முன் தேதி மடல்கள், மடல் 2

by நூருத்தீன்
2. உமர் இப்னு அப்துல் அஸீஸுக்கு (ரஹ்) வந்த மடல்

அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும். நலம். நலமறிய ஆவல்.

முந்தைய மடலைப் படித்துவிட்டு தாங்கள் இதையும் படிக்கிறீர்கள் எனில் தங்களது ஆர்வம் பாராட்டுதலுக்கு உரியது. அதைத் தெரிவித்துவிடுவது சிறப்பு. பாராட்டுகள். இம்மடலைப் படிக்கும் புதியவர் நீங்கள் எனில், முடிந்தால் முந்தைய மடலையும் வாசித்துவிடுங்கள். வாய்ப்பில்லையா? ஒன்றும் பாதகமில்லை. இதைத் தொடர்ந்து படித்து வைக்கலாம்.

உலகமே மின்னஞ்சலில் சுழலும்போது தாளில் கடிதமெழுதி, உரையினுள் இட்டு, அஞ்சல் தலை ஒட்டி, ‘இதெல்லாம் என்ன பத்தாம் பசலித்தனம்?’ என்று தபால்காரர் சைக்கிளில் சுமந்து செல்லும் கடிதங்களைக் காணும்போது உங்களுக்குத் தோன்றியிருக்கிறதா? தகவல்களைச் சுமப்பது தாளா, மின் தாளா என்பதன்று பிரச்னை. வாசகம்; அதில் பொதிந்துள்ள தகவல்.

தாளில் தகவல்கள் எழுதி பரிமாறப்பட்ட காலத்தில், வாசகங்களில் நெளிவு சுளிவு இருந்தது. மொழி செம்மையாக இருந்தது. தந்தி என்றால் மட்டும் வார்த்தைக்கு வார்த்தை காசு என்பதால் சிக்கனமாக எழுதினார்கள். இன்று அவசர உலகம். அனைத்திலும் விரைவு வசதி. மின்னஞ்சலும் இலவசம். ஆனாலும் அது சோம்பலோ, என்ன அவசரமோ தெரியவில்லை, சுருக்கி எழுதுகிறேன் பேர்வழி என்று வார்த்தைகளின் முதல் எழுத்துகளை மட்டும் கோத்து வாக்கியம் அமைத்து விடுகிறார்கள். எழுத்துக் கூட்டியவை என்ன வார்த்தைகள் என்பதை அறிய நவீன அகராதி தேவைப்படுகிறது. ASAK என்பதை ‘அஸக்’ என்று படிக்கக்கூடாதாம். பிறகு? அது Assalamu Alaykkum. பதிலை மனத்திற்குள் WASAM என்று சொல்வார்களா எனத் தெரியவில்லை.

இதென்ன கேடு? இளசுகள் நம்மை ‘பழைய பஞ்சாங்கம்’ என்று கிண்டல் புரிவார்களோ என்பதற்காகவே மூத்த குடிமக்கள் நவீன மாற்றங்களைப் படித்து LOL வேண்டியதாக இருக்கிறது. படித்து ஏன் ‘லொள்’ள வேண்டும் என்று கேட்பீர்களாயின், அது laughing out loud என்பதைக்கூட அறியாத மகா அப்பாவி நீங்கள். போகட்டும் PAW தெரியுமா? இதென்ன மடலா, கேள்வித்தாளா என்று பாதத்தைப் பார்க்காதீர்கள். PAW-வை இறுதியில் பார்ப்போம். இப்பொழுது ஹிஜ்ரி முதலாம் நூற்றாண்டிற்குச் சென்று விடுவோம்.

அறிஞர் ஹஸன் அல்-பஸரீ கலீஃபா உமர் இப்னு அப்துல் அஸீஸுக்கு மேலும் மடல் எழுதி அனுப்பினார். அதிலிருந்தவை இம்மை, இவ்வுலகம், அதன் அவலங்கள்.

அமீருல் மூஃமினீன் அவர்களே! இவ்வுலகம் தற்காலிகமானது, நிரந்தரமற்றது. ஆதம் (அலை) தமது தவறின் காரணமாகவே இங்கு அனுப்பிவைக்கப்பட்டார். ஆகவே, அமீருல் மூஃமினீன் அவர்களே! இவ்வுலக வாழ்க்கையைக் குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள். உலக வாழ்வில் அளவுக்கு அதிகமாய் மூழ்கிவிடாமல் இருப்பதே இவ்வுலக வளங்களுள் சிறப்பானதாகும். செல்வங்களுள் சிறப்பு செல்வப் பகட்டைத் தவிர்த்துக் கொள்வது.

இம்மை வாழ்க்கைக்கு பலியாகும் மனிதர்கள் எக்காலத்திலும் உள்ளனர். அவ்வாழ்க்கை வல்லமையுடன் திகழ்பவர்களுக்கு அவமானத்தையும் பேராசைப் பிடித்து செல்வம் சேர்ப்பவர்களுக்கு வறுமையையும் அளிக்கிறது. அதன் உருவகம் நஞ்சு. நஞ்சென்று அறியாமல் அதை உண்பவன் அதன் விளைவாய் இறந்துவிடுவான்.

எனவே,

காயமுற்ற ஒருவன், தனது காயம் அழுகிப்போனால் அதனால் பின்விளைவுகள் ஏற்படுமே என நினைத்து எவ்விதம் அதற்கு மருந்திட்டு புண்ணை ஆற்றுகிறானோ அதைப் போலவும் நோயுற்ற ஒருவன் அது நீடிக்காமல் இருக்க மருந்து கசப்பேயானாலும் எவ்விதம் பருகுவானோ அதைப்போலவும் இவ்வுலகில் இருந்து கொள்ளுங்கள். இம்மை வாழ்க்கை ஏமாற்றம் அளிக்கத் தக்கது. அது குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள். அது மக்களை மோசம் செய்யும். தனது அழகாலும் கவர்ச்சியாலும் வழிகெடுக்கும். மாய ஒப்பனைகள் புனைந்து, பொய்யான நம்பிக்கை அளித்து ஆசைகாட்டும்.

தன்னை மணந்து கொள்ள விரும்புபவர்களுக்காக அது தன்னை அலங்கரித்துக் கொண்டுள்ளது. அழகிய மணப்பெண்ணைப் போல் உள்ள அதை கண்கள் உற்று நோக்குகின்றன; உள்ளம் மோகம் கொண்டு அடையத் துடிக்கிறது. ஆனால் இம்மை வாழ்க்கை தன்னுடைய அனைத்துக் கணவர்களையும் கொன்றுவிடுகிறது. சமகால கணவர்கள், அது கொன்ற முந்தையக் கணவர்களின் விதியிலிருந்து பாடம் பெறுவதில்லை; முந்தையவர்களும் சமகாலத்தவருக்கு அதன் அபாயத்தைக் குறித்து அறிவுறுத்துவதில்லை.

எவனொருவன் வாழ்க்கையின்மீது காதல் கொண்டு அதில் தனது இச்சையை திருப்திபடுத்திக் கொள்கிறானோ அவன் அதன் விவகாரத்தில் அதிகம் மூழ்கி மேலும் ஏமாற்றமடைகிறான். அவன் எதேச்சாதிகாரியாகி விடுகிறான். அவனுடைய பாதங்கள் வாழ்க்கையிலிருந்து விலக்கப்பட்டு, விளைவாக அவனது வருத்தம் அதிகரித்து, துன்பம் தீவிரமடையும்வரை தான் அல்லாஹ்விடம் திரும்புவோம் என்பதையே அவன் மறந்துவிடுகிறான். அவன் இம்மை வாழ்க்கையிலிருந்து போதிய வெகுமானங்கள் இன்றி வெளியேறுகிறான். நம்பிச் சார்ந்திருக்க உறுதியான பிடிமானங்கள் ஏதும் இன்றி அவன் மறுமை வாழ்கைக்கு அறிமுகமாகிறான்.

அமீருல் மூஃமினீன் அவர்களே! இவ்வாழ்க்கைக் குறித்து எச்சரிகையுடன் இருங்கள். முன்பிருந்ததைவிட அதன்மீது உங்களுக்குக் களிப்பு அதிகமானால், முன்பிருந்ததைவிட அதன்மீது தாங்கள் அதிகம் விழிப்புடன் இருக்க வேண்டும். பகட்டான வாழ்வின் உரிமையாளர்கள் அதில் வசதியும் ஆறுதலும் அடையும்போதெல்லாம் அதைத் தொடர்ந்து அவர்களுக்கு வருவது பேரிடர். இவ்வாழ்க்கையில் வசீகரமாய்த் தோன்றுபவற்றின் பின்னணி கடுந்துன்பத்துடன் தொடர்புடையது. எதையெல்லாம் நிரந்தரம் என்று கருதுகிறோமோ அவை மறையக் கூடியவை. இவ்வுலக இன்பம் துன்பத்துடன் கலந்தது.

எவையெல்லாம் சென்றுவிட்டனவோ அவை திரும்பி வாரா. எவையெல்லாம் வரக்கூடியதோ, அவை அறியப்படாதவை. எனவே அதற்காகக் காத்திருப்பது பயனளிக்காது. அதை விரும்புவது மாயை. அதன் நம்பிக்கை பொய். அதன் மையம் தூய்மையற்றது. அதன் சாரம் துன்பம் சூழ்ந்தது. நிச்சயமாக ஆதமின் மகன் இவ்வாழ்க்கையில் நிலைத்திருக்கும்வரை ஆபத்திலேயே இருக்கிறான்.

அல்லாஹ்விடம் காத்திருக்கும் வெகுமதி என்னவென்று தெரியாதவன் அது தனக்கானது என்று நினைக்கிறான். அல்லாஹ்வினுடைய தண்டனை என்னவென்று தெரியாதவன் அது தனக்கு என்றே நினைக்கிறான். இவ்வுலகிற்கு அதற்குரிய வழியிலான அழிவு உள்ளது. அந்த அழிவு அழிவன்று. இவ்வுலகு தன்னைப் புகழ்பவனை அவமதிக்கிறது. தன்னை மதிப்பவனை ஏளனப்படுத்துகிறது. அதனிடம் முற்றிலும் அடைக்கலம் புகுபவனை அழிக்கிறது.

இவ்வுலகு கொலை புரிவதற்கு அதற்குரிய வகையில் வழியொன்று வைத்துள்ளது. நஞ்சு என்று அறியாமல் அதை உண்பவனைப் போன்றது அது. இவ்வுலகைக் கைவிடுவதில்தான் அதன் தேவைகள் நிறைவுபெறும். அதிலுள்ள ஏழ்மைதான் செல்வம். ஆகவே –

அமீருல் மூஃமினீன் அவர்களே! தன்னுடைய காயத்தைக் குணப்படுத்திக் கொள்பவனைப் போலவும் நோயை குணப்படுத்திக் கொள்ள கசப்பான மருந்தை உட்கொள்பவனைப் போலவும் இவ்வுலகில் வாழுங்கள். மறுமையில் நீடிக்கப்போவது துன்பம் வெறுப்பு. அதைத் தவிர்க்க ஒளிந்து, மறைந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்பவனைப்போல் இம்மையில் இருங்கள்.

இவ்வுலகின் நல்லொழுக்க மக்கள் யாரெனில், அவர்கள் சரியான பாதையைப் பின்பற்றுபவர்கள்; அதில் பணிவடக்கமுடன் தொடர்பவர்கள். அவர்களது உணவு நேர்மையானவற்றிலிருந்து ஈட்டப்பட்டதாகும். தங்களுக்கு உரிமையற்றவற்றிலிருந்தும் காணக் கூடாதவற்றிலிருந்தும் அவர்கள் கண்மூடி விலகிச் செல்பவர்கள். கடலில் இருப்பவர் எந்தளவு அஞ்சுவாரோ அந்தளவு நிலத்தில் அஞ்சுபவர்கள். துன்பத்தில் உழலும்போது எந்தளவு இறைஞ்சுவார்களோ மகிழ்வாய் இருக்கும்போதும் அதேபோன்று இறைஞ்சுபவர்கள்.

அவர்களுக்கான ககால அவகாசம் மட்டும் குறிக்கப்படாமல் இருந்திருந்தால், தண்டனைக்கு அஞ்சியும் வெகுமதியை விரும்பியும் அவர்களது ஆன்மா அவர்களது உடலினுள் தங்கியிருந்திருக்காது. அவர்களது உள்ளத்தில் படைத்தவன் எந்தளவு புகழுக்குரியவன், மேன்மையானவன் என்றால், அவர்களது பார்வையில் படைப்பினங்கள் சிறுமை வாய்ந்தவை.

அமீருல் மூஃமினீன் அவர்களே! இவ்வுலகை வழிப்போக்கனான ஒரு துறவியைப் போன்று பாருங்கள். காதலினால் சித்திரவதையுறுபவனைப் போல் நோக்காதீர்கள். இவ்வுலக இன்பத்தில் மூழ்குபவர்களை அது சித்திரவதை புரிகிறது. அதில் பாதுகாப்பாய் உணர்பவர்களை அது அழிக்கிறது. எது கடந்துவிட்டதோ அதை இவ்வுலகு திரும்பக் கொண்டு வராது. இவ்வுலகில் என்ன வந்து சேரவேண்டுமோ அது உறுதியாக வந்தே தீரும்.

இவ்வுலகைப் பின்பற்றும் ஒவ்வொருவனும் வேதனையும் துன்பமும் அடைவான். ஆகவே எச்சரிக்கையாய் இருக்கவும். அது அளிப்பது பொய் நம்பிக்கை. அது சார்ந்த எதிர்பார்ப்புகள் ஆதாரமற்றவை. அதைச் சார்ந்து வாழ்வது சித்திரவதை. இவ்வுலக அமைதி தெளிவற்றது, மகிழ்ச்சியற்றது. அதில் நீங்கள் எப்பொழுதுமே ஆபத்தில் இருக்கிறீர்கள். அதன் கருணை ஒருநாளில் கழிந்துவிடும். மற்றவை திணறடிக்கும் துன்பம் அல்லது மட்டுமீறிய பேரிடர், அல்லது நிச்சயமான மரணம். ஆகவே கூர்மதியுள்ள நியாயவான்கள் இவ்வுலகில் கடின வாழ்வையே மேற்கொள்வார்கள். உலகில் மரணம் நிச்சயம் என்பதை அவர்கள் அறிந்திருப்பதால் வாழ்வின் இக்கட்டை நினைத்து விழிப்புடன் இருப்பார்கள்.

அந்த மடலைப் படித்துவிட்டு அழுதார் கலீஃபா உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்). தம்மைச் சுற்றியுள்ளவர்களிடம், “அல்லாஹ் ஹஸன் மீது பரிவு கொள்வானாக. நம்மை உறக்கத்திலிருந்து எழுப்புவதை அவர் நிறுத்தவில்லை. நமது கவனக்குறைவிலிருந்து நம்மை எச்சரிப்பதை அவர் நிறுத்தவில்லை. எவ்வளவு சிறப்பானவர் அவர்! மிகத் தேர்ந்த தெளிவான அவரது அறிவுரை, போலியற்றது, அல்லாஹ்வின் உதவியினால் அது வந்துள்ளது.”

இன்று பாரெங்கும் நிகழும் அவலத்திற்கு அடிப்படை இந்த நோய்தான். அனைவருக்கும் இவ்வுலக வாழ்க்கை, இம்மை வெற்றியே முதல் முக்கிய நோக்கம், குறிக்கோளாகிவிட்டது. சொற்ப ஆயுள் கொண்ட உலக வாழ்வைதான் நிரந்தரம் என்று நினைத்து, அதைச் சொர்க்கமாக்கிக் கொள்ள துடிக்கிறது மனது. பட்டம், பதவி, புகழ், பெண், பொன், மண், மண்ணாங்கட்டி, தெருப்புழுதி என்று மக்களினமே அதை நோக்கித்தான் ஓட்டம்.

மாறாக, ‘இது நஞ்சு. இதன் மோகத்தைக் கைவிட்டால் தேவைகள் நிறைவுறும். இவ்வுலக ஏழ்மையே செல்வம்’ – என்ற வாக்கியத்தின் முரணுக்குப் பின்னால் மறைந்திருக்கும் உன்னத உண்மை புரிந்துவிட்டால் போதும். மறுமையின் பாதை புரியும். மாய மாற்றம் சாத்தியமாகும்.

பதில் எழுதினார் கலீஃபா உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்).

ஹஸன் அவர்களே! பயனுள்ள தங்களது அறிவுரை என்னை வந்தடைந்தது. அதில் நான் ஆறுதல் அடைந்தேன். இவ்வுலகை அதன் உண்மை வடிவில் விளக்கியுள்ளீர்கள். அறிவுள்ள மனிதன் அதை உணர்வான்; அச்சம் கொள்வான். எவையெல்லாம் மரணமடைய விதிக்கப்பட்டுள்ளதோ அவை மரணித்து விட்டன. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹு.

அதைப் படித்த ஹஸன் அல் பஸரீ, கலீஃபாவை அறிவுறுத்திய பெருமையைக்கூட தன்னுடையதென்று கருதவில்லை. “அமீருல் மூஃமினீன்! உண்மையைச் சொல்லி அறிவுறுத்துபவனின் செயல் திறமை அல்லாஹ்வினால் ஏற்படுவது” என்று கூறியிருக்கிறார்.

‘தான்’ நீக்கி எல்லாம் ‘அவன்தான்’ என்று வாழ்ந்திருக்கிறார்கள் அவர்கள். மேன்மக்கள்!

இந்த மடலை முடிக்குமுன் PAW வைப் பார்த்துவிடுவோம். அது ‘Parents Are Watching’ என்கிறது இணைய அகராதி. பிள்ளைகளின் இந்தக் குறுந்தகவல் கவலையைப் பெற்றோர் என்றென்றும் தக்கவைத்தால். நம் சமூகத்தில் இன்று புரையோடிவரும் பல அவலங்களைக் கட்டுக்குள் கொண்டுவர உதவும்.

தங்களது உடல் நலம் பேணிக்கொள்ளுங்கள். துஆவில் அடியேனையும் நினைவுகூருங்கள். அடுத்த மடலில் அபூபக்ரு (ரலி) எழுதிய சில விஷயங்களைப் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்.

வஸ்ஸலாம்.

அன்புடன்,

-நூருத்தீன்

வெளியீடு: சமரசம் 16-31, ஆகஸ்ட் 2013

Related Articles

Leave a Comment