முன் தேதி மடல்கள், மடல் 13

by நூருத்தீன்
13. ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) எழுதிய மடல்

அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும். நலம். நலமறிய ஆவல். தகவல் பரிமாற்றத்திற்கு அஞ்சல் துறையை மட்டுமே நம்பியிருந்த காலம் ஒன்று இருந்தது. தேர்வு முடிவு கடிதம், பணி நியமனக் கடிதம், பஜ்ஜியும் சொஜ்ஜியும் தின்று முடித்தபின் ஊருக்குப் போய் பதில் எழுதுகிறோம் என்று சொல்லிவிட்டுச் சென்ற மாப்பிள்ளை வீட்டார் கடிதம் போன்றவற்றிற்கு அஞ்சல்காரரை மட்டுமே எதிர்பார்த்திருந்த காலம் அது. அஞ்சல்காரரின் சைக்கிளை எதிர்பார்த்து தினந்தோறும் காத்திருப்பார்கள் சம்பந்தப்பட்டவர்கள்.

ஏறத்தாழ 1400 ஆண்டுகளுக்குமுன் மதீனா நகரின் வெளிப்புறப் பகுதியில் ஒருவர் காத்திருந்தார். முஸ்லிம்களுக்கும் பாரசீகர்களுக்கும் இடையே கடுமையான போர் நிகழ்ந்து கொண்டிருந்த காலகட்டம். ‘“என்ன ஆச்சோ? ஏது ஆச்சோ?’” என்று கவலையும் அக்கறையுமாய் தினமும் காலையிலேயே அங்கு வந்துவிடுவார் அவர். போர்க் களத்திலிருந்து தகவல் சுமந்து யாரேனும் வருகிறார்களா என்று பாதையையே நண்பகல்வரை பார்த்திருந்துவிட்டு ஊர் திரும்புவார்.

பாரசீகத்தில் ஃகாதிஸிய்யாவில் போர் புரிந்துகொண்டிருந்தார்கள் முஸ்லிம்கள். இஸ்லாமிய வரலாற்றின் வெகுமுக்கிய போர் அது. பெரும் சோதனை, சாகசங்களுக்குப் பிறகு அல்லாஹ்வின் உதவியால் வெற்றி முஸ்லிம்கள் வசமானது. ஸஅத் இப்னு உமைளா என்பவரை அழைத்து, முஸ்லிம்களின் வெற்றிச் செய்தியை மடல் எழுதி அவரிடம் அளித்து, மதீனா சென்று கலீஃபா உமர் (ரலி) அவர்களிடம் அளியுங்கள் என்று அனுப்பி வைத்தார் தளபதி ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி).

நெடும் பயணம் புரிந்து ஸஅத் இப்னு உமைளா மதீனாவின் புறநகரை அடையும்போது, அங்கு தினமும் வந்து காத்துக்கொண்டிருந்தாரே ஒருவர், அவர் இவரைக் கண்டுவிட்டார்.

““எங்கிருந்து வருகிறீர்?”” என்று வினவினார் அவர்.

ஸஅத் இப்னு உமைளாவுக்கு கலீஃபா உமரை சென்று சந்திக்க வேண்டிய அவசரம். எனவே, ““ஃகாதிஸிய்யாவிலிருந்து”” என்றார் சுருக்கமாக.

இதற்குத்தானே தினமும் அங்குக் காத்திருந்தார் அவர். ““அல்லாஹ்வின் அடிமையே! என்னாயிற்று?”” என்று தவிப்பும் ஆவலுமாய்ச் செய்தியைக் கேட்டார்.

““அல்லாஹ் எதிரியைத் தோல்வியுறச் செய்தான்”” சொல்லிக்கொண்டு ஒட்டகத்தில் சென்று கொண்டேயிருந்தார் ஸஅத் இப்னு உமைளா.

மகிழ்வும் ஆர்வமும் ஆவலும் அதிகமாகி மேற்கொண்டு விவரங்களும் கேள்விகளும் கேட்டுக்கொண்டு பின்தொடர்ந்து ஓடினார் அவர்.

வந்தவரும் சுருக்கமாகப் பதில் அளித்துக்கொண்டே நகருக்குள் ஒட்டகத்தை ஓட்டிக்கொண்டிருந்தார்.

நகரினுள் நுழைந்துவிட்டார்கள். எதிர்ப்பட்ட மக்கள் ஒட்டகத்தைத் தொடர்ந்தபடி ஓடிவருபவருக்கு, ‘‘அஸ்ஸலாமு அலைக்கும் அமீருல் மூஃமினீன்’’ என முகமன் கூற அதிர்ந்துபோய் கீழே குதித்தார் ஸஅத் இப்னு உமைளா.

““அல்லாஹ் உம்மீது கருணை பொழவானாக. ஏன் தாங்கள்தாம் அமீருல் மூஃமினீன் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை.””

அதற்கு கலீஃபா உமரின் மிக யதார்த்தமான பதில், “”அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம் சகோதரரே.””

ஏவலுக்கும் கட்டளைக்கும் அடிபணிய சேவகர்களும் ஊழியர்களும் நிறைந்திருந்தும் கலீஃபா உமருக்கு அதெல்லாம் பழக்கமில்லை. அவரைப் பொறுத்தவரை, ‘‘முஸ்லிம்களின் நலனுக்கு நான்தானே பொறுப்பு. எனக்குத்தானே அவர்கள் பிரமாணம் அளித்து தலைமையை ஒப்படைத்திருக்கிறார்கள். எனவே நான்தான் அவர்களின் நல்லது, கெட்டதைக் கவனிக்க வேண்டும். வெயிலோ, பனியோ நான்தான் சென்று காத்துக்கிடக்க வேண்டும்.’’

கர்வம் அவர்கள் அகராதியில் இடம்பெறாத சொல்லாக இருந்திருக்கிறது. அடக்கம் அவர்கள் உள்ளும் புறமும் வியாபித்து இருந்திருக்கிறது. தமக்குத் தகவல் சுமந்து வந்தவரின் ஒட்டகத்திற்குப் பின்னாடியே ஓடியிருக்கிறார் கலீஃபா. ஏங்கி பெருமூச்சு விட்டுவிட்டு ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) எழுதிய மடலைப் பார்ப்போம்.

““நமக்குப் பாரசீகர்கள் மீதான வெற்றியை அல்லாஹ் அருளியுள்ளான். அதற்காக நீண்ட யுத்தம் புரிந்து கடுமையான வேதனைகளைச் சகித்தோம். இறுதியில், அவர்களுக்கு முன் வந்தவர்களுக்கு அளித்த அதே தண்டனையை இறைவன் அவர்களுக்கும் அளித்தான். முஸ்லிம்களுடன் மோதிய அவர்களது படையினரின் எண்ணிக்கை நாம் இதற்குமுன் கண்டிராதது. ஆயினும் அந்த எண்ணிக்கை அவர்களுக்கு உதவி புரியவில்லை. ஆனால் அல்லாஹ்வின் உதவி முஸ்லிம்களுக்குக் கிட்டியது. நம் வீரர்கள் அவர்களை ஆற்றிலும் கரையோரமும் மலைப்பாதைகளிலும் பின்தொடர்ந்து துரத்தினர். முஸ்லிம்களுள் ஸஅத் இப்னு உபைத் அல்-காரீமற்றும் இன்னார் இன்னார் உயிர்த் தியாகிகள் ஆயினர். இவர்களைத் தவிர உயிர்த் தியாகிகளான முஸ்லிம்கள் மேலும் பலர். அவர்களது பெயர்களை நாம் அறியோம். ஆனால் அல்லாஹ் அவர்களைச் சிறப்பாய் அறிந்தவன்.

இரவு நேரம் வந்ததும் அவர்கள் குர்ஆன் ஓதும் ஒலி தேனீக்கள் எழுப்பும் ரீங்காரத்தைப்போன்று இருந்தது. களத்திலோ அவர்கள் சிங்கங்கள். இன்னும் சொல்லப்போனால் சிங்கங்களைக்கூட அவர்களுடன் ஒப்பிட முடியாது. நம்மை விட்டு இவ்வுலகைப் பிரிந்தவர்களுக்கு உயிர்த் தியாகம் எனும் பெருமை கிடைத்துள்ளது. நம்முடன் இருப்பவர்களின் சிறப்பும் இறந்தவர்களுக்கு இணையானதே.””

இக்கடிதமும் இதில் அடங்கியுள்ள ஆச்சரியங்களும் மட்டுமே பல பக்கங்களுக்குக் கட்டுரையாக விரிவடையும் தன்மையுடையவை. நாம் இங்குச் சுருக்கமாய்த் தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகள், மிக அழகாய்க் குர்ஆன் ஓதி, ‘காரீ’ எனும் பட்டப் பெயருடன் திகழ்ந்த ஸஅத் இப்னு உபைத் களத்திலும் ஆண் சிங்கம்; அதற்கு அவருக்குக் கிடைத்த பரிசு உயிர்த் தியாகம்.

இறைமறையை ஓதுவதில் தேர்ச்சி பெற்ற காரீ, ஹாபிழ் போன்ற அவர்கள் தங்களது சேவையை பள்ளிவாசல், பாடசாலை என்று சுருக்கிக் கொள்ளவில்லை. இறைவனின் வசனங்கள் நெஞ்சில் ஆழ வேரூன்றி, ‘களம் மஞ்சம், உயிர் துச்சம்’ என்று வாழ்ந்திருக்கிறார்கள். அறப்போருக்கு வாளேந்தி நின்றிருக்கிறார்கள்.

என்பதிருக்க –

மாபெரும் மார்க்கக் கடமையான போரே என்றபோதும் இளைப்பாறும் அவர்களது இரவு எப்படி கழிந்திருக்கிறது? தேனீக்களாம். நள்ளிரவில் எழுந்து அமர்ந்து கன்னத்தில் கைவைத்து நாம் யோசித்துப் பார்க்க வேண்டும்.

இத்தொடரின் இறுதியாக வேறொரு மடலை அடுத்து பார்ப்போம். இன்ஷா அல்லாஹ்.

வஸ்ஸலாம்.

அன்புடன்,

-நூருத்தீன்

வெளியீடு: சமரசம் 1-15, பிப்ரவரி 2014

Related Articles

Leave a Comment