Cairo

ஒருநாள் பிற்பகலில் யூசுப் உணவருந்திக் கொண்டிருந்தார். ஷஜர் அவர் முகத்தைப் பார்த்தவண்ணம் நின்றுகொண்டிருந்தாள். அவள் ஏதோ முக்கிய

விஷயத்தைச் சொல்லக் காத்து நின்றவளேபோல் அறிகுறி தென்பட்டது. யூசுப் சாப்பிட்டெழுந்ததும் அவள் வதனத்தை உற்றுநோக்கினார்.

“ஷஜருத்துர்! என்ன விசேஷம்?” என்று சாதாரணமாய்க் கேட்டார்.

“நான் தங்களிடம் உதிரக் கிரயம் பெற்றுவிட்டேனல்லவா?”

“அன்றிரவு நீ அப்படித்தானே சொன்னாய்?”

“ஆம்; அந்தக் கிரயம் பெற்றுவிட்டபடியால், இனியும் இங்கே யான் இருக்கக்கூடாதல்லவா?”

“இங்கே நீ இருக்கக்கூடாதா? யார் சொன்னது?”

“ஏன், நானேதான் சொல்லுகிறேன். எனக்கு விடை கொடுங்கள்; நான் போய் வருகிறேன்.”

யூசுபின் காலடியில் பெரிய இடிவிழுந்தால் ஏற்படக்கூடிய அதிர்ச்சியைவிடச் சற்று அதிகமான கலக்கமே அவர் முகத்தில் காணப்பட்டது.

“உனக்கென்ன, பைத்தியமா ஷஜர்? நீ எங்கே போகிறாய்?” என்று சிறிது கடுமையான குரலில் கேட்டார்.

“அபூ! நான் பைத்தியம் பிடித்து உளறவில்லை; அல்லது விளையாட்டுத் தனமாகவும் பிதற்றவில்லை. உண்மையாகவே சொல்கிறேன்; எனக்கு இனி இங்கே வேலையில்லை. நான் வெளியேறி விடுகிறேன்.” அவளுடைய குரல் தீர்க்கமாயிருந்தது; பார்வையோ, களங்கமற்றிருந்தது. அவள் முற்றும் திறந்த மனத்தினளாய்ப் பேசுகிறாளென்பது தெளிவாயிருந்தது. அல்லாமலும், அவளுடைய வார்த்தைகள் அழுத்தந்திருத்தமாகவும் முழு வைராக்யம் பொருந்தியவையாகவுமே காணப்பட்டன.

யூசுப் அயர்ச்சியுற்று விட்டார். அவளையே கூர்த்துப் பார்த்தார்.

“அபூ! கோபியாதீர்கள். நான் தங்களிடம் என்னென்னவெல்லாம் பெற்றுக்கொள்ள வேண்டுமோ, அவை அனைத்தையும் யாதொருவிதக் குறைவுமின்றிப் பெற்றுக்கொண்டுவிட்டேன். என் பொருட்டாக நீங்கள் சகல இன்பநலங்களையும் பரித்தியாகம் பண்ணிவந்தீர்களென்பதையும் நான் நன்கறிவேன். உங்கள் சொந்தப் புத்திரியை நீங்கள் எத்துணைக் கரிசனத்துடன் வளர்ப்பீர்களோ, அதனினும் அதிகமான கரிசனத்துடனேயே என்னை நீங்கள் ஆதரித்து வந்தீர்களென்பதையும் நான் மறக்கமாட்டேன். உங்களையன்றி நான் வேறு யாரை அண்டியிருந்தாலும் – ஏன், என் தந்தையே உயிருடன் இருந்திருந்தாலும், நான் இவ்வளவு உயர்ந்த படிப்புக்களையும் மற்றச் சலுகைகளையும் பெற்றுக்கொணடிருக்க முடியுமா என்பதே சந்தேகந்தான். இருந்தாலும், யான் இனிமேலும் இங்கே தங்கியிருப்பது நல்லதல்ல என்றுதான் நினைக்கிறேன். என்னெனின், என் பொருட்டாகவே தாங்கள் தங்கள் சுகத்தையெல்லாம் மறந்தீர்கள். விவாகம் செய்துகொண்டால் எங்கே தங்கள் மனைவி என்னைக் கொடுமைப்படுத்துவாளோ என்று அஞ்சி, விவாகமே செய்து கொள்ளாமல் இதுவரை வெறுமனே காலங்கடத்திவிட்டீர்கள். இன்னமும் யான் ஏன் இங்கே இருக்கவேண்டும்? தங்கள் நல்வாழ்க்கையையும் சுகத்தையும் யான் கெடுக்க விரும்பவில்லை.”

அவளுடைய இந்த வார்த்தைகளை அவர் கவனமாய்க் கேட்டார். கடும்புயலால் கடலில் எழும் அலைகளைப்போல அவர் உள்ளத்தில் உணர்ச்சி பொங்கியது. “கண்மணி! என் சுகத்தைக் கெடுக்காதிருக்கவா இப்படியெல்லாம் பேசுகிறதாக நீ கூறுகிறாய்?” என்று கேட்டார்.

“ஆமாம். எனக்கு என் சுகம் பெரிதன்று. உலகம் பரந்தது. யான் எங்குச் சென்றாலும், என் வாழ்க்கையை என் அறிவைக்கொண்டு நன்கு அமைத்துக்கொள்ள முடியுமென்பதை உணர்கிறேன். ஆனால், நான் இங்கேயே நீடித்து வாழ்வதென்பது மாட்டுத்தொழுவத்தில் படுத்துக்கொண்ட நாயின் கதையாகத்தான் போய்முடியும் என்று அஞ்சுகிறேன்.”

“ஷஜர்! அன்றிரவு நான் வேடிக்கையாக உன்னிடம் கூறிய வார்த்தைகளை நீ விபரீதமாக எடுத்துக் கொண்டாயோ? உன்னைப் பிரிந்தால் நான் எப்படி உயிர்வாழ முடியும், கண்மணி?” என்றார் யூசுப். அவரது நேத்திரத்தினின்று இரு துளி அவலக் கண்ணீர் உகுந்தது.

“நான் தங்களை வருத்தவேண்டும் என்பதற்காக இப்படிப் பேசவில்லை. நிலைமையை நன்கு யோசித்தே எல்லாம் கூறுகிறேன். அன்றிரவு நீங்கள் கூறிய வார்த்தைகள் விளையாட்டுத் தனமானவையாக இருக்கலாம். ஆனால், அவை என் கண்களை அகல விழிக்கச் செய்துவிட்டன. என் தந்தையின் கொலைக்கு உடந்தையாயிருந்த குற்றத்துக்காக நீங்கள் அனுபவித்ததெல்லாம் போதும். ஆண்டவனும் உங்களை முன்னமே மன்னித்து விட்டான். நான் அதனிமித்தமாக உங்களிடமே இருந்துகொண்டு, உங்கள் வாழ்க்கையைக் கெடுக்க விழையவில்லை. அன்று தாங்கள் சொன்னதுபோல் இன்னும் கொஞ்ச நாட்கள் சென்றால் தாங்கள் ஷைத்தானின் தூண்டுதலுக்கு ஆளாகிவிட்டால், அப்பால் என் செய்வது?”

“அப்படியானால், நீ வெளியேறித்தான் போகப் போகிறாயோ?”

“ஆம்; வெளியேறித்தான் ஆகவேண்டும். ஆனால், உங்களைப் பகைத்துக்கொண்டோ, அல்லது உங்கள் அதிருப்தியைப் பெற்றுக் கொண்டோ, நான் போக விரும்பவில்லை. அதற்கு மாறாக உங்கள் அன்பையும் முழு அனுமதியையும் பெற்றுக்கொண்டே போக நாடுகிறேன். விடை தாருங்கள்!” என்று பணிவுடன் தெளிவாய்க் கூறினாள்.

ஷஜரின் பிடிவாதம் எத்தன்மைத்தென்பதையும் அவளது வைராக்யசித்தம் எவ்வளவு வன்மைமிக்கதென்பதையும் யூசுப் மிகவும் நன்கறிந்திருந்தார். எனவே, அவள் வாயினின்று உதிர்ந்த ஒவ்வொரு வார்த்தையும் அவர் நெஞ்சைப் பிளப்பதுபோல் இருந்தது. ஆயினும், அவளது திடசித்தத்தை மாற்ற முடியாதென்பது அவருக்கு நிச்சயமாகத் தெரியுமாதலால், அவளை நயமான வழியால் திருப்ப முயன்றார்.

“கண்மணி! அதற்கு இப்போதே என்ன அவசரம்? இரண்டொரு நாள் பொறுத்துக்கொள்ளேன்.”

“அபூ! இரண்டொரு நாட்கள் சென்றாலும், அல்லது மாதங்களே பல சென்றாலும், அல்லது வருஷமேயானாலும், நான் என்றாவது வெளியேறித்தானே ஆக வேண்டும்? நாளைக்குச் செய்வதை இன்றைக்கே செய்து விடுவது விவேகமன்றோ?”

“அப்படியானால், இந்த நடுப்பகலில் இவ் வீட்டைவிட்டு வெளியேறி நீ எங்கே போகப் போகிறாய்?”

“நம்மைப் படைத்தவன் இருக்க, அதைப்பற்றி நாம் கவலைப்படுவானேன்? செடி வைத்தவன் தண்ணீர் வார்ப்பான். என் அறிவைக் கொண்டு யான் எனக்கேற்ற வழியைப் பற்றிக்கொள்ளுவேன்.”

“இது விளையாட்டுத்தனமான சிறுபிள்ளை வார்த்தையாகவல்லவோ இருக்கிறது! நீயோ பருவம் எய்தக்கூடிய பக்குவ வயதினள். காஹிரா நகரிலோ, கயவர்கள் அதிகம். உன்மதி எவ்வளவு விசாலமாயிருந்தாலும், நீயொரு பெண்ணென்பதையும், பெண்ணென்றால் பேதையென்பதையும் மறக்கலாமா? நீ எங்கே போகப்போகிறாய்? உன் எதிர்கால வாழ்க்கையை நீ எப்படி நிர்ணயிக்கப்போகிறாய்? வெளியேறிய பின்னர் அவற்றை நீ முடிவுசெய்து கொள்வதைவிட, இங்கிருக்கும்போதேயல்லவா நீ திட்டமிட்டுக் கொண்டு, அப்பால் புறப்பட வேண்டும்? நன்றாய் யோசி, ஷஜர்!”

ஷஜருத்துர், என்ன இருந்தாலும், சிறு நங்கைதானே? யூசுபின் அன்புகனிந்த இம்மொழிகள் அவளைப் பிரமிக்கச் செய்துவிட்டன. வீட்டிலிருப்பதைவிட்டு வெளிக்கிளம்பினால், அவள் என்ன இடுக்கண்களுக்கும் இணையிலாச் சங்கடங்களுக்குமெல்லாம் ஆளாக நேருமோ? அவள் அப்படியே வாயடைத்துப் போயினாள்.

யூசுப் அவளையே பார்த்துக்கொண் டிருந்தார். நிஷ்களங்கமான ஆகாயத்தின் பரிபூரண பிரகாசத்துடன் ஒளிரேகைகள் மின்னி வீசத் தவழ்ந்துவரும் பூரணசந்திரனைப் போன்ற தேஜஸை அவள்முகம் பிரதிபிம்பித்துக்கொண்டிருந்தது. ஆனால், அவ்வதனத்தில் இலேசான கலக்கமும் சிறிது கலந்திருந்தது.

“ஷஜருத்துர்! நான் உன் மனத்தை நோவச் செய்கிறேனென்று நினைக்காதே. நீயோ, ஓர் அமானத்துப் பொருளென்பதை நான் மறக்கவில்லை. இன்றைக்கில்லாவிட்டாலும், வேறு என்றைக்காவது நீ என்னைப் பிரியத்தான் வேண்டும்; அல்லது நானே உன்னைவிட்டுப் பிரியவேண்டும். எனினும், உன்னைப் பந்தோபஸ்தான இடத்தில் சேர்ப்பித்தால்தானே நான் அமானத்துப் பொருளைச் சரிவரப் பாதுகாத்த கடமையைச் செய்தவனாவேன்? நடுவனாந்தரத்தில் உன் தந்தையைக் கொன்று உன்னைக் கொணர்ந்து, இத்தனை நாள் வைத்திருந்து, இறுதியில் இக் காஹிரா நகரின் கயவர்கள் மத்தியில், நடுவீதியிலே உன்னைச் சீர்குலையச் செய்துவிட்டால், அந்த ஆண்டவன்தான் என்னை மன்னிப்பானா? அல்லது நானேதான் மனநிம்மதியுடன் வாழமுடியுமா? கண்ணே, நீயே சொல்!”

“என்றைக்கிருந்தாலும் நாம் பிரியவே வேண்டுமென்று நீங்களும் ஒத்துக்கொள்கிறீர்கள். அமானத்துப் பொருளாகிய என்னைப் பந்தோபஸ்தான இடத்தில் சேர்ப்பிக்க வேண்டுமென்றும் கூறுகிறீர்கள். அப்படியானால், நாம் ஏன் இன்றைக்கே பிரியக் கூடாது? அந்தப் பந்தோபஸ்தான இடத்தை இன்றே ஏன் நீங்கள் நிர்ணயிக்கக் கூடாது?”

“நீ வெளியேற விரும்புகிறாய் என்பதை இன்றுதானே என்னிடம் வெளியிட்டாய், ஷஜர்! எனக்குச் சிறிது அவகாசம் கொடு; இத்தனை நாட்களாக உன்னை வைத்து ஆண்டவனுதவியால் ரட்சித்துவந்த நான் உனது எதிர்காலத்தையும் நல்லவிதமாக முடிவு செய்கிறேன். நீ இங்கேயே ஜாக்கிரதையாயிரு. எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கிறது; அதைப் பார்த்துவிட்டு வருகிறேன். சிறு பிள்ளைத்தனமாக நீ வெளியேறிவிட்டால், அதனால் விளையும் நன்மை தின்மைகளுக்கு நானும் ஜவாப்தாரியாக நேரிடுமே,” என்று கூறிவிட்டு, மேலங்கியை மாட்டிக்கொண்டு, ஷஜரை ஒருமுறை உற்று நோக்கிவிட்டு, விர்ரென்று வெளியேறி விட்டார் அவர்.

யூசுபுக்கு, அன்றைய எதிர்பாரா நிகழ்ச்சிகள் பெரிய துக்கத்தையும், திடுக்கத்தையும், மனக் குழப்பத்தையும், உடல் நடுக்கத்தையுமே உண்டுபண்ணி விட்டன. தமக்கு நல்ல அதிருஷ்டங்கள் விளைதற்குக் காரணமாயிருந்த இளஞ்சிறு ஷஜருத்துர் அவரை விட்டுப் பிரிவதால் ஏற்படும் நஷ்டங்களைவிட, அவளது எதிர்காலம் எப்படிப்போய் முடியுமோ என்ற மாபெரிய ஏக்கமும் அவரைப் பெரிதும் பற்றிக் கொண்டது. வழிநெடுக யோசித்துக்கொண்டே சென்றார். கிறுகிறுத்ததேயொழிய, முடிவு ஏதொன்றும் தென்படவில்லை. எவ்வளவோ அன்புடன் அவளை ஆறு ஆண்டுவரை ஆதரித்து வந்திருக்கிறார்! பணத்தைப் பணமென்று பார்க்காமல் வாரியிறைத்து, அவளுக்கு நல்ல கல்வியும், போஷாக்கும் அளித்து, ஆபரணமும், ஆடையணிகலன்களும் நிரம்பச் செய்தார். பெற்றபிள்ளையினும் உற்றபிள்ளையாக அவர் எத்துணையோ ஆசையுடனே நேசம் பாராட்டிவந்தார். அப்படிப்பட்ட அருங்களஞ்சியத்தை, சற்குண நல்லொழுக்க இளஞ்சிறு கன்னிகையை, அனாதைப் பேதையை, அறிவின் சுடரை எங்ஙனம் இழக்கச் சம்மதிப்பார்?

கால்கள் நடந்துகொண்டிருந்தனவேயன்றி, கருத்து எங்கோ திரிந்துகொண்டிருந்தது. எதிரில் வருவார் போவாரைக்கூட அவர் கவனிக்கவில்லை…..

“அஸ்ஸலாமு அலைக்கும், யா யூசுப் பின் ஈஸா!” என்று எதிரில் வந்தவரொருவர் வந்தனம் கூறினார்.

அது கூறியவர் ஆரென்றுகூட அண்ணாந்து பாராமல், யூசுப் சட்டென்று பதில் ஸலாம் கூறினார்.

“மிகவும் ஆழ்ந்த யோசனையில் மூழ்கியிருக்கிறாற்போல் இருக்கிறதே? என்ன, அவ்வளவு பிரமாதமான சிந்தனையோ?” – எதிரே வந்தவரின் கிண்டலான கேள்வி இது,

“ஹே, ஹே! ஒன்றும் பிரமாதமான சிந்தனையில்லை. எதையோ நினைத்துக்கொண்டு நான் போனேன்; அதனால் உம்மைக் கவனிக்கவில்லை. ஒன்றும் கோட்டையைப் பிடிக்கும் திட்டம் போட்டுக்கொண்டு ஆழ்ந்த யோசனையாகப் போகவில்லை,” என்று பல்லையிளித்துக்கொண்டே, ஏதோ சமாதானம் கூறினார் யூசுப்.

“உமது முகத்தைப் பார்த்தால்தான் தெரிகிறதே!….”

“என்ன தெரிகிறது?” என்று சட்டென்று மின்சாரத் தாக்குதலால் நிலைகுலைந்தவர்போலே அவர் கேட்டார். தாடியை ஒருமுறை கோதிக்கொண்டார்; குறுஞ்சிரிப்பை வரவழைத்துக்கொண்டார்.

“இல்லை, வேறொன்றுமில்லை. உமது முகத்தைப் பார்த்தால், கோட்டையைப் பிடிப்பதற்குத் திட்டமிடுவார்போல் தெரியவில்லை. ஆனால், ‘கிலாபத்தையே எப்படி அடைவது? கலீபாவாக எப்படி உயர்வது?’ என்று மனக்கோட்டை கட்டுவதுபோல் தெரிகிறது. அதைத்தான் சொல்லவந்தேன்,” என்று அந்த வந்தவர் சொல்லிவிட்டுச் சிரித்தார். யூசுபும் ஒக்கச் சிரித்தார்.

“அஜீஜ்! நமக்கு எதற்கு இந்த ராஜ்ய பாரமெல்லாம்? ஒரு சாதாரண வியாபாரியாயிருக்கும்போது தினேதினே நமக்கு ஏற்படுகிற பிரச்சினைகளையும் எழுகிற கவலைகளையும் தீர்த்துக் கொள்ளவே நம்மால் முடியவில்லையே! நமக்கு ஸல்தனத்துத்தான் எதற்கு, அல்லது கிலாபத்துத்தான் எதற்கு?”

“யூசுப்! அதெல்லாம் இருக்கட்டும். இப்போது ஏன் உம்முடைய முகமும் தோற்றமும் மாற்றமுற்றிருக்கின்றன? அப்படி என்ன பெரிய கவலை, அல்லது பிரச்சினை உம்மை வாட்டுகிறது? அதைத்தான் சொல்லுமே!”

அதற்குள் அவ்விருவரும் நடந்துகொண்டே யூசுபின் வர்த்தக ஸ்தலத்தின் வாயிலுள் ஏறி, உள்ளே சென்று அமர்ந்தார்கள். பன்னீர் வார்த்த நன்னாரி ஷர்பத்தை ஆளுக்கொரு விண்ணம் குடித்துக்கொண்டார்கள்; விலாமிச்சை விசிறியால் வீசி வெப்பந் தணிவித்துக்கொண்டே யூசுப் கூறுகிறார்: “அஜீஜ்! நான் யாரைப்பற்றிக் கவலைப்படப்போகிறேன்? ஆண்டவன் எனக்கு என்ன குறையைக் கொடுத்து விட்டான்? அஃதொன்றுமில்லை. ஆனால், நம் ஷஜருத்துர் விஷயமாகத்தான் ஒரு சிறிது கவலைப்படுகிறேன்.”

“அடே! ஷஜருத்துர் என்றதும் எனக்கு நினைவு வந்துவிட்டதே! அவள் புஷ்பவதியாகி விட்டாளோ?”

“அஜீஜ்! நீர் அவசரக் குடுக்கையில் அக்கிர ஸ்தானம் வகிக்கிறீர்… நான் ஒன்றும் அதைப்பற்றிச் சொல்ல வரவில்லை. ஆனால், அவளது எதிர்காலம் எப்படியிருக்கிறதோ என்னும் கவலையே என்னை வாட்டி வதைக்கின்றது.”

“அதைப் பற்றி நீர் கவலைப்படவே வேண்டியதில்லை. அவள் வதனத்தையும் வனப்பையும் பார்க்கும்போது, எதிர்காலத்தில் இத்தேசத்து ராணியாக உயர்ந்துவிடுவாளென்றே நான் நினைக்கிறேன்.”

“ராணியாகவா? ஷஜருத்துர்ரா? ஓய், நீரென்ன விளையாடுகிறீரா?” என்று கேட்டுக்கொண்டே அஜீஜை முறைத்துப் பார்த்தார்.

“நானொன்றும் விளையாடவில்லையே! ஒருவர் முகத்தைப் பார்த்து, அவருடைய குணம், குறி, வாழ்க்கை, எதிர்காலம், சுகம், துக்கம், வாழ்வு, தாழ்வு அனைத்தையும் சொல்லுகிற வித்தைக்கு ‘ஸாமுத்திரிகா லட்சண வித்தை’யென்று பெயர். அந்த வித்தையை நான் கற்றுத் தேர்ந்தவன் என்பதை நீர் அறிய மாட்டீர் போலும்?” என்று மிடுக்காய்ப் பேசினார் அஜீஜ்.

“ஸாமுத்திரிகாவாவது, லட்சணமாவது ஓய்! அது என்ன வித்தை? உலகில் ஏமாறுகிற பேர்வழிகள் நிறைய இருக்க இருக்க, புதுப்புது ஏமாற்று வித்தைகள் முளைப்பதில் அதிசயமென்ன இருக்கிறது? இந்த வித்தை அந்த மாதிரி இனத்தைச் சேர்ந்தது போலும்?”

“யூசுப்! என்னை, என்ன, ஏமாற்றுகிறவன், அல்லது மோசக்காரன் என்றா நீர் கருதுகிறீர்? நான் சொல்லுகிற அந்த வித்தை, இந்த மிஸ்ர் தேசம் எவ்வளவு பழைமையானதோ, அவ்வளவு பழைமையானது. இதுவும் ஒரு செப்பிடுவித்தை, அல்லது ஜாலவித்தையென்று நினைக்காதீர். பண்டைக்கால பிர் அவ்ன்கள் ஆண்டபோதே இந்த வித்தை தெரிந்தவர்களை அரசாங்கத்தில் சம்பளமும் உம்பளமும் கொடுத்து வைத்திருந்தார்கள், தெரியுமா?”

“நிஜமாகவா?”

“பின்னே, நான் பொய்யா பேசுகிறேன்? அந்தப் படிப்பு மிகவும் கஷ்டமான படிப்பு, யூசுப்! உலகத்தில் எத்தனை தினுசான மனிதர்கள் இருக்கிறார்களோ, அத்தனை தினுசானவர்களின் குணம், குறி, நடத்தை, நன்மை, தின்மை ஆகிய அனைத்தையும் இந்த வித்தை கற்றுக் கொடுக்கிறது. ஒருமுறை அநதக் கல்வியைக் கற்றுத் தேர்ந்தால், எப்படிப்பட்டவர் முகத்தைப் பார்த்தாலும், அவருடைய திரிகாலத்தையும் சொல்லிவிட முடியும்!”

யூசுப், பிளந்த வாயை மூடாமலே, அஜீஜ் கூறுவதைக் கேட்டுவந்தார். அவர் சொன்னவெல்லாம் இவருக்கு ஆச்சரியமாகவும் அதிசயமாகவுமே இருந்தன.

“நீர் இன்னுங்கூட என்னைச் சந்தேகிக்கிறீர், அல்லவா? வேண்டுமானால், எழுதி வைத்துக் கொள்ளும். நாம் பிழைத்துக் கிடந்தால், இதே ஷஜருத்துர்ரை எதிர்காலத்தில் ஒரு ஸுல்தானாவாகக் காணப் போகிறோமா, இல்லையா என்பதைத் தெரிந்து கொள்வோம்.”

“ஸாமுத்திரிகா லட்சண வித்தையென்று ஒன்று இருக்கலாம்; அதை நீர் கற்றும் இருக்கலாம். ஆனால், நீர் சொல்லுவதுபோல், முன்பின் ஓர் அரண்மனையைக் கனவிலும்கூடக் கண்டிராத ஒரு சிறு அயல்நாட்டு அநாதைப் பெண் எப்படி, அஜீஜ் ஸுல்தானாவாக உயர முடியும்?”

“ஓஹோ, நீர் அதைக் கேட்கின்றீரோ? இதென்ன பிரமாதம்! வெறறு மண்ணிலிருந்து, கண்ணுக்குப் புலனாகாத மிகச்சிறு அணுக்கிருமியை மானிடனது பீஜத்தில் உற்பத்தி செய்து, இவ்வளவு பெரிய உடம்பைப் படைக்கிற ஆண்டவன் ஒரு வெறும் அயல்நாட்டு அனாதையை ஸுல்தானாவாக்குவதில் அதிசயம் என்ன இருக்க முடியும்? நீரே சொல்லுமே! சென்ற 100 வருஷத்துக்கு முன்னால் நீர் எங்கே இருந்தீர்? இப்போது எப்படி இவ்வளவு பெரிய சரீரத்தை வைத்துக் கொண்டு என்னோடு வாதுபுரிகிறீர்?”

“ஓய்! நீர் வாக்குச் சாதுரியமாகப் பேசுகிறீர். இயற்கையாக மனிதன் உற்பத்தியாகி வளர்வதற்கும், ஷஜருத்துர் ராணியாவாள் என்பதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?… சரி, சரி! அவள் ராணியாகத்தான் போகட்டும், அல்லது கலீபாவுக்கே மனைவியாகட்டும். அதைப்பற்றி நாம் யோசிப்பானேன். இப்போது நடப்பதைப் பற்றி யோசிக்க நமக்கு வழியில்லை; வீண்பேச்சுப் பேசுவானேன்?”

அஜீஜ் சிரித்துக்கொண்டே யூசுபைச் சமாதானப்படுத்தி, விவரம் என்னவென்று கேட்டார். அன்று தமக்கும் ஷஜருத்துர்ருக்கும் நிகழ்ந்த சம்பாஷணையை விளக்கமாக யூசுப் அவருக்குச் சொல்லி முடித்தார். விஷயத்தை முடிப்பதற்குள்ளேயே யூசுப் துக்கம் தாளாமல் கண்ணீருகுக்க ஆரம்பித்தார்.

அதுவரை தமாஷாவாகவே பேசிவந்த அஜீஜுக்கு இந்தச் சம்பவத்தின் வருணிப்பு மிகவும் மனக்கிலேசத்தைக் கொடுத்தது. அன்புநிறைந்து ததும்பிவழியும் உள்ளத்தோடு யூசுப் மொழிந்த ஒவ்வொரு வார்த்தையும் அஜீஜின் நெஞ்சை உருக்கியது. அவரும் மௌனமாகவே கேட்டார்.

“யூசுப்! வருந்தாதீர். இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வழி கண்டுபிடித்துவிட்டேன். ஆனால், நான் சொல்வதை மட்டும் நீர் தட்டாமல் கேட்கவேண்டும்.”

யூசுபின் முகத்தில் ஆர்வத்துடன் கூடிய கேள்விக்குறி தோன்றிற்று.

“வேறொன்றுமில்லை; அவளை இப்போதே கூப்பிட்டுச் சென்று, நம் அமீரின் அரண்மனையில் அடிமையாக விற்றுவிடுவோம். உமக்கும் கவலை தீரும்; அவளுக்கும் விமோசனம் பிறக்கும். நீர் செலவழித்த செல்வத்தையும் லாபமும் முதலுமாகச் சம்பாதித்து விடலாம்.”

யூசுப் திடுக்கிட்டார். “என்ன! ஷஜரை அடிமையாக விற்றுவிடுவதா? நீர் என்ன பேசுகிறீர், யாரிடம் பேசுகிறீர், எதைப் பற்றிப் பேசுகிறீர்? என்பதையெல்லாம் மறந்து உளறுகிறீரோ?” என்று படபடப்புடன் கோபம் பொங்கப் பேசினார்.

“சாந்தி, சாந்தி! கோபிக்காதீர்! ஆறுவது சினம்! நான் எல்லா விஷயத்தையும் தெரிந்துதான் பேசுகிறேன். ஷஜருத்துர்ரை அரண்மனையில் அடிமைப் பெண்ணாக விற்றுவிடுவோம். அவள் இருக்கிற அழகுக்கும் எழிலுக்கும், அவளுக்கிருக்கிற குணநலத்துக்கும் கல்விப் பெருக்குக்கும் எந்தக் குருட்டு அமீரும் ஆயிரக்கணக்கான தீனார்களை அள்ளிக் கொடுத்து அவளை உடனே வாங்கிவிடுவார்!” என்று அஜீஜ் அமரிக்கையாகவும் நிதானமாகவும் சாவதானமாகவும் தம் நண்பரைப் பார்த்துக் கூறினார்.

யூசுபுக்கு மட்டும் கோபம் தணியவில்லை. உள்ளத்துள் ஜுவாலைவிட்டெரிந்த ஆத்திரம் ஆவிரூபமாக அவருடைய நாசித்துவாரங்கள் வழியே புகைந்துகொண்டிருந்தது. அஜீஜ் புன்னகைபூத்த வதனத்துடனே அவரைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

(தொடரும்)

மறுபதிப்பு: சமரசம் – 16-31 அக்டோபர் 2011

<<அத்தியாயம் 4>>     <<அத்தியாயம் 6>>

<<ஷஜருத்துர் முகப்பு>>

Related Articles

Leave a Comment