முந்தாநாள் இரவு
எப்பவும் போல் தொடங்கிய எடக்கு மடக்கு பேச்சு அன்று சற்று ரசாபாசமாகிவிட்டது.
கோடை மழைபோல்
கொட்டும் கண்ணீருடன் மனைவி புலம்பினாள், “கட்டிக்கிட்டு பத்து வருஷமாச்சு. ஒரு குன்றுமணி தங்கத்துக்கு வக்கில்லே. என்னத்தப் பெருசா என் மேல பாசம், காதல்னு பைசாவுக்குப் பிரயோசனமில்லாத வெத்து வார்த்தை?”
“இப்ப சொல்றேன் கேட்டுக்கோ. நீ மட்டும் எனக்கு தங்கம்னு ஒரு மூக்குத்தியாவது கண்ணுல காட்டிடு. நான் ஒனக்கு அம்பதாயிரம் பணம் தர்ரேன். பந்தயம்யா.”
கணவனது ரோஷ நரம்பை அது சரியாகத் தாக்கி மீட்டியது. “தோக்கப்போறே நீயி” என்று கத்திவிட்டு புரண்டு படுத்துக் கொண்டான்.
“பார்ப்போம்” என்று மூக்கை உறிஞ்சி தலையணையில் தேய்த்துவிட்டு அவள் தரையில் படுத்துக் கொண்டாள்.
நேற்று பகல்
“டேய்! அம்பதாயிரம் அவசரமா வேணும். நாளைக்குத் தந்துடுவேன்” என்று நண்பனின் ஆபீஸில் அமர்ந்திருந்தான்.
“உடனே எப்படிடா? அதுவும் நாளைக்கே எப்படித் தருவே?”
நடந்த ரகளையைச் சொன்னான். “தோக்கப்போறாடா. அந்த ஐம்பதாயிரம் எனக்கு. உனக்கு கடன் ரிட்டர்ன்.”
பால்ய சிநேகம் பணம் கொடுத்தது. “எண்ணிப் பார்த்துக்கோ” என்று ஏடிஎம்-லிருந்து எடுத்துக் கொடுத்தான்.
“டேய், நீ நண்பேன்டா!”
நேற்று இரவு
“இந்தா பிரிச்சுப் பாரு” என்று கிஃப்ட் தாள் சுற்றப்பட்ட டப்பாவை நீட்டினான்.
கோபம் தணியாமல், “என்னாது?” என்றாள்.
“பிரிச்சுப் பாரு.”
முகத்தைத் திருப்பாமல் அதை வாங்கி திறந்து பார்க்க, வளையல்.
“தங்க வளையல். ஒரிஜினல் தங்கம். இரண்டேகால் பவுன். வேணும்னா உரசிப் பார்த்துக்கோ.”
அத்தனைக் கோபமும் எங்குதான் போனது என்று தெரியவில்லை. சடுதியில் அவளது முகத்தில் ஆயிரம் தாமரை மொட்டுகள் மலர்ந்தன.
படுக்கைக்குச் செல்லும் போது கொண்டு வந்து கொடுத்தாள். “நீங்க ஆம்பள சிங்கங்க. நான் தோத்துட்டேன். இந்தாங்க பந்தயப் பணம் அம்பதாயிரம்.”
இன்று பகல்
“இந்தாடா உன் பணம். டைம்லி ஹெல்ப். மறக்கவே மாட்டேன்.”
“அத்த விடு. உன் மனைவி காசுலேயே அவள் வாயை அடச்சுட்டே. கில்லாடி. ஹுண்டாய் வாங்கித் தந்தால்தான் ஆச்சுன்னு என் பொண்டாட்டி ஒரு மாசமா நச்சு. ஏதாச்சும் ஐடியா வெச்சிருக்கியா?”
“யோசிச்சு சொல்றேன். ஆபீஸுக்கு டைமாச்சு.”
இன்று இரவு
“அன்னிக்கு பிரச்சினையினால ஒரு விஷயத்தைச் சொல்ல மறந்துட்டேங்க” என்றாள் மனைவி.
கேள்வியுடன் பார்த்தவனிடம், “பக்கத்துத் தெருவுல இருக்குற உங்க அக்கவுண்டென்ட் முந்தாநாள் வந்திருந்தார். அவசரமா ஒரு வாரம் ஊருக்குப் போறதா சொன்னார்.”
ஐஃபோன் ஆறு ஆயிரம் விதமாய்க் காட்டிய கவர்ச்சியில் மயங்கி ஆபீஸில் ஐம்பதாயிரம் ரூபாய் வேண்டி லோன் அப்ளை செய்திருந்தான். என்னவோ மெதுவாக உடம்பு நடுங்குவதைப் போல் இருந்தது. “என்ன சொன்னார்?”
“செக்குத் தாள் தீர்ந்து போயிடுச்சாம். பணம் கொடுத்துட்டுப் போனார்.”
உடம்பு இப்பொழுது நிஜமாகவே நடுங்கியது. “எங்கேடி அது?”
“பந்தயத்துல தோத்திருப்பீங்கள்ளே. அதான் எடுத்துக்கிட்டேன்” என்றவளின் முகத்தில் அப்படியொரு அப்புராணித்தனம்
“அதான் ஜெயிச்சுட்டேனே” என்று அதிர்ந்து இரைந்தான்.
“அதான் அதுக்கு நானும் கொடுத்துட்டேனே”
“ஆஆஆஆஆ….” அலறினான். “அப்ப என் ஆபிஸ் பணம்?”
“அடப் போங்க நீங்க. அதான் இது” வளையலைக் காட்டினாள்.
– நூருத்தீன்
இந்நேரம்.காம்-ல் 23 செப்டம்பர் 2014 அன்று வெளியான கட்டுரை
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License