54. கஅப் இப்னு மாலிக் (كعب ابن مالك) – 1
“முஹம்மது கொல்லப்பட்டார்” என்று உச்சக் குரலில் கத்தினான் இப்னு காமிய்யா. ஆயுதங்களின் ஒலி, படை வீரர்களின் இரைச்சல், ஊக்க மங்கையரின் வெறியூட்டும் பாடல்கள் ஆகிய போர்க்களத்தின் அத்தனை சப்தங்களையும் மீறி அந்த வாக்கியம் அந்த இடத்தில் இடியொன்றை இறக்கியது. உஹதுக் களமெங்கும் அதிர்வலை பரவியது. அதற்குச் சற்றுமுன் –
முஸ்அப் இப்னு உமைர் ரலியல்லாஹு அன்ஹு, நபியவர்களின் கொடியை உயர ஏந்தி, “அல்லாஹு அக்பர்! அல்லாஹ்வே மிகப் பெரியவன்” என்று உரக்க முழக்கமிட்டு, எதிரிகளுடன் கடுமையாகப் போரிட்டுக் கொண்டிருந்தார். நபியவர்களை நோக்கிச் செல்லும் எதிரிகளின் கவனத்தையெல்லாம் தம் பக்கம் திருப்பி, தாமே ஒரு தனிப்படை போல் படு பயங்கரமாய்ச் சண்டை. அப்பொழுது, குரைஷிக் கூட்டத்தைச் சேர்ந்த இப்னு காமிய்யா என்பவன் முஸ்அபை வேகமாய் நெருங்கித் தனது வாளைச் சுழற்ற அது முஸ்அப் இப்னு உமைரின் வலக்கையைத் துண்டித்தது. கரம் கழன்று தரையில் வீழ்ந்தது. குழாயிலிருந்து பீய்ச்சும் தண்ணீர்போல் குருதி பீறிட்டது.
“முஹம்மது (ஸல்) தூதரே அன்றி வேறல்லர்; அவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் சென்றுபோயினர்” என்ற குர்ஆனின் 3ஆம் அத்தியாயத்தின் 144ஆவது வசனத்தை உச்சரித்துக்கொண்டே கொடியைத் தம் இடக்கையில் ஏந்திக் கொண்டார்; போரைத் தொடர்ந்தார் முஸ்அப். ஆனால் அந்தக் குரைஷி அவரது இடக்கையையும் துண்டாட, இரத்தச் சகதியில் வீழ்ந்தது அந்தக் கரமும். அதையும் பொருட்படுத்தவில்லை முஸ்அப்! இரத்தம் பீறிட புஜத்தில் மீந்து தொங்கிக்கொண்டிருந்த கைகளைக் கொண்டு கொடியைத் தம் மார்புடன் அணைத்துக் கொண்டு, அதே வசனத்தை மீண்டும் உச்சரித்தார். அப்பொழுது மற்றொருவன் தன் ஈட்டியைக் கொண்டு முஸ்அபைத் தாக்க உயிர் நீத்தார் முஸ்அப் இப்னு உமைர் ரலியல்லாஹு அன்ஹு.
தன்னால் கொல்லப்பட்டவர் முஹம்மது நபி என்று தவறாகக் கருதிவிட்டான் இப்னு காமிய்யா. கெட்ட மகிழ்ச்சியில், “முஹம்மது கொல்லப்பட்டார்” என்று உச்சக் குரலில் அவன் கத்த, திடுமென்று எழுந்த உண்மையற்ற அந்த வாக்கியம், முஸ்லிம் படையினர் மத்தியில் இடியொன்றை இறக்கியது. அந்த அதிர்வு சரசரவென்று பரவி, முஸ்லிம்களை வேரோடு சாய்த்ததுபோல் அப்படியொரு பாதிப்பு! “நபியவர்களே இறந்துவிட்டார்களா?” என்று பீதியும் குழப்பமும், ஆற்றாமையும் முஸ்லிம்களை நிலைகுலைய வைத்தன. அதே நேரத்தில் அது குரைஷிப் படையினருக்கு ஏற்படுத்திய உற்சாகம் வெகு அதிகம். ஒரு வழியாகத் தங்களது நோக்கம் நிறைவேறியது என்று ஏக ஆனந்தம்.
முஸ்அப் சாய்ந்ததும் அவரிடமிருந்த கொடியை அலீ ரலியல்லாஹு அன்ஹுவிடம் ஒப்படைத்தார்கள் நபியவர்கள். இப்பொழுது களத்தில் அலீ சுழல ஆரம்பித்தார். எப்படியும் நபியவர்களைப் பாதுகாப்பான பகுதிக்கு அழைத்துச் சென்று விடவேண்டும் என்ற கடுமையான சூழ்நிலை என்பதால், அவரது சண்டையில் உச்சக்கட்ட ஆக்ரோஷம். அவரும் மற்றும் சில தோழர்களும் குரைஷிகளைத் தாக்கிக் கொண்டே, தங்களையும் தற்காத்துக் கொண்டு நபியவர்களைப் பாதுகாவலான பகுதிக்கு அழைத்து வந்து விட்டனர். அதைக் கவனித்து விட்டார் ஒரு தோழர். நபியவர்கள் கொல்லப்படவில்லை; உயிருடன் இருக்கிறார்கள் என்ற அந்தக் காட்சி அவரை மகிழ்ச்சியின் உச்சிக்கு இட்டுச் சென்றது. ‘இது போதுமே. மற்றதெல்லாம் துச்சம்’ என்று அவரது உடலிலும் மனத்திலும் அது ஆனந்த மின்னலைகளை ஏற்படுத்த, உடனே தம் தொண்டை கிழியக் கத்தினார்.
“முஸ்லிம்களே! மகிழ்வுறுங்கள்! அல்லாஹ்வின் தூதர் இதோ இருக்கிறார்கள்!”
எதிரிகளுக்கு அந்த இடம் தெரியவேண்டாம் என்ற போர்த் தந்திரத்துடன் நபியவர்கள் அவரைத் தடுத்துச் செய்கை புரிய, அதைக் கவனிக்கும் நிலையில்கூட அவர் இல்லை. கத்தினார். உரக்கக் கத்தினார். சற்றுமுன் இப்னு காமிய்யாவின் வாக்கியம் எத்தகைய பாதகம் புரிந்ததோ, அதற்கு நேர்மாறாய் இந்த வாக்கியம் முஸ்லிம்கள் மத்தியில் மாயம் புரிந்தது. சிதறியிருந்த படை விறுவிறுவென ஒன்றிணைய ஆரம்பித்தது. திசை மாறியிருந்த போர் முஸ்லிம்களைக் கட்டுக்குள் கொண்டு வந்தது.
அந்த உஹதுப் போரில் கத்திய அந்தத் தோழர் அக்களத்தில் தமது வீரத்திற்குச் சான்றாய்ப் பெற்ற விழுப்புண்கள் பதினேழு. அந்தத் தோழர், கஅப் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு.
oOo
முஸ்அப் இப்னு உமைரின் பிரச்சாரத்தின் பயனால் மதீனாவில் இஸ்லாத்தை ஏற்றிருந்தவர்களுள் 73 ஆண்களும் இரண்டு பெண்களும் மக்காவிற்கு வந்திருந்தார்கள்; இரண்டாம் அகபா உடன்படிக்கை ஏற்பட்டது என்று ஹபீப் பின் ஸைத் வரலாற்றில் பார்த்தோமே, அதில் இடம் பெற்றிருந்த முக்கியமான தலைவர்களுள் ஒருவர் கஅப் இப்னு மாலிக். அந்த நிகழ்வு கஅபின் வார்த்தைகளில் ஹதீத் நூல்களில் பதிவாகியுள்ளது.
அல் அகபா எனும் சிறுகுன்றில் இரவு நேரத்தில் நபியவர்களை அம்மக்கள் ரகசியமாகச் சந்திப்பது என்று முடிவானது. நபியவர்கள் தம் சிற்றப்பா அப்பாஸ் இப்னு முத்தலிபுடன் வந்து சேர்ந்தார்கள். அப்பாஸ் அப்பொழுது முஸ்லிமாக இல்லையென்றாலும் தம் அண்ணனின் மைந்தர்மீது அவருக்கு அளவற்ற பாசம்; மெய் கவலை; உள்ளார்ந்த அக்கறை. வெகு தொலைவான ஊரிலிருந்து வந்துள்ள மக்களிடம் தம் குலத்து மைந்தரை, அசட்டையாக ஒப்படைத்துவிட அவர் மனம் துணியவில்லை. அப்பாஸ் மதீனத்து முஸ்லிம்களிடம் பேசினார்.
“கஸ்ரஜ் கூட்டத்தினரே! நிச்சயமாக முஹம்மது எங்களிடம் எவ்வாறு இருக்கிறார் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். எங்கள் கூட்டத்தில் இணைவைக்கும் கொள்கையில் இருப்பவர்களிடமிருந்து நாம் அவரை இதுநாள் வரை பாதுகாத்து வந்திருக்கிறோம். அவர் எங்களது கூட்டத்தில் கண்ணியமாகவே இருக்கிறார். அதே நேரத்தில் அவரது ஊரில் பாதுகாப்புடனும் இருக்கிறார். எனினும், அவர் உங்களுடன் இணைந்துவிடவும் உங்களுடன் ஒன்றிவிடவும் விரும்புகிறார். நீங்கள் அவருக்குத் தரும் வாக்கைக் காப்பாற்றி எதிரிகளிடமிருந்து அவரைப் பாதுகாப்பவர்களாக இருந்தால் அவரை அழைத்துச் செல்லலாம். அவ்வாறின்றி, நீங்கள் அவரை எதிரிகளிடம் ஒப்படைத்து விடுவீர்கள்; இங்கிருந்து அழைத்துச் சென்றவுடன் கைவிட்டு விடுவீர்கள் என்றிருப்பின் இப்போதே அவரை விட்டுவிடுங்கள். ஏனெனில், அவர் தமது கூட்டத்தினருடன் தமது ஊரில் கண்ணியத்துடனும் பாதுகாப்புடனும்தான் இருக்கின்றார்.”
அப்பாஸ் பேசி முடித்ததும், கஅப் இப்னு மாலிக், “தாங்கள் கூறியதை நாங்கள் கேட்டுவிட்டோம்” எனக்கூறிவிட்டு, “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் பேசுங்கள். உங்களுக்கும் உங்களுடைய இறைவனுக்கும் நீங்கள் விரும்பியதையெல்லாம் எங்களிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்” என்றார்.
மதீனத்துத் தோழர்களின் உறுதியையும் வீரத்தையும் விளங்க வைத்தப் பேச்சு அது. தாங்கள் மேற்கொள்ள இருக்கும் பொறுப்பையும் அதன் கடுமையான பின்விளைவுகளையும் அதைத் தாங்கிக் கொள்வதில் அவர்களுக்கு இருந்த உறுதியையும் மனத் தூய்மையையும் அந்த பதில் தெளிவாய்ச் சொன்னது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் பேசினார்கள்; குர்ஆனை ஓதிக் காண்பித்தார்கள். அல்லாஹ்வின் பாதையில் அவர்களை அழைத்து, இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கு ஆர்வமூட்டினார்கள். பிறகு, “நீங்கள் உங்கள் மனைவிகளையும் பிள்ளைகளையும் எந்தளவு அக்கறையுடன் பாதுகாப்பீர்களோ அதே போன்று என்னையும் பாதுகாக்க வேண்டும் என்று நான் உங்களிடம் உறுதிமொழி கேட்கிறேன்” என்று கூறி முடித்தார்கள்.
அப்போது பராஆ இப்னு மஅரூர் ரலியல்லாஹு அன்ஹு நபியவர்களின் கையைப் பிடித்து, “சத்திய மார்க்கத்தைக் கொண்டு உங்களை நபியாக அனுப்பிய அல்லாஹ்வின் மீது ஆணையாக! எங்களை நாங்கள் பாதுகாப்பது போன்றே உங்களையும் நிச்சயம் நாங்கள் பாதுகாப்போம்! அல்லாஹ்வின் தூதரே! எங்களிடம் வாக்குறுதியும் உடன்படிக்கையும் பெற்றுக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாங்கள் போரின் மைந்தர்கள்; கவச ஆடை அணிந்தவர்கள்; பரம்பரைப் பரம்பரையாகப் போர் செய்து பழக்கப்பட்டவர்கள்” என்று வீர உரையாற்றினார்.
அபுல் ஹைசம் இப்னு தைம்ஹான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் குறுக்கிட்டு, “அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கும் யூதர்களுக்குமிடையே சில உடன்படிக்கை உறவுகள் இருக்கின்றன. நாங்கள் அதைத் துண்டித்து உங்களுடன் சேர்ந்து கொள்கிறோம். பிறகு ஒரு காலத்தில் அல்லாஹ் உங்களுக்கு வெற்றியைக் கொடுத்துவிட்டால் நீங்கள் எங்களை விட்டுவிட்டு உங்களது கூட்டத்தினரிடம் சென்று விடுவீர்களா?” என்று கேட்டார்.
அந்த நியாயமான கவலையைக் கேட்டு நபியவர்கள் புன்முறுவல் பூத்தார்கள். “அவ்வாறில்லை. உங்களது உயிர் எனது உயிராகும்; உங்களது அழிவு எனது அழிவாகும். நான் உங்களைச் சேர்ந்தவன்; நீங்கள் என்னைச் சேர்ந்தவர்கள். நீங்கள் போர் புரிபவர்களுடன் நானும் போர் புரிவேன்; நீங்கள் சமாதான உடன்படிக்கை செய்பவர்களுடன் நானும் சமாதான உடன்படிக்கை செய்து கொள்வேன்.”
இந்நிகழ்வு வரலாற்றில் எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைந்து போனதோ, அந்தளவு மிகவும் ஆழமாக கஅப் இப்னு மாலிக்கின் உள்ளத்துள்ளும் மிகச் சிறப்பான இடத்தைப் பெற்றுவிட்டது. அதைப் பிற்காலத்தில் அவரே விவரித்திருக்கிறார்.
“நபியவர்கள் கலந்து கொண்ட எந்தப் போரிலும் நான் கலந்து கொள்ளாமல் இருந்ததில்லை; பத்ருப் போரையும் மற்றொரு போரையும் தவிர. ஆனால் பத்ரில் கலந்து கொள்ளாத எவரும் அல்லாஹ்வினால் கண்டிக்கப் படவில்லை. ஏனெனில் நபியவர்கள் குறைஷிகளின் வணிகக் குழுவை வழி மறிக்க நாடியே பத்ருக்குப் போனார்கள். போன இடத்தில் போரிடும் திட்டம் இல்லாமலேயே அவர்களையும் எதிரிகளையும் அல்லாஹ் பத்ருக் களத்தில் சந்திக்கும்படி செய்துவிட்டான். ஆனால், ‘இஸ்லாத்தில் நாங்கள் நிலைத்திருப்போம்’ என அன்சாரிகள் நாங்கள் உறுதிமொழி அளித்த ‘அகபா இரவில்’ நபியவர்களுடன் நானும் இருந்தேன். இதற்கு பதிலாக பத்ருப் போரில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்க வேண்டும் என நான் விரும்பியதில்லை; ‘அல் அகபா’ பிரமாணத்தைவிட ‘பத்ரு’ மக்களிடையே பெயர் பெற்றதாக இருந்தாலும் சரியே!”
அகபா இரவு, அன்று நபியவர்களை முதன்முதலாகச் சந்தித்தது, அவர்களது கரம் பற்றி உடன்படிக்கை அளித்தது ஆகியன அந்தளவு கஅபின் மனத்தில் தைத்துப் போயிருந்தன. நபியவர்களின் மீது ஆத்மார்த்தப் பாசம் ஏற்பட்டுப் போயிருந்தது. அதனால்தான் உஹதுக் களத்தில் வதந்தி பரவி, மனம் அதிர்ச்சியின் உச்சத்தைத் தொட்டிருந்த நிலையில் மீண்டும் நபியவர்களைக் கண்டதும் தொண்டை கிழிய மகிழ்ச்சியில் அலற வைத்தது.
கஅபுக்கு நல்ல நாவண்மை; சிறந்த கவிஞர். நபியவர்களின் மூன்று கவிஞர்களுள் அவரும் ஒருவர். மற்ற இருவர் ஹஸ்ஸான் இப்னு தாபித், அப்துல்லாஹ் இப்னு ரவாஹா ரலியல்லாஹு அன்ஹும். தவிர, மக்காவிலிருந்து புலம்பெயர்ந்துவந்த முஹாஜிர்களுக்கு அன்ஸார்களுடன் சகோதர உறவு உருவாக்கித் தந்தபோது, தம் அத்தையின் மகன் ஸுபைர் இப்னு அவ்வாமையும் கஅப் இப்னு மாலிக்கையும் சகோதரர்களாக ஆக்கிவைத்தார்கள் நபியவர்கள்.
நபியவர்கள் ஒரு வார்த்தை சொன்னால், ஒரு கட்டளை இட்டால், உடனே அப்பொழுதே அவ்வாறே நிறைவேற்றும் வழக்கமுள்ளவர் கஅப். இப்னு அபீ ஹத்ரத் எனும் தோழருக்கு கஅப் கடன் அளித்திருந்தார். அதை அவர் திருப்பிச் செலுத்துவதில் தாமதமானது. ஒருநாள் பள்ளிவாசலில் இப்னு அபீ ஹத்ரத்தைச் சந்தித்தவர், தாம் கொடுத்த கடனைத் திருப்பிச் செலுத்தும்படி கேட்டார். அந்தப் பேச்சு அவர்கள் இருவரிடையே வாக்குவாதமாக மாறி இருவரின் குரலும் உயர்ந்துவிட்டன. அச்சமயம் தம் வீட்டிலிருந்த நபியவர்கள், அவர்களின் வாக்குவாத இரைச்சலைக் கேட்டு, தம் அறையின் திரையை நீக்கி அவர்கள் இருவரிடம் வந்துவிட்டார்கள்.
“கஅப்!” என்று அழைத்தார்கள்.
“இதோ வந்து விட்டேன், இறைத்தூதர் அவர்களே!” என்று விரைந்து வந்தார் கஅப்.
“இந்த அளவை உன் கடனிலிருந்து குறைத்துக் கொள்” என்று கூறிப் பாதியளவு கடனைக் குறைத்துக் கொள்ளும்படி விரலால் சைகை காட்டினார்கள்.
அதற்கு கஅபின் பதில்? ‘என் பணம்; என் உரிமை’ என்று முகம் கோணவில்லை; வாய் முணுமுணுக்கவில்லை. தயக்கம் சிறிதும் இல்லை. செவியுற்றார். உடனே அடிபணிந்தார்.
“அவ்வாறே செய்து விட்டேன், இறைத்தூதர் அவர்களே!” என்று வந்தது பதில். பிறகு நபியவர்கள் இப்னு அபீ ஹத்ரத்தை நோக்கி, “எழுந்து சென்று கடனை அடைப்பீராக!” என்று கூறினார்கள்.
நபியவர்கள்மீது இத்தகு பாசம், நேசம், அடிபணிதல் என்றிருந்த கஅப் இப்னு மாலிக்கின் வாழ்வில் பெரும் நிகழ்வொன்று நடைபெற்றது. அசட்டைத்தனத்தால் ஒத்திப்போட்ட ஒரு விஷயம். அது, அல்லாஹ்வின் அருள் மட்டும் இல்லையெனில் நயவஞ்சகர்களின் பட்டியலில் கஅபுக்கு இட ஒதுக்கீடு கிடைத்திருக்க வேண்டிய பெரும் பாவத்திற்கு அடித்தளமிட்ட நிகழ்வு.
என்னவென்று பார்ப்போம்.
தொடரும், இன்ஷா அல்லாஹ்…
– நூருத்தீன்
oOo
சத்தியமார்க்கம்.காம்-ல் 25 ஆகஸ்ட் 2013 அன்று வெளியான கட்டுரை