தோழர்கள் – 69 அபூமூஸா அல் அஷ்அரீ (ரலி) – பகுதி 2

69. அபூமூஸா அல் அஷ்அரீ (أبو موسى الأشعري) – 2

லீஃபா உமரின் ஆட்சியின்போது பாரசீகத்தில் தொடர்ந்து யுத்தங்கள் நிகழ்ந்து வந்தன. பஸ்ராவின் ஆளுநராக இருந்த அபூமூஸா, தாமே நேரடியாக ஜிஹாதுகளில் பங்கெடுத்துப் போர் புரிந்தார். பஸ்ராவின் பல பகுதிகளுக்கு அவர் தேர்ந்தெடுக்கும் தளபதிகள் படையெடுத்துச் சென்றனர். ஃகும் (Qum), ஃகதான் (Qathan) நகரங்கள் கைப்பற்றப்பட்டபோது படை அணியின் தளபதி அபூமூஸா. அவரது தூரநோக்கும் தெளிவான கணிப்பும் போர்க்களத்தில் முஸ்லிம்கள் எதிரிகளிடம் ஏமாற்றமடையாமல் இருக்க உதவின.

ஸஸானியர்களின் பகுதிகளுக்கு அபூமூஸாவின் தலைமையில் முஸ்லிம்களின் படை சென்றிருந்தது. இஸ்ஃபஹான் பகுதியின் மக்கள் அவரிடம் வந்து, ‘ஜிஸ்யா அளித்து விடுகிறோம். போரைத் தவிர்த்துக் கொள்வோம், சமாதானம் ஏற்படுத்திக் கொள்வோம்’ என்றனர். ஆனால் அவர்களது உண்மையான நோக்கம் வேறாக இருந்தது. அவர்களுக்குத் தேவை சற்று கால அவகாசம். அதை ஏற்படுத்திக்கொண்டு முஸ்லிம்களின்மீது தாக்குதல் தொடுப்பது என்பது அவர்களது நயவஞ்சகத் திட்டம்.

அதை யூகித்துவிட்ட அபூமூஸா சமாதானத்தை ஏற்றுக்கொண்டாலும் மிகுந்த எச்சரிக்கையுடன் எந்த அசம்பாவிதத் தாக்குதலுக்கும் தயாராகவே இருந்தார். பின்னர் ஒருநாள் அவர்கள் திடீரெனத் தாக்குதல் தொடுத்தபோது, அவருக்கு எந்தவித அதிர்ச்சியும் ஏற்படவேயில்லை. ‘இதற்குத்தானே காத்திருந்தேன்’ என்பதுபோல் சடுதியில் அவர்களுடன் கடுமையான போரைத் துவக்கி…. மறுநாள் மதியத்திற்குள் தெளிவான வெற்றி.

தஸ்தர் போர் நினைவிருக்கிறதா? முஜ்ஸஅதிப்னி ஃதவ்ருஸ் ஸதூஸீ வரலாற்றில் கடந்து வந்தோமே, அதைச் சிறிது இங்கு நினைவுபடுத்திக் கொள்வோம்.

தஸ்தர் நகருக்குள் சென்று பாதுகாப்பாக ஒளிந்து கொண்ட ஹுர்முஸான், நகரின் சுவருக்கு வெளியே ஆழமான அகழியொன்று வெட்ட ஏற்பாடு செய்து, முஸ்லிம்கள் எளிதில் கடக்க இயலாத வகையில் பக்காவாய் அரண் உருவாக்கிவிட்டான். அகழிக்கு அடுத்தத் தடுப்பாகப் பாரசீகத்தின் மிகச் சிறந்த படை வீரர்கள் நிறுத்தப்பட்டனர்.

முஸ்லிம் படைகளின் தளபதி அபூஸப்ரா இப்னு அபி ருஹ்ம் நிலைமையை ஆராய்ந்தவர் கலீஃபா உமருக்குத் தகவல் அனுப்பினார். “கூடுதல் படை வேண்டும்!”

கலீஃபாவிடமிருந்து பஸ்ராவில் இருந்த அபூமூஸா அல் அஷ்அரீ ரலியல்லாஹு அன்ஹுவுக்குத் தகவல் பறந்தது. “தாங்கள் ஒரு படை திரட்டிக் கிளம்பிச் சென்று தஸ்தரில் தங்கியுள்ள படையுடன் இணைந்து கொள்ளுங்கள். பஸ்ராவின் வீரர்களுக்கு நீங்கள் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். அபூஸப்ரா அனைத்துப் படைகளுக்கும் தலைமை வகிக்கட்டும்.”

தஸ்தர் நகரைச் சுற்றிவளைத்த முஸ்லிம் படைகளை அகழியும் வீரர்களின் அரணும் கோட்டையும் படுபாதுகாப்பாய் ஹுர்முஸானை உள்ளே வைத்துப் பொத்திக்கொண்டு வரவேற்றன. நேரடிப் போருக்கு ஏதும் வழியில்லை என்று தெரிந்தது முஸ்லிம்களுக்கு. “கூடாரம் அமையுங்கள். முற்றுகை தொடங்கட்டும்!” என்று கட்டளையிடப்பட, தொடங்கியது முற்றுகை.

ஒருநாள் அல்ல, ஒரு மாதம் அல்ல, ஏறக்குறைய பதினெட்டு மாதங்கள் நீடித்தது இந்த முற்றுகை.

உடைக்க இயலாத பெரும் அரணாய் நின்று கொண்டிருந்த தஸ்தரின் அந்த நெடிய சுவரை ஒருநாள் அபூமூஸா கூர்ந்து பார்வையிட்டுக் கொண்டேயிருந்தார். எங்காவது, ஏதாவது ஒருவழி தென்படாதா என்று கவலையுடன் சுற்றிவர, விண்ணிலிருந்து வந்து விழுந்தது ஓர் அம்பு. அதன் நுனியில் செய்தி ஒன்று!

பிரித்துப் படித்தால், “முஸ்லிம்களை நம்பலாம் என்று எனக்கு உறுதியாகிவிட்டது. எனக்கும் என் குடும்பத்தினருக்கும் என்னைச் சேர்ந்த சிலருக்கும் நீங்கள் அபயம் அளிக்க வேண்டும். எனது உடைமைகளுக்கு நீங்கள் பாதுகாவல் அளிக்கவேண்டும். அதற்கு என்னுடைய கைம்மாறு உண்டு. நகருக்குள் ஊடுருவும் ஓர் இரகசியப் பாதை எனக்குத் தெரியும். அதை நான் உங்களுக்குத் தெரிவிப்பேன்”

செய்தியைப் படித்த அபூமூஸா அவர்களுடைய பாதுகாவலுக்கு உறுதிமொழி அளிக்கும் பதிலொன்றை உடனே எழுதி, அதை ஓர் அம்பில் கட்டி உள்ளே எய்தார். அம்பஞ்சல் வேலை செய்தது. அன்றைய இரவின் இருட்டில் யாருக்கும் தெரியாமல் அந்த மனிதன் நகருக்கு வெளியே வந்து அபூமூஸாவைச் சந்தித்தான்.

“நாங்கள் உயர்குடியைச் சேர்ந்த மக்கள். ஆனால் ஹுர்முஸான் என் அண்ணனை அநியாயமாகக் கொலை செய்துவிட்டு என் அண்ணனின் குடும்பத்தையும் உடைமைகளையும் தனதாக்கிக் கொண்டான். இப்பொழுது அவனுக்கு என்மேல் கடுமையான கடுப்பு. அவனிடமிருந்து எந்த நொடியும் ஆபத்து வரலாம் என்ற பயத்திலேயே நானும் என் குடும்பமும் உள்ளோம். அவனது அநீதியை மிகக் கடுமையாய் வெறுக்கிறோம். முஸ்லிம்களான உங்களது நேர்மை எங்களுக்கு மிகவும் உவப்பானதாய் இருக்கிறது. அவனது துரோகத்தைவிட உங்களது வாய்மை மகா மேன்மை. தஸ்தர் நகரினுள் ஊடுருவும் ரகசியப் பாதை ஒன்றை உங்களுக்குக் காட்ட நான் முடிவெடுத்துவிட்டேன். அதன் வழியே நீங்கள் நகருக்குள் புகுந்துவிட முடியும். உங்களுள் சிறந்த வீரரும் மதிநுட்பம் வாய்ந்தவரும் நன்றாக நீச்சல் அறிந்தவருமான ஒருவரை என்னுடன் அனுப்புங்கள். நான் அவருக்கு வழி காண்பிக்கிறேன்”

அபூமூஸா, முஜ்ஸாவை அனுப்பினார். முக்கிய ஆலோசனைகளை அவருக்கு வழங்கினார் அபூமூஸா. “கவனமாய்ப் பாதையை மனதில் குறித்துக் கொள்ளுங்கள். நகரின் வாயில் எங்கு அமைந்திருக்கிறது என்பதை அறிய வேண்டியது முக்கியம். ஹுர்முஸான் எப்படி இருப்பான், எங்கு இருக்கிறான் என்பதை அறிய வேண்டும். அடுத்து இந்தப் பணியில் மிகவும் கவனம் தேவை. யாருக்கும் எந்தச் சந்தேகமும் ஏற்படாமல் காரியமாற்றித் திரும்ப வேண்டும்”

“அப்படியே ஆகட்டும்” என்று கூறிவிட்டு இரவின் இருளில் அந்தப் பாரசீகருடன் கிளம்பினார் முஜ்ஸா.

மலையைக் குடைந்து அமைத்த சுரங்கவழி ஒன்று இருந்தது. அது தஸ்தர் நகரையும் ஆறு ஒன்றையும் இணைத்தது. அதன் வழியே தொடங்கியது பயணம். சில இடங்களில் அந்தச் சுரங்கவழி அகலமாய் இருக்க நீரினுள் நடந்தே செல்ல முடிந்தது. வேறு சில இடங்களில் மிகக் குறுகலாய் நீந்தி மட்டுமே செல்ல வேண்டிய நிலை. சில இடங்கள் வளைந்து நெளிந்து இருந்தன. நெடுஞ்சாலையிலிருந்து கிளைச் சாலைகள் பிரிவதைபோல் அங்கெல்லாம் இவர்கள் சென்று கொண்டிருந்த சுரங்கவழிப் பாதையிலிருந்து கிளைகள் பிரிந்திருந்தன. வேறு சில இடங்களில் வெகு நேராய் எளிதாய்க் கடக்கும் வகையில் அமைந்திருந்தது பாதை.

மெதுமெதுவே முன்னேறிச் சென்று கொண்டிருந்தார்கள் முஜ்ஸாவும் அந்த மனிதனும். ஒருவழியாய் சுரங்கப்பாதை தஸ்தர் நகரினுள் வந்து முடிய, நகருக்குள் அடியெடுத்து வைத்தார் முஜ்ஸா. தேர்ந்த சுற்றுலா வழிகாட்டிபோல் ரகசியமாய் முஜ்ஸாவை நகரினுள் கூட்டிவந்த அந்தப் பாரசீக மனிதன், ஹுர்முஸான் இருக்கும் இடத்திற்கு அருகில் அழைத்துச் சென்று மிகத் தெளிவாக அடையாளம் காட்டினான். “அதோ அவன்தான் ஹுர்முஸான். இதுதான் அவன் இருக்கும் இடம், நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்,” என்று தெரிவித்துவிட்டான். அந்த மனிதனுக்கு நன்றி தெரிவித்துவிட்டு விடிவதற்குள் வந்து வழியே தமது இருப்பிடத்திற்குத் திரும்பினார் முஜ்ஸா.

அபூமூஸாவைச் சந்தித்து நடந்த அனைத்தையும் விவரிக்க, அடுத்துப் பரபரவெனக் காரியம் துவங்கியது. சிறப்பான முந்நூறு வீரர்களைத் தேர்ந்தெடுத்தார் அபூமூஸா. பொறுமையிலும் உடல் வலிமையிலும் உளவலிமையிலும் சிறந்தவர்கள் அவர்கள். முக்கியமாய் நீந்துவதில் அவர்களுக்கு அசாத்தியத் திறமை இருந்தது. அவர்களுக்கு முஜ்ஸஅதிப்னி ஃதவ்ர் தலைவர். அந்த கமாண்டோ படைக்கு உத்தரவு வழங்கப்பட்டது.

“வெற்றிகரமாய் ஊடுருவி நகரின் உள்ளே நுழைந்ததும் ‘அல்லாஹு அக்பர்’ என்று உரத்து ஒலியெழுப்புங்கள். வெளியில் உள்ளவர்களுக்கு அதுவே சங்கேதக் குறியீடு. அதைக் கேட்டதும் வெளியில் உள்ள படை நகரைத் தாக்கத் துவங்கும்.”

அடுத்து நிகழ்ந்த போரும் தஸ்தர் வெற்றி கொள்ளப்பட்டதும் நாம் முன்னரே வாசித்த வரலாறு.

oOo

ஆளுநர், கல்வியாளர், போர் வீரர் என்ற பணிகள் மட்டுமின்றி நீதிபதியாகவும் அபூமூஸாவின் பணி தொடர்ந்தது. தோழர்களுள் மூத்த அறிஞர்; சட்ட நிபுணர் என்ற தகுதிகள் அமைந்திருந்ததால், வரலாற்றில் புகழ்பெற்ற இஸ்லாமிய நீதிபதிகளுள் அவர் ஒருவர். சிறந்த நீதிபதிகளாகக் கருதப்பட்ட உமர், அலீ, ஸைது இப்னு தாபித், ஆகியோர் அடங்கிய பட்டியலில் அடுத்து முக்கியமானவர் அபூமூஸா அல்-அஷ்அரீ.

மதீனாவில் இருந்த கலீஃபா உமருக்கும் பஸ்ராவில் இருந்த அபூமூஸாவுக்கும் இடையே பலதரப்பட்ட வழக்குகள், நீதித்துறை சார்ந்த சட்டங்கள் என்று ஏகப்பட்ட தகவல் பரிமாற்றங்கள் நிகழ்ந்தன. கூடவே, மக்கள் வரும்போது அவர்களிடம் எப்படி நடந்துகொள்வது, அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்வது எப்படி என்று கலீஃபா உமர் அவருக்கு நிறைய ஆலோசனைகளையும் எழுதி அனுப்பினார்.

ஒரு மடலில், “எவருடைய ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்களோ அவரே நற்பேறு பெற்றவர். எவருடைய ஆட்சியில் மக்கள் இழிநிலையில் இருக்கிறார்களோ அவரே இழிவானவர். மக்களுடைய செல்வத்தைச் சுரண்டாமல் எச்சரிக்கையுடன் இருக்கவும். இல்லையெனில் உம்முடைய பணியாளர்களும் அவ்விதம் செய்துவிடுவர். பிறகு உம்முடைய உவமையானது, பசுமை நிலத்தைக் காணும் கால்நடை அதில் உண்டு கொழுக்க நினைத்து, அந்தக் கொழுப்பினாலேயே மடிந்துவிடுவதைப் போலாகிவிடும்” என்று அறிவுரை பகர்ந்திருந்தார் உமர்.

பாராஸாங் என்பது பண்டைய பாரசீகர்கள் பயன்படுத்திய தூர அளவையாகும். ஒரு பாராஸாங் என்பது 5.6 கி.மீ

பஸ்ரா நகர மக்களுக்காகக் கால்வாய் ஒன்றை வெட்டும்படி அபூமூஸாவுக்குக் கட்டளையிட்டார் உமர் ரலியல்லாஹு அன்ஹு. பாரசீகத்தின் அல்-அப்லாஹ், தஸ்த், மைஸன் பகுதிகள் ஏற்கெனவே முஸ்லிம்கள் வசமாகியிருந்தன. அதில் அல்-அப்லாஹ் நகரம் பஸ்ராவிலிருந்து மூன்று பாராஸாங் தூரம். தோராயமாக 18 கி.மீ. அவ்வளவு நீளத்திற்குக் கால்வாய் வெட்டி பஸ்ரா நகர மக்களின் நீர்த் தேவை நிறைவேற்றப்பட்டது. நகரைத் திட்டமிட்டு வடிவமைத்தல் என்பது கலீஃபா உமரின் காலத்திலேயே மிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு அவ்விஷயத்தில் அக்காலத்திலேயே முஸ்லிம்களின் அரசு முன்னோடியாகத் திகழ்ந்திருக்கிறது என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். செழிப்படைந்த பஸ்ராவை நோக்கி வர்த்தகர்களும் மற்றவர்களும் வந்து குடியேற… செல்வம் பெருகிய நகரமானது பஸ்ரா.

ஆட்சியாளர்களின் சுரண்டலும் குடிமக்களின் பேரவலமும் இயல்பாகவே மாறிவிட்ட இக்காலத்தில் அப்படியான ஆட்சியும் ஆட்சியாளர்களும் நமக்குக் கனவில் வாய்த்தாலே பெரும்பேறு.

“அப்துல்லாஹ் இப்னு ஃகைஸுக்கு …” என்று அபூமூஸாவின் இயற்பெயரைக் குறிப்பிட்டு எழுதப்பட்டுள்ள மற்றொரு மடல் அந்தப் பொற்கால ஆட்சியின் சிறப்புக்கு ஓர் உரைகல்.

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன், அல்லாஹ்வின் பெயரால். அல்லாஹ்வின் அடிமை, கத்தாபின் மகன், அமீருல் மூஃமினிடமிருந்து அப்துல்லாஹ் இப்னு ஃகைஸுக்கு. அஸ்ஸலாமு அலைக்கும்.

நீதி வழங்குவது நிச்சயமான ஒரு கடமை. அது பின்பற்றப்பட வேண்டும். உம்மிடம் வழக்குகள் சமர்ப்பிக்கப்படும்போது அவற்றைப் புரிந்துகொள்ள முயலுங்கள். ஏனெனில் புரிந்துகொள்ள முடியாத வழக்குகளினால் அவற்றைச் சமர்ப்பிப்பவருக்குப் பயனில்லை. மக்களைச் சமமாக நடத்துங்கள். தம்மை அநீதியான முறையில் நீர் ஆதரிப்பீர் என்று உயர்குடியைச் சேர்ந்த எவரும் நம்பிவிடக்கூடாது; சமூகத்தில் நலிவுற்றவர் உமது நீதியில் நம்பிக்கை இழந்துவிடவும் கூடாது.

சாட்சியைச் சமர்ப்பிக்கும் பொறுப்பு – வாதி – வழக்குத் தொடர்பவரைச் சார்ந்தது. மறுக்கும் பிரதிவாதி இறைவனின்மீது சத்தியப் பிரமாணம் செய்வது நிபந்தனை. முஸ்லிம்களின் இடையே சமரசம் செய்துவைத்தல் அனுமதிக்கப்படுகிறது. ஆனால் அத்தகைய சமரசம் தடுக்கப்பட்டதை அனுமதிக்கப்பட்டதாகவும் அனுமதிக்கப்பட்டதைத் தடுக்கப்பட்டதாகவும் ஆக்கி விடக்கூடாது.

முன்னர் ஒரு தீர்ப்பு வழங்கி, பின்னர் உங்களுடைய மனத்தில் அதை மீள் ஆய்வு செய்யும்போது வேறொரு முடிவுக்கு நீர் வரநேர்ந்தால் அது உம்மைச் சத்தியத்தின் பக்கம் மீள்வதைத் தடுக்கக் கூடாது. ஏனெனில் சத்தியம் நிலையானது. பொய்மையில் பிடிவாதமாய் நிலைத்திருப்பதைவிடச் சத்தியத்திற்கு மீள்வதே மேன்மை.

உங்களால் உறுதியான முடிவிற்கு வரமுடியாத ஒவ்வொரு பிரச்னையையும் கவனமாக ஆராய்ந்து பாருங்கள். குர்ஆன், சுன்னாவில் அதற்கான நேரடி ஆதாரம் இல்லையெனில் அப்பிரச்னைக்கு நெருக்கமான முன்னோடி வழக்கு உள்ளதா எனக் கண்டுபிடியுங்கள். ஒப்புமை செய்து எது அல்லாஹ்வுக்கு உவகை அளிக்கக் கூடியது, உண்மைக்கு நெருக்கமானது எனப் பாருங்கள்.

தமக்குப் பிறரிடமிருந்து கடன் வரவேண்டியுள்ளது என்று எவரெல்லாம் வழக்குத் தொடுக்கின்றாரோ, சான்று சமர்ப்பிக்க அவருக்குப் போதிய கால அவகாசம் அளியுங்கள். அக்காலத்திற்குள் அவர் தகுந்த சான்றைச் சமர்ப்பித்தால் அவருக்குரிய உரிமையை மீட்டுத் தாருங்கள். சான்று அளிக்க இயலவில்லையெனில் அவர் தமது வழக்கைக் கைவிடச் சொல்லுங்கள். ஐயத்தைத் தவிர்க்க அதுவே சரியானதாகும்.

முஸ்லிம்கள் அடிப்படையில் நற்பண்பு அமைந்தவர்கள். ஆனால் எவரெல்லாம் ‘ஹத்’ தண்டனைக்காகக் கசையடி பெற்றனரோ, பொய் சாட்சி அளிப்பவர்கள் என்று அறியப்பட்டுள்ளனரோ அவர்களைத் தவிர. மக்களின் மனங்களில் மறைந்துள்ளவற்றுக்கு அல்லாஹ்வே பொறுப்பு. போதுமான சான்று, இறைவனின் மீதான சத்தியப் பிரமாணம் ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.

பொறுமை இழப்பதில் எச்சரிக்கையுடன் இருங்கள். வாய்மையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்குவது அல்லாஹ்விடமிருந்து ஏராள வெகுமதியை ஈட்டித்தரும். அளவற்ற வெகுமதியை மறுமைக்குச் சேர்த்து வைக்கும். எவரெல்லாம் நேரிய நோக்கம் கொண்டு தம்மைத்தாமே பரிசோதித்துக் கொள்கிறாரோ, அவருக்கு அல்லாஹ்வே போதுமானவன்; மக்களைக் குறித்து அவர் அஞ்சத் தேவையில்லை. ஆனால் எவர்களெல்லாம் மக்களிடம் போலி நடத்தையை மேற்கொண்டுள்ளனர் என்பதை அல்லாஹ் அறிந்துள்ளானோ அல்லாஹ் அவர்களது நடத்தையை வெளிப்படுத்திவிடுவான். இவ்வுலகிலும் மறுமையிலும் அல்லாஹ்விடம் பெறப்போகும் வெகுமதியைச் சிந்தித்துப் பாருங்கள்.

வஸ்ஸலாம்.

இப்படியாக அபூமூஸாவின்மீது கலீஃபா உமருக்கு இருந்த நல்லபிமானம், தமக்குப் பிறகான கலீஃபாவுக்கு அவர் விட்டுச்சென்ற இறுதிப் பரிந்துரையில் தெளிவாக வெளிப்பட்டது. “நான் நியமித்த ஆளுநர்களை ஓர் ஆண்டிற்குமேல் அப்பணியில் நீடிக்க அனுமதிக்க வேண்டாம் அபூமூஸாவைத் தவிர. அவர் தமது பதவியை நான்கு ஆண்டுகள் தொடரட்டும்” என்று அறிவித்திருந்தார் உமர் ரலியல்லாஹு அன்ஹு.

oOo

அடுத்து கலீஃபாவாகப் பொறுப்பேற்ற உதுமான் ரலியல்லாஹு அன்ஹு, முந்தைய கலீஃபா உமரின் ஆலோசனைப்படி அபூமூஸாவையே பஸ்ராவின் ஆளுநராகவும் நீதிபதியாகவும் பணிகளைத் தொடரச் சொன்னார். பாரசீகத்தின் பல பகுதிகளைக் கைப்பற்றியதில் அபூமூஸாவின் போர் பங்களிப்பும் முக்கியமானது என்று பார்த்தோமில்லையா? கலீஃபா உமரின் மறைவுக்குப்பின், அந்த நகரங்களில் உள்ள மக்கள் அரசை எதிர்த்துக் கலவரத்தில் ஈடுபட முனைந்தனர். அவற்றை அடக்கிக் கட்டுக்குள் கொண்டு வந்து, அங்கு ஆட்சியை நிலைநிறுத்தினார் அபூமூஸா. அப்பகுதிகளில் இஸ்லாம் நிலைபெற்றது.

அபூமூஸாவின் நிர்வாகம் எந்தளவு சிறப்பாக இருந்ததென்பதற்கு அந் நகரைச் சேர்ந்த ஹஸன் அல்-பஸரீ (ரஹ்) பிற்காலத்தில் அளித்த நற்சான்று ஓர் உதாரணம். “அம் மக்களுக்கு அபூமூஸாவைப் போல் நற்பேறு பெற்றுத் தந்தவர் வேறு யாருமில்லை.”

ஹிஜ்ரீ 29ஆம் ஆண்டுதான் பஸ்ராவில் அவரது ஆளுநர் பொறுப்பு முடிவுக்கு வந்தது. கலீஃபா உதுமான் அவரைப் பதவி நீக்கினார். வரலாற்று ஆசிரியர்கள் அதற்குப் பல காரணங்களைத் தெரிவிக்கின்றனர். கலீஃபா உதுமானுக்கு எதிராக உருவான அரசியல் பிரச்சினைகளின் பக்க விளைவுகள் அதில் கலந்திருந்தன என்பது ஒருபுறம் என்றாலும் பஸ்ரா நகரின் படைப்பிரிவுக்கும் அபூமூஸாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு அதில் முக்கியமான ஒன்றாகச் சொல்லப்படுகிறது. காரணம் என்ன வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். அந்நிகழ்வில் நமக்கு அடங்கியுள்ள முக்கியமான பாடம் வேறு.

இந்த ஊரைக் கட்டி மேய்த்து, பாடம் கற்றத் தந்து, நீரூட்டி வளர்த்து என்ன பாடு பட்டிருக்கிறேன்; நான் நிரந்தர ஆளுநராகவல்லவா இருக்க வேண்டும் என்று கூச்சலோ, கோபமோ, ஆத்திரமோ, அவ்வளவு ஏன் ஒரு சிறு மன வருத்தமோகூட அபூமூஸாவுக்கு ஏற்பட்டதாகத் தெரியவில்லை. உமது பதவி முடிந்தது; அப்துல்லாஹ் இப்னு ஆமிர் என்பவரை ஆளுநராக நியமித்திருக்கிறேன் என்று தகவல் வந்ததுமே கலீஃபாவின் ஆணைக்கு முற்றிலும் கட்டுப்பட்டார் அபூமூஸா.

வயதிலும் அனுபவத்திலும் பழுத்தவரான அபூமூஸாவை நீக்கிவிட்டு, அப்பதவிக்கு அமர்த்தப்பட்ட அப்துல்லாஹ் இப்னு ஆமிருக்கு வயது 25. அதனால் என்ன? அபூமூஸா மிம்பரின்மீது ஏறி நின்றார். மக்களிடம் சிறு உரை ஒன்று நிகழ்த்தினார். குரைஷிகளின் உயர்குடியைச் சேர்ந்த இந்த இளைஞர் உங்களிடம் வந்துள்ளார். அவர் உங்களைப் பெருந்தன்மையுடன் நடத்துவார் என்று அப்துல்லாஹ் இப்னு ஆமிரைப் பாராட்டிப் பேசிவிட்டு இறங்கிவிட்டார் அபூமூஸா அல்-அஷ்அரீ, ரலியல்லாஹு அன்ஹு.

கலீஃபா உதுமானின் ஆட்சியில் பிரச்சினைகள் தோன்ற ஆரம்பித்து, கலகக்காரர்கள் விளைவித்த குழப்பம் விரிவடைந்து பரவியது. ஒரு கட்டத்தில் கலீஃபா உதுமான், கூஃபா நகரின் ஆளுநரான வலீத் இப்னு உக்பாவை நீக்கிவிட்டு ஸயீத் இப்னுல் ஆஸை ஆளுநராக அமர்த்த விரும்பியபோது அந்நகர மக்கள் ஸயீதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கலீஃபாவுக்குக் கீழ்படியாமல் கூஃபாவில் சச்சரவு, கலகம், ஃபித்னா.

கூஃபா நகர மக்கள் கலீஃபா உமரின் காலத்திலிருந்தே தொல்லை, இடைஞ்சல் அளிக்க ஆரம்பித்துவிட்டனர். ஒரு சந்தர்ப்பத்தில், “இந்நகர மக்களின் பிரச்சினையை யார் எனக்குத் தீர்த்து வைப்பீர்கள்?” என்று உமர் ரலியல்லாஹு அன்ஹு அலுத்துக்கொள்ளும் அளவிற்கு அவர்களது தொல்லை இருந்தது. உதுமான் ரலியல்லாஹு அன்ஹு தமது ஆட்சியின் போது அந்நகருக்கு ஐந்து ஆளுநர்களை நியமித்துள்ளார்.

இவர்களின் இப்பொழுதைய இந்த ஃபித்னாவைச் சமாளிக்க அபூமூஸாவை அனுப்பிவைத்தார் உதுமான். வந்து சேர்ந்த அபூமூஸா மக்களைக் கூட்டி உரை நிகழ்த்தினார். “மக்களே! குழப்பங்களில் ஈடுபடாதீர்கள், மீண்டும் அதைச் செய்யாதீர்கள். முஸ்லிம்களின் முக்கிய அங்கத்துடன் ஒருங்கிணையுங்கள், கட்டுப்படுங்கள். அவசரப்படாதீர்கள்; எச்சரிக்கையுடன் இருங்கள்; பொறுமையை மேற்கொள்ளுங்கள். விரைவில் உங்களுக்குப் புதிய ஆளுநர் நியமிக்கப்படுவார்.”

மக்கள் அவரிடம், “எங்களின் தொழுகைக்கு நீங்கள் தலைமை தாங்குங்கள்” என்றனர்.

“முடியாது. நாங்கள் கலீஃபா உதுமானுக்குச் செவிசாய்த்துக் கட்டுப்படுவோம் என்று நீங்கள் வாக்கு அளிக்கும்வரை அது முடியாது.”

“நாங்கள் உதுமானுக்குச் செவிசாய்த்துக் கட்டுப்படுகிறோம்; வாக்களிக்கிறோம்” என்றார்கள் அவர்கள். அதற்குப் பின்னரே அபூமூஸா அவர்களுக்குத் தொழுகையில் தலைமை தாங்கினார். அவரை ஆளுநராக நியமித்து கலீஃபா உதுமானிடமிருந்து மடல் வந்தது. கூஃபாவின் மக்களுக்கு எழுதியிருந்தார்.

“ஸயீதைப் பதவி நீக்கிவிட்டு, நீங்கள் விரும்பிய ஒருவரை நான் உங்களுக்கு ஆளுநராக நியமித்துள்ளேன். அல்லாஹ்வின்மீது ஆணையாக! நான் உங்களிடம் சகிப்புத்தன்மையுடன் இருப்பேன், பொறுமையுடன் இருப்பேன், என்னால் இயன்றவகையில் உங்களது பிரச்சினைகளைச் சீர் செய்வேன். அல்லாஹ்வுக்கு மாறு செய்யாத எதையும் நீங்கள் வேண்டி அது உங்களுக்கு மறுக்கப்படாது. அல்லாஹ்வுக்கு மாறுசெய்யாத எதையும் நீங்கள் வெறுத்து, அது உங்கள்மீது திணிக்கப்பட மாட்டாது. எனவே நீங்கள் தவறிழைக்க, தீயநடத்தையில் ஈடுபட இனி எவ்வித முகாந்திரமும் இல்லை.”

கூஃபாவின் ஆளுநராக அவர் நிர்வாகம் புரிய ஆரம்பிக்க, அல்-ராய் என்ற பகுதியில் குழப்பக்காரர்களின் கைங்கரியத்தால் மக்கள் கலகத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். அவர்களை அடக்கி அப்பகுதியை மீண்டும் கைப்பற்ற, கலீஃபா உதுமானின் கட்டளைப்படி, குரைஸா இப்னு கஅப் அல்-அன்ஸாரீ என்பவரின் தலைமையில் அபூமூஸா படையை அனுப்பிவைத்தார்.

இப்படி ஆங்காங்கே பிரச்சினைகளைக் கட்டுக்குள் கொண்டுவந்தாலும் குழப்பம் பரவி, அது கலீஃபா உதுமான் ரலியல்லாஹு அன்ஹுவின் கொலையில் முடிந்தது. அந்தக் கொலையில் கூஃபா நகர மக்களுள் சிலர் நேரடியாக ஈடுபட்டு முன்னிலை வகித்தனர் என்பது அந்நகர மக்களின் அடங்காத்தன்மைக்கு ஓர் உதாரணம்.

கலீஃபா உதுமானைக் கொலை செய்வதன் மூலம் தீவினை அகற்றி நற்கருமம் புரிவதாக நினைத்த குழப்பவாதிகள் தாங்கள் மாபாவம் புரிகிறோம் என்பதை அறியவே இல்லை. அந்த துர்நிகழ்வு குறித்து அபூமூஸா கருத்துத் தெரிவிக்கும்போது, “உதுமான் ரலியல்லாஹு அன்ஹுவைக் கொல்வது நல்வழியில் நடாத்தப்பட்டச் செயலாக இருந்திருந்தால் அது நேர்மையாக இருந்திருந்தால் அதிலிருந்து நன்மை விளைந்திருக்கும். ஆனால் அது வழிகெடுக்கப்பட்ட செயல். அதனால் அது படுகொலைகளும் குருதிப் பெருகலும் அதிகரிக்கத்தான் உதவியது” என்றார்.

நாம் ஒவ்வொருவரும் நமக்குச் சரி என்று பட்டதை, அது நற்கருமம் என்று நினைத்துச் செய்கிறோம். அது இறைவனின் பார்வையில் நற்செயலா, தீவினையா என்பதை அறிந்துணர்ந்து செயல்பட நல்லறிவு வாய்க்க வேண்டும். இல்லையெனில் நாளைய வரலாறு நமது சுயரூபத்தைத் தகுந்தபடி எடைபோட்டு அதற்குரிய பக்கங்களில் இணைத்துவிடும்.

oOo

மதீனாவில் உள்ள மக்கள் அலீ ரலியல்லாஹு அன்ஹுவை கலீஃபாவாக ஏற்றனர். அபூமூஸா, அலீயை கலீஃபாவாக ஏற்றுக்கொண்டார். அவரது சார்பாகக் கூஃபா நகர மக்களிடம் பிரமாணமும் பெற்றார். அலீயும் அபூமூஸாவை அப்பதவியில் நீடிக்கச் சொல்லிவிட்டார்.

உதுமான் ரலியல்லாஹு அன்ஹுவின் கொலையைத் தொடர்ந்து அரசியல் பிரச்சினை அதிகமாகி, முஸ்லிம்கள் இரு பெரும் பிரிவாகப் பிளவுபட்டு போர்ச் சூழல் உருவாகிவிட்டது. மதீனாவிலிருந்து இராக்கிற்குப் பயணமானார் அலீ. நிகழ்வுகளைக் கவனித்த அபூமூஸா ஃபித்னா அதிகரிப்பதைத் தெளிவாக உணர்ந்தார். எச்சார்பும் எடுக்க அவர் விரும்பவில்லை. அவரது அறிவும் பக்குவமும் அதுதான் சிறந்தது என்று அவருக்கு உணர்த்தின.

கூஃபாவுக்குத் தம் ஆதரவாளர்களுடன் சென்று கொண்டிருந்த அலீ ரலியல்லாஹு அன்ஹு வழியில் கூஃபா நகர மனிதர் ஒருவரைச் சந்தித்தார். அவரிடம் பேசும்போது அபூமூஸா குறித்து அலீ விசாரிக்க, “தாங்கள் எதிர்தரப்புடன் சமாதானத்தை விரும்பினால் அபூமூஸா உமக்கு உதவக்கூடியவர். போரை விரும்பினால் அவர் உமக்கு உதவக்கூடியவரல்லர்” என்று அபூமூஸாவின் மனோநிலையைத் தெரிவித்தார் அம்மனிதர்.

“நான் சமாதானத்தையே விரும்புகிறேன் – மறுதரப்பு அதை நிராகரிக்காதபட்சத்தில்” என்று தமது நிலைப்பாட்டினை விளக்கினார் அலீ.

“எனக்குத் தெரிந்ததை நான் சொன்னேன்” என்று பதில் அளித்துவிட்டுச் சென்றுவிட்டார் அவர்.

பின்னர், முஸ்லிம் படைகள் ஒன்றையொன்று எதிர்த்து நிற்கும்படியான நிலை ஏற்பட்டுப்போனது. அபூமூஸாவோ இருதரப்பினருக்கும் இடையே சமாதானத்தையே விரும்பினார். ஒட்டகப் போர் நடைபெறுவதற்குமுன் முஹம்மது இப்னு அபீபக்ரு, அம்மார் இப்னு யாஸிர், ஹஸன் இப்னு அலீ ஆகியோருடன் ஒரு குழுவை கூஃபா நகருக்கு அனுப்பி, அம்மக்களைத் தம் சார்பாகப் போரில் ஈடுபட அழைத்தார் அலீ. கலீஃபா போருக்கு அழைக்கிறார். போரிடப்போகும் எதிர்தரப்பும் முஸ்லிம்கள். நபியவர்களின் தோழர்கள். பெரும் குழப்பமான, கடுமையான சூழ்நிலை. போரில் கலந்துகொள்வதைப் பற்றி அந்நகர மக்கள் அபூமூஸாவிடம் ஆலோசனைக் கேட்டனர்.

“உங்களது மறுமை வாழ்வின் சிறப்பு முக்கியமெனில் தங்கிவிடுங்கள்; இவ்வுலக வாழ்வுக்கான சிறப்பு எனில் நீங்கள் போருக்குச் செல்லலாம். உங்களது நிலையை நீங்கள்தாம் சிறப்பாக அறிவீர்கள்” என்று கூறிவிட்டார் அபூமூஸா. மேலும், “இது ஃபித்னா. நீங்கள் வீட்டிற்குள் தங்கிக் கொள்ளுங்கள்; இந்தப் பிரச்சினையிலிருந்து விலகியிருங்கள். இத்தகைய ஃபித்னாவின் நிலையில் அமர்ந்திருப்பவர் நிற்பவரைவிட மேலானவர். நிற்பவர் நடப்பவரைவிட மேலானவர்” என்று அறிவுறுத்திவிட்டார்.

அதைத் தொடர்ந்து கலீஃபா அலீயுடன் உருவான கருத்து வேறுபாட்டினால் கூஃபாவின் ஆளுநர் பதவியிலிருந்து அபூமூஸா நீக்கப்பட்டார். பல குறிப்புகள் அபூமூஸாவின் பதவி ஒட்டகப் போருக்குமுன் முடிவுற்றது எனத் தெரிவிக்கின்றன. வேறு சில, அலீயின் தளபதிளுள் ஒருவரான அல்-அஷ்தர் அபூமூஸாவை வெளியேற்றியதாகத் தெரிவிக்கின்றன. எது எப்படியிருப்பினும் அந்தச் சூழ்நிலையில் அபூமூஸாவின் பதவி முடிவுக்கு வர, காரணமாக அமைந்து போனது அவரது நடுநிலைமை.

முஸ்லிமல்லாதவர்களுடன் நிகழ்ந்த யுத்தங்களில் அவர்களுக்கு எதிராகத்தான் அபூமூஸா ஆயுதம் ஏந்திப் போரிட்டாரே தவிர அலீ, முஆவியா இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமையில் முஸ்லிம்களுக்கு இடையே நிகழ்ந்த போரிலிருந்து முற்றிலும் ஒதுங்கிவிட்டார். ஆயினும் அலீக்கும் அபூமூஸாவுக்கும் இடையில் தனிப்பட்ட விரோதமோ, பகையோ ஏற்படவே இல்லை. அதனால்தான் பின்னர் ஸிஃப்பீன் யுத்தத்திற்குப் பிறகு முஆவியா ரலியல்லாஹு அன்ஹுவும் அலீ ரலியல்லாஹு அன்ஹுவும் பேச்சு வார்த்தைக்கு ஒப்புக்கொண்டபோது, அம்ரு இப்னுல் ஆஸை முஆவியா தம் தரப்பில் நியமிக்க அபூமூஸா அல்-அஷ்அரீயை தம் தரப்பில் நியமித்தார் அலீ.

oOo

தமது இறுதிக் காலத்தில் மக்காவுக்குச் சென்றுவிட்டார் அபூமூஸா. அவரது சொச்ச வாழ்வு கஅபாவின் அருகிலேயே கழிந்தது. குர்ஆனுடன் தொடர்பு கொண்டவராகவே அவரது முழுக் காலமும் நகர்ந்தது. “குர்ஆனைப் பின்பற்றுங்கள்; குர்ஆன் உங்களைப் பின்பற்ற வேண்டும் என்று நாட்டம் கொள்ளாதீர்கள்” என்பது அவரது பொன்மொழி.

வெப்பம் சுட்டெரிக்கும் கோடையில் நோன்பு நோற்பார். “இந்த நண்பகலின் தாகம் மறுமை நாளின்போது ஏற்படக்கூடிய தாகத்தை அனேகமாய்த் தவிர்க்க உதவலாம்” என்பார்.

வீரர் அபூமூஸா அழுவார். போர்க்களம், உலக விஷயங்கள் போன்றவற்றைவிட்டு விலகி குர்ஆனை ஓதி, இறை அச்சத்துடன் அழுது தொழுது அவரது பொழுதுகள் கழியும்.

ஞானவான் என்று பார்த்தோமில்லையா? எந்தளவு? மக்கள் அறுவரிடமிருந்து பயில்வது வழக்கமாக இருந்தது. உமர், அலீ, அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத், அபூமூஸா, ஸைத் இப்னு தாபித், உபை இப்னு கஅப்.

நபியவர்களின் அறிவுரைகளை அலட்சியப்படுத்தாமல் பேணும் அக்கறையும் அவரிடம் மிக அதிகம். ஒருவர் நோய்வாய்ப்பட்டிருந்தார். அலீ ரலியல்லாஹு அன்ஹு தம் நண்பரை அழைத்து, ‘வாருங்கள். நாம் சென்று அவரை நலம் விசாரித்து வருவோம்’ என்று இருவரும் சென்றால், அங்கு அபூமூஸா அமர்ந்திருந்தார்.

அலீ அவரிடம், “ஓ அபூமூஸா! பொதுவான சந்திப்பா அல்லது அவர் நோய்வாய்ப்பட்டிருப்பதால் நலம் விசாரிக்கும் சந்திப்பா?” என்று விசாரிக்க, “அவரை நலம் விசாரிக்கும் சந்திப்பு” என்றார் அபூமூஸா.

நோயாளிகளைச் சந்தித்து நலம் விசாரிப்பதில் அடங்கியுள்ள நன்மை குறித்து நபியவர்கள் அறிவித்துள்ள ஹதீதை அவ்விடத்தில் நினைவு கூர்ந்தார் அலீ.

“அபூமூஸா ஏராளமாய் நோன்பு நோற்பவர், கொள்கையில் உறுதியானவர், இறைபக்தி மிகைத்தவர், கடும் ஈடுபாட்டுடன் இறைவனை வழிபடுபவர். தமது ஞானத்தைச் செயல்படுத்தியவர்களுள் ஒருவர். அதில் அமைதி கண்டவர். அதிகாரமும் பதவியும் அவரது குணாதிசயத்தைச் சிதைக்கவில்லை. உலகின் படோடாபத்தில் ஏமாறாதவர்” என்று அவரது நற்பன்புகளுக்குச் சான்று பகர்கிறார் இமாம் அத்-தஹபி.

அவரது தூய்மைக்கு உதாரணம் அவரது மற்றொரு பொன்மொழி. “எனக்கு அனுமதியற்ற பெண்ணின் நறுமணம் எனது நாசியை நிறைப்பதைவிட அழுகும் பிணத்தின் நாற்றம் அதை நிறைப்பது எனக்கு உவப்பானது” என்று கூறியுள்ளார். சமகாலத்தில் நமக்கு முக்கியமான அறிவுரை இது.

ஹிஜ்ரீ நாற்பதாம் ஆண்டு துல்ஹஜ் மாதம் இவ்வுலகைப் பிரிந்தார் அபூமூஸா அல்-அஷ்அரீ.

ரலியல்லாஹு அன்ஹு!

oOo

– நூருத்தீன்

சத்தியமார்க்கம்.காம்-ல் 05 ஜூலை 2017 அன்று வெளியான கட்டுரை

உதவிய நூல்கள்


Creative Commons License

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment