15. வஹ்ஷி பின் ஹர்பு (وحشي بن حرب)
தாயிஃப் நகரம். மிகவும் குழப்பமான மனோநிலையில் இருந்தார் அவர். உலகமே சுருங்கிவிட்டதைப் போலிருந்தது அவருக்கு. யாரோ ஒருவர் அவரிடம் கூறினார், “அல்லாஹ்வின்மேல் ஆணையாகச் சொல்கிறேன். இஸ்லாத்தில் இணையும் எவரையும் முஹம்மது கொல்லுவதில்லை”
“அதற்குமுன் அவர் என்ன கொடுமை செய்திருந்தாலுமா?”
“ஆமாம். மன்னித்துவிடுகிறார் அவர்”
நிதானமாய் யோசித்த அவர் உடனே புறப்பட்டு விட்டார். மதீனா வந்தடைந்த அவர் மக்களிடம் விசாரித்தார், “நான் முஹம்மது நபியைச் சந்திக்க வேண்டும்”
மஸ்ஜிதுந் நபவீக்கு அவர்கள் வழி காண்பித்தனர். பள்ளிவாசலுக்கு வந்த அவர் அங்கு அமர்ந்திருந்த முஹம்மது நபியின் எதிரில் அமைதியாக பவ்யமுடன் சென்று நின்று கொண்டார்.
“வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் அன்றி வேறில்லை. முஹம்மது அவனுடைய தூதர் என்று நான் சாட்சி பகர்கிறேன்” இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதான பிரகடனம்.
தன்னிடம் யாரோ ஷஹாதா அளிப்பது செவியுற்று தலையுயர்த்திப் பார்த்தார்கள் நபிகள். யாரென்று அடையாளம் தெரிந்தது. உடனே தலையைத் திருப்பிக் கொண்டவர்கள், “வஹ்ஷி தானே நீ?”
“ஆம், அல்லாஹ்வின் தூதரே”
“அமரவும். எனக்கு விவரி. எப்படி உனக்கு ஹம்ஸாவைக் கொல்ல மனது வந்தது”
அமர்ந்து நடந்த அனைத்தையும் விவரித்தார் வஹ்ஷி.
“மாபெரும் வேதனையை உருவாக்கிக் கொண்டாய் வஹ்ஷி! கைச்சேதம்! உனது முகத்தை என் எதிரே காண்பிக்க வேண்டாம்” தன் சிற்றப்பா மாவீரர் ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹுவின் மரணமல்ல துயரம். அடைந்தால் பெருவெற்றி. அடையாவிட்டால் மறுவுலகத்தின் நிரந்தர வெற்றி என்று உயிரைச் சக்கரைக்கட்டியாக நினைத்துக் களம் புகுந்த இஸ்லாமிய வீரர்களுள் தலையாய வீரமகன் அவர். ஆனால் மரணித்த உடலின்மேல் நிகழ்த்தப்பெற்றதே கோர வெறியாட்டம் அது அருவருப்பின் உச்சம். அத்தகைய கோர நிகழ்விற்குக் காரணமாய் அமைந்துவிட்ட வஹ்ஷியை மீண்டும் காணும்போது பழைய காட்சிகள் ஆற்றவியலாத் துயரை அளித்தது நபியவர்களுக்கு!
அன்றிலிருந்து முஹம்மது நபியின் எதிரே நேரடியாகத் தென்படுவதைத் தவிர்த்துக் கொண்டார் வஹ்ஷி ரலியல்லாஹு அன்ஹு.
* * * * *
ஹிஜ்ரி மூன்றாம் ஆண்டு. பரபரப்பான ஒரு படையெடுப்பிற்குத் தயாராகிக் கொண்டிருந்து மக்கா நகரம்.
ஜுபைர் இப்னு முத்இம் (جبير بن مطعم) குரைஷிக் குலத்தைச் சேர்ந்த பனூ நவ்ஃபால் கோத்திரத்தின் ஒரு முக்கியத் தலைவர். பின்னர் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பிறகு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர். மக்காவில் ஜுபைரின் கோத்திரம் மிகவும் செல்வாக்கானது. அதன் அடிப்படையில் இந்த ஜுபைருக்குத் தன் மகள் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹாவை மணமுடிக்க அபூபக்கரு ரலியல்லாஹு அன்ஹு முதலில் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் ஜுபைரின் தந்தை முத்இம், “நீ மதம் மாறிவிட்டாயாமே, முஹம்மதையும் ஏற்றுக்கொண்டாயாம். உன் மகளுக்கு என் மகன் கிடையாது போ!” என்று அந்த ஏற்பாட்டை நிராகரித்துவிட்டார்.
பத்ருப் போர் பற்றி நெடுக முந்தைய அத்தியாயங்களில் பார்த்துக் கொண்டே வந்தோம். இஸ்லாமிய வரலாற்றின் மிக முக்கியப் போர் அது. குரைஷிக் குலத்தின் பெருந்தலைகள் பத்ருத் தரையில் உருண்ட போர் அது. அந்தப் போரில் முத்இம்மின் சகோதரர் துஐமா (طعيمة ) வை ஹம்ஸா பின் அப்துல் முத்தலிப் ரலியல்லாஹுஅன்ஹு கொன்றுவிட்டார். அது ஆறாதப் பெருந்துயராகிவிட்டது பனூ நவ்ஃபால் கோத்திரத்தினருக்கு. ஆத்திரம், அவமானம், சோகம்! எனவே பத்ருப் போரில் கொல்லப்பட்ட தன் தந்தையின் சகோதரர் துஐமாவின் இழப்பிற்கு, அவரைக் கொன்றவரை பழிவாங்கியே தீருவேன் என்று தனது கடவுளர்கள் அல்-லாத் மற்றும் அல் உஸ்ஸாவின் மேல் சத்தியம் செய்திருந்தார் ஜுபைர்.
பத்ருத் தோல்வியினால் சோகத்தில் மாதங்கள் கழிந்தன குரைஷியருக்கு. பத்ரில் கொல்லப்பட்டதெல்லாம் முக்கியத் தலைகள். அவர்களின் உறவுகளோ இதற்கு எப்படியும் பழிவாங்கியே தீரவேண்டும் என்று கொதித்துக் கொண்டிருந்தனர். உஹதுப் போருக்கான முன்னுரை உருவானது. குரைஷிக் குலமக்கள் தத்தமது கோத்திரங்களின் ஆதரவாளர்களைத் திரட்டிக் கொண்டு, ஏகப்பட்ட ஆயுதங்களும் வீரர்களுக்கான உணவும் இதர வசதிகளும் தயார் செய்துகொண்டு இறுதியில் அபூஸுஃபியான் தலைமையில் பெரும் படை உருவானாது.
ஆஸிம் பின் தாபித் வரலாற்றிலேயே விரிவாய்ப் பார்த்தோம். போரில் குரைஷி வீரர்களை ஊக்குவிப்பதற்கென்றே படையில் பெண்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். அந்தப் பெண்களெல்லாம் தங்களின் உறவுகளை பத்ருப் போரில் இழந்திருந்தனர். அந்த இழப்பின் வலியை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள அபூஸுஃப்யான் செய்த தந்திரம் அது. அந்தப் பெண்கள் பிரிவிற்குத் தலைமை ஹிந்த் பின்த் உத்பா – அபூஸுஃப்யானின் மனைவி.
ஹிந்தினுடைய தந்தை உத்பா இப்னு ரபீஆ, உத்பாவின் சகோதரன் ஷைபா இப்னு ரபீஅ, உத்பாவின் மகன் வலீத் பின் உத்பா ஆகியோர் பத்ரில் கொல்லப்பட்டிருந்தனர். அதனால் மகா ஆத்திரத்தில் துடித்துக்கொண்டிருந்தவள் ஹிந்த். அவளுக்குள் உருவான வன்மம் மகாக் கொடியது. பத்ருப் போர் இழப்பிற்கு ஏனையப் பெண்களெல்லாம் முடியை மழித்துக் கொண்டு, அடித்து, அரற்றி ஒப்பாரி வைத்து ஓய, அழவில்லையே ஹிந்த் மட்டும்! மற்றப் பெண்கள் கேட்கவும் செய்தார்கள், “உன் தந்தை, சகோதரன், தந்தையின் சகோதரன் என்றெல்லாம் கொல்லப்பட்டும் உனக்கு அழத் தோன்றவில்லையா?”
“சத்தியமாக மாட்டேன். நான் அழுதேன் என்ற செய்தி அந்த முஹம்மதிற்கு எட்டினால் அவரும் அவருடைய தோழர்களும் பனூ கஸ்ரஜ் பெண்களும் ஆனந்தமடைவார்கள். அந்த வாய்ப்பை அவர்களுக்குத் தரமாட்டேன். அவர்களைப் பழிவாங்கும்வரை அழ மாட்டேன். அதுவரையில் எனக்கு எண்ணெயும் நறுமணமும் தடை. வெறும் அழுதுத் தீர்ப்பது மட்டும் என் சோகத்தை அழிக்கவல்லது என்றால் அழுதிருப்பேன். என் இரத்த சொந்தங்களைக் கொன்றவர்கள் கொல்லப்படும் காட்சியை என் கண்களால் நான் காணவேண்டும். அப்பொழுதுதான் தீரும் என் ஆத்திரமும், வேதனையும்”
விளையாட்டெல்லாம் இல்லை. அதை அப்படியே பின்பற்றினார் ஹிந்த். பின்னர் உஹதுப் போர் நடைபெறும்வரை தன் கணவனுடன் அவர் தாம்பத்தியத்திலும் ஈடுபடவில்லை. கிடைக்கும் ஒவ்வொரு தருணத்தையும் மக்கத்துக் குரைஷிகளை அடுத்தப் போருக்குத் தூண்டிவிடுவதிலும் அவர்களுக்கு வெறியூட்டுவதிலுமாகவே கழிந்தது பொழுது. முயற்சி கனிந்து உருவாகி மதீனாவிற்குக் கிளம்பியது மக்கத்துக் குரைஷிகளின் படை.
ஜுபைர் இப்னு முத்இம் வசம் அபூதஸ்மா (أبو دسمة) எனும் அபிஸீனிய நாட்டைச் சேர்ந்த அடிமை ஒருவர் இருந்தார். படை கிளம்பும் அந்த நொடியில் அபூதஸ்மாவைப் பார்த்து ஜுபைர் இப்னு முத்இம் ஒரு கேள்வி கேட்டார், “அபூதஸ்மா, உன்னை நீ அடிமைத் தளையிலிருந்து விடுவித்துக் கொள்ள வேண்டுமா?”
ஆச்சரியமாகப் பார்த்த அபூதஸ்மா, “ஆமாம். ஆனால் யார் எனக்கு விடுதலை பெற்றுத் தருவார்கள்?”
ஓர் அடிமை அதிலிருந்து விடுபட வேண்டுமெனில் யாராவது அந்த அடிமையின் முதலாளிக்குப் பணம் கொடுத்து அந்த அடிமைக்கு விடுதலை அளிக்க வேண்டும். அல்லது நல்ல நாள், பெருநாள் என்று எஜமானனாய்ப் பார்த்து , “அடிமையே இன்றிலிருந்து உனக்கு விடுதலை” என்று அறிவித்தால் ஆச்சு. அதுதான் அன்று வழமை.
“நான் உனக்கு விடுதலை அளிக்கிறேன்,” என்றார் ஜுபைர்.
“எப்படி?” நம்ப முடியவில்லை அபூதஸ்மாவுக்கு.
“என் தந்தையின் சகோதரர் துஐமாவைக் கொன்றது ஹம்ஸா இப்னு அப்துல் முத்தலிப். நடைபெற உள்ள போரில் நீ மட்டும் அவரைக் கொன்றுவிட்டால், உனக்கு விடுதலை. நீ சுதந்தரக் காற்றை சுவாசிக்கலாம்”
சில்லென்று சிலிர்த்தது. விடுதலை கிடைத்துவிடுமா? நிச்சயமாகவா?
“நீங்கள் உங்களுடைய வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள் என்பதற்கு யார் உத்தரவாதம் அளிப்பது?” என்று கேட்டார் அபூதஸ்மா. அவருக்குச் சந்தேகமிருந்தது. பழிவாங்கும் வெறியில் தன் இஷ்டத்திற்கு வாக்குறுதி அளிக்கிறார் எஜமானன். வேலை முடிந்த பிறகு , “வா, வந்து இந்த மூட்டையைத் தூக்கு” என்று பின்வாங்கி விட்டால்?
“நீ யாரை விரும்புகிறாயோ அவர்களை எல்லாம் அழைத்துவா. என்னுடைய வாக்குறுதிக்கு நான் அனைவரையும் சாட்சியாக ஆக்கிக்கொள்வேன்”
“அப்படியானால், நிச்சயம் நான் உமது கோரிக்கையை நிறைவேற்றுவேன்,” என்று பதிலளித்தார் அபூதஸ்மா. படையினரிடம் அந்த வாக்குறுதி பரவி பிரபலமடைந்தது.
அபூதஸ்மாவிடம் ஓர் அபாரத் திறமை இருந்தது. ஆப்பிரிக்கர்களுக்கே உரித்தான திறமை அது. ஓர் இலக்கை நோக்கி தனது ஈட்டியை எறிந்தால் எறிந்ததுதான். குறி தப்பவே தப்பாது. அந்தத் திறமையைச் சரியாகக் கணித்து வைத்திருந்த ஜுபைர், தக்க தருணத்தில் சரியானபடி உபயோகித்துக் கொள்ள முடிவெடுத்தது அவரது சாதுர்யம்.
உற்சாகமடைந்த அபூதஸ்மா தனது ஈட்டியை எடுத்துக் கொண்டார். படையுடன் சேர்ந்து கொண்டார். ஆனால் படையின் இறுதியில் வந்துகொண்டிருந்த பெண்கள் பிரிவினருக்கு அருகில் இணைந்து கொண்டார். இந்தப் போரில் அவருக்கு எந்தவொரு பிரமாதமான ஈடுபாடும் இல்லை. ஒரே ஒரு குறிக்கோள். தனது விடுதலை. அந்த எண்ணம் அளித்த உற்சாகம் மட்டும் நெஞ்சம், தலை, கை கால் என்று உடல் முழுக்க வியாபித்திருந்தது. எனவே படையின் மற்ற வீரர்களுடன் கலந்துகொண்டு ஆரவாரமாய் முன்னே நிற்கும் எண்ணம் எதுவும் அவருக்கு இல்லை.
போர் முழக்கம், கூக்குரல், என்று வெறியுடன் மதீனா நோக்கி முன்னேறிச் சென்றுகொண்டிருந்தது படை. அபூதஸ்மா ஆண்கள் பிரிவின் இறுதியில் இருந்ததாலும், பெண்கள் பிரிவின் தலைமையாக ஹிந்த் இருந்ததாலும் இருவரும் பேசிக் கொள்ள நேர்ந்தது. அபூதஸ்மாவின் கையில் சூரிய ஒளியில் மின்னும் ஈட்டியைப் பார்த்து, ஹிந்த் கூறினார், “அபூதஸ்மா! உன்னையும் விடுவித்துக்கொள். எங்களையும் எங்களது பெருந்துயரிலிருந்து விடுவி!”
அத்தனை வெறி!
மதீனாவிற்கு வெளியே அமைந்துள்ள உஹது மலை அடிவாரத்தில் குரைஷிப் படையை எதிர்க்கொண்டது முஸ்லிம்களின் படை. யுத்தம் துவங்கியது; உக்கிரம் அடைந்தது. அபூதஸ்மாவின் கண்கள் ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹுவை மட்டும் தேடிக் கொண்டிருந்தன. வேறு எதிலும் நாட்டமில்லை, எதையும் கவனிக்கவில்லை. ஹம்ஸாவை மக்காவில் இருக்கும்போதே பார்த்திருக்கிறார் அபூதஸ்மா. கம்பீரத்தின் சின்னம் ஹம்ஸா இப்னு அப்துல் முத்தலிப். தலையில் தலைப்பாகையும் அதில் ஒரு நெருப்புக்கோழியின் இறகும் செருகி இருக்கும். அது அரேபிய மாவீரர்கள் தங்களது வலிமையைப் பறைசாற்றும் அடையாளம். போர் நடைபெறும்போது அவருக்கு இணையான மற்றொரு வீரன் அந்த அடையாளத்தைக் கொண்டு அவர்களை வந்து எதிர்கொள்வது வழக்கம். எனவே ஹம்ஸாவை அபூதஸ்மாவினால் எளிதில் கண்டுகொள்ள முடிந்தது. சந்தனநிற மந்தையில் தனியாய்த் தெரியும் கறுப்பு ஒட்ட்கத்தைப்போல் அவரை இனங் கண்டுகொண்டதாகப் பின்னர் விவரிக்கிறார் அபூதஸ்மா. வேங்கையாய் களத்தில் ஆடிக்கொண்டிருந்தார் ஹம்ஸா. வீறுகொண்ட குதிரையைப்போல் எதிரிப் படையினரின் ஊடே தனது வாளால் வெட்டிக்கொண்டே பறந்தோடிக் கொண்டிருந்தார் அவர். அவரது அந்த அசகாய முன்னேற்றத்தை குரைஷிப் படைகள் தடுக்கமுடியாமல் திணறி வீழ்ந்து கொண்டிருந்தனர்.
புதர்களுக்கும் பாறைகளுக்கும் இடையில் மறைந்து மறைந்து அவரைத் தொடர்ந்து நெருங்கிக் கொண்டிருந்தார் அபூதஸ்மா. அந்நேரம் குரைஷிப் படையைச் சேர்ந்த சிபா அப்துல் உஸ்ஸா என்பவன் தனது குதிரையுடன் அவரை நெருங்கி, “நான் உனக்குச் சவால் விடுகிறேன் ஹம்ஸா,” என்று அவரை “ஒத்தைக்கு ஒத்தை” சண்டைக்கு அறைகூவல் விடுத்தான். இந்த சிபாவை நினைவிருக்கிறதா? கப்பாப் பின் அல்-அரத் வரலாற்றில் நாம் சந்தித்த அதே சிபா இப்னு அப்துல் உஸ்ஸாதான். அவனை நோக்கி முன்னே சென்ற ஹம்ஸா, “வா, வந்து என்னுடன் மோது எதிரி மவனே, வா வந்து பார்!” என்றார் ஆக்ரோஷமாக!
அவனும் ஹம்ஸாவை நோக்கி வேகமாக நெருங்க, தனது வாளால் ஒரே சீவு. இரத்த வெள்ளத்தில் மடிந்தான் அவன். சிபாவை வீழ்த்தி ஹம்ஸா நிமிர்ந்த அந்த நேரமும் சூழ்நிலையும் பெரும் வாகாய் அமைந்தது அபூதஸ்மாவிற்க்கு. தனது ஈட்டியை உயர்த்தி வலமும் இடமும் ஆட்டி ஆட்டி, தனது கைகளில் அதைச் சரியான சமநிலைககுக் கொண்டுவந்தார் அபூதஸ்மா. குறிபார்த்து எறிந்தார். அதுநேராக ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹுவின் அடிவயிற்றில் புகுந்து அதன் முறுமுனை இடுப்பிலிருந்து வெளிவந்தது. திகைத்துத் திரும்பிய ஹம்ஸா அபூதஸ்மாவை நோக்கித் தள்ளாடி கால்களை முன்னெடுத்து வைத்து, அதற்குமேல் முடியால் செருகிய ஈட்டியுடன் தடுமாறி வீழ்ந்தார் அல்லாஹ்வின் சிங்கம்.
எங்கும் நகராமல் அப்படியே காத்திருந்தார் அபூதஸ்மா. பின்னர் ஹம்ஸா இறந்துவிட்டார் என்பது உறுதியானதும் அவரை நெருங்கித் தனது ஈட்டியை அவரது உடலிலிருந்து பிடுங்கி எடுத்துக்கொண்டு தனது கூடாரத்திற்குச் சென்று அமர்ந்து கொண்டார். வந்த வேலை முடிந்தது. அதற்குமேல் போரில் அவருக்கு எந்த சுவாரஸ்யமும் இல்லை, வேறு எவரையும் கொல்ல வேண்டும் என்ற அவசியமும் இல்லை. “என் பணி முடிந்தது. இனி எனக்கு விடுதலை” தீர்ந்தது விஷயம்.
உஹத் போர் மும்முரமடைந்து முஸ்லிம்களின் கை ஓங்கி, ஹம்ஸாவின் மரணத்துக்குப் பின்னர் அது குரைஷிகளுக்குச் சாதகமாகத் திரும்பியது. அந்த வெற்றி, குரைஷிப் பெண்களை மதிமயக்கி வெறியாட்டம் போட வைத்ததையும் குலவையிட்டும் நாட்டியமாடியும் போர்க்களத்தில் அவர்கள் நிகழ்த்திய பேரழிவுகளையும் மரணித்துக் கிடந்த முஸ்லிம் வீரர்களின் சடலங்கள், அப்பெண்களால் சின்னா பின்னமாக்கப்பட்டு, குடல்கள் கிழித்தெறியப்பட்டதையும், கண்கள் நோண்டப்பட்டதையும் ஆஸிம் இப்னு தாபித் ரலியல்லாஹு அன்ஹு வரலாற்றிலேயே பார்த்தோம்.
அவற்றுள் ஹிந்தின் ஆட்டம் பேயாட்டம். இறந்த சஹாபாக்களின் உடல்களைச் சிதைத்து அவர்களின் சடலங்களிலிருந்து காதுகள் மூக்குகள் ஆகியனவற்றை அறுத்தெடுத்து கழுத்தணியும் காதணியும் செய்து மாட்டிக் கொண்டு, தங்கத்தினாலான தனது காதணியையும் பவளக் கழுத்தணியையும் அபூதஸ்மாக்கு சன்மானமாக அளித்தார்.
“அபூதஸ்மா. இந்தா வாங்கிக் கொள். இவையெல்லாம் எனது பரிசு. விலை மதிப்புமிக்க இவை அனைத்தும் உனக்கே உனக்கு”
உஹதுப் போர் முடிந்தது. குரைஷிப் படைகளுடன் மக்கா திரும்பினார் அபூதஸ்மா. பெருமகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தது குரைஷிப் படை. ஜுபைர் இப்னு முத்இம் தனது வாக்குறுதியைக் காப்பாற்றினார். அபூதஸ்மாவிற்கு விடுதலை கிடைத்தது.
அடுத்து வரலாற்றின் பக்கங்கள் பரபரவென்று திரும்பிக் கொண்டிருந்தன. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸலலம் அவர்களது புகழ் நாளுக்கு நாள் பரவி இஸ்லாம் வெகுவேகமாய் அரேபிய தீபகற்பத்தில் பரவிக் கொண்டிருந்தது. நபியவர்களின் அதிகாரம் பலமாகி வருவதை அறிந்து மக்காவிலிருந்த அபூதஸ்மாவிற்கோ கவலையான கவலை. இறுதியில் அமைதியானதொரு படையெடுப்பின் மூலம் மக்கா முஸ்லிம்கள் வசமாக, அதற்குமேல் அங்கிருந்தால் உயிருக்கு ஆபத்து நேருமோ என்ற பயத்தில் தாயிஃப் நகருக்கு அடைக்கலம் தேடி ஓடினார் அபூதஸ்மா.
அங்குச் சென்றும் அவரால் நெடுநாள் அமைதியாய் வாழ முடியவில்லை. தாயிஃப் நகர மக்களின் மத்தியிலும் இஸ்லாம் வேகமாகப் பரவ ஆரம்பித்தது. அங்கிருந்து ஒரு குழு கிளம்பி மதீனா சென்று முஹம்மது நபியைச் சந்தித்து தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதை அறிவித்தது. அப்பொழுதுதான் மிகவும் கிலியுற்றுப்போனார் அபூதஸ்மா. உலகமே சுருங்கிவிட்டதைப் போலிருந்தது அவருக்கு.
இனி பூமியில் எங்குத் தனக்கு அடைக்கலம் கிடைக்கும் என்று அவருக்குத் தெரியவில்லை. பேசாமல் யமனுக்குப் போய்விடலாமா? அங்கு வேண்டாம், சிரியாவிற்குச் சென்றுவிட்டால்? இப்படியே யோசித்து யோசித்து, இறுதியில் மிஞ்சியது பெரும் குழப்பம் மட்டுமே.
அந்த நிலையில் யாரோ கூறினார்கள்.
“என்ன குழப்பம் வஹ்ஷி! அல்லாஹ்வின் மேல் ஆணையாகச் சொல்கிறேன். இஸ்லாத்தில் இணையும் எவரையும் முஹம்மது கொல்லுவதில்லை”
வஹ்ஷி இப்னு ஹர்ப்! அதுதான் அபூதஸ்மாவின் இயற்பெயர். அந்த யாரோ சொன்ன ஆலோசனை தெளிவை அளிக்க, செல்ல வேண்டிய பாதை எதுவென்று புரிந்தது. அது மதீனாவிற்குச் செல்லும் பாதை. உடனே மதீனா கிளம்பினார் வஹ்ஷி.
* * * * *
மதீனா வந்தடைந்த அவர் மக்களிடம் விசாரித்தார், “நான் முஹம்மது நபியைச் சந்திக்க வேண்டும்”
முகம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு நடந்து அனைத்தையும் விவரிக்க, “மாபெரும் வேதனையை உருவாக்கிக் கொண்டாய் வஹ்ஷி! கைச்சேதம்! உனது முகத்தை என் எதிரே காண்பிக்க வேண்டாம்,” என்று தனது வேதனையை வெளிப்படுத்தினார்கள் நபியவர்கள்!
தன்னுடைய சிற்றப்பாவின் கொடூர மரணத்திற்குக் காரணமான ஒருவரை மன்னிக்கும் பெருந்தன்மை இருந்தது நபியவர்களுக்கு. ஆனால் அதற்குக் காரணமாக இருந்தவரின் முகத்தை நேரடியாகக் காண்பதில் அவர்களுக்குப் பெரும் சிரமமிருந்தது. அன்றிலிருந்து முஹம்மது நபியின் எதிரே நேரடியாகத் தான் தென்படுவதைத் தவிர்த்துக் கொண்டார் வஹ்ஷி ரலியல்லாஹு அன்ஹு. ஏனையத் தோழர்களெல்லாம் நபியவர்களுக்கு எதிரே அமர்ந்திருந்தால், இவர் மட்டும் அனைவருக்கும் பின்னே சென்று அமர்ந்து கொள்வார். முஹம்மது நபி இறந்து போகும்வரை இப்படியேதான் காலம் கழிந்தது. ஆனால் இஸ்லாம் முழுமுற்றும் அவரது நெஞ்சினுள் புகுந்து பரவி ஆட்கொண்டது.
அல்லாஹ்வின் அருள் மீது அசையாத நம்பிக்கை வைத்து, தன் பாவத்துக்குத் தவ்பாச் செய்வதில் அதிக நேரம் செலவழித்தார் வஹ்ஷி. “(நபியே!) கூறுங்கள்: தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொண்ட என் அடியார்களே! அல்லாஹ்வின் அருளைப் பற்றி ஒருபோதும் நம்பிக்கை இழந்து விடாதீர்கள். (உங்கள் பாவத்துக்காக வருந்தி அவனிடம் கோரிக்கை வைத்தால்) திண்ணமாக அல்லாஹ் (உங்கள் எல்லாப்) பாவங்களையும் மன்னித்து விடுவான். திண்ணமாக அவன் மிக்க மன்னிப்பவன்; பேரருளாளன்” என்ற (39:53) இறைவசனம் அவருக்கு நம்பிக்கையும் ஆறுதலும் அளிப்பதாக இருந்தது.
இஸ்லாத்தை ஏற்றுக்கொணட மாத்திரத்தில் அதற்கு முன்வரை நிகழ்ந்த அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன என்ற உண்மையை வஹ்ஷி அறிந்தே இருந்தார். ஆனால் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹுவின் இழப்பு எத்தகைய நட்டம் என்பது அவருக்கு உறுத்திக் கொண்டிருந்தது. ஒரு பேரிழப்பிற்குத் தான் காரணமாய் ஆகிவிட்டோமே என்ற பெரும் குற்ற உணர்ச்சி குடைந்து எடுத்தது. இதை மாற்ற வழியில்லையா? ஏங்கிக் கொண்டிருந்தார் அவர். இந்நிலையில்தான் வந்து வாய்த்தது ஒரு வாய்ப்பு.
மீண்டும் நமக்குப் பரிச்சயமான ஒரு அத்தியாயத்திற்குள் நுழையப் போகிறோம். அனைவரும் கணித்திருக்க வேண்டுமே! ஆம் முஸைலமா!
அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹு கலீஃபாவாகப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்க, பெரும் படையொன்று முஸைலமாவை எதிர்கொள்ளக் கிளம்பியது. பொறி தட்டியது வஹ்ஷிக்கு. தனக்குள் சொல்லிக் கொண்டார். “அல்லாஹ்வின்மேல் ஆணையாக, வஹ்ஷி! இது உனக்கு அமைந்த மிக நல்ல வாய்ப்பு. தவறவிடாதே. இதைவிட்டால் வேறு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்”
அவ்வளவுதான். உடனே அந்தப் படையுடன் கிளம்பினார் வஹ்ஷி ரலியல்லாஹு அன்ஹு.
மறக்காமல் தன்னுடயை ஈட்டியையும் எடுத்துக் கொண்டார். ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹுவைக் கொன்ற அதே ஈட்டி.
“செய் அல்லது செத்து மடி” என்பதுபோல் மனதிற்குள் சத்தியப் பிரமாணம் ஒன்று செய்து கொண்டார் வஹ்ஷி. ஒன்று முஸைலமாவைக் கொன்றொழிக்க வேண்டும். அல்லது தாம் வீரமரணம் எய்த வேண்டும்.
யமாமாவின் மரணத் தோட்டம்! முஸைலமாவும் அவனது படைக் குழுவும் அந்தத் தோட்டத்திற்குள் புகுந்து அடைத்துக் கொள்ள, வெட்டி முறித்து உள்ளே நுழைந்தது முஸ்லிம்களின் படை. முஸைலமாவைத் தனது கழுகுக் கண்களால் தேட ஆரம்பித்தார் வஹ்ஷி. அந்தப் பெரும் கூட்டத்தினுள் ஒருவழியாய் அவன் தென்பட்டான். அந்தத் தோட்டத்தில் இருந்த சுவர்களின் இடுக்குகளுக்கிடையே ஒளிந்து கொண்டிருந்தான் அவன். ஆற்றவியலா சீற்றமும், மூச்சு வாங்கி வாயில் நுரை கொப்புளிக்க, என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போய் வாளொன்றை ஏந்திக் கொண்டு நின்றிருந்தான் அவன். அதேநேரம் அன்ஸாரீகளைச் சேர்ந்த தோழர் ஒருவரும் அவரைத் தேடிக் கொண்டிருப்பதை கண்டுவிட்டார் வஹ்ஷி. அவர் அபூதுஜ்ஜானா ரலியல்லாஹு அன்ஹு. இருவருக்கும் ஒரே குறிக்கோள். பொய்யன் முஸைலமாவைக் கொன்றே தீரவேண்டும். ரொம்பவும் ஆட்டம் போட்டு விட்டான். இன்றுடன் அவன் அத்தியாயத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி இடவேண்டும்.
முஸைலமாவைத் தாக்க ஏதுவான பகுதியில் நின்று கொண்டிருந்தார் வஹ்ஷி. தனது ஈட்டியை உயர்த்தி வலமும் இடமும் ஆட்டி ஆட்டி தனது கைகளில் அதைச் சரியான சமநிலைககுக் கொண்டுவந்தார். குறிபார்த்து எறிந்தார்.
விர்ரென்று பறந்து சென்ற அது இம்முறையும் குறிதவறவில்லை.
இலக்கை சரியே அடைந்தது. திகைத்துப் போய் களத்தில் நின்றிருந்த முஸைலமாவினுள் ஈட்டி செருக, நிலைகுத்தி அப்படியே நின்றுவிட்டான். அதே நேரம் அபூதுஜ்ஜானாவும் அவனை நோக்கிப் பாய்ந்தோடி வந்து தனது வாளால் அவனை வெட்ட, துண்டாகிச் சாய்ந்தான் முஸைலமா. தனது ஈட்டியா அல்லது அந்தத தோழரின் வாளா எது இறுதியில் முஸைலமாவிற்கு முற்றுப்புள்ளி வைத்தது என்பதில் சற்றுக் குழப்பம் இருந்தது வஹ்ஷிக்கு. அந்தத் தோட்டத்தினுள் இருந்த ஒரு கட்டடத்தில் பதுங்கியிருந்த ஒரு பெண் அலறினாள், “ஆ! தூய்மையான தலைவர் மடிந்துவிட்டார். ஒரு கறுப்பு அடிமை அவரைக் கொன்றுவிட்டான்”
அதற்குப்பின் அந்தப் போர் திசைமாறியது. முஸைலமாவின் படைகளை முஸ்லிம் படையினர் சகட்டுமேனிக்குத் தாக்கி நிலைகுலைய வைத்து ஒருவழியாக முடிவுக்கு வந்தது பொய்யன் முஸைலமாவின் அத்தியாயம்.
திருப்தியுற்றார் வஹ்ஷி.
அஞ்ஞானத்திலிருக்கும்போது முஸ்லிம்களுள் சிறப்பான ஒரு மனிதரைக் கொன்றதும் அவர்தான். ஈமான் கொண்டபின் உலகிலேயே மோசமான இஸ்லாமிய விரோதி ஒருவனைக் கொன்று பரிகாரம் கண்டதும் அவர்தான்.
ரலியல்லாஹு அன்ஹு!
oOo
சத்தியமார்க்கம்.காம்-ல் 01 செப்டம்பர் 2010 அன்று வெளியான கட்டுரை