நொடி!

by நூருத்தீன்

மதியம் மணி 1:39. நேரம் சரியா என்று கண் இமைத்து சரி பார்ப்பதற்குள் ஒரு நொடி கடந்துவிட்டது. என்ன இது, நேரம் இவ்வளவு வேகமாக கடக்கிறது? அதுவும் ஒரே ஒரு நொடி!

நொண்டாமல் கொள்ளாமல் இவ்வளவு வேகமாகவா ஓடும் நொடி?

ஏன் கவலை? மீண்டும் ஒரு நொடி வராமலா போய்விடும் என்று தோன்றியது. வரும். ஆனால் அந்த அது வராதே!

அடுத்து சில நொடிகள் அந்தக் கவலையிலேயே கடந்தன. 1:39:00-லிருந்து 1:39:01-க்குள் பெரிதாக ஒன்றும் நடந்திருக்காது என்று கவலையின் முடிவில் சமாதானம் தோன்றியது.

அந்தச் சமாதானம் அடுத்த ஒரு நொடிகூட தாக்குப்பிடிக்கவில்லை. ஒன்றும் நடந்திருக்காது என்றால் எப்படி? உலகத்தின் மக்கள் தொகை எண்ணில் இரண்டரை அதிகரித்திருக்கும்! அந்த ஒரு நொடிக்குள் 4.3 குழந்தை பிறந்திருக்கும். அந்த அதே நொடியில் 1.8 பேர் செத்துப் போயிருப்பார்கள்.

ஒரு நொடியில் ஐந்தாவது குழந்தை எப்படி பத்தில் மூன்று பங்கு மட்டுமே பிறக்கும்? பிரசவ வலியினால் தாமதமாகியிருக்குமோ? இருக்கும். ஆனால் இரண்டில் ஒரு சாவு மட்டும் பத்தில் எட்டு பங்கு எப்படி? ஒருவேளை கொலை செய்யப்பட்டு, அந்த நொடியில் எட்டுப் பங்கு செத்துப்போய் குற்றுயிராகி இரண்டு பங்கு மட்டும் அடுத்த நொடி இறந்திருக்குமோ. சாத்தியம்.

புள்ளி விபர அபத்தத்தை ஒதுக்கிவிட்டு, கால்குலேட்டரில் கூட்டிக் கழித்துப் பார்த்தால் அந்த ஒரு நொடியில் அதிகமடைந்த மக்கள் தொகை 2.5.

இதுவே இப்படி என்றால் அந்த ஒரு நொடியில் புவியில் வேறு என்னென்ன மாற்றங்கள் சாத்தியம் என்ற கவலை வளர்ந்து அடுத்து பல நொடிகள் அச்சம் சூழ்ந்தது. கண்ணை இருட்டி, அடுத்து ஏதோ ஒரு நிமிடத்தில் ஏதோ ஒரு நொடியில் முழுதாகவோ அல்லது 80 சதமோ சாகப் போகிறோம் என்ற எண்ணம் தோன்றி நெஞ்சை அடைப்பதைப் போலிருந்தது. யாரிடமாவது சொல்லி ஆறுதல் தேடினால்தான் மூச்சு சீராகும்.

ஒரு நொடி நின்று நம் கவலையைக் கேட்க யாருக்கு அவகாசம் இருக்கிறது? தாட்சண்யத்திற்காகக் காது கொடுத்தாலும் சாகடிக்கிறான் என்று மனத்தினுள் திட்டுவார்கள். முகநூலில் சொல்லலாம். அந்த யோசனை தோன்றியதுமே மூளையின் ஏதோ ஒரு கோடியில் உற்சாகம் பிறந்தது.

அங்கெல்லாம் நாளும் பொழுதும் நொடியுமாக எந்தக் கவலையுமின்றி எவ்வளவு உற்சாகமாக ரகளை! ஆயுளின் நொடி, நொடிக்கு நொடி காலாவதியாவதைப் பற்றி யாருக்காவது சுய கவலை உண்டா? எல்லாம் பொது நலம்; பொது கவலை என்ற பெயரில், உறக்கமின்றி அவர்களது இரவெல்லாம் பகல் என்று ஜமாய்க்கிறார்கள்.

அடுத்த சில நொடிகளில் இதை அங்கு இட வேண்டும். லைக்கிட்டு, கமெண்ட்டில் ஆறுதல் தேடி வரும். அதான் சரி!

– நூருத்தீன்

இந்நேரம்.காம்-ல் 22 ஜனவரி 2015 அன்று வெளியான கட்டுரை

அவ்வப்போது – தொடர் கட்டுரைகள்

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

Related Articles

Leave a Comment