காலஞ்சென்ற சுல்தான் நல்லடக்கம் செய்யப்பட்ட அன்றிரவே ரமலான் பிறை பிறந்துவிட்டது. சாதாரணமாகவே அந்தப் புனிதமிக்க நோன்பு மாதத்திலே அரசவை கூட்டப்படுவது வழக்கமில்லை; அதிலும், இப்போது நேரிட்டுவிட்ட விபரீத சம்பவத்தால் அதைக் கூட்ட வேண்டிய அவசியமே எழவில்லை. மிஸ்ரின் எல்லா மூலை முடுக்கிலுமே மாபெருந் துக்கம்

கொண்டாடப்பட்டது. ஷஜருத்துர்ரோ, ‘இத்தா’ என்னும் தனித்திருக்கும் காலம் முடிவுறும்வரை வெளிவரக் கூடாதென்று மூலையிலே முடக்கப்பட்டார். இளவரசரோ, மீளமுடியாத மாபெருங் கவலையுள்ளே முற்ற முற்ற மூழ்கிக் கிடந்தார். அரண்மனையிலிருந்து சாதாரணக் குடிசை வரை எல்லா இடத்திலுமே துக்கம் தொனித்துக்கொண்டிருந்தது. அற்ப ஆயுளிலேயே ஸாலிஹ் காலஞ்சென்று விட்டதற்குப் பலர் பல காரணங்களைக் கூறித் தேறுதல் அடைந்தார்கள். அநேகர் அவரைப் பாராட்டினர்; இன்னம் பலர் அவருடைய கடின சித்தத்தையும் கண்டிப்பான தன்மையையும் வெறுத்துப்பேசினர். என்ன இருந்தாலும் சொந்த அண்ணனைக் கொன்ற பாபத்தாலேயே அவர் அதிக நாட்கள் ஆட்சி செலுத்த முடியவில்லை என்று தத்துவார்த்தம் போதித்தனர் ஒரு சிலர். எவர் எதைக் கூறிய போதினும், இஸ்லாத்தின் ஜோதியாகிய நஜ்முத்தீன் அஸ்தமித்து அஸ்தமித்ததே!

ஒருவாறாக அந்த நோன்பு முப்பதும் கழிந்து, அடுத்துவந்த ஈதுல்பித்ர் பெருநாளும் யாதொரு விசேஷமுமின்றிக் கழிந்து முடிந்தது.

தூரான்ஷா தம் படுக்கையில் ஒரு நாள் மல்லாந்து படுத்துக்கொண்டு, தாம் காஹிராவை விட்டுப் புறப்பட்டு, திமஷ்குக்குச் சென்றது முதல் மீண்டும் திரும்பி வந்தது வரையில் நிகழ்ந்த எல்லா நிகழ்ச்சிகளையும் வரிசைக் கிரமமாகச் சிந்தித்துக்கொண்டு கிடந்தார். அப்படி அவர் சாவகாசமாக எல்லாவற்றையும் ஒன்றன்பின் ஒன்றாக எண்ணிக்கொண்டே வருகையில் சில முன்னுக்குப்பின் முரணான விஷயங்கள் மனத்துக்குத் தட்டுப்பட்டன : தம்மை அவசரமாக அழைத்து வரும்படி ஷஜருத்துர் ஏன் ஆளனுப்பினார்? அப்படி வந்த ஆள் தம்மிடம் நடந்துகொண்ட முறைகள் யதார்த்தமாக இல்லையே! அன்றியும், தாம் திரும்பி வருகிற போது முற்கூட்டியே ருக்னுத்தீன் – அதிலும் ஒரு பஹ்ரீ – ஏன் எதிர்கொண்டு அழைக்க வரவேண்டும்? அந்த ருக்னுத்தீன் பேசிய பேச்சுக்களும், பெற்றிருந்த முகத்தோற்றமும் பயங்கரமாகவும் வேற்றுமைப் பட்டனவாகவும் ஏன் இருந்தன? எல்லாம் போகட்டும் என்றாலும், கோட்டைக்குள் நுழைந்த பின்னர் ஷஜருத்துர் தம்மைத் தந்தையாரிடம் நேரே அழைத்துப் போகாமல், ஹம்மாமுக்கு அழைத்துச் சென்றதன் மர்மம் என்ன? இவற்றையெல்லாம் சேர்த்துப் பார்த்தால், தாம்வந்த அன்றைத் தினந்தான் சுல்தான் காலஞ் சென்றிருக்க முடியும் என்பதை நம்ப முடியவில்லையே? என்னதான் ஹக்கீம் திடீரென்று மரணம் சம்பவித்ததென்று சாதித்தாலும், அவ்வளவு நெருக்கடியான சந்தர்ப்பத்தில் ஷஜருத்துர் தம் கணவரின் பக்கத்தில் நில்லாமல், அரண்மனை அந்தப்புரத்தில் கலவரமற்ற தோற்றத்துடன் காணப்பட்டாரே?…

இவ்விதமாகவெல்லாம் ஒரு புறமாய்ச் சிந்தித்த பின்னர், மறு புறமாகவும் சிந்திக்கலாயினார்:- தமக்கு அவசரமாக ஆளனுப்பியதிலிருந்தே சுல்தான் வியாதியுள் வீழ்ந்திருந்தாரென்றால், ஜிஹாதை யார் நடத்தியிருப்பார்? சகல காஹிராவாசிகளுக்கும் சுல்தான் வியாதியுற்றிருப்பது தெரிந்திருந்தால், அவர்கள் அதைரிய முற்றுப்போயிருப்பார்களே? அல்லது ஷஜருத்துர் எப்படித்தான் அந்த எதிர்பாராத அதிர்ச்சியைச் சகித்துக் கொண்டிருந்தார்? அல்லது சில நாட்களுக்கு முன்னரே சுல்தான் உயிர்நீத்திருந்தால், அத்தனை நாட்களும் அந்த உடலை எப்படிக் காப்பாற்றியிருக்க முடியும்?… அவருடைய மூளையில் ஒன்றும் புலப்படவேயில்லை. எல்லாம் ஒரே குழப்பமாயே தோற்றிற்று.

மூலையிலே மறைவாய்க் குந்தியிருந்த ஷஜருத்துர் எத்தனை நாட்களுக்கு அந்தப் பெரிய மகாமர்மத்தை முடியே வைத்திருக்க முடியும்? நெஞ்சை அழுத்திக்கொண்டிருந்த அப்பெருஞ் சுமையை அவர் எவருடனேனும் பகிர்ந்துகொண்டு தானே இருக்க வேண்டும்? எனவே, தூரான்ஷா அன்னையை யண்மித் தம்முடைய சந்தேகங்களைக் கூறியபோது, ஷஜருத்துர் ஒன்றையும் ஒளிக்காமல் முழு விருத்தாந்தத்தையும் விவரமாக எடுத்துக் கூறிக் கோவென்று கதறினார். காதால் கேட்கும் போதே உள்ளத்துணர்ச்சியை உந்தி விடத்தக்க அவ்விசித்திர நிகழ்ச்சிகளைக் கேட்டுக்கொண்டே வந்த இளவரசர் சிறு குழந்தையே போலத் தேம்பித் தேம்பித் அழுதார்.

“எனவே என்னருங் குமாரரே! உமக்காகவென்றே, நான் இத்தனை விதமான சொல்லொணாத் துன்பங்களையும் துயரங்களையும் அனுபவித்தும், இந்த இரகசியத்தை மறைத்து வைத்தேன். அப்போதிருந்த சூழ்நிலையில் நான் வேறு எந்த விதமாக நடந்துகொண்டிருப்பேனாயினும், உள் நாட்டுக் குழப்பத்தையோ, அல்லது கிறிஸ்தவர்கள் இந் நாட்டைப் பறித்துக் கொள்வதையோ ஒரு சிறிதும் தடுத்து நிறுத்தியிருக்க எவராலும் முடிந்திராது. இந்தப் பெருமைக்குரிய காரியத்தில் நீர் எனக்கும் இறைவனுக்கும் கடமைப் பட்டிருப்பதைப் போலவே, ஜாஹிர் ருக்னுத்தீனுக்கும் பஹ்ரீகளுக்கும் என்றென்றும் கடமைப்பட்டிருக்கின்றீர். என்னெனின், நான் இரகசியத்தை அமுக்கி வைத்து இவ் வரசாங்கத்தைக் காப்பாற்றினேன். ஆனால், ருக்னுத்தீனோ, இதில் முற்றமுற்ற என்னுடனே ஒத்துழைத்ததுடன் நில்லாது, உமக்காக ராஜவிசுவாசப் பிரமாணமும் செய்துகொடுத்து, போர்க்களத்தில் முன்னின்று வீரப் போர் புரிந்து லூயீயையும் அவனுடைய இனத்தவர்களையும் உயிருடனே சிறை பிடித்து முழு முஸ்லிம் உலகின் கண்ணியத்தையும் கெளரவத்தையும் காப்பாற்றினார். உம்மைப் பெற்ற அன்னையர் எவ்வளவு பாடுபட்டு உம்மை வளர்த்திருக்க முடியுமோ, அதைவிட லக்ஷம் மடங்கு அரும்பாடுபட்டே இந் நாட்டையும், உமது மானத்தையும் மரியாதையையும் அவர் காப்பாற்றியிருக்கின்றார். எத்தனை இரவு பகல்கள் சேர்ந்தாற் போலே அவர் கண்விழித்திருக்கிறார், தெரியுமா? உமக்காகவும், உம்முடைய இந்த ஸல்தனத்துக்குக்காகவும் அவர் என்னென்னவற்றை முழுக்க முழுக்கத் தியாகம் பண்ணியிருக்கிறார், தெரியுமா? இறைவன் நமக்கு இறக்கிய இக் கடுஞ் சோதனையில் இந்த ருக்னுத்தீனை மட்டும் நமக்கு அளித்தருளியில்லாவிட்டால், இன்று நாம் இந்த ஸ்திதியில் இருப்போமென்றா நீர் எண்ணுகின்றீர்! அத்தகைய ருக்னுத்தீனுக்கும் அவர் இனத்தவராகிய எல்லா பஹ்ரீகளுக்கும் நீரும், நானும், நம் ஸல்தனத்திலுள்ள சகல மக்களும், முஸ்லிம் உலக அத்தனை ஆண்களும் பெண்களும் நமதாயுள் உள்ள வரையில் முற்றமுற்றக் கடமைப்பட்டே நிற்கின்றோம். நாளை நீர் சுல்தானாக மிளிரப் போவது இந்த ருக்னுத்தீனிட்ட பிச்சைதான் என்பதை நீர் என்றைக்குமே மறந்துவிடாதீர்; மறந்துவிடாதீர்!” என்ற நெடிய உபதேசத்துடன் கதையை முடித்தார் அவ் இளம் விதவை ஷஜருத்துர்.

தூரான்ஷா வானத்தின் பக்கல் வதனம் உயர்த்தினார். ருக்னுத்தீனும் ஷஜருத்துர்ரும் இல்லாமற் போயிருந்தால், இப்போது என்ன கதி நேர்ந்திருக்கும் என்பதை நினைக்கவும் அவர் மனம் துணுக்குற்றது; மேனி நடுங்கிற்று; மயிர்ப் பொடிப்பு ஏற்பட்டது. அவர் மனத்துக்குள்ளே ஏதேதோ முணுமுணுத்துக் கொண்டார்.

“அப்படியானால், பதினைந்து நாட்களா அப் பிரேதத்தைக் காப்பாற்றினீர்கள்?”

“ஆம்! பதினைந்து நீண்ட நாட்கள்; பதினைந்து நீண்ட நாட்கள்! ஒவ்வொரு வினாடியும் ஒரு நெடிய ஆண்டுபோல் கழிந்த பதினைந்து இரவுகளும், பதினைந்து பகல்களும் கண் விழித்துக் காப்பாற்றினேன்! எல்லாம் யாருக்காக? எனக்காக வல்ல; இந்த ஸல்தனத்துக்கு உரியவராய உமக்காகவே காத்திருந்தேன். பிரேதமான மூமிய்யாவைக் காப்பாற்றியதைவிட, அவர் உயிர் நீப்பதற்கு முன்னே வியாதியுள் வீழ்ந்தாரே, அந்த இரகசியத்தையும் காப்பாற்றினேன். என்னருங் குமாரரே! எனக்கேற்பட்ட இத்துணைக் கடுமையான பெருஞ் சோதனையில் ஆயிரத்தில் ஒரு பங்கைக்கூட என் கொடிய எதிரிக்கும் இறைவன் இறக்கக்கூடாதென்றுதான் யான் சதா பிரார்த்திக்கின்றேன். இப்படியெல்லாம் பல வேதனைகளை – நரக வேதனையைவிட மா கொடிய மன வேதனைகளை – யான் அனுபவித்தும், இன்னம் எப்படி உயிருடனே இருக்கிறேனென்று நீர் அதிசயிக்கலாம். எனக்கும் அது பேராச்சரியமாகவும், விளங்கிக் கொள்ள முடியாத இரகசியமாகவுமே காணப்பட்டு வருகிறது.”

“எத்துணைப் பெரிய கடுந்துன்பம்! எங்ஙனம் சகித்தீர்கள் இம் மாபெருஞ்சுமையை? வீரர் ஸலாஹுத்தீனின் குமாரியாய் அவதரித்த என் தாயாரேகூட இப்படிப்பட்ட சோதனையைச் சமாளித்திருக்க மாட்டாரே!” என்று ஆச்சரியத்தால் தூரான்ஷா அரற்றினார்.

எவரெவரால் எவ்வெவ்வளவு சுமக்கக் கூடுமோ, அவ்வவ்வளவு சுமையையே ஒவ்வொருவர் மீதும் சுமத்துவதாக இறைவன் இயம்புகிறானல்லவா? 

“ஆம்! எவரெவரால் எவ்வெவ்வளவு சுமக்கக் கூடுமோ, அவ்வவ்வளவு சுமையையே ஒவ்வொருவர் மீதும் சுமத்துவதாக இறைவன் இயம்புகிறானல்லவா? அந்தப்படி பார்த்தால், எனது அளவுக்கு ஏற்ற சுமையாகவே இந்தச் சோதனையை இறைவன் சித்தப்படுத்தி வைத்திருந்தானென்றே யான் சமாதானப்படுத்திக் கொள்கிறேன். இதனாலேயே இத்தகைய பெரிய சோதனையை வேறெவர்க்கும் அவன் அளிக்க வேண்டாமென்று நான் அவனிடமே மன்றாடுகின்றேன்.”

மெளனம் நிலவியது… தூரான்ஷாவின் உடல் அடிக்கடி குலுங்கியிதிலிருந்து, அவர் ஏதேதோ சிந்தித்து மேனி நடுங்கினாரென்பது தெரிந்தது. சுல்தான் மரணமடைந்ததை எண்ணியெண்ணிச் சஞ்சலமடைந்து கொண்டிருந்த அவர் இப்போது அந்தப் பயங்கர வைபவங்களை உன்னி யுன்னி வெய்துயிர்த்தார். புலி துரத்திக்கொண்டு வரும்போது ஒரு மனிதன் எவ்வளவு பயப்பட்டாலும், அதைத் தைரியமாக எதிர்த்துத் தாக்கிக் கொன்றுவிட்டு உயிர் தப்பிய பிறகு அந்தக் காட்சியை நினைத்துக் கொள்ளும்போதுதான் அவன் மிக அதிகமாக உடல் குலுங்குவது வழக்கம். இஃது இயற்கை. என்னெனின், அப்போது தான் அவன் சாவகாசமாக எல்லாவற்றையும் சீர்தூக்கிச் சிந்தித்து, தான் புலிவாயில் அகப்பட்டிருந்தால் என்ன கதியாகியிருக்குமென்று நோட்டமிட்டு நெஞ்சம் துணுக்குறுவான். அஃதே போலிருந்தது தூரான்ஷாவின் மனநிலை. புலியினும் பொல்லாத இருகாற் புலிகளாகிய நசாராக்களின் வாயில் விழாமல் தப்பிப் பிழைத்ததை நினைத்து நினைத்து எவரே மனங் குமுறாதிருக்க இயலும்?

மைந்தருக்கும் மாற்றாந் தாயாருக்கும் இடையே நிகழ்ந்த பேச்சு ஒருவாறு முடிவடைந்த பின்னரே சுல்தான் ஸாலிஹின் மரணங் குறித்த உண்மை விளக்கம் இளவரசருக்கு உதயம் ஆயிற்று. எனவே, அவர் அக்கணமே எழுந்து சென்று, மூமிய்யாவின் பக்கத்திலேயே, பந்தோபஸ்துக்காகக் ‘காவலில்’ வைக்கப்பட்டிருந்த ஹக்கீமுக்கும் இரு அலிகளுக்கும் வெகுமதிகளை வழங்கினார். பின்பு அரண்மனை இலேககர்களை அழைப்பித்து, சுல்தான் ஸாலிஹ் ஷாமலிருந்து திரும்பி வந்ததுமுதல், அவர் பிரேதவடக்கம் நடந்தவரையிலுள்ள நீண்ட சரித்திரத்தை விவரமாக எழுதி, ஜாஹிர் ருக்னுத்தீனும் ஷஜருத்துர்ரும் ஸல்தனத்துக்குப் பல வழிகளாலும் வரவிருந்த பேராபத்தை எங்ஙனம் தடுத்தார்களென்பதையும் அதில் விளக்கிக் காட்டி, மிஸ்ர் தேச முழுமைக்குமே பரத்தி விட்டுவிட்டார்.

பிராசீன காலத்திலிருந்து அதுவரை வாழ்ந்த எத்தனையோ வீராங்கனைகளின் விசேஷ சக்திகளை எல்லாம் நன்றாயறிந்திருந்த மிஸ்ர் வாசிகள் இந்த வின்னியாசம் நிறைந்த, ஒப்புவமையற்ற, மாபெருஞ் சாமர்த்தியமிக்க அரும் பெருஞ் செயல்களைக் கேள்வியுற்று, ஷஜருத்துர் என்னும் காரிகை அதிசயப் பிறவியோ என்றுகூட வாய்கூறிப் போனார்கள். ஐயூபிகளுக்குரிய அரசாங்கத்தை, ஐயூபி ஒருவரும் மிஸ்ரிலில்லாத காலத்தில் மிகவுங் கண்ணுங் கருத்துமாகக் காப்பாற்றித் தந்த ஷஜருத்துர்ரைப் பற்றி யாவரும் வியந்தனர். கணவரையே இழந்த பின்னர், தனதல்லாத ஸல்தனத் என்ன கதியானால்தான் என்னவென்று எவளுமே மனமுடைந்து, செய்வது இன்னதெனப் புலனாகாமல் தாறுமாறாய் நடந்து கொள்ளக் கூடிய மிகச் சிக்கலான அவ்வேளையிலே தன்னலமொன்றுங் கருதாது, மக்களின் க்ஷேமமொன்றையே கருத்தில் கொண்டு, வேறெவராலும் ஒளிக்க முடியாத இரகசியமொன்றை வெகு சாதுரியமாக ஒளித்துவைத்து, சுல்தான் உயிருடனிருப்பதாகவே சகல மக்களையும் முற்றும் நம்பச் செய்து, ஜிஹாதிலே மாபெரும் வெற்றியைப் பெற்றுத்தந்த தியாக வனிதை ஷஜருத்துர்ரை எவரே வானளாவப் புகழாதிருக்க முடியும்? இன்றுங்கூட முஸ்லிம்களின் கையிலே மிஸ்ர் தங்கியிருப்பதற்கு அன்று ஷஜருத்துர் நட்டுவைத்த அஸ்திபாரமன்றோ காரணம்? அந்த 8-ஆவது சிலுவை யுத்தத்தை அவ்வாறு ஷஜருத்துர் எதிர்த்து நின்று தீரத்துடன் வீர வெற்றி பெற்றிராமற் போயிருப்பின், முஸ்லிம் உலகமே அதுகாலை யாதாய்ப் போய் முடிவடைந்திருக்குமென்று இன்றும் நினைத்தால், எவர் நெஞ்சமும் துணுக்கிறாதிருக்காது என்பது திண்ணமேயாம்.

சுல்தான் ஸாலிஹ் காலஞ் சென்றதால் எழுந்த துக்கத்தை மக்களெல்லாரும் ஒருவாறு முடித்துக் கொண்ட பின்னர், உண்மை விளக்கத்தால் எல்லா விஷயத்தையும் நன்கறிந்து கொண்டு, இளவரசர் பட்டமேறப் போகிற நன்னாளையும், சிறையில் அடைக்கப்பட்டுக் கிடக்கிற லூயீயும் அவருடைய சகாக்களும் பெறப் போகிற தண்டனைகளையும் அதிக ஆவலுடனே எதிர்பார்த்து நின்றார்கள். யுத்தத்தில் பெற்ற வெற்றி விழாக்கூடக் கொண்டாட முடியாதபடி துக்க நிகழ்ச்சிகள் நடந்து விட்டபடியால், ‘புது சுல்தான் எப்போது பட்டத்துக்கு வருவார்? எப்படி விழாக் கொண்டாடலாம்?’ என்றெல்லாம் பொதுமக்கள் ஆவலுற்றார்கள்.

காஹிராவிலும் அதைச் சூழ்ந்துள்ள இடங்களிலும் உள்ள மக்கள் திரள் திரளாக மன்ஸூரா என்னும் அந்த ஸ்தலத்துக்கு யாத்திரை சென்று வந்தார்கள். சத்தியம் வெற்றி பெற்றதும், அழிக்கப் பட்டதுமாகிய அவ்விடத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. வெளியூர்களிலிருந்து வந்த மக்கள் லூயீக்கும் மற்றக் கிறிஸ்தவக் கைதிகளுக்கும் எந்தவிதமான தண்டனை அளிக்கப்படப் போகிறதென்பதைத் தெரிந்து கொண்டு போகலாமென்று காஹிராவிலேயே தங்கிவிட்டார்கள். இஃதல்லாமல், திமஷ்க் முதலிய தூரதேச நகரங்களிலிருந்தும் யாத்திரிகர்கள் பெருங்குழுவாக வந்துகொண்டிருந்தார்கள்.

இறுதியாக, அந்த எல்லாரும் எதிர்பார்த்த நன்னாள் வந்து சேர்ந்தது. இளவரசர் தூரான்ஷா மிஸ்ரின் ஸல்தனத்துக்கு மன்னராகப் பட்டம் ஏற்கப் போகிற பெருநாள் நெருங்கிற்று. இத்தனை நாட்களாகத் துக்கத்திலும், துயரத்திலும் அழுது வழிந்து கொண்டிருந்த காஹிரா நகர் இப்போது குதூகலத்துடனும் பெருஞ் சந்துஷ்டியுடனும் காட்சி அளித்தது. ஐயூபிகளின் வம்சத்திலே இப்போது மற்றொரு சுல்தான் பதவிக்கு உயரப் போகும் வைபவம் எல்லாரின் உள்ளத்துள்ளும் மகிழ்ச்சியை ஊட்டிற்று. நகரெங்கும் கொடிகளும் மகர தோரணங்களும் பறந்துகொண்டிருந்தன; நடைக் காவணங்களெல்லாம் பூப்பந்தல் மயமாகவே பொலிவளித்து விளங்கின. முரசொலிகளோ வானைப் பிளந்துகொண்டிருந்தன.

தொடரும்…

-N. B. அப்துல் ஜப்பார்

<<அத்தியாயம் 48>> <<அத்தியாயம் 50>>

<<ஷஜருத்துர் முகப்பு>>

Related Articles

Leave a Comment