25. ஷாம் யுத்த ஆயத்தம்

ஷஜருத்துர்ரை மணந்த சமயத்திலேயே ஸாலிஹ் மன்னர் மிஸ்ரின் ஸல்தனத்துக்கு மட்டும் மன்னராய் விளங்கவில்லை; ஆனால், ஷாம் பகுதியிலுள்ள சிற்றரசர்களுக்கும்

அதிபதியாக உயர்ந்திருந்தார். அச் சிற்றரசர்களெல்லாரும் அசக்தர்களாய் இருந்தபடியாலும், எந்த நேரத்திலும் சிலுவை யுத்தக்காரர்களால் தங்களுக்குப் பெருத்த அபாயம் நேரிடலாமென்று அவர்கள் சதாகாலமும் அஞ்சியபடியாலும், சுல்தான் ஸாலிஹைப் போன்ற வல்லமை மிக்க பேரரசரின் தயவும் உதவியும் தேவைப்பட்டுக்கொண்டிருந்தன. ஆகவே, அவர்கள் மிஸ்ரி்ன் சுல்தானுக்குக் கீழேயிருந்து ஆட்சி செலுத்துவதாக முன்னமே உடன்படிக்கை செய்து கொடுத்திருந்தார்கள். அவ்வுடன்படிக்கையின்படி அவர்கள் சுல்தானுக்குக் கப்பங் கட்டி வரவேண்டும். எந்தக் காலத்தில் என்ன ஆபத்து ஷாம் பிரதேசத்துக்கு விளைவதாயிருப்பினும், மிஸ்ர் சுல்தான் தம்முடைய படைகளையனுப்பி உதவி புரிய வேண்டும். கிறிஸ்தவர்கள் சிலுவை யுத்தம் நடத்துவதைத் தடுக்கத் தற்காப்பாயிருக்கும் பொருட்டே இவ்வுடன்படிக்கை முன்னம் கையொப்பமிடப்பட்டது. இதனால் ஷாம் சிற்றரசர்களுக்கும் அச்சம் தணிந்தது. மிஸ்ர்வாசிகளும் இனிக் கிறிஸ்தவர்களுக்கும் மத்திய ஆசியா அருகிலேயே தடுத்து நிறுத்துவதற்கு வசதி ஏற்பட்டு விட்டதென்று மகிழ்ந்தனர். அந்த உடன்படிக்கையின் பிரகாரமே இதுவரை சிற்றரசர்கள் கப்பங் கட்டி வந்தனரெனினும், சிலுவை யுத்தமொன்றும் புரியப்படாமையாலும், அல்லது வேறு உபத்திரவமேதும் ஷாம் மக்களுக்கு விளையாததாலும், மிஸ்ரின் சுல்தானிடம் உதவி கோரவேண்டிய அவசியமேதும் ஏற்படவில்லை.

ஆனால், அந்த ஹி. 644-ஆம் ஆண்டிலே ஷாம் சிற்றரசருக்குச் சங்கடம் விளைய ஆரம்பித்து விட்டது!

கி.பி. 13-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தோன்றிய செங்கீஸ்கான் என்னும் மற முரடன் ஆசியா கண்டம் முழுதையுமே எப்படி ஒரு பெருங் கலக்குக் கலக்கிவிட்டான் என்பதையும், இறுதியில் அந்த மங்கோலியன் எவ்வாறு பெரிய பலம் பொருந்திய கொள்ளைக்கூட்டத்தின் தலைவனாக மாறிப் போய்விட்டான் என்பதையும் சரித்திர மாணவர்கள் மறக்கமாட்டார்கள். அந்த மங்கோலியர்கள் சீனா தேசத்து எல்லையிலிருந்து மிக வேகமாக மேற்கு நோக்கி முன்னேறிக் கொண்டே சென்று, வழி நெடுகக் கொள்ளையடித்துச் சென்றபோது, இக்காலத்தில் கிவா என்று அழைக்கப்படும் பிரதேசமாகிய குவாரிஜம் என்னும் இடத்தருகே அவர்கள் வந்தார்கள். அதுபோது அப் பிரதேசத்தின் ஷாவாக விளங்கிய முஹம்மத் ஷா என்பவர் இன்னது செய்வதென்று தெரியாமல் மூச்சுத் திணறினார். மங்கோலியக் கொள்ளைக் கூட்டத்தினரின் பெரு வெள்ளத்தை எதிர்த்து நிற்பதென்பது பேராபத்து என்பதைக் கண்டு கொண்ட அந்த ஷாவானவர் தம் பிரதேசத்தைத் துறந்து, தம் படைகளுடன் விழுந்தடித்து ஓட ஆரம்பித்தார். அப்படி ஓடியவர், எங்கே புகலிடம் தேடிக்கொள்வதென்று ஒன்றும் தோன்றாமல் ஓடிக்கொண்டேயிருந்தார். காட்டுமிராண்டிகளான மங்கோலியக் கொள்ளைக் கூட்டத்தினரின் கையில் சிக்கிப் பரிதாபகரமாய் உயிரிழப்பதைவிட, எங்கேயாவது ஓடிப்போய் உயிர் தப்பிக்கொள்வது மேல் என்னும் நோக்த்துடனே அவர் அப்படி ஓடிக்கொண்டிருந்தார்.

இவ்விதமாக ஓடிவந்த அந்த முஹம்மத் ஷா இறுதியாக ஷாம் தேச சிற்றரசரிடம் வந்து தஞ்சம் புகுந்தார். அபயம் தேடி வலிய வந்து தஞ்சமடையும் உதவியற்ற அந்த ஷாவுக்குப் புகலிடம் கொடுக்க வேண்டுவது தம் கடமையென்றுணர்ந்த அந்த ஷாம் சிற்றரசர் பரந்த நோக்கத்துடன் அந்த அபயம் கோரினவரையும், அவருடன் வந்த படையினரையும் ஏற்றுக் கொண்டார். மங்கோலியர்களுக்கு அஞ்சித் தப்பி வந்த தமக்கு ஷாம் சிற்றரசர் அளித்த அபயத்தை அந்த ஷா மிகவும் மனமுருகிய நன்றியறிதலுடன் ஏற்றுச் சுகித்துவந்தார்.

குளிரால் நடுங்கி விறைத்துப் போய்க் கிடந்த நாகப் பாம்பை நாம் எவ்வளவுதான் அன்புடன் எடுத்து அணைத்துத் தடவிக்கொடுத்துப் பாலூட்டிச் சீராட்டிப் பாராட்டி வளர்த்தாலும், அது தன் பிறவிக் குணத்தைக் காட்டாமலிருக்குமா? அதேபோல், ஒரு வணங்காமுடி மன்னனாயிருந்து ஏகபோக ஆட்சி புரிந்து வந்த அந்த முஹம்மத் ஷா இப்போது ஷாம் சிற்றரசரின் கீழே அடிமையைப் போலே வாழ்ந்து, அவரிட்ட பிச்சையை உண்டு, அவர் ஏவும் பணியைக் கேட்கவேண்டிய நிலையில் எத்தனை நாட்களுக்குத்தாம் சும்மா இருப்பார்? அந்த நன்றிகெட்ட ஷாவுக்குப் பேராசைப் பிசாசு பிடித்தலைக்கத் தலைப்பட்டது. அதனுடன் தான் பிறருக்கு அடிமையாகவும் தஞ்சமடைந்து அடைக்கலமாகவும் வாழ்வதைவிட எதேச்சையுள்ள அரசனாய் உரிமை அடைந்துவிடுவதே அவசியமென்று அவர் பேராசைப்பட்டார். மங்கோலியர்களிடம் உயிர் தப்பிப் பிழைத்தால் போதுமென்று நாடு துறந்து ஓடிவந்து ஒளிந்த ஷா இப்போது ஷாம் அரசனாக உயர்ந்துவிடப் பேராசை கொண்டதில் அதிசயமில்லை. ஆனால், உப்பிட்ட தன் எஜமானருக்கே துரோகம் செய்ய முற்பட்டதுதான் விந்தையினும் விந்தை.

ஷாவின் படையினர் ஷாமுக்குள் சிறுகச் சிறுக வாலாட்டத் தலைப்பட்டனர். ஷாம் சிற்றரசருக்கு முதலில் இது வியப்பாயிருந்தது. அன்னமிட்ட வீட்டில் கன்னமிட்ட கதையாக இருக்கிறதே என்று அதிசயித்து விட்டார். எனினும், சற்றும் முன்பின் யோசியாது அந்த அயோக்கியர்களை அடக்க ஆரம்பித்தார். எதிரியாயிருந்து போர்க்களத்தில் நேருக்குநேர் போர் புரியும் படையினரைச் சுலபமாகவும் நேர்மையாகவும் வீழ்த்தலாம். ஆனால். ஊருக்குள்ளேயே புகுந்து அங்கேயே வேரூன்றிவிட்ட நயவஞ்சக துரோகிகளை வீழ்த்துவதென்பது சுலபமான காரியமா? ஆகையால், ஷாம் அரசர்பாடு திண்டாட்டத்தில்வந்து முடிந்துவிட்டது. வேறுவழியொன்றும் புலப்படாமையால், அவர் மிஸ்ர் சுல்தானுக்கு லிகிதம் எழுதினார் :

“அருளாளனும் அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தைக் கொண்டு : ஷாம்தேச சிற்றரசனும், ஐயூபி வம்ச சுல்தான்களுக்குக் கீழே குற்றேவல் புரிகின்றவனுமாகிய நாஸிர் தாவூத், மிகவும் அடிபணிந்து, சுல்தானுல் முகர்ரம், மலிக்குல் முஸ்லிமீன், ஸாலிஹ் நஜ்முத்தீன் ஐயூபி அவர்களுக்கு விண்ணப்பிக்கும் கடிதம் என்னவென்றால் :- மிஸ்ரின் ஸல்தனத்தை நாங்கள் மிகவும் மனப்பூர்வமாய் எங்களுக்கு ஏற்ற பேரதிகாரமாகக் கருதி ஏற்று மனமகிழ்ச்சியுடன் இருந்துவரும் காலத்தில், மங்கோலிய கொள்ளைக் கூட்டத்தினரால் கொடுமைக்குள்ளாக்கப்பட்ட முஹம்மத்ஷா என்னும் குவாரிஜம் தேச சிற்றரசன் அபயம் தேடிக்கொண்டு இந்நாட்டுக்குள்ளே வந்து தஞ்சம் புகுந்தான். அடியேனும் அத்தகைய உதவியற்றவனுக்கு உதவி புரியவேண்டுவது இஸ்லாமிய கடமையென்று கண்டு அபயமளித்தேன். ஆனால், அத்துரோகி இப்போது உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்து கொண்டும், ஷாம்தேச முழுதையுமே பகற் கொள்ளையிலும் படுகொலையிலும் மூழ்கடித்துக் கொண்டும் சொல்லொணாக் கொடுமைகளையெல்லாம் இழைத்து வருகிறான். இப்படிப்பட்ட தர்மசங்கடத்தால் விளைந்த உள் நாட்டுக் குழப்பத்தை ஒடுக்க அடியேன் தங்களிடம் பேருதவியை எதிர்பார்த்து நிற்கின்றேன் என்பதை மிகவும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இங்ஙனம், தங்கள் குலாம்…”

இக் கடிதத்தை வாசித்த சுல்தான் எப்படிச் சீறினாரென்பதைச் சென்ற அத்தியாயத்தில் விவரித்தோமல்லவா?

சுல்தான் கேட்ட கேள்விக்குச் சுருக்கமாய் விடையளித்த அத் தூதுவன் கைகட்டி, நின்று கொண்டிருந்தான். ஸாலிஹ் வேகமாக அரியாசனத்திலிருந்து இறங்கி உள்ளே சென்றார். அக்குறிப்பறிந்த மந்திரி பிரதானிகளும், மற்ற முக்கியப் பிரமுகர்களும் சுல்தானின் பின்னே சென்றார்கள். சுமார் அரைமணி நேரம் அந்தரங்கக் கூட்டம் நடந்தது. என்னெனின், சுல்தான் ஸாலிஹ் ஆட்சி செலுத்திய கால முழுதும் அவர் தம்முடைய மந்திரி பிரதானிகளையும் விசேஷ ஆலோசகர்களையும் கலக்காமல் தம்மிஷ்டத்துக்கு ஏகபோகமாக எதையும் செய்ததில்லை. இதுவே அல்லாஹ்வின் ஆணையும். அவ் வழக்கப்படியே, இப்போது ஷாம் சிற்றரசரின் கோரிக்கைக்கு என்ன விதமான நடவடிக்கையை எடுக்கலாமென்று ஆலோசனை நடத்தினார். ஷஜருத்துர் பிரசவமான அறையில் புனிறு தீராமலிருந்தபடியால், அவளை அவர் கலக்கவில்லை. இன்றேல், அவளிடத்தும் ஆலோசனை கேட்டுத்தானிருப்பார்.

கூட்டம் முடிந்ததும், சுல்தான் மீண்டும் தர்பாருக்கு வந்தார். அரசர் ஆணைப்படி ஒரு நிருபம் அத் தூதனிடம் நீட்டப்பட்டது. அதை அவன் மிகவும் மரியாதையாக வாங்கிக்கொண்டான்.

“ஏ தூதனே! நாஸிர் தாவூதைக் கவலைப்பட வேண்டாமென்று சொல். நாம் இன்னம் இரண்டே நாட்களில் போதிய படையைத் திரட்டிக்கொண்டு வந்து, அந் நன்றி கொன்ற முஹம்மத் ஷாவை நிர்மூலமாக்கித் துண்டு துண்டாகக் கிழித்தெறிந்து மூலைக்கொன்றாக வீசியெறிந்து விடுகிறோம். அருளாளனாகிய அல்லாஹுத் தஆலா நன்றி கொன்ற பாதகர்களை நேரிய வழியிலே சீரிதாய் நடாத்தமாட்டான்!” என்று சுல்தான் சிம்மம்போல் கர்ஜித்தார். துண்டு துண்டாகக் கிழித்தெறிவதாகச் சொன்ன வார்த்தைகளை ஸாலிஹ் எப்படிப் பல்லை நறநறவெனக் கடித்துக் கொண்டு கோபாவேசமாய்க் கூறினாரென்றால், அவர் பல்லிடுக்கில் முஹம்மத் ஷாவின் மேனி சிக்கிக்கொண்டிருந்தால் என்ன பாடுபட்டிருக்குமோ, அந்தமாதிரியே இருந்தது.

சாம்ராஜ்ய சக்ரவர்த்திகளாயிருப்பது எத்துணைப் பெருமையுள்ளதாக வெளித்தோற்றத்தில் காணப்பட்டாலும், இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் சிற்றரசர் உதவி கோருவதும், அதைத் தடுக்க முடியாமல் படை திரட்டிக்கொண்டு போய்ப் போர் புரிவதும் சங்கடமான விஷயங்கள் தாம். மனைவி கருவுயிர்த்திருக்க, மிஸ்ரிலே மம்லூக்குகளுக்கிடையில் பிளவிருக்க, இப்போது சுல்தான் ஷாமுக்கு உதவி புரியச் செல்லவேண்டுவது அத்தியாவசியமாய் விட்டது. பிறக்கும் போதே வீரம் செறிந்த உள்ளத்தினராய் அவதரித்த அந்த ஸாலிஹ் ஆத்திரம் மிக்கவராய்க் கட்டளைகளுக்கு மேல் கட்டளைகளும், உத்தரவுகளுக்கு மேல் உத்தரவுகளும் அடுக்கடுக்காய்ப் பிறப்பித்துக் கொண்டேயிருந்தார். அன்று மாலைக்குள் அந்த அரசாங்கத்திலிருந்த அத்தனை ராணுவப் படைகளும் அணிவகுத்து ஆயத்தமாய் நிற்க ஆரம்பித்தன. காஹிராவாசிகளுக்கே இந்த மாதிரி திடீரென்று ராணுவங்கள் ஏன் சித்தமாகின்றன என்பதே புலப்படவில்லை. கிறிஸ்தவர்கள் மீட்டும் சிலுவை யுத்தத்திற்கு வருகிறார்கள்போலும்? என்று சிலர் கருதினர்; மற்றுஞ் சிலர், சுல்தானே படையைக் கிளப்பிக்கொண்டு ஐரோப்பாவின்மீது போர்தொடுக்கப் போகிறார் போலுமென்று கூறினர்.

அழிக்கப்பட்ட அமீர்களின் ஸ்தானத்தைத் தவிர்த்து, அந்த ராணுவத்தில் எல்லாப் படைகளும் அந்த அந்த இடத்தில் ஆயத்தமாக இருந்தன. குதிரைப் படைகள், மார்பு விரிந்த அசுவ வீரர்கள் ஆரோகணிக்க, பல காவத நீளத்துக்கு நின்றன. காலாட்களோ, மிக ஒழுங்காக அணிவகுத்துத் தொகுதி தொகுதியாக எறும்புக் கூட்டம் ஊர்வதுபோல் நெடுக நின்றனர். தளபதிகளும் சேனா வீரர்களும் உயிர்குடிக்க ஆவலுறும் வாட்படைகளை ஏந்திக்கொண்டு தலைநிமிர்ந்து நின்றார்கள். இதற்கு முன்னால் இருந்த ஐயூபி சுல்தான்கள் பல சந்தர்ப்பங்களில் திரட்டிய பெரும் படைகளையெல்லாம் இந்தச் சேனா சமுத்திரம் மிகைத்து நின்றமையால், காஹிராவாசிகள் வாய் கூறிப் போயினார்கள். அந்தப் பெருஞ் சேனையைப் பார்த்தால், அது உலகு முழுவதையுமே வென்றுவிட்டுத் திரும்புவதுபோல் அத்தனை லட்சோப லட்சம் தலைசிறந்த வீரர்களுடன் நிறைந்து காணப்பட்டது. அப் படைப் பலத்தைக் கண்டு ஆண்கள் அஞ்சினர்; பெண்கள் நடுங்கினர்; கோழைகள் இடிந்தனர். இருந்தாற் போலிருந்து சுல்தான் திடீரென்று ஏன் இவ்வளவு பெரிய படை திரட்டினாரென்பதே அவர்களுக்கு அதிக ஆச்சரியத்தை யூட்டிற்று.

கன்னியாந்தப்புரத்தில் தன் குழவி கலீலுடன் அயர்ந்து படுத்திருந்த ஷஜருத்துர்ருக்கும் இச்செய்தி எட்டியது. அவள் திருதிருவென்று விழித்தாள். தன்னிடம் சுல்தான் ஒன்றும் சொல்லாதிருக்க. இவ்வளவு தடபுடலாக யுத்த ஏற்பாடு சட்டென்று ஏன் நடக்கவேண்டுமென்று அவள் யோசித்தாள். தாதிகளைக் கேட்டாள். அவர்கள் தங்களுக்கு ஒன்றுமே தெரியாதென்று கைவிரித்தார்கள். சுல்தானைக் கூப்பிட்டு வரும்படி ஆள் விடுத்தாள். அவர் படையினரைப் பார்வையிட்டுக் கொண்டிருப்பதாகவும், போர்க்களங்களில் அப் படையினர்க்கு வேண்டிய உணவுப் பண்டங்களுக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காகவுள்ள சிப்பந்திகளுடன் திட்டம் வகுத்துக் கொண்டிருப்பதாகவும் பதில் வந்தது. ஷஜருத்துர் துடியாய்த் துடித்தாள். எனினும், இரவு எந்நேரமானாலும் சுல்தான் தன்னிடம் வந்து விவரம் தெரிவிப்பாரென்னும் ஒரே நம்பிக்கை மட்டும் அவளுக்குச் சிறிது சாந்தியளித்தது.

அவளுக்கு நேரம் மிகவும் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. பொறுமையின்மையாலும், ஸல்தனத்துக்கு ஏதாவது ஆபத்து வந்துவிட்டதோ என்னும் ஏக்கத்தாலும் அவள் அமைதியற்று ஸாலிஹின் வரவை எதிர்பார்த்திருந்தாள். ஆனால், அன்றிரவு முழுதும் அவர் அந்தப்புரத்துக்கு வரவேயில்லை.

மறுநாள் விடிந்ததும், மூனிஸ்ஸாவின் மைந்தன் தூரான்ஷா தன் சிற்றன்னையிடம் ஓடிவந்தான்.

“கண்ணே! உன் தந்தையார் எங்கிருக்கிறார்?” என்று அவள் மிருதுவாய்க் கேட்டாள்.

“அம்மா! உங்களுக்கு ஒன்றுமே தெரியாதா? என் அபூ இன்று மாலையில் ஷாம் தேசத்துக்குப் படைதிரட்டிக் கொண்டு போகிறாரே!” என்று மகிழ்ச்சி கலந்த ஆனந்ததத்துடன் அறையலுற்றான்.

“என்ன, ஷாமுக்கா? ஏன்?”

“அங்கே வந்திருக்கிற முஹம்மத் ஷா உள்நாட்டுக் குழப்பத்தை உண்டுபண்ணிக் கொண்டு, அரசாட்சியையே கைப்பற்ற முற்பட்டிருக்கிறாராம். அந்தக் கயவனை நிர்மூலமாக்கவே என் அபூ இப் பெரிய சேனையுடன் புறப்படுகிறார்!”

“முஹம்மத் ஷாவா? அவர் ஷாமுக்குள் அடைக்கலம் புகுந்திருப்பதாக அல்லவோ, உன் தந்தை முன்னொரு சமயம் என்னிடம் கூறினார்?”

“ஆம். அந்த அடைக்கலம் புகுந்த அதே கயவன்தான் இப்போது ஷாம் சிற்றரசர் நாஸிர் தாவூதை எதிர்க்கிறாராம். வளர்த்த கடா மார்பின்மீது பாயாமல் வேறு என்ன செய்யும்? துஷ்டனைக் கண்டால் தூர விலகுவதைவிட்டு, கலீபாவையே முன்னொரு சமயம் எதிர்த்துப் போராடிய இந்த ஷா என்னும் பெருந் துரோகியை நாஸிர் தம் நாட்டில் ஏற்று, உபசரித்து, உண்பதற்கு உணவும், உடுப்பதற்கு உடையும், தங்குவதற்கு நிழலும் கொடுத்து ஆதரித்தால், அவர் தன் வேலையைக் காட்டாமலா சும்மா இருப்பார்? கூடாரத்துக்குள் நுழைய இடம் விட்டவனை ஒட்டகம் வெளியே தள்ளியதுபோல் இப்போது முஹம்மத் ஷா தானே ஷாமுக்கு அரசனாக விரும்புகிறார். ஆசைக்கு அளவேது? இப்போது வேறொன்றும் செய்ய முடியாதாகையால், நாம் நமது படையை அனுப்பி அந்தக் கொள்ளைக் கூட்டத் தலைவனை வேரோடு கல்லி யெறிய வேண்டி வந்துவிட்டது. அவ்வளவுதான்!”

ஷஜருத்துர்ருக்கு இப்போது விஷயம் நன்கு விளங்கி விடடது : தன் கணவர், முஹம்மத் ஷாவை முறியடிக்கவே இப்படிப் படை திரட்டி ஆயத்தமாகிறாரென்று உணர்ந்து கொண்டாள்.

உன் தந்தை படையைமட்டும் அனுப்பப் போகிறாரா, அல்லது அவரும் சேர்ந்து போகப் போகிறாரா?” என்று சட்டென்று கேட்டாள்.

“என்னமோ, எனக்குத் தெரிந்தமட்டில் அவரே படையை நடத்திச் செல்வாரென்றுதான் புலப்படுகிறது. ஆனாலும், அவர் இன்னம் சிறிது நேரத்தில் இங்கே வருவாரல்லவா? அப்போது எல்லாம் தெரிகிறது.”

தூரான்ஷா பேசி வாய் மூடுமுன்னே மன்னர் ஸாலிஹ் அங்கே வந்து தோன்றினார். இருபத்து நான்கு மணி நேர ஓயா உழைப்பாலும், இரவெல்லாம் கண்விழித்துப் படையினரைத் தயார் செய்துகொண்டிருந்தமையாலும், அவர் முகம் களைப்படைந்திருந்தது. உள்ளம் துடிக்கிற துடிப்பு வீரமிக்க அவர் கண்களில் பிரதி பலித்துக்கொண்டிருந்தது. வந்தவர் தம் மனைவியையும், மூத்த மைந்தனையும் மாறிமாறிப் பார்த்தார். வலியப் புன்சிரிப்பை வரவழைத்துக் கொண்டார்.

“கண்மணி! நீ கலீலைப் பெற்ற நேரம் மிக்க நல்லவேளை போல் தோன்றுகிறது. குழந்தை பிறந்து ஐந்து நாட்கள் ஆவதற்குள்ளே என்கு இன்னொரு பெரு வெற்றி வருவதற்கான சந்தர்ப்பம் பிறந்திருக்கிறது, பார்த்தாயா?” என்று அவர் அன்போடு பேசலுற்றார்.

கருவுயிர்த்த களைப்பு முற்றும் தீராமல் திண்டொன்றில் சாய்ந்தவண்ணம் கால்களை நீட்டிக்கொண்டிருந்த ஷஜருத்துர் தன் வெளிறிய வதனத்தை உயர்த்தி, அரசரின் வதனத்தை உற்று நோக்கினாள். அவளுடைய பார்வையில் பரிதாபம் கலந்த அயர்வு தொனித்தது.

“ஷஜர்! கவலைப்படாதே! நான் இரண்டொரு மாதத்தில் அந்தப் பதரை ஊதித் தொலைத்துவிட்டு வந்துவிடுகிறேன். முஹம்மத் ஷாவுக்கு மிஸ்ர் மன்னர்களின் வல்லமையைச் சிறிது ருசிகாண்பிக்க வேண்டுமல்லவா? அவன் நம்மைக் கிள்ளுகீரையென்று நினைத்து நம் சிற்றரசரை வருத்துகிறான். இன்னம் சில நாட்களுக்குள்ளே அவன் நம்மை யாரென்று தெரிந்துகொள்வான். எனக்கு நல்விடை தருகிறாயா – நான் ஷாமுக்குப் போய்வருகிறேன்?”

ஷஜருத்துர் மௌனமாய்த் தலையசைத்தாள். அதைப் பார்த்தால், சரியென்பது போலவும், வேண்டாமென்பது போலவும் பொதுவாய்த் தெரிந்தது.

“ஏன் பேசமாட்டேனென்கிறாய், ஷஜர்! என் மீது கோபமோ?”

“நான் ஏன் கோபிக்கவேண்டும்? முடிசுமக்கும் மன்னர்க்கு எத்தனையோ உபத்திரவங்கள் தோன்றும். தாங்கள் அவசியம் போய்வாருங்கள். வெற்றியுடன் திரும்புங்கள். முஹம்மத் ஷா என்னும் அந்தத் துரோகியைத் தண்டிக்க வேண்டியது தங்கள் கடமைதான்! ஆனால்,…” என்று அவள் வாய் திறந்துபேசி, நிறுத்தினாள்.

“ஆனால் – என்ன?” என்று அவர் படபடப்புடன் வினவினார்.

“ஒன்றுமில்லை. தாங்கள் இங்கிருந்து வெளியேறியிருக்கும்போது, ஸல்தனத்தை எவரிடம் ஒப்படைத்துப் போகிறீர்கள்?”

“நீ இருக்க எனக்கென்ன கவலை, ஷஜர்? உன்னைவிடப் பொருத்தமானவர் எவர் இருக்கிறார், இந்த ராஜ்யத்தைப் பார்த்துக் கொள்ளச் சொல்ல? நீ இங்கிருக்கிறாய் என்னும் அந்த ஒரே தைரியத்தால்தானே நான் இப்போது போருக்குப் புறப்படப் போகிறேன். அமீர்கள் இல்லாத இந்தக் காலத்தில் சகல அமீர்களின் புத்தி சாதுர்யம் படைத்த நீ இருக்க, எனக்குப் பயமேது?”

“முகஸ்துதி இருக்கட்டும். தாங்கள் இங்கே இருக்கிற வரையில் அடியேன் தங்களுக்கு என் மூளையில் பட்டதையெல்லாம் சொல்லி வந்தேன். ஆனால், தாங்கள் இங்கே இல்லாதபோது?”

”சுல்தான் ஊரிலில்லாதபோது சுல்தானாவுக்குத்தான் சர்வ அதிகாரமும் இருக்கிறதென்பதை நான் சொல்லவும் வேண்டுமோ? என் மைந்தன் தூரான்ஷா வயது வருகிற வரையில் நீதானே இந்த ராஜ்யத்தைக் காப்பாற்ற வேண்டும். உனக்கென்ன, அரசியல் ஞானமில்லையா; அல்லது விவேகமில்லையா; அல்லது ராஜதந்திர நிபுணத்துவத்துக்காவது உனக்குக் குறைவுண்டா; அல்லது இந்த ராஜ்ய பாரத்தைத் தாங்குவதற்குத்தான் சக்தியில்லையா? நான் முன்னமே ஆக்கினை இட்டுவிட்டேனே! நான் திரும்பி வருகிற வரையில் நீயேதான் இந்த ஸல்தனத்தின் அரசியென்றும், நீ ஏவுகிறபடிதான மற்றவர்கள் கேட்டு அடிபணிய வேண்டுமென்றும் கடுமையான கட்டளை பிறப்பித்து விட்டேனே! ஷஜர்! இது முஸ்லிம்களின் ராஜ்யம். நீயோ, இக்காலத்திலுள்ள சர்வ முஸ்லிம்களுள்ளும் தலைசிறந்து விளங்குகிற தலைவியாயிருக்கிறாய். உன்னிடம் சகல பொறுப்பையும் ஒப்படைத்துச் செல்கிறேனே என்று நான் பெரிதும் அகமகிழ்ந்து புளகாங்கிதமடைந்து பூரித்துப்போயிருக்கிறேன். விடைகொடு. நீ பிரசவ அறையிலிருந்தாலும், அரியாசனம் ஏறி அமர்ந்தாலும், அந்தப்புரத்துள் மூலையிலே முடங்கிக் கிடந்தாலும், உன் கீர்த்திப் பிரதாபம் இந்த ராஜ்யத்தின் திக்கெட்டும் சென்று ஜோதி வீசுகிறதென்பதை நீயே அறியாயா? நான் போய் வருகிறேன்.”

ஷஜருத்துர் ஒரு பெருமூச்செறிந்தாள்.

“என்ன யோசிக்கிறாய்? இவ்வளவு பெரிய ராஜ்யத்தை ஆட்டிப் படைத்த என்னையே ஆட்டிவைக்கும் நீ மனச்சோர்வு கொண்டு தளர்ச்சியுறுகிறாயோ? தொட்டிலையாட்டுங் கரந்தானே துன்யாவை ஆட்டிப் படைக்கிறது!”

“நாதா! இந்த ராஜ்ய பாரத்தைச் சுமக்க முடியாது என்பதற்காக நான் யோசிக்கவில்லை. ஆனால். தங்கள் பாட்டனார் ஆதில் மன்னர் காலத்தில் இந்த ராஜ்யத்தை அமீர் தாவூதிடம் ஒப்படைத்துச் சென்றாரே, அதேமாதிரி தாங்கள் இதை இப்போது என்னிடம் விட்டுச் செல்கிறீர்களே, அதைத்தான் நினைத்துக்கொண்டிருக்கிறேன். அன்று என் வளர்ப்புத் தந்தையாகிய அமீர் ராஜ்ய பாரம் சுமந்தார்; இன்று அடியாளாகிய யான் இவ்வளவு பெரிய பொறுப்பை ஏற்க நேர்ந்ததே என்றுதான் கவலுறுகிறேன்.”

“இதில் கவலைப்பட வேண்டுவது என்ன இருக்கிறது?” என்று அவர் ஆவலுடனே கேட்டார்.

தொடரும்…

-N. B. அப்துல் ஜப்பார்

<<அத்தியாயம் 24>> <<அத்தியாயம் 25a>>

<<ஷஜருத்துர் முகப்பு>>

Related Articles

Leave a Comment