அது ஓர் அழகிய பொற்காலம் – 1

by நூருத்தீன்

அபூபக்ரு (ரலி) அவர்களின் மறைவிற்குப் பிறகு இரண்டாவது கலீஃபாவாக உமர் (ரலி) பொறுப்பேற்றபின் இஸ்லாமியப் பேரரசு நாலாபுறமும்

விரிவடைய ஆரம்பித்திருந்தது. அந்தந்தப் பகுதிகளை நிர்வாகம் புரிய தகுந்த ஆளுநர்களும் பிரதிநிதிகளும் வேண்டுமல்லவா? தகுதிமிக்கத் தோழர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பிவைப்பார் உமர்.

ஆளுநர், அரசாங்கப் பிரதிநிதி என்றதும் பட்டம், பதவி, சலுகை அவை அளிக்கும் வசதி, சொகுசு இத்யாதிதானே நமக்கு நினைவுக்கு வரும்? ஆனால் வெருண்டு ஓடினார்கள் தோழர்கள். ஓடியவர்களை விரட்டிவிரட்டிப் பிடித்து பொறுப்பைச் சுமத்தி அனுப்பிவைப்பார் உமர்.

அப்படி அனுப்பிவைத்துவிட்டு, ‘நல்லவர்கள், வல்லவர்கள், நபியவர்களின் தோழர்கள்; எல்லாம் சரியாகப் பார்த்துக்கொள்வார்கள்’ என்று அத்துடனும் விடுவதில்லை. துருவித்துருவி அவர்களைக் கவனித்துக்கொண்டிருந்தார். ‘என் வழி தனி வழி’ என்று அவர்கள் எந்நொடியும் வழி தவறிப் போகாமல் நோட்டமிடுவதே அவருக்குத் தனியானதொரு பெரும் பணி.

ஷாம் பிரதேசத்திற்கு ஒருமுறை வருகை புரிந்தார் உமர். தம்மை வரவேற்றவர்களிடம் “எங்கே என் சகோதரன்?” என்றார்.

முஸ்லி்ம்கள் எல்லோரும் ஒருவருக்கொருவர் சகோதரர்கள்தாம்; இதில் உமர் யாரைக் குறிப்பிடுகிறார் என்று அவர்களுக்குச் சந்தேகம் எழுந்தது. “யாரைக் குறிப்பிடுகிறீர்கள் அமீருல் மூஃமினீன்?”

“அபூ உபைதா இப்னுல் ஜர்ராஹ்.”

உமருக்கும் அபூஉபைதாவுக்கும் இடையே நெருங்கிய நட்பு இருந்துவந்தது. ஆனால் அதையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு, அபூஉபைதாவின் தனித்துவமிக்க சிறப்பின் அடிப்படையில் அவரை அப்பகுதிக்கு ஆளுநராக்கியிருந்தார் உமர். அபூஉபைதா உமரை நெருங்கினார். அரவணைத்துக்கொண்டார் உமர். உள்ளார்ந்த பாசமும் நேசமும் பகிர்ந்துகொண்டனர் இருவரும். தம் வீட்டிற்கு கலீஃபாவை அழைத்துச் சென்றார் ஆளுநர் அபூ உபைதா.

சென்று பார்த்தால் வீடு இருந்தது. வீட்டில்தான் ஒன்றுமில்லை. ஒன்றுமில்லை எனில் மேசை, நாற்காலி, முக்காலி தட்டுமுட்டுச் சாமான்கள் என்று எதுவுமே இல்லை. சமைக்க, உண்ண என்று ஒரு சில பண்ட பாத்திரங்கள் இருந்திருக்கலாம். மற்றபடி குறிப்பிடும்படி அங்கிருந்தவை வாள், கேடயம், சேணம் என்று போருக்கு உண்டான ஆயுதங்களும் உபகரணங்களும் மட்டுமே.

“என்ன இது அபூ உபைதா? மக்கள் தங்களின் தேவைக்காக சேர்த்துக்கொள்ளும் தட்டுமுட்டுச் சாமான்கள் எதுவும் நீர் வைத்துக்கொள்ளவில்லையா?”

“அமீருல் முஃமினீன் அவர்களே. என்னிடம் என்ன உள்ளதோ அதுவே எனக்குப் போதும். என் தேவைகளை தீர்த்துக்கொள்ள அவை போதுமானவையாக உள்ளன.”

ஆனால் அபூ உபைதாவின் மனைவிக்கு மட்டும் ஏகப்பட்ட ஆதங்கம். கலீஃபா உமரிடம் நேரடியாகவே அதைக் கொட்டித் தீர்த்தார் அவர். கேட்டுக்கொண்டார்களே தவிர அபூ உபைதாவையோ, உமரையோ அத்தகைய குடும்பச் சலனங்கள் பாதிக்கவில்லை.

சில சமயங்களில் தமது ஆளுநர்களைச் சோதிக்க பணம் அனுப்பிவைப்பார் உமர். பதவியும் அதிகாரமும் அவர்களை மாற்றியிருக்குமோ என்ற சோதனை. அவ்விதம் ஒருமுறை அபூஉபைதாவுக்கு ஐநூறு தீனார்கள் வந்து சேர்ந்தன. கலீஃபாவிடமிருந்த இனாமாக பணம் வந்தால் ஆளுநருக்கு எவ்வளவு மகிழ்வு ஏற்படவேண்டும்? அதைவிட அவர் மனைவிக்கு எத்தகு பேருவப்புப் பெருக வேண்டும்? மாறாக அலுத்துக் கொள்வார் அபூ உபைதாவின் மனைவி.

 “அல்லாஹ்வின் மீது ஆணையாக! தீனார்கள் வந்து சேர்ந்தால் அது எங்களுக்கு உதவுவதைவிட உபத்திரவம் புரிவதே அதிகம்.”

தரையில் விரித்துத் தொழுவதற்காக அவர்களிடம் துணி ஒன்று இருந்தது. அதுவும் பயன்படுத்தி நைந்துபோன துணி. அதைக் கிழித்துத் துண்டுகளாக்கி, அதில் தீனார்களைக் கட்டி சிறு சிறு முடிப்புகளாக்கி அனைத்தையும் ஏழைகளுக்குப் பகிர்ந்து அளித்துவிட்டுத் தங்களது எளிய வாழ்வைத் தொடர்வார் அபூ உபைதா இப்னுல் ஜர்ராஹ்.

o-O-o

மதீனாவிலிருந்து சிரியாவுக்கு வந்திருந்த உமர் அபூதர்தாவைச் சந்திக்க அவரது இல்லத்திற்கு இரவு நேரமொன்றில் வந்தடைந்தார். அபூதர்தா ஆளுநர் பொறுப்பில் இல்லை. ஆனால் முக்கியப்பொறுப்பில் இருந்தார். அவரை ஆளுநராக அனுப்பத்தான் உமர் முயன்றார். மதீனாவில் ஒருநாள் அவரை அழைத்து, “சிரியாவிலுள்ள ஒரு மாகாணத்திற்கு உங்களை ஆளுநராக அனுப்பப் போகிறேன்” என்றார்.

‘மாட்டேன்’ என்றார் அபூதர்தா. வற்புறுத்தினார் உமர். இசைந்துக் கொடுக்கவில்லை அபூதர்தா. விஷயம் இப்படியே தொடர இறுதியில் உமருக்கு உதவும் வகையில் வேறொரு யோசைனையைச் சொன்னார் அபூதர்தா.

‘தாங்கள் வற்புறுத்துவதால் எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. மக்களுக்கு குர்ஆனையும் நபிவழியையும் கற்றுக் கொடுப்பதற்கும் அவர்களுக்கு இமாமாக நின்று தொழவைக்கவும் வேண்டுமானால் நான் செல்கிறேன்’ பட்டம், பதவி இதெல்லாம் வேண்டாம், சேவை மட்டும்தான் செய்வேன் என்பது அதன் சுருக்கம். வேறு வழியில்லாமல் அதற்கு ஒத்துக் கொண்டார் உமர். டமாஸ்கஸ் நகருக்குக் குடும்பத்துடன் கிளம்பினார் அபூதர்தா.

ரோமர்களிடமிருந்து முஸ்லிம்கள் கைப்பற்றிய சிரியா, செல்வ வளத்தில் சிறந்திருந்த பகுதி. அங்கிருந்த மக்கள் செல்வமும் சுகபோகமும் ஆடம்பரமுமே வாழ்க்கை என்று சுகித்துக் கொண்டிருந்தனர். மக்கா, மதீனாவிலிருந்து அங்குப் புலம் பெயர்ந்திருந்த முஸ்லிம்களிடமும் ஆடம்பரம் ஓரளவு ஒட்டிக் கொண்டுவிட்டது. சிரியா வந்தடைந்த அபூதர்தா இதையெல்லாம் கண்டு திகிலடைந்து விட்டார். அவர் வாழ்ந்து கொண்டிருந்த வாழ்க்கைக்குச் சற்றும் சம்பந்தமில்லாமல் இருந்தது அங்கிருந்த சூழ்நிலை. ஆயினும் அந்த நகரிலேயே தங்கி கலீஃபா தமக்கு அளித்தப் பணியினை ஆரம்பித்து, நகர்ந்துகொண்டிருந்தது வாழ்க்கை.

உமர் அபூதர்தாவின் வீட்டுக் கதவின் மீது தட்டுவதற்குக் கைவைத்தால், அது உடனே திறந்து கொண்டது. அக்காலத்திலேயே தானியங்கிக் கதவுகளா என்றெல்லாம் நினைத்துவிடக் கூடாது. ஏனெனில் வீட்டின் கதவிற்குத் தாழ்ப்பாளே இல்லை! அனுமதி பெற்று உள்ளே நுழைந்தார் கலீஃபா. நுழைந்தால் ஒரே கும்மிருட்டு; விளக்கொளியும் இல்லை. அபூதர்தா, உமரை வரவேற்று அமர வைத்தார். நாற்காலியெல்லாம் ஏதுமில்லை, வெறும் மண்தரைதான். இருவரும் இருட்டில் சௌகரியமாய் அமர்ந்து கொண்டு, ஒருவரை ஒருவர் பார்க்க முடியாமலேயே பழைய நட்பில் அளவளாவ ஆரம்பித்து விட்டனர்.

பேசிக் கொண்டே உமர் கையால் துழாவியபோது அபூதர்தாவின் தலையணை அகப்பட்டது. அது வேறொன்றும் இல்லை, குதிரைச் சேனம்! அதுதான் தலையணையாம். சரி தரையில் ஏதும் சமுக்காளம் இருக்குமோ என்று துழாவினார் உமர். தரையில் கூழாங்கற்கள்தான் கையில் பட்டன. அபூதர்தாவின் உடலைப் போர்த்தியிருந்த துணியும்கூட டமாஸ்கஸ் நகரின் கடுங்குளிரில் இருந்து காக்க இயலாத மெல்லியதொரு துணிதான்.

அதிர்ந்து போனார் உமர்! எளிய வாழ்க்கை வாழும் உமருக்கே அது அதிர்ச்சியாய் இருந்தது. ‘அல்லாஹ்வின் கருணை உம் மேல் பொழிவதாக! என்ன இது அபூதர்தா? இதை விட சௌகரியமாய் வாழ்வதற்கு நான் உமக்குப் போதிய பணம் அனுப்பவில்லையா?’ தாம் மிகவும் சொற்பத் தொகையை அவருக்கு அனுப்பி வருகிறோமோ என்ற அச்சம் ஏற்பட்டுவிட்டது கலீஃபாவிற்கு.

நிதானமாய் பதில் கேள்வி கேட்டார் அபூதர்தா: ‘அல்லாஹ்வின் தூதர் நமக்குத் தெரிவித்த ஒன்று உமக்கு ஞாபகமிருக்கிறதா?’

‘என்ன அது?’ என்றார் உமர்.

‘பயணத்தில் இருப்பவர்கள் தேவைக்கு அதிகமாய் உலகாதாயப் பொருட்களைச் சுமக்க வேண்டாம் என்று அவர்கள் நமக்குத் தெரிவிக்கவில்லை? அவர்களுடைய மரணத்திற்குப் பின் நாம் என்ன செய்கிறோம் உமர்?’

வெடித்துவிட்டார் உமர். பீறிட்டெழுந்தது அழுகை அவருக்கு! அபூதர்தாவும் அழ ஆரம்பித்து விட்டர். முஸ்லிம் சமூகம் எப்படி உலக வாழ்க்கை சார்ந்ததாக மாறிவிட்டது என்பதை நினைத்து விசனப்பட்டு, விடியும்வரை அழுது கொண்டிருந்தார்கள் அந்த இரு எளிய தோழர்கள். சற்றொப்ப ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த, அரதப் பழசான சொகுசுக்கு அடிமையாகப்போன அந்த மக்களை நினைத்தே அவர்கள் அழுதார்கள் என்றால், நம்முடைய இன்றைய நிலையை என்னவென்று சொல்வது?

(ஒளிரும்)

-நூருத்தீன்

வெளியீடு: சமரசம் 16-30, நவம்பர் 2012

<<முகப்பு>>  <<பகுதி 2>>

Related Articles

Leave a Comment