தோழர்கள் – 46 ஸல்மான் அல்-ஃபாரிஸி (ரலி) – பகுதி 2

46. ஸல்மான் அல்-ஃபாரிஸி (سلمان الفارسي‎) – 2

ம்மூரியாவைச் சேர்ந்த பாதிரியை கடைசித் தருணம் நெருங்கியதும் தமது வழக்கமான கேள்வியை அவரிடம் முன்வைத்தார் ஸல்மான். ஆனால் இம்முறை இந்தப் பாதிரியின் பதில் வழக்கம்போல் துவங்கி வித்தியாசமாய் முடிந்தது.

“மகனே! நீ இதுவரை சேர்ந்து பயின்ற எங்களைப் போன்ற பாதிரிகள் இக்காலத்தில் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அரபுகள் மத்தியில் அவர்களிலிருந்து ஒருவர் இறைத் தூதராக தோன்றப்போகும் காலம் நெருங்கிவிட்டது. நபி இப்ராஹீமின் மார்க்கத்தை மீளெழுச்சி பெறச் செய்வார் அவர். சில அடையாளங்களின் மூலம் அவரை நீ அறிந்து கொள்ளலாம்.”

உன்னிப்பாய் ஸல்மான் கேட்டுக் கொண்டிருந்தார். தோன்றப்போகும் இறுதி நபி குறித்து மூன்று அடையாளங்களை அறிவித்தார் பாதிரி.

“தாம் பிறந்து வளர்ந்த ஊரிலிருந்து புலம்பெயர்ந்து அவர் வாழப்போகும் ஊர், இரு மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள பேரீச்ச மரத் தோட்டங்கள் நிறைந்ததாக இருக்கும். தமக்கு அன்பளிப்பாக அளிக்கப்படுவதிலிருந்து மட்டுமே அந்த நபி உண்பார்; தானமாக ஏதேனும் அளிக்கப்பட்டால் அதை உண்ண மாட்டார். அவரது இரு தோள்பட்டைகளுக்கு இடையே இறுதி நபித்துவத்தின் அடையாளமாய் முத்திரை ஒன்று இருக்கும். முடிந்தால் அந்த இடத்துக்குச் சென்று அவருடன் இணைந்துகொள்.” உயிர்துறந்தார் பாதிரி.

எந்த ஊர், எந்த நாடு என்று சரியாகத் தெரியாமல் எங்குச் செல்வது; யாரைத் தேடுவது? அம்மூரியாவிலேயே தங்கியிருந்தார் ஸல்மான். ஒருநாள் –

கல்பு குலத்தைச் சேர்ந்த அரபு வணிகர்கள் அம்மூரியாவை அடைந்தனர். “நபி தோன்றப்போவது அரபு குலத்தில்” என்று பாதிரி சொன்னது நினைவுக்குவர, அந்த வணிகர்களை நோக்கி ஓடினார் ஸல்மான்.

“தயவுசெய்து என்னை அரேபியாவுக்கு அழைத்துச் செல்லுங்கள். என்னிடம் சிறிதளவு பணமும் சில கால்நடைகளும் உள்ளன. அதற்கான கூலியாய் அவை எல்லாவற்றையும் உங்களுக்கு அளித்துவிடுகிறேன்.”

அக்கால கட்டத்தில் சாத்தியப்பட்ட உயர் இறைக் கல்வியைப் பெற்றிருந்தும், ‘போதும் இது’ என்று உலக வாழ்க்கையில் முடங்கிவிடாமல் அதுவரை ஈட்டியிருந்த செல்வத்தை மீண்டும் முதலீடாக்கி இறைக் கல்வியைத் தொடர, ஈட்டிய செல்வமனைத்தையும் இழப்பதற்கு ஆயத்தமானார் ஸல்மான்.

ஸல்மான் சொன்னதைக் கேட்ட அரபு வணிகர்கள் அவரைப் பார்த்தார்கள். நாம் போகிற ஊருக்கு, கூடவே ஒட்டிக்கொண்டு வர பணம் தருகிறேன் என்கிறார். நாம் என்ன இவரைத் தலையிலா சுமக்கப் போகிறோம் என்று மகிழ்ந்து போனவர்கள், “தாராளமாய் வரலாம்” என்று அவரை சேர்த்துக் கொண்டனர்.

இறை ஞானத் தேடல் தொடர்ந்தது.

வாதி அல் குர்ரா எனும் ஊரை அடைந்தது பயணக் குழு. இது ஸிரியாவின் டமாஸ்கஸ் நகருக்கும் மதீனாவுக்கும் இடையில் அமைந்துள்ள ஊர். ஸல்மானை அதுவரை பொறுப்பாய் அழைத்துவந்த அந்தக் குழுவினர் தீவினை ஒன்று புரிந்தனர். அந்த ஊரில் இருந்த யூதன் ஒருவனுக்கு ஸல்மானை அடிமையாய் விற்றுவிட்டு அந்தக் காசையும் வாங்கி பையில் செருகிக் கொண்டு ஒட்டகம் ஏறி, போயே போய்விட்டார்கள். சடுதியில் விதி மாறிப்போனது. பாரசீகச் செல்வந்தருக்குப் பிறந்து, ஏகப்பட்ட வசதியில் வாழ்ந்து, கல்வியின் பொருட்டு ஊர் ஊராய்த் திரிந்த ஸல்மான், அவர் அறிந்திராத ஏதோ ஓர் ஊரில் அடிமையாய் ஆகிப்போனார்.

வாதி அல் குர்ராவில் நிறைய பேரீச்ச மரங்கள் இருந்தன. ‘நபி வந்து சேரப்போகும் ஊர் இதுதான் போலிருக்கிறது’ என்று தமக்கு ஏற்பட்ட சோகத்தை மீறி எதிர்பார்ப்பு உருவானது ஸல்மானுக்கு. அந்த அவலத்திலும் அறிவுத் தாகத்துடன் காத்திருந்தார்.

அக்காலத்தில் அடிமை என்றானபின் எசமானனின் கட்டளைக்கு அடிபணிந்து பணிபுரிவதைத் தவிர, வேறொன்றும் செய்ய முடியாது. ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்றுதான் காலத்தை ஓட்டியாக வேண்டும். இப்படியான ஒருநாளில் அந்த யூத எசமானின் உறவினன் ஒருவன் வந்து சேர்ந்தான். அவன் நமக்கு நன்கு பரிச்சயமான கோத்திரத்தைச் சேர்ந்தவன். பனூ குரைளா கோத்திரம். ஆம், அன்றைய யத்ரிப் நகரில் வசித்து வந்த பனூ குரைளாவேதான். ஊருக்குத் திரும்பும்போது பரிசுப்பொருள் வாங்கிச் செல்வதுபோல் தன் உறவினனிடம் ஸல்மானை விலை பேசி வாங்கிக்கொண்டு, “வா போகலாம்” என்று அழைத்துக்கொண்டு கிளம்பினான். புதிய எசமானனுடன் புறப்பட்டார் ஸல்மான்.

அலுத்துக் களைத்து யத்ரிபை அடையும் வேளையில் சட்டென கண்கள் விரிந்தன ஸல்மானுக்கு. இரண்டு மலைகள்; அதனிடையே பேரீச்சத் தோட்டங்கள் நிறைந்து நின்ற யத்ரிபைக் கண்டதும் அம்மூரியாவில் இறந்துபோன பாதிரி சொன்னது இதுதான் என்று திடமான நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. புது ஊரில் அடிமைப் பணி துவங்கியது.

அந்த காலகட்டத்தில்தான் அரேபிய தீபகற்பத்தின் மற்றொரு பகுதியில் உலக வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள் அரங்கேறிக்கொண்டிருந்தன. இஸ்லாமிய மீளெழுச்சி ஏற்பட்டு, முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிரச்சாரம் துவங்கி, புதிய தோழர்கள், நிறைய எதிர்ப்பு, ஏகப்பட்ட அட்டூழியம் என்று பரபரப்பாகியிருந்தது மக்கா. அரசல் புரசலாய் யத்ரிப்வரை இச்செய்திகள் வந்தடைந்திருந்தாலும் அவற்றைப் பற்றி எவ்வித விபரமும் தெரியாமல், தான் உண்டு தன் வேலை உண்டு என்று கிடந்தார் ஸல்மான். கடுமையான வேலைகளைச் சுமத்தி யூதன் அவரைப் போட்டு பிழிந்து கொண்டிருக்க, தம் எசமானன் வீட்டைத் தாண்டி வெளி உலகம் அறியாமல் கிடந்தார் அவர்.

அப்படியான ஒருநாளில்தான் –

தனது பண்ணையில் பேரீச்ச மரத்தின் அடியில் அமர்ந்திருந்தான் ஸல்மானின் யூத எசமானன். அவனை நோக்கி வேகவேகமாக வந்தான் அவனுடைய உறவினன். முகத்தில் பரபரப்பு, கோபம்.

“அல்லாஹ், பனூ ஃகைலா கோத்திரத்தினரை அழிப்பானாக. மக்காவிலிருந்து யாரோ ஒருவர் புலம்பெயர்ந்து வந்திருக்கிறாராம்; தம்மை இறைத்தூதர் என்று சொல்லிக் கொள்கிறாராம்; குபாவில் தங்கியிருக்கிறாராம். இவர்களும் புத்திகெட்டு அவரை வரவேற்க அங்கு குழுமியிருக்கிறார்கள்.”

அப்பொழுது அந்த மரத்தின் மேலே மராமத்து வேலை பார்த்துக்கொண்டிருந்தார் அமர்ந்திருந்த யூதனின் அடிமை ஸல்மான். வந்தவன் சொன்ன செய்தி அவர் காதிலும் தெளிவாய் விழுந்தது. அடுத்த நொடி அவரது உடம்பெல்லாம் சூடாகி நடுங்க ஆரம்பித்துவிட்டது. உவமையெல்லாம் இல்லை. மெய் நடுக்கம். நடுங்கிய நடுக்கத்தில் எங்கே ‘தொப்’பென்று தாம் தம் எசமானன் தலையிலேயே விழுந்துவிடுவோமா என்று பயந்துபோய், சமாளித்துக்கொண்டு அவசர அவசரமாக மரத்திலிருந்து இறங்கிவிட்டார் அவர். செய்தியின் தாக்கமும் ஆச்சரியமும் மகிழ்வும் கலந்துபோய் அதை மீண்டும் ஊர்ஜிதம் செய்துகொள்ள வந்தவனிடம், “இப்பொழுது நீங்கள் என்ன சொன்னீர்கள்?” என்று கேட்டார்.

‘பொளேர்’ என்று அடிமைக்கு அடி விழுந்தது. எசமானன்தான் அடித்தான். அவனைப் பொறுத்தவரை செய்தியே சோகச்செய்தி. இதில் அடிமையின் துடுக்குத்தனம் வேறா?

“என்ன ஆச்சு உனக்கு? திரும்பிப்போய் ஒழுங்கு மரியாதையாய் உன் வேலையைப் பார்,” என்று கத்தினான்.

தடவிக்கொண்டே, “ஒன்றுமில்லை. ஆவலாய் இருந்தது. அறிந்துகொள்ளவே கேட்டேன்,” என்று அங்கிருந்து அகன்றவர், ‘ஆஹா! எத்தனை ஆண்டு காத்திருப்பு இது. இதோ கண்ணுக்கு எட்டும் தொலைவில் நிசம்’ என்று மாலை நேரத்துக்காகக் காத்திருக்க ஆரம்பித்தார்.

oOo

மாலை வந்ததும், தாம் சேர்த்து வைத்திருந்த உலர்ந்த பேரீச்சம் பழங்கள் சிலவற்றை எடுத்துக் கொண்டார் ஸல்மான். நபியவர்கள் தங்கியிருந்த இடத்தை விசாரித்து அறிந்து வேகவேகமாய் வந்து சேர்ந்தார். பார்த்தார். கண்ணாரப் பார்த்தார்.

‘இவர்தானா அவர்?’ அம்மூரிய்யா பாதிரி சொன்னதைப்போல் தம் ஊரிலிருந்து புலம்பெயர்ந்து வந்திருக்கிறார். ”முதல் அடையாளம் சரியே.”

“தங்களைப் பற்றி நான் கேள்விப்பட்டேன். தாங்கள் இறைபக்தி நிறைந்தவர்கள் என்று சொன்னார்கள். ஊரைவிட்டு வெளியேற்றப்பட்டு ஏழைத் தோழர்களுடன் இங்கு வந்துள்ளதாக அறிந்தேன். என்னிடமுள்ள இந்தப் பழங்களை தங்களுக்கு தானமாக அளிக்க விரும்புகிறேன்; பிறரைவிட தாங்களும் தங்கள் தோழர்களும் இதன் தேவை நிறைந்தவர்களாய் இருக்கிறீர்கள்.”

தாம் எடுத்துவந்திருந்த பழங்களை நபியவர்களின்முன் வைத்தார் ஸல்மான். தம் அருகில் இருந்த தோழர்களிடம் “உண்ணுங்கள்” என்று கூறிய நபியவர்கள் அவற்றைத் தொடவில்லை.

தமக்குள் சொல்லிக் கொண்டார் ஸல்மான், ”இரண்டாம் அடையாளத்தின் ஒரு பகுதி சரியே.”

அடுத்து சில நாட்கள் தனக்கு உணவாய் அளிக்கப்பட்ட பேரீச்சம் பழங்களிலிருந்து சிறிது சிறிதாய் சேர்க்க ஆரம்பித்தார். ஒருநாள் மீண்டும் நபியவர்களைச் சென்று சந்தித்தார் ஸல்மான். இதனிடையே நபியவர்களும் குபாவிலிருந்து மதீனா வந்துவிட்டார்கள்.

“சென்ற முறை நான் தானமாய் அளித்ததைத் தாங்கள் உண்ணவில்லை என்பதைக் கவனித்தேன். இதோ இது தங்களுக்கு என்னுடைய அன்பளிப்பு. நான் தங்களை உபசரிக்க விரும்புகிறேன்,” என்று பேரீச்சம் பழங்களை அளித்தார் ஸல்மான். அதை ஏற்றுக்கொண்ட நபியவர்கள் தாமும் சிலவற்றைச் சாப்பிட்டு, தம் தோழர்களுக்கும் அளித்தார்கள்.

தமக்குள் சொல்லிக் கொண்டார் ஸல்மான், ”இரண்டாம் அடையாளத்தின் மறு பகுதியும் சரியே.”

சிலகாலம் கழிந்தது. ஒருநாள் தோழர் ஒருவர் இறந்துவிட, அவரை நல்லடக்கம் செய்வதற்கு ஜன்னத்துல் பகீ மையவாடியில் தோழர்களுடன் வந்திருந்தார்கள் நபியவர்கள். ஸல்மானும் வந்தார். நபியவர்கள் ஓரிடத்தில் அமர்ந்திருந்தார்கள். இடுப்பில் ஓர் ஆடை, மேலே ஓர் ஆடை. நபியவர்களைச் சுற்றிக் கொண்டு பின்னால் சென்றார் ஸல்மான். அம்மூரியா பாதிரி கூறிய மூன்றாம் அடையாளம் தென்படுகிறதா என்று பார்க்க ஆவல்.

தம்மை ஸல்மான் நோட்டமிடுவதைக் கண்ட நபியவர்களுக்கு அவர் தேடுவது என்ன என்று புரிந்துவிட்டது. தமது மேலங்கியை அவர்கள் இலேசாகத் தளர்த்த, முதுகில் இரு தோள்பட்டைகளுக்கு இடையே இறுதி நபித்துவத்தின் அடையாளமான மச்சத்தைக் கண்டார் ஸல்மான். இம்முறை தமக்குள் பேசிக்கொண்டிருக்கவில்லை. நபியவர்களை அண்மி, விம்ம ஆரம்பித்து, அப்படியே சரிந்தார். உடனே அவரைத் தூக்கினார்கள் நபியவர்கள்.

“என்ன ஆயிற்று உனக்கு?” என்று விசாரித்தார்கள்.

சொன்னார். ஆரம்பித்திலிருந்து துவங்கி, இறை கல்வியைத் தேடித்தேடி தான் அலைந்த தன் வாழ்க்கைப் பயணத்தை முழுவதுமாகச் சொன்னார். தம் தோழர்களை அழைத்து அவர்களிடமும் அதைச் சொல்லச் சொன்னார்கள் நபியவர்கள்.

இஸ்லாத்தினுள் நுழைந்தார் ஸல்மான் அல்-ஃபாரிஸீ.

“நீர் அடிமைத் தளையிலிருந்து விடுதலையடைய வேண்டும் ஸல்மான்” என்று தெரிவித்தார்கள் நபியவர்கள். அக்காலத்தில் அடிமையாய் இருப்பவர் விடுதலையடைவது என்றால், ஒன்று எசமானனாய்ப் பார்த்து விடுவிக்க வேண்டும்; அல்லது எசமானன் விதிக்கும் கிரயத்தை அளிக்க வேண்டும். ஓர் அடிமை, தனது விடுதலைக்கான கிரயம் அளிப்பது அரபு மொழியில் முகாதபா எனப்படும். நபியவர்கள் விடுதலை பற்றித் தெரிவித்ததும் உடனே தம் எசமானனிடம் தனது விடுதலைக்கான கிரயம் என்னவென்று விசாரித்தார் ஸல்மான். இலேசில் அவரை விடுவதாய் இல்லை யூதன். எனவே, ”முந்நூறு பேரீச்சம் மரம், நாற்பது ஊக்கிய்யா தங்கம் கொடுத்துவிட்டால் போதும், உனக்கு விடுதலை” என்றான் அவன். ஓர் அடிமைக்குச் சற்றும் சாத்தியப்படாத மிகப் பெரும் கிரயம். அத்தனை மரத்திற்கும் தங்கத்திற்கும் எங்குச் செல்வது? நபியவர்களிடம் வந்து செய்தியைச் சொன்னார்.

“உங்களின் சகோதரருக்கு உதவுங்கள்,” என்று தம் தோழர்களிடம் கூறினார்கள் நபியவர்கள். ஸல்மான ஓர் அடிமை; வெளிநாட்டுக்காரர். அவரை, ‘உங்களின் சகோதரர். அவருக்கு உதவுங்கள்’ என்று நபியவர்கள் கூறியதும் உடனே காரியத்தில் இறங்கினார்கள் தோழர்கள். ஒருவர் முப்பது பேரீச்சங் கன்றுகளை அன்பளிப்பாய் அளித்தார். மற்றொருவர் இருபது; இன்னொருவர் பதினைந்து என்று ஆளாளுக்கு தங்களால் இயன்ற உதவியைச் செய்ய – சிறிது சிறிதாக முந்நூறு கன்றுகள் சேர்ந்துவிட்டன.

சகோதரனுக்கு உதவியென்றால் வரிந்துகட்டித் தோள் கொடுத்திருக்கிறார்கள் தோழர்கள். நாடு, இனம், நிறம், மொழி, அந்தஸ்து, குலம், கோத்திரம், உயர்வு, தாழ்வு போன்ற வேற்றுமைகளில் மூழ்கிக் கிடந்தவர்கள், இஸ்லாம் எனும் வாழ்க்கை நெறியை ஏற்றதன்பின் பழைய பண்புகளுக்கு நேர்மாறாய் ஆகிப்போனார்கள். ஒற்றைக் கலிமா நெஞ்சில் ஊடுருவிப் புகுந்து நிகழ்த்திய நிஜ அதிசயம் அது.

“நிலத்தில் குழிதோண்டி கன்றுகளை நடுவதற்குத் தயார் செய்துவிட்டு என்னிடம் வந்து சொல். நானே என் கையால் இவற்றை நடுவேன்” என்றார்கள் நபியவர்கள். தோழர்களின் உதவியுடன் கிடுகிடுவென்று முந்நூறு குழிகள் தயாராயின. நபியவர்களிடம் சென்று சொல்ல, தாமே தம் கையால் அனைத்து மரக் கன்றுகளையும் நட்டார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.

இந்நிகழ்வுகளை பின்னர் ஒருகாலத்தில் விவரித்த ஸல்மான், ஆச்சரியமுடன் அறிவித்த செய்தி பதிவாகியுள்ளது: “அல்லாஹ்வின் மீது ஆணையாகக் கூறுகிறேன். அந்த முந்நூறு மரக்கன்றுகளில் ஒன்றுகூட பட்டுப் போகவில்லை. அனைத்தும் செழித்தோங்கி வளர்ந்தன.”

அவற்றை தமது விடுதலைக்கான முதல் பகுதியாக எசமானனிடம் அளித்தார் ஸல்மான். அடுத்து தங்கம்?

ஒருநாள் நபியவர்களிடம் முட்டை அளவிற்கான தங்கத்தை யாரோ அளித்தார்கள். உடனே நபியவர்கள் விசாரித்தது, “ஸல்மானின் விடுதலை என்னவானது?” பெற்ற பிள்ளைகளைப்போல் தம் தோழர்கள்மீது அன்பும் பாசமும் கரிசனமும் கொண்டிருந்தவர் அந்த மாமனிதர். வரவழைக்கப்பட்டார் ஸல்மான். தங்கத்தை அளித்தார்கள் நபியவர்கள்.

“நாற்பது உக்கியா அளவிற்கான தங்கத்தைக் கேட்டிருக்கிறான் எசமானன். இது சிறிய அளவாக இருக்கிறதே, எப்படி சரிவரும்?” என்று கவலைப்பட்டார் ஸல்மான். அதை நபியவர்களிடமே தெரிவித்தும் விட்டார்.

“எடுத்துச் செல் ஸல்மான். அல்லாஹ் இதை உனக்குப் போதுமானதாக ஆக்கிவைப்பான்” என்ற உறுதியான பதில் நபியவர்களிடமிருந்து வந்தது.

நேரே எசமானனிடம் வந்தார். ‘இந்தா நீ கேட்ட தங்கம்’ என்று அளித்தார். அளவிட்டுப் பார்த்தான் யூதன். சரியாக நாற்பது உக்கிய்யா அளவு இருந்தது அது. ”உனக்கு என்னிடமிருந்து விடுதலை; போகலாம் நீ” என்று அனுமதித்தான் அவன். விடுதலைக் காற்றை நீட்டி இழுத்து சுவாசித்தார் ஸல்மான் அல் ஃபாரிஸீ, ரலியல்லாஹு அன்ஹு.

எத்தனை ஆண்டு? எத்தனை பயணம்? எத்தகு அலைச்சல்? வேட்கையுடன் அவர் தேடித்தேடி அலைந்த பயணம் முடிவுக்கு வந்தது. இப்பொழுது யாதொரு தடையுமின்றி முழுவீச்சில் துவங்கியது அவரது இஸ்லாமியக் கல்வி – உலகின் தலைசிறந்த ஆசிரியரிடமிருந்து.

பிற்காலத்தில் ஒருமுறை அலீ ரலியல்லாஹு அன்ஹுவிடம், “நபித் தோழர்களைப் பற்றிச் சொல்லுங்களேன்” என்று ஆர்வமுடன் கேட்டார்கள் மக்கள் சிலர். சில தோழர்களைப் பற்றியும் அவர்களது முக்கியமான சிறப்புத் தகுதிகளைப் பற்றியும் சொல்லிக்கொண்டே வந்தார் அலீ.

“ஸல்மானைப் பற்றி தெரிவியுங்கள்” என்றார்கள்.

“அவரா? கடலளவு ஞானம் கொண்டவர். அவரது ஞானத்தின் ஆழம் அளவிட முடியாதது. அவர் அஹ்லுல்பைத் – எங்களைச் சேர்ந்தவர்” என்றார் அலீ. ‘கடலளவு ஞானம்’ சரி. பாரசீக நாட்டு முன்னாள் அடிமை ஸல்மான், நபியவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவரா?

எப்படி?

தொடரும், இன்ஷா அல்லாஹ்…

oOo

சத்தியமார்க்கம்.காம்-ல் 29 ஏப்ரல் 2012 அன்று வெளியான கட்டுரை

உதவிய நூல்கள்

Related Articles

Leave a Comment