அது ஓர் அழகிய பொற்காலம் – 5

by நூருத்தீன்

வளம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டினாலும் மிகக் கண்டிப்பாய் அதை உதறித்தள்ளிவிட்டு, இவ்வுலகின் மீதுள்ள பற்றை முழுக்கத் துடைத்து

எறிந்துவிட்டு வாழ்ந்த நபித் தோழர்கள், கலீஃபா உமரின் ஆட்சிக்காலத்தில் பலர். ஆனால் அந்தத் தோழர்களின் மனைவியருக்குத்தான் சில சமயங்களில் அது சகிக்க முடியாமல் போனது. அபூ உபைதா இப்னுல் ஜர்ராஹ்வின் (ரலி) மனைவி ஆதங்கத்துடன்  கலீஃபா உமரிடம் நேரடியாகவே கொட்டித் தீர்த்ததை இத் தொடரின் முதல் அத்தியாயத்திலேயே பார்த்தோம். அதைப்போல் முஆத் இப்னு ஜபலின் வீட்டிலும் ஒரு நிகழ்வு.

பனூ கிலாப் கோத்திரத்தாரிடம் ஸகாத் வரியை வசூல் செய்ய முஆதை அனுப்பிவைத்தார் உமர். அவரும் கிளம்பிச்சென்றார். கலீஃபாவின் தூதுவர் வந்திருக்கிறார் என்றதும் ஸகாத் செலுத்த வேண்டியவர்களெல்லாம் அள்ளி அள்ளி அளித்தார்கள். அவற்றைச் சேகரித்து ஸகாத் பெற உரிமையானவர்களுக்கு முறைப்படி விநியோகித்தார் முஆத். வந்த பணி திருப்தியுடன் நிறைவேற, தமக்கு இடப்பட்ட கட்டளைகளைத் திறம்பட முடித்து, பயணத்திலிருந்து திரும்பினார் முஆத். கழுத்தில் குதிரைச் சேணக் கம்பளி; வெறுங்கை. அதை வீசிக்கொண்டு அவர் வீடு வந்துசேர, அவரின் மனைவி திகைப்படைந்து விட்டார்.

“என்ன இது? ஆளுநருக்கு அழகா இது? தங்களது நீண்ட பயணத்துக்குக் கிடைத்த பரிசு இதுதானா? தங்களது பணிக்குரிய கூலி எங்கே?”

இங்குச் சற்றுக் கவனிக்க வேண்டும்; கிம்பளமெல்லாம் இல்லை! செய்த அரசுப் பணிக்குச் சம்பளமாகவோ, சன்மானமாகவோ கிடைக்கப்பெறும் பொருள்களைத்தான் அவருடைய மனைவி எதிர்பார்த்திருந்தார். நியாயமான எதிர்பார்ப்பு! ஆனால் அப்படி எதுவுமேயின்றி ‘வீசிய கை, வெறுங்கையோடு’ கணவன் வீடு திரும்பி வந்தால்?

“ஓ! அதுவா? என்னைக் கண்காணிப்பவர் ஒருவர் இருந்தார். அவர் என்னுடைய நடவடிக்கைகளை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்தார். அதனால் யாரிடமும் நான் எந்தவித சன்மானமும் பெறவில்லை”

கணவர் சொன்னது உட்பொருள் பொதித்த பதில். கண்காணிப்பாளன் அல்லாஹ்தானே! ஆனால் அதை உணரும் நிலையில் இல்லை அவர் மனைவி. மிகவும் கோபமேற்பட்டது அவருக்கு. சன்மானம், பொருள் என்பதெல்லாம் இப்பொழுது இரண்டாம் பட்சமாகிவிட, ‘என்ன? … என் கணவர்மேல் சந்தேகமா?’ என்ற கோபம்.

“அது எப்படி? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) – அவருக்குத் தங்கள்மேல் இருந்த நம்பிக்கை என்ன? முதல் கலீஃபா அபூபக்ரு (ரலி)! அவருக்குத் தங்கள்மேல் இருந்த நம்பிக்கை என்ன? உங்களை நடத்திய விதமென்ன? ஆனால் இப்பொழுது இந்த உமர்? இவர் மட்டும் உங்களுடன் கண்காணிப்பாளைரை அனுப்பினாரோ?” என்று கொதித்தார்!

அத்துடன் விடவில்லை, கலீஃபா உமருடைய இல்லத்திற்குக் கிளம்பிச் சென்று அவர் வீட்டுப் பெண்களிடம் இதை முறையிட்டார். உமருக்குச் செய்தி எட்டியது. கூப்பிட்டனுப்பினார் முஆதை.

“என்னய்யா இது புதுக் கதை? நான் என்றிலிருந்து உம்மைக் கண்காணிக்க ஆளனுப்பினேன்?”

“அமீருல் மூஃமினீன்! நீங்கள் அப்படி யாரையும் அனுப்பவில்லை. நெடும் பயணத்திலிருந்து திரும்பிய நான் கூலியோ பரிசோ எதுவுமே கொண்டு வராததால் ஏமாற்றமடைந்த என் மனைவியைச் சமாளிக்க வேறுவழி தெரியவில்லை. அதனால்தான் அப்படிச் சொன்னேன்.”

உளமாரச் சிரித்தார் உமர். சில பரிசுப் பொருள்களை அவருக்கு அளித்து, “இந்தாருங்கள். இதை எடுத்துச் சென்று உங்கள் மனைவிக்குப் பரிசளியுங்கள், மகிழ்வியுங்கள்.”

பெற்றுக் கொண்டு திரும்பினார் அந்தத் தோழர் – முஆத் பின் ஜபல் (ரலி).

முஆத் இப்படி என்றால் மற்றொரு நபித்தோழர் இருந்தார் – ஸயீத் இப்னு ஆமிர் (ரலி). அவரது வாழ்க்கையே நெகிழ்வூட்டும் தனி வரலாறு.

சிரியாவின் ஹிம்ஸ் பகுதியிலிருந்து பிரதிநிதிக்குழு ஒன்று மதீனாவிற்கு வந்திருந்தது. அனைவரும் உமர் (ரலி) அவர்களின் நம்பிக்கைக்கு உரியவர்கள். தமது கருவூலத்திலிருந்து உதவி வழங்க, ஹிம்ஸுப் பகுதியில் ஏழையாய் உள்ளவர்களின் பட்டியல் ஒன்றை அளிக்கும்படி அவர்களிடம் கேட்டார் உமர் (ரலி).

அடுத்த தேர்தலில் ஓட்டுக்காகவெல்லாம் இல்லாமல் உண்மையான இலவசம்! ஜகாத்தாகவும் வரியாகவும் பைத்துல்மாலில் சேரும் செல்வத்தைக் கொண்டு ஏழைகளை நிசமாகவே மேம்படுத்தும் இலவசம்!

பட்டியலைப் பார்த்தவரின் பார்வையில் ஒரு பெயர் விளங்கவில்லை. ”யார் இந்த ஸயீத்?” என்று கேட்டார். “எங்கள் அமீர்” என்றனர். அமீர் என்றால் அந்தப் பகுதியின் ஆளுநர் எனலாம்.

“என்ன, உங்கள் அமீர் ஏழையா?” என்ற உமரின் கேள்வியில் அதிர்ச்சி இருந்தது!.

“ஆமாம். அல்லாஹ்வின் மேல் ஆணையாக, பல நாட்கள் அவரது வீட்டு அடுக்களை நெருப்பின்றி இருப்பது எங்களுக்குத் தெரியும்” என்று அவர்கள் நிச்சயப்படுத்தினர். உமர் அழுதார்! மாநிலம் ஆளும் கவர்னர் ஏழையா? தடுக்க இயலாமல் உமர் அழுதார்!.

ஆயிரம் தீனார்கள் ஒரு பையில் கட்டி அவர்களிடம் கொடுத்து, “என்னுடைய ஸலாமை அவருக்குத் தெரிவியுங்கள். அமீருல் மூமினின் இந்தப் பணம் கொடுத்தார் என்று ஒப்படையுங்கள். அவரது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளச் சொல்லுங்கள்”.

குழு ஹிம்ஸ் வந்து சேர்ந்தது. பையைக் கொடுத்தார்கள். பிரித்துப் பார்த்தால் தீனார்கள். உரத்த குரலில், “இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்” என்றார் ஸயீத்.  மரணம் போன்ற பேரிடரின் போது முஸ்லிம்கள் வெளிப் படுத்தும் மனவுறுதிப் பிரகடனம். அதைக் கூறினார் ஸயீத் இப்னு ஆமிர் (ரலி).

அதைக் கேட்டு ஓடி வந்த ஸயீதின் மனைவி கேட்டார், “என்ன? கலீஃபா இறந்து விட்டார்களா?”

“அதை விடப் பெரிய சோகம்”.

“முஸ்லிம்களுக்குப் போரில் தோல்வியேதும் ஏற்பட்டுவிட்டதா?”

“அதை விடப் பெரிய இடர், ஒரு பேரிடர். என்னுடைய மறுமை வாழக்கையைக் கெடுத்து, என் வீட்டினுள் குழப்பத்தை ஏற்படுத்த வந்திருக்கிறது”.

“எனில் அதனை விட்டொழியுங்கள்” என்றார் மனைவி தீனார் பற்றி அறியாமல்.

“அப்படியானால் எனக்கு உதவுவாயா?”

மனைவி தலையாட்ட அனைத்து தீனார்களையும் ஒரு பையில் போட்டு நகரில் உள்ள ஏழைகளுக்கு அளித்து விட்டார்.

என்ன சொல்வது? போதாமையில் உள்ளதே போதும் என்று அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை நம்மால் முழுதும் உணர்ந்து கொள்ள முடியுமா எனத் தெரியவில்லை.

அது ஓர் அழகிய பொற்காலம்!

(ஒளிரும்)

-நூருத்தீன்

வெளியீடு: சமரசம் 16-31, ஜனவரி 2013

<<பகுதி 4>>  <<பகுதி 6>>

<<முகப்பு>>

Related Articles

Leave a Comment