முன் தேதி மடல்கள், மடல் 12

by நூருத்தீன்
12. ஸஅத் பின் அபீவக்காஸுக்கு (ரலி) வந்த மடல்

அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும். நலம். நலமறிய ஆவல். சம்பிரதாயத்திற்காக மடல்களை இப்படித் துவங்க வேண்டியிருக்கிறதே தவிர, பொழுது விடிந்து பொழுது போனால், உலகெங்கும் முஸ்லிம்களுக்கு எதிராய் நிகழ்வுறும் தீமைகளில் என்ன நலம் மிஞ்சிக் கிடக்கிறது?

முஸ்லிம் போராளிகளும் அந்தந்தப் பகுதிகளில் தங்களுடைய பகைவர்களை எதிர்த்து அறப் போராட்டம், ஆயுதப் போராட்டம் என்று நிகழ்த்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். வெற்றி அண்மிவிடும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் மிகைத்துத்தான் இருக்கிறது. ஆனால், இஸ்லாமிய விரோதிகளை எதிர்த்து நிகழ்த்தும் போர் சடுகுடு விளையாட்டா, சட்டு புட்டென்று முடிந்துவிடுவதற்கு?

ஆயுதங்களும் ஆத்திரமும் மட்டும் போரின் முடிவை, முஸ்லிம்களின் வெற்றியை நிர்ணயிப்பதில்லை. அவற்றையெல்லாம் மீறிய அறம் அறப்போர்களின் அடிப்படை தேவை என்பதற்கு கலீஃபா உமர் (ரலி) அவர்களின் மடல் ஒன்று உண்டு. ஆகச் சிறந்த கையேடு அது.

பாரசீகர்களுக்கு எதிராய்த் திட்டவட்டமான போர்களை நிகழ்த்தி முடிக்க ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களின் தலைமையில் பெரும் படையை ஈராக்கிற்கு அனுப்பி வைத்தார் கலீஃபா உமர். விரிவாய் மடல் ஒன்றும் அவருக்கு எழுதி அனுப்பினார்.

அந்த மடலில் முக்கியமான வியப்பு என்னவெனில், முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும் எனச் சொல்லும் அறிவுரைகளுக்கு முன்னதாக, அவர்கள் என்ன செய்யக் கூடாது என்பது மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டிருந்தது.

நான் உங்களையும் உங்களுடன் உள்ள படையினரையும் அனைத்துச் சூழ்நிலையிலும் அல்லாஹ்வுக்கு அஞ்சும்படி கட்டளையிடுகிறேன். ஏனெனில் அல்லாஹ்வின் மீதான அச்சமே எதிரிகளுக்கு எதிரான மிகச் சிறந்த ஆயுதம்; போரில் மிக வலுவான ஆயுதம்.

நான் உங்களையும் உங்களுடன் உள்ளவர்களையும் எதிரிகளைத் தவிர்ப்பதைவிட பாவங்களைத் தவிர்ப்பதில் மிகுந்த கவனமுடன் இருக்கும்படி கட்டளையிடுகிறேன். ஏனெனில் எதிரிகளைவிட படையினரின் பாவங்கள் அதிகம் அச்சங்கொள்ளத் தக்கவை.

எதிரிகள் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியாத காரணத்தினாலேயே முஸ்லிம்களுக்கு ஆதரவு அளிக்கப்படுகிறது. அப்படி இல்லையாயின், நமக்கு எந்தச் சக்தியும் இல்லை; எப்படியெனில் நமது எண்ணிக்கை அவர்களுடையதைப் போன்றதன்று. நமது ஆயுதங்கள் அவர்களுடையதைப் போன்றதல்ல.

நாமும் அவர்களும் பாவம் இழைப்பதில் சமமாக இருந்தால், நம்மைவிட அவர்களுக்கு வலுவில் அனுகூலம் அதிகமாகிவிடும். நல்லொழுக்கங்களில் அவர்களைவிட நாம் மிகைத்திருக்காவிட்டால், நமது வலுவைக் கொண்டு அவர்களை நாம் தோல்வியுறச் செய்ய இயலாது.

அல்லாஹ் உங்கள்மீது நியமித்துள்ள வானவர்கள் நீங்கள் செய்வதை அறிவார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே அவர்களிடம் வெட்கம் கொண்டு, அல்லாஹ்வுக்கு கீழ்ப்படியாத செயல்கள் புரியாதீர்கள்.

நம்முடைய எதிரி நம்மைவிட மோசமானவன். நாம் பாவமே புரிந்தாலும் அவன் நம்மை வெல்ல முடியாது என்று சொல்லாதீர்கள். நீங்கள் அல்லாஹ்வின் பொருட்டு போரிடுகிறீர்கள்.

மக்கள் அல்லாஹ்வை கோபமூட்டும் செயல்களைப் புரிந்ததால், இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள் இறை நிராகரிப்பாளர்களான மஜுஸிகளால் தோற்கடிக்கப்பட்டதைப்போல், அந்த மக்கள் அவர்களைவிட மோசமானவர்களால் தோற்கடிக்கப்படக்கூடும்.

அவர்கள் உங்கள் வீடுகளில் புகுந்து (உங்களையும். உங்கள் பொருள்களையும்) தேடி (அழித்து) விட்டார்கள்; (இவ்வாறு முதல்) வாக்குறுதி நிறைவேறியது. (17:5)

உங்களுடைய பகைவர்களுக்கு எதிராய் எவ்விதம் அல்லாஹ்விடம் உதவி கோருகிறீர்களோ அதைப்போல் உங்களுடைய தீய எண்ணம், இச்சைகளைக்கு எதிராய் அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள். நமக்கும் உங்களுக்கும அல்லாஹ்விடம் அதையே நான் உதவி கேட்கிறேன்.

அணிவகுத்துச் செல்லும்போது முஸ்லிம்களிடம் அன்புடன் நடந்து கொள்ளுங்கள். அவர்கள் சோர்வடையுமளவிற்கு பயணத்தை அமைக்க வேண்டாம். அது அவர்கள் பலவீனமான நிலையில் எதிரியைச் சந்திக்கும்படி ஆக்கிவிடும். பகைவர்களோ பயணம் புரியாமல் தங்கள் இடத்தில் உள்ளனர். அவர்களிடம் வலுவான குதிரைகளும் வீரர்களும் உள்ளனர். அவர்களை நோக்கி நாம்தான் அணிவகுத்துச் செல்கிறோம்.

நீங்களும் உங்களுடன் இருப்பவர்களும் வாரத்தில் ஒரு பகலும் இரவும் ஓய்வெடுக்க வேண்டும். அது அவர்கள் தங்களுடைய ஆயுதங்களையும் உடைமைகளையும் இறக்கிவைத்து தங்களுடைய சக்தியை மீட்டுக்கொள்ள வழிவகுக்கும்.

நாம் உடன்படிக்கை செய்துள்ள, நாம் பாதுகாவல் அளித்துள்ள மக்கள் வசிக்கும் நகரங்களுக்கு அருகே முகாம் இடாதீர்கள். எவருடைய மார்க்க உறுதியில் உங்களுக்குத் தீர்க்கமான நம்பிக்கை இருக்கிறதோ அவர்களைத் தவிர மற்றவர்களை அந்த மக்களுடன் கலக்க, உறவாட அனுமதிக்காதீர்கள்.

அந்த நகர மக்களைத் தொந்தரவு செய்யவே செய்யாதீர்கள். அவர்களுக்கு நாம் பாதுகாப்பு வழங்கியுள்ளோம். நீங்கள் நமது உடன்படிக்கையை நிறைவேற்றுவதில் சோதிக்கப்படுகிறீர்கள். அதைப்போல் அவர்கள் அந்த உடன்படிக்கைக்குக் கட்டுப்பட்டு பொறுமை காப்பதில் சோதிக்கப்படுகிறார்கள்.

அவர்கள் உங்களிடம் தங்களது வாக்குறுதியைக் காப்பாற்றும் வரை, நீங்களும் உங்களது வாக்குறுதியைக் காப்பாற்றுங்கள். நீங்கள் உடன்படிக்கை செய்திருப்பவரை கொடுமைப்படுத்திவிட்டு உங்களுடைய பகைவருக்கு எதிராய் வெற்றியைத் தேடாதீர்கள்.

எதிரி நாட்டிற்கு வெகு நெருக்கமான பகுதியை நெருங்கியதும் ஒற்றர்களை அனுப்புங்கள். எதிரிகளின் செயல்பாடுகள் எதுவும் நீங்கள் அறியாததாய் இருத்தல் கூடாது. உங்களுடன் அரபியர்களையும் அந்தப் பகுதியின் உள்ளூர்வாசிகளுள் யாரை நீங்கள் நம்புகிறீர்களோ, நேர்மையை உணர்கிறீர்களோ அவர்களையும் உடன் வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் பொய்யன் அளிக்கும் செய்திகளால் உங்களுக்கு எந்த நன்மையும் கிடையாது – அவன் சில சமயங்களில் உண்மையையே சொன்னபோதிலும். வஞ்சகன் உங்களுக்கு எதிரான ஒற்றனேயன்றி உங்களுடைய ஒற்றன் அன்று.

எதிரிகளின் எல்லையை நெருங்கியதும் உளவாளிகளையும் திடீர்த் தாக்குதல் பிரிவினரையும் அனுப்பி எதிரிகளுடைய தேவைகளை நிறைவேற்றும் விஷயங்களைத் துண்டியுங்கள். அவர்களுடைய பலவீனமான பகுதிகளைக் கண்டறியுங்கள். உங்களுடைய தோழர்களுள் மதிநுட்பவாதிகளையும் பலசாலிகளையும் சிறந்த குதிரைகளையும் இந்தப் பணித்திட்டத்திற்குத் தேர்ந்தெடுங்கள். அவர்கள் எதிரியைக் கண்டால் இவர்களுடைய நல்ல அறிவுரையே அந்த எதிரியைக் கையாள்வதற்கான சிறந்த வழிமுறையாகும்.

ஜிஹாது, பொறுமை, கடினத்தன்மை ஆகியனவற்றில் சிறந்தோங்கும் மக்களையே திடீர்த் தாக்குதல் பிரிவினருக்குப் பொறுப்பாளராக நியமியுங்கள். உங்களுடைய தனிப்பட்ட விருப்பம், இச்சையின் அடிப்படையில் எவருக்கும் சலுகை காண்பிக்காதீர்கள். ஏனெனில் அது அனைத்துக் காரியங்களையும் கெடுத்து பாதகமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

எந்தத் திசையில் ஆபத்து நிறைந்திருக்கும் என்று அஞ்சுகிறீர்களோ அந்தத் திசையில் உங்களது உளவாளிகளயும் தாக்குதல் பிரிவினரையும் அனுப்பி அவர்களை ஆபத்தில் சிக்க வைக்காதீர்கள். நீங்கள் எதிரியைக் கண்டுவிட்டால் உளவாளிகளையும் படைப்பிரிவையும் திருப்பி அழைத்துக் கொள்ளுங்கள்.

பகைவர்களுடைய முக்கியமான பலவீனப் பகுதிகளை அறிவதற்கு வாய்ப்பு ஏற்படாதவரை, அவர்களுடைய நிலப்பரப்பை அந்த மக்கள் அறிந்திருப்பதுபோல் நீங்கள் நன்றாக அறியும்வரை, கட்டாயம் ஏற்பட்டாலொழிய அவர்களுடன் சண்டையில் ஈடுபடுவதற்கு அவசரப்படாதீர்கள்.

நீங்கள் ஒப்பந்தம் செய்திராத மக்களுள் ஒருவன் கைதியாக உங்களிடம் கொண்டுவரப்பட்டால் அவனது தலையைக் கொய்து விடுங்கள். அது அல்லாஹ்வின் எதிரிகளின் மனத்தில் அச்சத்தைத் தோற்றுவிக்கச் செய்யும்.

உங்களுக்கும் உங்களுடன் இருப்பவர்களுக்கும் உங்களது காரியங்களில் துணையிருக்க அல்லாஹ்வே சிறந்தவன். அவனே உங்களுடைய பகைவர்களுக்கு எதிராய் உங்களுக்கு வெற்றியை அருள்கிறான். அல்லாஹ் ஒருவனே. அவனிடமே நாம் உதவி கோருகிறோம்.

எவ்வளவு ஆழமான அறிவுரைகள்? விவரித்து எழுதினால் பல பக்கங்களுக்குக் கட்டுரை நீளாது?

அடிநாதமாக இழையோடும் செய்தி என்ன? சுருக்கமாகச் சொல்வதென்றால் எண்ணிக்கையும் பலமும் வெற்றியை நிர்ணயிப்பதில்லை. அந்த அம்சங்கள் எதிரியிடம் அதிகம். அது போலவே அல்லாஹ்வுக்கு எதிரான அவர்களது பாவங்களும் மிக அதிகம். எனும்போது, நீங்களும் பாவத்தில் திளைத்திருந்தால், மிகைத்திருந்தால் அது எவ்விதம் அறப்போராகும்? அனைத்து சூழ்நிலைகளிலும் அந்த அல்லாஹ் ஒருவனுக்கே அஞ்சுங்கள். பாவங்களிலிருந்து மீளுங்கள் என்று தொடங்கி அறிவுரைகள் சுமக்கிறது இந்த மடல். நம் அனைவருக்கும் எக்காலத்திற்கும் பொருந்தும் மடல்.

வேறொரு மடலை அடுத்து பார்ப்போம். இன்ஷா அல்லாஹ்.

வஸ்ஸலாம்.

அன்புடன்,

-நூருத்தீன்

வெளியீடு: சமரசம் 16-31, ஜனவரி 2014

Related Articles

Leave a Comment