எனக்குப் பரிச்சயமுள்ள அந்த நண்பரை சந்திக்க வந்திருந்த பெண்மணியை நண்பருக்குப் பரிச்சயமில்லை. நண்பரின் பெயர் வெற்றி. வெற்றியின் அலுவலகத்திற்கு அன்று திடீரென்று வந்து
நின்றிருந்தார் அப்பெண்.
“எனக்கு நீங்க உதவணும்.” விஷயம் புரியமால் யார், என்ன என்று விசாரித்ததில் சற்று விளங்கியது. அந்தப் பெண்ணின் தந்தையும் அண்ணன்களும் வெற்றிக்கு நன்கு பழக்கமானவர்கள். ஒரே ஊர்க்காரர்கள்.
விரைவு ரயில் பிடித்து நெல்லை சென்றுவிட்டால் அங்கிருந்து பக்கத்தில் ஒரு கிராமம் வெற்றியின் தாய் மண். ஆழ்வார்குறிச்சியில் பட்டம் முடித்து சென்னை வந்த வெற்றிக்கு நகரின் மத்தியில் உள்ள கல்லூரி ஒன்றில் வேலை கிடைத்தது. அதன் நிர்வாக அலுவலகத்தில் கணக்குப் பிரிவில் வேலை. வருமானம் அப்படியொன்றும் சிலக்கியமில்லை என்றாலும் ‘அனுபவத்துக்காச்சு’ என்று தலைநகரிலேயே தங்கி பணி புரிந்துகொண்டிருந்தார் வெற்றி. சில ஆண்டுகள்தான் பணி. பிறகு வளைகுடாவுக்கு விமானம் ஏறிவிட்டார். அந்தச் சொற்ப பணி காலத்தில் ஒருநாள் பகற் பொழுதில்தான் அந்தப் பெண் வெற்றி பணிபுரியும் கல்லூரிக்கு வந்திருந்தார்.
ஒரே ஊர், தெரிந்தவர்கள் என்றானதும் வெற்றி ஆசுவாசப்படுத்திக் கொண்டு, “சொல்லுங்க. நான் என்ன செய்யணும்?”
“என் மகன். இந்தக் கல்லூரியில்தான் படிக்கிறான். சென்னைக்கு ஒரு வேலையா வந்தேன். அதான் அப்படியே பார்த்துட்டுப் போகலாம்னு… நீங்கதான் உதவி செய்யணும்.”
இப்பொழுது வெற்றிக்கு விஷயம் புரிந்தது. அந்தப் பெண்ணும் அவருடைய கணவரும் பிரிந்து விட்டார்கள். சென்னைக்கு வந்து மறுமணம் புரிந்துகொண்ட மாஜி கணவர் தம் முதல் மனைவியின் மகனையும் தம்முடன் அழைத்துக்கொண்டு, அவரே வளர்த்து வந்தார். அவன் அந்தக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். பெற்ற வயிறு, பொத்தி வைத்த பாசத்துடன் கல்லூரி அலுவலகத்தில் வெற்றியின்முன் கெஞ்சி நின்றது.
பெயரைக் கேட்டு, கல்லூரி ஆவணங்களில் தேடியபோது BBA படித்துக் கொண்டு இருந்தான். வகுப்பறைக்குச் சென்று வெற்றி விசாரித்தபோது அன்று அவன் வரவில்லை.
“இன்னிக்கு வரலியாமே.”
ஏமாற்றத்தை அடக்கிக்கொண்ட அந்தப் பெண், “உறவினர் வீட்டில்தான் தங்கியிருக்கிறேன். நாளை வந்து பார்க்கட்டுமா?” என்றார்.
“பிரச்சினையில்லை. வந்து பாருங்க”
மறுநாள் வெற்றி எதிர்கொண்ட பதில் அவர் எதிர்பாராதது. அந்தப் பெண்மணி வந்ததும் வகுப்பறைக்கு ஆள் அனுப்பி அவனை வரவழைத்தால், வந்தான். “உன்னயப் பார்க்க அம்மா வந்திருக்காங்க“ என்று விஷயத்தைச் சொன்னதும் ஓடிப்போய் கட்டிக் கொள்வான் என்று நினைத்தால், “எனக்கு என் தாயைப் பார்க்க விருப்பம் இல்லை“ என்று சொல்லிவிட்டுப் போயே போய்விட்டான். என்ன செய்வதென்று தெரியாமல் வெற்றி திகைக்க, கண்ணீரையும் வருத்தத்தையும் அடக்கிக்கொண்டு ஊருக்குக் கிளம்பிவிட்டார் அந்தப் பெண்மணி.
சில மாதங்கள் கழிந்திருக்கும். மீண்டும் ஒருநாள் வந்து நின்றார் அந்தப் பெண். வேறொரு வேலையாக சென்னை வந்தவர் இந்த முயற்சியையும் பணியாக்கிக் கொண்டார் போலிருக்கிறது. மகனைச் சந்தித்தால் எழுத்து மாறாமல் அதே பதில் கூறினான். இப்படியே மூன்று முறையும் நடந்துவிட்டது.
அதற்கு அடுத்த முறையும் அந்தப் பெண்மணி ஒருநாள் விக்கிரமாதித்தனாய் வந்து நின்றபோது, வெற்றிக்கு வேதாளக் கதையின் மேல் வெறுப்பு ஏற்பட்டு, மனத்தில் சவால் தோன்றியது. இன்று எப்படியும் அந்தத் தாய்க்கு நல்ல பதில் பெற்றே தரவேண்டும் என்று முடிவு செய்துகொண்டு, “வாங்க பிரன்ஸியைப் பார்ப்போம்” என்று அழைத்துச் சென்றார்.
முன் பத்தி கதைச் சுருக்கத்தை விரிவாய் பிரன்ஸிபாலிடம் தெரிவித்ததும், பையனை வரவழைத்தார்.
“உன் தாயார் உன்னிடம் பேச வேண்டுமாம்” என்று உத்தரவாய்ச் சொல்லிவிட்டு, “வாங்க நாம் வெளியே போகலாம்” என்று வெற்றியை அழைத்துக்கொண்டார். அட்டெண்டரிடம், “யார் வந்தாலும் உள்ளே விடாதே. வெளியே உட்காரச் சொல். நான் ரவுண்ட்ஸ் போயிட்டு வர்ரேன்”.
அடுத்த அரை மணி நேரம். முப்பதே நிமிடங்கள். அவ்வளவுதான் தாயும் மகனும் பேசியிருந்திருப்பார்கள். அதில் மனதை திறந்திருந்திருக்கிறார்கள். திரும்பி வந்துபார்த்தால், “உங்களுக்கு எப்போல்லாம் என்னைப் பார்க்கனும்னு தோணுதோ அப்போல்லாம் காலேஜுக்கே வந்துடுங்கம்மா” என்று விடை பெறுகிறான் மகன். முகத்தில் சொல்லிமாளாத ஆனந்தத்துடன் நின்றுகொண்டிருக்கிறாள் தாய்.
வெற்றியும் தாயும் பிரின்ஸிபாலுக்கு நன்றி சொல்லிவிட்டு நகர்ந்தார்கள். உதவி, உபகாரம் என்பது பணம், காசு என்பதில் சுருங்கிவிடுவதில்லை. கல்லைத் தூக்கி ஓரமாகப் போட்டாலும், யாரோ ஒரு பாதசாரிக்கு காயம் படாமல் காக்க முடிகிறது. இங்கு, அலுத்துக்கொள்ளாத வெற்றியின் அன்றைய அந்த முயற்சி ஒரு குடும்பத்தில் மாயம் புரிந்தது. வந்து பாருங்கள் என்று அனுமதியளித்தவன், அவ்வப்போது ஊருக்கே சென்று தாயைப் பார்த்து வந்தான். அந்தத் தாய்க்கு தம் மகனின் திருமணத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிட்டியது. அது ஓர் உவகை என்றால் பேருவகை அளித்தான் மகன். தன் செலவில் தாயை ஹஜ் யாத்திரைக்கு அனுப்பிவைக்க, ஒரு தாய்க்கு அது ‘ஈரக்குலையில் பாசம் சுரக்கும்’ நிகழ்வாச்கே, வாழ்நாளுக்கும் அவருக்கு அது போதாது?
வெளிநாடு சென்ற வெற்றிக்கும் திருமணமாகி, குழந்தைகளும் பிறந்துவிட்டனர். விடுமுறையில் ஊருக்கு வந்திருக்கும்போது, அந்த மகன் சந்திக்க வந்திருந்தான். தாய்வழி உறவுகளிடம் நல்லுறவில் இருக்கிறான் என்று தெரிந்தது. அவனின் தாயார்தான் வரவில்லை. விசாரித்தபோது, புற்று நோய் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.
“என்னயப் பார்க்கும்போதெல்லாம் உன்னத்தாம்பா விசாரிக்கும்” என்றார் வெற்றியிடம் அவரின் தாய்.
மீறித் துளிர்த்த துளிகளை வெற்றி துடைத்துக்கொண்டார். மனத்திற்குள் எங்கோ ஓர் மூலையில் திருப்தி எட்டிப்பார்த்து…
என்பதாக முடியும் இந்தக் கதையில் வர்ணனைகளும் உரையாடலும் மட்டுமே கற்பனை.
-நூருத்தீன்
இந்நேரம்.காம்-ல் 31 ஜுலை 2013 அன்று வெளியான கட்டுரை
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License