தன் முதலாளியைக் கொலை செய்தே தீருவது என்று முடிவெடுத்தான் சி. ராஜ். ‘எத்தனை நாள் உழைப்பைக் கொட்டியிருப்பேன். இரா, பகல் தெரியக்கூடாது என்று கடிகாரத்தைக் கழட்டி
வைத்துவிட்டு இந்நிறுவனத்திற்கு என் அர்ப்பணிப்பு எப்பேற்பட்டது. எல்லாம் சில நிமிடங்களில் முடிந்துவிட்டதே.’
துப்பறியும் கதைகளில் என்றைக்குமே வாசகர்களுக்கு ஈர்ப்பு. காரணம் அதில் ஒளிந்துள்ள சஸ்பென்ஸ், திருப்பம், புத்தியைத் தூண்டும் அம்சம், இதில் ஒன்று அல்லது ஒன்றுக்குமேல். மக்களுக்கு வரலாறு, இலக்கியம், அறிவியல், காதல், கவிதை என்று அவரவர் ரசனைக்கு ஏற்ப ஏதாவது ஒரு சப்ஜெக்ட் பிடித்துப்போகிறது. சிலருக்கு சமையல் குறிப்பு, ஜோதிடம், சினிமா துணுக்கு என்று ரசனையின் வட்டம் எளிமை.
இலக்கிய வாசகருக்கு அறிவியலின் மீதும் சமையல் கலை வாசகருக்கு நெப்போலியனின் படையெடுப்பின் மீதும் ஆர்வம் படர்கிறதோ இல்லையோ அனைவருக்கும் பொதுவாய் துப்பறியும் கதைகள் என்றால் இலேசான கிக்.
கூர்ந்து பார்த்தால் அந்தக் காலத்திலேயே ஆங்கில எழுத்தாளர்கள் கதைகளில் துப்பறிய ஆரம்பித்து கலக்கியிருக்கிறார்கள். 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்த அகதா கிறிஸ்டி (Agatha Christie) – இவர் காதல் கதைகள் எழுதியிருந்தாலும் அவருக்குப் பேர் புகழெல்லாம் crime writer என்பதில்தான். இவரது நாவல்களின் பிரதிகளின் விற்பனை பில்லியன் கணக்கில் என்று கின்னஸ் பெருமை தெரிவிக்கிறது. மி இல்லை. பி. பில்லியன்.
அகதாவுக்கும் முன்னர் 19ஆம் நூற்றாண்டின் மத்தியில் பிறந்தவர் ஸர் ஆர்தர் கோனன் டாயில் (Sir Arthur Conan Doyle). இவரை அறிந்த தமிழ் வாசகர்களைவிட, இவர் உருவாக்கிய ஹீரோ மிக அதிகமானவர்களிடம் பிரபலம். ஷெர்லாக் ஹோம்ஸ்.
தொடரும்முன் ஒரு குட்டிக்கதை. இது வாரப் பத்திரிகையின் ஒருபக்கக் கதைக்கு அனுப்பித் திரும்பி வந்ததல்ல என்பதால் அதைரியமடையாமல் படிக்கலாம்.
தன் முதலாளியைக் கொலை செய்தே தீருவது என்று முதல் பாராவில் முடிவெடுத்தானே சி. ராஜ், அவன் அவனுடைய முதலாளிக்கு வலது கரம், இடது கை, மூளை என்று அவரது உடலின் முக்கியமான அனைத்து அங்கங்களாக இருந்துவந்தவன். அநியாயத்திற்குப் புத்திசாலி.
அவரது நிறுவனத்தில் அவனுக்கு வேலை கிடைத்த போது மூழ்கும் நிலையில் இருந்த தொழில் அது. வெகு சில மாதங்களிலேயே சி. ராஜின் மேதைமையைப் புரிந்துகொண்ட முதலாளி, பக்கத்தில் நெருக்கிக்கொண்டார். புத்தி அவனது, முதல் இவரது என்று சில ஆண்டுகளிலேயே நிறுவனம் ஓஹோ என்றானது.
ஆனால் சில ஆண்டுகளில், என் மூளைப் பிச்சையில்தானே இவை அனைத்தும் என்று சி. ராஜின் புத்தி கோணங்கித்தனம் புரிய, திட்டமிட்டான். முதல் வரியில் பார்த்த கொலை திட்டம் அல்ல, இது களவுத் திட்டம்.பண நிர்வாகக் கணினி மென்பொருளில் சிறு திருத்தம். அது, யாருடைய சிந்தையையும் கண்ணையும் உறுத்தாமல், ஓட்டைக் குழாயிலிருந்து சொட்டுச் சொட்டாய் நீர் கசிவதுபோல், சில்லறை கசிந்தது. பெரு வெள்ளமாகி, பணம் கட்டுக் கட்டானது. வாழ்வு சொகுசாய் நகரும்போது, நல்லதொரு நாளில் எத்தன் ஆடிட்டர் ஒருவன் ஒழுகும் பைப்பைக் கண்டுபிடித்துவிட்டான்.
சி. ராஜின் முதலாளி, நிறுவனம் தொடங்கும் முன் சென்னை ஸால்ட் குவார்ட்டர்ஸில் கத்தி சுற்றித் திரிந்த பார்ட்டி. பழைய இயல்பு எட்டிப்பார்க்க, சி. ராஜை அழைத்தார்.
“ஆட்டயப் போட்டது அத்தனையும் கொட்டிவிட்டு ஒட்டுத் துணியுடன் ஓடிவிடு. இல்லே ஆட்டை அறுக்கிற மாதிரி உன் கழுத்தை அறுத்துறுவேன்” என்று சிறு எச்சரிக்கை. முடித்துக்கொண்டார்.
சுரண்டிய பணம் கண்ணை மறைக்க இப்பொழுதுதான் சி. ராஜ் முடிவெடுத்தான். முதலாளியையே போட்டுத் தள்ளினால்?
ஆனால் நிதானித்து யோசித்தபோது சரிவரும் என்று தோன்றவில்லை. அசட்டுத் தைரியம் என்று புத்திவேறு எச்சரித்தது. தலையைப் பிய்த்துக்கொண்டதில், இறுதியாக ஒன்று தோன்றியது – ‘சண்டைக்காரன் காலில் விழுவோம்’. அன்றிரவு அவரது வீட்டை அடைந்தான். தாழிடாத கதவு தட்டுவதற்குள் திறந்தது.
வரவேற்பறையில் டிவியைப் பார்த்துக்கொண்டு, இவனுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு அமர்ந்திருந்தார் முதலாளி. ‘இன்ன நகரில் குண்டுவெடிப்பு. இப்படியான ஒரு தீவிரவாதக் குழு காரணம்’ என்று பரபரப்பாய்ச் செய்தி. அதையெல்லாம் கவனிக்கும் நிலையில் சி. ராஜ் இல்லை. கண்ணை மூடிக்கொண்டு, வேகமாய்ச் சென்று அவரது காலில் தொபுக்கென்று விழுந்தான். பொத்தென்று அவனது முதுகில் விழுந்தார் அவர்.
‘இதென்ன பிண கனம்?’
எழுந்து அவரைத் திருப்பினால், எங்கெங்கும் ரத்தம். முதலாளியைக் குத்தியிருந்த கத்தி தடுமாற்றத்தில் சி. ராஜின் கையில் நழுவ, சப்தம் கேட்டு ஹாலுக்கு விரைந்த அழகிய சமையல்காரன் அகோரக் குரலில் கத்தினான்.
போலீஸ் வந்தது; விலங்கு மாட்டியது; விசாரித்தது; நிர்வாக மோசடி சி. ராஜின்மீது சுட்டுவிரல் நீட்டியது. ஆனால் சி. ராஜ் மட்டும் கத்திக்கொண்டிருந்தான். ‘நான் கொலையாளி இல்லை. நான் அவனில்லை.’
அதையெல்லாம் போலீஸ் காதில் போட்டுக்கொள்ளவில்லை. முட்டியை லத்தியால் விசாரித்துவிட்டு, சில நாளில் ஃபைலை மூடும்போது புலனாய்வில் ஈடுபட்டிருந்த இன்ஸ்பெக்டர் மேலதிகாரியிடம் கூறினார். “ஸார் சி. ராஜ் கொலை செய்யலேன்னு நினைக்கிறேன். விசாரனையை மீண்டும் ஆரம்பிக்கணும்.”
“ஏன்யா?”
அது இறுதியில்.
துப்பறியும் கதைகளின் நாயகன் படு சாமர்த்தியமாய் முடிச்சை அவிழ்ப்பது வாசகர்களுக்கு த்ரில். அது கதையுடன் சேர்த்து அந்த ஹீரோவுக்கு அந்தஸ்து ஏற்படுத்தித் தந்துவிடுகிறது. அவ்வகையில் நாயகன் ஷெர்லாக் ஹோம்ஸ் அசாதாரண புத்திசாலி.
ஆர்தர் கோனன், ஷெர்லாக் ஹோம்ஸை வைத்து ஒரு கலக்கு கலக்கியிருக்கிறார். ஆர்தருக்குத் தொழில் என்னவோ கண் மருத்துவம். ஆனால் அவரது காலத்தில் அனைவருக்கும் கண் பார்வை பெரும் நலமுடன் இருந்திருக்க வேண்டும்; எட்டிப்பார்க்க நோயாளி இல்லை. என்ன செய்வதென்று பொழுதைக் கழிக்க, எழுத ஆரம்பித்துவிட்டார். துப்பறியும் கதைகள் என்று களம் அமைத்துக்கொண்டு ஷெர்லாக் ஹோம்ஸை உருவாக்கிக் கூடவே அவருக்குத் துணையாய் ஜான் வாட்சன் என்றொரு பாத்திரம். ஜான் வாட்சனை டாக்டராக்கி ஷெர்லாக் ஹோம்ஸுடன் ஆர்தர் தாமும் கதையினுள் வலம் வந்திருக்கிறார்.
துப்பறிவாளர் ஷெர்லாக் ஹோம்ஸ் வாசகர்கள் மத்தியில் அடைந்த பிரபல்யத்தில், ஒரு கட்டத்தில் ‘போரடிக்கிறதே வரலாற்றுக் கதைகள் எழுதுவோம், இவரைக் கொன்று விடுவோம்’ என்று ஆசிரியர் ஆர்தர் நினைத்தபோது, அதற்கு முதல் எதிர்ப்பு கடிதமே அவருடைய அம்மாவிடமிருந்துதான்.
“அப்படி நீ செய்ய மாட்டாய்; செய்ய முடியாது; செய்யக் கூடாது” என்று கண்டித்தது கடிதம். ஆயினும் ஷெர்லாக்கைச் சாகடித்தார் ஆர்தர். அவ்வளவுதான். வாசகர்கள் மத்தியில் எழுந்த கூக்குரலையும் கண்டனத்தையும் பார்த்துவிட்டு, ஒரு சாக்குச் சொல்லி அடுத்த நாவலில் அவர் ஷெர்லாக்கை உயிர்பித்ததும்தான் சப்தம் அடங்கி வாசகர்களுக்கு மூச்சு வந்தது.
இந்த இரு பாத்திரங்களைப்போல் தமிழில் சுஜாதாவுக்கு கணேஷ், வஸந்த். சுஜாதாவின் புதின வெற்றியில் இந்த இருவரின் பங்கும் கனிசம். அவருக்கு வயதானபோதும், அவருடைய பிற்காலக் கதைகளில் கணேஷ், வஸந்த் இருவரையும் முதுமை தாக்காமல் நடக்கவிட, சுஜாதாவின் பழைய வாசகர்களுக்கு அது சற்று வினோத வாசிப்பு அனுபவம்.
துப்பறியும் சாமர்த்தியம் எளிய வாசகனுக்கும் ராட்டிணத்தில் சுற்றிய ஓர் உற்சாகம் அளிக்கிறது. எத்தகைய குற்றமாக இருந்தாலும் நம் போலீஸ் தோண்டித் துருவிக் கண்டுபிடித்துவிடும் என்பது அவனுக்குள் குத்துமதிப்பான ஒரு பொது நம்பிக்கை. அதெல்லாம் இனி கதையோடுதான் போலிருக்கிறது.
இப்பொழுதெல்லாம் நிஜ வாழ்க்கையில் துப்பறியும் சாமர்த்தியசாலிகள் தொலைந்துவிட்டார்களோ, குறைந்துவிட்டார்களோ என்ற சந்தேகத்தைத் தவிர்க்க முடியவில்லை. இதற்கான காரணம் அரசியல் விரசத்தின் உச்சம் என்பதைத்தவிர வேறொன்று அசாத்தியம் என்கிறது அறிவு. பின்னே?
குரூரக் குற்றச்செயல்களுக்கு நாட்டில் குறைவில்லை. அவை நடைபெறும்போதெல்லாம், செய்தியை முந்திக்கொண்டு, குற்றவாளிகள் என்று ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களைச் சுட்டிக்கொண்டு விரல் நீண்டு வருவது தயக்கமின்றி நடைபெறுகிறது. ஊடகம், காவல் துறை, அரசு என்று சொல்லி வைத்தாற்போல் அனைவர் மத்தியிலும் இப்பொழுது இது பிரதானமாக உள்ளது கவலைக்குரிய உண்மை. யாராக இருந்தாலும் சரி; துப்பறிந்து உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடிப்போம்; தண்டனை பெற்றுத் தருவோம் என்ற எளிய அடிப்படையெல்லாம் இனி அபத்தக் கற்பனையோ என்று அச்சமேற்படுகிறது.
மாபாதகக் குற்றச்செயல்களில் எவ்வளவு நுணுக்கமாய்ப் புலனாய வேண்டும். தடயம் தேடி, ஆராய்ந்து, நூல் பிடித்து, குற்றத்தின் மூளையை எட்ட வேண்டும்? அதற்கெல்லாம் யாரும் கவனமுடன் செயல்படுவதாகவோ பொறுமையுடன் புலனாய்வதாகவோ தெரியவில்லை. ஏதோ முன்முடிவுடன் காரியங்கள் நடைபெறுவதைப்போன்ற தோற்றம் கவனத்தைத் தாக்குகிறது. கூடவே அச்சத்திற்குரிய மற்றொரு விஷயமும் ஒன்று உண்டு.
துப்பறியம் கதைகளில் கற்பனை நாயகர்கள் புகழ்பெற்றிருந்ததைப் போல், இன்று நிஜங்களில் கற்பனை வில்லன்கள் உருவாக்கப்படும் பேரபாயம் அதிகரித்துள்ளது. அதை ஊடகங்கள் தங்களது வர்த்தகத்திற்காகக் கடைபரப்பி, மக்களிடம் போட்டுத்தாக்கி, மெய் என்ன என்று அறிந்து சொல்லும் அக்கறையில் இன்று பெரும்பான்மையினரிடம் பேரலட்சியம்.
பரந்து விரிந்த காவல் அமைப்பில் ஒளிந்துள்ள சாதுர்ய துப்பறிவாளர் எவரேனும் ஒருவர், தப்பித்தவறி துப்பு துலக்கி, நேர்மையுடன் உண்மையைக் கண்டுபிடித்துவிட்டால், ஏதும் பெரிதாய் மாற்றம் நிகழ்ந்து விடுவதில்லை. அந்த உண்மை உரைக்கப்படும்முன் மக்கள் வேறு பொய்யுடன் மெய்மறந்திருப்பர். அல்லது துப்பறிவாளர் துப்புரவு செய்யப்பட்டிருப்பார்.
நம் கதையைப் பார்ப்போம்.
“ஸார் சி. ராஜ் கொலை செய்யலேன்னு நான் நம்பறேன். விசாரனையை மீண்டும் ஆரம்பிக்கணும்.”
ஏன்யா?”
“சமையல்காரன் சொன்னது உதைக்குது.”
“என்ன?”
“விசாரனையின்போது, சமையலறையில் இறைச்சியை சமைத்துக்கொண்டிருந்தேன். ஹாலில் சப்தம் கேட்டதுன்னு சொன்னான்.”
“ஆமாம். அதுக்கு என்ன?”
“ஸார். அந்த முதலாளி சுத்த சைவம்.”
-நூருத்தீன்
இந்நேரம்.காம்-ல் 13 மார்ச் 2013 அன்று வெளியான கட்டுரை
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License