முன் தேதி மடல்கள், மடல் 14

14. அலீ (ரலி) ஆளுநருக்கு எழுதிய மடல்

அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும். நலம். நலமறிய ஆவல்.

நண்பர் ஒருவர் மடலில் புகைப்படம் அனுப்பியிருந்தார். தபால்தலை ஒட்டப்படாமல் மின்னஞ்சல் பெட்டியில் வந்து கிடந்தது. ஆஜானுபாகுவான ஒருவர், வெள்ளையும் சொள்ளையுமாய் வேட்டி, சட்டை அணிந்து, முட்டியிட்டு தரையில் சிரம் பதிந்து கிடந்தார். பார்ப்பதற்கு அவர் ஒரு முஸ்லிமாகவோ, தொழுகையில் ‘ஸஜ்தா’ புரிவதாகவோ தெரியவில்லை. அவரது சிரம் இரு கால்களின் அருகே பதிந்திருந்தன. காலுக்குரியவர் ஒரு மாநிலத்தின் முதல்வர். அவர் விழுந்து கிடப்பவரை வாழ்த்தியபடி நின்றிருந்தார்.

ஒரு காலத்தில் இத்தகைய காட்சிகள் நமக்கெல்லாம் ஆச்சரியமாகவும் அருவருப்பாகவும் தெரிந்தன. இன்று அவை சகஜமில்லையா? அதனால் அந்தப் புகைப்படம் பெரும் சலனத்தை ஏற்படுத்தவில்லை. மாறாக பரிதாபம்தான் மேலோங்கியது வாழ்த்திக் கொண்டிருந்த முதலமைச்சரின் மீது. பின்னே?

‘உனக்கு நான் சற்றும் இளைத்தவனில்லை’ என்று கட்சி உறுப்பினர்கள் அத்தனை பேருமே சாஷ்டாங்கமாக விழுவதற்கு வரிசையில் முண்டியடித்துத் தயாராக இருந்தால் யார் யாரைத்தான் அமைச்சராக்குவது? எத்தனை பேருக்குத்தான் தொகுதி வாரியாக பதவி அளிப்பது? பட்டால்தான் நமக்கு அந்தச் சிரமம் புரியும்.

அது போகட்டும். ஒன்று கவனித்தீர்களா? இன்றைய அரசியலில் அமைச்சர்களின் தேர்வுத் தகுதிகளைப் பற்றியோ, நன்னடத்தைப் பற்றியோ நமக்கெல்லாம் கவலை என்று எதுவுமே ஏற்படுவதில்லை. சீட்டுக் கட்டைப்போல் அவ்வப்போது கலைத்து மாற்றும் அமைச்சரவை பற்றி நமக்கு சங்கடம் இருப்பதில்லை. அடுத்த பத்தி, அடுத்த ‘க்ளிக்’ என்று பத்திரிகை அல்லது இணையத்தில் நாம் அடுத்த செய்திக்கு நகர்ந்து விடுகிறோம்.

இப்பொழுது நாம் சற்று பின் நகர்ந்து முந்தைய காலத்திற்குச் செல்வோம். நான்காவது கலீஃபாவாகப் பொறுப்பேற்றிருந்த அலீ (ரலி) அவர்கள், மாலிக் இப்னு அஷ்தார் என்பவரை ஒரு பகுதிக்கு ஆளுநராக நியமித்தார்கள். அன்றைய ஆளுநர்கள் தமக்குரிய அமைச்சர்கள், அரசாங்கப் பணியினைப் புரிய ஊழியர்கள் என்று தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி தாமே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அப்படித் தேர்ந்தெடுப்பவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி அலீ (ரலி) ஆளுநர் மாலிக் இப்னு அஷ்தாருக்கு மடல் எழுதி அனுப்பினார். அனேகமாய் ஒன்றுக்கும் மேற்பட்ட கடிதங்கள் அவை. அவற்றில் இருந்த முக்கியச் செய்திகள் இவை.

“உங்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர் கசப்பான உண்மைகளை உங்களிடம் உரைப்பவராய் இருக்கட்டும். அல்லாஹ் தன்னுடைய அடியார்களுக்கு அங்கீகரிக்காதவற்றில் உங்களுக்கு உதவி புரியாதவராக இருக்கட்டும் – அது உங்களை திருப்திபடுத்தினாலும் சரி; படுத்தாவிட்டாலும் சரி.

வெகு மோசமான அமைச்சர்கள் யார் எனில் முன்னர் பதவியில் இருந்த தீயவன் ஒருவனுக்கு அடிபணிந்து அமைச்சராகப் பணிபுரிந்தவர்கள். அந்தத் தீயவனின் பாவங்களில் இணைந்திருந்த அவர்கள் உங்களது ஆலோசனைக் குழுவிலோ நட்புக் குழுவிலோ இடம் பெறக்கூடாது. அவர்கள் பாவிகளின் உதவியாளர்கள்; குற்றவாளிகளின் சகோதரர்கள்.

பதவியில் அமர்த்த அவர்களை விடச் சிறப்பானவர்களை நீங்கள் கண்டெடுக்க முடியும். அந்தச் சிறப்பானவர்கள் தீய அமைச்சர்களைவிட புத்திசாலிகளாகவும் திறம் வாய்ந்தவர்களாகவும் இருப்பார்கள்; முந்தையவர்களைப்போல் இவர்களது தோள்களில் பாவங்களின் சுமை இருக்காது. குற்றவாளிகளுக்கு குற்றச் செயல்களில் உதவ மாட்டார்கள். பாவிகளுக்குப் பாவங்களில் உதவ மாட்டார்கள். இவர்கள் உங்களுக்குச் சுமை குறைவானவர்கள். உங்களுக்கு உதவுவதில் மேம்பட்டவர்கள். உங்களிடம் அதிகம் பரிவும் அன்பும் கொள்பவர்கள்.

“உங்களுடைய ஊழியர்களின் விவகாரங்களைக் கவனித்துக் கொள்ளுங்கள். முதலில் அவர்களைத் தற்காலிகமாக நியமியுங்கள். பாரபட்சமாகவோ சலுகையின் அடிப்படையிலோ அவர்களைத் தேர்ந்தெடுக்காதீர்கள். அவை அநீதிக்கு வழிவகுக்கும். அனுபவம், தன்னடக்கம், நல்ல குடும்பப் பாரம்பரியம், இஸ்லாத்தில் வெகு முன்னரே இணைந்த சிறப்பு ஆகியன உள்ளவர்களாய்த் தேடுங்கள். அவர்களது பின்னணியும் பண்பு நலன்களும் சிறப்பாக இருக்கும். அவர்கள் உலக ஆதாயத்தில் நாட்டம் குறைந்தவர்களாகவும் தொலைநோக்கு கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

அவர்களுக்குத் தாராளமான ஊதியம் அளியுங்கள். அது அவர்கள் தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள உதவும்; தேவைகள் அற்றவர்களாக ஆக்கும். உங்களுக்கு துரோகம் புரியவோ உங்களது ஆணைக்குக் கீழ்படியாமல் மறுக்கவோ அவர்களுக்கு வாய்ப்பு ஏற்படாது.

சிறப்புத் தகுதிகள் ஒருவரிடம் ஒன்று சேர்ந்திருந்தால், அவருக்குத் தக்க ஊதியமும் அளிக்கப்பட்டால், அவர் நேர்மையுடன் தமது பணியை புரிய அது ஊக்கமளிக்கும். தம்முடைய மாநிலம், தமது ஆட்சி நிறுவனம் வளமடைய அவர் எடுக்கும் முயற்சிகளில் அவர் நிலைத்திருக்க உதவும்.

ஊதியத்தில் அவரிடம் பெருந்தன்மையாக இருங்கள். அது அவர் வறுமையில் உழலாமல் இருக்க உதவும். தேவைகள் அற்றவராக ஆக்கிவைக்கும். மக்களின் கையை எதிர்பார்க்க மாட்டார். அவருக்குரிய மரியாதையை அளியுங்கள். அது அவரிடம் பிறர் தலையிடாமல் காக்கும்.”

பதவிக்குத் தேர்ந்தெடுப்பதிலிருந்து, தகுதியிலிருந்து, ஊதியத்திலிருந்து, மரியாதையிலிருந்து எவ்வளவு நுணுக்கமாய் அறிவுறுத்துகிறது மடல். கையூட்டு, ஊழலுக்கான வாய்ப்புகள் தொடக்கத்திலேயே அடைக்கப்பட்டு விடுகின்றனவே. இவற்றில் எந்த ஒன்றாவது இன்று கடைபிடிக்கப்படுகிறதா என்ன? எல்லாம் தலைகீழ். அமைச்சர்களின் தலையும் தரையின் கீழ்.

இந்தத் தொடரின் இறுதிக் கடிதத்தை அடுத்த இதழில் பார்ப்போம்.

வஸ்ஸலாம்.

அன்புடன்,

-நூருத்தீன்

வெளியீடு: சமரசம் 16-28, பிப்ரவரி 2014

Related Articles

Leave a Comment