கலீஃபா உமர் (ரலி) தமக்கு ஆளுநராகத் தேர்ந்தெடுப்பவரிடம் தகுதி இருக்கிறதா, நம்பகமானவரா, மற்றவரைவிட இவர் இப்பணிக்கு எப்படி
‘சாலப் பொருந்துவார்’ என்று மாய்ந்து மெனக்கெடுவார். இன்றும் தகுதி, நம்பகத்தன்மை என்பனவெல்லாம் பதவிக்கான அடிப்படைகள்தாமே, இதில் என்ன விசேஷம் என்று கேட்கலாம்.
இவற்றின் இலக்கணத்தை மிக அழுத்தமான சான்றாய் வரலாற்றில் பதித்தவர்தாம் கலீஃபா உமர் இப்னுல் கத்தாப் (ரலி).
இங்கு சில முன்னெச்சரிக்கைகளுடன் மனத்தைப் பக்குவப்படுத்திக்கொள்வது நலம். பின்னர் ஆங்காங்கே நமக்கு ஏற்படவிருக்கும் அதிர்ச்சியிலிருந்து அது நம்மை மீட்கும். அதாவது அரசியல், பட்டம், பதவி, நீதி, நேர்மை, நியாயம், இறைபக்தி போன்ற நமக்கு நன்கு அறிமுகமான சொற்கள் இருக்கின்றனவே, அவற்றுக்கு நமது மனம் அறிந்துள்ள புரிந்துள்ள அர்த்தங்களை கையில் கிடைக்கும் ஆகப்பெரிய ரப்பர் கொண்டு அழித்துவிடுவது நல்லது. சிரமம்தான். இருந்தாலும் முயலவேண்டும்.
ஏன் அப்படி? பார்ப்போம்.
“என்னைத் தேர்ந்தெடுங்கள்” என்று வருபவருக்கு உமரின் (ரலி) பதில் ‘வேலை காலியில்லை.’ தயவு இன்றி, தாட்சண்யமின்றி அவருக்குப் பதவி மறுக்கப்படும். ஏனெனில், மக்களின் ஆளுநர்களைத் தேர்ந்தெடுப்பதென்பது தமக்கு அளிக்கப்பட்டுள்ள அமானிதம்; அவ்விஷயத்தில் பொறுப்பற்று, மனம்போன போக்கில் நடந்துகொள்வது அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதர் நபி (ஸல்) அவர்களுக்கும் இழைக்கும் அநீதி என்பது உமரின் அழுத்தந்திருத்தமான எண்ணம்!
“ஒரு குழுவினர் மத்தியில் அல்லாஹ்வுக்கு உவப்பான ஒருவர் இருக்கும்போது, அவரை விடுத்து மற்றொருவரை அக்குழுவினருக்குப் பொறுப்பாளராய் நியமிப்பது அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் இறை நம்பிக்கையாளர்களுக்கும் இழைக்கும் துரோகமாகும்” என்று குறிப்பிடுவார் உமர்.
தகுதியிலும் நம்பிக்கையிலும் ஒருவரைவிட மற்றவர் ஒருபடி மிகைத்திருந்தால், முன்னவர் ஏற்கெனவே பதவியில் அமர்த்தப்பட்டிருந்தாலும் அவரிடமிருந்து அப்பதவி பறிக்கப்பட்டு தகுதியானவருக்கு வழங்கப்படும். சமகாலத்தில் சகட்டுமேனிக்கு நடைபெறும் மந்திரிசபை மாற்றம், அதிகாரிகளைத் தூக்கி அடித்து ஆடப்படும் பந்தாட்டம் போன்றவற்றுடன் இவற்றைக் குழப்பிக்கொள்ளக் கூடாது. அது அபத்தம்.
ஒருமுறை ஷுராஹ்பீல் இப்னு ஹஸனாஹ்வை நீக்கிவிட்டு அப்பதவிக்கு முஆவியாவை நியமித்துவிட்டார் உமர். “அமீருல் மூஃமினீன்! என் பணி திருப்திகரமானதாய் இல்லை என்பதற்காக என்னைப் பதவி நீக்கினீர்களா?” என்று உமரிடமே நேரடியாகக் கேட்டார் ஷுராஹ்பீல் இப்னு ஹஸனாஹ் (ரலி).
“இல்லை. நான் உம்மைப் பற்றி நல்லெண்ணம் கொண்டுள்ளேன். ஆனால் உம்மைவிட தகுதியானவர் எனக்குத் தேவைப்பட்டார்.” நேரடியான கேள்வி; நேரடியான பதில். தகுதி என்பது இருவரிடம் சமமாய் அமைந்திருந்தாலும் செயல் திறன் எவரிடம் அதிகம் மிகைத்திருக்கிறதோ அவருக்கே வாய்ப்பு. தீர்ந்தது விஷயம்.
இவ்விஷயத்தில் உமரின் கவலையும் அச்சமும் எந்தளவு இருந்ததென்றால், “யா அல்லாஹ்! தகுதி அமையப்பெற்ற கொடியவன், தகுதி அமையப்பெறாத நம்பகமானவன் ஆகியோரைப்பற்றி உன்னிடமே முறையிடுகிறேன்,” என்று இறைஞ்சுவது உமரின் வழக்கம். தகுதிகள் அமையப்பெற்ற அயோக்கியன், தகுதியற்ற யோக்கியன் இவர்கள் மக்களை ஆளும்போது என்னாகும்? சமகால உலகு சான்று கூறும்.
அதே நேரத்தில் தகுதிகள் அனைத்தும் இருந்தபோதிலும், “முஸ்லிம்களின் சில விவகாரங்களுக்கு ஒருவர் பொறுப்பாளராய் நியமிக்கப்பட்டு, அவர் தமக்குரிய பணியாளர்களை நட்பு, இரத்த பந்தம் போன்றவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுப்பாராயின் அவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் இறை நம்பிக்கையாளர்களுக்கும் துரோகம் இழைக்கிறார்” என்பதும் கலீஃபா உமரின் தெளிவான கருத்து.
வெற்றுப் பேச்சல்ல. தம்முடைய உறவினர்களுக்குப் பதவி அளிப்பதை கவனமாக, மிகக் கவனமாகத் தவிர்த்துள்ளார் உமர். கூஃபா நகரத்து மக்கள் தங்களின் ஆளுநர்மீது அதிருப்தியுற்றுள்ளதாக உமருக்குத் தகவல் வந்தபோது. “தகுதியுடைய வேறு யாரைத் தேடுவது” என்று உமர் ஆலோசனை புரிந்துகொண்டிருந்தார்.
“மிகவும் தகுதியுள்ள ஒருவரை நான் அறிவேன்” என்றார் ஒருவர்.
உமர் மிகவும் ஆவலுடன், “யார் அவர்?” என்றார்.
“அப்துல்லாஹ் இப்னு உமர்” உமரின் மைந்தரைப் பரிந்துரைத்தார் அவர்.
“உமக்கு கேடு விளைய! அல்லாஹ்வைத் திருப்திப்படுத்த நீர் இதைச் சொல்லவில்லை. ஒருவன் தமக்குரிய பணியாளர்களை நட்பு, இரத்த பந்தம் போன்றவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுப்பானாயின் அவன் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் இறை நம்பிக்கையாளர்களுக்கும் துரோகம் இழைக்கிறான்” என்று அவரின் வாயை அடைத்தார் உமர்.
இத்தனைக்கும் பரிந்துரைத்தவர் தகுதியற்ற ஒருவரை கைகாட்டவில்லை. அப்துல்லாஹ் இப்னு உமருக்கு அனைத்து தகுதிகளும் இருந்தன என்பது அவரது வரலாற்றைப் பார்த்தால் புரியும். ஆனால் அது இங்கு இரண்டாம்பட்சம். ‘நீ எனக்கு இரத்த பந்தமா, சொந்தமா, பங்காளியா – ம்ஹும்! உனக்குப் பதவி கிடையாது.’
இவை தவிர, இரக்க உணர்வும் ஆளுநர்களின் தகுதிகளில் ஒன்று. ‘தம் மக்களிடம் பரிவும் இரக்கமும் கொண்டவரே ஆளுநராக அமைய வேண்டும்’ என்பார் உமர். பனூ அஸ்லம் குலத்தைச் சேர்ந்த ஒருவரை ஒரு பதவிக்கு நியமனம் செய்து கடிதம் எழுதியிருந்தார் உமர். உமரை வந்து சந்தித்தார் அவர். அந்நேரம் உமரின் மடியில் பிள்ளை. அதைக் கொஞ்சி முத்தம் ஈந்துகொண்டிருந்தார் உமர்.
பெரும் ஆச்சரியத்துடன் “ஓ அமீருல் முஃமினீன். தாங்கள் பிள்ளைகளுக்கு முத்தமிடுவீர்களா? நான் என்னுடைய பிள்ளைகளை முத்தமிட்டதே இல்லையே” என்றார் அவர்.
“எனில், நீர் மக்களிடம் இரக்கமில்லாதவர். நீர் எனக்காக எந்த நிர்வாகப் பணியும் புரிய முடியாது” என்று அவரை வந்த வழியே திருப்பி அனுப்பிவிட்டார் உமர். அந்த மனிதரது நியமனம் உடனே நீக்கப்பட்டது.
தம்முடைய ஆளுநர்களுக்கு உமரின் அறிவுரை, “தம் மக்களிடம் அன்புடனும் பரிவுடனும் பொறுமையுடனும் நடந்து கொள்ளும் தலைவர்களின் செயலே அல்லாஹ்வுக்கு மிகவும் உவப்பானதும் நெருக்கமானதும் ஆகும். அறியாமையும் முட்டாள்தனமும் கொண்ட தலைவர்களின் செயல்களே அல்லாஹ்வுக்கு மிகவும் வெறுப்பானதும் நெருக்கமற்றதும் ஆகும்.”
இவையெல்லாம் …. விசித்திரமாயில்லை?
அது ஓர் அழகிய பொற்காலம்.
(ஒளிரும்)
-நூருத்தீன்
வெளியீடு: சமரசம் 1-15, டிசம்பர் 2012
<<முகப்பு>>