தோழர்கள் – 68 அப்துல்லாஹ் இபுனு உமர் (ரலி) – பகுதி 3

by நூருத்தீன்
68. அப்துல்லாஹ் இபுனு உமர் (عبد الله بن عمر) – 3

நாஃபி ஒரு நிகழ்வை அறிவித்திருக்கிறார். இப்னு உமரின் இயல்பை அவருடைய அடிமைகள் தெரிந்து கொண்டனர். அவர்களுள் ஓர் அடிமை தன்னை நன்றாக சீர்செய்து, நல்ல ஆடைகளை உடுத்திக்கொண்டு இப்னு உமரின் பார்வையில் படும்படி பள்ளிவாசலில் அமர்ந்து கொண்டார். அவரை அவ்விதம் பார்த்த இப்னு உமர் உடனே அவரை விடுவித்துவிட்டார். இப்னு உமரின் நண்பர் அவரிடம், ‘அவர்கள் உம்மை ஏமாற்றுகிறார்கள்’ என்று சொன்னதற்கு, ‘என்னை யாரேனும் ஏமாற்றினால் அதன் பாவம் அவரைச் சார்ந்தது’ என்று பதில் அளித்துவிட்டார் இப்னு உமர்.

மைமூன் இப்னு மிஹ்ரான் மற்றொரு நிகழ்வைத் தெரிவித்துள்ளார். உறவினர் ஒருவர் இப்னு உமரைச் சந்தித்து ‘எனது இடுப்பாடை பழசாகி நைந்துவிட்டது’ என்று கூறினார். அதற்கு இப்னு உமர், ‘அதற்கென்ன? தைத்து, செப்பனிட்டு அணிந்து கொள்’ என்று பதில் அளித்திருக்கிறார். அந்தப் பதில் உறவினருக்குப் பிடிக்கவில்லை. அதற்கு இப்னு உமர், ‘அல்லாஹ்வின் கொடையிலிருந்து தமக்குத் தேவையான அளவிலான உணவும் ஆடையும் அன்றி வேறெதுவும் நாடாதவர்கள் மத்தியில் நீ இருக்கத் தேவையில்லை, போ!’ என்று அவரை விரட்டி விட்டார். ஏனெனில் இப்னு உமரின் ஆடை, கிழியலுக்குத் தையல் போடப்பட்டதாகத்தான் இருந்திருக்கின்றது.

குரஸான் பகுதியிலிருந்து இப்னு உமரின் நண்பர் வந்திருந்தார். “நான் சிறந்த ஆடை ஒன்றை உங்களுக்காக எடுத்து வந்திருக்கிறேன். எப்பொழுதும் நைந்த, கிழிந்த ஆடையில் இருக்கிறீர்களே! அதனால் நீங்கள் அதை உடுத்துங்கள்” என்று தன் அன்பையும் விருப்பத்தையும் தெரிவித்தார். அந்த ஆடையை வாங்கி துணியைத் தொட்டுப் பார்த்தால் பட்டுப் போல் மென்மை.

“இதென்ன பட்டுத் துணியா?” என்று கேட்டார் இப்னு உமர்.

“இல்லை பருத்தி”

சற்று நேரம் அதையே உற்றுப் பார்த்தவர், தமது வலது கையால் அதைத் தள்ளி, “வேண்டாம். இதை உடுத்துவதால் எனக்கு வீம்பும் பெருமையும் செருக்கும் ஏற்படும் என்று அஞ்சுகிறேன். பெருமையடிப்பவர்களை அல்லாஹ் விரும்புவதில்லை” இத்தகைய இறை அச்சத்தை என்ன சொல்லி விவரிப்பது?

இது இப்படியென்றால் மற்றொரு நண்பர் குடுவையில் ஏதோ மருந்தை நிரப்பி எடுத்து வந்து இப்னு உமருக்கு அளித்தார்.

“என்ன இது?” என்று விசாரித்தால், “சிறப்பான மருந்து இது. ஈராக்கிலிருந்து கொண்டு வந்திருக்கிறேன்” என்றார் நண்பர். வெளிநாட்டிலிருந்து மருந்து.

“மருந்தா? எந்த வியாதிக்கு இந்த மருந்து?” என்று கேட்டார் இப்னு உமர்.

“செரிமானத்துக்கு”

அதைக் கேட்டுப் புன்னகைத்தார் இப்னு உமர். “உணவு செரிமானத்திற்கா? நான் வயிறு புடைக்க உண்டு நாற்பது ஆண்டுகள் ஆகின்றன”

நாற்பது ஆண்டுகளாக வெறும் அரை வயிறு, கால் வயிறு என்று உயிர் வாழத் தேவையான அளவிற்கு மட்டும் உண்டு வாழ்ந்து கிடந்திருக்கிறார் அப்துல்லாஹ் இப்னு உமர், ரலியல்லாஹு அன்ஹு.

நாமெல்லாம் உண்டு கொழுத்து, விளம்பரங்களும் மருத்துவர்களும் பரிந்துரைக்கும் ‘டயட்’டுகளில் அல்லவா நிவாரணம் தேடிக் கொண்டிருக்கிறோம்?

இவ்வுலகில் தம்மை ஒரு வழிப்போக்கனாக, விருந்தாளியாக நினைத்துத்தான் அவர் வாழ்ந்திருக்கிறார். “முஹம்மது நபி (ஸல்) இறந்தபின் நான் எனக்காகப் பேரீச்சம் மரம் எதையும் நடவும் இல்லை; கற்கள் மேல் கற்கள் வைத்து கட்டடம் என்று எதையும் கட்டிக் கொள்ளவும் இல்லை” என்று தெரிவித்திருக்கிறார் இப்னு உமர். பொய்யன்று. “இப்னு உமரின் இருப்பிடத்திற்கு நான் சென்றிருந்தேன். அவருடைய வீட்டில் இருந்த படுக்கை, போர்வை, தரை விரிப்பு மற்றும் அனைத்தையும் சேர்த்து எல்லாமே நூறு திர்ஹம் பெருமானம் மட்டுமே இருக்கும்” என்று மைமூன் இப்னு மிஹ்ரான் தெரிவித்திருக்கிறார்.

ஏன் இப்படி? ஏழ்மையா? கஞ்சத்தனமா? இல்லவே இல்லை. ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் உலக வாழ்வின்மேல், அதன் ஆடம்பரத்தின்மேல் பற்று பட்டுப் போய்விட்டது.

“எங்களுள் பலரை உலக வாழ்க்கை அசைத்திருக்கிறது, இப்னு உமரைத் தவிர” என்று குறிப்பிட்டிருக்கிறார் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி).

இப்னு உமர் வானத்தை நோக்கித் தம் கைகளை உயர்த்திச் சொல்லியிருக்கிறார். “யா அல்லாஹ்! உன்னுடைய அச்சம் மட்டும் இல்லாதிருப்பின் இவ்வுலக வெகுமதிகளுக்காக நானும் குரைஷியர்களுடன் போட்டியிட்டிருப்பேன்”

தம்மைத் தாமே கணக்கெடுப்பதிலும் தமது ஆன்மாவைத் தூய்மையாக்குவதிலும் அவருக்குப் படுமுனைப்பு. ஒருமுறை தம் சேவகனைத் திட்டும்படியான சூழ்நிலை ஏற்பட்டு, “அல்லாஹ் உன்னை…” என்று ஆரம்பித்தவர் அதை முடிக்கவில்லை. “நான் அதைச் சொல்ல விரும்பவில்லை” என்று சொல்லி அவரை விட்டு விட்டார்.

oOo

எவ்விதமான புகழாரங்களையும் – அதற்கு முற்றிலும் தகுதியுடையவர்களாகவே இருந்த போதிலும் – சிறிதளவும் விரும்பாதவர்களாக வாழ்ந்து மடிந்திருக்கிறார்கள் தோழர்கள்.

ஒருவர் இப்னு உமரை வாழ்த்தும் வகையில் ‘மானிடருள் சிறந்தவரே’ என்றோ ‘மானிடருள் சிறந்தவரின் மகனாரே’ என்றோ அழைத்திருக்கிறார். கடும் கோபத்துடன், “நான் மானிடருள் சிறந்தவன் அல்லன். மானிடருள் சிறந்தவரின் மகனும் அல்லன். அல்லாஹ்வின் அடிமைகளுள் நானும் ஒருவன். அல்லாஹ்வுக்கு அஞ்சி அவனது கருணையை எதிர்பார்த்துக் கிடப்பவன். சத்தியமாக, நீங்கள் ஒருவனை அழிக்காதவரை விடமாட்டீர்கள் போலும்” என்று திட்டியிருக்கிறார்.

சமகாலத்தில், அல்லாஹ்வை ஏற்காதவர்களை எல்லாம் உலக ஆதாயத்திற்காக வானளாவப் புகழ்ந்து அதற்கு ஹிக்மத் எனும் சாயம் பூசும் இழிநிலை நமக்கு.

சமகாலத்தில், அல்லாஹ்வை ஏற்காதவர்களை எல்லாம் உலக ஆதாயத்திற்காக வானளாவப் புகழ்ந்து அதற்கு ஹிக்மத் எனும் சாயம் பூசும் இழிநிலை நமக்கு.

அபுல் வாஸி என்பவர், “அல்லாஹ் உம்மை மக்களுக்காகப் பாதுகாப்பாக வைத்திருக்கும் வரை அவர்கள் நலம் கெடமாட்டார்கள்” என்று கூறியிருக்கிறார். ‘நீர் அந்தளவு நல்லவர், அதனால் உம்மைக் கொண்டு மக்களும் நல்லவர்களாக இருக்கிறார்கள்’ என்பதைப் போன்ற அர்த்தம் அது.

இப்னு உமருக்குக் கோபம் வந்துவிட்டது. “நீர் இராக் நாட்டைச் சேர்ந்தவர் என நினைக்கிறேன். தாழிட்ட கதவுகளுக்குப் பின் உம்முடைய சகோதரர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றிய ஞானம் உமக்கு உள்ளதோ?”

வெளியில் எப்படி இருந்தாலும் தனிமையில் ஒவ்வொருவரும் எப்படி என்பதைப் பற்றி நமக்கென்ன தெரியும். அப்படியிருக்க, மக்கள் அனைவரும் நல்லவர்களாக இருப்பதற்கு நான்தான் காரணம் என்றால்?

இப்னு உமரிடம் வெகு நிச்சயமாக ஞானம் இருந்தது. நடுநடுங்கும் இறையச்சத்தில் அவரது உள்ளம் மூழ்கியிருந்தது. அப்பழுக்கற்ற குணம். உயர்வான நபித் தோழர். இப்படியான அவர் நீதிபதியாக இருப்பதற்கு என்ன குறை?

உதுமான் இப்னு அஃப்பான் ரலியல்லாஹு அன்ஹு கலீஃபாவாக இருந்தபோது அப்துல்லாஹ் இப்னு உமரை நீதிபதியாக்க விரும்பினார். ஆனால் ‘வேண்டாம்’ என்று அப்பதவியை மறுத்துவிட்டார் இப்னு உமர். வற்புறுத்திப் பார்த்தார் உதுமான். அதற்கும் அவர் மசியவில்லை.

“என் உத்தரவுக்குக் கீழ்படிய மறுக்கின்றாயா?” என்று கேட்டார் கலீஃபா.

“அல்லாஹ்வின்மீது ஆணையாக! அப்படியன்று. நீதிபதிகள் மூன்று விதம் என்று நான் அறிந்துள்ளேன். அறியாமையுடன் தீர்ப்பு வழங்குபவர் ஒரு வகை. அவர் நரகிற்கு உரியவராகிவிடுவார். அடுத்தவர் தம் இச்சைக்கு ஏற்பத் தீர்ப்பு வழங்குபவர். அவரும் நரகிற்கு உரியவர். மூன்றாமவர் தம்முடைய அறிவாற்றலின் அடிப்படையில் தீர்ப்பு வழங்குபவர். அது சில சமயம் சரியாக அமையலாம், சில சமயம் தவறாக அமையலாம். அப்போது அவர் மீது குற்றமும் இல்லை, வெகுமதியும் இல்லை. எனவே வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன், என்னை விட்டு விடுங்கள்”

வேறு வழியின்றி அதை ஏற்றுக்கொண்ட கலீஃபா உதுமான், ‘இதைப் பற்றி யாரிடமும் சொல்லாதீர்கள்’ என்று இப்னு உமரிடம் வாக்குறுதி மட்டும் வாங்கிக்கொண்டார், ஏனெனில் மக்கள் மத்தியில் இப்னு உமருக்கு இருந்த மதிப்பையும் மரியாதையையும் அவர் நன்கு அறிந்திருந்தார். அப்படியான ஒருவர் நீதிபதி பதவியை மறுத்தார் என்று தெரியவந்தால் பிறரும் அப்படியே தட்டிக் கழிக்கச் செய்வார்கள். பிறகு தகுதிவாய்ந்த இறை அச்சமுள்ளவரை நீதிபதி பதவிக்கு எங்கு தேடுவது?

இப்னு உமர் மறுத்தது பதவியைத்தானே தவிர, போர்க்களச் சேவையையன்று. கலீஃபா உதுமான், ஸயீத் இப்னுல் ஆஸ் தலைமையில் தபரிஸ்தான் நோக்கி முஸ்லிம் படைகளை அனுப்பியபோது அதில் முக்கியமான ஒருவர் அப்துல்லாஹ் இப்னு உமர். போலவே, வடக்கு ஆப்பிரிக்காவை நோக்கிச் சென்ற படையிலும் இப்னு உமர் பங்கேற்றார். ஏனெனில் அவர்கள் ஜிஹாதிற்கு உரிய விளக்கத்தையும் அதன் கட்டாய விதியையும் கருத்து வேறுபாடின்றி அறிந்திருந்தார்கள். தங்களது உயிரை வாள் முனையில் அல்லாஹ்வுக்காகச் சுமந்து திரிந்தார்கள்.

கலீஃபா உதுமான் ரலியல்லாஹு அன்ஹுவைக் குழப்பவாதிகள் முற்றுகை இட்டிருந்தபோது, கலீஃபாவைச் சென்று சந்தித்தார் இப்னு உமர். உதுமான் அவரிடம், “இந்த மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேளுங்கள். நான் பதவி விலக வேண்டுமாம். எனது கொலைக்கு நானே காரணமாக ஆகிவிடக் கூடாதாம்” என்றார்.

“நீங்கள் பதவியைத் துறந்தால் இவ்வுலகில் நீடித்து நிலைத்திருப்பீரா?” என்று கேட்டார் இப்னு உமர்.

“இல்லை.”

“நீங்கள் பதவி விலகவில்லை என்றால் உங்களைக் கொல்வதை மீறி அவர்கள் உங்களுக்கு என்ன துன்பத்தை விளைவிக்க முடியும்?”

“ஒன்றுமில்லை.”

“உங்களை சொர்க்கத்திற்கோ, நரகிற்கோ இழுத்துச் செல்லும் ஆற்றல் அவர்களுக்கு இருக்கிறதா?”

“இல்லை.”

“எனில், அல்லாஹ்வினால் உங்களுக்குப் போர்த்தப்பட்ட இந்த அங்கியை நீங்கள் துறக்கக்கூடாது என்று நான் கருதுகிறேன். ஏனெனில் பிற்காலத்தில் இதையே முன்னுதாரணமாக்கித் தங்களுக்குப் பிடிக்காத கலீஃபா, தலைவர் என்று ஒவ்வொருவரையும் கொலை செய்வதை மக்கள் வாடிக்கையாக்கி விடுவார்கள்” என்று ஆலோசனை கூறினார் இப்னு உமர். எத்தகு தூரநோக்கு?

ஆனால் அதற்காக அவர்கள் வந்து கொல்லட்டும் என்று கலீஃபாவை அனாதரவாக விட்டுவிட்டு ஓடிவிடவில்லை. வாளை ஏந்திக்கொண்டு வந்து கலீஃபாவின் வீட்டினுள் மற்ற நபித் தோழர்களுடன் சேர்ந்து பாதுகாவலுக்கு நின்றுவிட்டார். ஆனால் தம் பொருட்டு மற்ற சஹாபாக்கள் உயிர் துறப்பதை விரும்பாத கலீஃபா உதுமான், சண்டையிடக்கூடாது என்று அவர்களுக்குக் கட்டளையிட்டு அவர்களைத் திருப்பி அனுப்பி, அதற்குப்பின் நிகழ்ந்தவை சோக வரலாறு.

கலீஃபா உதுமானின் கொலைக்குப் பிறகு குழப்பவாதிகளின் அட்டூழியம் நாலாபுறமும் பரவ, அனைத்துவிதமான குழப்பங்களிலிருந்தும் இப்னு உமர் தம்மை முற்றிலும் துண்டித்துக் கொண்டார். மட்டுமல்லாது, எவ்விதக் குழப்பத்திற்கும் தாம் துணை போய்விடக் கூடாது என்பதிலும் அவருக்குத் துல்லியமான ஞானம் இருந்தது.

உதுமான் இப்னு அஃப்பான் கொல்லப்பட்டதும் இப்னு உமரிடம், “நீர்தாம் மக்களின் தலைவர். மக்களின் தலைவருடைய மகன். வெளியே மக்களிடம் வாருங்கள். அவர்கள் உங்களுக்கு சத்தியப் பிரமாணம் அளிப்பார்கள்” என்று ஒரு கூட்டம் சொன்னது.

“அல்லாஹ்வின்மீது ஆணையாக! ஒரு சிறு குவளையில் சிறு அளவிலான இரத்தம் சிந்தப்படுவதற்குக்கூட நான் காரணமாக அமைய மாட்டேன்” என்று தெளிவாக மறுத்துவிட்டார்.

“நீங்கள் மக்களிடம் வரவில்லையெனில் உங்களை உங்கள் படுக்கையில் வைத்தே கொல்வோம்” என்று மிரட்டினார்கள். ‘வேண்டுமானால் என்னைக் கொல்’ என்பதைப்போல் இப்னு உமர் அவர்களது மிரட்டலுக்குப் பணியவே இல்லை.

முஸ்லிம்களுக்கு இடையிலான ஆயுதத் தாக்குதல்களும் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் கொல்வதும் பிடிக்கவே பிடிக்காத காரணத்தினால்தான் அலீக்கும் முஆவியாவுக்கும் (ரலியல்லாஹுஅன்ஹுமா) இடையே பிரச்சினை ஏற்பட்டபோது அது அவரை எச்சார்பும் எடுக்காமல் நடுநிலையில் நிறுத்திவிட்டது.

நாஃபியும் இப்னு உமரிடம் விசாரித்திருக்கிறார். “அபூ அப்துர்ரஹ்மான்! தாங்கள் உமரின் மகனார், நபியவர்களின் தோழர், நீங்கள் இன்னார், இன்னார்” என்று அவரது பெருமைகளைக் குறிப்பிட்டுவிட்டு, “அலீ (ரலி) அவர்களுக்கு ஆதரவு அளிக்காமல் உங்களைத் தடுப்பது எது?”

“முஸ்லிம்களின் உதிரத்தைப் புனிதமாக்கிவிட்ட அல்லாஹ்வின் வாக்கு என்னைத் தடுக்கிறது. குழப்பம் நீங்கும் வரை, மார்க்கம் அல்லாஹ்வுக்கு உரியதாக ஆகும்வரை போரிடுங்கள் என்று அல்லாஹ் கூறியிருக்கின்றான். நானும் இறை நிராகரிப்பாளர்களை எதிர்த்து மார்க்கம் அல்லாஹ்வுக்கு உரியதாக ஆகும்வரை போரிட்டிருக்கிறேன். அதில் சந்தேகமே இல்லை. ஆனால் இன்று நான் எதற்காகப் போரிடுவது? இறை இல்லமான கஆபாவை சிலைகள் ஆக்கிரமித்திருந்தபோது அவை அரபுகளின் நிலத்தைவிட்டு அப்புறப்படுத்தும்வரை போரிட்டேன். ஆனால் இன்று ‘வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ் ஒருவனே அன்றி வேறில்லை’ என்பவரை எதிர்த்தா போரிடுவேன்?”

ஆனால் தம் ஆயுளின் பிற்காலத்தில் தாம் அலீக்கு ஆதரவு அளிக்காமல் போனதை நினைத்து மிகவும் வருந்தியதாகக் குறிப்புகள் உள்ளன.

குழப்பம் பெருகப் பெருக தகுதி வாய்ந்த நபித் தோழர்தாம் கலீஃபா பதவியில் அமர வேண்டும் என்று ஒரு குறிப்பிட்டப் பிரிவு மக்கள் அவரை வற்புறுத்தித் தொடர்ந்திருக்கிறார்கள். அப்பொழுதும் அவர் அதை நிராகரித்தார். அதை அவருடைய குறையாகச் சிலர் முன் வைக்க, இப்னு உமர் தம்முடைய நிலைப்பாட்டைத் தெளிவாக அறிவித்து விட்டார். ‘அனைவரும் ஏக மனதாக, தன்னிச்சையாகத் தேர்ந்தெடுத்தால்தான் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள முடியுமே தவிர, சில தரப்பு மக்கள் வேண்டுகிறார்கள் என்பதற்காக ஏற்றுக்கொள்வது கலீஃபா பொறுப்பைப் பொறுத்தவரை சரியல்ல. மாறாக மக்களுள் ஒருவர் வற்புறுத்தப்பட்டால்கூட, அந்தப் பொறுப்பை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.’

ஒருவர் அவரிடம், “முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் உம்மத்திற்கு உம்மைவிடக் கேடானவர் யாரும் இல்லை” என்று பெரும் குற்றச்சாட்டைக் கூறினார்.

“ஏன் அப்படி? அல்லாஹ்வின்மீது ஆணையாக! நான் மக்களின் உதிரத்தை ஓட்டவில்லை; அவர்களிடையே பிளவை உண்டாக்கவில்லை; அவர்களுக்கு எதிராக நான் கிளர்ச்சியும் செய்யவில்லையே!”

“நீர் கலீஃபாவாகப் பொறுப்பேற்றுக்கொண்டால் எவரும் ஆட்சேபிக்கப் போவதில்லையே. பிறகு ஏன் மறுக்கிறீர்?”

அதற்கு இப்னு உமர், “என்னைத் தேர்ந்தெடுப்பதற்கு ஒருவர் ஆம் என்றும் மற்றொருவர் வேண்டாம் என்றும் சொல்வாராயின் நான் அதற்கு உடன்படப் போவதில்லை” என்று கூறிவிட்டார்.

யஸீத் இப்னு முஆவியா இறந்ததும் இப்னு உமரிடம் வந்தார் மர்வான். இப்னு உமர் முதுமையை எட்டிவிட்ட காலம் அது. “உங்களது கையை நீட்டுங்கள். நாங்கள் விசுவாசப் பிரமாணம் அளிக்கிறோம். நீங்கள் அரபுகளின் தலைவர், அவர்களுடைய தலைவரின் மகனார்.”

அதற்கு இப்னு உமர், “கிழக்கில் உள்ளவர்களை நான் எப்படிக் கையாள்வது?” என்று இராக் நாட்டினரைப் பற்றிக் கேட்டார். அந்தப் பகுதி மக்கள் இவரது தலைமையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதை அவர் உணர்ந்திருந்தார்.

”அவர்களும் உங்களை ஏற்று விசவாசப் பிரமாணம் அளிக்காதவரை நாம் அவர்களிடம் சண்டையிடுவோம்” என்றார் மர்வான்.

“அல்லாஹ்வின் மீது ஆணையாகச் சொல்கிறேன். எனது வாளுக்கு ஒரே ஒரு முஸ்லிம் இரையாகி அந்த நிலையில் நான் எனது எனது முதுமையை எட்ட விரும்பவில்லை.”

“தொழுகையின் பக்கம் வாருங்கள் என்று சொல்பவருக்கு அடிபணிவேன்; வெற்றியின் பக்கம் வாருங்கள் என்பவருக்கு அடிபணிவேன். முஸ்லிம் சகோதரரரைக் கொன்று அவரது சொத்தைச் சூரையாடுவோம் என்று அழைப்பவருக்கு நான் அடிபணிய மாட்டேன்” என்று சொல்லிவிட்டார்.

ஒருமுறை இப்னு உமர் நடந்து செல்லும்போது தமக்குத் தாமே பேசியதை அவரது பின்னால் சென்றுகொண்டிருந்த அபுல் ஆலியா அல்பரா என்பவர் செவிமடுத்திருக்கிறார். ‘ஒருவர் கழுத்தில் ஒருவர் வாளை வீசிக் கொன்றபடி, இப்னு உமரே, உங்களது கையை நீட்டுங்கள், பிரமாணம் அளிக்கிறோம் என்கிறார்களே” என்று புலம்பியிருக்கிறார் இப்னு உமர்.

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு நான் சத்தியப்பிரமாணம் அளித்தேன். எனது பிரமாணத்தை நான் முறிக்கவில்லை, அதிலிருந்து நான் மாறவில்லை. பிரச்சினைகளைக் கிளறக்கூடியவர் எவருக்கும் நான் பிரமாணம் அளித்ததேயில்லை. எவரையும் இறைவனின் சட்டத்திற்குப் புறம்பான காரியம்புரிய நான் தூண்டியதே இல்லை” என்று தம்முடைய முதுமையில் அவர் கூறியிருக்கிறார்.

oOo

தலைமைத்துவம், ஃபித்னாவிலிருந்து அவர் விலகியிருந்தாலும் தம்மைச் சமூகத்திலிருந்து அவர் தனிமைப்படுத்திக் கொள்ளவில்லை. யாராக இருந்தாலும் உண்மையைப் பேசுவதில் அவருக்குத் தயக்கம் இருந்ததில்லை. நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பது இம்மார்க்கத்தின் முளை, இஸ்லாம் அதைச் சுற்றிச் சுழல்கிறது என்பதை அவர் அறிந்திருந்தார்.

ஒருமுறை யூஸுஃப் அல்-ஹஜ்ஜாஜ் மக்களிடம், “அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் அல்லாஹ்வின் வேதத்தை மாற்றிவிட்டார்” என்றார். “நீ பொய் உரைக்கின்றாய்” என்று மூன்று முறை உரக்கக் கத்தினார் அப்துல்லாஹ் இப்னு உமர். தம்மைப் பார்த்து அனைவரும் அஞ்சிக் கிடக்க யார் இது நம்மிடமே குரல் உயர்த்திப் பேசுவது என்று திகைத்துப்போய்ப் பார்த்தார் அல்-ஹஜ்ஜாஜ். இப்னு உமரைப் பார்த்து, ‘கடுமையான தண்டனை அளிக்கப்படும்’ என்று எச்சரித்தார் ஹஜ்ஜாஜ்.

“உம்முடைய மிரட்டல் எங்களுக்குப் புதிதன்று. நீர் வெறும் ஏவப்பட்ட ஆயுதம்” என்று அவரது முகத்தை நோக்கி கை நீட்டி இப்னு உமர் பேச வியந்துபோய் பார்த்தனர் மக்கள்.

“அல்லாஹ்வின் விரோதியே! இந்த ஹரமின் தூய்மையைக் கெடுத்து, அல்லாஹ்வின் பள்ளியை அழிக்க நினைக்கின்றாயோ?” என்று தைரியமாகக் குற்றம் சுமத்தினார்.

மக்கள் கலைந்து சென்றபின் ஹஜ்ஜாஜ் தன் படைவீரனை அழைத்து விஷம் தோய்ந்த ஈட்டியைத் தந்தார். அது இபுனு உமரின் காலைப் பதம் பார்த்தது. அந்த விஷம் அவரை நோயில் ஆழ்த்தி, படுக்கையில் தள்ளியது.

இப்னு உமரை வந்து சந்தித்த அல்-ஹஜ்ஜாஜ் ஸலாம் பகர, இப்னு உமர் பதில் அளிக்கவில்லை. அல்-ஹஜ்ஜாஜ் தன்னுடைய அதிகாரத்தின் அடிப்படையில் மக்காவில் ஹரமில் மக்கள் ஆயுதங்கள் தரித்துச் செல்லலாம் என்று அனுமதி அளித்திருந்த காலகட்டம் அது.

“இப்னு உமர், எங்ஙனம் உள்ளீர்?” என்று ஹஜ்ஜாஜ் நலம் விசாரிக்க, “நான் நலமாக உள்ளேன்” என்றார் இப்னு உமர்.

“உம்மைக் காயப்படுத்தியவர் யார்?” என்று ஒன்றும் தெரியாதவரைப் போல் ஹஜ்ஜாஜ் விசாரிக்க, “ஆயுதங்கள் தரித்துச் செல்வதற்குத் தடை செய்யப்பட்ட ஹரம் மண்ணில், அந்நாளில் அதற்கு அனுமதி அளித்தவரால்” என்று அந்நிலையிலும் ஹஜ்ஜாஜ்ஜின் முகத்திற்கு நேராய் உரைத்தார் இப்னு உமர்.

நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து தம்முடைய என்பத்து மூன்றாம் வயதில் ஹி்ஜ்ரி 74 ஆம் ஆண்டு இவ்வுலகை விட்டு நீங்கினார் அப்துல்லாஹ் இப்னு உமர்.

ரலியல்லாஹு அன்ஹு!

oOo

– நூருத்தீன்

சத்தியமார்க்கம்.காம்-ல் 12 செப்டம்பர் 2016 அன்று வெளியான கட்டுரை

உதவிய நூல்கள்

Related Articles

Leave a Comment