகம் என்று எப்படி இருக்க முடிந்தது அவர்களால்? அதுவும் தம் சொந்த சகோதரர்களுக்கு எதிராய், மக்களுக்கு எதிராய் சண்டைக்காரனுடன் ஒப்பந்தம், உடன்படிக்கை. போதாதற்கு நிலங்களையும் விட்டுத்தந்து சமரசம்? என்ன கொடுமை இது? என்று தோன்றுகிறது அல்லவா?

சற்றுச் சிந்தித்தால் போதும். அந்தப் பழைய கருப்பு வெள்ளை படத்தின் அச்சு அசலான வண்ணப் பிரதி இன்று முப்பரிமாணத்தில் நம் கண்முன் நிகழும் நிஜம். உள்நாடு, வெளிநாடு என்று உலகளவில் நடைபெறும் செய்தி. பெயரும் பாத்திரங்களும்தாம் வேறே தவிர அடிப்படையில் எதிரியின் நோக்கமும் சரி, முஸ்லிம்களின் தலைமைகளும் சரி, கடந்து சென்றுவிட்ட வரலாற்றுக்குச் சற்றும் மாற்றமில்லாத வினோதம்.

வந்து சேர்ந்த மார்க்க அறிஞர் இஸ்ஸத்தீன், மன்னருக்கு ஆலோசனை வழங்கினார். அந்த மார்க்க அறிஞரின் வாழ்க்கை தனியாகப் படிக்க வேண்டிய வரலாறு. மன்னருக்கு அவர் என்ன புத்தி சொன்னார் என்று மட்டும் இங்குப் பார்ப்போம்.

“மன்னரின் வீரமும் அவரது இராணுவத் திறமையும் பெருமதிப்பிற்கு உகந்தது. முக்கியமாய் இஸ்லாத்தின் விரோதிகளை எதிர்த்து அவர் பெற்ற வெற்றிகள் அதற்குச் சான்று. ஆனால் தார்தாரியர், இஸ்லாமியப் பகுதிகளினுள் ஊடுருவி வருகின்றனர். மன்னர் தம்முடைய சகோதரர் அல்-காமிலை எதிர்த்துப் படைகளை நிறுத்தியுள்ளது அவர்களுக்குத் துணிவை அளித்துவிட்டது. மன்னருக்கும் அவருடைய சகோதரருக்கும் இடையே மோதல் உள்ளதால் மன்னரால் தங்களை எதிர்க்க முடியாது, தாங்கள் முஸ்லிம்களுக்கு இழைக்கும் கொடுமைகளைத் தடுக்க முடியாது என்று தார்தாரியர் உணர்ந்துள்ளனர்.

மன்னர் தம்முடைய சகோதரருடன் போரிடும் எண்ணத்தைக் கைவிடும்படியும் தம்முடைய படைகளை இஸ்லாத்தின் எதிரிகளை நோக்கித் திருப்பும்படியும் நான் கேட்டுக்கொள்கிறேன். மன்னர் தாம் நோயுற்றிருக்கும் இந்த அத்தியந்த காலத்தில், போரிடுவதாயின் அல்லாஹ்வுக்காக மட்டுமே போரிடுவதையும் அவனுடைய மார்க்கத்தின் மேன்மையை மீட்டெடுப்பதையும் தமது நோக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ் மன்னருக்கு நோயிலிருந்து நிவாரணத்தை அளித்தால் அவரது உதவியைக் கொண்டு இறைமறுப்பாளர்களை நாம் வெற்றிகொள்ள முடியும் என எனக்கு நம்பிக்கை உள்ளது. இதுதான் சிறந்த தேர்வு. ஆனால் இறைவன் வேறுவிதமாக நாடினால், இஸ்லாத்திற்காகப் போரிட வேண்டும் என்ற நோக்கம் கொண்டதற்காக மன்னர் சந்தேகத்திற்கிடமின்றி வெகுமதி அளிக்கப்படுவார்.”

தெளிவான ஆலோசனை. எதிரி யார் என்று அடையாளம் காட்டப்பட்டது. சமரசம் யாருடன் அமைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. போர் புரிந்தால் அது யாருடன் என்று தெளிவாக்கப்பட்டது. அனைத்திற்கும் மேலாய் – உள்நோக்கம் இருக்கிறதே அது விண்ணோக்கி இருக்கட்டும் என்று உணர்த்தப்பட்டது.

மனமாரப் பாராட்டிய மன்னர் செய்த முதல் காரியம் தம் சகோதரருக்கு எதிராய்க் கிளப்பிய படைகளைத் திரும்ப அழைத்து, அந்த எண்ணத்தை அறவே கைவிட்டது. அடுத்து, அவரது கவனம் முழுவதும் மெய்யான எதிரிகளை நோக்கித் திரும்பியது.

வரலாற்றிலிருந்து பாடம் கற்பது சமயோசிதம். மாறாக நமது சிந்தனைகளும் செயல்பாடுகளும் நாளை எழுதப்படும் வரலாற்றுக்குப் பாடமாகிப்போனால்?

அது பேரவலம்!

-நூருத்தீன்

வெளியீடு: சத்தியமார்க்கம்.காம்

<<முந்தையது>>  <<அடுத்தது>>

<<சான்றோர் முகப்பு>>

 

Related Articles

Leave a Comment