அது ஓர் அழகிய பொற்காலம் – 8

by நூருத்தீன்

ஆளுநர்கள் குறித்து மக்கள் புகார் கூறினால் அதை உமர் (ரலி) எவ்விதம் கையாள்வார் என்பதைச் சென்ற அத்தியாயத்தில் பார்த்தோமில்லையா, அத்தகைய நிகழ்வுகளுள்

மேலும் சில.

நபித் தோழர் அபூ மூஸா அல் அஷ்அரி (ரலி) பஸ்ரா நகரின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தார். அவரது படையில் உரத்த குரலுடைய ஒருவர் இருந்தார். ஒலிபெருக்கி, நவீன சாதனங்கள் இல்லாத அக்காலத்தில் போர்க்களத்தில் உரத்த குரலுடையவரின் தேவை தனித்தேவை. தவிர அந்த மனிதர் எதிரிகளிடம் கடுமையாய்ப் போர் புரியக்கூடியவரும் கூட. ஒரு போரில் முஸ்லிம்கள் வெற்றியடைந்திருந்தார்கள். கைப்பற்றிய பொருள்களைப் பிரித்தளித்தார் அபூ மூஸா. அவ்வீரருக்கு உரிய பங்கும் சரியான அளவிலேயே அவருக்கு வழங்கப்பட்டது. ஆனால் தம்மிடம் உள்ள சிறப்புத் தகுதியின் அடிப்படையில் தமக்கு அதிகம் அளிக்கவேண்டும் என்று முறையிட்டார் அம்மனிதர்.

கண்டிப்பாய் மறுத்துவிட்டார் அபூ மூஸா அல் அஷ்அரி. வாதம் விவாதமாகி, ஒழுங்கு நடவடிக்கையாக அந்த மனிதருக்கு இருபது கசையடிகள், முடியை மழித்தல், என்று தண்டனை வழங்கினார் அபூ மூஸா. அந்த மனிதருக்குப் படு ரோஷமாகிவிட்டது. மழிக்கப்பட்ட தன்னுடைய உரோமங்களை எடுத்துக்கொண்டு, மெனக்கெட்டு மதீனாவுக்குப் பயணப்பட்டு உமரிடம் வந்த அந்த மனிதர் கலீஃபாவின் நெஞ்சிலேயே அதை விட்டெறிந்தார். உமருக்கும் அருகில் அமர்ந்திருந்த ஜரீர் இப்னு அப்துல்லாஹ்வுக்கும் அதிர்ச்சி.

“ஓ அமீருல் முஃமினீன். நான் உரத்த குரலுடையவன். எதிரிகளிடம் போரில் மிகவும் கடினமானவன்” என்று நடந்ததை விவரித்து, “எனக்கு இருபது கசையடி அளித்து, முடியை மழித்து… கேட்பதற்கு ஆளில்லை என்று நினைத்துவிட்டார் உங்கள் ஆளுநர்”

அனைத்தையும் கவனமாகக் கேட்டுக்கொண்ட உமர் அபூ மூஸாவுக்குக் கடிதம் எழுதினார். “அஸ்ஸலாமு அலைக்கும். உம்மைப் பற்றி இன்னார் இவ்விதம் கூறினார். மக்களுக்கு மத்தியில் நீர் அவருக்கு அவ்விதம் செய்திருந்தால், உம்மை மக்களுக்கு மத்தியில் அவர் பழி தீர்க்கட்டும். தனிமையில் செய்திருந்தால் அவர் அவ்விதம் உம்மைத் தனிமையில் பழி தீர்க்கட்டும்.”

இப்பொழுது ஆளுநருக்காக மக்கள் அம்மனிதரிடம் பரிந்துரைத்தனர். ஆனால் அவரோ, “யாருக்காகவும் நான் விட்டுத்தர மாட்டேன்” என்று அபூ மூஸாவை நெருங்கியவர், வானத்தை நோக்கித் தலையை உயர்த்தி, “யா அல்லாஹ். உன் பொருட்டு நான் இவரை விட்டுவிடுகிறேன்” என்றார்.

மற்றொரு நிகழ்வு –

உமர் தம் நண்பர்களுடன் பயணம் சென்று கொண்டிருந்தபோது, வேகவேகமாக அவரை வந்துச் சந்தித்தார் ஒரு மனிதர். கலீஃபாவைப் பார்த்து விம்மி அழுகை.

“ஏன்? என்னாயிற்று உனக்கு?” என்று விசாரித்தார் உமர்.

“அமீருல் மூஃமினீன்! நான் மதுபானம் அருந்திவிட்டேன். ஆளுநர் அபூ மூஸா எனக்கு தண்டனையளித்தார். ஆனால் அதிகப்படியாக என் முகத்தில் கருப்பு மை பூசி மக்கள் மத்தியில் நடக்க விட்டு, எவரும் என்னுடன் உறவாடக்கூடாது என்று அறிவித்துவிட்டார். எனக்கு வந்த கோபத்தில் வாளெடுத்து அபூ மூஸாவை வெட்ட நினைத்தேன். பிறகு வந்த வெறுப்பில் தங்களைச் சந்தித்து என்னை யாரும் அறியா நாட்டிற்கு அனுப்பிவிடுங்கள் என்று தங்களிடம் கோர வேண்டும், அல்லது இணைவைப்பு மலிந்துள்ளவர் உள்ள நாடாயினும் சரி அங்காவது சென்றுவிட வேண்டும் என்று கருதிவிட்டேன்” என்று முறையிட்டார்.

அழுதார் உமர். “எனக்கு எவ்வளவு கொட்டி கொடுத்தாலும் சரி. இணைவைப்பாளர்கள் உள்ள நாட்டிற்கு நீ சென்று வாழ அனுமதிக்கமாட்டேன். நீ மதுபானம் அருந்தியதைப்போல், இஸ்லாத்திற்கு முன் அஞ்ஞானத்தில் மற்றவரும் மதுபானம் அருந்தியவர்கள்தானே” என்றவர் அபூ மூஸாவுக்குக் கடிதம் எழுதினார்.

‘பனூ தமீம் குலத்தைச் சேரந்த இன்னார் என்னிடம் வந்து இவ்விதம் முறையிட்டார். எனது இக்கடிதம் கிடைத்ததும் நீர் செய்யவேண்டியது யாதெனில், மக்கள் இவரை ஒதுக்கி விலக்கக்கூடாது என்று அறிவியுங்கள். இவர் வருந்தி பாவமன்னிப்பு கோரினால் இவரது சாட்சியம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்’.

அந்த மனிதருக்கு துணிமணிகளும் இருநூறு திர்ஹமும் அளிக்கும்படி உத்தரவிட்டார் உமர்.

இந்த நிகழ்வுகளில் ஆளுநர்களின் குற்றம் என்பதுதான் என்ன? அதிகச் சலுகை கேட்டவர் தலைவருக்குக் கட்டுப்பட மறுத்ததால் இராணுவ ஒழுங்கு நடவடிக்கையும், மற்றவருக்குத் தண்டனையில் கடுமையும் காண்பிக்கப்பட்டிருக்கிறது. மக்களின் புகார்களுக்கு உமர் நடவடிக்கை எடுத்த ஆளுநர்களும் தகுதியிலும் தரத்திலும் சோடையானவர்கள் அல்ல. நபியவர்களின் தோழர்கள். அவர்களுடைய வரலாறே அவர்களது பெருமைக்குப் போதுமான சான்று. ஆயினும்,

பொதுமக்களைக் கையாளும்போது கடுந்தண்டனையிலும் எத்தகைய இலகுவான நடைமுறையைக் கையாளவேண்டும் என்று உமர் (ரலி) தனிக்கருத்து கொண்டிருந்தார். ஆட்சியில் உள்ளவர்கள் பொதுமக்களைத் தான்தோன்றித்தனமாக நடத்திவிடக்கூடாது என்பதில் மிகத் தீவிரமாக இருந்திருக்கிறார். அடிப்படை நோக்கமானது மக்களைச் சிறந்த இஸ்லாமிய குடிமக்களாக மாற்றவேண்டும் என்பதாக இருந்திருக்கிறது.

அதனால்தான் மக்களிடம், “நான் உங்களுக்கு ஆளுநர்களை நியமித்திருப்பது உங்களை அடித்து உதைக்கவோ, உங்களது செல்வங்களை அபகரிப்பதற்கோ அன்று. அவர்கள் உங்களிடம் வந்திருப்பது இஸ்லாமிய மார்க்கத்தையும் நபிவழியையும் கற்றுத் தருவதற்கே. இதற்கு மாறாய் யார் உங்களிடம் நடந்துகொள்கிறார்களோ, என்னிடம் முறையிடுங்கள், நான் அவர்களைக் கையாள்வேன்” என்று கூறியிருக்கிறார்.

ஹஜ் காலங்களில் உமர் (ரலி) மக்காவில் மக்களைச் சந்திப்பது வழக்கம். பல பகுதிகளிலிருந்தும் வந்துள்ள புனிதப் பயணிகளிடம் ஆளுநர்கள் மக்களுக்கு ஆற்றவேண்டிய கடமைகள், பணிகள் ஆகியவற்றைத் தெரிவித்துவிட்டு, “இதற்கு மாற்றமாய் யாரெல்லாம் நடத்தப்பட்டிருக்கிறீர்களோ அவர்கள் எழுந்து நிற்கலாம்” என்று அறிவிப்பார்.

அவ்விதமான கூட்டம் ஒன்றில் ஒருமுறை ஒருவர் எழுந்து நின்று, “அமீருல் மூஃமினீன்! தங்களின் ஆளுநர் எனக்கு நூறு கசையடி தண்டனை அளித்துள்ளார்” என்று முறையிட்டார்.

அங்கேயே குறிப்பிட்ட ஆளுநரை அழைத்து விசாரனை நடைபெற்றது. அந்த மனிதருக்கு அளிக்கப்பட்ட கசையடி தண்டனைக்கான காரணம் கலீஃபா உமருக்கு சரியானதாகப்படவில்லை. எனவே அந்த மனிதரிடம், “நீர் ஆளுநரை பதிலுக்குப் பதில் பழி தீர்த்துக்கொள்ளலாம்” என்று தீர்ப்பளித்துவிட்டார். அதைக்கேட்டு அங்கிருந்த அம்ரு இப்னுல் ஆஸுக்கு (ரலி) நியாயமான கவலையொன்று ஏற்பட்டது.

“அமீருல் மூஃமினீன். இதைத் தாங்கள் செய்தால், தங்களுக்குப் பிறகு இது வாடிக்கையாகிவிடுமே!”

இதை முன்மாதிரியாகக்கொண்டு பிற்காலத்தில் பொதுமக்கள் தங்களுக்கு உவப்பில்லாத ஆளுநர்களை இவ்விதம் தவறாகப் பழிதீர்த்துக்கொள்ள அது வழிவகை செய்துவிடுமே என்பது அவரது நியாயமான கவலை.

அதற்கு உமர், “தம்மிடம் இவ்விதம் செய்துகொள்ள அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே அனுமதியளித்து, அது நடைபெற்றுள்ள நிலையில், நான் எவ்விதம் அதைத் தவிர்த்துக்கொள்ள முடியும்?”

“எனில் பாதிக்கப்பட்ட மனிதரிடம் பரிகாரம் கேட்போம்” என்று அம்ரு இப்னுல் ஆஸ் கூற, “இதோ அவர்” என்றார் உமர்.

அந்த மனிதரிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இறுதியில் அந்த மனிதர் தமக்கு வழங்கப்பட்ட கசையடி ஒவ்வொன்றுக்கும் இரண்டு தீனார்கள் அளித்தால் மன்னித்துவிடுகிறேன் என்று தெரிவிக்க அவருக்கு ஆளுநர் இருநூறு தீனார்கள் அளித்ததுடன் பிரச்னை முடிவுக்கு வந்தது.

அது ஓர் அழகிய பொற்காலம்.

(ஒளிரும்)

-நூருத்தீன்

வெளியீடு: சமரசம் 01-15, மார்ச் 2013

<<பகுதி 7>>  <<பகுதி 9>>

<<முகப்பு>>

Related Articles

Leave a Comment