இனிமேல் மிஸ்ர் ஸல்தனத்தின் மணிமுடி சூடிய மன்னராகவே உயரப்போகிற இளவரசர் தங் குதிரையின்மீதிருந்த படியே எட்டி, ஜாஹிர் ருக்னுத்தீனின் கரங்களை அன்புடன் பற்றினார். அக் கரங்கள் பனிக்கட்டியேபோல் ‘ஜில்’ லென்று குளிர்ந்திருந்தன. தூரான்ஷா நேத்திரங்களை விரித்துக் கொண்டு,

அச் சேனைத்தலைவரின் வதனத்தை உற்று நோக்கினார். தீயில் விழுந்த வழுதுணங் காயைப்போல் திரைந்திருந்த அம் முகத்தைப் பார்த்த இளவரசர் சற்றுப் பதஷ்டமடைந்தார்.

“ஏ, சேனாதிபதி! அரண்மனையில் யாவரும் நலந்தானே?” என்று ஆவல்நிரம்பிய குரலில் அவசரமாக வினவினார்.

“யா இப்னு மலிக்! ஆண்டவன் உதவியால் யாவரும் நலமாகவே இருந்துவருகிறோம்,” என்று மிக நிதானமான தொனியிலே ருக்னுத்தீன் பதில் கூறினார்.

“உமது முகம் ஏன் இப்படி வாடிவதங்கிப் பொசுங்கிப் போயிருக்கிறது ? உம்மைப் பார்த்ததும் என்னால் அடையாளம் கண்டுகொள்ளக்கூட முடியவில்லையே! ரிதா பிரான்ஸும் அவனுடைய படைகளும் எங்கே? அவர்களை விரட்டியடித்து விட்டீர்களா?”

“வேறொன்றுமில்லை. சென்ற பதினைந்து நாட்களாக ஆண்டவன் என்னை மிகவும் கடுமையான சோதனைக்கு ஆளாக்கினான். எனினும், இறுதியில் அவன் நமக்கெல்லாம் இணையற்ற வெற்றியையும் அளித்தருளி இருக்கிறான். லூயீ உட்பட எல்லா நசாராக்களும் நேற்று மாலையிலேதான் சிறை பிடிக்கப்பட்டார்கள்.”

“என்ன! வெற்றி பெற்றுவிட்டீர்களா? இவ்வளவு பெரிய இணையற்ற பெரு மகிழ்ச்சிக்குரிய செய்தியை ஏன் உயிரற்ற குரலில் மிகவும் மந்தணமாக மொழிகின்றீர்!… வேறு ஏதாவது அசம்பவம் ஏற்பட்டு விட்டதோ?”

“யா இப்னு மலிக்! என் உடலிலுள்ள சர்வ சக்தியும் அடியுடனே அர்ப்பணம் புரியப்பட்டு ஆவியாகப் பரிணமித்து விட்டபடியால், எனதுயிர் இருந்தும் யான் பிரேதமாயே காட்சியளிக்கிறேன். யான் படுத்துக் கண்ணுறங்கி இன்றோடு பதினைந்து நாட்களாகின்றன. எனவேதான், மிகவும் சோர்வுற்றுக் காணப்படுகின்றேன். வேறு அசம்பவம் ஒன்றுமில்லை!”

“பதினைந்து நாட்களாக உறங்கவில்லையா! என்ன, அவ்வளவு பிரமாதமான, அல்லு பகல் ஓயாமல் நடந்த யுத்தமா?”

“ஆம்! அல்லுபகல் அனவரதமும் எங்கள் உள்ளத்தையெல்லாம் கசக்கிப் பிழிந்துவிட்டது. தங்களைக் கண்ட பின்னர்த்தான் எங்கள் மனம் முழுச் சாந்தியையும் பெற்றுக்கொள்ளும். நமக்கெல்லாம் இறக்கிய இத்துணைக்கடிய சோதனையில் பாதியைக்கூட இறைவன் நம்முடைய எந்த ஜென்ம விரோதிகளுக்கும் இறக்கி வைக்கக் கூடாது!” என்று ருக்னுத்தீன் பேசிய வார்த்தை ஒவ்வொன்றிலும் பொதிந்திருந்த உள்ளுரையைத் தூரான்ஷா ஒன்றுமே உணரவில்லை.

“காட்டுமிறாண்டிகள்! இன்னமும் புத்திவரவில்லை அக் கிறிஸ்தவர்களுக்கு! இறைவன் நமக்கு இவ்வளவு பெரிய சோதனையை விட்டபோதினும், இறுதி வெற்றியையாவது தந்தானல்லவா! சகல புகழும் அல்லாஹ்வுக்கே!”

இதுவரை ஓரிடத்தில் நின்ற வண்ணமே உரையாடிக் கொண்டிருந்த அவர்கள் நடையைத் தொடர்ந்தார்கள். ருக்னுத்தீனும் தங் குதிரையைத் திருப்பினார்.

“என் தந்தையின் குதிரைமீது நீர் ஏறிவந்திருக்கிறீரே! உம்முடைய குதிரை எங்கே?”

“நசாராவின் கொடுவதைக்கு அக்குதிரை பலியாகிவிட்டது. எனவேதான், சுல்தானின் குதிரையின்மீது ஏறி வந்தேன்.”

“இந்தக் குதிரை களைத்துப்போயிருக்கிற மாதிரியைப் பார்த்தால், இதன்மீது ஏறிச் சமர் புரிந்த என் தந்தை எவ்வளவு சோர்வடைந்திருப்பாரென்று தெரிகிறதே! – மிகவும் பலசாலியோ அந்த ரிதா பிரான்ஸ்?”

“ஆமாம்! ஏழைகளை இம்சித்து, அவர்களுடைய உதிரத்தையே உறிஞ்சி வாழும் இக்கால ஐரோப்பிய மன்னர்கள் நம்மைப் போலவா இருக்கிறார்கள்? கண்ட தீனியிலும், கணக்கற்ற சாராயப் பீப்பாக்களிலுமே ஊறிப்போயிருக்கும் ரிதா பிரான்ஸ் மிகவும் பலமுள்ளவனே!”

“அப்படியானால், அவ்வளவு பெரிய மன்னனை முறியடித்த புகழ் என் தந்தைக்கே யன்றோ? ஆஹா! அன்று என் பாட்டனாரின் பெரிய தந்தை ஸலாஹுத்தீன் மூன்றாம் சிலுவை யுத்தத்தில் நாட்டிய புகழை என் தந்தை மேன்மையடையச் செய்துவிட்டாரல்லவா? ஏ இறைவா! என்னே நின் கருணை!”

ருக்னுத்தீனுக்குக் கவலை அதிகரித்து விட்டது. இப்படியெல்லாம் தந் தந்தையின் பராக்கிரமங்களைப்பற்றி எண்ணியெண்ணி அகமகிழ்ந்து வருகிற இளவரசர் இன்னம் சற்று நேரத்தில் அந்த மூமிய்யாவாகிய பிரேதத்தைக் காணப்போகிறாரே! அப்போது இவர் திகிலடைந்து மாரடைத்து மாண்டுவிட்டால் என் செய்வது? என்று ஏக்கமுற்றார்.

தூரான்ஷா வானத்தின் பக்கல் உயர்த்தியிருந்த தந் தலையைத் தாழ்த்தி ருக்னுத்தீனைப் பார்த்தார்.

“ஜாஹிர்! ஏன் பெருமூச்சு விடுகின்றீர்? என் தந்தையின் வெற்றிக்காக நான் இறைவனுக்கு நன்றி செலுத்தும்போது, நீர் ஏன் கண்கலங்குகின்றீர்! – எனக்கொன்றும் புரியவில்லையே?”

“வேறொன்றுமில்லை; சுல்தானுக்கு…”

“…சுல்தானுக்கு!… சுல்தானுக்கு என்ன? போரில் காயமுற்று விட்டாரோ?”

“ஒன்றும் கவலைப்படாதீர்கள். அப்படியொன்றும் காயம் ஏற்பட்டுவிடவில்லை. சென்ற ஐந்தாறு நாட்களாக ஜுரத்தால் சிறிதே கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்…”

“என்ன, ஜுரமா? என்ன ஜுரம்! நம்முடைய பிரதான ஹக்கீம்தானே கவனித்து வருகிறார்? இப்போது எப்படி இருக்கிறது?”

“சாதாரண ஜுரந்தான். உடம்பு பலஹீனமுற்றிருந்த நிலையிலே ஜுரம் வந்தபடியால், கடுமையான மருந்தைப் பிரயோகிக்கக் கூடாதென்று ஹக்கீம் சிறிது சிறிதாகக் காய்ச்சலைக் குறைத்து வருகிறார்… ஒன்றும் கவலைப்பட வேண்டியதில்லை, இப்னுமலிக்! ஆண்டவன் முற்றும் குணமாக்கி விடுவான். நம்முடைய ஹக்கீம் லேசுபட்டவரா? அல்லாஹ் முந்தியும், இவர் பிந்தியுமாக இருந்து, எல்லாம் கூடிய சீக்கிரம் சரிப்பட்டு விடுமென்று நினைக்கிறேன்!” என்று அழுத்தந்திருத்தமான குரலில் உறுத்திக் கூறினார்.

மரணத்தை மறைப்பது அத்துணை எளிய காரியமா? எத்துணை அமரச் சொன்னாலும், சாவு சாவுதானே! இந்த விஷயத்தில் ஷஜருத்துர்ருக்கு இருந்த திறமை இவருக்கு இல்லை.

இளவரசருக்கு மட்டும் மனம் நிம்மதி அடையவில்லை. ஜாஹிர் ருக்னுத்தீன் எவ்வளவுதான் சாதுரியமாகப் பேசின போதினும், உண்மையை ஒளிக்க முடியுமா? மரணத்தை மறைப்பது அத்துணை எளிய காரியமா? எத்துணை அமரச் சொன்னாலும், சாவு சாவுதானே! இந்த விஷயத்தில் ஷஜருத்துர்ருக்கு இருந்த திறமை இவருக்கு இல்லை. எனவே, இவர் பேசுகிற பேச்சுக் கொத்தவிதமான முகத்தோற்றம் இல்லாமல் மாறுபட்ட மாதிரிலே காட்சியளித்தது. “அடுத்தது காட்டும் பளிங்குபோல்” மின்னிய அந்த முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த தூரான்ஷா இன்னம் அதிகமான மனவேதனையுற்றார்.

“அப்படியானால், நேற்று நடந்த இறுதிப் போரில் என் தந்தை பங்கெடுக்கவில்லை என்றா நீர் கூறுகிறீர்?”

“இல்லை! ஐந்தாறு தினங்களாகவே அவர் போர் முனைக்கு வரவில்லை. அவர் சுகவீனமாயிருப்பது எங்களுள் சிலரைத் தவிர்த்து வேறு யாருக்குமே தெரியாது. யுத்தகாலத்தில் சுல்தானுக்கு ஏற்படுகிற சுகவீனத்தைப் பகிரங்கப்படுத்தக் கூடாதல்லவா?”

“திடீரென்று வியாதி வரக் காரணம்?”

“ஹுஜூர்! மனிதருக்கு வருகிற வியாதிக்கெல்லாம் காரணம் இன்னதென்று தெரிவதாயிருந்தால், ஹக்கீம்கள் ஏன் இருக்க வேண்டும்? கண்டகண்ட மருந்துகளை ஏன் தின்ன வேண்டும்? வருகிற வியாதி சொல்லிக்கொண்டா வருகிறது? வருகிற விதி வழித்தங்காதென்பது ஒரு முதுமொழி அன்றோ?”

“போதும் உம்முடைய சித்தாந்தங்கள்! விளையாட்டுத்தனமான பேச்சுக்களைப் பேசுவதற்கு இதுவா சமயம்? ஜுரம் வந்த காரணம் என்னவென்று ஹக்கீம் சொல்லுகிறார்? என்ன ஜுரமாம்?” என்று கடுஞ்சினத்துடன் கடாவினார் இளவரசர்.

அப்போதுதான் ருக்னுத்தீனுக்கு ஒரு விஷயம் நன்கு புலனாயிற்று: எல்லா நாடுகளிலும் தொன்றுதொட்டு ஒரு நல்ல பழக்கம் இருந்து வருகிறது; அஃதாவது, அரசன் அரண்மனையை விட்டு வெளியே வேட்டைக்கோ அல்லது சண்டைக்கோ சென்றிருக்கிற வேளையிலே அரச குடும்பத்தில் ஏதேனும் இழவு விழுந்துவிட்டால், அப்போது அரண்மனை விதூஷகனையே அரசனுக்குச் செய்தி சொல்ல அனுப்பி வைப்பது வழக்கம். என்னெனின், வேறு எவர் சென்றாலும் அவ்வளவு நேர்த்தியாகச் சாவை அமரச் சொல்ல முடியாது என்பதுடன், விதூஷகனைப்போல் அவ்வளவு சமயோசிதமாகவும் சொல்லத் தெரியாது என்பதுமாகும். இவன் அரசனிடம் சென்றால், அவனைச் சிரிப்பு மூட்டியே காரியத்தையும் சாதித்துக்கொண்டு, அவன் கோபத்துக்கும் உள்ளாகாமல் தப்பி வந்துவிடுவான். ஆனால், யுத்தகளத்தில் வீரத்தைக் காட்டுவதில் மட்டுமே பக்குவப்பட்டிருந்த சேனாதிபதி இம்மாதிரியான சந்தர்ப்பத்தில் அவ்வளவு லலிதமாக நடந்துகொள்ள இயலுமா? இளவரசரின் கோபத்தைப் பெறக்கூடிய இத்தகைய இசகுபிசகான இடைஞ்சலில் ஏன் மாட்டிக்கொண்டோமென்று ருக்னுத்தீன் கலக்கமுற்றார். இனிமேல் முன்வைத்த காலை எப்படிப் பின்வைப்பது?

“என்மீது கோபிக்காதீர்கள். எல்லாம் அந்தப் பாழாய்ப் போன சிலுவை யுத்தக்காரர்களால் வந்த வினைதான். நான் தமீதாவுக்குச் சென்றிருந்த சமயத்தில், எப்படியும் எதிரிகளின் கையே வலுத்துவிடக் கூடுமென்று உணர்ந்த சுல்தான் அரை நிமிஷமும் அயராமல் இரவும்பகலும் எந்நேரமும் யுத்தத்துக்கான முஸ்தீபுகளிலேயே கண்ணுங் கருத்துமாய் இருந்தாராம். சுல்தானாவே எவ்வளவோ சொல்லியும், சுல்தான் செவியேற்கவில்லையாம். பல மாதங்களாக ஷாம் போரிலே ஈடுபட்டிருந்தமையாலும், சிசு கலீலை இழந்த பெருந்துக்கத்தாலும், தமீதா போய்விட்டதே என்னும் மாபெருங் கவலையாலும், ஓய்வு ஒழிவு என்பதே கொஞ்ச நஞ்சமுமின்றிக் கருமமே கண்ணாயிருந்தமையாலும், உடலதிர்ச்சியால் நெகிழ்ச்சியடைந்து ஜுரம் வந்து விட்டது. சாதாரணமான பலஹீனக் காய்ச்சல்தானென்று ஹக்கீம் திரும்பத் திரும்பக் கூறுகிறார். யுத்தகளத்தில் நானும் நமது படைப்பலமும் எதிரிகளுடன் மல்லாடிக் கொண்டிருந்த போதெல்லாம் சுல்தான் பூரண ஓய்வையே பெற்றிருந்தார். இப்போதும் அவரைக் கிழக்குவாயில் கூடாரத்திலே வைத்துத்தான் ஹக்கீம் சிகிச்சை செய்து வருகிறார். சுல்தானாதான் அரை வினாடியும் அப்பக்கம் இப்பக்கம் அசையாமல், பக்கத்திலிருந்த படியே தங் கணவருக்கு ஒத்தாசை புரிந்துகொண்டிருக்கிறார்,” என்று மெய் பேசுபவரேபோல் கயிறு திரித்தார். இதைத் தூரான்ஷா நம்பவேண்டியதாயிற்று.

“ஆண்டவன் இவ்வளவுடனே காப்பாற்றினானே! என் தாயார் சுகந்தானே?”

“ஆண்டவன் உதவியால் சுல்தானா முற்றும் சுகமாகவே இருக்கிறார். ஆனால், ஒரு பெண் யுவதியாயிருந்தும், அவருக்கு ஆண்டவன் எவ்வளவு பெரிய மகாசக்தியைக் கொடுத்திருக்கிறான், தெரியுமா? அவர் மட்டும் இங்கே இல்லாமற் போயிருந்தால், இந்த ஜிஹாதிலே நாம் வெற்றிபெற்றிருக்க முடியுமென்றா நினைக்கின்றீர்கள்? இதுவரை அல்லாஹுத் தஆலா இத்துணைப் பெரிய மன வன்மை பொருந்திய ஒரு நாரிமணியை எப்போதுமே உருவாக்கவில்லை என்றே நாங்கள் நம்புகிறோம்.”

“அவரென்ன அப்படிப்பட்ட பெருஞ் சாதனையைச் சாதித்துவிட்டார்?”

“அதை நான் சொல்ல அருகதை பெற்றில்லை. பின்னே வரப்போகிற சரித்திராசிரியர்கள் அவரைப் பெண்களின் நாயகமென்றே கருதுவார்கள். அவரது வாழ்க்கை விசித்திரங்களைப் படிக்கிறவர்கள் பிளந்தவாயை மூட முடியாமல் கல்லாய்ச் சமைந்து விடுவார்கள். தாங்கள் அரண்மனைக்கு வந்து, எல்லா விவரங்களையும் நேரிலே அறிந்துகொண்டால்,….”

“எனக்குத்தான் முன்னமே தெரியுமே! அமீர் தாவூதிடம் வளர்ந்தவரென்றால், வேறு நற்சாட்சியும் வேண்டுமோ? அந்த அமீரைப் போன்ற சகல கலா வல்லுந சிகாமணியைப் போல் இன்னொருவரை நாம் எங்கே காணப்போகிறோம்? என் தந்தையும் என் சிற்றன்னையும் அந்த அமீரின் குண விசேஷங்களை எத்தனைமுறை கூறியிருக்கிறார்கள், தெரியுமா? என் தந்தை எவர்மீதோ இருந்த ஆத்திரத்தால் எல்லா அமீர்களையும் ஒருங்கு தொலைத்தாரென்றாலும், அவருக்கு இன்றுங் கூட அக்காலஞ்சென்ற அமீரின்மீது எல்லையற்ற அன்பும் அபிமானமுமே இருந்து வருகின்றன என்பதை நான் நன்கறிவேன். ஆனால், பஹ்ரீ மம்லூக்குகளின் பிரதிநிதியாகிய உமக்கு இந்த விஷயத்தில் அபிப்பிராய பேதம் இருக்கலாம் என்பதை உமது முகக் குறியிலிருந்து நான் உணர்கிறேன். எனினும், உண்மை என்னவோ அதுதான் : என் சிற்றன்னையைச் சிறப்பு மிக்க மகா ராஜதந்திரியாக்கி விட்டது அந்த அமீரேயன்றி, வேறெவருமில்லை!”

வாஸ்தவத்திலேயே புர்ஜீகளின் வம்சத்தைச் சார்ந்த தாவூதை இளவரசர் இவ்வளவு புகழ்ந்து பேசியதில், பஹ்ரீயான ருக்னுத்தீனுக்குச் சிறிது மனக் கசப்புத்தான் ஏற்பட்டது. என்னெனின், சுல்தான் ஸாலிஹ் நஜ்முத்தீன் ஷாமில் இருக்கையிலேயே இளவரசர் தூரான்ஷா இங்கே காஹிராவில் புர்ஜீ மம்லூக்குகளிடமே அதிக வாஞ்சையுடன் நடந்துகொள்வது வழக்கம். இப்போது இருக்கிற அரசியல் நெருக்கடியான வேளையில்கூட இளவரசர் பழைய பொல்லாத அபிப்பிராயத்துடனே திரும்பி வந்திருக்கிறாரே என்று ருக்னுத்தீன் கவலைப்பட்டார். ஆனால், பாவம்! தூரான்ஷா இதையெல்லாம் எங்ஙனம் அறிவார்? இருபதுவயதே சென்ற இளவல்தானே?

“யா இப்னு மலிக்! எல்லாம் தாங்கள் அறியாததா? நான் பஹ்ரீ இனத்தைச் சேர்ந்திருக்கிற ஒரே காரணத்துக்காக புர்ஜீகளை வெறுக்கவில்லை. ஆனால், தாங்களே காஹிராவுக்குள் வந்து பார்த்தால், அவர்கள் இப்போது எப்படி அரசாங்க விரோதிகளாகக் காட்சியளிக்கிறார்கள் என்பதைக் கண்டுகொள்வீர்கள். இருப்பினும் அந்தக் காலஞ்சென்ற அமீருல் முஅல்லம் தாவூத் பின் மூஸா மிகச்சிறந்த நிபுணரென்பதை யான் மறுக்கவில்லை; அல்லது தங்கள் சிற்றன்னையாகிய சுல்தானா ஸாஹிபாவும் அவ்வமீரைப் பற்றிக் குறைத்துக் கூறவில்லை. ஆனால், அவர் ஒருவராலேயே முழு புர்ஜீ இனத்தவர்களும் மிக்க நல்லவர்கள் என்று எங்ஙனம் சாதிக்க இயலும்?”

“எனக்கென்னவோ என் தந்தையின் இந்தப் பாரபக்ஷம் பிடிக்கவில்லை. யாராவது ஒரு புர்ஜீ மம்லூக் கெட்டவனாயிருந்தால், அதற்காக அந்த இனம் முழுதையுமே நாம் வெறுக்கலாமா? நல்லவர்களும் கெட்டவர்களும் எல்லா இனத்திலுமே இருக்கிறார்கள். சுல்தானின் நம்பிக்கைக்குப் பாத்திரமான பஹ்ரீ இனத்தைச் சார்ந்த நீர் ஒருதலைப்பக்ஷமாய்ப் பேசுவதில் வியப்பென்ன இருக்கிறது? அது கிடக்கட்டும். நான் திமஷ்கில் இருந்த காலத்தில் வேறென்ன விசேஷங்கள் இங்கே நிகழ்ந்தன?”

“யுத்த விசேஷத்தை விட இன்னம் பெரிய விசேஷம் என்ன இருக்க முடியும்? சுல்தான் வியாதியுற்றதை விட வேறென்ன புதிய பெரிய செய்தி இருக்கிறது? ஆண்டவன் அவரைச் சீக்கிரமே குணமடையச் செய்து நம்மெல்லாரின் துக்கத்தையும் களைய வேண்டுமே என்னும் நேர்ச்சையோடே இருக்கிறோம்.”

காஹிராவின் எல்லையை அவர்கள் எட்டி விட்டார்கள். கோட்டையும் அதன் கிழக்கு வாயிலும் தூரத்தில் கண்ணுக்குப் புலனாயின. அதே சமயத்தில் கோட்டைச் சுவர்மீது நின்று கொண்டு ஷாமின் திசையை நோக்கிப் பார்த்துக்கொண்டே இருந்த காவலாளிகள் தொடுவானத்தில் புழுதிப்படலம் கிளம்புவதையும், இளவரசரின் பரிவாரங்கள் வேகமாய் வருவதால்தான் அத் தோற்றம் காட்சி அளிக்கிறதென்பதையும் கண்டார்கள். ஷஜருத்துர்ருக்கும் இச் செய்தி எட்டிற்று.

முறைப்படி பார்த்தால், இந்நேரம் அரசவை கூட்டப்பட்டிருக்கவேண்டும். ஜிஹாதில் கிடைத்த மாபெரும் வெற்றியைக் கொண்டாடும் விழாக்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். அதையெல்லாம் விடுத்து, சுல்தானோ சுல்தானாவோ இன்னம் கிழக்கு வாயிலிலேயே ஏன் முடங்கிக் கிடக்கிறார்களென்னும் காரணம் தெரியாமல் பிரதம மந்திரியும், ஏனை மந்திரிகளும் பொது மக்களும் திருதிருவென்று விழித்தார்கள். அரசியார் இளவரசரின் வருகைக்காக ஏன் காத்திருக்க வேண்டுமென்பதும் அவர்கட்குப் புலனாகவில்லை. இது விஷயமாக, சுல்தான் என்ன அபிப்பிராயப்படுகிறார் என்பதை நேரில் கேட்கலாமென்று அவர்கள் கூடாரத்தண்டை விரைந்தேகினால், அங்குள்ள பட்டாளங்கள் அனுமதியளிக்க அறவே மறுத்ததுடன், “எல்லாம் சுல்தானாவின் கட்டளை!” என்னும் ஒரே பாடத்தையே திரும்பத் திரும்பப் படித்தார்கள். அந்த மந்திரிகளுக்கோ, ஆத்திரம் அதிகரித்தது. யுத்தம் முடிந்து விட்டது; இன்றோ குதூகலமான பெருந்தினம்; அரசவை கூட்டப்பட்டு மன்னரின் திருவோலக்கத்திலே கிறிஸ்தவ லூயீ கைதியாகக் கொண்டுவந்து நிறுத்தப்பட்டு நீதிவழங்க வேண்டிய அதி முக்கிய தினம். இப்படிப்பட்ட சந்தர்ப்பத்திலே, எல்லாக் காஹிரா வாசிகளும்-ஏன், முழு முஸ்லிம் உலகுமே ஆவலுடன் காத்துக் கிடக்கிற வேளையிலே, சுல்தானா மூடுமந்திரம் புரிவது அனைவருக்கும் வியப்பைத் தந்தது. இதுவரை யுத்தத்திலேயே மக்கள் கவனம் செலுத்திக் கொண்டிருந்தபடியால், சுல்தானைப் பற்றியோ அல்லது சுல்தானாவைப் பற்றியோ சிந்திக்கவில்லை. இப்போது எல்லாருமே ஆவலுடன் அவர்களை எதிர்நோக்கியிருந்தார்கள்.

கூடாரத்துக்கு வெளியிலே மந்திரி பிரதானிகளின் கூக்குரலும், அவர்களைத் தடுத்து நிறுத்துவதால் மம்லூக்குகள் கிளப்பிய சச்சரவும் ஷஜருத்துர்ருக்கு இடுக்கத்தைத் தந்தன. இன்னம் சற்றுநேரம் வரையிலாவது நிலைமையைச் சமாளித்தாக வேண்டுமே என்னும் ஏக்கம் அதிகம் வாட்டிற்று. இத்தனை நாட்களாக இந்தப் பிரேதத்தை வைத்துக் காப்பாற்றிய அவருக்கு இன்னம் சில நிமிஷங்கள் காப்பாற்றியாக வேண்டுமே என்னும் பெரும்பாரம் நெஞ்சை நெரித்தது. தூரான்ஷா அரண்மனைக்குள் காலடி எடுத்து வைக்கிற நேரம் வரையில் எப்படி அழுத்தி வைப்பது என்று ஒன்றுந் தோன்றவில்லை. இந்த மிகவும் நெருக்கடியான சிக்கல்வேளையிலே அந்த இரகசியம் வெளிப்பட்டுவிட்டால், எப்படிப்பட்ட குழப்பம் வருமென்பதை எவரால் முற்கூட்டி உரைக்க முடியும்? விளைகிர குழப்பத்தின் காரணமாகத் தூரான்ஷா வைரிகளால் கொலை புரியப்பட்டுவிட்டால், இந்த ஸல்தனத்துக்கு வேறு ஐயூபி வாரிஸ் யாரிருக்கிறார்? ஷஜருத்துர்ரின் மூளை இவற்றை நினைந்து நினைந்து பெரிதும் குழம்பிவிட்டது. எப்பாடு பட்டாவது தூரான்ஷாவைப் பத்திரமாக அரண்மனைக்குள்ளே கொண்டு வந்து பந்தோபஸ்து செய்துவிட்டு, அதற்கப்பாலேதான் விஷயத்தை வெளியிட வேண்டும் என்று ஷஜருத்துர் முடிவு கட்டிக்கொண்டார்.

தொடரும்…

-N. B. அப்துல் ஜப்பார்

<<அத்தியாயம் 44>> <<அத்தியாயம் 46>>

<<ஷஜருத்துர் முகப்பு>>

Related Articles

Leave a Comment