குற்றமற்ற பிழை

by நூருத்தீன்

ப்னு துலுன் (Ibn Tulun) எகிப்தில் துலுனித் அரசப் பரம்பரையை (Tulunid dynasty) நிறுவியவர். ஹிஜ்ரீ மூன்றாம் நூற்றாண்டில் அது உருவானது. இராக்கில் வீற்றிருந்த அப்பாஸிய கலீஃபாதான்

இப்னு துலுனை எகிப்தின் ஆளுநராக அனுப்பிவைத்தார்.

வந்து சேர்ந்தால், அங்கு அப்பொழுது நிதி நிர்வாகத் தலைமை வகித்த இப்னு அல்-முதப்பிருக்கும் (Ibn al-Mudabbir) இப்னு துலுனுக்கும் ஒத்து போகவில்லை. இருவருக்கும் மோதல். பின்னர் ஒருவழியாய் அவரை அடக்கி, பதவியிலிருந்து நீக்கி, இப்னு துலுன் எகிப்தைத் தம் ஆட்சிக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்.

அடுத்து சில காலத்திற்குள் இராக்கிலுள்ள பஸ்ரா நகரில் அடிமைகளின் கலவரம் வெடித்தது. நாட்டின் தெற்குப் பகுதியை அவர்கள் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்கள். கலீஃபாவின் ஆட்சி நிலை மோசமாக, இந்தக் குழப்பத்தைத் தொடர்ந்து இராக்குடனான தமது தொடர்பைத் துண்டித்தார் இப்னு துலுன்.

‘நான் தனிக்காட்டு ராஜா. என்னுடையது சுயேச்சையான அரசாங்கம்’ என்று துலுனித் அரசப் பரம்பரை தோன்றிவிட்டது. ஆனால் அதற்கு நீண்ட ஆயுள் வாய்க்கவில்லை. ஏறத்தாழ 37 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து மறைந்து போனது. இந்த வரலாற்றுச் சுருக்கம் ஒரு பின்னணிக்காக மட்டுமே. இங்கு நமக்குப் பாடம் வரலாறு அன்று; அறம் என்பதால் அங்கு சென்று அதைப் படித்து முயன்று பார்ப்போம்.

அரசியல் பிரச்சினைகள், மோதல், சண்டை, சச்சரவு என்பனவற்றையெல்லாம் மீறி எகிப்தில் இப்னு துலுனின் ஆட்சி நல்லாட்சியாகவே இருந்திருக்கிறது. பெரிய பள்ளிவாசல், மருத்துவமனைகள் என்று நிறைய அறக்கொடை அளித்திருந்திருக்கிறார் அம்மன்னர். ஊரை வளைத்து சொத்துச் சேர்க்கும் ஆட்சியாளர்கள் தலைவிதியாகிவிட்ட நமக்கு, இப்னு துலுன் தமது சொத்தை ஊருக்கு அளித்து, அவற்றை முறைப்படி எழுத்தில் ஆவணமாகப் பதிவுசெய்ய காழீ (இஸ்லாமிய நிதீபதி) அபூஃகாழினிடம் (Abu Khazin) பொறுப்பை அளித்தார் என்பதைப் படிக்கும்போது புரையேறும்.

காழீ அபூஃகாழின் டமாஸ்கஸ் நகரைச் சேர்ந்தவர். மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர். இன்று நம்மிடையே அபூர்வமாகிப்போன ஆழ்ந்த ஞானம், இறையச்சம், நேர்மை போன்றவை அடங்கிய நிறைகுடம். அதனால் மக்களிடம் அவருக்கு நல்ல மதிப்பு. தமக்கு இடப்பட்ட பணியைக் கருமமே கண்ணாகச் செய்து முடித்தார். இப்னு துலுனின் கொடைகளை மிகவும் சிரத்தையுடன் சரிபார்த்து, இஸ்லாமியச் சட்டமுறைப்படி ஆவணமாகத் தயாரித்து அளித்து விட்டார் காழீ.

இப்னு துலுன் செய்நேர்த்தியும் கவன மிகுதியும் உள்ளவராக இருந்திருப்பார் போலும். மார்க்கச் சட்ட நிபுணர்களின் குழுவொன்று அமைத்து, “இந்த ஆவணங்களைச் சரிபாருங்கள்” என்று அடுத்தக் கட்டமாய் அந்த வரைவுகளைச் சரிபார்க்கும் நடவடிக்கை நிகழ்ந்தது. அவர்களெல்லாம் பார்த்தார்கள், படித்தார்கள், அனைத்தும் முறைப்படி உள்ளதென்று சான்றும் வழங்கிவிட்டார்கள்

ஒரே ஒருவரைத்தவிர!

அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தவர்களுள் ஒருவர் அறிஞர் இமாம் அல் தஹாவீ (ரஹ்). அச்சமயம் அவருக்கு மிகவும் இளம் வயது. ஆயினும் ஒப்பந்தம், வக்ஃபு சட்டங்கள் போன்றவற்றில் அவருக்கு ஏராள ஞானம், வல்லமை. அவர்தாம் “இந்த ஆவணங்களில் ஒரு தவறு இருக்கிறது” என்று சொல்லிவிட்டார்.

இப்னு துலுனுக்குத் தகவல் சென்றது. “அதென்ன தவறு என்று கேட்டு வாருங்கள். சரி செய்துவிடுவோம்” என்று உடனே ஆளனுப்பினார்.

“அதை உங்களிடம் தெரிவிக்க முடியாது” என்று வந்தவர்களைத் திருப்பி அனுப்பிவிட்டார் தஹாவீ.

தவறு இருக்கிறது; அதைச் சொல்ல முடியாது என்றால்? இமாம் தஹாவீயை கூப்பிட்டு அனுப்பினார் இப்னு துலுன்.

மன்னரிடம் நேரடியாக பதில் அளித்தார் இமாம் தஹாவீ. அதே பதில். “மன்னிக்கவும். உங்களிடமும் சொல்ல முடியாது.”

இதென்ன கொடுமை! “ஏன்?” என்றார் மன்னர்.

“அபூஃகாழின் மிகவும் ஞானமுள்ள மார்க்க அறிஞர். இவ்விஷயத்தில் நான் அறியாததை அவர் அறிந்திருக்கக்கூடும்.”

அந்த நேர்மையான, அடக்கமான பதில் இப்னு துலுனை மிகவும் கவர்ந்துவிட்டது. “நீங்கள் தவறு எனக் கருதும் விஷயத்தை அவருடன் பேசிச் சரிபாருங்கள்” என்று பெரியவர் காழீ அபூஃகாழினும் இளைஞர் இமாம் தஹாவீயும் தனிமையில் சந்திக்க, ஏற்பாடு செய்தார் இப்னு துலுன்.

சந்தித்தார்கள். சுட்டிக் காட்டினார் தஹாவீ. அதைப் புரிந்துகொண்டு, ‘அட ஆமாம்’ என்று உடனே அதைச் சரி செய்தார் அபூஃகாழின். அவ்வளவுதான். விஷயம் தீர்ந்தது.

“என்ன ஆச்சு?” என்று விசாரித்தார் இப்னு துலுன்.

“நான்தான் தவறாகச் சொல்லிவிட்டேன். காழீ விவரித்ததைக் கேட்டுக்கொண்டேன்” என்று பதில் அளித்துவிட்டுப் போய்விட்டார் இமாம் தஹாவீ.

‘சின்னப் புள்ள! இவர் என்ன சொல்வது; நான் என்ன கேட்பது’ என்ற ‘ஈகோ’ – தன்முனைப்பு – காழீக்கு இல்லை என்பது இதிலுள்ள விஷயம் ஒன்று. ‘நான்தான் அவருக்கு எடுத்துச் சொன்னேனாக்கும்’ என்ற தற்பெருமை, தம்பட்டம் இமாம் தஹாவீக்கு இல்லாதது இரண்டாவது விஷயம். பெரியவர்களுக்கு, வயதில் மூத்தவர்களுக்கு அளிக்க வேண்டிய மதிப்பு, மரியாதை போன்ற வழக்கொழிந்த செயல்கள் இருக்கின்றனவே – இங்கு அது அடிநாதமாய் அமைந்து போயிருந்தது அனைத்தை விடவும் மிக முக்கியமான விஷயம்.

என்ன தவறு, என்ன திருத்தம் என்பதைப் பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் அபூஃகாழின் சொல்லித்தான் இப்னு துலுனுக்கு விஷயம் தெரியவந்திருக்கிறது. மக்களிடமும் மன்னரிடமும் மதிப்புப் பெற்றிருந்த மூத்த வயதுடைய காழீக்கு வயதில் இளையவரான தம்மால் சிறிதும் சங்கடம் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற கவனமும் செயலும் எத்தகு மேன்மை? அமைந்திருந்தது இமாம் தஹாவீக்கு.

விளைவு?

உண்மையை அறிந்த இப்னு துலுனுக்கு இமாம் தஹாவீ மீது எக்கச்சக்க மதிப்பு கூடிப்போய், அவரது அவையில், குழுவில் இமாமுக்குச் சிறப்பிடம் உரித்தானதுதான் உச்சம்!

-நூருத்தீன்

வெளியீடு: சத்தியமார்க்கம்.காம்

<<முந்தையது>>  <<அடுத்தது>>

<<சான்றோர் முகப்பு>>

Related Articles

Leave a Comment