தோழர்கள் – 56 அபூதுஜானா (ரலி)

by நூருத்தீன்
56. அபூதுஜானா (ابو دجانة‎)

ஹதுப் போரில் கஅப் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு கலந்துகொண்ட நிகழ்வை இரண்டு அத்தியாயங்களுக்கு முன் பார்த்தோம். அந்தப் போரில் முஸ்லிம்களுக்குப் பின்னடைவு ஏற்பட்டு நிறைய உயிரிழப்பு ஏற்பட்டது நாம் முன்னரே அறிந்த நிகழ்வு.

அதைத் தொடர்ந்து குரைஷியர்கள் முஸ்லிம்களின் சடலங்களின் மூக்கை அறுத்து, காதுகளை வெட்டி, பெரும் அட்டூழியம் புரிந்ததும் தோழர்களின் முந்தைய அத்தியாயத்தில் நமக்கு அறிமுகமான செய்திகள். அதைக் கண்ணால் கண்டவர்களுள் ஒருவர் கஅப். ஏகத்துக்கும் திகைத்துப்போனார். அவரால் சகிக்க முடியாத கொடூரம் அது.

அப்பொழுது களத்தில் எதிரிகளுள் ஒருவன் – அவனது தோற்றமே அவனது உறுதியை வலியுறுத்தப் போதுமானதாக இருந்தது; ஆயுதம் தரித்திருந்தான் – முஸ்லிம்களின் சடலங்களைப் பார்த்து, படு ஏளனமாக, “அறுக்கப்பட்ட ஆடுகளைப் போல் வீழ்ந்து கிடக்கிறார்கள். அனைவரையும் ஒன்று கூட்டுங்கள்” என்று சொல்லியவாறு கடந்து சென்று கொண்டிருந்தான்.

சற்றுத் தொலைவில் அவனை எதிர்பார்த்தபடி ஆயுதமேந்திய முஸ்லிம் வீரர் ஒருவர் காத்திருந்தார். அவரது முகத்தைத் திரையொன்று மூடியிருந்தது. ஆவலுடன் அங்கே விரைந்த கஅப் அந்த முஸ்லிமின் பின்னால் சென்று நின்று, இருவரையும் எடைபோட்டார். அந்த முஸ்லிமைவிட எதிரியின் தோற்றமும் வலுவும் ஆயுதமும் நிச்சயமாகப் பல விதங்களில் மேலானவை என்பது தெளிவாகத் தெரிந்தது. கஅப் பார்த்துக்கொண்டேயிருக்க அந்த இருவருக்கும் இடையில் ‘ஒத்தைக்கு ஒத்தை’ சண்டை துவங்கியது.

ஆயுதங்கள் உரசிக்கொண்ட ஓசையும் தரையில் இருவரின் கால்களும் இயங்கியதால் எழுந்த ஒலியும் படர்ந்த புழுதியும் என்று அந்த இடம் உஷ்ணமாக, முஸ்லிம் வீரர் தமது வாளை எதிரியின்மீது படுவேகமாய் ஒரே செருகு செருகினார். அது அவனது இடுப்பெலும்பை இரண்டாகப் பிளந்தது. இரத்தம் பீய்ச்சியடிக்க ‘பொதேர்’ என்று மாண்டுவிழுந்தான் அவன்.

தமது முகத்திரையை விலக்கி, “என்ன பார்க்கிறீர் கஅப்! நான்தான் அபூ துஜானா!” வியர்வையும் வீரமும் கொப்புளிக்க, தமக்கான தனித்துவமான பாணியில் பெருமையுடன் இடமும் வலமும் ஓர் ஆட்டம் ஆடி நின்றார் அபூ துஜானா ரலியல்லாஹு அன்ஹு

oOo

அபூதுஜானா சிமாக் இப்னு ஃகரஷா, மதீனாவின் கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்தவர்; அன்ஸாரி. அவருடைய பெற்றோர் அவ்ஸ் பின் ஃகரஷா, ஹுஸ்மா பின்த் ஹர்மலா. முஸ்லிம்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்குப் புலம்பெயர்ந்தபோது அவர்களுக்கும் மதீனத்து அன்ஸார்களுக்கும் இடையே நபியவர்கள் ஏற்படுத்திய சகோதர பந்தத்தில் உத்பா பின் கஸ்வான் ரலியல்லாஹு அன்ஹுவுக்கு அன்ஸாரித் தோழரான அபூதுஜானா சகோதரராக அமைந்தார். தலைசிறந்த இரு தோழர்களுக்கு இடையே அழகிய உறவு உருவானது.

அதன்பின் வரலாற்றுப் பக்கங்களில் அபூதுஜானாவின் வாழ்க்கை எனப் பதிவாகியுள்ளதெல்லாம் வாளும் போரும் வீரமும். வீரம் என்றால் மிகையற்ற தூய வீரம். களத்தில் தமக்கென ஒரு பாணி அமைத்துக்கொண்டு சுழன்றடிப்பார் அபூதுஜானா. சிகப்பு நிறத் துணியொன்றைத் தம் நெற்றியைச் சுற்றிக் கட்டிக்கொண்டு களத்தில் குதித்தால், ‘சாகடி அல்லது செத்துமடி’ என்று அவர் தமது மரணத்திற்கு ஆயத்தமாகிவிட்டார் என்று அர்த்தம். அதற்கடுத்து, தூள் பறக்கும் ஆக்ரோஷச் சண்டையைப் பார்த்து ரசிக்க வேண்டியதுதான். பத்ருப் போரில் கலந்துகொள்ளும்போது அந்த அடையாளத்தைத் தமக்கு அமைத்துக்கொண்டார் அபூதுஜானா.

அதன்பின், உஹதுப் போரில் அவர் ஆற்றிய பங்கு அவரது வீரத்தின் பெரும் பெருமையை விவரித்துள்ளது. ‘உயிர் துச்சம்’ என்று நபியவர்களிடம் மரணத்திற்கான வாக்குறுதியை அளித்துவிட்டுக் களத்தில் குதித்தார் அபூதுஜானா. அதைத்தொடர்ந்து அன்றைய போரில் அவர் புரிந்ததெல்லாம் சாகசம்; மேலும் சாகசம்.

ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம்.

உஹதில் போருக்கான ஆயத்தங்களைச் செய்துவிட்டுப் படையினருக்குத் தெளிவான கட்டளைகளைப் பிறப்பித்தார்கள் நபியவர்கள். அவர்களது பேச்சு தோழர்களுக்கு எக்கச்சக்க ஆர்வம் ஊட்டியது. எதிரிகளைச் சந்திக்கும்போது வீரம் எப்படி வெளிப்படவேண்டும் என்று நபியவர்கள் ஊக்கமளித்தார்கள். இறைத்தூதரிடம் கூர்மையான ஒரு வாள் இருந்தது. அதை உருவி, “யார் இதை என்னிடமிருந்து பெற விழைகிறீர்கள்?” என்று கேட்டார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.

வாள், அதுவும் அல்லாஹ்வின் தூதரின் வாள், அதை அவர்கள் தருகிறேன் என்கிறார்கள் என்றால் வேண்டாம் என்று யாராவது புறக்கணிப்பார்களா என்ன? அங்கிருந்த அனைவரும் நான், நீ என்று கையை உயர்த்த, நபியவர்களின் வாக்கியம் தொடர்ந்தது. “யார் இதை என்னிடமிருந்து பெற்று அதற்குரிய கடமையை நிறைவேற்றுவீர்கள்?”

நபியவர்களின் வாள், அதற்குரிய கடமை என்றதும் அதில் அடங்கியுள்ள விஷயத்தின் முக்கியத்துவம் புரிந்து, அது என்னவாயிருக்கும் என்று தோழர்களுக்கு யோசனை. ஆனால் தயக்கமே இன்றிக் கேட்டார் அபூதுஜானா. “அல்லாஹ்வின் தூதரே! அந்த வாளுக்குரிய கடமை என்ன?”

“இந்த வாள் வளையும்வரை இதன் மூலம் எதிரிகளின் முகங்களை நீர் வெட்ட வேண்டும்” என்றார்கள் நபியவர்கள்.

அந்த வாள் என்ன அட்டைக் கத்தியா அல்லது தகரத்தால் செய்யப்பட்டதா எளிதில் வளைந்துவிடுவதற்கு? எதிரிகளிடம் எவ்விதம் போர் புரிய வேண்டும், தாக்குதல் நடத்த வேண்டும் என்ற அறிவுரை அதில் உட்பொதிந்திருந்தது. அதை முற்றிலுமாய் உணர்ந்துகொண்ட அபூதுஜானா, “அல்லாஹ்வின் தூதரே! இதன் கடமையை நான் நிறைவேற்றுவேன்” என்று தம் கரத்தை நீட்ட நபியவர்களிடமிருந்த வாள் கைமாறியது.

அதைப் பெற்றுக்கொண்டதும் தம்முடைய சிவப்புத் துணியைக் கட்டிக் கொண்டார் அபூதுஜானா. அதைப் பார்த்த மதீனாவாசிகளிடம் “ஆஹா! அபூதுஜானா மரணத்தின் தலைப்பாகையை அணிந்துவிட்டார்” என்று ஒரே ஆர்ப்பரிப்பு. ஆர்ப்பரித்தார்கள். அபூதுஜானா உரத்தக் குரலில்,

மலையடிவாரத்தில்
ஈச்சமரங்களின் அடியில்
நண்பனுடன் இட்டேன் ஒப்பந்தம்
படையின் பின்புற அணியிலல்ல
எனது இடம்
என்பததன் வாசகம்
முன் அணியில் இடம் பெறுவேன்
இனி வீரமுரைக்கும்
அல்லாஹ்வின் தூதரின்
வாளாயுதம்

எனக் கவிதை உரைத்துவிட்டு, இரு அணிகளுக்கிடையில் நடந்தார் ஒரு நடை. அது பெருமை கொப்புளிக்கும் பாணியிலான இறுமாப்பு நடை.

அதைப் பார்த்த நபியவர்கள், “இவ்வாறான நடை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் வெறுக்கக்கூடிய ஒன்று – போர்க்களத்தைத் தவிர” என்று அனுமதி அளித்தார்கள். அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்த்து ஆயுதமேந்திக் களத்தில் நிற்பவர்கள், மட்டையை ஏந்திப் பந்தை எதிர்நோக்குபவர்களைப் போன்ற எதிர் அணியின் விளையாட்டுப் பிள்ளைகள் அல்லர். அவர்களிடம் ஒரு முஸ்லிமுக்கு என்ன பணிவு வேண்டியிருக்கிறது? அடக்கம் என்பதற்கான அளவுகோலுக்குப் போர்களத்தில் தனி விதி.

மக்காவிலிருந்து வந்திருந்த குரைஷிப் படைகளுடன் யுத்தம் துவங்கியது. அபூதுஜானாவின் கையில் நபியவர்களின் வாள் மின்னி மினுமினுத்தது. அதை உயர்த்திப் பிடித்து, எதிரிகளின் படைக்குள் புகுந்து, தமக்கு எதிரே வந்த ஒவ்வொரு எதிரியையும் சரமாரியாக வெட்டி வீழ்த்திக் கொண்டே சென்றார் அபூதுஜானா. அவர்களது அணியைப் பிளந்தவாறு முன்னேறி, தலைகளைக் கொய்யும் ஒவ்வொரு முறையும் இடமும் வலுமும் சாய்ந்து ஓர் ஆட்டம் ஆடி, சிங்கமாய் கர்ஜனை வரும், “நான்தான் அபூ துஜானா.”

நபியவர்கள் அறிவித்தபோது வாளைப் பெற்றுக்கொள்ளக் கை உயர்த்தியவர்களுள் ஸுபைர் இப்னு அவ்வாமும் ஒருவர். அந்த வாள் தமக்குக் கிடைக்காமல், வாய்ப்பு அபூதுஜானாவுக்கு அமைந்ததைப் பற்றி அவருக்கு நிறையக் கவலை. ‘நபியவர்களின் அத்தை ஸஃபிய்யாவின் மகன் நான். குரைஷிக் குலத்தைச் சேர்ந்தவன். நானும்தான் முந்திக்கொண்டு நபியவர்களிடம் அந்த வாளைப் பெற முயன்றேன். ஆனால் அந்த வாய்ப்பு அபூதுஜானாவுக்கு அமைந்து போனதே. அபூதுஜானா அப்படி என்னதான் அந்த வாளின் கடமையை நிறைவேற்றுகிறார் என்று பார்ப்போம்’ என்று தமக்குள் கூறிக்கொண்டு அபூதுஜானாவைக் கவனிக்க ஆரம்பித்தார் ஸுபைர். அடுத்து நிகழ்ந்தவற்றை அவரே விவரித்து வரலாற்று நூல்களில் தகவல்கள் பதிவாகியுள்ளன. ‘அபூதுஜானா தாம் சண்டையிட்ட எவரையும் கொல்லாமல் விடவில்லை. வெட்டித் தள்ளியவாறு முன்னேறினார்’ என்று குறிப்பிட்டுள்ளார் ஸுபைர்.

இதனிடையே எதிரிகளுள் ஒருவன், காயமடைந்து களத்தில் குற்றுயிராக விழுந்துள்ள முஸ்லிம்களைத் தேடித் தேடிச் சென்று வீழ்த்திக்கொண்டிருப்பதைக் கவனித்தார் ஸுபைர். இதற்குள் களத்தில் முன்னேறியவாறு இருந்த அபூதுஜானா அந்த எதிரியை நெருங்கிவிட்டார். எதிரியின் செயலைக்கண்டு பெரும் ஆத்திரத்தில் இருந்த ஸுபைர், “அல்லாஹ்வே! அவ்விருவரையும் சந்திக்க வை” என்று பிரார்த்தித்தார். அவரது அவா வீணாகவில்லை; நிகழ்ந்தது. அபூதுஜானாவும் அந்த எதிரியும் மோதினர். இருவருக்குமிடையே கடுமையான சண்டை துவங்கியது. பார்த்துக்கொண்டிருந்தார் ஸுபைர்.

எதிரி அபூதுஜானாவைத் தனது வாளால் வெட்ட முனைய அதை தமது கேடயத்தால் படு லாவகமாகத் தடுத்தார் அபூதுஜானா. வெட்டு தடைபட்டது. அத்தோடல்லாமல் அவனது வாள் அந்தக் கேடயத்திற்குள் வகையாய்ச் சிக்கிக்கொண்டது. அதைச் சரியாகப் பயன்படுத்தினார் அபூதுஜானா. அவரது கையிலிருந்த நபியவர்களின் வாள் அவனது வாழ்க்கையை முடித்து வைத்தது. “நான்தான் அபூ துஜானா” என்று முழங்கிவிட்டுத் தொடர்ந்து எதிரிகளின் அணியைக் கிழித்துக் கொண்டு முன்னேறினார் அபூதுஜானா.

அப்பொழுது அவரது வழியில் இடைப்பட்டார் அந்தப் பெண். குரைஷிப் பெண்களின் தளபதி, அபூஸுஃப்யானின் மனைவி ஹிந்த் பின்த் உக்பா. பாட்டுப் பாடியும் குரைஷிப் படையினருக்கு வெறி ஊட்டியும் தூண்டிக்கொண்டிருந்தார் ஹிந்த். ஹிந்தின் அடையாளத்தை அப்பொழுது அபூதுஜானா அறிந்திராத காலம். தவிர, தாம் நெருங்கும் ஒருவர் பெண் என்பதையே அச்சமயம் அபூதுஜானா கவனிக்கவில்லை. அந்தப் பெண்ணை முன்னோக்கிச் சென்று அவரது தலையின் நடுப்பகுதியில் வெட்டுமளவிற்குத் தம் வாளைக் கொண்டு சென்றுவிட்டார். அந்நேரம் சட்டென ஹிந்த் திரும்ப, அப்பொழுதுதான் தாம் ஒரு பெண்ணைத் தாக்க வாளை உயர்த்தியிருக்கிறோம் என்பதை உணர்ந்தார் அபூதுஜானா. ‘ஒரு பெண்ணைக் கொலை செய்து நபியவர்கள் கொடுத்த வாளின் கண்ணியத்தைக் குறைத்து விடுவதா’ எனச் சடுதியில் முடிவெடுத்து அவரைக் கொல்லாமல் விலகினார். இந்நிகழ்வைப் பின்னர் அவரே விவரித்துள்ளார்.

சற்றுத் தொலைவிலிருந்து இதைக் கவனித்த ஸுபைர், “அடடா! அபூதுஜானா ஏன் இவ்வாறு செய்தார்?” என்று மிகவும் கைசேதப்பட்டு, “அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்தாம் நன்கறிந்தவர்கள்” என்று தமக்குத்தாமே சமாதானம் சொல்லிக்கொண்டார். மக்காவிலிருந்து புலம்பெயர்ந்திருந்த ஸுபைர் ஹிந்தையும் நன்றாக அறிந்திருந்தார்; அவரது வன்மையையும் மிகச் சரியாக உணர்ந்திருந்தார். அபூதுஜானாவின் கைநழுவிய வாய்ப்பைப் பற்றிய அவரது அங்கலாய்ப்பு பின்னர் சரியாகவே அமைந்துபோனது. களத்தில் முஸ்லிம்களின் சடலங்கள்மீது ஹிந்தின் ஆட்டம் என்பது வெறியாட்டம்.

முஸ்லிம்களுக்குச் சாதகமாக நடைபெற்றுவந்த போர், பின்னர் நிலைமாறியதால் முஸ்லிம்களுக்குக் கடுமையான சூழல் ஏற்பட்டதைத் தோழர்கள் சிலரது வரலாற்றில் முன்னரே பார்த்தோமில்லையா? அது, முஸ்லிம்களின் படை சிதறிப்போய் நபியவர்கள் தாக்கப்படக்கூடிய அபாயகரமான நிலையளவிற்கு அமைந்துபோனது. அதைக் கவனித்து முதலில் விரைந்தோடி வந்தவர் அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹு. தொடர்ந்து ஓடி வந்து குழுமினார்கள் மற்ற தோழர்கள். அந்த முக்கியமான தோழர்களுள் அபூ துஜானாவும் ஒருவர்.

அபூதுஜானா பலமிக்க இரும்புக் கவச ஆடை அணிந்திருந்தார். நபியவர்களை நோக்கி எய்யப்பட்ட அம்புகளையெல்லாம் அவர் தம் முதுகைக் கேடயமாக்கித் தடுக்க, தாக்கிக் கொண்டிருக்கும் எதிரிகளை விலக்கியவாறு முஸ்லிம்களின் படை மலையின் கணவாய்களுக்கு நகர்ந்து கொண்டிருந்தது. நபியவர்களின் இத்திட்டத்தைக் கவனித்த எதிரிகள் அதைத் தடுக்க பலமாய்ப் போராட ஆரம்பித்தனர்.

குரைஷிகளின் குதிரை வீரர்களுள் ஒருவனான உஸ்மான் இப்னு அப்துல்லாஹ் இப்னு முகீரா என்பவன் “ஒன்று நான் அவரைக் கொல்லவேண்டும்; அல்லது நான் கொல்லப்பட வேண்டும்” என்று கூறிக்கொண்டே நபியவர்களை நோக்கிப் பாய்ந்து வந்தான். அதைக்கண்ட நபியவர்கள் அவனை எதிர்ப்பதற்கு ஆயத்தமானார்கள். ஆனால் வழியிலிருந்த பள்ளத்தில் உஸ்மான் இப்னு அப்துல்லாஹ்வின் குதிரை தடுமாறி விழுந்தது. உடனே ஹாரிஸ் இப்னு சிம்மா ரலியல்லாஹு அன்ஹு அவனை எதிர்கொண்டு சென்று அவனது காலில் ஒரே வெட்டு. முடமாகிய அவனால் எழுந்திருக்க முடியவில்லை. அவன் மீது பாய்ந்து கதையை முடித்துவிட்டு, அவனது ஆயுதத்தை எடுத்துக்கொண்டு நபியவர்களிடம் வந்தார் ஹாரிஸ் இப்னு சிம்மா.

இக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தான் மக்காவின் குதிரை வீரர்களுள் மற்றொருவன் அப்துல்லாஹ் இப்னு ஜாபிர். அவன் பாய்ந்து வந்து ஹாரிஸ் இப்னு சிம்மாவைத் தாக்கி அவரது புஜத்தை வெட்ட, பலமான காயம் ஏற்பட்டுப்போனது ஹாரிஸுக்கு. அவரை அப்துல்லாஹ் இப்னு ஜாபிர் கொல்வதற்குமுன் முஸ்லிம்கள் மீட்டுத் தங்களது இடத்திற்குக் கொண்டுவந்தார்கள். ஹாரிஸ் தாக்கப்பட்டதைப் பார்த்து வெகுண்டெழுந்த அபூதுஜானா, அப்துல்லாஹ் இப்னு ஜாபிரின் தலையைக் கொய்ய, செத்து வீழ்ந்தான் அவன்.

அன்றைய போரில் அபூதுஜானா ஆற்றிய பங்கிற்கு, பின்னர் நபியவர்கள் உரைத்த வாசகம் ஒன்றே போதுமான சான்றாக அமைந்துபோனது. மதீனா வந்தடைந்த நபியவர்கள் தம் மகள் ஃபாத்திமா ரலியல்லாஹு அன்ஹாவிடம் தமது வாளை அளித்து, “இதிலுள்ள இரத்தத்தைக் கழுவவும். அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது இன்று எனக்கு உண்மையாக உழைத்தது” என்றார்கள். அலீ ரலியல்லாஹு அன்ஹுவும் அதைப் போல் தமது வாளை தம் மனைவி ஃபாத்திமாவிடம் அளித்து அவ்விதமே கூற, அதற்கு அல்லாஹ்வின் தூதுர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “நீர் இன்று போரில் உண்மையாகக் கடமையாற்றியதைப் போலவே ஸஹ்ல் இப்னு ஹனீஃபும் அபூதுஜானாவும் உண்மையாகக் கடமையாற்றினர்” என்றார்கள். இதைவிட நற்சான்று ஒரு மனிதருக்கு என்ன தேவை?

சில ஆண்டுகளுக்குப்பின் நடைபெற்ற ஃகைபர் போரின்போதும் அபூதுஜானாவின் பங்கு பதிவாகியுள்ளது. யூதர்கள் அபீ கோட்டைக்குள் புகுந்து கொண்டதும் முஸ்லிம்கள் அக்கோட்டையை முற்றுகையிட்டனர். அப்பொழுது இரண்டு யூதர்கள் ஒருவர்பின் ஒருவராக வெளியில் வந்து, “எங்களுடன் ‘ஒத்தைக்கு ஒத்தை’ சண்டையிட யார் வருகிறீர்கள்?” என்று சவால்விட, உடனே இரண்டு முஸ்லிம்கள் முன்வந்தனர். அவர்களுள் ஒருவர் அபூதுஜானா. வழக்கம்போல் அவரது நெற்றியில் சிகப்புத் துணி. அவர் ஒரு யூதனை வெட்டி வீழ்த்த, மற்றொருவரும் அடுத்த யூதனைக் கொன்றார். அதன்பின் அபூதுஜானாவின் தலைமையில் முஸ்லிம் படைகள் அபீ கோட்டையின் தடுப்புகளை உடைத்துக்கொண்டு உள்ளே புக, கடுமையான யுத்தம் நிகழ்ந்தது. தாக்குதலைத் தாங்க முடியாமல் யூதர்கள் அங்கிருந்து மற்றொரு கோட்டைக்குத் தப்பியோட, இறுதியில் ஃகைபர் போரில் முஸ்லிம்கள் வெற்றியடைந்தது தனி வரலாறு.

இவ்விதம் களத்தில் எதிரிகளைச் சந்திப்பதில் வீர சாகசமும் தனி பாணியும் உடைய அபூதுஜானாவுக்கு மற்றொரு பக்கம் இருந்தது. அது வெள்ளைப் பக்கம்.

ஒருமுறை உடல்நலமின்றி இருந்த அபூதுஜானாவைச் சந்திக்கத் தோழர்கள் வந்திருந்தனர். உடல் மிகவும் சுகவீனமற்று இருந்தாரே தவிர, அபூதுஜானாவின் முகம் நோயின் தாக்கம் இன்றிப் பளிச்சென்று பொலிவுடன் இருந்தது. வியப்புற்ற தோழர்கள், “உம்முடைய முகம் பிரகாசமாக உள்ளதே அபூதுஜானா” என்று விசாரிக்க,

“என்னுடைய செயல்களுள் இரண்டின்மீது எனக்கு மிக நல்ல நம்பிக்கை உள்ளது. ஒன்று, எனக்குச் சம்பந்தமற்ற பேச்சை நான் பேசுவதில்லை. அடுத்தது, எந்தவொரு முஸ்லிமின் மீதும் கசப்புணர்ச்சி, காழ்ப்புணர்ச்சி இன்றி அவர்களைப் பற்றி என் மனத்தில் நல்ல அபிப்ராயத்திலேயே இருக்கிறேன்.”

அகம் அழகாக இருந்தால் என்னாகும்? அது முகத்தில் தெரிந்திருக்கிறது. இச்செய்தியை ஸைது இப்னு அஸ்லம் விவரித்ததாக, அத்தஹபி குறித்து வைத்துள்ளார். இவ்விரண்டையும் நாம் உள்ளார்ந்து பின்பற்ற ஆரம்பித்தாலே போதும்; இன்று நம்மிடையே உள்ள பல பிரச்சினைகளும் மாயும்.

oOo

முஸைலமா; யமாமா; மரணத் தோட்டம் என்பனவெல்லாம் நினைவிருக்கிறதா? நெடுகப் பார்த்துக்கொண்டே வந்திருக்கிறோம். பொய்யன் முஸைலமாவுடன் நிகழ்ந்த இறுதிக்கட்டப் போர் யமாமா போர்.

முஸ்லிம் படைகளின் தாக்குதல் தாளமுடியாமல், முஸைலமாவும் அவனது படைக் குழுவும் அங்கிருந்த தோட்டத்திற்குள் புகுந்து வாயிலை அடைத்துக் கொள்ள, கதவை வெட்டி முறித்து உள்ளே நுழைந்தது முஸ்லிம்களின் படை. முஸைலமாவைத் தமது கழுகுக் கண்களால் தேட ஆரம்பித்தார் வஹ்ஷி பின் ஹர்பு ரலியல்லாஹு அன்ஹு. அந்தப் பெரும் கூட்டத்தினுள் ஒருவழியாய் அவன் தென்பட்டான். அந்தத் தோட்டத்தில் இருந்த சுவர்களின் இடுக்குகளுக்கிடையே ஒளிந்து கொண்டிருந்தான் அவன். ஆற்றவியலா சீற்றமுடன், மூச்சு வாங்கி வாயில் நுரை தள்ள என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போய் வாளொன்றை ஏந்திக் கொண்டு நின்றிருந்தான் அவன்.

அதேநேரம் அபூதுஜானா ரலியல்லாஹு அன்ஹுவும் அவனைத் தேடிக் கொண்டிருப்பதை கண்டுவிட்டார் வஹ்ஷி. இருவருக்கும் ஒரே குறிக்கோள். ‘பொய்யன் முஸைலமாவைக் கொன்றே தீரவேண்டும். ரொம்பவும் ஆட்டம் போட்டு விட்டான். இன்றுடன் அவன் அத்தியாயத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி இடவேண்டும்.’

முஸைலமாவைத் தாக்க ஏதுவான பகுதியில் நின்று கொண்டிருந்தார் வஹ்ஷி. தமது ஈட்டியை உயர்த்தி வலமும் இடமும் ஆட்டி ஆட்டித் தமது கைகளில் அதைச் சரியான சமநிலைகக்குக் கொண்டுவந்தார். குறிபார்த்து எறிந்தார். விர்ரென்று பறந்து சென்றது அது குறிதவறவில்லை. இலக்கைச் சரியே அடைந்தது. திகைத்துப் போய்க் களத்தில் நின்றிருந்த முஸைலமாவினுள் ஈட்டி செருக, நிலைகுத்தி அப்படியே நின்றுவிட்டான். அதே நேரம் அபூதுஜானாவும் அவனை நோக்கிப் பாய்ந்தோடி வந்து தமது வாளால் அவனை வெட்ட, துண்டாகிச் சாய்ந்தான் முஸைலமா.

அந்தப் போரில் முஸைலமாவின் படையைச் சேர்ந்தவர்கள் ஏறக்குறைய பத்தாயிரம் பேர்வரை கொல்லப்பட்டிருந்தனர். வரலாற்று ஆசிரியர்கள் சிலர் அந்த எண்ணிக்கை இருபதாயிரம் என்கிறார்கள். அதனாலேயே அத்தோட்டத்திற்கு “மரணத் தோட்டம்” என்ற பெயர் ஏற்பட்டுப்போனது. முஸ்லிம் வீரர்கள் ஐந்நூறிலிருந்து அறுநூறுவரை உயிர்த் தியாகிகள் ஆகியிருந்தனர். அந்த உயிர்த் தியாகிகளுள் ஒருவர் அபூதுஜானா சிமாக் இப்னு ஃகரஷா.

ரலியல்லாஹு அன்ஹு!

oOo

இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்!

-நூருத்தீன்

சத்தியமார்க்கம்.காம்-ல் 07 பிப்ரவரி 2014 அன்று வெளியானது

உதவிய நூல்கள்

Related Articles

Leave a Comment