15. கிறிஸ்தவர்களின் படுதோல்வி

எனினும், நான் சற்றும் சளைக்காமல் படையை நன்றாய் அணிவகுத்து அந்த அந்தக் குறிப்பிட்ட முக்கிய இடங்களில் (கேந்திர ஸ்தானங்களில்) வியூகங்களை

நிறுத்திவைத்தேன். ஷஜருத்துர்! அமீர் என்றால் இந்த மாதிரி குஷியாகச் சாய்ந்து கொண்டு ஹுக்காப் புகையை இழுத்துக்கொண்டு குதூகலமாயிருப்பவர் என்று எண்ணிக் கொள்ளாதே! யுத்த சமயங்களில் அமீர்களின்பாடு எப்படியிருக்குமென்பதை நீ சிறுமி அறியமாட்டாய். நான் சிற்சில சமயத்தில மாதக் கணக்காக இரவுபகல் அறவே தூங்காமல் கண்விழித்திருக்கிறேன். பலவேளைகள் உணவுட்கொள்ளாமலே பட்டினியாய்க் கிடந்திருக்கிறேன். பலமணி நேரம் சிறிதுமே அமராமல் நின்றுகொண்டும் நடந்துகொண்டும் இருந்திருக்கிறேன். சுவரை வைத்துக்கொண்டுதானே சித்திரம் எழுதமுடியும்? ஸல்தனத்தைக் காப்பாற்றினால்தானே நான் அமீரென்ற யோக்கியதையைப் பெறமுடியும்? எனவே, என் ஆயுள் காலத்தில் ஏற்பட்ட அப்பெரிய படையெழுச்சியின் தற்காப்புக்கான எல்லா ஏற்பாடுகளையும் கண்காணிக்க வேண்டிய முழுப்பொறுப்பையும் நானே என் தலைமீது போட்டுக்கொண்டேன்.

அரசரேகூடக் கண்டு ஆச்சரியமடையும் வண்ணம் படை வரிசைகளை நான் ஒழுங்குபடுத்தி வியூகம் வகுத்து வைத்திருந்தேன். அன்றியும், சுல்தான் ஸலாஹுத்தீன் எந்தெந்த தந்திரங்களைப் பிரயோகித்து முன் வெற்றி கண்டிருக்கிறாரென்று நான் கேள்விப்பட்டிருந்தேனோ, அந்தந்தத் தந்திரங்களை நானும் மிகவும் கெட்டிக்காரத்தனமாக என் படையினரிடையே நுழைக்க ஆரம்பித்தேன். இனி, எந்த நேரத்தில் எதிரிகள் வந்து பாய்ந்தாலும், அவர்களை அத்தனைபேரையும் அப்படியே நிர்மூலமாக்கும் வித்தையையும் என் படையினருக்கும் தளபதிகளுக்கும் உபதேசித்து வைத்தேன். முடிவு என்னவாகுமோ என்று அனைவரும் கலங்கித் தவித்தபோதினும், நான் என் யுத்த தந்திரக் கொள்கைகளின் உன்னதத்தை நன்குணர்ந்திருந்தபடியால், வெற்றி நமக்கு நிச்சயமென்பதைத் தினமும் ஓயாமல் மனனம் செய்து வந்தேன். அரசரையும் நான் தேற்றி வந்ததுடன், என் திட்டமிடப்பட்ட போர் முறைகளைப் பற்றி அவருக்கு விளக்கியும் காண்பித்தேன்.

என் முறைகளைக் கண்டு காமில் மட்டற்ற மகிழ்ச்சியும் குதூகலமும் கொண்டாரெனினும், அவர் என்னைப் பார்த்துத் திடீரென்று ஒரு கேள்வியைக் கேட்டார் : “எல்லாம் சரிதான்! ஆனால், இந்தச் சங்கடத்துக்கு என்ன செய்வீர்?”

“எந்தச் சங்கடத்துக்கு?”

“எதிரிகளோ, எண்ணிக்கையில் அதிகம். அவர்களோ, மத்தியதரைக் கடல்வழியாகக் கடல் மார்க்கத்தையும், ஸீனாய் வழியாகத் தரை மார்க்கத்தையும் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். எனவே, அவர்களுக்குத் தேவைப்படுகிற எல்லா உதவிகளையும் மேலும் மேலும் பெறுவதற்கு வேண்டிய சகல வசதியும் அவர்களுக்கிருக்கிறது. நாமோ, நமக்கு வேண்டியவற்றைப் பெறுவதற்கு அவர்களைத் தாண்டிப்போய்த்தான் கொண்டுவர நேரும். இங்குள்ள நம் படையினர் களைத்துப்போனால், நாம் என் செய்வது?”

அரசர் விடுத்த இந்த நியாயமான கேள்வி என்னை நிலைகுலையச் செய்துவிட்டது. உண்மைதான்! இந்தச் சங்கடத்துக்கு என்ன செய்வது? நான் பேசாமலே திருதிருவென்று விழித்தேன்.

“அமீர்! வீணே விழிப்பதில் பயனில்லை. இந்த யுத்தத்தின் வெற்றி வெறும் மனித முயற்சியால் மடடுமே கிடைத்துவிடுமென்று நான் நம்பமுடியவில்லை. நீர் எவ்வளவு இணையற்ற கெட்டிக்காரத்தனத்தைப் புகுத்தித் தக்க ஏற்பாடுகளைச் செய்தாலும், அந்த ஆண்டவன் ஏதாவதோர் அற்புதத்தை நிகழ்த்தினாலன்றி, நாம் காப்பாற்றப்படுவோம் என்பதை எதிர்பாராதீர். இப்போது உம்மாலான சகல ஏற்பாடுகளையும் செய்துவிட்டீர். இனி இரவுபகல் எந்நேரமும் எம்முடனே சேர்ந்து இறைவனைச் சதா இறைஞ்சிக்கொண்டே யிரும்! அவனை நம்பினோர் கைவிடப்படாரன்றோ!”

உண்மையும் அதுவேதான். மனித முயற்சியால் ஆக வேண்டியவை அனைத்தையும் செய்தாகிவிட்டது. இனி ஆண்டவனிடந்தானே எஞ்சியதை ஒப்படைக்க வேண்டும்? நாங்கள் அனைவருமே குப்புற ஸுஜூதில் வீழ்ந்து, அந்த அருளாளனின் கருணைப் பிரவாகத்தையே கையேந்தி வேண்டி நின்றோம். இவ்விதமாகச் சிலவாரங்கள் கழிந்தன. இதற்கிடையில் அந்த எதிரிப் படையினரும் மிக மும்முரமாகத் தங்களுக்குத தேவையான சகலவற்றையும் செய்துகொண்டிருந்தனர்.

தடுக்கமுடியா இறுதிவேளை கடைசியாக வந்தேவிட்டது. ஒருநாள் அதிகாலையில் சூரியோதயத்துக்கு முன்னரே அந்தக் கிறிஸ்தவர்கள் இந் நகர்மீது படையெடுத்து நகரைச் சூழ்ந்து கொண்டனர். எதிரிகளின் உளவாளிகள் நகருக்குள் புகுந்து விடாதவாறு அதிஜாக்கிரதையுடன் நாங்கள் கண்காணித்து வந்தோம். நம் படையினரும் முதல்நாள் போரிலேயே எதிரிகளுள் பன்னூற்றுக் கணக்கானவரைக் கொன்று குவித்துவிட்டனர் என்றாலும், எதிரிகள் பல்லாயிரக் கணக்கில் நம்மை மிகைத்து நிற்கையில், எப்படித்தான் இறுதி வெற்றியடைவது? எல்லாம் இறைவனது சோதனைதான்.

ஒருநாள் நள்ளிரவில் நம் குதிரை வீரனொருவன் காற்றினுங் கடிய வேகத்தில் தெற்கிலிருந்து மூச்சிரைக்க வந்து சேர்ந்தான். அவன் வந்த வேகத்தையும், மூச்சு திணறிய மாதிரியையும், படபடத்த விலவிலப்பையும் நாங்கள் கண்டு திடுக்கிட்டோம். அவன் முழுமூச்சுக்கூட வாங்காமல், இரைக்க இரைக்க, “யா சுல்தானல் முல்க்! தப்பினோம், தப்பினோம்!… ஆண்டவன் நம்மைக் காப்பாற்றிவிட்டான்!… அவன் காஹிராவைப் பாதுகாத்துவிட்டான்….” என்று பினாத்தினான். அவன் ஏறிவந்த குதிரையோ, அங்கேயே மூச்சுத் தடுமாறி, சுருண்டு வீழ்ந்தது.

எங்களுக்கொன்றும் விஷயம் விளங்கவில்லை. ஏனெனில், எதிரிப் படையினர் காஹிராவின் வடக்குப் பக்கத்தில் பாசறை இறங்கியிருக்கின்றனர். இந்தக் குதிரை வீரனோ, தெற்கிலிருந்து வருகிறான். வடக்கிலிருக்கும் எதிரிகளிடமிருந்து நம்மை ஆண்டவன் காப்பாற்றிவிட்டதாகத் தெற்கிலிருந்து வருகிற ஒருவன் மூச்சுத் தடுமாறி உளறினால், அது மாபெரும் வியப்பைத்தானே அளிக்கும்?

சுல்தான் அவனைப் பார்த்து, “நிதானமாய்ப் பேசு. கொஞ்சம் இப்படி நில். களைப்பைத் தீர்த்துக்கொண்டு, விஷயத்தை விளங்கச்சொல்,” என்று கட்டளையிட்டார்.

“நிதானமாய்ப் பேசவேண்டிய … அவசியமில்லை … நீலநதியில் கரைபுரண்ட வெள்ளம் … பெருக்கெடுத்து … கடல்போல் பொங்கிக்கொண்டு வருகிறது…”

இம்மாதிரி மூச்சுத் திக்கித்திக்கித் தடுமாற்றத்துடன் அத்தூதன் கூறிய வார்த்தைகள் எங்கள் காதில் தேன் பாய்ந்த்தைப் போன்ற ஆனந்தத்தையூட்டின. நீலநதி பெருக்கெடுத்த விஷயத்தை அவன் அவ்வளவு உணர்ச்சியுடனே அவசரமாகக் கூறியதன் கருத்து இன்னதென்பதை நாங்கள் ஒரு கணத்தில் உணர்ந்துகொண்டு விட்டோம். ஏனென்றால், தொன்றுதொட்டே இந்நகருக்கு வந்த அபாயங்களை நீலநதி வெள்ளமே காப்பாற்றி வந்திருக்கிறதென்பதை நாங்கள் நன்குணர்ந்திருந்தோம்.

சுல்தான அப்பால் அரை நிமிடங்கூட அங்கே தாமதிக்கவில்லை. உடனே எழுந்தார். என்னையும் பிரதான வஜீரையும், முக்கிய தளபதியையும் உடனழைத்துக்கொண்டு, இருட்டோடு இருட்டாக இந்த நீலநதிக் கரையை எட்டினார். ஆற்றோரமாக இருக்கிற கரையின் மதகுப் பாலங்களையெல்லாம் நாங்கள் நன்றாய்த் திறந்துவிட்டோம். கரைபுரண்டு வருகிற வெள்ளம் அப் பாலங்களை எட்டியவுடனே காஹிராவுள் தாராளமாய் நுழையக்கூடிய விதமாகச் செய்துவிட்டுத் திரும்பினோம்.

அரண்மனைக்கு வந்ததும், அந்தத் தூதனை அரசர் மீண்டும் அழைத்தார். “நீ பார்க்கிறபோது தெற்கே எவ்வளவு தூரத்தில் வெள்ளம் வந்துகொண்டிருந்தது?” என்று கேட்டார்.

“யா மலிக்கல்முல்க்! சுமார் 50 மைல் தூரமிருக்கலாம். ஆனால், அந்த வெள்ளம் வருகிற வேகத்தையும், பெருகுகிற மாதிரியையும் பார்த்தால், இன்னம் ஒருமணி நேரத்தில் அந்நீர்ப் பெருக்கம் இங்குவந்து சேர்ந்துவிடுமென்று நினைக்கிறேன்.”

சுல்தான் காமில் உடனே எல்லாப் படைத் தலைவர்களையும் அழைத்து, விடியு முன்னே முஸ்லிம் படையினர் அனைவரும் மேட்டுப்பாங்கான இடத்தில் ஏறிக்கொண்டுவிட வேண்டுமென்று கட்டளையிட்டுவிட்டார். அதே வினாடியில் சுல்தானின் கட்டளை நிறைவேற்றப்பட்டது. கிறிஸ்தவப் படையினரோ, தாழ்ந்த திறந்த வெளிகளில் நிர்மிக்கப்பட்டிருந்த பாசறைகளில் படுத்து நன்றாய்த் தூங்கிக்கொண்டு குறட்டைவிட்ட வண்ணம் இருந்தனர். இதுவரை அவர்கள் அடைந்த வெற்றிகளினாலும், இனி அடையப்போகிற பெருவெற்றியைப் பற்றிய வீண்மமதையாலும் அவர்கள் மெய்ம்மறந்து பிணமேபோல் தூங்கியதில் அதிசயமில்லையல்லவா!

கோழி கூவுகிற நேரத்தில் கடல்பொங்கியது போன்ற பேரொலி கிளம்பிற்று. கண்மூடிக் கண் திறக்கிற நேரத்துக்குள் இயற்கை தன்னுடைய வேலையைச் செய்து முடித்துவிட்டது! நூஹு நபி காலத்தில் மிகமிகப் பெரியவெள்ளம் வந்தது என்று நமது திருவேதமும் தவ்ராத்தும் விவரிக்கின்றனவே, அதைப் போன்ற கடுவெள்ளம் ஓவென்ற பேரிரைச்சலுடன் பாய்ந்து வந்தது! தூங்கிக்கொண்டிருந்தவர்கள் கண்விழிப்பதற்குள்ளேயே பத்தடி உயரத்துக்குத் தண்ணீர் பெருகி, நிமிஷத்துக்கு மூன்றடி வீதம் பொங்கி எழுந்து கொண்டேயிருந்தது.

எதிரிகளுக்கு ஒன்றுமே விளங்கவில்லை; அல்லது புரியவில்லை. விழுந்தடித்து இப்பக்கம் ஓடிவந்தார்கள். அதுதான் தருணமென்று காத்திருந்த நம்படைகள் சிலமணி நேரத்தில் அவ் வெதிரிகளைச் சின்னாபின்னப் படுத்தி ஒழித்துக்கட்டின. எனக்கிருந்த குதூகலத்தில் அங்குமிங்கும் ஓடியோடி, நம்முடைய சேனைகளை உற்சாகப்படுத்திக் கொண்டேயிருந்தேன். எங்குப் பார்த்தாலும் “அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்!” என்ற பெருமுழக்கம் வானத்தைப் பிளந்துகொண்டிருந்தது.

வெள்ளம் பெருகிய வேகத்தில் தங்களை அறியாமலே பித்துப் பிடித்தாற்போல விழுந்தடித்து உயிருக்கு அஞ்சி ஒடிவந்த பல்லாயிரக் கணக்கான கிறிஸ்தவர்கள் நொடிப் பொழுதில் நம்மிடம் கைதிகளாகச் சிக்கிக் கொண்டனர். என்ன நடந்ததென்பதைக்கூட அவர்களால் உணரவோ, சிந்திக்கவோ, அறவே இயலவில்லை. மூளை குழம்பிப் பிரமை கொண்டு தத்தளித்துக் திருதிருவென்று திகைத்து விழித்தார்கள்.

விஷம் ஏறுவதுபோல் விறுவிறுவென்று ஏறிக்கொண்டேயிருக்கிற நீர்மட்டத்தைப் பார்ப்பதும், ஆகாயத்தை அண்ணாந்து நோக்குவதுமாக அவர்கள் மாறிமாறி முறைத்தார்கள். “எங்களுக்கு என்ன கதி வந்தது!” என்று ஒன்றும் புரியாமல் பலர் தம்மையறியாமலே கத்தினர். “எப்படி இந்த வெள்ளம் திடீரென்று வந்தது!” என்று பலர் வெறி மேலீட்டால் கதறினர். சுருங்கச் சொல்லுமிடத்து, அவர்கள் நிலைமை எப்படியிருந்ததென்றால், இறுதித் தீர்ப்பு நாளன்று ஆண்டவன் திருச்சன்னிதானத்தில் அவர்கள் திடீரென்று கொண்டுபோய்ச் சேர்க்கப்பட்டால் எவ்வளவு நிலைதடுமாறிப் போவார்களோ, அதைப்போலிருந்தது அவர்களின் கலக்கம் மிகுந்த தோற்றம். எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!

விஷயம் அவ்வளவேதான் ….. ஆண்டவன் நாடியிருந்த வண்ணம் அந்தக் கிறிஸ்தவப் படையினர் வெள்ளத்தில் மூழ்கி அடித்துக்கொண்டு போகப்பட்டவர் போக, எஞசியிருந்தோர் படுதோல்வியடைந்து, எங்கள் கருணையைக் கோரிப் பரிதாபகரமாய் நின்று தவித்தார்கள். சகல புகழும் அந்த ஏகவல்லோனுக்கே!

(தொடரும்)

மறுபதிப்பு: சமரசம் – 01-15 ஏப்ரல் 2012

<<அத்தியாயம் 14>>     <<அத்தியாயம் 16>>

<<ஷஜருத்துர் முகப்பு>>

Related Articles

Leave a Comment