ஜனவரி மாதத்தின் புதன்கிழமை இரவொன்றில் துப்பாக்கி, பலவித கனரக ஆயுதங்களுடன் முஹம்மது நயீமின் வீட்டை நோக்கிப் பரபரவென்று சென்றது
அமெரிக்கர்களின் தலைமையிலான சர்வதேசப் படை.
அனைத்து நாட்டினர் படை என்பது கதாநாயகர்களுக்குத் துணைப்பாத்திரம்போல் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்ட இதர நாட்டு வீரர்கள் சிலரின் உள்ளடக்கம். தலைமை சர்வ வல்லமை பொருந்திய அமெரிக்கா மட்டுமே. அவர்களுக்குத் தகவல் வந்திருந்தது, ‘முஹம்மது நயீமின் வீட்டில் இஸ்லாமியப் போராளிகள் ஒளிந்துள்ளனர்’.
வந்து சேர்ந்த வேகத்தில் சரமாரியாகச் சுட்டது படை. செத்துப்போனார் அந்த வீட்டில் இருந்த ஒருவர். சுட்ட புகையும் எழுந்த தூசும் அமிழ்ந்தபின் விளக்கடித்துக் கவனித்ததில் அவர் முஹம்மது நயீமின் மனைவி. முற்போக்கு அமெரிக்கா போலல்லாது, முஸ்லிம் ஆணுக்கு மனைவி என்பவர் பெண்பால் மட்டுமே. அமெரிக்கப் படை சுட்டதில், பொதுமக்களுள் ஒருவரான அந்தப் பெண் கொல்லப்பட்டு, சுற்றுப்பட்டு மக்களுக்கு அமெரிக்கா மீதான கோபம் மேலும் ஒருபடி அதிகமானது மட்டுமே மிச்சம். அதைத் புறங்கையால் தள்ளிவிட்டு, உள்ளங்கையால் நெற்றி வியர்வையைத் துடைத்தபடி வண்டிகளில் ஏறி முகாமுக்குத் திரும்பியது படை.
பகலில் பசுமாடு தெரியாதவர்கள் இரவில் எருமை மாட்டைத் தேடியலைந்த இந்தக் கதை நிகழ்ந்தது ஆப்கனில், இந்தியக் குடியரசு தினத்திற்கு முந்தைய நாள். அந்தக் காலகட்டத்தில் தமிழகத்தில் கமலின் திரைப்படம் சம்பந்தமாய் ஏக அமளிதுமளி. செய்திகளை மேய்ந்தபோது அப்படத்தின் முக்கியமான வசனமொன்று ‘அமெரிக்கர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்லமாட்டார்கள்’ என்று நற்சான்றிதழ் வழங்கியிருந்தது கண்ணில் பட்டது; சுட்டது. அதை அந்த ஆப்கன் மக்களுக்கு பஷ்தூன் மொழியில் பெயர்த்துச் சொல்லியிருந்தால் தங்களது தாய்மொழியில் எப்படித் திட்டியிருப்பார்கள் என்று தெரியவில்லை. காரணம், மேற்சொன்ன நிகழ்வு அண்டா பிரியாணிக்கு ஒரு பருக்கை பதம் மட்டுமே. முழுவதையும் பட்டியலிடுவதில் கூகுளின் பணி சிறப்பானது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏதோ திரைப்படம். ஏதோ பிரச்சினை. தனது திரைப்படத்தைக் குறித்து அரசியல்வாதி ஒருவர் கருத்தொன்றைக் கூறியிருந்தபோது, “எனக்கு எந்தளவு அரசியல் தெரியாதோ, அவருக்கு அந்தளவு சினிமா தெரியாது’ என்று அழகிய நாசூக்கான பதில் வெளிப்பட்டிருந்தது கமலிடமிருந்து. அதன் பின்னர் சர்வதேச அரசியலில் எப்பொழுது அவருக்கு ஆர்வமும் அக்கறையும் ஏற்பட்டு விஷய ஞானம் அதிகமானது என்பது தெரியவில்லை. ஆனால், அது நுனிப்புல் என்பதை நிரூபிக்க நூறு கோடியா?
செய்தொழில் நேர்த்தியும் தம் திறமையை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்த வேண்டும் என்ற முனைப்பும் ஒருவருக்கு இருப்பதில் பிழையில்லை. தவறே இல்லை. ஆனால் கதைக்கான கரு இத்தன்மையது என்றால், தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்று அறிவித்துவிட்டு, ஆப்கனில் சகட்டுமேனிக்குப் பொதுமக்களைக் கொன்றுவிட்டு, collateral damage என்ற பதத்தால் just like that வர்ணித்துவிட்டு. மனித உயிருக்கு நட்டஈடாக இந்திய மதிப்புக்கு இலட்ச ரூபாயை விட்டெறியும் அவலம் போன்றவற்றை அறிய, கமல் நிறைய உள்புகுந்து வாசிக்க வேண்டும்.
அதற்கான அவகாசம் இல்லை, பொறுமை குறைவு, வணிகரீதியிலான சங்கடங்கள் பல எனில், கமல் ஜாக்கி சானைப் பின்பற்றலாம். மனுசனுக்குச் சிரித்த முகம். சிக்கலற்ற வெள்ளந்தி கதைகள்.
இதெல்லாம் இருக்கட்டும். நண்பரொருவர் சுட்டிக் காட்டியது நினைவுக்கு வருகிறது. கட்டிய மனைவிக்குக் கணவன் முஸ்லிம் என்பது டிடெக்டிவ் வேவு பார்த்த பிறகுதான் தெரிய வருகிறது எனில் நாயகன் ‘கத்னா’ செய்யாத முஸ்லிமா?
விஸ்வரூபம் திரைக் கதையின் நேர்த்திக்கு இப்பருக்கை பதம்.
-நூருத்தீன்
இந்நேரம்.காம்-ல் 12 பிப்ரவரி 2013 அன்று வெளியான கட்டுரை
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License