முன் தேதி மடல்கள், மடல் 1

by நூருத்தீன்
1. ஹஸன் அல்பஸரி (ரஹ்) எழுதிய மடல்

அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும். நலம். நலமறிய ஆவல்.

இப்படியெல்லாம் மடல் எழுதுவது வழக்கொழிந்துவிட்டது என்றே தோன்றுகிறது. அஞ்சல் அட்டையும் இன்லண்ட் லெட்டரும் நமக்கெல்லாம் நிறம் மறந்துவிட்டாலும் வியப்பதற்கில்லை. அதனால் என்ன? தகவல் தொடர்பு கண்டுபிடிப்புகள் நக நுனிக்கு வசதி அளித்து இன்று மின்னல் வேகப் பரிமாற்றம் சாத்தியமாகியுள்ளது. வார்த்தைகளைச் சுருக்கியோ, உடைத்தோ குறுஞ்செய்திகள் தகவல் தந்துவிடுகின்றன. தம்பதிகளல்லாத ஆண்களும் பெண்களும் மட்டும் மணிக் கணக்கில் பேசி கைப்பேசி நிறுவனத்தினருக்குப் பண மழை.

போகட்டும். இங்கு நமது கவனம் அஞ்சல்துறையின் ஆயுளைப் பற்றியதல்ல. மடல்கள்! நமக்கு வராத, வரப்போகும் மடல்கள் பற்றி நாம் இந்த மடல்களில் பேசப்போவதில்லை. பிறருடைய மடல்கள்.

யாரோ யாருக்கோ எழுதிய மடல்கள். மனித இயல்பு ஒன்று உண்டு. செய்யாதே என்று சொல்வதைத்தான் மெனக்கெட்டு செய்யும். பிறருடைய மடல்களைப் படிப்பது அநாகரிகம் என்பதாலேயே நமக்கெல்லாம் மாற்றார் மடலை எட்டிப் பார்ப்பதில் அப்படியோர் ஆர்வம்.

‘நான் அப்படியில்லை’ என்று நீங்கள் மடல் எழுத முனையலாம். ஆனால் அதற்குமுன் இதை யோசித்துப் பாருங்கள். ‘மனம் திறந்த மடல்’ என்று அவ்வப்போது பத்திரிகைகளில், ஊடகங்களில் பகிரப்படும் கடிதங்களை நீங்கள் படித்ததில்லை? ம்ஹும். அது வேறு என்பதல்ல பதில். ஆணின் உள்ளாடை விளம்பரத்திற்குத் தன் உள்ளாடை அவிழ்ந்து விழாத குறையாக நிற்கும் விளம்பரப்பட மங்கைகளையும் மீறி நமது கவனத்தை அத்தகைய மடல் கட்டுரைகள் கவர்கின்றனவே, அதில் மறைந்துள்ளது பதில்.

பாடப் புத்தகத்தில் படித்திருப்பீர்கள் – அக்காலத்தில் மிக உயர்ந்த தகவல் தொடர்பு சாதனங்கள் புறா, கழுதை, குதிரை, ஒட்டகம் போன்றவை என்று. தகவல்கள் மடல்களில் எழுதப்பட்டு அவைதாம் காதல், போர், நல்லது, கெட்டது என்று அனைத்தையும் அக்காலத்தில் எழுத்தில் சுமந்து சென்றன. வரலாற்று நூல்களில் வரலாறுடன் பிணைந்து பரவிக் கிடக்கும் அவ்விதமான பல மடல்கள் இன்று நமக்கு ‘முன் தேதி மடல்கள்.’

ஆனால், அதில் பொதிந்துள்ள பல தகவல்களும் அறிவுரைகளும் ஆலோசனைகளும் இருக்கின்றனவே அவை காலம் கடந்து நிலைத்து நிற்கும் நிஜங்கள். அதனால் அந்த முன் தேதி மடல்கள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ள இன்றைய தேதியில் இம் மடல். ‘பிறருக்கு எழுதப்பட்ட மடல்களாச்சே’ என்ற கூச்சமின்றிப் படித்து வைக்கலாம். பிழையில்லை.

ஹஸன் அல்-பஸரி, நபித் தோழர்களுக்கு அடுத்தத் தலைமுறையினரான தாபியீன்களுள் ஒருவர். மிகவும் குறிப்பிடத்தக்க இஸ்லாமிய அறிஞர். ஆழ்ந்த ஞானமுள்ளவர். சிறப்பான ஆன்மீக வாழ்வு மேற்கொண்டிருந்தவர். அவரின் தந்தை ஈராக் நாட்டைச் சேர்ந்தவர். மதீனாவில் பிறந்த ஹஸன் அல்-பஸரி பின்னர் ஈராக்கிலுள்ள பஸ்ரா நகரில் வாழ்ந்து மறைந்தார் என்பது கதைச் சுருக்கம்.

ஹிஜ்ரி முதலாம் நூற்றாண்டின் இறுதியில் உமர் இப்னு அப்துல் அஸீஸ் கலீஃபாவாகப் பொறுப்பேற்றார். பனூ உமையாக்களின் முந்தைய கலீஃபாக்களின் அநீதமான செயல்பாடு, இஸ்லாமிய ஆட்சியின் போக்கையே மாற்றிவிட்டிருந்த கால கட்டம் அது. பல சவால்களைச் சந்தித்து தூய இஸ்லாமிய ஆட்சியை மறுசீரமைப்புச் செய்தவர் உமர் இப்னு அப்துல் அஸீஸ். அது ஒரு தனி வரலாறு. இங்கு இப்பொழுது நமக்கான விஷயமானது மாபெரும் மார்க்க அறிஞர் ஹஸன் அல்-பஸரி, கலீஃபா உமர் இப்னு அப்துல் அஸீஸுக்கு எழுதிய மடல். ஏகப்பட்ட நினைவூட்டல்கள்; ஆழமான கருத்துகள் அடங்கிய அது முக்கிய வரலாற்று ஆவணம். பார்ப்போம்.

அமீருல் மூஃமினீன் அவர்களே! நீதி வழுவா தலைவரை ஒவ்வொரு பலவீனமான மனிதனின் பாதுகாவலராக, ஒவ்வொரு அநீதியாளரையும் எதிர்ப்பவராக, ஒவ்வொரு ஒழுக்கங்கெட்டவரையும் திருத்துபவராக அல்லாஹ் ஆக்கி வைத்துள்ளான். அவர் பலவீனமான மனிதர்களின் பலம்; நசுக்கப்படும் மனிதர்களின் நீதி; சிரமத்தில் உழல்பவர்களின் ஆறுதல்.

தம் ஒட்டகங்களை அன்புடன் பாதுகாத்து மேய்ப்பவர், செழிப்பும் நீரும் நிரம்பிய தீவன நிலத்தில் தம் ஒட்டகங்கள் மேய்வதையே விரும்புவார். அவற்றைத் தாக்கும் விலங்குகளிலிருந்து காக்க விழைவார். வெப்பம், குளிர் போன்றவற்றிலிருந்து அவற்றை வேலியிட்டுக் காப்பார். அமீருல் மூஃமினீன் அவர்களே! நீதி வழுவா தலைவர் தம் குடிமக்களிடம் அந்த மேய்ப்பவரைப் போன்றவர்.

தம் பிள்ளைகள் குழந்தைகளாய் இருக்கும்போது அக்கறையுடன் கவனித்துக் கடுமையாக உழைப்பான் அவர்களின் தகப்பன். அவர்கள் வளர்ந்ததும் கல்வி புகட்டுவான். தான் உயிருடன் இருக்கும்போதே உயில் எழுதிவைத்துத் தம் மரணத்திற்குப் பிறகு அவர்களுக்குத் தக்க ஏற்பாடு செய்து வைப்பவன். அமீருல் மூஃமினீன் அவர்களே! நீதி வழுவா தலைவர் தம் குடிமக்களிடம் அந்தத் தகப்பனைப் போன்றவர்.

கள்ளங் கபடமற்ற ஒரு தாயானவள் தன் குழந்தையைத் தூக்கிச் சுமப்பாள். வளர்ப்பாள். இரவெல்லாம் கண்விழித்துப் பாதுகாப்பாள். அக்குழந்தைக்குத் தன்னுடைய பாலைப் புகட்டி, பின்னர் மறக்கடித்து, அதன் ஆரோக்கியத்தில் மகிழ்ந்து, நோயில் வருந்திக் கிடப்பாள். அமீருல் மூஃமினீன் அவர்களே! நீதி வழுவா தலைவர் தம் குடிமக்களிடம் அந்தத் தாயைப் போன்றவர்.

அநாதைகளின் பாதுகாவலர், ஏழைகளின் கருவூலக்காரர், சிறு குழந்தைகளைப் பேணி வளர்ப்பவர் எவ்விதமோ – அமீருல் மூஃமினீன் அவர்களே! நீதி வழுவா தலைவர் தம் குடிமக்களிடம் அவர்களைப் போன்றவர்.

உடல் உறுப்புகளுக்கு இதயம் முக்கியமானது. அது ஆரோக்கியமாய் இருந்தால் அனைத்து உறுப்புகளும் நலமுடன் திகழும். அது கேடுற்றால் அனைத்து உறுப்புகளுக்கும் கேடு விளையும். அமீருல் மூஃமினீன் அவர்களே! நீதி வழுவா தலைவர் தம் குடிமக்களுக்கு இதயத்தைப் போன்றவர்.

அமீருல் மூஃமினீன் அவர்களே! நீதி வழுவா தலைவர் என்பவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய அடிமைகளுக்கும் இடையில் நிற்பவர். அல்லாஹ்வின் வார்த்தைகளைத் தாம் உற்றுக்கேட்டு அவற்றை அவனுடைய அடிமைகள் உற்றுக்கேட்க வைப்பவர். அல்லாஹ்வின் கட்டளைகளைத் தாம் கவனித்து அவனுடைய அடிமைகள் அவற்றைக் கவனிக்க வைப்பவர். அல்லாஹ்வுக்குத் தாம் அடிபணிந்து, அவனுடைய அடிமைகளை அவனுக்கு அடிபணிய வைப்பவர்.

ஆகவே, அமீருல் மூஃமினீன் அவர்களே! ஒரு பணியாளிடம் அவனுடைய எஜமானன் தன்னுடைய செல்வத்தையும் பிள்ளைகளையும் நம்பி ஒப்படைத்திருக்க, அவனோ தன் எஜமானனின் செல்வத்தை ஊதாரித்தனமாய்ச் செலவழித்து, அவனுடைய பிள்ளைகளைத் துரத்தி, எஜமானனின் குடும்பத்தை வறுமையில் தள்ளி அவர்களுடைய செல்வவளத்தை சிதறச் செய்தவனைப்போன்று, உயர்ந்தோன் அல்லாஹ் தங்களுக்கு அளித்திருப்பதை ஆக்கிவிடாதீர்கள்.

அமீருல் மூஃமினீன் அவர்களே! அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ் தண்டனைச் சட்டங்களை அருளியிருப்பது ஆபாசத்திலிருந்தும் கெட்டழியும் கற்பு ஒழுக்கத்திலிருந்தும் மக்களை அச்சமூட்டிக் காக்கவே. ஆகவே ஒருவர் அந்தத் தண்டனைகளை நடைமுறைப்படுத்தாமல் எப்படி இருக்க முடியும்?

மரணத்தைப் பற்றியும் அதற்குப்பின் வருவனவற்றைப் பற்றியும் அச்சமயம் தங்களுக்கு உதவியாளர்களோ, ஆதரவாளர்களோ யாரும் இருக்க மாட்டார்கள் என்பதையும் நினைத்து கவனம் கொள்ளுங்கள் அமீருல் மூஃமினீன் அவர்களே! அதைப்பற்றி மிகவும் அதிக அளவில் அச்சம் கொள்ளுங்கள்.

அமீருல் மூஃமினீன் அவர்களே! அறிந்துகொள்ளுங்கள். தங்களுடைய தற்போதைய குடியிருப்பைவிட மற்றொரு குடியிருப்பு உண்டு. அது தங்களைத் தன்னுடன் நீண்ட காலம் குடியமர்த்தி வைத்திருக்கும். உங்களுடைய அன்பிற்குரியவர்களிடமிருந்து உங்களைப் பிரிக்கும். அவர்கள் அதனுடைய குழிக்குள் உங்களைத் தனியாளாக ஒப்படைத்து விடுவார்கள். ஆகவே, அதன்பின் வரப்போகும் ஒரு நாளுக்கான முன்னேற்பாடுகளும் ஆயத்தமும் செய்துகொள்ளுங்கள். அன்றைய நாளில் ஒருவன் தன் சகோதரன், தாய், தந்தை, பிள்ளைகளிடமிருந்து ஓடிப்போய்விடுவான்.

அமீருல் மூஃமினீன் அவர்களே! நினைவில் கொள்ளுங்கள். அன்றைய நாள் புதைகுழிகள் திறந்துகொட்டும். ஆண், பெண் என்று அனைவர் மனத்திலுள்ளவையும் தெரிய வந்துவிடும். ரகசியங்கள் வெளிப்படுத்தப்படும். இளைஞரோ, முதியவரோ ஒருவரும் தீர்ப்பிலிருந்து தப்பவே முடியாது.

அமீருல் மூஃமினீன் அவர்களே! ஆகவே, இப்பொழுது காலம் மீதம் இருக்கும்போதே, நம்பிக்கை இழக்கும் முன்பே – அல்லாஹ்வின் அடிமைகளை அறிவற்றத் தலைமையாளர்போல் ஆள வேண்டாம். அவர்களை அடக்குமுறையாளர்களிடம் இட்டுச் செல்ல வேண்டாம். அகந்தை, இறுமாப்பு கொண்டவர்கள் வலிமை குன்றியவர்களை ஆதிக்கம் செலுத்த அனுமதிக்க வேண்டாம். அத்தகையவர்கள் இறை நம்பிக்கையாளர்களின் ஒப்பந்தத்தை ஆதரிக்கவோ, பாதுகாக்கவோ போவதில்லை. ஆகவே உங்களுடைய கடமைகளையும் உங்களுக்குக் கீழுள்ளவர்களின் கடமைகளையும்; உங்களுடைய சுமைகளையும் உங்களுக்குக் கீழுள்ளவர்களின் சுமைகளையும் பொறுப்பேற்கவும் சுமக்கவும் தயாராகி விடுங்கள்.

இம்முயற்சியில் நீங்கள் சிரமப்படுவதைப் பார்த்து மகிழ்வார்கள். அவர்களைக் கண்டு ஏமாந்து போகாதீர்கள். மறுமையில் உங்களுக்கு ஏற்படப்போகும் இழப்பைக் கண்டு இவ்வுலகில் ஆனந்தப்படுபவர்கள் அவர்கள்.

உங்களுடைய இன்றைய அதிகாரத்தைப் பார்க்காதீர்கள். நாளை மரணத்தின் கயிற்றால் கைப்பற்றப்பட்டு அல்லாஹ்வின் எதிரில், வானவர்கள் கூட்டத்தின் எதிரில், நபிமார்கள் இறைத் தூதர்கள் எதிரில் நிற்கும்போது உங்களுக்கு இருக்கப்போகும் அதிகாரத்தை நினைத்துப் பாருங்கள்.

நான் தங்களுக்கு அறிவுறுத்துவது எனக்கு முன் சென்றவர்களை அலட்சியம் செய்யவோ, தங்களுக்குப் பரிவு, இரக்கம் காண்பிப்பதற்கோ அன்று. என்னுடைய இம்மடலை ஒரு மருந்தாக அனுப்பியுள்ளேன். ஆரோக்கியம் விழைபவர் இதிலிருந்து அருந்தலாம். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹு.

இப்படியெல்லாம் இன்று ஒருவர் ஆட்சியாளருக்கு மடல் அனுப்பிவிட முடியுமா என்ன? அல்லது இன்றைய ஆட்சியாளர்கள் இத்தகைய நினைவூட்டல்களுக்கு அப்பாற்பட்டவர்களா? மக்களை ஆளும் தலைவனாகப்பட்டவன் தன்னுடைய செயல்களுக்கு மட்டுமன்றி, தான் நியமிக்கும் அதிகாரிகளின் செயலுக்கும் பொறுப்பாவான் என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார் ஹஸன் அல்-பஸரீ.

மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி. தான் அநீதியில் திளைத்து மக்கள் ஒழுக்க சிகாமணிகளாக உருமாற வேண்டும் என்று ஆட்சித் தலைவன் நினைத்தால் அது அசாத்தியம். தலைவன் நேர்வழியில் திளைக்க வேண்டுமெனில் அவனது எண்ணமும் நோக்கமும் இம்மையைத் தாண்டிய மறுமையாக மாற வேண்டும். எனவே அதை முறையாக நினைவூட்டி, ஹஸன் அல்-பஸரீ மேலும் மடல் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தையும் கலீஃபா உமர் இப்னு அப்துல் அஸீஸ் அவற்றைக் கண்டு பதில் உரைத்ததையும் அடுத்த மடலில் பார்ப்போம்.

வஸ்ஸலாம்.

அன்புடன்,

-நூருத்தீன்

வெளியீடு: சமரசம் 01-15, ஆகஸ்ட் 2013

Related Articles

Leave a Comment