17. அமீர் தாவூதின் அந்திய காலம்

ஸாலிஹ் ஐயூபி பட்டத்துக்கு வந்த அன்று நிகழ்த்திய பெருவிழாக் கொண்டாட்டத்தில் கலந்து விருந்துண்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்பிய அமீர் தாவூத்,

ஷஜருத்துர்ருடனே தம் மாளிகை வந்து சேர்ந்ததும், அயர்ச்சி மேலீட்டால் சற்றுப் படுத்துக் கொண்டார். அவரது காலடியில் அவள் மகிழ்ச்சி தவழும் முகத்துடன் அமர்ந்தாள்.

இரண்டொரு நிமிஷங்கள் சென்றதும், அமீர் தம் பொக்கைவாயிலே புன்முறுவலை வரவழைத்துக் கொண்டார் : “ஷஜருத்துர்! நீ அரண்மனையில் என்ன பார்த்தாய்? அது எப்படியிருக்கிறது? ஸாலிஹ் பட்டமேறிய வைபவத்தைவிட, அவர் திருமண வைபவம் நிகழ்த்தியது உனக்கு அதிசயத்தை ஊட்டவில்லையா?” என்று கேள்விக்குமேல் கேள்வியை அடுக்கினார்.

தன்னை ஏமாற்றும் பொருட்டும், தன் சிந்தனையை வேறு பக்கம் திருப்பிவிடுதற்காகவுமே கிழவர் அம்மாதிரி திடீரென்று பேச்சை மாற்றினார் என்பதை நம் ஷஜருத்துர்ரா உணர்ந்து கொள்ள மாட்டாள்? அவளுக்குத்தான் தன் எஜமானரின் குணங்களும் நடத்தைகளும் மிக நன்றாய்த் தெரியுமே! எனவே, அவளும் அதிக சாதுர்யமாக நடந்துகொண்டாள்.

“தாதா! நான் அரண்மனையின் வருணனைகள் ஏட்டில் எழுதப்பட்டிருப்பதைத்தான் படித்திருக்கிறேனன்றி, என் ஆயுளில் எங்கே அதைப் பார்த்திருக்கிறேன்? இன்றுதானே நான் பாக்கியசாலியானேன்? அதுவும், நான் தங்கனை அடுத்திருப்பதனாலன்றோ அந்தப் பாக்கியத்தையும் பெற்றேன்? ஐயூபி வம்ச சுல்தான்களின் ஒப்புவமையற்ற பூலோக சுவர்க்கம் போன்ற இம் மாளிகையுள் நான் இன்று தங்கள் தயவால் நுழைந்த பெருமையை என் ஆயுள் உள்ளளவும் எப்படி மறக்க இயலும்? தாய் தந்தையற்று அநாதையாகி, வர்த்தகரொருவரால் வளர்க்கப்பட்டு, தங்களுக்கு அடிமையாய் விற்கப்பட்ட நான் இத்தகைய பெறற்கரிய பேறும் பெருமையுமான அரண்மனை விஜயத்தை அடையப்பெறுவேனென்று கனவுகூடக் கண்டதில்லையே! எனக்கு இப்போதுதான் ஓர் உண்மை விளங்குகிறது : இதுவரை நான் அரசர்களால்தாம் அரண்மனைகளுக்குப் பெருமை வருகிறதென்று நினைத்திருந்தேன்; ஆனால், இன்று என் எண்ணத்தை மாற்றிக்கொள்ள நேர்ந்தது. ஏனைய நாடுகளில் எப்டிபயிருந்தாலும், இந்த மிஸ்ர் சம்பந்தப்பட்ட வரையில், அரண்மனையின் பெருமையாலேதான் சுல்தான்கள் கீர்த்தியடைகின்றனர் என்று நினைக்கிறேன்.”

“கண்மணி! அதுதான் உண்மை. ஏனென்றால், இந்தக் காஹிரா நகரம் மிகமிகப் புராதன காலத்தில், ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்வரை, புஸ்தாத் என்றே அழைக்கப்பட்டு வந்தது. அக்காலப் பண்டை நாகரிகம் உச்சத்திலிருந்த காலத்திலேயே இவ்வரண்மனை பிர் அவ்ன் மன்னர்களால், பல்லாயிரம் அடிமைகளைக் கொண்டும், எண்ணற்ற நிதிக் குவியல்களைக் கொண்டும், கிடைத்தற்கரிய அபூர்வக் கற்களையும் உலோகங்களையும் கொண்டும் கட்டப்பட்டதென்று சரித்திரம் சான்று பகர்கின்றது.

“பாருலகின் எல்லாப் பகுதிகளுமே அநாகரிகக் காரிருளில் ஆழ்ந்து தாழ்ந்து போய் அதலபாதாலத்துள் அமுங்கிக்கிடந்த அந்தக் காலத்தில் இந்த எகிப்து பெற்றிருந்த நாகரிகம் ஆண்டவனின் கருணைப் பிரவாகமாகவே காட்சியளித்து வந்தது. ஏறத்தாழ நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே அப்பண்டை மக்களால் நிர்மாணிகக்கப்பட்ட கூர்நுணிக் கோபுரங்கள் நீலநதியின் அக்கரையில் இன்றுகூட நிறங்குன்றாது, ஒளிகுறையாது, சற்றும் தகராது, அப்படியே நின்றுகொண்டிருப்பதாலேதான் அவற்றை உலகின் முதலாவது பெரிய அதிசயமாகப் பூலோக மக்கள் பாராட்டிவருகிறார்கள்.

“அந்த மாதிரியான, எப்போதும் நீடித்து நிற்கக்கூடிய பேரதிசயமான அற்புதக் கட்டிடங்களைக் கட்டிய அப் புராதன மக்கள் நிர்மித்த இந்த அரண்மனையும் அத்தகைய பெருவனப்புடன் சுடர்விட்டொளிர்வதில் அதிசயமில்லையே! வாஸ்தவத்திலேயே இன்று நீ பார்த்த அரண்மனை அந்தப் புராதன நாகரிகத்தினர் நிர்மித்த கட்டிடமேதான். ஆனால், அதன் மேற்பூச்சுகளையும், சில அழகிய வேலைப்பாடுகளையும் முஸ்லிம்கள் இத் தேசத்தைக் கைப்பற்றிய காலத்தில் தற்கால நாகரிகத்துக்கு ஏற்றவிதமாகச் செய்து வைத்தனர்.

“காட்டுமிராண்டி மாக்களாகிய ஐரோப்பியர்கள், போகிற இடங்களிலிருக்கிற நாகரிகத்தை உருக்குலைத்துப் பெரிய அக்கிரமங்கள் புரிகின்றனர்.*ஆனால், முஸ்லிம்களாகிய நாமோ, ஏற்கெனவே இருக்கிற பெரிய அதிசயமான நாகரிக வேலைப்பாடுகளை இன்னும் அழகுபடுத்தி வைக்கிறோம். இதனாலேதான் முஸ்லிம்களைக் கண்டால் அனைத்து மக்களும் மனப்பூர்வமாக விரும்பி வரவேற்று, அன்பு காட்டுகின்றனர். உலக நாகரிகத்தை அதி உச்சத்துக்குக் கொண்டு சேர்க்கத்தானே ஆண்டவன் தன் இறுதி நபியை அனுப்பி, இஸ்லாம் மார்க்கத்தையும் புதுப்பித்து வைத்தான்?”

”அப்படியானால், அந்த அரண்மனை பிர்அவ்ன் மன்னர்கள் ஆட்சிசெலுத்திய காலத்திலே கட்டப்பட்டதென்றா தாங்கள் கூறுகிறீர்கள்?”

”ஆம். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஓடி மறைந்தும், அதன் வனப்புமட்டும் குன்றவில்லையல்லவா?”

“அரண்மனையின் அந்தப்புரத்தைப் பார்த்தால், சமீபத்தில் கட்டப்பட்டதாகத் தெரிகிறதே!”

“இல்லை. அதுவும் பழமையானதுதான். ஆனால், முஸ்லிம் வம்சம் வந்தபின்னர், அது சிறிது சீர் திருத்தப்பட்டது. பனீபாத்திமா கலீபாக்களின் காலத்திலேதான் இந்தப் புதிய சீர்திருத்தம் செய்யப்பட்டது. ஏன்? அங்கே பக்கத்தில் ஹம்மாம் (குளியலறை) இருப்பதை நீ பார்க்க வில்லையா? அதுதான் இந்த மிஸ்ர்தேசம் முழுதிலுமுள்ள எல்லா ஹம்மாம்களையும் விடப் புராதனமானதும் நேர்த்தியானதுமாகும். நான் இந்த ஆட்சியின் எவ்வளவோ பிரதானமான அமீராயிருந்தும், இன்றுவரை அந்த ஹம்மாமில் குளித்ததே கிடையாது. எனெனில், அரசரும் அரச குடும்பத்தினரும் தவிர வேறு அந்நியர் – அவர் அமீராயினும், வஜீராயினும், அந்த ஹம்மாமுக்குள் நுழைவதே தகாதென்னும் வழக்கம் நெடுங்காலமாகப் பழக்கத்தில் இருந்து வருகிறது.”

“நான் அந்த ஹம்மாமைப் பார்க்கவில்லை. எனினும், நான் தங்களிடம் வந்துசேர்வதற்கு முன்னரே அதைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். குளிப்பதற்காகப் பன்னீரைத் தவிர வேறு எந்தத் தண்ணீரும் அங்கு உபயோகப் படுத்தப்படுவதில்லையாமே?”

“பன்னீர் மட்டுமா? இன்னம் ஏதேதோ சொல்லுகிறார்கள். ஆண்டொன்றுக்கு மணங்குக் கணக்கில் சந்தனக் கட்டைகளும், அகில் கட்டைகளும், அம்பரும், கஸ்தூரியும், இன்னும் மற்ற நறுமணப் பண்டங்களும் அந்த ஹம்மாமுக்கென்று வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. அன்றியும், தினமும் இத் தேசத்தின் பூங்காக்களில் பூக்கும் அத்தனைவித மனோகரமான பூக்களின் திரவமும் உயர்தர அத்தராகச் செய்யப்பட்டு அந்த ஹம்மாமுக்கு வந்து சேர்கின்றன. இந்தக் காஹிராவிலேயே இருபது நந்தவனங்களில் புதிய ரோஜாக்கள் வண்டிக்கணக்கில் சேகரிக்கப்பட்டு. அப்பட்டமான பன்னீர் இறக்கவென்று அந்த அந்தப்புர அழகிய ஹம்மாமுக்குள் வந்துசேர்கின்றன.”

ஷஜருத்துர் நேத்திரங்களை மூடிக்கொண்டு சிந்தித்தாள். ஐயூபிகள் குளிக்கிற அறைக்காக மட்டும் இவ்வளவு பொருட் செலவு செய்து பிரமாதமான சாமான்களைச் சேகரிக்கும் போது, அந்த அரண்மனையின் மற்றச் செலவுகளுக்காக எவ்வளவு தொகை செலவழிக்கப்படுமென்பதைக் கணக்கிட்டாள், தன் மனத்தினுள்ளே.

இவ்வாறு அன்றைப் பொழுது கழிந்து, மறுநாள் பொழுது புலர்ந்தது. ஆனால், சூரியன் கிளம்பி நெடுநேரமாகியும், அமீர் தாவூத் எழுந்திருக்கவில்லை. கவலை தோய்ந்த வதனத்துடனே ஷஜருத்துர் அவருடைய அறைக்குள் சென்று பார்த்தாள். ஆனால், அவர் படுத்திருந்த மாதிரியைப் பார்த்ததும், அவள் திடுக்குற்றாள். மிகவும் கலவரமுற்றுப்போய், அவரை மெல்லத் தொட்டுப் பார்த்தாள். நெருப்புப்போலே காய்ச்சல் அடித்துக்கொண்டிருந்தது.

“தாதா! தங்கள் உடம்புக்கு என்ன? ஏன் காய்கிறது?”

“கண்மணி! ஒன்றுமில்லை. உடலதிர்ச்சியால் சிறிது மேலெல்லாம் வலிக்கிறது; வேறொன்றுமில்லை.”

ஷஜரின் மனம் அதைக் கேட்டுச் சாந்தியுறுதற்கு மாறாகப் பீதியடைந்தது. உடனே அரண்மனை ஹக்கீமைக் கையோடு கூப்பிட்டு வரும்படி காவலாளியை அவள் அனுப்பி வைத்தாள். ஹக்கீம் வருகிறவரை அவள் அமீருக்குப் பக்கத்திலேயே அமர்ந்து பணிவிடை புரிந்துகொண்டிருந்தாள்.

உத்தேசம் ஒருமணி நேரத்தில் அந்த அரண்மனை ஹக்கீம் வந்துசேர்ந்தார். அமீரின் நாடியைச் சோதித்தார். பரம்பரையாகவே அரண்மனையில் யூனானி முறையில் வைத்தியம் புரிந்து, மிகக்கொடிய வியாதியைக்கூட வெகுலகுவில் போக்கிவிடக் கூடிய உயர் ரகமான முரப்பாக்களையும் ஹல்வாக்களையும் சதா தம்முடனே வைத்துக்கொண்டிருக்கும் அந்த ஹக்கீம் மிகவும் கூர்மையுடன் அமீரின் உடல்நிலையை நன்கு ஆராய்ந்தார். பின்பு ஷஜருத்துர்ரை நோக்கி, கவலைப்பட வேண்டியதில்லையென்றும், சாதாரணக் குளிர் ஜுரம்தான் என்றும், ஒருவேளை மருந்தாலேயே குணம் ஏற்பட்டுவிடுமென்றும் கூறினார். பின்பு தமது மருந்துப் பெட்டியைத் திறந்து ஒரு கரண்டி இளகலான லேகியத்தையெடுத்து, அதை அமீரின் நாவில் தடவினார். அன்று முழுதும் அமீரை ஓய்வெடுத்துக்கொள்ள வேண்டுமென்று கூறிவிட்டு, வெறும் பனற்பாகக் கஞ்சியையே ஆகாரமாகக் கொடுக்கச் சொல்லிவிட்டு, நிதானமாக வெளியேறினார்.

அன்று மாலை அமீர் எழுந்து உட்கார்ந்து, திண்டில் சாய்ந்து கொண்டார். காலைமுதல் அவரைவிட்டு அப்புறம் இப்புறம் அகலாத ஷஜருத்துர் அவர் எழுந்து அமர்ந்ததும், சற்று வருத்தம் தெளிந்தாள்.

“மகளே! எனக்கு உடம்புக்கு ஒன்றுமில்லை. எனினும், …..”

“எனினும் – என்ன தாதா?”

“ஒன்றுமில்லை… ஆனால், என்றைக்கு நாம் இந்த அநித்திய உலகத்தில் பிறந்தோமோ, அன்றே நம் மரணத்தையும் உடன் பெற்றுக்கொண்டே வருகிறோமாகையால், என்றைக்காவது ஒருநாள் அது வந்துதானே தீரும்? ஆறிலுஞ் சாவு, நூறிலுஞ் சாவு; என்றைக்கிருந்தாலும் இந்த ஊத்தைச் சரீரம் ஒருநாள் சாவத்தானே வேண்டும்! நானும் எத்தனையோ நீண்ட ஆண்டுகளையெல்லாம் கழித்துவிட்டேன். எனக்குத் தெரிந்த ஒத்த வயதினருள் நான் ஒரே மனிதன் மட்டுமே இன்னம் உயிருடனிருக்கிறேன். எனினும், நானும் கூடிய சீக்கிரம் அந்தத் திரும்பாத வாயிலுள் நுழைந்துதானே தீர வேண்டும்!”

“தாதா! தாங்களேன் இந்த மாதிரியெல்லாம் பேசுகிறீர்கள்? சாதாரணக் காய்ச்சல்தானென்று ஹக்கீம் கூறிச் சென்றார். அவர் கொடுத்த ஒரேவேளை மருந்தாலேயே இவ்வளவு குணம் தெரிகிறது. இப்படியிருக்க, தாங்களேன் இந்த வேதாந்தமும் சித்தாந்தமும் பேசுகிறீர்கள்? தங்களுக்கென்ன நூறு வயதுக்கு மேலா ஆகிவிட்டது? மனிதன் சாதாரணமாக நூறு வயதுக்கு மேலேகூட உயிர்வாழ முடியுமென்று பலர் கூறக் கேட்டிருக்கிறேன்,” என்று ஷஜருத்துர் பேசும்போதே, அவள் கண்களிலிருந்து முத்துமுத்தாய்ச் சோகக்கண்ணீர் சொட்டத் தலைப்பட்டு விட்டது.

“ஷஜருத்துர்! நான் அதைரியமடைந்துபோய்ப் பிதற்றுகிறேனென்று நீ நினைக்காதே! நீ தைரியமாயிரு. நான் இவ்வுலகில் வாழவேண்டிய நாட்களுக்கு மேலாகவே வாழ்ந்து விட்டேனென்று என் மனம் பன்முறையும் சொல்லியிருக்கிறது. நம் ரசூலுல்லாவே அறுபத்து நான்கு ஆண்டுகூட வாழவில்லை. ஆனால், நானோ அதற்கும் மிஞ்சிவிட்டேன். ஐயூபி வம்சத்தில் எந்த சுல்தானும் என் வயதுக்கு வாழ்ந்ததில்லை. எனவே, இன்னும் நான் வாழ வேண்டுமென்று விரும்புவதில் என்ன பயன் விளையப்போகிறது? அரசைக் காப்பாற்றியே தீரவேண்டுமென்று நான் சமீபத்தில் செய்த பிரதிக்கினை நல்ல விதமாக நிறைவேறியது. ஸாலிஹ் இனிமேல் ஐயூபிகளின் கண்ணியத்தைக் காப்பாற்றிக் கொள்வார்.”

விம்மிவிம்மிக் கேட்டுக்கொண்டேயிருந்த ஷஜருத்துர்ருக்கு அமீரின் இறுதி வார்த்தைகள் அளவிறந்த சோகத்தை அளித்தன. அவள் தன் முகத்தைத் தலையணையில் புதைத்துக்கொண்டு தேம்பியழத் தொடங்கினாள்.

“ஏன் அழுகிறாய், ஷஜர்? நாம் என்றைக்குமே இந்தப் பொய்யான துன்யாவில் ஜீவித்திருக்க முடியுமா? ஆண்டவனை நாம் சோதிக்கலாமா? எனக்குப் புத்திரபாக்கியத்தைத் தாராத ஆண்டவன் என் இறுதிக்காலத்தில் உன்னை என்னிடம் வலுவில் சேர்ப்பித்தான். அலை கடல் துரும்புபோல் அலைக்கழித்துக் கொண்டிருந்த என் இருண்ட உள்ளத்துக்கு நீ கலங்கரை விளக்கமே போல் ஒளிச்சுடரை வீசினாய். நானும் உன்னை என் பெற்ற பெண்ணினும் பன்மடங்கு அன்புடனேதான் நடத்திவந்தேன். நீயும் என்னிடம் எல்லை கடந்த பாசத்துடனேயே ஒழுகிவந்திருக்கிறாய். ஆண்டவன் உனக்கு நீடித்த ஆயுளையும் நோயற்ற வாழ்வையும் மிக உயரிய பதவியையும் தந்து காத்தருள்வான். நீ இவ்வுலகில் எதற்கும் அஞ்சாதே! நான் சொல்வதைக் கவனமாய்க் கேள் …. ஷஜர், அழாதே! அவலக் கண்ணீர் வடிக்காதே! உன் மெல்லிய உடல் நைந்து போகும். அழாதே, மகளே, அழாதே!”

இவ்வாறு பேசிக்கொண்டே அவர் மிருதுவாகத் தம்முடைய கைகளை நீட்டி, அவளது வதனத்தைத் தூக்கி நிறுத்தினார். அவளுடைய கண்கள் சிவந்து, கண்ணீர் சிதறி, மூக்குநுனி இரத்தம் போலிருந்ததையும், முகமெலாம் சோகமே உருவாய் அவலக் காட்சியை அதிகம் பிரதிபலித்ததையும் பார்த்தார். அவள் சிரத்தைக் கோதி, தலைக்கை தந்து, நெற்றியில் வழிந்திருந்த கூந்தலை ஒதுக்கி, தாழ்வாய்க்கட்டையை மிருதுவாகப் பிடித்து அவளைச் சமாதானப் படுத்தினார்.

“ஷஜர்! கொஞ்சம் சிரி, பார்க்கலாம்! நாம் இவ்வுலகத்தில், அதிலும் சஞ்சலமே எங்கும் நிறைந்த இந்தப் பாருலகில் வெற்றியுடன் வாழ்க்கையை நடத்த வேண்டுமானால், சதா சிரித்தவண்ணமே காலங் கடத்த வேண்டும். பெரிய ஞானிகளெல்லாரும் இதே உண்மையைத்தான் உரைக்கின்றார்கள். பிறப்பதும் இறப்பதும் நம் கையிலில்லை. எனக்கு எப்படியாவது ஒரு குழந்தை பிறக்க வேண்டுமென்று நான் இறைவனை எவ்வளவோ இறைஞ்சியும் பயனேற்படவில்லை. அதேபோல், நான் இறக்கவே கூடாதென்று நீ எவ்வளவுதான் பாடுபட்டாலும், ஹக்கீமும் எவ்வளவுதான் உயர்ந்த மூலிகையையே பிழிந்து கொடுத்த போதினும், ஒன்றும் பயன் விளையப்போவதில்லை. நான் இனிமேல் தப்பிப்பிழைத்து எழுந்து நடமாடுவேனென்று நினையாதே. என் அந்திய காலம் நெருங்கிவிட்டது. நீ சந்தோஷமாகவும் இனிமையாகவும் என்னிடம் வார்த்தையாடிக்கொண்டிருக்கையிலேயே நான் உயிர் துறக்க வேண்டுமென்று பெரிதும் விரும்புகிறேன். ஷஜர்! எனது இக் கோரிக்கையை நீ தட்டாதே! நேற்று நான் இந்த ஊர் காஜீயைச் சந்தித்து, உன்னை உரிமை விடுத்து விட்டதாகக் கூறிவிட்டேன். எனவே, நீ என் அடிமையென்பதை இக் கணமே மறந்துவிடு. இந்தப் பெரிய மாளிகையையும், என் திரண்ட ஆஸ்திகளையும் நான் உனக்கே விட்டுச் செல்கிறேன். எனக்கு வேறெவ்வித நெருங்கிய உறவினரோ, அல்லது தூரபந்துவோ யாரும் இல்லை. எனவே, எனக்குப் பின்னர் நீயே இந்த ஆஸ்திகளையெல்லாம் அனுபவிக்கலாம். ஆனால், உனக்கு ஒரு தக்க வரனைத் தேடிக் கண்டுபிடித்து விவாகம் செய்து வைக்க முடியாதவனாய்ப் போனேனே என்பதை நினைத்துத்தான் பெரிதும் கவலைப்படுகிறேன். என்றாலும், அந்தப் பொறுப்பை நான் தட்டிக்கழிக்க விரும்பவில்லை. என் உயிர் நீங்கு முன்னர் நீ எவரை விரும்பினாலும், நானே அவரை உனக்கு மணமுடித்து வைக்கிறேன்.”

அமீர் தமது வயது முதிர்ச்சியாலும், வியாதியின் கொடுமையாலும் இம்மாதிரி ஏதேதோ முன்னுக்குப்பின் சம்பந்தமில்லாமல் பினாத்துகிறாரென்று அவள் நினைத்தாள். எனவே, அவரை அப்படியே பேச விட்டுக்கொண்டு போகக்கூடாதென்று நினைத்து. ஷஜருத்துர் சாமர்த்தியமாக அவரது கவனத்தை வேறு பக்கம் திருப்பிவிட்டாள். தன்னை ஆதரித்து வரும் ஒருவர் தமது மரணத்தைப் பற்றித் தத்துவார்த்த தர்க்கவாதம் புரிந்தால், எந்தப் பெண்தான் மனவொருமையுடன் மௌனமாகக் கேட்டுக்கொண்டேயிருப்பாள்? சம்சாரம் சாகரம் துக்கம்!

அன்றிரவெல்லாம் அமீருக்குக் கடுமையான உடல் வலியும் கடுங்காய்ச்சலும் வந்துவிட்டன. அரண்மனை ஹக்கீம் இரவு முழுதும் அமீரின் பக்கத்திலேயே தங்கியிருந்தார். ஷஜருத்துர்ருக்கு அளவுகடந்த மனவேதனை ஒருபுறமும், அன்றுமாலை கிழவர் கூறிய வார்த்தைகள் மறுபுறமுமாக வாட்டிக்கொண்டிருந்தன. ஹக்கீமின் பரிதாபகரமான வதனத்தில், அவருக்கே அமீரின் உடல் நிலையைப்பற்றி அதிருப்தி ஏற்பட்டதற்கான துக்கரேகை படர்ந்திருந்தது. அதைக் கண்டதும், ஷஜருத்துர்ருக்கு இன்னும் பெரிய ஏமாற்றம் ஏற்பட்டது.

இவ்விதமாக ஐந்து இரவும், ஆறு பகலும் ஓடி மறைந்தன. ஒவ்வொரு நாளும் அமீர் தமது மரணோபதேசத்தை அவளுக்குச் சிறுகச்சிறுக உபதேசித்து வந்தார். அவளுடைய நிலைமையோ, மிகவும் பரிதவிக்கத் தக்கதாயிருந்தது. பிறந்தது முதல் இறுதிவரை பலவிதமான ஊசலாட்டம் நிரம்பிய வாழ்க்கையைக் கழித்துவந்த அவள் இந்த அமீரின் பொறுப்பில் வந்த பின்னர்தான் சிறிது காலம் துன்பமில்லா வாழ்க்கையை அனுபவித்து வந்தாள். ஆனால், அவள் மீண்டும் அனாதையாகப் போவதை நினைந்து நினைந்து மனங் கலங்க ஆரம்பித்தாள். அந்தோ, பரிதாபம்!

கதையை வளர்த்துவானேன்? ராஜப் புரட்சிக் கலகம் நடந்த அன்று ஷஜரின் முதல் வளர்ப்புத் தந்தை மரணமடைந்து பத்துநாள் கழிந்ததும், இந்த வளர்ப்புத் தந்தையும், ஷஜரை விலைகொடுத்து அடிமையாக வாங்கியவருமாகிய அமீர் தாவூத் அவளுடைய மடிமீது சாய்ந்தபடியே, “ஆண்டவனே மிக நெருங்கிய மேலான நண்பன்!” என்று கூறிக்கொண்டே உயிர்நீத்தார்.

அமீரின் இறுதி நிமிஷத்தில் ஏறக்குறைய எல்லாக் காஹிரா நகர் அமீர்களுமே அங்கு அப்போதுவந்து குழுமி நின்றிருந்தபடியால், தாவூதின் இன்னுயிர் பிரிந்த நேரத்தில் அவர்கள் அத்தனைபேரும் பொருமிய பெருந்துக்கத்தாலான விம்மல் காண்பவருள்ளத்தைக் கலங்கச் செய்துவிட்டது. “இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்,” என்று நிதானமாக உச்சரித்வர் சிலர். ஆனால், ஷஜருத்துர்ரோ, மெய்சோர்ந்து மூர்ச்சித்து வீழ்ந்துவிட்டாள்.

(தொடரும்)


* ஸ்பெயின் தேசத்தில் முஸ்லிம்கள் நிர்மித்த ஜோதி மண்டபத்தை – (Observatory) இன்னது செய்வதென்று ஒன்றும்புரியாது, பிறகு வந்த இஸ்பானியர் அதனைக் கழுதையடைக்கும் கொட்டிலாக உபயோகிக்கலாயினர்.


மறுபதிப்பு: சமரசம் – 1-15 மே 2012

<<அத்தியாயம் 16>>     <<அத்தியாயம் 18>>

<<ஷஜருத்துர் முகப்பு>>

Related Articles

Leave a Comment