Image of Chapter 12

காலங் கடத்துவதில் பயனில்லையென்பது எனக்கு நன்கு தெரிந்தது. எனவே, நான் அந்த முஹம்மத் என்னும் இளவரசரை அக்கணமே மிஸ்ரின் சுல்தானாகப்

பிரகடனப் படுத்திவிட்டேன்; ஆட்சியையும் அவரிடமே ஒப்படைத்து விட்டேன். யுத்த காலத்தில் பட்டத்துக்கு வந்தமையாலும், தமீதா முற்றுகை இன்னும் நீடித்துக்கொண்டே போனதாலும், என் மீது எல்லையற்ற நம்பிக்கையிருந்ததாலும், அவர் “சுல்தான் காமில்” என்கிற பெயரை மட்டும் வைத்துக் கொண்டு, எல்லாப் பொறுப்புகளையும் என்மீதே போட்டு விட்டார். நாட்டைக் காப்பாற்ற வேண்டியது நமது கடனே என்னும் உண்மையை நான் என்றும் மறந்ததில்லை. எனவே, நானே தலைமையான அமீராயிருந்துகொண்டு, சுல்தான் மலிக்குல் காமிலுக்கு எல்லா நல்லுபதேசங்களையும் புரிந்துவந்தேன்; யுத்தநெருக்கடியைத் தவிர்க்கவும், தமீதாவை விடுவிக்கவும் அரும்பாடுபட்டு வந்தேன். காமிலின் மற்றிரு சகோதரர்களான ஈஸாவும், மூஸாவும் அரசாங்கத்துடன் ஒத்துழைத்தே வந்தார்கள்.

இந்தச் சந்தர்ப்பத்தில் நான் உனக்கொரு முக்கிய விஷயத்தைக் கூறவேண்டும். அப்போதுதான் நீ இக் கதையின் பிற்பகுதியை நன்கு விளங்கிக்கொள்ளமுடியும். அதாவது, அல் மலிக்குல் காமில் சுல்தானாகப் பிரகடனப்படுத்தப்பட்டபோது, அவருக்கு இரு குமாரர்கள் இருந்தார்கள். அந்த இருவருள் மூத்தவரே இப்போது இந்த அமீர்கள் வீழ்த்த விரும்புகிற சுல்தான் அபூபக்ராவார். இளைய குமாரருக்குத்தான் ஸாலிஹ் என்று பெயர். தமீதா முற்றுகை நடந்து கொண்டிருந்தபோது, இந்த அபூபக்ர் ஆதிலுக்குப் பதினான்கு வயது நிரம்பியிருந்தது. இளைய குமாரராகிய ஸாலிஹுக்கோ, பத்து வயதுதான் நடந்துகொண்டிருந்தது. அந்தக் காலத்திலேயே எனக்கு அந்தப் பெரிய பையன்மீது ஏதோ ஒருவித அருவருப்பும், சிறியவன்மீது மட்டற்ற பிரியமும் இயற்கையாகவே ஏற்பட்டுவிட்டன. இந்த இயற்கையுணர்ச்சி எனக்கு ஏன் தானாகவே உதித்ததென்பது அப்போது எனக்குப் புரியவில்லை. இப்போதுதான் இந்த உதவாக்கரைமீது எனக்கு ஆதியில் ஏற்பட்ட அருவருப்பின் உண்மைக்காரணம் நன்கு தெரிகிறது. இந்த ஐயூபி வம்சத்துக்கே கொஞ்சமும் பொருத்தமில்லாதவனாக அவன் அன்று முதல் இன்று வரை உயிர் வாழ்ந்து வருகிறான்.

ஆம். ஸாலிஹ் தன் பெயருக்கேற்றபடி நல்ல ஸாலிஹான குணம் பொருந்தி அழகிய சிறுவன். மிகவும் புத்திசாதுரியமாக அந்தச் சிறுவயதிலேயே அவன் நன்கு பேசுவான். அரண்மனையில் மட்டுமின்றி, வெளியிலும் அவன் புகழ்பெற ஆரம்பித்தான். அமீர்களிடம் மட்டுமின்றிப் பொதுமக்கள் மத்தியிலும் அவன் சகஜமாகப் பழகுவான். அச் சிறுவனின் அழகைக் கண்டு, ஆசை மேலீட்டால் எல்லாருமே அவனைத் தூக்கி உச்சிமோந்து உள்ளங் குளிர்வார்கள். அவன் வளர்ந்து நல் வாலிபனாகிவிட்டால், இந்த மிஸ்ர் தேசத்தின் எல்லாப் பெண்களின் உள்ளங்களையுமே அடியுடன் கொள்ளை கொண்டுவிடுவானென்று பலரும் பேசிக்கொள்வார்கள். பிள்ளையே பெறாத எனக்குக்கூட அச் சிறுவன்மீது அபார பிரியம் இருந்துவந்தது. நான் அவனுடைய புற அழகுகளைக் கண்டு ஆசைப்பட்டதைவிட, அவனது புத்திக்கூர்மையும் வாக்குச் சாதுரியமுமே என்னை மெய்ம்மறக்கச் செய்துவிட்டன. இத்தகைய இயற்கையழகு வாய்ந்த சிறுவனைத்தான் நம் சுல்தான் காமில் ஈடுவைக்க நேர்ந்தது.

நீ மீதிக் கதையைக் கேட்கப் பொறுமையிழந்து ஆவல் மிகவும் கொண்டிருக்கிறாய் என்பதை நான் உன் முகக்குறியிலிருந்தே தெரிந்துகொள்கிறேன். ஹஜருத்துர்! கவனமாகவும் பொறுமையாகவும் விவரத்தை ஞாபகமாகக் கேட்டுக்கொள். அப்போதுதான் நீ இந்த ஸல்தனத்தின் இன்றைய சிக்கலையும், இனி நாளைமுதல் நடக்கப்போகும் பெரிய மாறுதல்களையும் நன்கு விளங்கிக்கொள்ள முடியும். கதையைக் கேள் :

தமீதாவின்மீது அந்தக் கிறிஸ்தவர்கள் போட்ட முற்றுகை ஒரு சிறிதும் தளரவேயில்லை. கடுங்குளிரும் பனிக்காலமும் வந்தால், அவ்வெதிரிகள் தாங்க மாட்டார்களென்று நாங்கள் கண்டகனவு வீணாயிற்று. வடக்குக் கோடியிலுள்ள ஜெர்மானியின் குளிரில் உறைந்து போய்ப் பழக்கப்பட்டிருந்த அவர்களுக்கு இந்த மத்தியதரைக் கடலின் குளிர் வெதுவெதுப்பாகவே இருந்தது போலும்! எனவே, அவர்கள் ஓடிப்போவதற்குப் பதிலாக இங்கேயே அடைகாக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

நாட்கள் செல்லச்செல்ல, நாங்கள் தமீதாவுக்குப் பண்டங்களும் அனுப்ப இயலவில்லை. அன்றியும், எந்தநேரத்தில் அக்காட்டுமிறாண்டிகள் நீலநதி முகத்துவாரத்தின் வழியே நேரே இந்தக் காஹிராமீது படையெடுத்து வந்துவிடுவார்களோ என்ற கிலியும் எங்களை வாட்ட ஆரம்பித்தது. உண்ண உணவு கிடைக்காமையால், தமீதாவாசிகள் தினமும் பஞ்சத்தால் மாண்டுகொண்டே இருந்தனர். இன்னதுதான் செய்வதென்று எங்களுக்கொன்றும் புலனாகவில்லை.

கடைசியாக ஒருநாள், சுல்தான் காமில் அமீர்களின் அவசரக்கூட்டமொன்றைக் கூட்டுவித்தார். எதிரிகளுடன் சமாதானம் செய்துகொள்வதைத் தவிர வேறுவழியில்லையென்று எல்லோரும் ஏகோபித்து முடிவு செய்துவிட்டார்கள். நான் மட்டும் ஒன்றும் பேசவில்லை. எல்லாரும் சொன்னதைவிட நான் சொன்னால்மட்டுமே ஏற்றுக்கொள்வதென்ற உறுதியுள்ள சுல்தான் என்னைத் திரும்பத்திரும்பக் கேட்டார்.

நான் இறுதியாக அவர்கள் மத்தியில் இப்படிக் கூறினேன் :- “தமீதாவைச் சூழ்ந்துகொண்டிருப்பவர்கள் கிரமமான தர்மயுத்தத்தை நடத்த வந்தவர்களென்று யான் முதலில் எண்ணியிருந்தேன். அதே காரணத்துக்காகத்தான் நான் சுல்தான் ஆதிலை ஷாமுக்குப் போகும்படி வற்புறுத்தினேன். ஆனால், இந்தக் கூட்டத்தினர் போர்புரிவதற்கு பதிலாகக் கொள்ளையும் கொலையும் சர்வநாசமும் புரிகிற அநியாயக்காரர்களாகக் காட்சியளிக்கிறார்கள். அந்த அயோக்கியர்களுடன் நாம் எப்படிச் சமாதானம் செய்துகொள்வது? எதற்காகச் சமாதானம் செய்துகொள்வது? ஏன் செய்து கொள்வது? என்று எனக்கொன்றும் விளங்கவில்லை. அநியாயக்காரர்களையும், அக்கிரமம் புரிகிறவர்களையும், வரம்பைக் கடக்கிறவர்களையும் நிச்சயமாக ஆண்டவன் தண்டிக்கிறவனாகவே இருக்கிறானென்னும் சத்தியத்தின்மீது நன்னம்பிக்கை கொண்டுள்ள மூமின்களாகிய நாம் ஏன் அஞ்ச வேண்டுமென்று அதிசயிக்கிறேன். ஆனால், ஜனநாயக முறைமைப்படி பெரும்பாலோரான நீங்கள் எல்லோரும் என் கருத்துக்கு மாற்றமான முடிவைக் கூறுவதால், யான் அதற்கு இணங்கியே தீருவேன். ஆனால், அவ்வெதிரிகளுடன் எப்படிச் சமாதானம் செய்துகொள்வதென்றே யோசிக்கிறேன். நாமோ, சர்வ நாகரிகமும் ஒருங்கமைந்த உன்னத இஸ்லாத்தின் ஊழியர்கள். அவர்களோ, அதற்கு நேர்மாற்றமானவர்கள். எனவே, எதையும் யோசித்தே செய்யவேண்டும்!”

என் பேச்சைக் கேட்டதும், எல்லாரும் என்னையே வெறிக்கப் பார்த்தார்கள். சுல்தான்மட்டும் சிறிது கண்மூடிச் சிந்தித்துவிட்டு, “ஏன், தாங்களே அதற்கு ஒரு வழி சொல்லுங்களேன்!” என்று கெஞ்சியபாவனையில் கேட்டார்.

“வழி என்ன இருக்கிறது! எதிரிகளின் கை ஓங்கி நிற்கிறது. சர்வத்தையும் நாம் விட்டுக்கொடுக்க வேண்டுமென்று அவர்கள் கேட்பார்கள். நம் பிரதான சுல்தான் ஸலாஹுத்தீன் அன்று அரும்பாடுபட்டு எவற்றையெல்லாம் காப்பாற்றினாரோ, அவற்றையெல்லாம் இழக்க நாம் தயாராக இருக்க வேண்டும். போப்பின் கட்டளைகளுக்கு முஸ்லிம்கள் தலை வணங்கநேரும். அவ்வளவுதான்!” என்று நான் சாதாரணமாய்க் கூறினேன்.

பிறகு நீண்ட வாக்குவாதம் நடந்தது. இறுதியாக. அந்தக் கிறிஸ்தவ சேனைக்குத் தலைமைதாங்கி வந்திருக்கும் போப்பின் பிரதிநிதியைக் காஹிராவுக்கு வரவழைப்பதென்றும், அந்தப் பிரதிநிதி என்ன அபிப்பிராயத்துடன் இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டு, அப்பால் உசிதப்படி நடந்துகொள்வதென்றும் முடிவு செய்யப்பட்டது. அக்கணமே அரசாங்கத் தூதன் மூலமாக ஒரு நிருபம் அனுப்பப்பட்டது. ஒரு வாரத்துக்குள் அத் தூதன் பதில் வாங்கிக்கொண்டு வந்துசேர்ந்தான். அக் கடிதத்தை நாங்களெல்லாரும் ஆவலுடனே வாங்கிப் படித்துப் பார்த்தோம். அதில் சுருக்கமாக வரையப்பட்டிருந்த வாசகம் இதுதான் :-

“தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் பிரதிநிதியாக விளங்கும் மேன்மை தங்கிய போப் பாண்டவரின் சார்பாக இந்தப் புனித யுத்தத்துக்குத் தலைமைதாங்கி வந்திருக்கும் எம்மை, முஹம்மதின் மதத்தைப் பின்பற்றும் நயவஞ்சகர்களாகிய நீங்கள் கபடமாக உங்களிடம் வரவழைத்து எங்கள் இலட்சியத்தில் வெற்றிபெற முடியாதபடி எந்த அக்கிரமமான கொலை முதலியவற்றையும் செய்துவிடுவீர்களென்று நாம் சந்தேகிக்கிறோமாகையால், உங்கள் வஞ்சக அழைப்பை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை.”

இதைப் படித்ததும் எங்களுக்குக் கோபம் ஒருபுறமும், ஆத்திரம் ஒருபுறமும் பொங்கி வழிந்தன. எனினும், நிலைமையை எப்படிச் சமாளிப்பதென்று மிக்க கவலை கொண்டோம். ஆனால், நொடிப்பொழுதில் சுல்தானே அதற்கு வழி கண்டுபிடித்து விட்டார். அக்கணமே அவர் தம்முடைய இளைய குமாரர் ஸாலிஹைக் கூப்பிட்டுவரச் சொன்னார். பத்து வயதே நிரம்பிய அப் பாலகன் அரசவையின் விசேஷக் கூட்டத்தைக் கண்டு, ஆச்சரிய மேலீட்டால் எங்களையெல்லாம் மாறிமாறிப் பார்த்தான். சுல்தானோ, தம்முடைய தூதனை அழைத்து அவன் காதினுள்ளே இரகசியமாக என்னவோ வார்த்தைகளை ஊதினார். பின்பு அவர் ஸாலிஹைத் தூக்கி முத்தமிட்டு, “குழந்தாய்! இத் தூதனுடன் நீ தமீதாவுக்குப் போய் வா. உன் அத்தை அங்கே உன்னைப் பார்க்கவேண்டுமென்று கடிதமெழுதியிருக்கிறார். அங்கே சென்று சிலகாலம் இருந்துவிட்டு வா,” என்று கூறினார்.

“என்னுடன்கூட அண்ணன் அபூபக்ரையும் அனுப்புகிறீர்களோ?” என்று ஸாலிஹ் ஆவலாய்க் கேட்டான்.

“இல்லை. முதலில் நீ போய் வா. பிறகு அண்ணனை அனுப்புகிறேன்.”

“தமீதாவில் பெரிய சண்டை நடக்கிறதாகச் சொன்னார்களே! ஊஹும்! நான் அங்கே போகமாட்டேன். எனக்குப் பயமாயிருக்கிறது.”

“ஸாலிஹ்! பயப்படாதே! நம் தூதன்தான் உன்னுடன் வருகிறானே; தமீதாவில் சண்டையெல்லாம் முன்னமே முடிந்துவிட்டது. இப்போது அங்கே பயமில்லாமல் போகலாம்.”

“நான் உங்களோடுதான் அங்கே போவேன். அல்லது நம்முடைய பெரிய அமீருடன்தான் போவேன்.” என்று ஸாலிஹ் சண்டித்தனம் பண்ணினான்.

பிறகு நாங்களெல்லாம் சேர்ந்து ஆளுக்கொரு விதமாக ஆறுதல்கூறி, அத் தூதனுடன் ஸாலிஹை அனுப்பிவைத்தோம். அவர்கள் இருவரும் அரசவையை விட்டு அகன்றதும், சுல்தான் எங்களையெல்லாம் நோக்கினார். அவருடைய பார்வையில் வெற்றிக்குறியும், அவர் திட்டத்தை நாங்களெல்லாம் விளங்கிக் கொண்டோமா என்கிற கேள்விக்குறியும் காணப்பட்டன. எனக்கு மட்டும் முதலிலேயே விஷயம் விளங்கிவிட்டது. எனினும், அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் மற்றவர்களைப்போல் நானும் ஒன்றுந் தெரியாதவன்போலே நடித்து நின்றேன்.

சுல்தான் உடனே தம் முத்திரையையிட்டுக் கடிதமொன்றை அந்தப் போப்பின் பிரதிநிதியான கர்தினால் பலேஜியஸுக்கு வரைந்தார் :- “ஆண்டவன்மீதும், அவனனுப்பிய தூதர்கள்மீதும், அவன் இறக்கிய வேதங்கள்மீதும், மலக்குகள் மீதும், இறுதித்தீர்ப்பு நாளின்மீதும் அசையாத உறுதிகொண்ட முஸ்லிம்களின் சுல்தானாக விளங்கும் முஹம்மத் என்னும் இயற்பெயர் படைத்த, சுல்தானுல் மலிக்குல் காமில் அபுல் மஆலி நாஸிருத்தீன் ஐயூபியாகிய நாம் இதனால் உமக்குத் தெரியப்படுத்துவது என்னவென்றால் சதாசர்வ காலமும் தூய்மையான உள்ளத்துடனேதான் சகல முஸ்லிம்களும் வாழ்ந்துவர வேண்டுமென்று ஆயுளெல்லாம் உபதேசித்து, இறுதியில் அவ்வுபதேசப்படியே பரம விரோதிகளையும் கொலைபாதகர்களையும் அடியுடன் மன்னித்தருளிய இறுதி நபி அஹ்மது முஜ்தபா முஹம்மது முஸ்தபா ரசூல் சல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் சந்ததியார்களாகிய நாம் எமதுள்ளக்கிடக்கையின் பரிசுத்த எண்ணத்தை நிரூபிப்பான்வேண்டி, இன்றைய தினம் எம்முடைய குமாரன் ஸாலிஹ் என்னும் அழகிய சிறுவனை உங்களிடம் ‘ஈடாக’ அனுப்பி வைத்திருக்கிறோம். இவனைப் பிணையாக நீங்கள் வைத்துக்கொண்டு, போப்பாண்டவரின் பிரதிநிதியாகிய நீர் இனி யாதொரு வீண் சந்தேகமும் கிலேசமும் கொள்ளாமல் எம்மிடை வந்து, உமது யுத்த நிறுத்தக் கோரிக்கையைச் சமர்ப்பித்துக்கொள்வீரென்று நம்பகிறோம்.”

ஷஜருத்துர்! இதுதான் ஸாலிஹ் ஈடு வைக்கப்பட்ட சம்பவமான நிகழ்ச்சியாகும். ஐயூபி சுல்தான்களின் வரலாற்றைப் பிற்காலத்தில் படிக்கநேரும் மக்கள் மயிர்க்கூச்செறியும்படியான இத்தகைய செய்திகளுக்கு இணையாக எதையுமே இத் தரணியில் கண்டுகொள்வது முடியாது. இவ்வாறு செய்யப்பட்டது இஸ்லாத்தின் பொது நன்மைக்காகவேயாம்.

இவ்விதமாக அந்த அமீர் தாவூத் சென்றகால சரித்திரத்தின் நுணுக்கமான விவரங்களைக் கூறிக்கொண்டே வந்து சட்டென்று நிறுத்திக்கொண்டார். இமைகொட்டாது இந்நீண்ட சரிதையை மிக்க உருக்கமாய்க் கேட்டு வந்த ஷஜருத்துர்ருக்குச் சொல்லமுடியாத உணர்ச்சி ஏற்பட்டு, அப்படியே கல்லாய்ச் சமைந்துவிட்டாள். ஆனால், மிகவும் ருசிகரமான இச் சம்பவத்தை அமீர் மீண்டும் அரைகுறையான கட்டத்தில் கொண்டுவந்து டக்கென்று நிறுத்தியதும், அவள் நெஞ்சு பட்பட்டென்று அடித்துக்கொண்டது.

“அப்புறம் என்ன நடந்தது, தாதா?” என்று அவள் துடிதுடித்துக் கேட்டாள்.

“நான் கதையைச் சொல்லிக்கொண்டே போனால், பொழுது விடிந்துவிடும். இன்னும் கொஞ்ச நேரமே இருக்கிறது, கோழி கூவுவதற்கு. இப்போதாவது தூங்குவோம்; நாளைக்கு மீதியைச் சொல்கிறேன்” என்றார் தாவூத்.

கிழவர் அடுத்த நிமிஷத்தில் அயர்ந்து உறங்கிவிட்டார். ஆனால், ஷஜருத்துர்ரோ, படுக்கையில் புரண்டுகொண்டு, அன்று நடந்த அதிசயத்தையும், கேட்ட அதிசயத்தையும் நினைத்து நினைத்துக் கனவு கண்டுகொண்டே கிடந்தாள். அமீர் கூறிய வரலாற்றை அவள் மானஸமாகக் கணக்குப் போட்டுப்பார்த்தாள். ஹிஜ்ரீ 615-ஆம் ஆண்டில் ஆதில் ஐயூபி காலஞ்சென்றதையும், அதனையடுத்துக் காமில் பட்டத்துக்கு வந்ததையும் அப்போது ஸாலிஹுக்கு வயது பத்தென்று அமீர் கூறியதையும், இப்போது நடைபெறும் ஹிஜ்ரீ 637-ஆம் ஆண்டின் இறுதியில் கழித்துப் பார்த்தால், 22 ஆண்டுகள் இடையில் கடந்துவிட்டனவென்பதையும், இப்போது அந்த ஸாலிஹ் சுமார் 32 வயதுடைய அழகிய இளவரசராகத் திகழ்வாரென்பதையும் கணித்துக்கொண்டாள். பத்து வயது நிரம்புமுன்னே அந்த ஸாலிஹ் அவ்வளவு அழகாகவும் வசீகரமான தோற்றமுள்ளவராகவும் மிளிர்ந்துவந்தாரென்று அந்த அமீர் வருணித்ததை அவள் தன் மனக்கண்ணால் கற்பனை செய்துகொண்டு, இப்போது அவ்வாலிபர் எவ்வளவு தேஜஸுடன் ஜொலிப்பாரென்பதைத் தானே மனோரதம் செய்துகொண்டாள்.

இதே சிந்தனை கலந்த, நிலைகுலைந்த அரைநித்திரையில் அவள் பொழுது விடிந்ததுங்கூடத் தெரியாமல் நெடு நேரம்வரை படுக்கையிலேயே புரண்டுகொண்டு கிடந்தாள். பின்னர் அவள் ஏதோ அரவங்கேட்டு அரண்டு விழித்தாள். அமீரின் மாளிகை ஜனசஞ்சாரமற்று ஒரே நிசப்தமாயிருந்தது. உடனே அல்லோல கல்லோலமாக ஓடிப்போய்க் காவலாளியை விஷயம் என்னவென்று வேகமாய்க் கேட்டாள்.

“அம்மணி! அரண்மனையில் கலகமாம். எல்லா ஜனங்களும் அமீர்களும் அங்கே படையெடுத்துப் போயிருக்கிறார்கள். நீங்கள் விழித்தபிறகு வெளியே போகக்கூடாது என்று தடையுத்தரவை எனக்கு நம் அமீரெ முஅல்லம் இட்டுவிட்டு, அவரும் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்,” என்று அச்சேவகன் அதிக படபடப்புடன் கூறினான்.

இரவு நெடுநேரம் கண்விழித்து அயர்ச்சியடைந்து, நன்றாகவுந் தூங்காமல் தூங்கியெழுந்த ஷஜருத்துர்ரின் வெளிறிய வதனம் இதைக் கேட்டதும், இன்னும் அதிகமாக வெளுத்துப்போய், நிறங்குன்றி வி்ட்டது. அவள் அப்படியே சோர்ந்துபோய், அங்கே கிடந்த சாய்வுநாற்காலியொன்றில் தொப்பென்று வீழ்ந்தாள்.

(தொடரும்)

மறுபதிப்பு: சமரசம் – 1-15 பிப்ரவரி 2012

<<அத்தியாயம் 11>>     <<அத்தியாயம் 13>>

<<ஷஜருத்துர் முகப்பு>>

Related Articles

Leave a Comment