டிபன் பாக்ஸ்​! (பெரியவர்களுக்கான சிறுவர் கதை)

குண்டு வெடித்தது. சப்தம் எவ்வளவு கொடூரமாக இருந்தாலும் எழுதுவதற்கு டமார்தான் சுமாராகத் தேறுகிறது. பசியுடன் டிபன் பாக்ஸைத் திறந்தவன் சிதறி செத்துப் போனான். சோற்றில் பூசணிக்காயை

மறைக்க முடியாவிட்டால் என்ன, குண்டை மறைக்கலாம் என்று சாதுரியக் கொடூரனுக்குத் தோன்றி, சோற்றில் குண்டை வைத்து விட்டான்.

செத்துப் போனவனுக்கு தொலைக்காட்சியில் புதுப்புது நிகழ்ச்சிகளை உருவாக்கும் வேலை. திரைக் கலைப் படைப்புகள், திரைக் கலைஞர்களின் வாழ்க்கை வரலாற்றின் ஞானத் துளிகள் போன்ற உயர்ந்த படைப்புகளின் மீது நம்பிக்கை அற்றுப்போன திமிர் பிடித்தவன் அவன். ‘சீரியல்’ என்று பெயர் எடுத்தாலே அது காலை ஆகாரத்திற்குத்தான் லாயக்கு என்று தெனாவட்டான பதில் வரும்.

அப்படியான அவன், சமூக அக்கறை என்ற நினைப்பில் என்னவோ சில நிகழ்ச்சிகளைத் தயாரித்துக் கொண்டிருந்தான். சில, பலருக்கு அவனைப் பிடிக்கவில்லை. அவனைப் பிடிக்காத அவர்கள் அவனது அலுவலகத்திற்கு வெளியேதான் அதிகம் பரவியிருந்தார்கள்.

செத்துப் போனவனுக்கு மனைவி. நான்கு வயது மகன் என்று குடும்பப் பின்னணி. அந்தக் குடும்பப் பெண்மணி மற்ற மனைவியைப் போலவே ஆசாபாசம் நிறைந்தவள். திரைக் காவியங்கள் அவளுக்குச் சிறிய அளவிலான பொழுதுபோக்கு என்றால், சீரியல் என்ற காலையாகாரத்தைவிட அதன் அனைத்து தொலைப்பெட்டி வடிவமும் அவளுக்கு உயிர். எப்படித்தான் அத்தனை கதாபாத்திரங்களும் அவளுக்கு மனத்தில் தங்குமோ? விரல் நுனியில் நகங்களுக்குப் பதிலாகத் தகவல்கள் தொங்கும்.

இப்படியான யதார்த்த மனைவியும் வித்தியாசப்பட முயற்சி செய்யும் கணவனும் வாய்த்தால் என்னாகும்? கணவனுக்கு ஞாபக மறதி வரும். மனைவியின் பிறந்த தேதி, கல்யாணத் தேதி, அவள் ஆசைப்பட்டுக் கேட்கும் தோடு, தொங்கட்டான் என்று எதுவும் நினைவில் நிற்காமல் தப்பி, அடிக்கடி திட்டு வாங்குவதே வழக்கமாகிவிட்டது. திட்டிப் பார்த்து, அழுதுப் பார்த்து, மூக்கு சிந்திப் பார்த்து எதுவும் சரிவராமல் மனைவி ஓர் உபாயம் கண்டுபிடித்தாள்.

டிபன் பாக்ஸில் துண்டுச் சீட்டு நினைவுறுத்தி.

அது வேலை செய்தது. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா என்ன வாங்கி வந்திருக்கிறேன் பார் என்று அவன் அவள் நினைவூட்டியதை வாங்கி வந்து மகிழ்விப்பான். குடும்பம் சிரித்து மகிழ்ந்து வந்தது. இங்கு கதைக்குச் சுபம் போட்டிருக்கலாம். இயலாதபடி அவன் தயாரி்த்த ஒரு நிகழ்ச்சிக்குத் தீவிரவாத கும்பல் ஒன்று எதிரியாக உருவாகிவிட்டது. தங்களது கூட்டத்தில் இவனை ஆபாசமாகத் திட்டித் தீர்த்துவிட்டு, கட்டம் போட்டு திட்டம் தீட்ட ஆரம்பித்தார்கள்.

குண்டு வெடித்த நாளன்று காலை.

அம்மாவின் டெக்னிக்கை கவனித்து வைத்திருந்த மகன், அன்று ‘டப்பாசு’ என்று சீட்டு எழுதிவைத்தான். பக்கத்து அபார்ட்மெண்ட் குட்டி நண்பனுக்கு அவன் அப்பா விதவிதமாக பட்டாசு வாங்கித் தந்திருந்தார். இவனுக்கும் ஏக்கம். சிரித்துக் கொண்டே மகனின் சீட்டை உள்ளே வைத்து உணவு கட்டித்தந்து கணவனை வழியனுப்பினாள் மனைவி.

அலுவலகத்தில் அந்தத் தீவிரவாத கும்பலின் கைக்கூலி ஊடுருவியிருந்தான். அந்தத் திருட்டுப் பயல் யாருக்கும் தெரியாமல் இவனுடைய டிபன் பாக்ஸிலிருந்து சோற்றை எடுத்துத் தின்றுவிட்டு குண்டு வைத்துவிட, பசியுடன் டிபன் பாக்ஸைத் திறந்தவன் சிதறி செத்துப் போனான்.

“தொப்பி அணியாத, தாடி வளர்க்காத, சித்தாந்த வேறுபாடு கொண்ட சில அதிருப்தியாளர்களால் டிபன் பாக்ஸில் பட்டாசு மறைத்து வைக்கப்பட்டு எங்களது ஊழியர் லேசான காயம்பட்டு அதைத் தாங்க இயலாமல் உடல் சிதறி இறைவனடி சேர்ந்தார்” என்று செய்தி வாசித்தது அந்தத் தொலைக்காட்சி நிறுவனம்.

அழுது ஓய்ந்திருந்த அம்மாவைக் கட்டிப்பிடித்துக் கெஞ்சினான் மகன். “ஐயாம் ஸாரி மம்மி! நான் டிபன் பாக்ஸ்ல பட்டாசு வெச்சதாலத்தானே அப்பா செத்துப் போனாரு”.

– நூருத்தீன்

இந்நேரம்.காம்-ல் 20 மார்ச் 2015 அன்று வெளியான கட்டுரை

அவ்வப்போது – தொடர் கட்டுரைகள்

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

Related Articles

Leave a Comment