வளர்ப்புப் பிராணிகளுக்கு உரிமை அதிகமுள்ள நாட்டில் இருந்துகொண்டு அவன் ஏன் அப்படிச் செய்தான் என்று தெரியவில்லை. போலீஸ் கேட்டதற்கு, “கோபம்” என்று பதில்
சொல்லியிருக்கிறான் கெவின்.
நம்மூரில் வீட்டில் சிறு பிள்ளைகளைத் தனியே விட்டுச் செல்ல நேரிட்டால், யாரையாவது அழைத்து பிள்ளைகளின் துணைக்கு விட்டுச் செல்வதுபோல், அமெரிக்காவில் நாயைக் கவனித்து, பார்த்துக்கொள்ள மனிதர்களை அமர்த்திக்கொள்கிறார்கள். சிலநாள் வெளியூருக்குச் செல்ல வேண்டும் போன்ற சந்தர்ப்பங்களில் இப்படி நடக்கும். Baby-sitting போல் dog-sitting.
“வேண்டுமானால் எங்கள் வீட்டிலேயே தங்கிக்கொள்ளலாம். என் வீடு மிக விசாலம். இன்னின்ன வசதியெல்லாம் உண்டு. உனக்குப் போரடிக்காமல் இத்தனை ப்ளூ ரே தகடுகள் என் தொகுப்பில் உள்ளன. துல்லியமாய் படம் பார்த்து மகிழ். தாராளமான சன்மானமும் தருவேன்” என்று கம்பெனிகள் தன் அருமை பெருமை சொல்லி வேலைக்கு ஆள் பிடிக்கும் அளவிற்கு, அலுவலகத்தில், நட்பு வட்டாரத்தில் மின்னஞ்சல் அனுப்பி நாய்க்கு ஆயா வேலை செய்ய ஆள் தேடுவது அமெரிக்காவில் சகஜமான செயல்.
நாய் என்றாலே நாக்கைத் தொங்கவிட்டு, கோர உருவில், ஜென்மப் பகையாளி போல் அது தம்மைத் துரத்தத் தயாராக நிற்பதைத் தெருவில் பார்த்து பழக்கப்பட்டவர்களுக்கு இந்த வெள்ளைக்காரர்கள் நாயைத் தூக்கி மடியில் வைத்துக் கொஞ்சி, குழந்தைகளைவிட பாசமாக விளையாடுவதைக் கற்பனை செய்வது சற்று கஷ்டம். பத்திரிகைகளில் நடிகைகளின் பேட்டியில், போட்டோவில் பார்த்துள்ளவர்களுக்குப் பிரமிப்பு குறைவாக இருக்கலாம்.
கொஞ்சுவதாவது பரவாயில்லை. பஸ்ஸில், பார்க்கில், பொது இடங்களில் சில காட்சிகள் மிக சகஜம். கால் மடக்கி தன் இயல்பான போஸில் அமர்ந்திருக்கும் அந்த ஜந்து, அப்பொழுதுதான் தன் மல, ஜல துவாரங்களை நக்கிவிட்டு நிமிர்ந்திருக்கும். எவ்வித அருவருப்புமின்றி, “ஸோ க்யூட்! வாட்ஸ் ஹர் நேம்” என்று அதன் உரிமையாளரிடம் கேட்டுக்கொண்டே, அருகில் அமர்ந்திருப்பவர் அந்த நாயின் முகத்தை தம் முகத்துடன் வைத்து உரசி மகிழ்ந்து, லிப் கிஸ் ரேஞ்சிற்கு வாயுடன் வாய் உரசுவதைப் பார்க்கும்போது ஏற்படும் உணர்வு இருக்கிறதே, நீங்கள் உண்ட ஆகாரம் உங்களது தொண்டைக்கு வரவில்லையென்றால், நீங்கள் அவரைப்போல் ஒருவன்.
அப்பா, அம்மாவையெல்லாம் ஓய்வுற்றவர் விடுதியில் விட்டுவிட்டு, தனிமை போரடிக்காமல் இருக்க அவர்களுக்கு வீட்டில் நாய் தேவைப்படுகிறது. தப்பித்தவறி திருமணம் புரிந்துகொண்டாலும் பிள்ளைகளைப் பெற்று பராமரித்து வளர்ப்பதை நினைத்து நிறைய கணக்குப் போடுகிறார்கள். அதைவிட நாய் வளர்ப்பு அவர்களுக்குச் சல்லிசாக இருக்கிறது. நம் ஊர் கணக்கில் பார்த்தால் அந்த செலவிற்கு இரண்டு பிள்ளைகளைப் படிக்கவைத்து, இலவச சத்துணவை நம்பாமல் நாமே உணவு, உடை வழங்கவும் முடியும்.
வெள்ளைக்கார தொரையின் நாய்கள் பொறை, பிஸ்கட்டில் தன்னிறைவு அடைவதில்லை. ஸ்டோர்களில் அவற்றின் உணவிற்கென பலவகை ஐட்டங்கள், தனி இடைகழிகளில் நிறைந்துள்ளன(Aisle என்பதை அகராதி அப்படித்தான் தமிழில் பெயர்க்கிறது). குழந்தைகளின் பால் பவுடர் வகைகளைவிட அதிகமான எண்ணிக்கையில் ஒவ்வொரு உணவு வகையும் அடுக்கி வைத்து லாபம் பார்க்கிறார்கள். ஏனோ தானோவென்று வாங்கிப் போட்டு, நாய்க்கு ‘வயிற்றால’ போய் ஏதாவது ஆகிவிட்டால் தொலைந்தது. அரசாங்கத்திற்குப் பதில் சொல்ல நாய் உரிமையாளர் கோர்ட்டுக்கு நாயாய் அலைய வேண்டியதுதான். ஆபிஸில், லீவ் பர்மிஷன் என்று கேட்டு, காரணம் தெரிந்தால் நாயைவிடக் கேவலமாய்ப் பார்க்கப்படும் பார்வைகளுக்கு இலக்காக வேண்டும்.
20 வயது கெவினின் பாட்டி, பேரனிடம் தன் குட்டி நாயைப் பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். பிரிட்ஜில் இருந்த உணவைத் தயார் செய்ய, சூட்டடுப்பை (oven) 350 டிகிரிக்கு செட் செய்துவிட்டு சென்றவனை, நாய் செல்லமாய்க் கடித்துவிட்டது. வந்தக் கோபத்தில் அதை சரமாரியாக உதைத்து, சூட்டடுப்பினுள் தூக்கி வைத்துவிட்டான் கெவின். நாய் முழுவதும் வெந்து கபாப் ஆவதற்குள் யதேச்சையாய் வீட்டிற்கு வந்திருக்கிறான் கெவினின் சகோதரன். அந்த அரவம்கேட்டு, நல்லவேளையாக அவசரமாய் நாயைச் சூட்டடுப்பிலிருந்து வெளியே எடுத்துவிட்டான் கெவின். வெந்தும் வேகாத நிலையில் நாய் உயிர் பிழைத்துவிட்டாலும் கெவினை மிருகவதை குற்றத்தின் அடிப்படையில் ஜெயிலுக்குள் வைத்துவிட்டார்கள். பத்தாயிரம் டாலர் ஜாமீன் தொகை விதிக்கப்பட்டுள்ளது. நாய் சந்தையில் என்ன விலை என்று தெரியவில்லை.
இச்செய்தியை இணையத்தில் படிக்கும்போது, மற்றொரு செய்தியும் கண்ணில்பட்டது. ஒரு நாட்டினுள் அந்நியப் படை நுழைந்து அங்குள்ள போராளிகளுக்கு எதிராகப் போர் நடக்கிறதாம். வெள்ளைக்கார அந்நியப் படைகளுக்கு ஆதரவாய்ப் பின்னூட்டங்கள் நிறைந்திருந்தன. ‘!@#$%’ என்று வாக்கியம் துவங்கியிருந்தது. ஆபாசமாய்த் திட்டுகிறார்கள் என்று புரிந்துகொள்ள வேண்டும். தொடர்ந்த வாக்கியம், ‘kill those dogs’ என்றது.
-நூருத்தீன்
இந்நேரம்.காம்-ல் 24 ஜனவரி 2013 அன்று வெளியான கட்டுரை
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License