பல் நுட்பம்

by நூருத்தீன்

‘இது பல்லைத் துலக்கும் பிரஷ்,’ என்று அறிமுகப்படுத்தினார் தாமஸ் ஸெர்வால் (Thomas Serval). ஆ-வென்று வாய் பிளந்து பார்த்தது குழுமியிருந்த கூட்டம்.

அட! இது டூத்பிரஷ் மனித இனத்திற்கு அறிவிக்கப்பட்ட பண்டைய கால வரலாறு. அதைக் கண்டுபிடித்தவர் பெயர் தாமஸா? என்றெல்லாம் தோன்ற ஆரம்பித்தால், ‘ஸாரி!’ இது புத்தம் புதுசான இந்த 2014ஆம் ஆண்டின் ஆறாம் தேதி அறிவிப்பு.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் பெரும் தொழில் நகரம். தொழிலாகப்பட்டது வெரி ஸிம்பிள் – மது, மாது, சூது. இந்தப் புனித நகரில் பல நிறுவனங்கள் வந்து ஸெமினார், கான்ஃபிரன்ஸ் என்று நடத்திக்கொள்வது வாடிக்கை. ஒவ்வோர் ஆண்டும் International CES (Consumer Electronic Show) எனப்படும் நுகர்வோர் மின்சாதனங்கள் காட்சி நடைபெறுவதற்கு இந்த நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டு, உலகில் உள்ள பல நாட்டிலிருந்தும் அவரவரும் தத்தம் புது கண்டுபிடிப்புகளை இந்தக் காட்சியில் கலந்துகொண்டு அறிமுகப்படுத்துவர். அப்படியான இந்த ஆண்டின் காட்சியில்தான் தன்னுடைய டூத்பிரஷ்ஷைப் பெருமையுடன் காட்டினார் தாமஸ்.

தாமஸ் ஸெர்வால் காட்டுவாசி, இப்பொழுதுதான் வேப்பங்குச்சியிலிருந்து பற்பசைக்கு மாறியிருக்கிறார் என்றெல்லாம் அபத்தமாக நினைத்துவிட முடியாது. அவர் பிரான்சு நாட்டுவாசி. மைக்ரோஸாஃப்ட், கூகுள் போன்ற ஜாம்பவான்களிடம் பணியாற்றியவர். துணைக்கு லாயிக் ஸெஸ்ஸாட் (Loic Cessat) என்பவரைக் கூட்டு சேர்த்துக்கொண்டு, கொலிப்ரி (Kolibree) என்ற நிறுவனத்தைத் துவக்கி, அது Kolibree electric toothbrush-ஐ கண்டுபிடித்து, உருவாக்கி, டூத்பிரஷ் லாஸ் வேகாஸில் அறிமுகம்.

உற்று நோக்கினால் பேட்டரி, மின்சக்தி போன்றவற்றில் செயல்படும் டூத்பிரஷ்ஷும் என்பதேகூட பழசுதான். பிறகு இதில் அப்படி என்னதான் விசேஷம் என்று உலக மின்சாதனங்கள் காட்சியில் இதை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்?

{youtube}wfah7SjpvUI|600|450|0{/youtube}

மென்பொருள்! இந்த டூத்பிரஷ்ஷில் பொதிந்திருக்கும் மென்பொருள் (software) நாம் பல் துலக்கும்போது எப்படித் துலுக்குகிறோம், எவ்வளவு நேரம் துலக்குகிறோம், எந்தெந்த பற்கள் எந்தளவு சுத்தமாயின, பற்களின் காரையை (tartar) எவ்வளவு பெயர்த்து எடுத்திருக்கிறோம் என்றெல்லாம் தகவல்களைச் சேகரித்துக் கொள்கிறது. நாம் வாயைக் கொப்பளித்து துப்பியபின், டூத்பிரஷ்ஷிலுள்ள தகவல்கள் ப்ளூடூத் எனப்படும் கம்பியற்ற தகவல் மொழியாய் நம்மிடமுள்ள ஆன்ட்ராய்ட், ஐஃபோன் போன்ற ஸ்மார்ட்ஃபோன்களுக்குச் சென்றுவிடும். ஃபோன்களில் உள்ள மென்பொருள் நம் பற்களின் சுத்த நிலை என்னவென்று சுத்தபத்தமாய்த் தெரிவித்துவிடும். பிறகு?

‘அதைப் பார்த்து நம்முடைய பல் துலக்கும் விதத்தை மேம்படுத்தலாம். தகவல்களை நம்முடைய பல் மருத்துவருக்கு அனுப்பிவிடலாம். நம் பற்களின் பெருமையை ஃபேஸ்புக் இத்தியாதிகளில் பரப்பிக் கொள்ளலாம்…’ என்று இதன் பிரதாபங்களைப் பல் தெரியப் பட்டியலிடுகிறார் தாமஸ். இவைபோக ஸ்மார்ட்போன்களில் வந்தமரும் நமது பற்களின் தகவல்களைச் சிறப்பாக, விதவிதமாக உபயோகித்துக் கொள்ளும் வகையில் உலகெங்கிலும் உள்ள மென்பொருள் விற்பன்னர்கள் எத்தகு மென்பொருள் வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளலாம் என்கிறார் அவர். ஃபேஸ்புக்கில் நம் பல் பொருத்தம் கண்டு திருமணப் பொருத்தமே கூட அமையக்கூடும். யார் கண்டது?

விலை? 99 டாலர்கள் துவங்கி 200 வரை மட்டுமே. வரிகள் தனி. ஸ்மார்ட்ஃபோனின் விலையை இதில் சேர்க்கக்கூடாது.

அட்டகாசம்! மேல்நாட்டுக்காரன் நாகரீகத்தின் உச்சாணிக்குப் போறான்யா என்று பாராட்டத் தோன்றினால் மற்றொன்றையும் யோசித்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது. காரணம், “ஒய்யாரக் கொண்டையாம் தாழம் பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்” என்ற சொல்வடை.

உடலின் மேல் பாகத்தில் அமைந்திருக்கும் ஒரு வாய். அதிலுள்ள பற்களைத் தூய்மைப்படுத்த எப்படியெல்லாம் கவலை? இப்படியெல்லாம் கண்டுபிடிப்பு! உடலின் கீழ்பாகத்தில் உள்ளது மற்றொரு வாய். அதைச் சுத்தப்படுத்துவதும் ஆக முக்கியமில்லையா? கொடுமை யாதெனில் அதைப் பற்றிய அவர்களது அலட்சியம்.

நம் நாட்டில் என்னதான் தண்ணீர் பஞ்சம் என்றாலும் அந்த விஷயத்தில் நம் மக்களுக்கு சுத்த உணர்வு மிக அதிகம். மேல்நாட்டுக்காரர்களுக்கோ இயற்கை உபாதையைக் கழித்தபின் தப்பித்தவறிகூட தண்ணீர் சரிப்படாது. விரலுக்கு சளி பிடித்துக்கொள்ளும். எனவே சரட், சரட்டென்று கிழித்து, காகிதம்தான் அவர்களுக்கு எல்லாம். இதில் என்ன சுத்தம்? எப்படித் தூய்மை? இதன் சுத்த அளவை அறிந்துகொள்ள அவர்கள் ஏதாவது மின்நுட்பக் கருவி கண்டுபிடிக்கக்கூடாதோ?

இப்போதைக்கு ஸ்மார்ட்ஃபோன் மென்பொருள் இல்லாமலே சொல்லி விடலாம். அந்தத் தகவல்கள் நாறும்!

– நூருத்தீன்

இந்நேரம்.காம்-ல் 13 ஜனவரி 2014 அன்று வெளியான கட்டுரை

அவ்வப்போது – தொடர் கட்டுரைகள்

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

Related Articles

Leave a Comment